Friday, June 16, 2006

கண்ணகி பற்றிய நயனன் பதிவும், அதில் நடந்த உரையாடலும்

கண்ணகி பற்றிய திரு. நயனனின் பதிவும், அதையொட்டிய என் சென்ற மூன்று பதிவும் இங்கே ஒருசிலரைக் கொதிக்க வைத்திருக்கிறது போலும். திரு. SK நயனனின் பதிவில் ஒரு பின்னூட்டு அளித்திருந்தார். அதைப் படித்த பின்னால், என் மறுமொழியைப் படியுங்கள்.
-----------------------------------------------------
திரு.SK,

இந்த ஓராண்டு வாதம் ஏன் நகைப்புக்குரியது?

சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும். சிலம்பில் இருப்பதைத்தானே சொல்ல முடியும். உங்கள் கற்பனையில் இருப்பதையா சொல்ல முடியும்?

மாதவி அரங்கேற்றுக் காதையில் வரும் பொழுது அவளுக்கு அகவை 12 என்று ஒப்புகிறீர்கள். அதற்குப்பின் கால ஓட்டத்தைக் காட்ட விரும்பிய இளங்கோவடிகள், கரிகாலன் இமயம் வரை சென்று திரும்பிய வரிகளைப் போடுவதாகச் சொல்லுகிறீர்கள். [புகார்க்காண்டம் இந்திர விழவூரெடுத்த காதை 89 - 98]. அப்படியானால், கோவலன் மாதவி காலத்தில் இருந்த அரசன் கரிகாற் சோழன் என்கிறீர்களா? பாட்டின் வரிகளை ஒழுங்காகப் படியுங்கள், அய்யா! நீங்கள் காட்டும் வரிகள் முன்னோர் புகழ்ச்சி.

"இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅ
செருவெங் காதலில் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுக இம்
மண்ணக மருங்கின் என்வலி கெழு தோள் எனப்
புண்ணிய திசைமுகம் போக்கிய அந்நாள்"

என்பது பழங்கதை. சிலம்பில் இந்த இந்திர விழாக் காலத்தைப் பார்க்கும் போது கரிகாலன் காலம் அந்நாள் (past); ஆய்வாளர் கருத்துப் படி அந்த அந்நாள் என்பது குறைந்தது 150, 200 ஆண்டுகளுக்கு முன்னே. சேயோனை மகன் காலத்திற்குக் கொண்டுவந்தால் எப்படி? கரிகாலனைத் தூக்கி சிலம்பின் கதைக் காலத்திற்குக் கொண்டுவந்து ....... நண்பரே, சிலம்பையும், கொஞ்சம் புறநானூற்றையும், பதிற்றுப் பத்தையும், அகநானூற்றையும் ஆழ்ந்து படியுங்கள்; அப்புறம் சொல்லுங்கள்.

சரி கரிகாலன் இல்லை என்றால், யார் தான் சிலம்பு காலத்தில் இருந்த சோழ மன்னன்? இதற்கு மறுமொழி சொல்ல, இரண்டு இடங்களைப் பார்க்கவேண்டும்.

முதல் இடம். வாழ்த்துக் காதையில் வரும் உரைப்பாட்டு மடை. இதில்

"குமரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்"

என்ற வாசகத்தில் வரும் ஞாயிற்றுச் சோழன் யார்?

இரண்டாம் இடம், நீர்ப்படை காதை. இதில் "நெடுஞ்செழியன் மறைந்த பின்னால் பாண்டிய நாட்டில் என்ன நடந்தது?" என்று மாடல மறையோனிடம் செங்குட்டுவன் கேட்கிறானே, அப்பொழுது மாடலன் சொல்லுவதையும் பார்க்க வேண்டும்.

"நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வளநாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின்
ஒன்பது குடையும் ஒருபகல் ஒழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்"

என்று சொல்லுகிறான். அதாவது "உன் மைத்துனன் பெருங்கிள்ளியொடு ஒத்துப் போகாமல், அந்த இளைய அரசனைப் பொறாத, அவன் ஏவல் கேளாத, சோழவளநாட்டை அழிக்கும் குணம் கொண்ட, ஒன்பது அரசரின் ஒன்பது குடையும் ஒரே பகலில் ஒழித்து, உன் மைத்துனனின் சக்கரத்தை (ஆட்சியை) ஒருவழிப் படுத்தினாய்!"

அப்படியானால் செங்குட்டுவன் காலத்தில் சோழநாட்டை ஆண்ட அரசன் பெயர் என்ன? அவன் பெயர் பெருங்கிள்ளி. இவன் ஞாயிற்றுச் சோழனின் மகன். செங்குட்டுவன் தாய் நற்சோணையின் தம்பி. இந்தப் பெருங்கிள்ளியைப் பெருநற்கிள்ளி என்றும் சொல்லுவர். பெரும்பாலும் இவன் இராச சூயம் வேட்ட பெருநற் கிள்ளி என்றே பல தமிழறிஞரும் முடிவு செய்கின்றனர்.

பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்து பற்றிய பதிகத்தில்,

"ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை, நேரிவாயில் நிலைச்செரு வென்று" என்றும், "ஆராச் செருவிற் சோழர் குடிக் குரியோர், ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத்து இறுத்து, நிலைச்செருவினால் தலையறுத்து" என்றும் வருவதால், மேலே பெருநற்கிள்ளி காலத்திய நிகழ்வுகள் இன்னொரு இடத்தில், உறுதி செய்யப் படுகின்றன. நீங்கள் சிலம்பை எப்படித் தலைகீழாகப் படித்தாலும் வேறு இடைப்பரட்டு (interpretation) ஏற்பட வழியில்லை.

அடுத்து, "13 வயதில் 'இவர்கள்' கூற்றுப்படி மாதவி மணிமேகலையைப் பெற்றிருக்க முடியாது!" என்று சொல்லியிருக்கிறீர்கள். இவர்கள் என்பது நானும், நாக. இளங்கோவனுமா? அல்லது இளங்கோவடிகளா? மாற்றுக் கூற்றை எடுத்துக் காட்டுங்களேன். சும்மா, உங்கள் எதிர்பார்ப்புக்களைக் கூறிக் கொண்டிருந்தால் எப்படி?

13 அகவையில் பிள்ளை பெற முடியுமா? ஒரு காலத்தில், 100 ஆண்டுகளுக்கு முன்னால், நம் பாட்டி மார்கள் 14, 15 அகவையில் கூடப் பிள்ளை பெற்றார்கள் என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன். பெண்கள் சமைகின்ற பருவம் 12 இலும் அமையலாம் என்றுதான் கேட்டிருக்கிறேன். நம்முடைய இந்தக் கால விழுமங்களை அந்தக் காலத்தில் பொருத்தாதீர்கள் என்று சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். நான் சொல்லும் கணக்குகள் சிலம்பில் கொடுத்துள்ள தரவுகளை வைத்து ஒருவிதக் கணிப்புத் தான். அதில் ஒரு நாலைந்து மாதங்கள் தவறலாமே ஒழிய, முற்றிலும் மாறி இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அது தவறென்றால், நிறுவித்துக் காட்டுங்கள். உங்கள் ஊகங்களைச் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள்.

"கோவலனும் கண்ணகியின் ஆடை அணிகலன்கள், நகைகள் இவற்றையெல்லாம் மாதவிக்கு வழங்க நேரம் வேண்டும்!"[புகார்க்காண்டம் கனாத்திறம் உரைத்த காதை 69 - 70] என்று ஒரு நக்கல் அடித்திருக்கிறீர்கள். அதில் அவன் மாதவிக்கு அத்தனையும் கொடுத்ததாகச் சொல்லவில்லை. மீண்டும் வரிகளைக் கூர்ந்து படியுங்கள்.

"சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடில்
குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு"

என்றே இளங்கோ சொல்லுகிறார். "அந்த வஞ்சகமானவளோடு கூத்தாடியதில், என் பொருள் குலைந்த இலம்பாடு (பொருள் இல்லாது இருத்தல்) எனக்கு நாணம் தருகிறது" என்று கோவலன் சொல்லுகிறான். இங்கே "பொருளைத் தூக்கிக் கொடுத்தான்" என்ற நேர்பொருள் இல்லை. மற்றோர் உரையை வைத்து அதன் வழியே இடைப்பரட்டாமல், "வேறு எந்த வழியில் வணிகத்தைச் சரிவரப் பார்க்காத ஒருவனுக்குப் பொருள் தொலையும்?" என்று நீங்களே எண்ணிப் பாருங்கள். [நீங்கள் ஒரிடத்திற்குப் போய்க் கேட்டிருந்தால், உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்திருக்கும். அங்கு போகவொட்டாமல் யாரோ ஒரு நண்பர் உங்களை ஒரு பொழுது இருத்திக் கொண்டுவிட்டார். அப்புறம் கொடுபட்ட பணத்தை கடைசிவரை வாங்கவே முடியவில்லை. இப்பொழுது பண இழப்பு ஏற்பட்டது எதனால்? எப்படி அதைப் புரிந்து கொள்வீர்கள்? நிலைமையைப் புரியாது, உங்கள் நண்பரிடம் அந்தப் பணத்தைத் தூக்கிக் கொடுத்துவிட்டதாகச் சொல்லுவீர்களா?] அது என்ன அய்யா, அவ்வளவு வெறுப்பு மாதவி மேலும், கோவலன் மேலும், நக்கல் அடிக்கும் அளவிற்கு?

"மாலையை விலைக்கு வாங்கிய பண்பிலாக் கோவலன், மாதவியுடன் மன மகிழ்ச்சியுடன் பல்லாண்டு களித்திருந்தான் என்பதை இளங்கோ அடிகள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இதை மறுக்க முடியுமா?" என்று சொல்லியிருக்கிறீர்கள். நான் மறுக்கிறேன். என் கருத்தை என் பதிவிலும் இங்குமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். "கோவலன் மாதவியொடு பல்லாண்டு களித்ததாய் எங்கு இளங்கோவடிகள் சொல்லியிருக்கிறார்?" என் று சான்று கூட்டிச் சொல்லுங்கள், காத்திருக்கிறேன்.

இந்த வாதத்திற்கிடையில் நாக. இளங்கோவன் சீதையை இழுத்தது முற்றிலும் சரி என்றே எனக்குப் படுகிறது.

இத்தனை பேரை இலங்கையில் இராமன் கொன்றிருக்க வேண்டாமே, சீதையை அனுமன் தூக்கிச் செல்ல அணியமாய் இருந்தானே? பிறகு ஏன் இவ்வளவு உயிர்ச்சேதம்? இராமாயணம் புரிந்த அளவிற்கு சிலம்பு புரிந்ததா என்பதே என் கேள்வி.

"என் இராமனுக்கு இழுக்கு" என்று பிராட்டியார் செய்ததும் எனக்குச் சரி. அதே போல "பட்டாங்கில் யானும் ஓர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்" என்று கண்ணகி செய்ததும் சரி. "சீதையைத் தொடக் கூடாது, கண்ணகியை இழிவு படுத்தலாம்" என்பதில் எனக்கு ஒருப்பாடு கிடையாது. எனக்கு இருவருமே போற்றத் தகுந்தவர்கள்.

அன்பிற்குரிய இளங்கோ,

இந்தப் பின்னூட்டம் நீண்டு போனதால், அதே பொழுது நான் எழுதிவரும் பதிவிற்கும் ஒரு தொடர்ச்சியாய் இருக்கும் என்பதால், என்னுடைய பதிவிலும் இந்தப் பின்னூட்டத்தை ஒரு படி போடுகிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

9 comments:

nayanan said...

அன்பிற்குரிய அய்யா,

தங்கள் இடுகையும் விளக்கமும் அரியன.
நேரமெடுத்து நீங்கள் செய்யும் பணி,
பல நல்லோருக்கு இருக்கும் குழப்பத்தைத் தீர்க்கக்
கண்டிப்பாக உதவும்.

என் மனமார்ந்த நன்றிகளை ஏற்றுக் கொள்ளவும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்

VSK said...

அன்பு இராம.கி. ஐயா,
தங்களின் விரிவான விளக்கம் கண்டு தெளிந்தேன்.

வெறுப்பு, நக்கல், ஊகம், என பலவாறு அடுக்கியுள்ளீர்கள் என்னைப்பற்றி.

மகிழ்ச்சி.

இது இவ்வளவுதான், இப்படித்தான் என அறுதியிட்டு சொல்லாத நிலையில், ஊகங்களும் ஒரு வழிதானே!

யார் மேலும் வெறுப்பில்லை எனக்கு.[உங்களையும் சேர்த்து]

இராமாயணக்காதையே இலங்கை வேந்தனும் அவன் மக்களும் அழியவென்றே பிறந்த கதை.

சிலம்பு அப்படியல்ல.

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியதால் விளைந்த அவலம்.

புரிதலுக்கு நன்றி.

தங்களது தமிழறிவுக்கு முன் நான் எம்மாத்திரம்.

வணக்கம்.

Anonymous said...

ஐய்யா, ஆங்கிலத்தில் "Brown" என்று குறிப்பிடப்படும் நிறத்துக்கு தமிழில் சரியான சொல் என்ன? அனேகமாக யாருக்கும் இதன் விடை தெரியவில்லை.

VSK said...

பழுப்பு ??

இராம.கி said...

Brown என்பதற்கு ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலி கீழே உள்ளவாறு வரையறை சொல்லும்.

O.E. brun "dark," only developing a definite color sense 13c., from P.Gmc. *brunaz, from PIE *bher- "shining, brown" (cf. Lith. beras "brown"), related to *bheros "dark animal" (cf. beaver, bear, and Gk. phrynos "toad," lit. "the brown animal"). The O.E. word also had a sense of "brightness, shining," now preserved only in burnish. The Gmc. word was adopted into Romantic (cf. M.L. brunus, It., Sp. bruno, Fr. brun). Colloquial brown-nose (1939) is "from the implication that servility is tantamount to having one's nose in the anus of the person from whom advancement is sought" [Webster, 1961]. Brown Bess, slang name for old British Army flintlock musket, first recorded 1785.

தமிழில் பொரிந்து போனது, நெருப்பில் எரிந்து போனது என்பதைப் புகர்ந்து போனது என்று சொல்லுவார்கள். புகர் என்பது brown க்கு இணையாகச் சொல்லப் படும் சொல்.

அன்றாட வழக்கில், குறிப்பாகத் தென்பாண்டி நாட்டில், மாநிறம் (மாங்கொழுந்து என்பது இப்படி brown நிறத்தைக் காட்டும்.) என்றும், உள்ளது போல என்று இடக்கர் அடக்கலாகவும் சொல்லுவார்கள். கொஞ்சம் சிவப்புக் கலந்த புகர் நிறத்தைக் கபில நிறம் என்று சொல்லுவது உண்டு.

தவிர, மா நிறம் என்பது கொஞ்சம் ஒளிவந்தாற் போன்ற கரிய நிறமாகவும் கொள்ளப் பெறும்.

பழுப்பு என்பது கொஞ்சம் துருப் பிடித்த மஞ்சள் ஊடுறுவிய நிறம்.

அதனால் புகர் என்பதே என் பரிந்துரை.

அன்புடன்,
இராம.கி.

G.Ragavan said...

சிலம்பில் எனக்கும் கொஞ்சம் தெரியும் என்ற ஆணவம் ஆவியாயிற்று. ஆழ்ந்து படித்திருக்கின்றீர்கள் ஐயா. மிகவும் ஆழ்ந்து படித்திருக்கிறீர்கள்.

இராம.கி said...

அப்படியெல்லாம் கிடையாது இராகவன், எனக்குத் தெரியாத, புரியாத செய்திகள் சிலம்பில் பலவும் கிடக்கின்றன.

இன்னும் "நூற்றுவர் கன்னருக்கும் செங்குட்டுவனுக்கும் ஏற்பட்ட உறவு என்ன? அந்த நூற்றுவர் கன்னரின் (அவர் சத கர்ணி தான், ஆனால் எந்தச் சத கர்ணி?) இயற்பெயர் என்ன?" என்று அறியமுடியாது இருக்கிறேன்.

தக்கண பதம் என்பது நூற்றுவர் கன்னரின் தலைநகரான paithan வழியாகப் போனது. செங்குட்டுவன் கங்கையின் தென்கரை அடைந்தது எந்த வழி?

அந்தக் காதையில் சொல்லப்படும் வடபுலத்தரசரை அடையாளம் காட்ட முடியுமா?

கேள்விகள் பல இருக்கின்றன? விடைகள் எப்பொழுது கிடைக்கும்?

நம்மில் ஒருசிலர் என்னவென்றால், இருப்பதையும் அழித்துக் கொண்டு, நம் ஊர் கதைத் தலைவியையே இழிவு படுத்திக் கொண்டு, நம் பெருமிதத்தையும், குலைத்துக் கொண்டு இருக்கிறோம்.

இதையெல்லாம் சொன்னால், இவனொரு தமிழ்த் தீவிரவாதி என்பார்கள்.

அன்புடன்,
இராம.கி.

செல்வநாயகி said...

அன்பின் இராம.கி. ஐயா,

ஒரு ஓய்வான பொழுதில் உங்கள் பதிவுகளைப் படித்தேன். கற்கத் தவறிய பல விடயங்களைச் சொல்லித்தரும் பள்ளியாக உங்களின் "வளவு" இருக்கிறது. சிலம்பு குறித்த உங்களின் தொடர் எங்களைப் போன்றவர்களுக்குப் பல புதிய கோணங்களைச் சுட்டிக் காட்டுகின்றது. நன்றி உங்கள் பணிக்கு.

குமரன் (Kumaran) said...

அன்புள்ள இராம.கி. ஐயா, இந்தப் பின்னூட்டம் உங்கள் பதிவைப் பற்றியது இல்லை. அதனால் பதிக்கவேண்டாம்.

உங்களிடம் ஒரு உதவி வேண்டி நிற்கிறேன். நேற்று ஒரு பதிவு இட்டேன். இந்தப் பதிவில் ஐ என்பதனை அய் என்றும் ஒள என்பதனை அவ் என்றும் சிலர் எழுதுகின்றார்களே; அதற்கு இலக்கண அடிப்படை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு பலரும் பலவிதமான பதிலைச் சொல்லியிருக்கிறார்கள். ஓரிருவர் நீங்களும் ஐயா என்பதனை அய்யா என்று எழுதிப் பார்த்திருப்பதாகவும் அதனால் உங்களிடம் கேட்டால் சரியான விடை கிடைக்கும் என்று சொன்னார்கள். நேரம் கிடைக்கும் போது பதிவினையும் பின்னூட்டங்களையும் பார்த்து உங்கள் கருத்தினைக் கூறுகிறீர்களா?

பதிவின் சுட்டி: http://solorusol.blogspot.com/2006/06/blog-post_27.html