Friday, February 21, 2020

சில கோயிற்கட்டுமானச் சொற்கள்

ஒருமுறை திரு. பத்ரி சேசாத்ரியின் வலைப்பக்கத்தில் ஒரு திராவிடக் கோயிலின் சில கட்டுமானச் சொற்களைப் பார்த்தேன். வியந்துபோனேன். சற்று ஆழப்போனால்  எல்லாமே தமிழாக அவை இருந்தன. இருப்பினும் அவை ”சங்கதக் கலைச்சொற்களே” என்று அங்கு மிரட்டியிருந்தார். ”தமிழில் இவையில்லையா?” என்று சிலர் கேட்டதற்கும் உருப்படியான விடை வர வில்லை. கோயில்களில் தமிழ் என்று சொன்னாலே இப்படித்தான் மிரட்டல் வந்து சேர்கிறது. அது மனத்தைச் சற்று வாட்டுகிறது. அங்கு கொடுத்திருந்த 16 சொற்களையும் நான் எடுத்துக்கொண்டு ஆய்ந்து பார்த்தேன். என் முடிவுகள் வேறு. உங்கள் பார்வைக்கு இங்கு தருகிறேன், அப் பதிவில் கொடுத்திருந்த ஆங்கில விளக்கத்தை அப்படியே தருகிறேன். தமிழ் விளக்கம் மட்டுமே என்னுடையது.


 
1)Sopana Marga: The staircase to enter the Garbha Griha. South Indian Temple Stair cases are flanked on both sides with Yali (Vyala) Figures sopāna (n.) (perhaps contracted fr. sa-+ upāyana-) stairs, steps, a staircase, ladder to (genitive case or compound) 

படிப்பதற்கு மேலே இருப்பது  ஏதோ சங்கதச்சொல் என்று நம்மை மிரட்டலாம்  உண்மையில் ”படிக்கட்டு வழி” என்று பொருள் கொள்ளும் சற்று ஆய்ந்தால் இச்சொல்லின் வேர் தமிழில் இருப்பது புரிந்துவிடும்.  ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குப் படிக்கட்டின் வழி நாம் உயர்கிறோம். உயர்தல், உப்புதல் (= வீங்குதல், பருத்தல், பொங்குதல்) எனப்படும். உப்புசம் = வயிறு உப்பியிருப்பது. உப்பட்டி = ஒன்றின்மேல் ஒன்றுவைத்து உயர்த்திக் கட்டுவது. உப்பரம் = வயிற்றுப் பொருமல். உப்பரி = உயர்தல், மேம்படல், உப்பரிகை = மேல்மாடம். உப்பல் = ஊதிப் பருத்தல். உப்பு = குறிப்பிட்ட salt செறிவு கொண்ட நீர் ஆவியாகிப் பொங்கி உயர்ந்த பிறகு அது படிகமாய் விளைகிறது . அதை உப்பென்பார்.  உப்பனாறு = ஓடி வரும் ஆற்றை எதிர்த்து கடல்நீர் உப்பி உட்புகுந்து நன்னீரும் கடல்நீரும் கலப்பது உப்பனாறு எனப்படும். உப்பாரக்காரன் =. சுவருக்கும் மேல் சுண்ணாம்பு மேற்பூச்சு பூசுபவன், உப்பிதம் = மீள மீள உயர்ந்து இறங்கும் ஒரு வகையான கூத்து. உப்புமா = மாவை நீரில் அவித்ததால் உப்பி எழுந்த மா.

உப்பானி = ஒருவனை தன் முதுகின் மேல் இன்னொருவரை உயரத் தூக்குபவன். உப்பானம் = ஒருவன் இன்னொருவனை உயரத் தூக்கும் முறை.  இதற்கும் salt உக்கும் எந்தத் தொடர்புமில்லை.  உப்பு க்கட்டுதல்/ க்கொள்ளுதல்/ ச்சுமத்தல்/  த்தூக்குதல்= விளையாட்டில் வென்றவனை தோற்றவன் முதுகில் தூக்குதல், சிறுவர் விளையாட்டில் குழந்தையை முதுகில் சுமப்பதும் இப்படியே சொல்லப் படும்.  தவிர, சடுகுடு விளையாட்டில் மணலை உயரத் தூக்கிக் கட்டுதலையும் உப்புக் கட்டுதல் என்பார். ஆங்கிலத்தில் up என்கிறோமே, அதற்கும் இதற்கும் பெருந்தொடர்பு உண்டு. அதைப் பேசத் தொடங்கினால் பலரும் ஏற்க மறுப்பார். தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் ஆழ்ந்த தொடர்பு இருக்கிறது என்று பலகாலம் சொல்கிறேன். Nostratic studies இல் இது வரும்.

உப்பால்> அப்பால் = beyond. உப்பானம்> ஒப்பானம்> ஓப்பானமாய்த் திரியும். இதுவும் உயரச் செய்வது என்ற பொருள் கொள்ளும். சகர முன்னொட்டு சங்கதத்தில் மங்கலப் பொருள் கொள்ளும்.. ச+ஒப்பானம் = சோப்பானம்> சோபானமாகும். மூலம் தெரியாமல் சோபானம் என்பதைத் தமிழில் மீண்டும் கடன் வாங்குவார். படிக்கட்டு என்பதே இதன் பொருள். அது போல் மறுகி மறுகி (திரும்பித் திரும்பி)க் கொண்டே இருக்கும் வழி மறுகு> மாறுகு> மார்க்கு> மார்க்கமாகிச் சங்கதத்தில் செல்லும். பெருவழி என்று பொருள். சோபன மார்க்கம் = படிக்கட்டுப் பெருவழி

2)Upa Pitha: Sub Base of the Garbha Griha உவ பீடம் (ஒன்றின் உள்நிற்பது உள்வு> உள்வம். இது உவ> upa என்று சங்கதத்தில் திரியும்.  பீடம் தன் மகரத்தைத் தொலைத்து pitha என்று திரியும். பீடு = மேன்மை  மேலான தன்மை. 

3)Adhishthana: Base to support the wall of Garbha Griha தமிழ் ”அடித்தானம்” (அடியில் உள்ள தானம்) இங்கு இது Adhishthana ஆகத் திரிந்து நம்மை மருட்டுகிறது

4)Simhaavari: Band of Lions சிங்கவரி. செங்கண் மா= சிவந்த கண் கொண்ட விலங்கு. இன்னொரு வ்தமய்ச் சொன்னால் இதைச் சிகை கொண்டது சிகையம்> ஆண் சிங்கம் என்றும் பார்க்கலாம். சிங்கம் என்பது முற்றிலும் தமிழே. 

5)Paada: Wall of Garbha Griha பாதம். இதற்கு விளக்கம் வேண்டாம். படிவது>பதிவது பாதம்

6)Koshtha: Miniature Temples on external wall of Garbha Griha with Avataras of Main deity கோட்டம். கோட்டம் என்பது இறைப்படிமம் உள்ளது. சிலம்பைப் படித்தால் பூம்புகாரில் உள்ள தெய்வக் கோட்டங்கள் பலவும் புரியும்.

7)Prastara: Area between pillars & Roof – Entablature It is a horizontal superstructure of bands and moldings above column capitals, sometimes functions as a parapet of a story. Prastara is both functional and decorative element located above the architrave of the temple. இதைப்  பட்டடை எனலாம்.  ஒரு 16 கால் மண்டபத்திற்காக 4 வரிசையில் (ஒவ்வொரு வரிசையிலும் 4) தூண்கள் இருப்பதாய்க் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது முதல் வரிசையில் 4 தூண்களின் மேல் ஒரு கல் உத்தரத்தைப் (கற் கட்டையை) படுக்கை வாக்கில் வைப்பதாய்க் கொள்ளுங்கள். 4 வரிசைக்கும் இதுபோல் 4 உத்தரங்கள்  வந்து சேரும். (உத்தத்தில் வைப்பது உத்தரம். இதுவும் தமிழே.) .இப்போது  4 உத்தரங்களின் மேல்கூரை உத்தரங்களை இவற்றின் குறுக்குவாட்டில் அடுக்கலாம். கூரைக்கும், தூண்களுக்கும் நடுவில் இடைப்படும் உத்தரமாய்>படுந்தரமாய்  அமைவதைச் சங்கத ஒலிப்பில் படத்தரம்> படஸ்தர>பரஸ்தர>prastara என்று சொல்வர். (வடக்கே போகப் போக நம் ழகரம்/ளகரம் டகரமாகும், பின் ரகரமாகும்.) படுத்தரம் என்பது நல்ல தமிழில் பட்டடை என்றும் சொல்லப்படும்.  கூரைத் தூண்களில் மேல் பட்ட வகையில் அடைப்பது பட்டடை.  நல்ல தமிழ் எப்படியெல்லாம் உருமாறிக் கிடக்கிறது என்று பாருங்கள்.   

8)Vyaalaavari: Band of Vyaali figures யாழி என்ற தமிழ்ச்சொல்லை வியால என்று சங்கதத்தில் ஆக்குவர். விளக்கம் வேண்டுவோர் https://valavu.blogspot.com/2018/08/blog-post_20.html என்ற இடுகையைப் படியுங்கள்  யாழியால் ஆன வரி = யாழிவரி/

9)Haara: Parapet looking like the Necklace ஆரம். இதற்கு விளக்கம் வேண்டாம்.

10)Koota: Square Miniature shrine on Haara region கூடம். இதற்கும் விளக்கம் வேண்டாம்

11)Shaala: Rectangular Miniature Shrine on Haara Region சாலை இதற்கும் விளக்கம்  வேண்டாம்.

12)Tala: Storeys. Eka Tala (1 Storey), Dwitala (2 Storey), Tritala (3 Storey) தளம். இதற்கும் விளக்கம் வேண்டாம்.

13)Tala Vahana: Vahana of Main deity on the Top Storey வாகனம் என்பது நம்மூர் வேயத்தில் உருவான சொல். http://valavu.blogspot.com/2013/10/blog-post.html வள்> வளை>வயை>வையை>வையம் என்பது சிலம்பிற் பயிலப் படுகிறது. 50 ஆண்டுகள் முன்னால் நாட்டுப்புறங்களிற் கூட்டு வண்டியைக் குறித்த இந்தச் சொல் இன்று வழக்கற்றுப் போனது. நம் ’வையமும்’ சங்கத ’வாகனமும்’ பொருளாலும், ஒலிப்பாலும் உறவுற்றவை. வாகனத்தை  ஒட்டிய இந்தை யிரோப்பியச் சொற்கள் (1520s, from Middle Dutch wagen, waghen, from Proto-Germanic *wagnaz (cf. Old English wægn, Modern English wain, Old Saxon and Old High German wagan, Old Norse vagn, Old Frisian wein, German Wagen), from PIE *woghnos, from *wegh- "to carry, to move" (cf. Sanskrit vahanam "vessel, ship," Greek okhos, Latin vehiculum, Old Church Slavonic vozu "carriage, chariot," Russian povozka, Lithuanian vazis "a small sledge," Old Irish fen, Welsh gwain "carriage, cart;" see weigh) பலவும் இருக்கின்றன. அடிப்படையில் இழுப்பதற்கே இவ்வாகனங்கள் பயன்பட்டன. இழுக்கும் வாகனங்கள் ஊர்திகள் என்றுஞ் சொல்லப்பெறும்.

பின்னால் கோயில் விழாக்களில் இழுப்பதற்கு மட்டுமின்றித் தூக்குவதற்கும் ”வாகனங்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்தினர். சகடை, வண்டி, தேர் போன்ற இழுப்பு வாகனங்களும், எருது, அரிமா, மூஞ்சூறு, மயில், கருடன், அனுமார், அன்னம் போன்ற தூக்கு வாகனங்களுமாய்ப் பல்லுருக் கொள்ளும். தூக்கு வாகனங்களின் அடியில் மூங்கில்களைக் கட்டிக் கோயில் விழாக்களிற் ”பற்றியோர்” தோள்மேல் தூக்கிப் போவர். 6”, 8” விட்டங்கொண்ட முரட்டு மூங்கில்களை இப்போது நம்மூர்ப் பயிரிற் சாத்தாரமாய்ப் பார்ப்பதே இயலாது. (இத்தகை முரட்டு மூங்கில்கள் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விளைகின்றன, தவிர, சில கோயில்களில் பழம்பொருளாய் இருக்கின்றன. முரட்டு மூங்கில்களின் வளர்ப்பில் தமிழக அரசு கவனஞ் செலுத்த வேண்டும். மரபு சார்ந்த ஒரு பொருள் நம் கண்முன் அழிந்து கொண்டுள்ளது. கூர்ந்து கவனித்தால் வாகனச் சொல்லாட்சிகளும், கட்டுமானங்களும் கோயில் கட்டமைப் பொறியியல் (structural engineering) படியாற்றத்தில் (application) வெளிப்படும்.   Tala Vahana என்பதைத் தள வையம் என்று சொல்லலாம்

14)Griva: Neck of the Vimana குவிரம்.  இதையும்  http://valavu.blogspot.com/2013/10/blog-post.html என்ற கட்டுரையில் அறிந்துகொள்ளலாம்.

15)Kudu: A motif that appears like Gavaksha (also called Naasi) – An horse shoe shaped Arch கூடு. இதற்கும் விளக்கம் வேண்டாம்

16)Shikhara: The main tower of the Vimana சிகரம் = சிகையென உயர்ந்து நிற்பது சிகரம். எண்சாண் உடம்பிற்குச் சிகையே பெருந்தானம் (>ப்ரதானம்)

கொஞ்சம் ஆய்ந்தால், மேலே கோயிலின் கட்டுமானச் சொற்களாய் காட்டுபவற்றில் உள்ளடங்கிய பல தமிழ்ச்சொற்களைக் கண்டுவிடலாம்.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர ஆய்வதே மெய். கோயில் தமிழனது. கட்டியவரும் தமிழரே, அதன் கட்டுமானச் சொற்கள் தமிழல்லாது வேறு எப்படி இருக்கும்?

அன்புடன்,
இராம.கி..     

3 comments:

ச கோகிலன் said...

சிறப்பு ஐயா, தெளிவு கிடைத்தது. பேராசான் மயன் எழுதிய பன்னிரு செந்நூல்களில் சிற்பமாச் செந்நூலும் கட்டடச் செந்நூலும் மேற்படி சொற்பதங்களைக் கையாளுவதாகக் கேட்கக் கிடைத்தது. ஆனால் விளக்கம் கிடைக்கவில்லை. தங்களின் விளக்கம் மிகத் தெளிவைத் தந்துள்ளது. மிக்க நன்றி ஐயா

Bala G Thevar said...

Thanks for your well explained article.

Tala, shala. Koota etc. Present day example of Tamil "Dosai" became as "Dosa" in most part of the world.

Wagon--waganaz has been from German and the Sanskrit is an Indo-Europian language has the base of German!

இராம.கி said...

இன்னும் மேலே ஒரு சொல் விட்டேன். sthupi = கும்பி. இதைக் sthupam = கும்பம் = கலசம் என்றும் சொல்வதுண்டு,