Monday, February 24, 2020

பாமினி

கீழே வருவது ஒரு தமிழறிஞருக்கு 2016 சூனில் அனுப்பியது. இது இன்றும் பொருதமுற்றதாய் அமைகிறது. நான் தனிப்பட்ட பெயர்களை இந்தப் பொது வேண்டுகோளில்  மறைத்துள்ளேன். கீழே வரும் வேண்டுகோளைப் பலரும் அருள்கூர்ந்து பரப்புங்கள்.
----------------------
அன்பிற்குரிய நண்பருக்கு,

இந்த அழைப்பை அனுப்பிய -------------------- பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,யைத் தொடர்புகொண்டு ஒரு கருத்தைத் தாங்கள் சொல்லமுடியுமா? கூடவே உங்கள் தொடர்புகளைக் கொண்டு மற்ற தமிழ்ப் பேராசிரியருக்கும் அனுப்பமுடியுமா? இச்செய்தி தமிழ்த்துறைகள் எங்கும் பரவட்டும். கூடவே தமிழர் புழங்கும் மடற் குழுக்களுக்கும் அனுப்புங்கள். நமக்கு ஒரு பொதுப்பொறுப்பு இருக்கிறது. அதைக் கவனியாதிருக்கிறோம். 

தமிழ்க்கணிமை என்பது இன்றைக்குப் பெருந்தொலைவு வந்துவிட்டது. கடந்த 10/15  ஆண்டுகளாகவே எண்மடைக் (8 bit) குறியீடுகள் குறைந்து நம்மிற் பலரும் இப்பொழுது 16 மடைக் (16 bit) குறியீடுகளுக்கு வந்து விட்டோம். அதே நேரத்தில் தமிழரில் ஒரு பகுதியினர் இன்னும் 8 மடைக் குறியேற்றங்களிலேயே தேங்கிப் போய் நிற்கிறார். [இத்தனைக்கும், ”தமிழாவணங்களில் ஒருங்குறியோ, அனைத்தெழுத்துக் குறியேற்றமோ -TACE- தான் இனிப் பழக வேண்டும்” என்று தமிழக அரசே 2009 இல் ஓர் அரசாணை கொண்டு வந்தது.] குறிப்பாக, எப்படி அரசின் தலைமைச் செயலகத்தில் அதன் அதிகாரிகளே அரசாணையைத் தூக்கியெறிந்து “வானவில்” என்னும் தனியார் குறியீட்டைத் தொடர்ந்து பழகுகிறாரோ, அதே போல அரசின் ஆதரவு பெற்ற தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளும் அரசாணையைக் கடாசித் தங்களின் ”உசிதம்” போல் இயங்குகின்றன. தமிழ்த்துறையினர் நடத்தும் ஆய்வரங்க அழைப்புகளில், ...................................... பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் இந்த ஆய்வரங்கத்தையுஞ் சேர்த்து, “பாமினி எழுத்துருவில்” கட்டுரை அனுப்பச்சொல்லியே தொடர்ந்து கேட்கப்படுகிறது.
-------------------------------------
ஆய்வுக் கட்டுரை பாமினி எழுத்துருவில் 5 பக்கங்களுக்கு மிகாமல் 1.5 இடைவெளியிட்டு எதிர்வரும் ......................... ஆம் நாளுக்குள் கீழ் வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அமையலாம்.
---------------------------------------
(இதுபோன்ற அழைப்புக்கள் பற்றி என்னிடம் 2, 3 நிகழ்ச்சி விவரிப்புக்கள் உள்ளன. அவற்றை விவரித்தால் மடலின் நீளங்கூடும். தவிர்க்கிறேன். தலைமைச் செயலகத்தின் தட்டச்சர்களே அரசின் மொழிக் கொள்கையை நிருணயிப்பதாய் நான் சொல்வதுண்டு. அதே போல் DTP கூடங்களும், சிறு சிறு அச்சுக் கூடங்களுமே நம்மூர்த் தமிழ்த்துறைகளின் ஆவண வெளிப் பாட்டை வழி நடத்துகின்றனவோ என்றும் எனக்குத் தோன்றுகிறது. பொள்ளிகைகளை (policies) யார் நிருணயிக்கிறார் என்பதில், நுட்பியலைக் கவனியாத தமிழர்க்கு, எப்பொழுதுமே சிக்கல் வந்துசேரும்.)

இப்படித் தமிழ்த் துறைகளில் நடப்பது சோம்பலாலா? அறியாமையாலா? விதண்டா வாதத்தாலா? – என்று எம்போன்ற ஆர்வலருக்குப் புரிவதில்லை. தமிழ்க் கணிமையின் போக்கையறிந்து தான் இவர் செயற்படுகிறாரா? அன்றி “ஏதோவொரு நுட்பியற் கல்லாமையில்” இவரிருக்கிறாரா? – என்றுந் தோன்றுகிறது. என் மேற் சினங் கொள்ள வேண்டாம். அருள்கூர்ந்து இந்நிலையை உள்ளமையோடு (realistic) அறிந்து அதற்கிணங்கத் தமிழ்த் துறையினர் நடந்து கொண்டால் தமிழ்க் கணிமையில் எவ்வளவோ செய்யலாம். வெறுமே அரசை மட்டுங் குறை கூறிப் பயனில்லை. ஒரு தேரையிழுக்க, ஊரே திரண்டு வடம் பிடிக்கவேண்டும். ”இச் சணற்கயிற்றை நான் பிடிப்பேன். அந் நூற்கயிற்றை நீ பிடி. எல்லோரும் இதுபோற் செய்யுங்கள், தேரை இழுத்துவிடலாம்” என்பது முற்றிலும் பகற்கனவு.

பாமினி எழுத்துரு என்பது ஓர் எண்மடைக் குறியீடு. தொடக்க காலத்தில் அது ஈழத்தமிழரால் செய்யப்பட்டது. இனப் படுகொலையால் உலகெங்கும் சிதறிப் போன ஈழத்தமிழர் தங்களுக்குள் செய்தி பரிமாறிக் கொள்ள உருவான எழுத்துரு இதுவாகும். தமிழ்க் கணிமை நுட்பம் தமிழரின் ஒரு சாராரால் மட்டும் எழுந்துவிடவில்லை. மின்னஞ்சல் பரிமாற்றத்தேவை (demand) ஈழத்தமிழருளெழுந்து, இத்தகைய அளிப்பை (supply) உருவாக்கித் தமிழ்க்கணிமை நோக்கி நகரவைத்தது. ஏதோ நல்ல நேரம் பார்த்து இந் நுட்பியல் உருவாகி விடவில்லை. ஒரு பக்கம் பேரழிவேற்பட்டு, கொடுமை நடந்த போது, அதிலிருந்து மீள, உறவுகளை ஒட்ட வைக்க, இத்தமிழ்க் கணிமை உருவாயிற்று. உலகின் பல்வேறு போர்களாலேற்பட்ட அறிவியல்/நுட்பியல் வளர்ச்சி போலவே, ஈழப்போரின் குழந்தையாய் தமிழ்க்கணிமை கிடைத்தது இதைத் தமிழர் யாரும் மறந்துவிடக் கூடாது. மொத்தத்தில் பாமினி எழுத்துருவிற்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருந்தது. உண்மை தான். ஆனாலும்.... 

அந்தக்காலத்தில் மற்றதமிழர் வாளாயிருக்கவில்லை. பல்வேறு எழுத்துருக்கள் எழுந்தன. முடிவில் 1997-99 இல் பெரும்பாலான உலகத்தமிழர் தகுதரக் (TSCII) குறியீட்டிலும், ஈழத்தமிழர் பாமினிக் குறியீட்டிலும், தமிழகத் தமிழர் தடுமாறியும் இருந்தார். பின் தமிழகத் தரமாய் TAB/TAM எழுந்தது. தமிழகத் தாளிகைகளும், பல்வேறு வெளியீட்டாளரும் 100 வகை எண்மடைக் குறியீடுகளைப் புழங்கிக் கொண்டிருந்தார். இணையமெங்கும் ஒரே குழப்பம். 100 வித எழுத்துருக்களைக் கணியிலிறக்கிப் பதிவு செய்ய வேண்டி யிருந்தது. கணிக்குள்/ இணையத்துள் ஒரு ”தமிழ்” இல்லை. ஓராயிரம் ”தமிழ்”கள் இருந்தன. இணையத்தில் எதையும் உடனே படிக்க, எழுத, படியெடுக்க, பரிமாற, திருத்த, சேமிக்க முடியாத நிலையிலிருந்தோம். நம்முடைய ஒற்றுமைக் குறைச்சல் தான் உலகந் தெரிந்தது ஆயிற்றே?

இதற்கிடையில் 1987க்கு அருகில் CDAC நிறுவனஞ் செய்த ISCII குறியீட்டை இந்திய அரசு ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பி வைத்தது. தமிழுக்கு ஒவ்வாத ISCII குறியீட்டை அடிப்படையாகக் கொண்டே 16 மடை ஒருங்குறியும் செய்யப்பட்டது. நாளாவட்டத்தில் உலகத் தர நிறுவனமான ISO வில், அனைத்து நாட்டுப் பங்களிப்புடன், தமிழுக்கான ஏற்பையும், வணிக வல்லாண்மை பெற்ற ஒருங்குறிச் சேர்த்தியம் பெற்றது. வெறுமே உணர்ச்சி வயப்பட்டுப் புலம்புவதால் நாம் ஒருங்குறியை ஒதுக்க முடியாது.  குறைப் பட்டுப் போனாலும், உலகெங்கும் நூற்றுக்கணக்கான எழுத்து வரிசைகளுக்குப் பரவிய ஒருங்குறியேற்றத்தை வேறுவழி இன்றி நாம் ஏற்கவேண்டியுள்ளது. இருந்தாலும் நம் அச்சுத் தொழில் காரணமாய் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

ஒரு 10 ஆண்டுகளுக்கு முன் தமிழர் தூங்காது இருந்திருந்தால், வெறுமே கட்சிச்சண்டை போட்டு உள்ளூரில் தடுமாறாமல் இருந்திருந்தால், இன்றைக்கு அனைத்தெழுத்துக் குறியேற்றத்தை ஒருங்குறிச் சேர்த்தியமே ஏற்றுக் கொண்டிருந்திருக்கும். நம் கணித்திரைகளில் ஏற்படும் மீள்தருகைச் சிக்கலை (rendering problem) என்றோ முற்று முழுதாகத் தீர்த்திருக்கலாம். எல்லாம் நடந்து முடிந்தவை. இப்பொழுது கணி வழிப் பரிமாற்றத்திற்கு ஒருங்குறியையும், அச்சாவணப் பயன்பாட்டிற்கு அ.இ.கு (அனைத்தெழுத்துக் குறியேற்றம்) பயன்படுத்துவதும் இன்றியமையாத தேவைகள் இவற்றை மறந்து, தமிழரிற் கணிசமானோர் இன்னமும் எண்மடைக் குறியேற்றமே புழங்கிக்கொண்டிருந்தால் நம் முன்னேற்றம் எப்பொழுதும் தள்ளித் தள்ளியே வந்துகொண்டிருக்கும். எப்பொழுதும் பின்தங்கியே நாம் இருப்போம். என்றுமே முன்னிலைக்கு வரமாட்டோம். (நான் எண்மடைக் குறியேற்றமே பயிலுவேன் நீங்கள் NHM Converter ஐ வைத்து மாற்றிக் கொள்ளுங்கள் என்பது ஒரு வகையான சண்டித்தனம்.)

நண்பர்களே! அருள்கூர்ந்து மாறுங்கள். ஊர் கூடித் தேரிழுப்போம். இனி எந்தத் தமிழ்த்துறை ஆய்வரங்கும் பாமினி எழுத்துருவில் கட்டுரை கேட்காதிருக்கட்டும். தமிழின் எதிர்காலத்திற்கும் வழிசெய்வோம்.  . 

அன்புடன்,
இராம.கி.

1 comment:

சிகரம் பாரதி said...

பாமினிதான் பெரும்பான்மையோரால் பயன்படுத்தப்படுகிறது. அதனை யுனினோட் வடிவிலும் நேரடியாக தட்டச்சு செய்யும் வசதிகள் உள்ளன. ஆகவே அனைவரும் யுனினோட் எழுத்துருக்களை பயன்படுத்தினாலே போதும் என நினைக்கிறேன்.

தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது பாமினி பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். உங்களைப் பற்றியும் உங்கள் வலைத்தளம் பற்றியும் ஒரு பதிவை நீங்களே விரிவாக எழுதி எமது valaioalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.