Monday, July 31, 2006

தில்லை - 2


தில்லை மரம் இந்தக் காலப் பப்பாளியைப் போல் ஆண், பெண் மரம் எனத் தனித் தனியானது. ஆண் பூ தனி, பெண் பூ தனி. பூக்கள் என்பவை தமிழரை எப்பொழுதுமே கட்டிப் போடுபவை. குறிஞ்சிப் பாட்டில் மட்டுமே நூற்றுக்கும் மேல் ஒரு பட்டியல் உண்டு. (நடிகர் சிவகுமார் அடுத்தடுத்து அந்தப் பூக்களின் பெயரை அப்படியே ஒப்பித்துப் பல மேடைகளில் பெயர் வாங்குவார்.) அந்தப் பட்டியலில் தில்லைப் பூவும் உண்டு. ஆண் தில்லை மரத்தில் இலையுதிர்த்த வடுக்களின் அருகில் 2.5-7.0 நுறு மாத்திரி (centi meter; நூறு என்பதின் குறுக்கம் நுறு. தென்மொழி ஆசிரியர் இறைக்குருவன் இதை அறிமுகப் படுத்தினார்.) அளவுக்கு பூங்கதிர்கள் உருவாகும். பூக்கள் நறுமணம் உள்ளவை; மஞ்சள் சாயை (shade) உடைய சிறு பூக்களாக இருக்கும். பெண் பூக்கதிர்கள் ஆண் கதிர்களைக் காட்டிலும் இன்னும் சிறியவை. 1.0 -2.5 செ.மீ. அளவுடையவை. இரண்டு பூக்களுமே திசம்பர் - சனவரியில் அதிகமாகப் பூக்கும். அதனையடுத்து ஆகசுடு - அக்டோபர் மாதங்களிலும் சிறிதளவு பூக்கும்.

அந்த மரத்தின் இரண்டு செய்திகள் தமிழரை ஈர்த்தவை. ஒன்று அச்சம் தரும் மரம் என்ற செய்தி; இன்னொன்று மனத்தைக் கவரும் குழல் போன்ற பூந்தளிர் பற்றிய செய்தி; குறிப்பாக ஆண்பூந்தளிர். ஆண்மயிலின் தோகை போலத் தில்லையின் ஆண் பூந்தளிர்கள் நம்மை ஈர்க்கும். சற்றுத் தொலைவில் இருந்தும் நம்மைக் கவர்ந்து, அகவை கூடிய முனிவரின் நரைத்த சடை போல இந்தப் பூங்கதிர்கள் தோற்றமளிக்குமாம். "தில்லைத் தளிருக்கு முனிவர்சடை உவமையா, முனிவர்களின் திரண்டு கிடந்த சடைக்குழல்களுக்குத் தில்லைப் பூந்தளிர் உவமையா?" என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. புறநானுறு 252ல் மாரிப் பித்தியார் என்ற பாடினி பாடுகிறார். இந்தப் பாடலை 251ம் பாடலோடு சேர்த்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

பெண்டு, பிள்ளைகளோடும், சுற்றத்தாரோடும் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த ஒருவன் திடீரென்று வீடுபேறு பற்றிய கருத்தில் ஆட்பட்டுத் தவம் மேற்கொண்டு, காட்டில் உறைகிறான். அவன் துறவு நிலை பற்றி வியக்கின்ற புலவர், இந்தப் பாடலில் தில்லையை உள்ளே கொண்டு வருகிறார்.:

கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள்ளிலைத் தாளி கொய்யுமோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே

"கறங்கு வெள் அருவி" என்பது சங்க இலக்கியத்தில் ஒரு குழூஉக் குறி. குற்றாலம் போனவர்களுக்குச் சட்டெனப் புரியும். "ஒரே சத்தம் (= கறங்கு) போட்டு அருவி கீழே இறங்குகிறதாம்; அவ்வளவு சத்தம் போடணும்னா, நீர்வரத்து ரொம்பக் கூட என்று புரிஞ்சுக்கொணும்; வேகமும் கூடவே இருக்கும். அந்த நிலையிலே, அருவியிலே நுரை கொழிஞ்சி தள்ளும்; வெள் அருவியாய்த் தெரியும். அந்த அருவியிலே ஏறினதாலே (=ஆடுனதால் = அருவியில் குளித்ததால்) கொஞ்சம் கொஞ்சமாய் முடி நிறம் மாறிப் போச்சாம்; வேறெ ஒண்ணும் இல்லை, கொஞ்சம் ஒளி விழுந்த மாதிரி ’டால்’ அடிக்குது; அய்யாவுக்கு நரை விழுந்திருச்சு. நரை விழுந்த முடி, தில்லைத் தளிர் மாதிரி புலபுலன்னு சடைசடையாய்த் திரண்டு காட்சியளிக்குதாம்."

இதுவரைக்கும் சரி, இனி மூன்றாவது வரியில் தான் இந்தக் கவிதைக்கே ஆன முரண் இருக்கிறது; தில்லையின் தளிர் போல விளங்கும் சடை கொண்ட இந்த முனிவர் என்ன இலை பறிக்கிறார் தெரியுமோ? "அள்ளிலைத் தாளி." மூலிகை அறிவு இருந்தால் தான் இங்கு பொருள் விளங்கும். அல் என்றால் "நெருங்கிய" என்று அருத்தம். "நெருங்கிய இலை கொண்ட தாளி" என்னும் செடியில் இருந்து முனிவர் இலை பறிக்கிறார்; சிரிப்பு வருகிறது மாரிப் பித்தியாருக்கு.

ஏனென்றால் "தாளிச பத்திரி" என்று இன்று சொல்லப் படும் (Flacourtia Calaphracia) அள்ளிலைத் தாளி பொதுவாகப் பசியைத் தூண்டுவதற்கும், கழிச்சல், சுரம், நாட்பட்ட இருமல் போன்றவற்றைப் போக்குவதற்குமாக உள்ள மூலிகை; கருப்பிணிப் பெண்கள் நல்ல மகப் பேறு (சுகப் பிரவசம்) ஏற்படுவதற்காக உட்கொள்ளும் மூலிகையும் இதுவாகும்.

வேறு ஒன்றுமில்லை; "நரை விழுந்து தில்லைப் பூந்தளிர் போலச் சடைகொண்ட முனிவர், கருப்பிணி உட்கொளும் மூலிகையிலையைப் போய்ப் பறித்துக் கொண்டிருக்கிறாரே?" என்று புலவர் கேலி பாடுகிறார். (முனிவர் பசியில்லை என்று பறித்திருக்கலாம்; அல்லது வேறு ஏதேனும் ஊறால் பறித்திருக்கலாம்; நமக்குக் காரணம் தெரியாது. பாடினியாரும் காரணம் சொல்லவில்லை. உரையாசிரியரும் முரணைப் போட்டு உடைக்கவில்லை; பொதுவாக, முரண் என்பது இப்படித்தான். ஒன்று கிடக்க இன்னொன்றாய்ப் புரிந்து கொள்ளப் படுகிறது.

அடுத்த இரண்டு வரிகளில் பாடினியின் கேலி இன்னும் கூடுகிறது. "துறவு கொள்ளுவதற்கு முன்னால், வீட்டுக்கார அம்மா பேச்சை அப்படியே கேட்டு, வேண்டப் பட்டதைத் தேடிக் கொண்டுவந்த ஆள்தானே இவருன்னு" ஒரு போடு போடுகிறார்..

கவிதை ஒருபக்கம் இருக்கட்டும். நமக்கு முகன்மையான செய்தி தில்லைப் பூந்தளிரை முனிவர்களின் புரிசடைக்கு இணையாக ஒப்பிட்டது. தில்லை என்ற மரத்தின் பெயரே அந்தத் தளிர் என்ற சொல்லோடு தொடர்பு கொண்டது. துல்லுதல் என்பது தோன்றுதல்; தோன்றுவது கொஞ்சம் மஞ்சளாய்த்தான் தெரியும். துலங்குதல் என்ற சொல் கூட துல் என்னும் வேரில் தோன்றியது தான். மஞ்சளாய் ஒளி நிறைந்ததாய், தெரிவதைத் துலங்குதல் என்று சொல்கிறோம். ஏனத்தின் கழிம்புகளையும், கறைகளையும் போக்கி விளக்குவதைத் துலக்குதல் என்று சொல்லுகிறோம். துல்லுவது துள்ளுவது என்றும் ஆகும். துள்ளுவது பின் துளிர்க்கும்; அது சற்றே திரிந்து தளிர்க்கும். துல்லுவது தில்லையானதும் இதே போல் தான்.

அந்தப் பூந்தளிர் ஒன்றே தில்லை மரத்தைப் பார்த்தவுடன் சட்டென்று காண்பவர் மனத்தில் தைக்கும் காட்சி. "தளிர்க்குழல் - முனிவர் சடை" என்ற இரட்டைப் பிணை, நெய்தல் நிலத் தமிழனை அப்படியே ஈர்த்திருக்க வேண்டும். கலித்தொகை 133 ல் முதலைந்து வரிகள் இன்னொரு காட்சியைக் காட்டுகின்றன. (நெய்தற் கலி; ஆசிரியர் நல்லந்துவனார்; அந்துவன் = அப்பன்; இந்தக் காலத்தில் அப்பன் என்று எத்தனை பெயர்கள் முடிகின்றன; அது போல அந்துவன் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்தன் = தலைவன், பெரியவன், பெருமான். மலையாளத்தில் கத்தோலிக்கப் பாதிரியாரை அச்சன் என்று சொல்லுகிறார்களே, குமரியில் ஆசான் என்று சொல்லுகிறார்களே, அது போலப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தனர் = பெருமானர். அந்தனர்>அந்தணர் என்று ஆகும். ஆக அந்தனர் என்ற சொல் பிறந்தது இப்படித்தான். தொடக்கத்தில் அது ஒரு குலத்தை, சாதியைச் சுட்டும் சொல் அல்ல. பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட இந்தச் சொல் பற்றி நிறையச் சொல்லலாம். எனினும் விடுக்கிறேன்.)

மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்
சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த
நீமலி கரகம் போல் பழம் தூங்கு முடத்தாழைப்
பூ மலர்ந்தவை போல், புள் அல்கும் துறைவ! கேள்

நெய்தலில் காற்று அடித்துக் கொண்டே இருப்பதால் அங்கும் இங்குமாய் மணல் மேடுகள் மாற்றி மாற்றி ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அந்த மணல் மேடுகளை எக்கர் என்று சொல்வார். இம்மணல் மேடுகளுக்கு அருகில் கடலோதக்கழி இருக்கிறது. கழியின் கரையில் இருக்கும் முள்ளியின் மலர் கருப்பு. மா நிறம் என்பது கரிய நிறம் தான். (அதே பொழுது மிகக் கருப்பு என்று பொருள்கொள்ளக் கூடாது.) மாமலர் முண்டகம் என்பது அம் முள்ளியைத் தான் குறிக்கிறது. கூடவே அருகில் தில்லை மரங்கள் இருக்கின்றன; முனிவன் சடை போலப் பூந்தளிர்கள் தொங்குகின்றன; கொஞ்சம் தள்ளினாற் போலக் கல்லால மரமும் (Ficus tomentosa) இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் பாட்டில் அது நேரடியாகக் கூறப் படவில்லை. பொதுவாக, நெய்தற் கழியில், வறண்ட உதிர்புக் காடுகளில், பெரும்பாலும் பாறை விரிசல்களுக்கு நடுவில்) இருப்பது இயற்கையே.

கரிய மலர்கள் நிறைந்த கழி முள்ளியும் தில்லைமரமும் செறிந்து வளர்ந்திருக்கும் அக் கடற்கரைச்சோலையில், மணல் மேட்டில், தோற்றம் எப்படித் தெரிகிறதாம்? சீர்மிகு சிறப்பினோன் உடகார்ந்திருப்பது போல் தெரிகிறதாம். "யார் அந்தச் சீர்மிகு சிறப்பினோன்?" பொதுவாகப் பார்த்தால் தென்னாட்டு முனிவன்; விதப்பாகப் பார்த்தால் "தக்கண முகத்தோன்". என்ன இது புதுச்சொல் என்று மருள வேண்டாம். "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்கிறோம் அல்லவா? தக்கணத்தில் தோன்றியவன் தக்கண முகத்தோன். (தக்கு = தாழ்வு. இமைய மலையைப் பார்த்தால் நாவலந்தீவின் தென்பகுதி தாழ்ந்து கிடக்கிறது. தாழ்ந்து கிடக்கும் பகுதி, தக்கிக் கிடக்கும் பகுதி, தக்கணம் எனப்படுகிறது; மேலே கிடக்கும் மலையைப் பார்த்தால் கீழே கிடக்கும் பகுதி கிழக்குப் பகுதி ஆனது போல இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தக்கணம் என்ற சொல் தமிழ் தான். அந்தச் சொல்லைப் பயன்படுத்தத் தயங்க வேண்டாம். முகத்தோன் = தோன்றியவன்; முகத்தோனை மூத்தோனாகிப் (மூத்தோர் என்பவர் நமக்கு முன்னால் தோன்றியவர் என்று புரிந்து கொள்ளுகிறோம் இல்லையா?) பின் வேறு ஈற்றால் மூத்தி என்று சொல்லி, பின்னால் வடமொழிப் பலுக்கிற்காக, ரகரத்தை நுழைத்து மூர்த்தி ஆக்குவர். தக்கண மூர்த்தி இன்னும் திரிந்து தக்ஷிணா மூர்த்தி ஆவார். நாம் அதன் தொடக்கமே தெரியாமல் மருள்வோம். தென்னாடுடைய சிவனுக்கு வடபுலத்துப் பெயரா இருக்கும்?) இந்தத் தக்கண மூத்தியின் மயிர்க்குழல்கள் நரை தட்டிப் போய் தில்லைப் பூந்தளிர் போலக் காட்சியளிக்கின்றன. முண்டக மலர் அவன் கண்டம் (கழுத்து) போலக் காட்சியளித்திருக்கலாம். மறுபடியும் தொண்டைக்குள் நஞ்சு என்ற உருவகத்தை இங்கு பொருத்திப் பாருங்கள்.

இவன் முனிவன் என்றால், இம்முனிவனுக்கு அருகில் ஒரு குண்டிகை (கலசம் அல்லது செப்புக் கலம்) இருக்க வேண்டுமே? எங்கும் நாம் தேட வேண்டாம். கழியில் உள்ள வளைந்து கிடக்கும் தாழையின் பழம், குடம் எனத் தொங்குகிறது. தாழையின் வளைசலைக் குறிக்க, கொக்கின் கழுத்தையும் நெய்தற் கலி பாடிய நல்லந்துவனார் உவமை சேர்க்கிறார். இந்த வரிகள் முழுக்க ஒரே உவமை மயம். ஆனாலும் காட்சி தெளிவாகப் புலப்படுகிறது. சொல்லுக்குள் சிவனை, தக்கண முகத்தனை, முழுதாகக் கொண்டுவந்து விடுகிறார் இந்தப் பாடலாசிரியர். "இப்பேர்ப்பட்ட துறைவனே! நான் சொல்லுவதைக் கேள்" என்று மேற்கொண்டு போகிறார்.

"தக்கண முகத்தோனை முதல் முதலாகத் தமிழ் இலக்கியத்தில் தில்லையோடு தொடர்வுறுத்திப் பதிவு செய்த இடம்" நானறிந்த வரை இது தான். இந்த நெய்தற் கலிதான். அதுவரை அவன் "ஆல் அமர் செல்வன், நுதல்விழியோன், கொன்றை விரும்பி" இப்படித்தான் பலவாறாக சங்க இலக்கியங்களில் வழுத்தியிருக்கிறார்கள். ஏன் இந்த வெவ்வேறு தோற்றங்கள் என்ற கேள்வி நமக்குள் இனி அடுத்ததாக எழும்.

அன்புடன்,
இராம.கி.

4 comments:

Anonymous said...

அந்துவன், this is kulam/Gothiram in Konguvelala Gounder's

Aathi is the another kulam/Gothiram, We will call it as irattai (double) kulam

Just for your information

-Masagoundan

nayanan said...

//
"கறங்கு வெள் அருவி" என்பது சங்க இலக்கியத்தில் ஒரு குழூஉக் குறி. குற்றாலம் போனவர்களுக்குச் சட்டெனப் புரியும். "ஒரே சத்தம் (= கறங்கு) போட்டு அருவி கீழே இறங்குதாம்; அவ்வளவு சத்தம் போடணும்னா, நீர்வரத்து ரொம்பக் கூடன்னு புரிஞ்சுக்கொணும்; வேகமும் கூட இருக்கும். அந்த நிலையிலே, அருவியிலே நுரை கொழிஞ்சி தள்ளும்; வெள் அருவியாய்த் தெரியும். அந்த அருவியிலே ஏறினாதாலே (=ஆடுனதால் = அருவியில் குளித்ததால்) கொஞ்சம் கொஞ்சமாய் முடி நிறம் மாறி போச்சாம்; வேறெ ஒண்ணும் இல்லை, கொஞ்சம் ஒளி விழுந்த மாதிரி டால் அடிக்குது; அய்யாவுக்கு நரை விழுந்திருச்சு. நரை வுழுந்த முடி, தில்லைத் தளிர் மாதிரி புலபுலன்னு சடைசடையாய்த் திரண்டு காட்சியளிக்குதாம்."
//

//
வேறு ஒன்றுமில்லை; "நரை விழுந்து தில்லைப் பூந்தளிர் போலச் சடைகொண்ட முனிவர், கருப்பினி உட்கொளும் மூலிகையிலையைப் போய்ப் பறித்துக் கொண்டிருக்கிறாரே?" என்று புலவர் கேலி பாடுகிறார்.
//

ஐயா, அற்புதமான கவிதை வரிகளை மேற்கோள் காட்டி, சுவையான விளக்கத்தையும்
கொடுத்திருக்கிறீர்கள். தில்லைக் கட்டுரைகள்
மிக இதமாக இருக்கின்றன. தொடருங்கள் நிறைய.

"கறங்கு" என்பதற்கான விளக்கமும் மனதில்
இருந்த சில குழப்பங்களைத் தவிர்த்தது.
"கறங்கு மருவி கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை" என்ற அப்பர் பெருமானின் பாவநாசப் பதிக வரிக்கு
முழுமையான பொருள் குழப்பமின்றி இதைப்
படித்ததும் கிடைத்தது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

வெற்றி said...

இராம. கி அய்யா,
நல்ல அருமையான பதிவு. நல்ல அரிய பல சங்கதிகளை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

தக்கண மூர்த்தி இன்னும் திரிந்து தக்ஷிணா மூர்த்தி ஆவார்.

அருமையான விளக்கம் .. பாராட்டுக்கள்..

//"உறங்குகின்ற கும்பகர்ண, உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்ற தின்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்;
கறங்கு போல விற்பிடித்த காலதூதர் கையிலே
உறங்குவாய் உறங்குவாய் இனிக் கிடந்துறங்குவாய்"//

இதில் கறங்கு என்பதன் விளக்கம் என்ன ஐயா..??