அண்மையில் வெனீசு நகரம் பற்றிய ஒரு விழியத்தை என் முகநூல் பக்கத்தில் முன்வரித்தேன். அது என் சிந்தனையைத் தூண்டியது. இத்தாலிய வெனிசு நகரம் மரத்தூண்களின் மேல் அமைந்தது போல் புகாரின் ஒரு பக்கமும் மரத்தூண்களின் மேல் அமைந்திருக்கலாம். அது நடக்கக் கூடியதே. ஏனெனில் புகாரின் ஒரு பகுதியும் சதுப்பு நிலத்தின் மேல் அமைந்ததே.
(அங்கிருந்து வெளிவந்த நகரத்தார் நீரழிவிற்குப் பயந்து செட்டிநாட்டில் தரையில் இருந்து 6 அடிக்கும் மேலுயர்ந்து காட்சியளிக்க்கும் வீடுகளைக் கட்டிக் கொண்டு இருக்கிறார்.
புகாரின் பெரும் செல்வந்தர் வீடுகளுக்கு முன்னால் ஆண்டு முழுதும் நீர் (அது ஆறோ, கடலோ, மொத்தத்தில் ஒரு கழி நிலம்) இருந்துகொண்டே இருக்கும். வீட்டிற்குள் நீர் வந்துவிடாமல் இருக்க இவ்வளவு உயரம் வேண்டுமாம். தவிர வீட்டிற்குள் நுழைய ஏழெட்டுப் படிகள். படகு வந்தால், அதைச் சீராய்க் கட்டி நிறுத்துதற்குத் தோதாய், வீட்டுவாசலில் 2 தூண்கள். தூண்களில் படகைக் கட்டி படிகளில் இறங்கி வீட்டிற்குள் போகவேண்டும். நெய்தல் நகரத்திற்கான ஒரு கட்டிட அடவு , இன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டப் பாலை நிலத்தில் முற்றிலும் முரண் தோற்றத்தில் காட்சியளிக்கும்.
நகரத்தாருக்குத் தெரிந்த ஒரே அடிப்படைக் கட்டட அடவு (design) அது போலும். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் நாட்டு விடுதலைக்கு அப்புறம் தான் இந்த அடவை அவர் மாற்றினார். அதுவரை எங்கு நோக்கினும் புகார் அடவு தான்.
ஒரு காலத்தில் ”நகரம்” என்றால் புகார் தான். 1950 களில் “பட்டணம்” என்றால் சென்னை என்பது போல் இதைக் கொள்ளலாம். ”எம் புள்ளை பட்டணம் போயிருக்கான்.”
புகார்ச் செல்வந்தர் வீடுகளின் எச்சம் இன்றும் செட்டிநாட்டில் மிஞ்சுகிறது. கூடவே பெரிதும் அழிந்து வருகிறது. பராமரிக்கச் செல்வமில்லை; ஆட்களும் இல்லை. கால காலமாய்த் தொகுத்துச் சேர்த்த பட்டறிவும் செல்லரித்துப் போய்விட்டது. வீட்டு மேங்கோப்பைப் (superstructure) பிரித்து, தேக்கு மரத் தூண்கள், உத்தரங்கள், பட்டைகள் , பலகைகள் ஆகியவற்றை விற்று, சுவர்களை இடித்து, நிலத்தை மனைகளாக்கி விற்கத் தொடங்கிவிட்டார். நிலத்தின் விலையும் கன்னாப் பின்னா என்று போகிறது.
புகார் நகரத்தில் இருந்த மற்றோரின் கட்டமைப்பு காவிரிப் புலத்தின் கால்வாய்கள் ஓரத்தில் அங்கும் இங்குமாய் இன்றும் சிறிதளவு வெளிப்படும். புகாரின் ஒருங்கு சேர்ந்த நகரமைப்போ இன்றும் நம் யாருக்கும் தெரியாது. நுட்பியல் தெரிந்த வரலாற்றாய்வாளர் யாரும் பிச்சாவரம், முத்துப்பேட்டை, திருமறைக்காடு போன்ற இடங்களில் அலையாத்திக் காடுகளுக்கிடையே தூண்களின் மேல்நிற்கும் கட்டுமானத்தைச் செய்துபார்க்க முயன்றதில்லை. இதுபோல் செய்து பார்த்து உண்மை தேரும் வெள்ளோட்டக் கட்டுமானங்களில் நமக்கு ஆர்வமும் இல்லை.
மேலையரும், 20 ஆம் நூற்றாண்டு ஆசிரியரும் எழுதிய வறட்டு வரலாறே நமக்குப் போதும் போலும். அவர் எழுதியதைப் பின்பற்றி, தமிழர் வரலாற்றைப் புறக்கணித்து, ”அசோகர் சத்திரம் கட்டினார், சாவடி கட்டினார், சாலையின் இரு மருங்கும் மரங்கள் நட்டார்” என்று நெட்டுருப் போட்டு வரலாற்றுத் தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு ஒரு விடைத்தாளில் கொப்பளித்தால் நமக்குப் போதும். “2 மார்க்” கிடைத்துவிடும். இதுபோல் 35 மதிப்பெண்கள் கிடைக்கத் தான் நாம் எல்லோரும் வரலாறு படிக்கிறோம். அதற்கு மிஞ்சிய ஆர்வமெல்லாம் நம்மிடம் இல்லை. தமிழர் நாகரிகமாவது ஒன்றாவது? இவர் எக்கேடோ கெட்டுத் தொலையட்டும்.)
இற்றைக் கொச்சி, எரணாகுளமும் கூடப் பழங்காலப் புகார் போலத் தான். பல இடங்களில் மரத்தூண்களின் மேல் பல்வேறு கட்டுமானங்கள் இருக்கும். கொற்றவை புதினத்தில் புகாரின் இதுபோன்ற கட்டுமானத்தை எழுத்தாளர் செயமோகன் மிக நன்றாய் விவரித்திருப்பார். (அது படிக்க வேண்டிய, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய, ஒரு புதினம். செயமோகனைத் திட்ட மட்டும் செய்யாமல், அவர் எழுதிய இது போன்ற நல்லதையும் நாம் போற்றலாம்.)
தொல்லியலார், வரலாற்றாய்வர் போன்றோர் இதுபோன்ற கட்டுமானத்தை ஆய்ந்து மேலும் தம் களப்பணியால் கடலுள் தேடினால், ஒருவேளை மாய்ந்த புகாரைக் கண்டுபிடிக்க முடியலாம்.
No comments:
Post a Comment