தேவாரம் 11 ஆம் திருமுறையில் உள்ள. சிவத்தளி வெண்பா (அல்லது சேத்திரக் கோவை) எனும் இவர் நூலில் 24 வெண்பாக்கள் உள்ளன. இவ் வெண்பாக்கள் யாவும், ‘யாக்கை நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்போதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்’ என அறிவுறுத்தும்.
ஐயு-தல் = இதுவோ, அதுவோ எனத் தடுமாறல்.
ஐயம்/ ஐயப்பாடு ஐயு-தலின் வழி எழுந்த பெயர்ச்சொற்கள்.
ஐயப்பாட்டின் காரணமாய் எழுந்த கூர்த்த சிந்தனையால் இவர் பாக்கள் எழுந்ததால், இவர் ஐ அடிகள் எனப்பட்டார். ஐ = கூர்மை. ஐ-த்தல் = கூர்த்தல்/.
ஐயு-தல், ஐ-த்தல் என்னும் 2 வினைகளுமே இவரின் துறவுப்பெயரின் கீழ் பொருந்தும். காட்டாக, இவர் நூலின் 4 ஆம் பாட்டைப் பார்க்கலாம்.
காளை வடிவொழிந்து கையறவோ(டு) ஐயுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் - பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்(கு) ஆளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.
காளைவடிவு ஒழிந்து உன் கை செயலற்ற நிலையில், ”ஆகா, இறையை இதுவரை நினையாது இருந்தோமே என நாளும் அணுகி நலியாமுன், ஆரூரர்க்கு ஆளாய், முகங்கவிழ்த்து, கைகூப்புக” என்கிறார் ஐயடிகள்.
இவர் மிகுந்த கோயில்களைப் பாடவில்லை. இவர் காலத்தில் மிகக் குறைந்த கோயில்களே இருந்திருக்கலாம். இவர் பாடிய கோயில்கள்.
1.தில்லைச் சிற்றம்பலம் (காவிரி வடகரை)
2.திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் (காவிரி தென்கரை)
3.திருவையாறு (காவிரி வடகரை)
4.திருவாரூர் (காவிரி தென்கரை)
5.திருத்துருத்தி (காவிரி தென்கரை)
6.திருக்கோடிகா (காவிரி வடகரை)
7.திரு இடைவாய் (காவிரி தென்கரை)
8.திரு நெடுங்களம் (காவிரி தென்கரை)
9.திருக் குழித்தண்டலை / திருத் தண்டலை நீள்நெறி (காவிரித் தென்கரை)
10.”கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதி” என்ற விவரிப்பு உள்ள ஊர் எதுவென்று சொல்ல முடியவில்லை.
11.திருவானைக்கா (காவிரி தென்கரை)
12.திருமயிலை புன்னையங்கானல் (தொண்டை)
13.உஞ்சேனை மாகாளம் (உச்செயினி)
14.வளைகுளம்/வளர்புரம் (தொண்டை) - வைப்புத் தலம்.
15.திருச்சாய்க்காடு (காவிரி வடகரை)
16.திருப்பாச்சில் ஆச்சிராமம் (காவிரி வடகரை)
17.திருச்சிராமலை (காவிரி தென்கரை)
18.திருமழபாடி (காவிரி வடகரை)
19.திரு ஆய்ப்பாடி (கொள்ளிடத் தென்கரை, காவிரி வடகரை))
20.திருக்கச்சி ஏகம்பம் (தொண்டை)
21.திருப்பனந்தாள் (காவிரி வடகரை)
22,திருவொற்றியூர் (தொண்டை)
23.திருக்கடவூர் (காவிரி தென்கரை)
24.திரு மயானம் (இது கச்சி மயானமா, கடவூர் மயானமா, நாலூர் மயானமா? - தெரியாது.
முன்னே சொன்னது போல், இவர் பாடல்கள் எல்லாம் நிலையாமையையே பேசுவதால் ஐயடிகள் என்னும் இவரின் துறவுப்பெயர் இவருக்கு முற்றும் பொருத்தமே. காடவர் என்பது 6ஆம் நூற்றாண்டிற்குப் பின்வந்த பல்லவ நாட்டு மன்னரையும் குறிக்கும். காடவர் எனும் பெயரின் காரணத்தைப் பின்னர் வேறு இடத்தில் கூறுகிறேன்.
சிம்ம விண்ணுவின் தந்தை சிம்ம வர்மன் (பொ.570-585) தான் ஐயடிகள் காடவர் கோன் என்று ஒரு சிலரும், இரண்டாம் நரசிம்மவர்மனின் (கழற்சிங்கனின்) தந்தையான முதலாம் பரமேச்சுரவர்மன் (பொ.உ.670-695) தான் என்று வேறு சிலரும் குறிப்பர். இருவருக்கும் இடையே ஏறத்தாழ 100 ஆண்டுகள் இடைவெளி உண்டு. ”யார் உண்மையில் ஐயடிகள்?” என்று சரியாக நிறுவ, கல்வெட்டுகள் உதவலாம். ஆர்வமுள்ளோர் தேடுக.
[ஐயடிகள் என்பதை ”5 பாதங்கள்” என்று தவ்றாய்ப் பொருளைப் புரிந்து கொண்டு, சிம்மவர்மனைச் சிம்ஹாங்க, பாதசிம்ஹா, பஞ்சபாத சிம்ஹா எனச் சில வரலாறு திருத்தியர் வடமொழி வழி அழைத்துள்ளார். இதுபோன்ற தவறான மொழிபெயர்ப்புகள் கோயில்கள் தொடர்பாய் அதிகம். வட மொழியில் இருந்து தமிழுக்குப் பெயர்த்ததாய் இதையும் விக்கிப்பீடியா தலைகீழ்ப் பாடம் சொல்லும். இதையெலாம் யாரும் எப்போதும் சரி செய்ததில்லை.]