கடந்த 70000 ஆண்டுகளில் எப்போது முகன மாந்தன் (modern man) ’எண்’ணத் தொடங்கினானென்பது அறிய ஒண்ணாதது. ”இரு விரல்கள், இரு பூனைகள், இரு பழங்கள்” என்ற அறிவை அப்பூதியாக்கி (to abstract) இரட்டுமைக் (two-ness) கருத்து எப்போது புரிந்ததோ அப்போதே எண் பற்றிய சிந்தனை அவனுக்கு எழுந்திருக்கலாம். ஒருவேளை 50000 / 60000 ஆண்டுகள் முன் முதல்மொழி தோன்றுகையில், (அதற்குமுன் மொழி எழுந்ததாய் இற்றை அறிவியல் கருதவில்லை.) மாந்தன் ’எண்ணத்’தொடங்கினானோ, என்னவோ? ”ஒன்று, இரண்டு, பல” என்றவாறு பொருத்தும், சேர்க்கும், இள்ளும், இணர்க்கும், இணைக்கும் போக்கு, கொஞ்சங் கொஞ்சமாய் ஏற்பட்டது கூட இள்> *இண்> எண் சிந்தனை (இதுவே என் புரிதல். எள்>எண் என இப்போது கருதுவதில்லை) வளர்ச்சிக்குக் காரணமாகலாம். புதிதாய்ப் பேசத்தொடங்கும் பிள்ளைகூட, “ஒன்று, இரண்டு, பல” என்றே முதலிற் புரிந்து கொள்வதாகவும், பின் சிச்சிறிதாய் அப்பூதி எண் (abstract number) கருத்தைப் புரிந்து கொள்வதாயும் குழவிவளர்ப்பு வல்லுநர் சொல்வர்.
பல்வேறு தொல்முது குடியினரும், பெரும்பாலும் ஒன்று, இரண்டு, இரண்டொன்று, இரண்டிரண்டு, பல என எண்ணுவதையும், இரண்டொன்றை மூன்றாகவும், இரண்டிரண்டை நாலாகவும் சொல்வது பழங்குடியினருக்குச் சரவலாவதையும், The universal history of numbers என்ற 3 பொத்தகங்களில் [Penguin Books India, 2005] Georges Ifrah காட்டி யிருப்பார். (இயன்றோர் இப் பொத்தகங்களைக் கட்டாயம் படியுங்கள். இணையத்தில் தமிழெண்கள் பற்றித் தப்பும் தவறுமாய்ப் பல செய்திகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. Georges Ifrah இல் இருந்து வேறுபடலாம். ஆனால் அவரைப் படித்தபின் வேறுபடுங்கள். கற்பனையில் எண்ணாய்வுக் கோட்டை கட்டாதீர்கள்.) இதேபோல், பல்வேறு பொருட்தொகுதிகளை நம்முன் காட்டி அவற்றை ’எண்’ணிக் கணக்கிடாமல், பார்த்த அளவிலேயே “எத்தனை பொருட்கள் நமக்குத் தெரிகின்றன?” என வினவினால், நம்மில் பலரும் நாலுக்குமேல் இனங் காட்டத் தடுமாறுவதையும் நாலுக்குமேல் நினைவுகுன்றிப் ’பல’ என்று சொல்வதையும் அவர் சான்று காட்டுவார்.
இவ்விடுகை 3 ஐப் பற்றியது. (ஒந்து/ஒண்ணு/ஒன்னு எனும் 1 ஐப் பற்றி https://valavu.blogspot.com/2005/11/blog-post_03.html இடுகையில் சொன்னேன். ஈல்>ஈர்>ஈர்ந்து; ஈர்> இரு> இரள்> இரள்தல்> இரள்ந்து> இரண்டு எனும் 2 ஐப் பற்றிப் பல கட்டுரைகளில் எழுதியுள்ளேன். அவற்றைத் தொகுத்து ஒரு தனியிடுகை இடவேண்டும். (உலகின் பல பழங்குடிகளும் (1,2, பல) என்றோ, (1,2,3, பல) என்றோ, எண்ணுவதில் தேங்கி நின்றார். இன்னுஞ் சில குடிகள் கைவிரல் கொண்டு, ஐந்து எனும் கருத்தீடு வரை வந்தார். ஐ, ஐது, ஐந்து, அய், செய் என்றும் தமிழிற் சொல்லப்படும் அள்>அய்>ஐ என்று இச்சொல் வளரும். அள்ளுதல்= சேர்த்தல். ஐந்து விரலும் சேர்த்தே அள்ளுகிறோம். அஞ்சென்பது ஐந்து> அய்ந்து> அய்ஞ்சின் பேச்சுவழக்கு. இன்னும் வளர்ச்சியடைந்தோர் மட்டுமே 4,6,7,8 ஆகியவற்றையும் எண்ணி வளர்ந்துள்ளார். பத்தும் ஒன்பது போன்றவை ஏற்பட்டது நீண்ட கதை. இவற்றைச்சொல்லாது 3 ஓடு நின்றுகொள்கிறேன்.
தமிழிய மொழிகளில், ”மூன்று” தமிழிலும், ”மூது” தெலுங்கிலும், ”மூறு” கன்னடத்திலும், ”மூ(ந்)நு” மலையாளத்திலும், ”முஜி” துளுவிலும், ”முண்ட்” கோண்டியிலும், ”மூண்டிங்” கொலாமியிலும், ”மூண்ட்” குருக்கிலும், ”முசி” பிராகுயிலும் பயிலும். https://www.etymonline.com/search?q=three இடுகையில் இந்தையிரொப்பிய மொழிகளில் பயிலும் சொற்கள் சொல்லப்படும். (இந்தை யிரோப்பியன் குடும்பம் தமிழியக் குடும்பத்தோடு ஏதோ வகையில் தொடர்பு காட்டும். எனவே அதையும் தெரிந்துகொள்வது நல்லது தான். நம்மிடம் இருந்து அரேபியர் எண்வடிவத்தை அறிந்து மேலையுலகில் பரப்பியதால், அதையும் ஆய்வது நல்லதே, அடுத்த 3 பத்திகளில் இந்தையிரோப்பியன் செய்தி வருகிறது.
three (adj.,n.) "the number which is one more than two; a symbol representing this number;" Old English þreo, fem. and neuter (masc. þri, þrie), from Proto-Germanic *thrijiz (source also of Old Saxon thria, Old Frisian thre, Middle Dutch and Dutch drie, Old High German dri, German drei, Old Norse þrir, Danish tre), from nominative plural of PIE root *trei- "three" (source also of Sanskrit trayas, Avestan thri, Greek treis, Latin tres, Lithuanian trys, Old Church Slavonic trye, Irish and Welsh tri "three") என்பார். சொற்பிறப்பியலார் SKEAT கீழுள்ள்தைச் சொல்லி யிருப்பார்.
THREE, two and one. (E.) M. E. thre, Wyclif, Matt, xviii. 20. A.S. thred, Matt, xviii. 20 ; other forms thrio, thri, thry, Grein, ii. 599. + Du. drie. +Icel.thrir (fem, thrjar, neut. thriu). +Dan.tre. +Swed.tre. +Goth.threis. +G.drei +Irish,Gael.,and W.tri. +Russ.tri. +Lat.tres, neut. tria +Gk. treis, neut. tria.+ Lithuan. trys (stem tri-). + Skt. tri. All from Aryan TRI, three (masc. TRAYAS, neut. TRIA) ; Fick, i. 604.
Origin unknown; some have suggested the sense 'that which goes beyond,' as coming after 2. Cf. Skt. tri, to pass over, cross, go beyond, fulfil, complete. Perhaps it was regarded as a 'perfect' number, in favour of which much might be said. Der. three-fold, A.S. thrifeald, thriefeald, Alfred, tr. of Boethius,c. xxxiii. 4 (b. iii. met. 9); three-score, Much Ado, i.i.aoi; also thri-ce, q. v.; and see thir-d, thir-teen, thir-ty. From the same source are tri-ad, tri-angle, tri-nity, tri-pos, &c. See Tri-. Also tierce, terc-el, ter-t-ian, ter-t-i-ar-y.
மேலே ”Origin unknown“ என்று சொல்வதைக் கவனியுங்கள். வட இந்திய மொழிகளிலும் ”திரிச்” சொற்களை மொழியறிஞர் அடுக்குவாரே தவிர, சொற்பிறப்பியல் என்னவென்று சொல்லார், இதை ஒழுங்கே முதலில் நமக்கு உணர்த்தியவர் பாவாணரே. 1, 2, 3, 5, 10, ஆகிய எண்களின் செய் அடையாளங்களும் அவற்றிற்கான பெயர்களும் மாந்த உறுப்புகளை வைத்தே எழுந்திருக்கலாம். இன்றுங் கூட, 1 ஐக் காட்ட, ஆள்காட்டி விரலையே பயன் படுத்துவோம் 2 ஐக் காட்ட, ஆள்காட்டி விரலும், நடுவிரலும் பயன்படும். 3 ஐக் காட்ட ஆள்காட்டி, நடுவண், மோதிர விரல்களைப் பயன்படும். மூவிரல் அடையாளத்தை விட, (2 துளைகள், 3 தோல்பிரிவுகள் கொண்ட). மூக்கைத் தொடுவது 3 கோட்டை எளிதாய் அடையாளங் காட்டும். (கை எப்படி ஐந்தைக் காட்டியதோ, அதுபோல் இதுவும் முடியும்.. பழக்கந்தானே? ஓர்ந்துபாருங்கள்.) தொடக்கத்தில் உலகெங்கும் 3 இன் குறியீடாய் 3 கோடுகள் படுத்தோ, குத்திட்டோ, ஒருமுனையில் ஒட்டியோ கிடக்கும் இன்று நாம் பயிலும் அரேபிய எண்வடிவு வளர்ந்த வகையையும் கூர்ந்து பாருங்கள். 2 துளை 3 தோல் உருவத்திற்கும் மூக்கிற்கும் உள்ள ஒப்புமை சட்டெனப் புரிந்துபோகும்
சரி, மூக்கு, மூன்று ஆகிய சொற்கள் தமிழில் எப்படி எழுந்தன? முல், முன், முள், மூ, மூன்று என்பவை முன்வரல் பொருளில் எழுந்தவை. முல்லல்= முன்வரல். முல்>முன்= முன்மைக் கருத்து. முல்>முள்> முளு>முழு>முகுதல்= முன்வரல்; முகுதல்>முகுத்தல்= முன்வர வைத்தல் (பிறவினைச் சொல்); முகு>முகம்= தலையின் முற்பகுதி; முகு>முகரை= மூக்கும் வாயும் சேர்ந்த பகுதி; முகு> முக்கு> மூக்கு= முகத்தில் வாய்க்கும் முன்னுறுப்பு; முகஞ்சி>மூஞ்சி= மூக்கும் வாயும் சேர்ந்து முன்னீண்ட முகம்; முகனை= வீட்டின் முன்புறம்; main. முகனை= சொல்லின் முன் எழுத்து, இதுவே, யாப்பில் திரிந்து மோனையாகும். முகப்பு = வீட்டின் முன்பகுதி. முகு-த்தல்>மூ-த்தல் ஆயினும் முன்வரல் பொருளைக் கொடுக்கும். அகவை உயர்வையும் உணர்த்தும்.
மூ(ல்)>மூ என்பது மூன்றின் பெயரடையுரு. முல்நுதல்>முன்னுதல்>மூனு>மூன்று என்பது எண்வளர்ச்சி. மூனு, மூணு என்றும் திரிவு காட்டும். மூற்றை = triple. மூக்கு என்பது பறவை அலகையும், யானைத் துதிக்கையையும் குறிக்கும். கிண்ணியின் spout உம் மூக்கு எனப்படும். மூழ்த்தல்= மூட்டல்> மூத்தல்> மூத்திரம்= முன்னே பாய்ச்சும் சிறுநீர்; மூதம்= முன்னெழும் விந்து; மூதலித்தல்= முன்னிகழ்வை நிறுவிக் காட்டும் வினை, மூரல்= முன்வரும் பல்; முல்> மூல்> மூலம்= முன்வரும் முளை; மூலி/மூலிகை = முளைத்துவரும் வேர், இலை போன்றன. மருத்துவப் பொருள்கள். மூலிகம்> மூளிகம்> மூடிகம்> medicine (ஆங்கிலத்தில் சொற்பிறப்பு காட்டார்.) முன்வருவது இன்னொரு பொருளோடு முட்டும் முள்தல்>முட்டல்; மூலை = பக்கங்கள் முட்டும் corner. முள்ளுவது முழுகும் பின் மூழ்கும். முள்> மூழ்.
தமிழ் மூக்கைப் பார்த்த நாம், இனி ஆங்கில nose (n.) ஐப் பார்ப்போம். Middle English nose, from Old English nosu "the nose of the human head, the special organ of breathing and smelling," from Proto-Germanic *nuso- (source also of Old Norse nös, Old Frisian nose, Dutch neus, Old High German nasa, German Nase), from PIE root *nas- "nose." Used of beaks or snouts of animals from mid-13c.; of any prominent or projecting part supposed to resemble a nose from late 14c. (nose cone in the space rocket sense is from 1949). Meaning "sense of smell" is from mid-14c. Meaning "odor, scent" is from 1894. In Middle English, to have one's spirit in one's nose was to "be impetuous or easily angered" (c. 1400).
மேலே any prominent or projecting part supposed to resemble a nose என்பதைப் பார்த்தால் to project- என்பதே மூக்குச் சொற்பிறப்பியலில் முன்மைக் கருத்தெனப் புரியும், முகர்தல், மூக்குச் சொற்பிறப்பிற்கான முதற்பொருளல்ல; மூக்கில் பெற்ற வழிப்பொருள். இதைக் குழப்புவது முறையல்ல, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் இக் குழப்பமுண்டு. (அந்த அகரமுதலியில் ஆய்ந்தால், ஏராளம் குறைகளுண்டு, ஆயினும் அதை நாடத்தான் வேண்டும். எதிர்காலத்தில் புது எடுவிப்போர் - new editors- அதன் குறைகளைக் களையட்டும்) nose என்பது நமக்கு அயலில்லை. முன்வரும் மூக்கு முகர, நுகரப் போலியில் முதி>நுதி>நுசி>நொசி>நாசி ஆகும். இது வடபால் மொழிகளிலோ, இந்தையிரோப்பியனிலோ கிட்டாது, நுல்>நுள்>நுழு> நுகு என்ற வளர்ச்சியிலும் சொற்களுண்டு, தவிர, நுல்+தல் = நுற்றல்>நுற்றி>நெற்றி> நெத்தி என்பதை நோக்குங்கள். நுத்தி>நெத்தி என்றும் இது புரிந்துகொள்ளப் படும். நுது>நுதல் என்பதும் நெற்றியே. இச்சொற்களை எல்லாம் பார்க்கையில் நாசி எனக்குத் தமிழ் போலத் தான் தென்படுகிறது..
இன், துகரச் சொற்களுக்கு வருவோம். முகரத்திற்கு நுகரம் ஒருவகை போலி எனில் நுகரத்திற்குத் துகரம் வேறுவகைப் போலி. துல்>துள்>துள்ளல்= முன்வரல். மாந்தர், விலங்கு, திண்மம், நீர்மம், வளிமம் என யாரும்/எதுவும் முன்வரலாம். துள்ளு>துளு<துளி= முன்னெழுந்து, பரப்புவிசையால் (surface force) சொட்டுச்சொட்டாய் நீர்மம் மாறுதல். துள்>தூள்>தூள்சு> தூசு> தூசி (திண்மத் துளி) துகள் என்பதும் தூள்தான், .தூள்>தூள்வு>தூவுதல் என்பது துளிக்கும், தூளுக்கும் உண்டு. துளு>துளும்பு= முன்வரல். அடுத்த ளகர, டகரத் திரிவில் துளு> துடு> துடங்கு> துடக்கு> துடக்கம்>தொடக்கம்= முதலில் நேர்வது. துளு>துடு>துடி கிடக்கும் பரப்பு/பட்டை குறுக்குவெட்டில் முன்னெழுந்து துடிப்பது. துடு>துடுப்பு படகு நகரும்படி, முன்வந்து நீரைப் பின் தள்ளுவது. துள்வு>துவு>துவங்குதல்>துவக்குதல்>துவக்கம். (தொடக்கம், துவக்கம் ஆகிய இரண்டும் தமிழே.) துவல்>துவலை>திவலை = நீர்த்துளி
அடுத்து, டகர, தகரத் திரிவிலும் இதே கருத்தீடு பயிலும். துத்தம் = குரலுக்கு மேல்வரும் இசைச்சுரம். துத்தரி = மேல்வரும் ஊதுகொம்பு. துத்தியம் = புகழ்ச்சி. துதம் = துதி முன்நிற்போரைப் புகழும் போற்றுதல். துதி = கம்பு, கோலின் நுனி. துருத்தி = ஆற்றிற்கும் முன்வந்து நீளும் நிலநீட்சி. துருத்தி = உறை (sheath). யானையின் மூக்கு துதிக்கரம் = துதிக்கை எனப்படும். துதி தமிழ் என்பதற்கு இந்த யானை மூக்கு ஒன்றே போது,. துந்தம்>துந்தி>தொந்தி (எருதின் முன் தள்ளிய வயிறு. நந்தி என்ற பெயரே துந்தி>தொந்தியை உணர்த்தும், மாந்தரின் முன்தள்ளிய வயிறும் தொந்தி எனப்படும். துந்துபி = பேரிகை (இசைப் பல்லியத்தில் முன்நிற்கும் முழங்குகருவி. துளும்பு> துடும்பு> துதும்பு>ததும்பு டகர, ரகரத் திரிவிலும் பல சொற்களுண்டு. துருத்தல்> துரத்தல்= முன்னோக்கிச் செலுத்தல். துரிதல் = தேடுதல். துரு = மண்ணிலிருந்து மேல்வளர்ந்த மரம். துரு/துருசு = இரும்பின் மேல்மையும் கறை. துருக்கப்பல் = துருத்தப்பல் = முன்வந்த பல். துருத்தி = ஆற்றிடைக் குறை, உலையூது கருவி. துருவம் = தேடுகை
மூக்கின் மறுபெயராய், துண்டத்தையும், நாசியையும் திவாகரமும், கூடவே கோணத்தையும் பிங்கலமும். ஆக்கிராணம் எனும் வடசொல்லை சூடாமணி நிகண்டும் சொல்லும்., துள்+ந்+து = துண்டு>துண்டம் = துளை கொண்ட பறவை யலகு , மூக்கு, துதிக்கை போன்றன. நாசி பற்றி மேலே சொல்லிவிட்டேன். குள்> கொள்> கோள்> கோண்> கோணம் = கூர்மையான ஏனத்தின் மூக்கு. ஆக்கிராணம் என்பது கந்தம் = மணம் என்பதோடு தொடர்புடையதாய்த் தெரிகிறது.
இனி முடிவுரைக்கு வருவோம். துதி என்பது நம்மூரில் யானை மூக்கைக் குறித்தது. முக்கைக் குறிக்கும்படி ”துரி” என்பது நம்மூரில் இல்லைதான். ( அதனால் என்ன? சோழ>சோட>சோர என்ற திரிவில் ’சோழ’ மட்டுமே நம்மூரில் உண்டு.மற்ற இரண்டும் ’சோழ’ என்பதன் திரிவுகளென்று சொல்லாதிருக்க முடியுமா?) துரி>த்ரி>திரி என்பது இந்தையிரோப்பியனில் மூன்றைக் குறித்தது. திரியின் மூக்குத் தொடர்பை அவர் இன்றுவரை அறியவில்லை. Origin unknown என்பார். ஆனால் நுதி>நுசி>நொசியை இன்றும் கூட மூக்கிற்கு இணையாய்ப் பயன்படுத்துவார். மூக்கு-நாசி- துதி என்பது தான் இக்கட்டுரையின் அடிக்குறிப்பு. மூன்று - திரி என்பது இந்த அடிக்குறிப்பால் ஏற்பட்ட விளைப்பு.
கட்டுரையை முடிக்குமுன் இரு உதிரிச் செய்திகள். இங்கிலாந்தின் Teesdale, Swaledale பகுதிகளின் கிளைமொழியில் tether/ tethera என்றும் 3 (cardinal number three) பழைய எண்ணிக்கைக் கட்டகத்தில் ( old counting system) அழைக்கப் படுகிறது. அரபியில் 3 என்பது THALATHA- ثلاثة - THREE எனப்படும். துளதா>தலதா என்பதும் துளையோடு தொடர்பு காட்டும்.
அன்புடன்,
இராம.கி.