சாமி என்ற சொல்லின் பெண்பால் பெயரைக் கவிஞர் இரவாக் கபிலன் தன் முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தார்.அந்தச் சொல் பால் குறிக்காச் சொல். அதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று இறைப்படிமம், இன்னொன்று துறவி. (ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கலாம்.)
முதலில் இறைப் படிமத்திற்கு வருவோம். அது மரம், மண், கல், மாழை என்று பலவற்றால் அமையும். எதில் செய்தாலும் பளபள என்று ஒளி தரும் படி, இருட்டிலும் ஓரளவு தெரியும்படி, தேய்த்துப் பளபளப்புக் கூட்டியே செய்வர். சொல்>சொலித்தல், சொலுத்தல் போன்றவை ஒளியோடு இருக்கும் நிலையைக் குறிக்கும். சொல்>சொலுவம் = படிமம். சொலுவத்தைச் சொருபம் என்று சங்கதம் ஆக்கும்.
இனி ஒளிக்கு வருவோம். சூரியன் சாயும் நேரததில் வெள்ளொளி தெறித்து வெவ்வேறு நிறங்கள் பிரிந்து மறுபளித்தோ, ஒளிமுறித்தோ காட்டும். சாயும் நேரத்தை சாயுங்காலம் என்பார். அந்நேரத்தில் சூரியன் சாம்புகிறது. பொழுது (சூரியனுக்கு இன்னொரு பெயர்) சாயும் காலத்தைச் சாம்பும்> சாமும் காலம் என்றும் சொல்லலாம்.
மாலை மங்கும் நேரத்தில் சாம்பி> சாமித் தெரியும் சொலுவம் சாமி என்று அழைக்கப்பட்டது. இன்றும் கோயில் கருவறை இருட்டில் வெறும் அகல் விளக்கு ஒளியில் இறைப் படிவம் மங்கலாய்ச் சாமித் தெரிவதால் அது சாமி என்றும் அழைக்கப்பட்டது. எல்லா இறைப் படிமங்களுக்கும் இது பொதுவான சொல்.
சாமி என்ற சொல் இந்தையிரோப்பியனில் கிடையாது. சங்கதம், பாகதம் சேர்ந்த வடபுல மொழிகளில் தமிழ் சார்ந்த கோயில் பண்பாட்டால் பயனாகிறது.அது அங்கு கடன் சொல். “இந்து மதம்” என்று இன்று சொல்லப்படும் கலவை மதப்பெயர் உண்மையில் தென்னக ஆகம மரபையே குறிப்பிடுகிறது. எல்லாவற்றையும் ஆரியம் என்பது அறியாமை.
இனித் துறவிகளுக்கு வருவோம். பொ.உ.மு. 2500 க்கு முன்னால், தனிச்சொத்து ஏற்படுவதற்கு முன்னால், நிலைத்த மருத, நகர வாழ்க்கைக்கு முன்னால், துறவு என்ற சிந்தனை மாந்தருள் எழ வாய்ப்பேயில்லை. சொத்தின் நேரெதிர்ச் சிந்தனை துறவாகும். கண்ணை மூடிக்கொண்டு சம்மணம் கொட்டிச் சிந்தனையை ஒன்றுகூட்டித் தானிப்பது தானம் ஆனது. தானத்தைத் தான் சங்கதம் த்யானம் என்றாக்கும். சம்முதல் என்பது 2 கால்களையும் ஒன்றேபோல் கூட்டி உட்காருவது. இச் சமநிலையில் இருந்துசெய்யும் தானம் சமதானம் இது சமயம் எனப்பட்டது. இச்சிந்தனை நிலைப்பைக் கடவுளை நம்புபவனும் செய்யலாம். கடவுளை நம்பாது தன்மனத்தை ஒருங்குபடுத்த விழைபவனும் செய்யலாம். சமயம் என்பது ஓர் ஒருங்குபட்ட சிந்தனை. அவ்வளவு தான்.
சமயத்தில் ஆழ்ந்தவன் சமயி. சம்முதலின், சமயுதலின் நீட்சி சாமுதல். சாமுகிறவன் சாமி. தானம் செய்பவன் என்று அதற்குப் பொருள் அமையும். மற்கலியும், வர்த்தமானனும், புத்தனும் சாமிகள். அதனால் தான் பகவான் என்றும் அவர் அழைக்கப்பட்டார். சாமி என்ற இத் தனிச்சொல் பால் ஏற்காது. பால் ஏற்க வேண்டுமெனில் கூட்டுச்சொல் வேண்டும் துறவேற்ற சாமிகளில் ஆண் சாமியும் உண்டு. பெண் சாமியும் உண்டு.
No comments:
Post a Comment