தென்கிழக்கு ஆசிய நாகரிகங்களோடு தமிழர்க்குத் தொடர்புள்ளது என்பதை நானென்றும் மறுத்ததில்லை. ”அங்குள்ள கோயில்களைக் கட்டியது தமிழரே” என்று சில வரலாற்றார்வலர். ஆர்வக் கோளாற்றில் சொல்வதைத் தான் நான் மறுக்கிறேன். எதிர்க்கிறேன். ”கட்டியது அவர். துணை செய்தது தமிழர்” என்று சொல்லுங்கள். முற்று முழுதாய் நீவீர் சொல்வதை நான் ஏற்பேன்.
இப்படி ஒரு அண்ணன்காரத் தோரணையைத் தமிழர் கொள்வது மிக மிகத் தவறு. கம்போடிய அரசரைப் பல்லவரென்பது மிகமிகத் தவறு. பிள்ளை இல்லாத பங்காளிகளுக்குள் பிள்ளைகளைத் தத்துக் கொடுப்பது ஒரு காலத்தில் தமிழரிடமிருந்த மரபே. ஆனாலும் அவரவர் ”விலாசத்தை” மதிக்க வேண்டும் என்பதை ஆழப் புரிந்துகொண்டே இம்மரபு தொடர்ந்தது. அவரின் தனித்தன்மை மறுத்து, ”மடையரான உமக்கெல்லாம் நாங்களே சொல்லித் தந்தோம்” என்பது ”கருப்பருக்கும் செவ்விந்தியருக்கும் ஒன்றும் தெரியாது, வெள்ளையரான நாங்களே அவருக்குச் சொல்லித் தந்தோம்” என்ற குடியேற்ற (colonial) மனப்பாங்கு கொள்வதை ஒக்கும்.
முற்றிலும் இதுவொரு பொதுக்கை (fascist) மனப்பான்மை. இப்பான்மையோடு தொடர்ந்து பேசினால், உலகில் பெரும்பாலோர் நமை மதியார், நமக்கு ஆதரவும் தரமாட்டார். நம்மூரிலுள்ள சில தமிழ் வறட்டுவாதருக்கு என்று இச் சூதானம் புரியுமோ? தெரியவில்லை.
No comments:
Post a Comment