Sunday, November 04, 2018

தூங்கெயில் - 7

எயிலின்பொருளாக மதில் (fortress, wall, fortification) ஊர், நகரம் (town,city) என்று தமிழ் அகரமுதலிகளிற் பொதுப்படக் கொடுப்பர். இவற்றுள் சரியான பொருள் காண்பது எப்போதுமே சிக்கல். இடம், பொருள், ஏவல் பார்க்கவேண்டும். சட்டென்று சொல்லிவிடமுடியாது. எது முதற்பொருள், எது வழிப்பொருள் என்பதும் காணவேண்டும்.

[சில திங்களுக்குமுன் மடற்குழுக்களிற் பேசிய ’தகரம்’ பற்றிச் சொன்னால் மேற்கூறுஞ் சிக்கல் புரியும். ”மயிர்ச்சாந்து, மணம்வீசும் மரவகை, மணம், வெள்ளீயம், உலோகத்தகடு, இதயத்தின் உள்ளிடம்” என அகரமுதலிகளிற் பொதுப்பட அதற்கு விளக்கமிருக்கும். அவற்றைப் படித்தபின், ”மணம்வீசும் மரவகை எது?” என்ற கேள்வியெழுந்தால், இதே அகரமுதலிகளில் விடை கிடைக்காது. விலங்கு, மீன் வகைப் பெயர்களிலும் இதுபோலவே, விதப்பு விளக்கம் கிடைக்காது. ”குறிப்பிட்ட விலங்கோ, மீனோ என்ன இனம்? என்ன குடும்பம்? என்ன வகை விதப்புயிரி (species)?”- என்ற கேள்விகளுக்கும் தமிழில் விடை காண்பது அரிது. வேறுவழியின்றி ஆங்கிலக் களஞ்சியத்தையே நாம் தேடி ஓடவேண்டும். ஒவ்வொன்றிற்கும் இப்படியானால், தமிழ் எப்படி அறிவியல் மொழியாகும்?

இதுபோகத் தமிழ்ச்சொல்லிற்கு அகரமுதலியிற் பொருள்காணும் வழக்கம் நம்மூரில் அரிதென்பதால் துறைசார் அகரமுதலிகளும் பெரிதாய் எழுவதே யில்லை. ஆனாலும், “எங்க வீட்டுக்காரருங் கச்சேரி போனார்” என்றபடி தமிழகப் பல்கலைக் கழகங்களில் அகரமுதலித் துறைகள் உள்ளன. ஏது ஒன்றிற்கும் ஆங்கில வழியிற்றான் அறிவியல் விளங்குமெனில், கால காலத்திற்கும் நோஞ்சானாய், சவலையாய்த் தமிழ் நிற்குமே? வீட்டுமுற்றம், சமையலறை, வெட்டிப்பேச்சு, சவடால், நையாண்டி, கேளிக்கை, திரைப்படம், மேடையுரை, கவியரங்கம், பட்டிமன்றமென வாழ்வின் ஒருபகுதிக்குமட்டும் தமிழை நறுக்கிக் கிடத்தி மற்றபடி ஆறங்கத்தைக் கீழே வீழ்த்தி ஆங்கிலத்தை வணங்குவது சரியா? எண்ணிப்பாருங்கள் தேவைகளுணராது நாமுள்ளதால், எந்தத் தமிழகப் பல்கலைக்கழகமும், ஆய்வு நிறுவனமும், தமிழ் வளர்ச்சித் துறையும் இதைச் சரிசெய்ய முன்வருவதில்லை. ”அம்மாவும் அப்பாவும் வேண்டாம்; ’மம்மியும் டாடியும்’ போதும்” என்று சொல்பவர் நாம் தானே?]

மேற்சொன்ன மதில், ஊர், நகரம் போன்றவை எயிலுக்கு முதற்பொருள்கள் அல்ல. கோட்டைப்பொருளை அகரமுதலிகள் குறிக்கவுமில்லை. மதிலும் எயிலும் ஒற்றைச்சொற்களல்ல; கூட்டுச்சொற்கள். மட்டு + இல் = மட்டில்> மத்தில்>மதில் என சொல் பிறக்கும். மட்டு>மத்து>மத்தித்தல்; மத்தி>மதி= அளவு; ”அம்மட்டும் போகாதே” என்கிறோமல்லவா? மதில் = அளவுகுறிக்கும் வரம்புச்சுவர். இக்கோட்டைக்கு இது வரம்பென (boundary) வரையறுப்பர். மட்டின் மேலிருந்த ”இல்” மதில் என்பது ஓரிரு கல் திண்ணத்தில் (thickness) அமையும் வெறுஞ்சுவரில்லை. அதன்மேல் பெரும்பாலும் கிடைமட்ட நடைத்தளம் உண்டு.

அதேபோல எய்வதற்கான இடம் எய்+இல் = எயிலாகும். மதிலும் எயிலும் எல்லாவிடத்தும் ஒன்றல்ல. எங்களூர்ப் பக்கத்துத் திருமெய்யம் போல், கானப்பேரெயில் (காளையார் கோயில்) போல், மதில் முழுக்க எயிலாகிக் கோட்டையாகலாம். அன்றி மதிலிற் சிலவிடங்கள் எயிலாகலாம். கோட்டையின் அடவு (design), கட்டுமானம் (construction) போன்றவற்றைப் பொறுத்து, வேல்வீரர், வில்வீரர் எயில் மாடங்களில் குவிந்திருப்பர். பழங் குமுகத்தில் அம்பெய்வோரை எயினரென்பர். அம்பு, ஈட்டிகளால் விலங்கு வேட்டையாடியும், மற்றமாந்தரைப் போரிற்கொன்றும், தன்னிருப்பை நிலை நாட்டவும் எய்தல் தொழில் பயனுறும். கோட்டைமதில் மேல் வில்லாளிகளும் ஈட்டியெறிஞரும் நடமாடும்படி அகலும் உள்ளகப் பாதை அகப்பாவாகும். (அகத்திற் பரவியது அகப்பா.) சீனப்பெருஞ்சுவரின் அகப்பா 2 வண்டிகள் ஒன்றையொன்று மோதாமற் பயணிக்குமளவிற்கு அகலங்கொண்டதாம். அகப்பாத் தளத்தைத் தாங்குமளவிற்குச் சுவரின் திண்ணம் (thickness) கூடியிருக்க வேண்டும்.

மதில்பற்றி இன்மொரு செய்தியுஞ் சொல்லவேண்டும். மத்திரை, மதிரையென பழங்கல்வெட்டில் வருவதை ஏற்காமல், மதுரையென மீத்திருத்தி இலக்கியங்கள் சொல்லியதால், ”சுவடிகளே சரி, கல்லைக் கீறியோர் படிப்பு அறியார்” என்பார் தமிழறிஞர். ஆனாற் படித்தவர் சரியா? தலைகீழாய் ஏன் இருக்கக் கூடாது? சுவடிகளில் மதிரையென்ற பெயரே முதலிலிருந்து (பின் சங்கதத்தைப் பார்த்து, வடமதுரை வெளிச்சத்தில் தமிழர் சூடுபோட்டுக் கொண்டதால்) நம்மூரை மீத்திருத்தமாய் மதுரையாக்கினாரா? சொல்ல முடியவில்லை. எது சரி? ஆழ்ந்துபார்த்தால், மதில்>மதிர்>மதிரை என்பது தமிழிற் சிறக்கப் பொருந்துஞ் சொற்பிறப்புத் தான். மக்கள்வழக்கில் கோட்டையால், அரசனால், தலைநகர்க்குப் பெயரிடுவது இயல்பே. சில பழந்தலைநகர்களின் பெயர்களைக் கவனித்தால் இது புலப்படும்.

மகதத்தின் முதல் தலைநகர் அரசகம் (ராஜ க்ருகம். அரசன் இருக்கும் வீடு). சேரநாட்டுக் கருவானது கருவூர், அதன் மதில் வலிந்திருந்ததால் வல்ஞ்சி> வஞ்சி (பலரும் வஞ்சிக்கொடியையும், வஞ்சி மரத்தையும் பிடித்துத் தொங்குவார். நானிங்கு குடவஞ்சி, கொங்குவஞ்சி என இரண்டையுஞ் சொல்கிறேன்), காழ்ஞ்சியது காஞ்சி (காழ்= திடம், உறுதி; காழ்த்த மதில்) சோழ அரசன் உறைந்தது உறந்தை, பகைவர் புகாதவூர் புகார்; மதிலாற் சிறந்தது மதிரை. சங்ககாலத்தெழுந்து (மணலூர்/கீழடிப் பள்ளிச்சந்தையில் அண்மையில் அகழாய்ந்தது ஒருவேளை பழ மதிரையோ, என்னவோ? மதிரைக்கு மிக அருகில் இன்னொரு நகரம் இருந்திருக்குமா???), மதிரை என்பது கண்ணகியால் எரிக்கப்பட்டு, இடம்மாறிப் பின்னைப் பாண்டியரால் மீளவெழுந்து, மாலிக் காபூராற் சீரழிந்து, 1300 இல் 3 ஆம் முறை கம்பண உடையாரால் மீண்டும் எழுந்து, ஆங்கிலரால் அழிக்கவும் பட்டது. 3 ஆம் கோட்டைச்சுவர் அழித்து அதில் மாரட்டு வீதியும், அகழி தூர்த்து வெளி வீதியும் எழுந்தன. சு.வேங்கடேசனின் அண்மைப் புதினமான “காவற் கோட்டம்” மூன்றாங் கோட்டையைப் பற்றிப் பேசும். படிக்கவேண்டிய புதினம். கீழடி ஆய்வு நமக்குப் பழம் மதிரையை அடையாளங் காட்டுகிறது.)

ஆலம்>ஆரம் என்பது மாலைபோல் அமையும் கோட்டையின் சுற்றுவரை யாகும். {circumference; இக்கலைச்சொல்லைச் சுற்றளவென்றே பலருஞ் சொல்வார். என் சிற்றகவையிலும் அப்படியே படித்தேன். அது சரியான தேர்வு அல்ல. கலைச்சொல் படைப்பதில் அவக்கரமாய் இப்படி ஏதோவொன்றை உருவாக்கிப் போட்டுவிடுகிறோம். அது கடைசிவரை குறைப்பட்டுத் தங்கிப் போகிறது. இயல்வெளியில் ஒரு வடிவத்தை இட்டளிப்பதை முகன வடிவியலில் (modern geometry) இடப்பென்பர் (topos). இடப்பியல் (topology), கணுக்குமை (connectedness), வட்டுமை (circularity) என்ற மூன்றுமே வடிவங்கள் பற்றி வடிவியலில் அடுத்தடுத்த புரிதல்களாகும். இவற்றின் பின்னரே அளத்தலுக்கான (measurement) மட்டிகை (metric) எழும். சரியான புரிதலில், அளத்தற் கருத்து முந்திவராது. ஏனெனில் அளவின் மதிப்பு கோல் நுணுகலாற் கூடலாம். அளவற்ற சுற்றுவரைகளும் வடிவியலிலுண்டு. தமிழகத்தின் ’சரியான’ சுற்றளவு என்னவென உங்களுக்குத் தெரியுமா? பகுவல் வடிவியல் (fractal geometry) வழியாய்ச் சற்று எண்ணிப் பாருங்களேன்? நான் சொல்வது புரியும். வட்ட மையத்திலிருந்து சுற்றுவரையின் தொலைவையும் ஆரமென இக்காலத்தில் விதப்பாகச்சொல்வர்.

பெருகு+ஆரம் = பெருகாரம் என்பது பெரிய மாலை. இது கோட்டையினுள்ளே சுற்றிவரும் பெரியபாதை. பெருகாரம்>ப்ரஹாரம் என்று சங்கதத்தில் திரித்து இன்று பெருங்கோயில்களின் உட்சுற்றைக் குறிப்பர். இதைச் சுற்றாலை யென்றுஞ் சொல்வர். திருவரங்கம் போன்ற பெருங்கோயில்களில் 7 பெருகாரம் இருப்பதாய்ச் சொல்வர். (திருக்கண்ணபுரத்திலும் 7 மதில்களிருந்து அதையொரு சோழன் அழித்துச் சுற்றியுள்ள கோயில்களைக் கட்டியதாய் ஒரு தொன்மமுண்டு,) சில கோயிற்பெருகாரங்கள் வீதியாகவே சொல்லப்பெறும். மதுரை அங்கயற்கண்ணி கோயிலின் ஆடிவீதி ஒரு பெருகாரந் தான்

அடுத்தசொல் உவளகம். உள்வு>உவ்வு; உவ்வு+அள்=உவள்= கோட்டையின் உட்பக்கம் interior of a fort என்று விரியும். உவளென்று சொல்லாது இற்றைத் தமிழில் உள்ளகமென நீட்டிமுழக்குவார். குறுஞ் சொற்களைப் பயில நாம் முன்வரவேண்டும். சிறைச்சாலை, மதில், வாயில், பள்ளம் அகழியென்ற பொருட்படவும் உவளைப் பயன்படுத்தியுள்ளார்.

இதற்கடுத்தது ஓதை. மதிலுக்கு வெளியுள்ள அகழியை ஓடையென்றுஞ் சொல்வார். மதிலுக்குள்ளே ஆனால் சற்று ஒட்டி ஒத்தியிருப்பது ஓதை. மதிலைக் காப்பாற்றும் படையினருக்கு மதிலையொட்டினாற் போல் உதவுஞ் சாலை இதுவாகும்.

மதிலுக்குக் கடகமென்ற பெயருமுண்டு. குடங்குதல் = வளைதல், சூழ்தல்; குட>குடம்>குடகம்>கடகம் = கோட்டையைச் சூழ்ந்த மதில் (இங்கே வட்டுமைக்கு மாறாகச் சூழ்தலே முகன்மையுறும்.) மதிலின் இன்னொரு பெயர் காப்பு; கவ்வியது கவ்வு>காவு>காப்பு என்றாகும். கவ்வு>காவு என்பதில் இருந்தே காவடியென்ற சொல் உருவானது. அதையிங்கு விளக்கினால் வேறிடத்திற்கு இட்டுச்சொல்லும். காப்பிற் சூழ்தலே முகன்மைப் பொருள் ஆகும். “திருத்துஞ்சு திண்காப்பின்” என்ற வரிகளை (பட்டினப்பாலை 41) ஓர்ந்து பார்க்கலாம்.

அடுத்துவருவது சாலம். தொடக்ககாலத்தில் கோட்டைகளை வெறுங்கல்லால் அன்றி, மரமுஞ் சேர்ந்தேகட்டினர். (ஆனானப்பட்ட மகதரின் கோட்டை பெரிதும் மரத்தால் ஆனது.) யாமரம் என்பது Hardwickia binata வைக் குறிக்கும். ஆச்சாமரமென்றும் குறிப்பிடுவார் யா எனும் கருமைவேரிற் தொடங்கி யா> யால்>யால்+அம் = யாலம் என்றாகிய பெயரும் இதற்குண்டு. சங்கதத்தில் ஸ்யாலம்>ஸாலம் ஆகிச் சாலமெனத் தமிழில் மீண்டு வரும். மராமரத்திற்கும் சாலப் பெயருண்டு. சாலத்தாலான மதிலையும் சாலமென்பர்.

சிலுகு>சிறுகு>சிறகு என்பது பறவை பறக்க உதவுங்குறிப்பை முதலில் தந்து, பறவை/பறனையின் (பறனை = plane) இருபக்க முடிவாய் (இறுவாய்) இருக்கும் wings-side உறுப்பைக்குறித்தது. (தெருவின் இரு பக்கங்களும் (sides) கூடச் சிறைகளே. சிறை-side என்பது போன்ற தமிழ்-ஆங்கில ஒப்புமைகளுக்கு வழக்கம்போல் இராம.கி.யைக் கடியாது சற்றாழ்ந்து ஓர்ந்து பார்க்கலாம்.) சிறை>இறை என்பது இறுதல்/முடிதல் பொருளில் மதில், ஒருபக்கம், எதிராளிகளைத் தனித்திறுத்தும் இடமெனப் பொருள்கொள்ளும். பார்க்க: இராம.கி.யின் http://valavu.blogspot.in/2011/05/blog-post.html]

அடுத்தது கோட்டைமதிலைக் காப்பாற்றும் நொச்சி. தனிநோக்கில் நொச்சி பாராது, உழிஞை, வஞ்சி, காஞ்சித் திணைகளோடு பொருத்திப் பார்ப்பது தமிழரின் அரசுக்கோட்பாட்டிற்கான புரிதலை நல்கும். தமிழரின் பழங்குடி வாழ்க்கையில், ”தன்(னு)மை, குடி, நிலம், கோட்டை” என்ற 4 உறுப்புக்களோடு தொடங்கிய இக்கோட்பாடு,   .

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசறுள் ஏறு.

எனும் குறளின் படி ஏழுறுப்பாய் விரிந்தது. இதே கருத்து அருத்தசாற்றத்திலும், பின்வந்த சில வடநூல்களிலுமுண்டு. வள்ளுவப் பொருட்பாலுக்கும், அருத்த சாற்றத்திற்கும் ஒப்புமை/வேற்றுமை காணும் பொழுது ஒரு பென்னம்பெரிய நூல் விரியக்கூடும் எந்த ஆராய்ச்சியாளர் முன்வருவார்? கூழென்ற சொல் treasury யைக் குறிக்கும். தவிர, economics ற்கு இணையாகவும் ”கூழியலைப்” பயனாக்கலாம். அரண் = கோட்டை/மதில். படை, கூழ், அமைச்சு, நட்பு என்பவை நிலத்திலிருந்து விரிந்தவை.

அமைச்சென்பது பழங்காலத்தில் மந்திரிகளை மட்டுமின்றி, அரசு இயந்திரத்தையும் உணர்த்தும் [bureaucracy; இதைக் கோத்தொழில் என்று சிலப்பதிகாரங் குறிக்கும். bureaucrat கோத்தொழிலர்/ கோவலர் என்றாவார். சிலம்பின் நாயகனுக்கு கோவலந்தொழில் (bureaucracy) செய்யும் முற்பிறப்பிற் பரதனென்ற இயற்பெயரையும், பரவத்தொழில் (trading. விலையைப் பரத்துபவர் பரதர்; பர-தரும் கடலோடும் பரத-வரும் வெவ்வேறானவர். எழுத்துச்சேர்க்கையும் பொருளும் வேறாகும்) செய்யும் இப்பிறப்பிற் கோவலனென்ற இயற்பெயரையும் அமைத்து ஊழ்விளையாட்டை இளங்கோ உணர்த்துவார்.]

2000 ஆண்டுகளுக்குமுன் அமைச்சர் என்றசொல் இக்கால இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/அதிகாரிகள் (IAS) போன்றோரையுங்கூடக் குறிக்கும். இதே சொல் பாகதம்/பாலியில் அமாத்ய என்றழைக்கப் படும். மேலைமொழிகளில் வரும் administer என்ற சொல்லும் அமாத்ய என்பதோடு தொடர்புள்ளதே. அசோகன் ஆட்சியில் 2000 க்கும் மேற்பட்டு அமாத்யர் இருந்தாராம். இற்றைத்தமிழில் அமைச்சர் என்றதன் பொருளைக் குறுக்கி மந்திரியென்றே புரிந்துகொள்ளப் படுகிறது. அரசியந்தரத்தைக் கட்டி அமர்த்தப்பட்டவர் (அமைத்தியவர்) அமைத்தர்>அமைச்சர். இன்னொருவகையில் அமைத்த>அமாத்ய. அமர்த்தல் = இருத்தல். அமை>அவை>சவை.>சபை எல்லாம் தொடர்புடைய சொற்கள். தமிழேதோ தனித்தது; பாகதம்/பாலி/சங்கதத்திலிருந்து இது கடன் வாங்கியது என்றுகொள்ளாது இதை மேற்கூறிய மொழிச்சொற்களோடு ஒருங்கே பார்த்தால் நான்சொல்லும் தொடர்புகள் புரியும்.   
 
 அடுத்த பகுதியில் இவையிரண்டோடு, புரிசை, வாரி, வேணகை, வேதி, வேலி ஆகியவற்றையும் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, November 03, 2018

தூங்கெயில் - 6

தவிர, முகன வாயிலை ஒட்டி ஞாயில் எனும் பகுதி உண்டு. அது மீச் சிறியதாயும் ஆகலாம். ஆயினும் அது ஒரு command centre. ஞாயிலும் வாயிலும் வெவ்வேறானவை. ஞா-என்பது காணிக்கும் நிலை (overseeing). கண்ணையும், காட்சியறிவையுங் குறிக்கும் ஓரெழுத்தொருமொழி. ஞாயிலில் இருந்தே நாயகன் கோட்டையைக் கவனிப்பான். யா எனும் காட்சிவேரில் யாயன்>  ஞாயன்> நாயன்> நாயகன் எனச் சொல் வளரும். நாயன்= தலைவன். சிவநெறி நாயன்மார் இறைவன் தொண்டர். மக்களுக்குத் தலைவர். நாய்ச்சியார்> நாச்சியார் தலைவியார். தென்பாண்டியில் நாச்சியார் புழக்கம் மிகுதி. [விண்ணவத்திலும் ஆள்வார்> ஆழ்வார் மக்கள் தலைவரே. இன்னொரு பக்கம் இறைத் தொண்டர். ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் என்ற பெயரை எண்ணிப் பாருங்கள். இதன் சொல்லியங்கியல் (word dialectics) தெரியாதார் ”ஆழ்வாரைப்” புரியார். ”திருவரங்கக் கோயிலொழுகு” படித்தால் ஒரு வேளை இது புரியலாம். பெருமாளும் பெருந்தலைவனே. ஆண்டான், ஆண்டாள், முதலி என்பார் விண்ணவத்தில் தலைமையர்.] நாவிகன்> நாயிகன் = கப்பல் செலுத்துகிறவன். (கண்ணகியின் தாதை பெருங்கப்பல்களால் நாடு விட்டு நாடு ஏகும் தொழிலைச் செய்பவன். Shipping owner. வணிகனல்லன்.) நாயிகனும், நாயகனும் வேறானவர். 

கோட்டை மூலையிலோ, முகன வாயிலுக்கு அருகிலோ, கோட்டை உயரத்தில் இருந்து எதிரி இடராளிகளை காணும்படி உக்கடம் (watch tower) எனும் கட்டுமானம் உண்டு. [இற்றைக் கோவை நகராட்சி அலுவத்துக்கு அருகில் உக்கட நிறுத்தம் இருக்கிறதே? அது அந்நாளைய watch tower இருந்தவிடம். ஒருபக்கம் கொற்று என்பதற்கு aggression என்ற பொருள் உண்டென்றால், இன்னொரு பக்கம் கோட்டையையுங் குறிக்கும். அகராதியிற் பதியாத கோட்டைப் பொருளைச் சங்கதப் புழக்கம் பார்த்தே நான் சொல்கிறேன். துருக்குகளே கோட்டைகளை அடையாளங் காட்டியதால் அம் விகுதி சேர்த்துத் துருக்கங்களென (towers) தமிழில் அகட்டுவதும் உண்டு. சங்கதத்திற் கடனாய்ப் போகையில் துருக்கும் துருக்கமும் துர்க்கென்று நின்றே இரண்டையுஞ் சேர்த்துச் சுட்டும்.

துருக்கு> துர்க்கின் ஐ (இறைவி) துர்க்கையாவாள். (இற்றை இந்துப் பார்வையில் இவள் உமையென்றும் அறியப் படுவாள்.) அ+ ஐ = அவ்வை= அம்மா, தலைவி [பெண்வழிக் குமுகாயத்திலே தான் பழங்குடிகள் முதலில் வாழ்ந்தார். ஆண்= ஆள்பவன்; பெள்>பெண்= பெள்ளப் படுபவள்= பேணப் படுபவள்; பெள்+தல்= பெட்டல்> பெட்டை; பெண்> பேண் என்ற சொல்வளர்ச்சிகள் பிற்காலத்தில் பெண் ஆணுக்கு அடிமையுற்றதை நினைவுறுத்தும். பெருமித்த பொதுவுடைமைக் (primitive communism) காலத்தில் பெண்ணே குமுகத் தலைவி ஆவாள். ஐ என்ற ஈறு பல பெண் வழிப் பெயர்களில் இன்றும் நிலைப்பதே இத் தலைமைக் காலத்தை நமக்கு உணர்த்தும். அய்யை> அய்ஞை> அஞ்ஞை> அன்னை, அக்கை, தங்கை, நங்கை எனப் பல சொற்களை இதோடு சேர்த்து எண்ணிப் பார்க்கலாம்.] துர்க்கைக்கு ஈடான கொற்றவையும் கூட்டுச் சொல்லே. கொற்று+அவ்வை = கொற்றவ்வை> கொற்றவை. கொற்றத்தின் கோட்டைப் பொருள் இப்போது புரிகிறதா? சங்க இலக்கியத்திற் கொற்றம் வரும் இடங்களை மீளாய்ந்தால் அப்படிக் கொள்வது தவறென்று தோன்றாது.

கொற்றவன் = கோட்டைக்குத் தலைவன், அரசன்,
கொற்றக்குடை = கோட்டைத் தலைவனின் குடை
கொற்றத் தேவி/ கொற்றவ்வை/ கொற்றவை/ கொற்றவி = கோட்டைத் தலைவி
கொற்றம் = கோட்டை, ஆட்சிப் பகுதி (domain), வெற்றி, வீரம், வன்மை, அரசியல்
கொற்றமுரசு = கோட்டையின் தலையாய முரசு
கொற்றவஞ்சி = தலைவனின் கோட்டை, வலியால் நிலைபெற்றதைச் சொல்லி அவன் புகழைப் பாடும் புறத்துறை. வல்+ந்+சி= வஞ்சி 
கொற்றவள்ளை = மாற்றார் கோட்டையை வகுந்து சிதற்றியதைக் கூறி தன் தலைவனின் புகழைப் பாடும் புறத்துறை; வள்ளுதல் = வகுத்தல், வெட்டுதல்; வாளால் வள்ளுகிறார்; வள்ளுரம் = வகுக்கப்பட்ட மாட்டிறைச்சி;. அப்படி ஒன்றும் மாட்டிறைச்சி நம்மூரில் ஒதுக்கப் படவில்லை. மாட்டிற்கு ”மதப்” பொருள் தமிழ்வழக்கிற் கிடையாது. செல்வப்பொருள் மட்டுமே நெடுநாள் நிலைத்தது. 
கொற்றவாயில் = கோட்டையின் வாயில்
கொற்றவுழிஞை = மாற்றார் கோட்டையைக் கைக்கொள்ளும் பொருட்டு நம் தலைவன் படையெடுத்ததைச் சொல்லும் துறை.
கொற்றவைநிலை = கோட்டையின் இறைவிக்குப் பலியிட்டுப் பரவும் புறத்துறை. எல்லா அம்மன் கோயில்களிலும் இறைவிக்குப் பலியிடும் பழக்கம் ஆனது வெகுகாலம் இருந்தது. காலவோட்டத்தில் கொல்லாச் சிந்தனை நம்மிடை விரவி, இப்பழக்கம் மறைந்து வருகிறது. இதற்கு மாறாகவே பூசணிக்குள் மஞ்சள்/குங்குமம் விரவிப் பலிபீடத்தில் உடைக்கிறார். சுண்ணமும் மஞ்சளும் சேர்ந்தால் அரத்த நிறங் காட்டும். அம்மன் கோயில்களில் குங்குமம் வாங்கி நெற்றியில் இடுவதும், அரத்தப் போலியைச் சுட்டிக் காட்டும். இதற்கெல்லாம் சங்கதத்தில் பொருள் தேடின், கிட்டாது. நம் மரபுகளில் தேட வேண்டும். நாம் தாம் நம் மரபுகளை இழித்துக் கொண்டு இருக்கிறோமே?
கொற்றன்> கொத்தன் = கொற்றைக் கட்டுபவன்; முதலாங் கட்டு, சமையற் கட்டு, பின்னங் கட்டு, வளைவுக் கட்டு, மூன்றாங் கட்டு என எண்ணிக்கைப் படியும், பயன்பாட்டின் படியும் கட்டிடப் பெயர்கள் நம்மூரில் விரியும். கொற்றை மட்டுமின்றி எல்லாவற்றையுங் கட்டுவதால், ”கட்டுவோன்” எனும் பொதுப் பொருளே கொற்றனுக்கு நாளாவட்டத்தில் வந்துசேர்ந்தது. கொத்து = ஒரு தொகுதி என்ற சொல் வேறுபட்டது.

கொற்றத்திற்குக் கோட்டை முதற்பொருளாகி, ஊர், நாடு, அரசு, ஆட்சி என்பன வழிப்பொருள்களாய் விரியும். புழக்கங் கூடிப் பொருள் விரிவதும் சுருங்குவதும், மொழி வளர்ச்சியில் இயற்கை. (பிறகேன் அகராதிகளிற் கொற்றத்திற்குக் கோட்டைப் பொருள் தவிர்த்தார்? எனக்குப் புரியவில்லை.) குல் எனும் வளைவு வேரில், குல்> கொல்> கொல்+து= கொற்று> கொற்றம் எழும். அதேபோல் குல்> குள்> கொள்> கொட்பு, கொட்டு, கொடு, கொட்டில், கொட்டாரம், கோடு, கோட்டம், கோட்டை என்பவையும் வளைபொருளிற் கிளைத்தவையே. வடக்கே பலவூர்கள் கொற்றிற்கு இணையாக garh ஆகிக் கோட்டைப் பொருள் சுட்டும். katta, kot என முடியுஞ் சொற்களும் (kalikatta, Rajkot போன்றவை) கோட்டைக்கு இணை காட்டும். பல இந்திய ஊர்களின் ஈறுகள் தமிழ்த் தோற்றங் காட்டும். [ஊர்ப்பெயர்களைப் பார்த்தால் இந்தியாவின் வடக்கு-தெற்குத் தொடர்பு பெரிதும் புலப்படும். தமிழினால் அன்றி இந்தியாவின் முழுப் பண்பாட்டு வரலாற்றை எழுத முடியாது. ஆனாலும் தமிழை மட்டந் தட்டுவது நடந்து கொண்டே இருக்கிறது.] 

[இன்னொரு இடைவிலகல். பேச்சிற்கும் எழுத்திற்கும் இடையே தமிழில் எப்போதும் ஊடாட்டம் உண்டு. பேச்சு வழக்கில் இன்றும் பல றகரச் சொற்களை நாம் தகரமாய்ப் பலுக்குவோம். (ஆற்றுக்கு> ஆத்துக்கு) டகர, தகர எழுத்துக்களை ஒன்றின்கீழ் இன்னொன்றாய்ப் பிணைத்தே தமிழியில் றகர எழுத்து உருவானது. இதே போல் தந்நகரப் பழவெழுத்திலிருந்தே ஒரு கொக்கி வளைந்து றன்னகரம் உருவானது. றகரமும், னகரமும் வெகுநாட் கழித்து உருவானதால் தான் மெய்யெழுத்தின் முடிவில் அவை வந்துசேர்ந்தன. இது புரியாது, பெருமியிலிருந்து வரி வடிவத்தைத் தமிழி பெற்றதால் தமிழெழுத்துக்களைப் பின்னால் சேர்த்தார் என்பது தலைகீழ் வாதம் தொல்லியலின் வழி ஆய்ந்தால் தமிழி-->பெருமி என்பதே சரியான கொடிவழி ஆகும். அப்படிப் பார்க்கும் பொழுது இந்திய வரலாறும் ஒழுங்காய்ப் புரியும். பேரனைத் தாத்தனென்று சொல்லி நெடுங்காலம் கழித்தவர்க்கு (இதில் மேலை ஆய்வாளருஞ் சேர்த்தி.) இனிமேலாவது புரிந்தாற் சரி.]

கோட்டைப் பாதுகாப்பு என நாம்சொல்வது மெய்யில் மாற்றார் வலுக்காட்டிற்கு (offence) எதிரான, வலுவெதிர்ப்பு (defence) முனைப்புக்களே. கீழே உழிஞை, நொச்சி, வஞ்சி, காஞ்சி என்ற திணைகள் பற்றியும் விரிவாகப் பேசுவேன். இங்கோர் இடைவிலகல். defence, safety, security, police என்பவற்றிற்குச் "சர்வ நிவாரணியாகப்" பாதுகாப்பு என்ற சொல்லையே பயன்படுத்துகிறோம். இது நம்மைப் பெருந்தொலைவு கொண்டு போகாது. மாறாக, வலுவெதிர்ப்பு (defence), சேமம் (safety), பாதுகாப்பு (security), காவல் (police) என்று தனித்தனிச் சொற்களைப் பயின்றால் தெளிவு கிடைக்கும். வலுவெதிர்ப்பைச் சுருக்கமாய் அரண் என்றுஞ் சொல்லலாம். armyக்கு அரணமென்றும் பரிந்துரைத்தேன். வலுவெதிர்ப்பு முனைப்புக்களில் ஒன்றே எயில்மாடமாகும். கி.மு.462-446 இல், மகத அரசன் அசாதசத்துவிற்குப் பின்வந்த, உதயபட்டனின் பாடலிபுத்தக் கோட்டையில் 54 வாயில்கள், 570 எயில்மாடங்கள் இருந்தனவாம். அவ்வூர் ஏறத்தாழ 14.5கி.மீ. நீளம், 2.5கி.மீ. அகலங் கொண்டதெனில் ஊர் நடுவே எவ்வளவு பெரிய கோட்டை இருந்திருக்கும் ?! - என்று சற்று எண்ணிப் பாருங்கள். எயில்மாடங்கள் எவ்வளவு கருவானவை (crucial) என்று புரியும்

அன்புடன்,
இராம.கி.

Friday, November 02, 2018

தூங்கெயில் - 5

கோட்டையென்பது கோட்டில் விளையுஞ் சொல். வலிய, உயர்ந்த, வளைந்த சுவர் கொண்ட தனியாள் பரப்பான கோட்டையை அரணென்றுஞ் சொல்வர். (வளைத்துக் கட்டப்பட்டது வட்டாகி, தென்கிழக்கு ஆசியா எங்கணும் இன்று கோயிலை wat என்பர். நம் தமிழுறவு இதனுளிருக்கிறது. வாட்டைப் போன்றே நாம் கோயிலைக் கோட்டம் என்போம்.) உரத்தன்> அரத்தன்> அரத்யன் என வடக்கே திரிந்து, ராத்யன்> ராஜ்ஜன்> ராஜன்> ராசன்> அரசன்> அரயன் என்றாகும். (இச்சொல்லைப் பொறுத்துப் பாவாணரிடமிருந்து நான் கொஞ்சம் வேறுபடுவேன். வடநாட்டுச் சங்கத, பாகத ஊடாட்டம் இதில் கண்டிப்பாய் உள்ளதாகவே நான் உணர்வேன்.) சிலம்பின் 29 ஆம் காதையில் ”உரவோன்” வருவதைக் காணலாம். உரவோனும் உரத்தனும் ஒரே பொருள் கொண்டவை. உரவும், அரணும் வலுவைக் குறிக்கும். ”அரண்” பாதுகாப்பையுங் குறிக்கும். அரள்தல் என்பது ஒருவர் வலுவால் மற்றோர் பெறும் அச்சங் குறித்தது. மாற்றார்க்கு அச்சம், அரசனுக்குக் காப்பு. (தமிழிற் பல சொற்கள் இது போல் தான் ஈரஃகு வாட்களாகும் - double edged swords அஃகு, விளிம்பு, ஓரம், முனை = edge, corner என்ற சொற்களையும் இத்தொடர்பில் கவனியுங்கள்.)

அரணுக்குள் அரசனின் மனை அரண்மனையாகும். கோட்டையை மட்டுமின்றி அதன் சுவரையும் அரண் என்ற சொல் குறித்தது. கோட்டை, கோட்டமுமாகும். மதிலுள்ள கோயில்களும் மக்கள் வழக்கிற் கோட்டமாகும். (இன்றைக்கும் வட சென்னையிற் கந்தகோட்டம் உண்டு.) இலக்கியம் விவரிக்கும் அகப்பா, அரணம், அல், ஆரம், இஞ்சி, உக்கடம், உவளகம், எயில், ஓதை, கடகம், கதவம், காப்பு. கொற்றம், சாலம், சிறை, ஞாயில், நொச்சி, புதவம், புரிசை, பெருகாரம், மாடம், வாயில், வாரி, வேணகை, வேதி, வேலி எனும் கோட்டை உறுப்புக்களை நாம் முழுதும் அறிந்தோமில்லை; குழப்பமுங் கொள்கிறோம்.

பொ.உ.1250 களின்பின் நிலவிய வெளியாட்சியில் தமிழ்த்தொடர்ச்சி குலைந்து, சங்கநூல் படிக்க ஆட்கள் அருகி, உரைகாரர் எழுந்தார். (புரிதல் குறையுங் காலத்தில் தான் புத்துரை என்பது எழும்) தமிழ் மூலங்களுக்குச் சங்கதச் சொற்களும், எடுநூல்களும் (reference) சார்ந்தே விளக்கஞ் சொன்னார். விசயநகரப் பேரரசில் தமிழாட்சி குறைந்தது. (அதன் தாக்கம் இங்கு மட்டும் ஏற்படவில்லை. தென்கிழக்கு ஆசியா நோக்கிய தமிழர் நகர்ச்சியிலும் கூட, மேலையர் வரும் வரை தமிழ் மூலம் விளக்கம் சொல்வது  நின்று போனது. விசயநகர ஆட்சிக்கு அப்புறம் தமிழர் கடலிற் செல்வது அருகிப் போனது. மீண்டும் மேலையர் காலத்திற்றன் இது திரும்பியது.) கோட்டை உறுப்புக்களின் தமிழ்ச்சொற் புழக்கம் குறைந்ததால், ”தூங்கெயில்” என்பது யாருக்குப் புரிந்தது சொல்லுங்கள்?

படித்தோர் மொழியாய்ச் சங்கதம் ஆயினபின் தமிழ் என்பது தாழாது போமோ? (இன்றோ படித்தோர் மொழி ஆங்கிலம். இதன் தாக்கத்தை இன்னும் 100 ஆண்டுகளில் உணர்வோமா? தமிழின் எதிர்காலம் என்ன?) மதில், அரணெனச் சில சொற்களாற் பேர்பண்ணி, உப்பிற்குச் சப்பாணி ஆடுகிறோம். பல்துறையறிஞர் பலரும் சங்க இலக்கியத்தை ஆய்வதில்லை. பல தமிழறிஞரும் கூட உரைகாரர் சொல்லை அப்படியே மேடையிற் பரட்டும் கிளிப்பணி மட்டுமே போதும் என்கிறார். (Are they just conservators, record-keepers and not researchers?) அகரமுதலிகளில், 2-ஆம் நிலைப் பொருளை மட்டுமே பதிகிறார். விளக்கமறியச் சங்கதம், ஆங்கிலத்திற்கே நாம் போகவேண்டியுள்ளது. இதற்கு மாறாய்க் ”கோட்டையும் அதன் உறுப்புக்களும்- சங்க இலக்கியப் பார்வை” என்றோர் தமிழாய்வு நூல் என்றைக்கு எழும்? சொல்லுங்கள். 

கோட்டையை அணுகையில் முதலில் அமைவது மிளைக்காடு. அதனுட் புகுந்த பின், முதலைகள் புரண்டசையும் அகழி. கோட்டைக்குத் தக்க, இதன் அகலமும் ஆழமும் வேறுபடும். அருத்த சாற்றம் ஒரு கோட்டைக்கு 3 அகழிகளைச் சுட்டும். அகழ்ந்த மண்ணைக் குமித்து மேடாக்கிய கோட்டை மேட்டிற் (இதை rampart என்பர்; இம்மேட்டைக் குறிக்க அலங்கமென்ற சொல்லும் தமிழில் உண்டு. அல் = மதில். அல்+அங்கம் = மதிலிருக்குமிடம். இன்றுந் தஞ்சாவூர்க் கோட்டை மேட்டை இப்பெயரால் அழைப்பர்.) கோட்டைச் சுவரைக் கட்டி, முட்செடி, நச்சுக் கொடிகளை அம்மேட்டில் வித்தி, மாற்றாரை அணுகவிடாது செய்வர். செம்பாறாங்கல், கருங்கல் என அடுக்கிச். சேறு, (சங்கு, சிப்பி, கிளிஞ்சல்களாற் செய்த) சுண்ணப்பொடி, முட்டையோடு, கடுக்காய்த் தூள், வெல்லம் பிரிவதால் தேங்கும் கருப்பஞ் சாறு (molasses), இயற்கைப் பிசின் போன்ற பல்வேறு பொதிகள் (bodies) கலந்த சாந்தைப் பூசிக் கோட்டைச் சுவரைக் கட்டுவர். (இதே செம்பாறாங்கல், இதே சாந்தை நான் கம்போடியாவில் பார்த்தேன். அசந்து போனேன். நண்பர்களே! கம்போடியாவைக் கட்டாயம் போய்ப் பாருங்கள். நம்மூர்த் தொடர்பு அங்கு எக்கச்சக்கமாய் உள்ளது. ஆனால் அதை ஒழுங்காய் விளக்கிச் சொல்ல நம்மிடம் ஆட்கள் இல்லை. தமிழை அம்போவென ஒதுக்கி மீள மீளச் சங்கத வழி தான் பலரும் விளக்குகிறார். தென்கிழக்கு ஆசியாவில் உள்ளது தமிழின் தாக்கமே. அத் தமிழ் அடிப்படை மேல் சங்கதம் குந்திக் கொண்டது; குந்தியது வென்றது.:-()

இக்கோட்டைகளின் உறுதி அறியும்படி, மேற்சொன்ன சாந்தின் பொதிவு (composition), செய்மானம் (procedure) போன்றவற்றை இற்றை அறிவியல் கொண்டு சோதித்துப் பதியாது, மரபுசார் நுட்பங்களைத் தொடர்ந்து தொலைத்த வண்ணம் நாமுள்ளோம். [இந்நுட்பங்களை வைத்து நம்மூர் வெதணத்திற்குத் (climate) தக்கக் குறைச்செலவில் ஏராளம் வீடுகளைக் கட்ட இயலுமே?] இச் சாந்தால் மதிற்சுவர் கட்ட, ஈரம் இய்ந்து (<இழுந்து = உள்வாங்கி) இறுகி, இ(ய்)ஞ்சியாகும். [வளைந்த மதிற்சுவரைக் (கொடு+இஞ்சி=) கொடிஞ்சி என்றும் அழைப்பர். பழந்தேர்களில் தலைவன் நிற்கும் பெருந் தேர்த்தட்டையும், பாகன் நிற்கும் சிறு தேர்த்தட்டையுஞ் சுற்றி மதில்போற் கட்டப்படும் மரச் சுவரையும் கொடிஞ்சியென்றே அழைப்பர்.] நீரின்றி இய்ந்திறுகிய இஞ்சி வேருக்கும் இதே இய்யுங் கருத்துத் தான்.

கோட்டைப் பரப்பும், மதிலும், வாயில்களும், உருளைத் (cylinderical) துருக்குகளும் (turrets), (துருக்குகளின் மேல் அமையும்) எயில் மாடங்களும், கோபுரங்களும் சேர்ந்தது கோட்டையாகும். துருக்குகள் வட்டமாயன்றிச் சதுர, செவ்வகக் குறுக்குத் தோற்றமுங் கொள்ளலாம். புவியில் வெளிவந்து புறத்தெற்றும் (to project) துருக்கும் (=துருத்தும்) கூண்டைத் துருக்கென்பார். (சொற்பிறப்புத் தெரியாது இதைச் சங்கதமென்பார் நம்மூரில் உண்டு. புறத்தெற்றும் துருக்குகள் கொண்ட வேதியற் திணைக்களத்தைக் - chemical plant - கட்டும் போது புறத்தெற்று - project - என்று அழைக்கக் கூடாதோ?) துருக்கின் மேல் குவித்து மூடின், குல்> குல்வு> குவ்வு> குவு> கூ என முன்னொட்டாகி, புரமெனும் கட்டடச் சொல்லோடு கூபுரம்>கோபுரமெனும் புதுச்சொல்லெழும். கூ, கூம்பு, கூடம் ஆகியவை சங்ககாலச் சொற்களாகும். கோபுரம் சங்க காலத்தின் பின்னால் எழுந்தது. கோபுரத்திற்கும் அரசருக்குந் தொடர்பில்லை. (இருப்பதாய் நானும் ஒரு கால் நினைத்தேன். கோபுரம்- விமான வேறுபாடு தெரியாதோர் நம்மில் பலருண்டு. கோயிற் கட்டுமானம் பற்றியறியப் பார்க்க:

http://valavu.blogspot.in/2013/10/blog-post.html)

கோபுர/விமானங்கள் (3,5,7,9,11,13 என எண்ணிக்கையிலான) இடைமாடத் தொகுதியோடும், தலைமாடத்தோடும் ஆனவை. (சங்கதத் தாக்கத்தில் தாவதியர்/ஸ்தாபதியர் தலைமாடத்தைச் சிகரமென்பர். (கோயில்கள் எலாம் நம்முடையன. கோயில் கட்டப் பயனாகும் சிற்பநூல்கள் எல்லாம் சங்கதத்தில் என்று காலஞ்சென்ற பேரா.தமிழண்ணல் மனம் வருந்திச் சொல்வார்.) தமிழர்/திராவிடர் கட்டுமானங்களில் இடைமாடத் தொகுதி சதுர, செவ்வகக் கூம்புகளின் கூர்ப்பு வெட்டிய கூடமாகும் (frustum of a square or rectangle pyramid). (மாட மாளிகை, கூட கோபுரம் - பலரறிந்த சொல்வழக்காறு. கூம்பு/கூடத்தின் அடிப்பரப்பு வட்டம், சதுரம், செவ்வகமாகலாம்.). இக்கூடமும் hall-கூடமும் வெவ்வேறானவை. வடவர் கோபுரங்களில் கூடம் வேறாகக் காட்சியளிக்கும். விமான/கோபுரத் தலைமாடம் அரைக் கோளம்  (hemispherical) ஆகவோ, அன்றிக் காற்கோளத்தோடு அரையுருளை சேர்ந்தோ (1/4 of sphere+half-cylinder. இதற்கு யானைமாடமென்று பெயர்.) அமையலாம். தலைமாடத்திற் கலசங்களைப் பொருத்தி, கோட்டைக் கொடிகள் அவற்றோடு சேர்த்துக் கட்டப்படும். யானை மாடம் போலவே, கருவறைகளில் கனச்செவ்வகத்தோடு, அரையுருளை சேர்ந்ததை கயப்புட்ட> கஜப்ருஷ்ட வடிவென்று சங்கதத்தில் ஒலிப்பர். நம்மூர் கட்டிட அடவுச் சிந்தனையில் யானையொப்பீடுகள் இப்படிப் பெரிதுமிருந்தன. யானையோடு சேர்ந்து வளர்ந்தவர்க்கு வேறெப்படித் தோன்றும்?
       
அம்பு/ஈட்டி எறிவதற்குத் தோதாய்த் துருக்குச் சுவரின் பல மட்டங்களில் துளைகள் உண்டு. கோட்டையின் வாய்+இல் (gate house) வாயிலாகும். கோட்டைக்குப் பல வாயில்கள் இருக்கலாம். பாதுகாப்பைப் பொறுத்து ஒவ்வொன்றும் கோட்டை வலுவைக் குறைக்கும். உள்ளிருக்கும் மக்களுக்கோ புழங்கும் வாய்ப்புக்களைக் கூட்டும். வாயிலை gate ஆய்ப் புரிந்து கொள்வோரே மிகுதி. வாயிலிற் கதவுண்டு. கடந்து செல்வது கடவு>கதவு = gate ஆகும் (இன்னொரு பக்கம் அதுவொரு அடைப்பு.) வாயிலைக் gate house ஆகப் புரிந்து கொள்வதே சரி. [தமிழிய, இந்தையிரோப்பிய மொழிகளுக்கிடை ஆயிரக் கணக்கில் இணைச்சொற்கள் உண்டு. இவற்றை ஆங்காங்கு என் கட்டுரைகளிற் சொல்வதே எனக்குப் பொல்லாப்பு ஆகிறது. ஆங்கில ஓசையில் சொல்படைப்பதாய் அவதூறு வேறு. வில்லியஞ்சோன்சு, மாக்சுமுல்லர், மோனியர் வில்லியம்சு தாசருக்கு முன் ஏழைசொல் அம்பலம் ஏறுமோ?] வாயிற் கதவிற்குள் சிறு புதவும் இருக்கலாம். புகுவது புதவு. gate within a gate. புகல்=port. passport=புகற்கடவு. இது தவிர முகன வாயிலுக்கு முன்னுள்ள தூக்குப் பாலத்திற்கும் அப்பால் பாலத் தொடக்கில் முக மாளிகையின் வாயிற் புகு வழியை அடைப்பதாய் மேலிருந்து கீழிறக்கும் வண்ணம் ஈட்டிகளாற் செய்த சட்டக் கதவுண்டு (portcullis). 

அன்புடன்,
இராம.கி.

Thursday, November 01, 2018

தூங்கெயில் - 4

இதுதவிர, முன்னே சொன்னதுபோல், தொல்காப்பியம் பொருளதிகாரம் களவியலில் ”மெய்தொட்டுப் பயிறல் பொய்பாராட்டல்” என்று தொடங்கும் 11 ஆம் சொற்றத்தில் (சூத்திரத்தில்) ”என்னென்ன விதமாய்த் தலைவன் கூற்று உண்டெ?”ன்பதில் தலைவனின் ஆற்றாமையை நீக்கத் (”குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்”) தலைவனுக்கு நடக்கும் குற்றங்களைப் பாங்கன் வெளிப் படுத்தலும், தலைவன் மறுமொழித்தலும் அடங்கும். இதற்கு நச்சினார்க் கினியர் காட்டும் எடுத்துக்காட்டுகளில் ”குறவமக்கள் தலைவியின்சிறப்பைத் தாம் பயந்ததாய்ச் சொல்வார்” எனும் அகப்பாட்டு தூங்கெயில் எறிந்ததைப் பேசும் இப்பாட்டு நச்சினார்க்கினியர் உரையாலே நமக்குத் தெரிகிறது. இதை ”யார் பாடினார்? எவ்விலக்கியஞ் சார்ந்தது?” என்று நமக்குத் தெரியவில்லை. [கீழே நச்சினார்க்கினியார் கொடுத்த பாட்டை முழுதுங் கொடுத்துள்ளேன். படியுங்கள். ஏதோவொரு வரலாற்றுச் செய்தி உள்ளேயிருக்கிறது.]

கண்ணே,
கண்ணயற் பிறந்த கவுளழி கடாஅத்த
அண்ணல் யானை யாரியர்ப் பிணித்த
விறற்போர் வானவன் கொல்லி மீமிசை
அறைக்கான் மாச்சுனை யவிழ்த்த நீலம்

பல்லே,
பல்லரண் கடந்த பசும்பூண் பாண்டியன்
மல்குநீர் வரைப்பிற் கொற்கை முன்துறை
ஊதை யீட்டிய வுயர்மண லடைகரை
ஓத வெண்டிரை யுதைத்த முத்தம்

நிறனே,
திறல்விளங் கவுணர் தூங்கெயி லெறிந்த
விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழன்
நலனணி யரங்கிற் போகிய மாவின்
உருவ நீள்சினை யொழுகிய தளிரே

என்றவை பயந்தமை யறியார் நன்று
மறவர் மன்றவிக் குறவர் மக்கள்
தேம்பொதி கிளவி யிவளை
யாம்பயந் தேமெம் மகளென் போரே

இப்பாட்டில், தலைவியின் கண்ணும், பல்லும், நிறமும் முறையே வான வரம்பன் உதியஞ்சேரல் (அன்றி அவன் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரல்) ஆதனின் கொல்லிச்சுனையில் மலர்ந்த குவளைக்கும், பசும்பூண் பாண்டியனின் கொற்கைத்துறை மணற்கரையை அடைந்த முத்திற்கும், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியனின் போர்ச் செங்களத்து நீள்மாமரத்தின் இளந்தளிர் நிறத்திற்கும் ஒப்பிடப் படுகின்றன. ஆரியரைப் பிணித்த சேரலாதன், பசும்பூண் பாண்டியன் என்ற முந்நாள் வேந்தரை இப்பாட்டு குறிப்பதால் பாட்டின் காலம் பெரும்பாலும் கி.மு.120/150 க்கும் முன்னதென்றே தோன்றுகிறது

[கட்டுரைக்கு இடைவிலகலாய், பாட்டின் பொருளை இங்கு கொடுக்கிறேன். ”அவள் கண்ணோ, தூக்கமிழந்து, கன்னந்தடவிப் பார்வைசெலுத்தும் பெரும் யானைகளால் ஆரியரைப் பணித்த, போர்த்திறங் கொண்ட, சேரலாதனின் கொல்லி மலைக்குகையிலுள்ள பெருஞ்சுனையில் மலர்ந்த குவளை போன்றது; அவள் பல்லோ, பல்லரண்களைக் கடந்த பசும்பூண் பாண்டியனின் பெருங்கடலிலுள்ள கொற்கை முன்துறையில், உயர்ந்து பொங்கிவரும் வெள்ளோத அலையால், மணற்கரையை வந்தடையும் முத்தைப் போன்றது; அவள் நிறமோ, திறம் வெளிப்பட்ட உவணரின் தூங்கெயிலை எறிந்த விறல் மிகுந்த முரசோடு போர்வெல்லும் சோழனின் செம்மைசார்த்திய போர்க்களத்தில் இருந்த நீண்ட மாமரக்கொம்பின் தளிர் போன்றது” என்றபடி, அவைகிடைத்தமை அறியாதவர், நன்று, மறவர்மன்றத்தில் இக்குறவர் மக்கள் இன்சொற்களைப் பேசி, ”இவளை நாங்களே பயந்தோம்; இவள் எம் மகள்” என்று சொல்வாரே]

தூங்கெயில் என்ற சொல்லின் பொருளறிய இப்பாட்டில் முகன்மையான குறிப்பொன்று நமக்குக் கிட்டுகிறது. அதாவது தூங்கெயிற்கான போர்ச் செங்களத்தில் மாமரம் ஒன்றிருந்தைக் குறிப்பதால், தூங்கெயில் உறுதியாக அந்தர ஆகாயத்திலில்லை என்பது பெறப்படும்.; அது மண்ணிற்றான் இருந்தது என்பது ஆணித்தரமாய் விளங்கும். எனவே தூங்கெயிலை விண்ணிற் காண முயலும் தமிழறிஞர் அதைவிட்டு மண்ணுக்கு வருவதே நல்லது. சங்க காலத்திற்கு அப்புறமும் சோழன் தூங்கெயிலெறிந்த கருத்து தொடர்ந்து வந்ததையும், ”முயன்றால் முடியாததில்லை; கூரம்பின் அடியை இழுத்து எய்துவிட்டால் எவ்வரணையும் காப்பாற்ற முடியாது” என்று அதற்கு விளக்கந் தருவதாயும், பழமொழி நானூற்றின் 155 ஆம் பாட்டு வெளிப்படுத்தும்

வீங்குதோள் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க தாம் 'கூரம்பு
அடியிழுப்பின் இல்லை அரண்'.

இப்படிப் பழவிலக்கியத்தில் மட்டுமின்றி, பிற்காலத்தில் குலோத்துங்கசோழன் பெருமைபேசும் குலோத்துங்கசோழன் உலாவும்,

தலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் - நிலைதப்பா
மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்குக்
கூளி தலைபண்டு கொண்டகோன் - நாளும்
பதுமக் கடவுள் படைப்படையக் காத்த
முதுமக்கட் சாடி முதலோன் - பொதுமட்க
வாங்கெயி னேமி வரையாக மண்ணாண்டு
தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் - ஓங்கிய
மால்கடற் பள்ளி வறிதாக மண்காத்து
மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் - கோல்கொன்
றலையெறியுங் காவேரி யாற்றுப் படைக்கு
மலையெறிய மன்னர்க்கு மன்னன் - நிலையறியாத்

என்று பதிவுசெய்யும். இன்னும் கலிங்கத்துப்பரணி (இராச 17, “தேங்கு தூங்கெயி லெறிந்த வவனும்”) , இராசராச சோழனுலா (வரி 13; “வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத், தூங்கும் புரிசை துணித்த கோன்”), விக்கிரம சோழனுலா (வரி 16, 17; “கூடார்தந், தூங்குமெயிலெறிந்த சோழனும்” ) போன்றவையும் பேசும்.

இத்தனை எடுத்துக்காட்டுகளுக்கு அப்புறமும், மேற்கூறிய தூங்கெயிலை, ”ஆகாயக் கோட்டையாய்” கற்பனை கலந்த மீமாந்தக் (அமானுஷ்யக்) குறிப்போடு உரைகாரரைப் பின்பற்றிப் பெரும்பாலோர் நவில்வது வியப்புத் தான். அறிவியற் குறுகுறுப்பும், ஏனெனும் தருக்கும் உள்ள இக்காலத்தில், உரைவழி பாராது, நேரேயே சங்ககாலத்தைப் புரிந்துகொண்டாலென்ன?- என்று நான் கேட்பேன். மேகலை படித்துப் புரியாக்காலத்தில், மீமாந்த விவரிப்புள்ள அதன் காப்பியப்போக்கை நானுங் கேள்வி கேட்டதில்லைதான். ஆயினும், மீமாந்தங் குறைந்த சிலம்பைப் படித்தபின் (அதிலும் கண்ணகி முலைதிருகி எறிய மதுரையெரிந்தது போன்றவை மீமாந்தச் செயல்களே. அவற்றின் நேர்விளக்கமும் என்னிடமில்லை.) மீமாந்த விவரிப்பின்றி தூங்கெயில் எறிந்ததை இயல்பாய் நவில வாய்ப்பில்லையா? தூங்கெயில் என்பது புவியின் குருவிசை (gravity force) மறுத்தசைந்த ஆகாயக் கோட்டையா? அன்றி நிலத்திற் பதிந்த, விதப்பு அடவுள்ள (specialized design) கோட்டைப்பகுதியா? யாருடையது இத் தூங்கெயில்? அரசன் விறல்வியந்து பெயரடை தரும் அளவிற்குத் தூங்கெயிலெறிவது கடினமா?- என்ற கேள்விகளெழும். தூங்கெயிலைப் புரிந்துகொள்ள, கோட்டையையும் அதன் பகுதிகளையும் விரிந்து காண்போம்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, October 28, 2018

தூங்கெயில் - 3

அவலோகிதனை இப்படி ஐயுறத்தொடங்கிய நாம், இத்தொடரில் மணிமேகலை வாழ்வையும் துறவையும் பேசாது (அது பென்னம் பெரிய வேலை; வேறோரிடத்திற் செய்யவேண்டும்). ”தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியன்” பற்றி அலசப் போகிறோம். என் இப்போதையப் புரிதலில் இப்பெயர் விதப்புக் குறிப்பும், குடிப்பெயருஞ் சேர்ந்தது. அக் காலத்தில் தோளுக்கடுத்த மேற்கையில் இரு பாலரும் அணியும் தொடிவளை இங்கு விதப்பான அடையானது ஏனெனப் புரியவில்லை. அதற்கான விவரம் எங்குங் கிட்டவில்லை. யாரோவொரு சோழ முன்னவன் தூங்கெயிலெறிந்த விவரிப்பு இன்னுஞ் சில நூல்களிலும் பேசப்படுகிறது. முதலில் நாம் காண்பது இதையும், புறாவிற்கென செம்பியன் உடம்புத் தசையை அரிந்து கொடுத்ததையுங் குறிக்கும் சிலம்பு 27, 164-171 வரிகளாகும். கீழே படியுங்கள்.

வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
எயில்மூன்று எறிந்த இகல்வேற் கொற்றமும்
குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க
அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்
திரிந்துவே றாகுங் காலமு முண்டோ
தீதோ இல்லைச் செல்லற் காலையுங்
காவிரி புரக்கும் நாடுகிழவோ னென்று
அருமறை முதல்வன் சொல்லக்கேட்டே

இதில் இந்திரன் அரணத்தைக் காத்து, உயர்விசும்பின் 3 தூங்கெயில்களை சோழனெறிந்தது பேசப்படுகிறது. இதையும், "திறல்விளங்கு அவுணர் தூங்கெயில் எறிந்த, விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழன்” (தொல்.கள. சூ.11. நச்.மேற். இதைப்பற்றிக் கீழே விரிவாய்ப் பேசுகிறேன்.) எனக் குறித்ததையும் பொருத்தினால், அவுணர்/அசுரர் விண்ணிலமைத்த 3 மாய அரண்களையும், செஞ்சடைக்கடவுள் எரித்த திரிபுரங்களையும், சோழன் தூங்கெயில் எறித்ததோடு போட்டு வேதநெறி சார்ந்து உரையாசிரியர்கள் குழப்புவது புரியும்.

அவுணரென்பார் உண்மையிலேயே அசுரரா? அல்லது உவணரெனும் மலைக் குடியாரா?- என்று புரியவில்லை. (மறந்துவிடாதீர்கள். உவணம்= உயரத்தில் உள்ள இடம், எனவே மலை. வானப் பொருளும் உவணத்திற்கு உண்டு. உவணர்>ஊணர்>ஔணர்>அவுணர் என்ற திரிவையும் எண்ணிப்பாருங்கள். வரலாற்று மிலேச்சரான ஹூணராய் இவரிருக்க வழியில்லை. அவர்காலம் பொ.உ.5 ஆம் நூற்றாண்டு.) பொதுவாக வெளியாரைக் குறிக்குஞ் சொற்கள் நம்மிடந்திரிவது இயற்கை. ”கன்வ” எனும் மகதகுலச் சொல் கனகவென நம்மவர் வாயில் திரிந்ததே?.(செங்குட்டுவன் தோற்கடித்த கனகவிசயன் ஒரு மகத அரசனாக இருக்கலாமென என் ”சிலம்பின் காலத்திற்” சொன்னேன். அம்முகன்மையை நம்மிற்பலரும் இன்னும் உணரவில்லை.) அயொனியர் நமக்கு யவனரானாரே? விண்ணெனில் அது அந்தர ஆகாயமா? மேலும், விண்தொடுங் கட்டிடம் ஆகாயந் தொடுமா? தடுமாறுகிறதல்லவா? ஒரே கதை; 3 வடிவில் தோற்றுவதால், தொன்மமெது; வரலாறெது?- என்று நமக்குப் புரியவில்லை. 

இதே சிலம்பின் 29ஆம் காதை 16ஆம் பாட்டு- அம்மானை வரியும் சோழன் தூங்கெயிலெறிந்ததை விவரிக்கும். [2 வேந்தர், 7 மன்னரோடு போரிட்டு சோழ வளநாட்டைச் செங்குட்டுவன் கைப்பற்றித் தன் மாமன்மகனான கிள்ளி வளவனைப் பட்டமேற்றியது சிலம்பின் வஞ்சிக்காண்டத்திற் பெறப்படும்.[வஞ்சிக்காண்டம் புரியாமற்றான், தமிழர் வரலாறு நமக்கெல்லாந் தடுமாறுகிறது. சிலம்பைக் கற்பனை நூல் என்னுமளவிற்குச் தொல்லாய்வர் நாகசாமி போன்றோர் போவார். இன்னொரு பக்கம் சந்து கிடைக்கும் இடம் எலாம் ஊடு வந்து சேரரின் குடவஞ்சியைக் கொங்கு வஞ்சியோடு (கரூரோடு) குழப்பி அதனால் கொங்கு நாட்டிற்குப் பெருமைசேர்க்க திரு. நா.கணேசன் போன்றோர் முயல்வார். 2,3 ஊர்களுக்கு ஒரேபெயர் அமைவது தமிழரிடை மிகச்சாத்தாரம். கொங்கின் பெருமையை வேறுவகையில் உணர்வதல்லவா தமிழர்க்கு நல்லது? பார்க்க: இராம.கி.யின் “சிலம்பின் காலம்”, தமிழினிப் பதிப்பகம்.]

[ஒரு பேச்சிற்குக் கேட்பேன். தெற்கத்தியாகிய நான் என் வட்டாரப் பற்றால் ”எல்லாமே தெற்குச்சீமை” என முழங்கித் தள்ளினாற் சரியாகுமோ? அவரவர் வட்டாரம் அவரவர்க்கு உயர்த்தியன்றோ? மீண்டும் சேர, சோழ, பாண்டியர் ஆகித் தமிழராகிய நாம் மீண்டுங் கொங்கிற்காக அடித்துக் கொள்வோமா, என்ன? பாழாய்ப்போன குறுங்குழுப் பெருமையும் ஓற்றுமைக் குலைவும் தானே வரலாற்றில் தமிழர்க்கு பேருலை வைத்தன? சேர, சோழ, பாண்டியர் சண்டைகளை விட்டால் தமிழர்க்குத் துளி வரலாறாவது மிஞ்சுமா? பங்காளித் தகறாறிலும் மாமன்/மச்சான் சண்டையிலும் பேரளவிற்கு ஓய்ந்து போன கூட்டம் வேறெங்கேனும் உண்டா? “தேவர்மகன்” திரைப்படம் அப்படியே தமிழரை உரித்துக் காட்டுவதாய் நான் சொல்வதுண்டு. உட்பகை தமிழரை அழித்ததுபோல் வெளிப்பகை, சேதம்விளைத்து இருக்கிறதா? இன்றும் ”ஐயா, அம்மா” என்று சொல்லி இரு பெருங் கட்சிகளைக் கட்டிச் சீரழிகிறோமே? இதுவும் ஒருவகைச் சோழ, பாண்டியத் தகறாறு தானே? யாரார் எதுவென்று உங்களுக்கே புரியும். இத்தகராறுகளை ஒதுக்கித் தமிழருக்கு நல்லது தேடினாலென்ன?] சரி, தூங்கெயிலுக்கு வருவோம். சிலம்பின் வாழ்த்துக் காதையில் அம்மானை வரியின் முதற்பாட்டில்,

வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணங் காத்த உரவோன் யார் அம்மானை?
ஓங்கரணங் காத்த உரவோன் உயர்விசும்பில்
தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை

என்றுவரும். தூங்கெயில் எறிந்ததற்கு இன்னுஞ்சில மேற்கோள்களுண்டு. கீழேவருவன சிறுபாணாற்றுப்படை  79-83 ஆம் வரிகள்.

...................................................ஒன்னார்
ஓங்கெயில் கதவம் உருமுச்சுவல் சொறியும்
தூங்கெயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை நல்தேர்ச் செம்பியன்
ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே......

அடுத்து வருவன குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடும் மாறோக்கத்து நப்பசலையாரின் புறம் 39, 46-47 ஆம் வரிகளாகும்.

------------------------------சார்தல்
ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர்  நினைப்பின்
அடுதல் நின்புகழும் அன்றே ..........

அப்புறம் பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து 31 ஆம் பாடலில் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார்,

கடவுள் அஞ்சி வானத் திழைத்த
தூங்கெயிற் கதவங் காவல் கொண்ட
எழூஉ நிவந்தன்ன பரேர் எறுழ் முழவுத்தோள்

என்றவரிகளால் தூங்கெயிற் கதவத்தின் காப்பாய், தலைவன் அஞ்சியின் ஆணையால் உலர்ந்த அடிமரத்தை இழைத்துச்செய்த கணையம் உயர்ந்து நிற்பதுபோல் நார்முடிச்சேரலின் தோளைச் சொல்வார். வானமென்பதை அகர முதலியிற் பார்த்தால் உலர்ந்தமரம் என்ற பொருளுமுண்டு.. அது இழைக்க முடியாத ஆகாயமல்ல. (ஆகாயமென்று புரிந்து கொண்டோரே தமிழறிஞரில் மிக அதிகம்.) இம் முகனை வரிகளால் ”செம்பியன் யாருடைய தூங்கெயிலை எறிந்தான்?” என்ற கேள்விக்கு ஆகாயத்திலன்றி, மண்ணிலேயே நல்ல விடை கிடைக்கலாமென்று புரிகிறது. இங்கே குறிப்பிடப்படுவோன் அதியமான் நெடுமான் அஞ்சியோ, அன்றி அவன் முன்னோனோ ஆகலாம். கடவுள்/பகவான் என்றாலே எல்லாம்வல்ல இறைவன்-தேவர் என்பது இக்காலப் புரிதல். சங்ககாலத்தில் அப்படியல்ல. அன்று ’கடவுள்’ என்பது தலைவன்/பெரியவனையே குறித்தது. கோதமபுத்தரும், வர்த்தமானருங்கூட அற்றைப் புரிதலிற் கடவுளரே. (பகவான் புத்தர், பகவான் மகாவீரர் என்கிறோமே?) வேதநெறி சாராது பலவிடங்களிற் தமிழிலக்கியத்தைக் காணமுடியும். வெவ்வேறு காலங்களிற் சொற்பொருள் மாறுபடும் என்பதை மறக்க வேண்டாம். .

அன்புடன்,
இராம.கி.

Saturday, October 27, 2018

தூங்கெயில் - 2

அவலோகிதன் யார்? தமிழில் அவன் பெயரென்ன? என்பது அடுத்தகேள்வி. உல்>ஊல்>ஊள்>ஊளை= ஆந்தையோசை. உல்லுகம்>உலூகம், பாலியில் ஆந்தையைக் குறிக்கும். ஊளை, ஊளி, உலூக, owl- என்பவை தொடர்புள்ளவை. (இரவில் உணவுதேடுந் துறவியை வேதமறுப்பாளர் ஆந்தையரென்பார். இன்றும் இரவில் அலைவோரை தமிழரும் ஆந்தை என்போம். அதேபொழுது, இரவுணவைச் செயினநெறி ஏற்காது. ’அந்தை’க்கு அச்சனென்றும் ”அந்தன்> அந்தனர்>அந்தணர்= பெரியவர்” என்றும் இரா.இளங்குமரன் சொல்வார்.) உலூக>உலூகித என்பது ஔலோகித>அவலோகித என்று வட மொழியில் திரியும். தமிழ்ச் சொல்லான உதாரம் சங்கதத்தில் ஔதார்யம் ஆனது போல், உயர்ந்த மலையனைக் குறிக்கும் சொல், உவணன்>ஊணன்>ஔணன்> அவுணன் என்றானது போல், இதைக் கொள்ளுங்கள். உங்களுக்கு நேரமும் பொழுதும் இருந்தால் ஓர் அகரமுதலியின் ஔகாரச் சொற்களை எடுத்து வைத்துத் துழாவுங்கள். சங்கத இடையூற்றாற் பலவும் நம்மிடங் கண்ணா மூச்சி காட்டும். வியந்துபோவீர்கள். ஆயினும் ’சங்கதம் தமிழிடமிருந்து சொல் கடன்பெற்றது என்பதைச் சங்கத அபிமானி’கள் ஏற்கவே மாட்டார்’:-)) )

{அந்தணர் என்பது பார்ப்பாரைக் குறித்தது மிகப்பிந்தைப் புரிதல். பெருமான்> பெருமானர்>ப்ராமணர் என்பது தமிழ்வழிப் பிறந்ததே. இதை வடசொல்லாய்க் காண்பது சொற்பிறப்பியல் அறியாப் பேச்சு. ’சிவபெருமான்’ என்பது ’சுப்ரமண்ய’ என்றாவதைக் கண்டால் பெருமான்>ப்ரமண் திரிவு சட்டென விளங்கும். வெள்ளமாய்க்கூடிய தொன்மப்பெருக்கில், தொல்காப்பியச் சேயோனே தந்தையும் மகனுமாய்ப் பிற்காலத்தில் பிரித்தறியப் பட்டார். ’சிவ’ எனுந் தமிழ்ச்சொல்லே சு எனுஞ் சங்கத முன்னொட்டாகி, ’நல்ல’வெனும் பொருள் கொள்ளும். சிவ மங்கலியே சுமங்கலியானாள். சங்கவிலக்கியம் படித்து இந்தியவியல் ஆய்வில் ஈடுபடும் பல மேலையரும், ஏன் பல தமிழறிஞருங்கூடத் தமிழ்ச்சிந்தனைகளை வடவர் தொன்மங்கள்/பழனங்களைக் கொண்டே விளக்குவார். அந்த அளவிற்குச் சங்கதம்->தமிழ் எனும் ஓரப்பார்வை இருக்கும்வரை தமிழரின் மரபுத்தொடக்கம் புரியாது. அண்மையில் ஓராய்வாளர் கீறல் விழுந்த இசைத்தட்டுப் போல், சிவனெனும் மழுவாள் நெடியோனை வருணனின் திரிவாய்த் தொடர்ந்து காட்டிவருகிறார். அவரை வேறிடத்தில் இதுபற்றிக் கட்டாயம் மறுப்பேன்.} 

இளங்கீரந்தை, பொதுக்கயத்துக் கீரந்தை, எயினந்தை, கோட்டியூர் நல்லந்தை, சாத்தந்தை என்ற சங்ககால அந்தைப் பெயர்களையும், அஞ்சிலாந்தை, ஓதலாந்தை, சிறைக்குடியாந்தை, பிசிராந்தை எனும் ஆந்தைப்பெயர்களையும் பார்த்தால், அந்தை>ஆந்தையென்ற இயற்சொல்வளர்ச்சி ஆதன்+தந்தை= ஆந்தை என்பதைவிடப் பொருந்துவதாய்த் தோன்றுகிறது. இன்றுங்கூடக் கிறித்துவப்பாதிரியை அச்சன் என்றே மலையாளத்தில் சொல்வர். அதே மரபில், பிசிராந்தையார் ஏன் பிசிரைச் சேர்ந்த  ஐயனார் கோயிலின் ஆன்மத் தந்தையாய், அற்றுவிக அறிவராய், ஆகக்கூடாது? ஓர்ந்துபாருங்கள். ஆந்தையார் என்பது இயற்பெயர், தொழிற்பெயர் என்பதுபோற் தெரிய வில்லை. இது ஒரு வேளை உறவுப்பெயராய், மதிப்புப்பெயராய் இருக்கலாமே? ஒருமுறை அப்படி எண்ணிப்பார்ப்போமே? பார்வை மாறுமே? 
[ஆந்தைப்பெயர் கொண்ட புலவர்களின் சங்கப்பாடல்களில் அற்றுவிகப் பார்வை தொனிப்பதை நான் காண்பதை இன்னொரு தொடரில் விளக்குவேன்.]

பிள்ளைகளோடு தனக்கேற்பட்ட மோதலில் மனங்கலங்கி இனிமேலும் இவ்வாழ்விற் பொருளில்லையென நோன்பேற்றுத் தன்வாழ்வை அற்றுவித்துத் (முடிப்பித்துத்) திருவரங்கத்திற் பள்ளிகொண்ட (?!:-)) கோப்பெருங்கிள்ளிச் சோழன் பிசிராந்தையார் மேல் மதிப்புக்கொண்டது புறநானூற்றால் நமக்குத் தெரியும் (புறநானூற்றை ஆழ்ந்துபடித்தால் கோப்பெருங்கிள்ளியின் பின் திருவரங்கம் உள்ளது நமக்குப் புரியும்.) திருவரங்கக் கோயிலொழுகை இதோடு பொருத்தினால், அற்றுவ>அறுவ> அறவச் சோழனைச் சங்கதவழி, ’தருமவர்மா’ என்றாக்கி, அவன்வழிவந்த கிள்ளிச்சோழரைக் கிளிச்சோழர் என்றாக்கிய தொன்மமும் நமக்கு நன்கு புரியும். திருவரங்கக் கோயிலொழுகை எந்தத் தமிழறிஞர் படிக்கிறார்? சொல்லுங்கள். அது “வைணவாளுக்கு அல்லவா ஆனது?” - ஏன்று ஒதுக்குவாரே மிகுதி.)

அதேபோது, கிள்ளிகள் காலத்திலேயே திருவரங்கன் கோயிலிருந்ததற்குச் சிலம்பே சான்று பகரும். [ஆயினும் திருவிண்ணவரோ அதைக் கொஞ்சமும் எடுத்துக் காட்டமாட்டார். கிள்ளிகளுக்குப் பின் ஆழ்வார் (குறிப்பாய் நம்மாழ்வார்), நாதமுனி, யமுனாச்சாரியார், இராமனுசர், பின் குரு பரம்பரை யென ஒரேயடியாய்த் தாவிவிடுவார். வரலாற்றில் ஒரு பேரிடைவெளி நமக்குச் சொல்லப்படாமலே உள்ளது. இன்று நாம்காணும் திருவிண்ணவம் எப்படியெழுந்தது? வடக்கிருந்த பாகவதமே இதனூற்றா? ஆழ்ந்துபார்த்தால் எனக்கப்படித் தோன்றவில்லை. விண்ணவக் குருக்களின் கொடிவழியை தமிழ் விண்ணவர் கொண்டாடுவது போல் வட விண்ணவர் கொண்டாடுவாரோ? எனக்கப்படித் தெரியவில்லை. இத்தனை ஏன்? நம் ஆழ்வார்களை (அதுபோல் நாயன்மாரை) அவர் கொன்டாடுவாரோ?

8400000 கல்பங்களில் ஓர் ஆன்மாவிற்கு நடப்பதாய்ப் பலராலுஞ் சொல்லப் படும் பிறவிச்சுழற்சியை (உங்களுக்குத் தெரியுமா? திருமூலரும் இதையே சொல்வார். இந்திய மெய்யியற் சிந்தனையாளரை ’8400000’ என்ற எண் பெரிதும் மயக்கியது.) அற்றுவிக்க வழிசொல்லும் நெறியே அற்றுவிகமாகும். தமிழில் அற்றுவிக>அத்துவிக என்று பலுக்கப்பட்டு, பாகதத்தில் அஜ்ஜுவிக> அஜ்ஜீவிக>ஆஜீவிக என்றாகி மீளத்தமிழில் ஆசீவிகம்>ஆசீவகமாகி அது நிலைத்தது. அற்றுவிகத்தை ஒருபக்கமுணர்த்தும் சிலம்புகூட ஆசீவிகம் என்றே பெயரைப் பதிவுசெய்யும். (நானும் ஒரு காலத்தில் ஆசீவிகம் என்ற சொல்லைத் தமிழென எண்ணினேன். அண்மையிற்றான் ஆழ்ந்து ஓர்ந்தபின் வரலாறு எனக்குப் புரிந்தது) ஆயினும் மதுரையருகுள்ள ஆனைமலைக் கல்வெட்டு அற்றுவி என்றே இவரை அடையாளங் காட்டும். ஆசீவகம்பேசும் தமிழாய்வர் ஆசீவகத்தை ஆசு+ ஈவு+ அகம் என்று செயற்கையாய்ப் பிரித்து, உலகவழக்குச் சொற்பிறப்பு (folk etymology) சொல்வதை நான் இன்றேற்கத் தயங்குவேன். அற்றுவிகச் செய்திகளைக் கட்டாயம் வேறுதொடரில் விரியச் சொல்ல எண்ணியுள்ளேன்.

அற்றுவிகக் கோப்பெருங்கிள்ளிச் சோழன் சிலப்பதிகாரத்திற்கும் முந்தியவனாகவே எனக்குத் தோற்றுகிறான். தமிழக அற்றுவிக நெறியாளர் காலக் கட்டாயத்தால் சமய நெருக்கடியால் விண்ணவம், சிவம், புத்தம், செயினமாகிய மற்ற நெறிகளுக்குள் சிறிதுசிறிதாய்க் கரைந்தார். பொ.உ. 600 களுக்கு அப்புறம் அவரைக் காண்பது மிக அரிது. சமயமாற்றப் புரட்சியில் முற்றிலும் மறைந்துபோனவரில் அற்ருவிகர் ஒருவர். ஆயினும் அவரின் ஊழ்/விதி”க் கருத்து தமிழ்ச்சிந்தனையில் இன்றுவரை நிலைப்பதைப் பார்த்தால், கிழக்குப் பார்த்த சிவன்கோயில்களில் வடமேற்கு மூலையில் திருமகள் 2 பக்கம் யானைகள் நீரைத்தூவ, நடுவே தாமரையில் வீற்றிருந்து, திருவுருவங் கொள்வதையும், அதே வடிவில் பெரும்பாலான தமிழர்வீட்டு நுழைகதவு நிலைகளிலும் அணைவதையும் பார்த்தால், நீறு பூத்த நெருப்பாய் அற்றுவிகம் தமிழருள் கரந்துநிற்பது புரியும். பெரும்பாலான தமிழரின் சிற்சில வாழ்வு மரபுகளும் (குறிப்பாய் பறை, உடுக்கு, ஆட்டம், மாலை, பூவுதிர்ப்பு என்றுபடி வடதமிழகத்தில் இறப்பைக் கொண்டாடுவதும்) அற்றுவிக எச்சத்தை இன்றும் நமக்குக் காட்டிக்கொடுக்கும்.

மேற்சொன்ன அந்தை / ஆந்தைகளுக்கும் வெவ்வேறு வகைகளில் பெருமைத் தொடர்புகள் இருக்கலாம். இன்று, சிவ, விண்ணவக் கோயில்களிற் பார்ப்பனக் குருக்களைப் பலருஞ் சாமி என்கிறாரே? சிவ, விண்ணவக் குருக்கள் மெய்யாகவே இறைவரா? இல்லையே? ”இறைவன்” என்றசொல், முதற் கொண்டு, தலைவனுக்கும் கடவுளுக்கும் எப்போதுமே தமிழிற் சொற்குழப்பம் உண்டு. பல ஆய்வாளரும் இதை உணர்வதில்லை. கடவுளென்று குறளில் வந்துவிட்டால் அது எல்லாம்வல்ல இறைவனைக் குறிப்பதாய்க் கொள்வாரே நம்மில் மிகுதி. ”ஒருவேளை அறிவுத்தந்தையான தமிழ் ஆந்தையே சுற்றி வளைத்துப் பாலியில் அவலோகிதனானதோ?” என்று ஏன் எடுத்துக்கொளல் ஆகாது? ”போதிசத்வ” என்பது யாரோவொரு அறிவார்ந்தவனைக் குறித்தால், ”தெற்கு அவலோகிதனெ”ன்ற பெயர்க்குறிப்பும், தமிழ்முறைப்படி ஏதோவொரு ”ஆந்தையாரைக்” குறிக்கலாமே? அப்படியெனில் அவர் எந்த ஆந்தையார்? பார்த்தீர்களா? கேள்வி சற்றுச் சுவையாரம் (= சுவாரசியம்) ஆகிப் போனது. 

[மேற்சொன்ன தமிழ்-பாலி/பாகதம்-சங்கதப் பெருவட்டம் என்றபார்வை எப்படியெலாம் நம் சிந்தனையை மாற்றுகிறதென்று பார்த்தீர்களா? பாலி/பாகதத்திற்கும் தமிழுக்குமிடையே இதுபோல் பல்வேறு ஊடாட்டங்கள் சங்க காலத்தில் இருந்தன. ”வடமொழி” என்றசொல் அன்று சங்கதம் மட்டுமின்றிப் பாலி/பாகதம்/சங்கதம் என்ற பொதுக்கட்டைக் குறித்தது. வேதமறுப்புச் சமயங்கள் பலகாலம் நம்மிடை புழங்கியதால் (இன்று அவை குறைந்து வேத நெறி விரவும் சிவ, விண்ணவ நெறிகளைத் தமிழர் கைக்கொள்ளினும்). என்னைக் கேட்பின் சங்கதப் பிடிக்குள் சிலர் வலியச் சிக்குவதும், அதற்கு எதிராய் வேறு பலர் மல்லுக்கட்டுவதுமான வடம்பிடிப்பை விட்டுத் தமிழர் ஒரேயடியாய் வெளிவரலாம். சங்கதத்தைச் ”சக்கதோ” என்றே பாலி பாவிக்கும். நம்மிற் பலரும் ”ஸம்ஸ்க்ருதத்தையே” பெருமையாய்க் கொள்கிறார். பொதுவழக்கில் ஏனிப்படி தாழ்வு மனப்பாங்கில் நாம் உழள்கிறோம்? தமிழ் ஞானசம்பந்தனின் சொற்படி அம்மொழியைச் சங்கதமென்று உரக்கச் சொன்னாற் குறைந்தா போவோம்? ஓர்ந்து பார்த்து இச் ”சம்ஸ்க்ருதத்தைத்” தூக்கியெறியுங்களேன்? அதே போல் ப்ராகிருதத்தைப் பழைய வழக்கத்தின்படி, பாகதமெனில் தவறா? Too long our agenda has been dictated by others. We don't act; but always seem to react, that too belatedly.] 

சோழனென்பது இனக்குழுப்பெயர்; சென்னி, செம்பியன் என்பன குடிப் பெயர்கள்; கிள்ளி, வளவன் என்பன இயற்பெயர் முடிபுகள். இதேபோல பாண்டியன் - இனக்குழுப்பெயர்; மாறன், செழியன் என்பன குடிப்பெயர்கள்; வேல், வழுதி - இயற்பெயர் முடிபுகள். (ஐராவதம் மகாதேவன் சிந்துநாகரிக வணிகரை வைத்துப் பாண்டியர்பெயருக்குத் தோற்றஞ்சொல்வது எனக்குச் சரியாய்த் தோற்றவில்லை. ”சிந்து வெளி முந்தையது. அங்கிருந்தே தமிழர் தெற்குவந்தார்” என்பதைக் கேள்விகேட்பேன். இப்போதெல்லாம் ஒரு மோகத்தில் தமிழர் சிந்துவெளியிலிருந்து தெற்கு வந்தார் என்ற பட்டவப் பரப்புரைக்குத் (fashionable propaganda) தமிழர் பலரும் ஆட்படுகிறார். அது வேறு நீண்ட iகதை. சிந்துசமவெளியில் இருந்து ஊர்ர்ப்பெயர்களை நாம் தமிழகத்தில் இட்டோமாம். தமிழர் சிந்து சமவெளியிலிருந்து பெயர்ந்தவராம். அப்படி ஒரு கதை அண்மையில் பெரிதும் பேசப்படுகிறது. அதற்கும் என் மறுப்புண்டு. ஆனால் இங்கு அதைப் பேசமுடியாது.]

சேரருக்கும் வானவரம்பன், இமையவரம்பன், ஆதன், இரும்பொறை, கோதை ஆகிய பெயர்களில் ஓர் ஒழுங்குமுறை இருக்கக்கூடும். இன்னும் எனக்குத் தெளிவேற்படவில்லை. இப்பெயர்கள் எல்லா அரசருக்கும் பொருந்தும்படி சங்கப்பாக்களுமில்லை. சிலவற்றில் இனக்குழுப்பெயர் மட்டுமேயும், சிலவற்றில் குடிப்பெயரும் இனக்குழுப்பெயரும், சிலவற்றில் இயற்பெயரும், இனக்குழுப்பெயரும் என அவற்றிற் பல்வேறு தோற்றங்களுண்டு. இதுபோக உருவப் பஃறேர், குளமுற்றத்துத் துஞ்சிய, ஆரியப்படை கடந்த, தலையாலங் கானத்துச் செருவென்ற, கடல்பிறக்கோட்டிய, பெருஞ்சோறு, குட்டுவன், இளஞ்சேள், செம், நெடு போன்ற விதப்புக் குறிப்புகளும் பெயர்களில் முன்னொட்டாய் உண்டு. மொத்தத்தில் தமிழரசர் பெயராய்வு பென்னம் பெரிய புலனம். யாரேனும் ஈடுபட்டால் நல்லது. (ஒருவரும் அப்படி ஈடுபட்டது போல் தெரியவில்லை.)

உண்மையிற்சொன்னால் எத்தனை தமிழரசர் இயற்பெயர் நமக்குத்தெரிந்தது? விரல்விட்டெண்ணலாம். பாண்டியரைமட்டும் ஒருகுறிப்பால் காட்டுவேன். வெற்றிவேற்செழியன் என்றபெயர் நமக்கு நன்றாகத் தெரியும். இதில் வேல் என்பது இயற்பெயர் முடிபு. ஆழ்ந்துபார்த்தால், கொற்கை, திருச்செந்தூர்ப் பக்கத்துத் தெற்கத்தி மாறருக்கும், செழியருக்கும் வழுதி, பாண்டியர் என்று இனக்குழுப்பெயர்கள் (இவற்றின் விளக்கம் இன்னொரு சுவையாரம்.) போலவே ஒரு இயற்பெயராய் வேல் முடிவதில் வியப்பேயில்லை :-). செழியன், மாறன் என்ற குடிப்பெயர்களை பாண்டியக் கொடிவழியார் மாறி மாறி வைத்துக்கொள்வார். (அப்பன் செழியன் எனில், மகன் மாறனாவான். செழி>செடி>சடை என்றும் மாறும் (பிற்காலச் சடையரும் முற்காலச் செழியரும் ஒன்றே), கொற்கைப் பக்கம் போய்ப்பேருங்கள் அதன் கோரைத் தன்மையை இன்றுங் காணலாம். பாண்டியர், சோழர், சேரலர் பெயர் விளக்கத்தை “சிலம்பின் காலம்” என்ற என்நூலிற் சொன்னேன். பலரும் அதைக் கண்டுகொள்ளவே மாட்டேம் என்கிறார். ஒருமுறை என் நூலை வாங்கிப் படியுங்களேன் ?!! (என் நூலுக்கான மாறுகடை வேலையை நான் பார்க்கவேண்டாமா?)

பெரும்பற்றப்புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் புராணத்தில் ஞானோபதேசம் செய்த திருவிளையாடல் 2 ஆம் பாடலின்படி மாணிக்க வாசகர் ”தானைவேல் வாகைமாறனிடம்” அமைச்சராய் இருந்தாராம். 18 ஆம் நூற்றாண்டுத் திருவிளையாடற் புராணம் காலக் குழறுபடியில் தானைவேல் மாறனின் பெயரை மாற்றி அரிமர்த்தனன் (= சிங்கத்தைக் கொன்றவன், பல்லவரை அழித்தவன்) என்று சொல்லும். சாலச் சிறந்த ஆலவாயுடையார் புராணத்தைத் துணைக்கொள்ளாது வரலாற்று வழுவுடைய, புனைவுமிகுந்த, திருவிளையாடற் புராணத்தைத் தமிழறிஞர் பாராயணஞ் செய்ததே 3/4 ஆம் நூற்றாண்டு மாணிக்கவாசகரை 9 ஆம் நூற்றாண்டிற்கு இழுத்துப்போன காலப் பிறழ்ச்சிக்குக் காரணமாகும். யாரைக் கேட்டாலும் அரிமர்த்தனன் என்பார். போதாக்குறைக்குத் ”திருவிளையாடல்” படம் வேறு, பலபேர் கண்களை மூடிமறைக்கிறது. அருள்கூர்ந்து திருவிளையாடற் புராணத்தைப் படிப்பதை விடத் திருவாலவாயுடையார் புராணம் படியுங்கள். உங்களுக்கு பல உண்மைகள் சரியாய் விளங்கும்.

இத்தனையும் பேசியது அவலோகிதனின் பின்னால் ஒளிந்துநிற்கும் ஆந்தையார் பற்றிச் சொல்லவே.

அன்புடன்,
இராம.கி.

Friday, October 26, 2018

தூங்கெயில் - 1

உலர்ந்த, புத்தசமய, நீதிநூல் போன்ற ’மணிமேகலைக்’ காப்பியம், மெய்யாகவே சிலப்பதிகாரத்தோடு எழுந்த இரட்டைக் காப்பியமா? அன்றிச் சிலம்போடு அது வலிந்து பிணைக்கப் பட்டதா?- என்பது இலக்கிய வரலாற்றில் ஓர் ஆழமான கேள்வி. ”பொன்னியின் செல்வனைக்” கதைக்களனாய்க் கொண்டு எழுத்தாளர் விக்கிரமன் எழுதிய புதினங்களை எல்லாம் கல்கியின் காலத்தோடு சேர்த்துச்சொல்ல முடியுமோ? புத்தர், அசோகர், தேவனாம்பிய தீசன் போன்றோர் கதைகளைத் தொடக்கத்திற் சொல்லும் மகாவம்சம் பொ.உ. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதை வலிந்திழுத்து பொ.உ.மு. 300க்குக் கொண்டுபோக முடியுமோ? இதுபோன்ற காலப்பிறழ்ச்சி கொண்ட புரிதல் பல இடங்களில் நடந்துள்ளது. சிலம்பு-மணிமேகலைத் தொடர்பிலும் இது நடக்கிறது.

பொதுவாகத் தாஞ் சார்ந்த சிவ, விண்ணவ, வேதநெறிகளின் வழி பொருள்தர முற்படும் உரைகாரர் சொற்களைக் கிடுக்கத்தோடு (criticism) உரசிப் படித்தால் சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களிடையே குறிப்பிடத்தக்க காலவெளி தென்படுவதையும். சிலம்பில் வரலாறு கூடிப் புனைவு குறைவதையும், மேகலையிற் புனைவு மிகுந்து வரலாறு வறள்வதையுங் காணலாம். இரட்டை என்றே சொல்லிச் சொல்லி (இக்கற்பிதத்தை இவ்வாண்டில் நூறாண்டு நிறையும், மதிப்பிற்குரிய பேரா. வ.சுப.மாணிக்கத்தின் உரைவழி தான்  முதன் முதலில் அறிந்தேன். அக்காலத்திய பல தமிழறிஞர் புரிதல்களும் அப்படியே இருந்தன. அவர்களைப் படித்தநாம் கேள்வி கேட்பதால், ”தாத்தனைப் பேரன் மதிக்கவில்லை” என எண்ணிவிடாதீர். உறுதியாக வ.சுப. போன்ற முந்தைத் தமிழறிஞர் நம்மைப் புரிந்துகொள்வார்.) மேகலையின் புனைவு சிலம்பின் வரலாற்றைத் தடுமாற வைக்கிறது. ’சிலம்பின்’ காலத்தை பொ.உ.மு.75-இற்கு அருகே காரணத்தோடு கொண்டுசெல்லும் நான் அம்முந்தைக் காலத்திற்கு மேகலையைக் கொண்டுபோகத் தயங்குவேன். மாறாய் இரட்டை எனுங் கருதுகோளையே கேள்விகேட்பேன். அப்படியெனில், ”மேகலை”யின் சரியான காலந்தான் என்ன?” என்ற குறுகுறுப்பு உங்களுக்குக் கொஞ்சமுங் குறைய வில்லை தானே?

’சிலம்பு’ புகாரிலெழுந்து மதுரை போய் வஞ்சியில் முடிகையில், மேகலையோ புகார்-மதுரை-வஞ்சி-காஞ்சியென நாலாமிடத்தில் முடியும். அப்படிமுடிவதில் ஒரு விதப்புக்குறியீடு உள்ளதோ? - என்றுந் தெரியவில்லை. தொண்டைமான் இளந்திரையனுக்கு முன், காஞ்சி என்பது சோழநாட்டின் ஒரு சிறு நகர். சோழநாட்டின் வடபகுதியைப் பிரித்து, தொண்டைநாடாக்கி அதன் தலைநகராய் ஆனபின்னரே காஞ்சிக்குப் பெயர் வந்தது. மேலும் சங்க கால முடிவில், மூவேந்தர் வலுவிழந்து களப்பாளர் நுழைந்த பின்பே, காஞ்சியில் புத்தநெறி கூடி அது மாநகராய் மாறிச் சிறந்தது. சிவ, புத்த, விண்ணவ, செயினக் காஞ்சிகளில் முன்னிரண்டும் இணைந்து பெத்த காஞ்சியானது (வடுகில் பெத்த=பெரிய; வடதமிழ் மாவட்டத் தமிழிலும் இச்சொல் பயன்பாடு உண்டு); பின்னிரண்டும் இணைந்து சின்னக் காஞ்சியானது (செயினம் சின்னமானது,) பின் புத்தமுஞ் செயினமும் இந்நகரில் அடையாளமற்று அழிந்தே போயின. பத்தி இயக்கத்தின் தீவிரத்தைத் தேவாரம் படித்தால் புரிந்துகொள்ளமுடியும். அதுவொரு coversion movement. பொதுமக்களில் பலரும் கூட்டங்கூட்டமாய் புத்த், செயின நெறிகளிலிருந்து சிவ, விண்ணவ நெறிகளுக்கு மாறினர். வேந்தனான (மகேந்திர பல்லவனே மாறியபின் மக்கள் மாறத்தானே வேண்டும்? ”அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி” என்பது ஒரு சொலவடை. (மலாக்கா அரசன் பரமேசுரா இசுலாத்திற்கு மாறியபின் மலாக்கா, மலேசியா மக்களிற் பலரும் சிவத்திலிருந்து, புத்தத்திலிருந்து இசுலாம் மாறினர்.) ஆயினும் காஞ்சியிலிருந்து திருவண்ணாமலை வரை இன்றும் வயல்வெளிகளில் செயினமும், புத்தமும் சிலைத்துண்டுகளாய்ச் சிதறிக்கிடப்பது கண்ணிருப்பவருக்குக் கட்டாயம் புலப்படும்.

ஒருவேளை பேராழிப் பேரலை புகாரை விழுங்கியபின், ’மணிமேகலை’ எழுந்ததோ? புகாரைக் கடல்கொண்ட செய்தி ’மணிமேகலை’ தவிர வேறு எதிலும் கிடையாது. அதேபொழுது பொ.உ.385 க்கருகில் இந்தோனேசியாவில் ஆழிப்பேரலை எழுந்ததற்குச் சான்றுண்டு. பொ.உ.2004 இல் சமுத்திரத் தீவிற்கருகில் ஆழிப்பேரலை உருவாகையில் பார்த்தோமே? இந்தோனேசிய ஆழிப்பேரலைகள் பெரும்பாலும் தமிழகத்தைப் பாதித்துள்ளன. தமிழகம் தில்லியோடு தொடர்புற்றது ஓர் அரசியற் பிணைப்பு. சமுத்திரத் (சுமத்திராத்) தீவோடு தொடர்புற்றது புவியியற் பிணைப்பு. அப்படியெனில் பொ.உ.200-450 இற்றான் ’மணிமேகலை’ ஒருவேளை எழுந்ததோ?- என்று கூடச் சிந்தனை யோடும். முன்சொன்னது போல் ”இரட்டைக் காப்பியப் பிணைப்பு” ஒருவகைக் காலப்பிறழ்ச்சிக்கு வித்திட்டுச் சிலம்பின் காலத்தைக் குறைக்கவே உதவுகிறது. தமிழறிஞர்பலரும் இதைக் கவனிக்கத் தவறுகிறார். எவரை எடுத்தாலும், இரண்டையும் ஒன்றாகவே பார்ப்பார். மாறாக இரண்டையும் ஒருமுறை பிரித்துத்தான் பாருங்களேன்?

மணிமேகலையை நானிங்கே எடுக்கக் காரணம் அதில் தொடக்கத்தில் வரும் தூங்கெயில் பற்றிய குறிப்புத்தான். ”உலகிற் பலரும் மாறாது புகழ்ந்து ஓங்குயர் விழுச்சீர் கொண்ட புகார் மூதூரின் பண்பு மேலும் மேம்படுவதாய், ஓங்குயர் பொதிய மலையின் அருந்தவன் உரைத்தபடி, தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் வானவர் அரசனை வணங்கி, 28நாள் இந்திர விழாவின் போது புகாரில் தங்கி அருளக்” கேட்பதாய் மேகலை நூலின் விழாவறை காதை அலங்காரமாய்த் தொடங்கும். இதில்வரும் பொதியமலை அருந்தவனைச் சங்கதத்தாக்கில், உரைகாரர் பலரும் அகத்தியன் என்பார். பலரும் இதைக் கேள்வி கேட்டதேயில்லை. ”அது சரியா? தேரவாதத்தில் இல்லெனினும், மகாயான, வயிரயானப் (வஜ்ரயானப்) பாதைகளிற் புத்தர் பாராட்டும் அவலோகிதனாய் அவனேன் இருக்கலாகாது?”- என்று நான் கேட்பேன். இதன் தொடர்பாய், 11/12 ஆம் நூற்றாண்டு வீரராசேந்திர சோழனின் காலத்தைச்சேர்ந்த புத்தமித்திரர் வீரசோழியம் 2 ஆம் பாயிரத்தில் வரும் .

ஆயுங் குணத்து அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும் புவனிக்கு இயம்பிய தண்டமிழ் ஈங்குரைக்க
நீயும் உளையோ எனில், கருடன் சென்ற நீள்விசும்பில்
ஈயும் பறக்கும்! இதற்கு என்கொலோ சொல்லும்? ஏந்திழையே!

என்ற பாட்டைக் கவனியுங்கள். இதில், ”அவலோகிதனிடங் கேட்டு தண்டமிழ் ஓதிய அகத்தியனுக்குங் கீழ் புத்தமித்திரர் தன்னை இறுத்திக் கொள்வதைப்” பார்த்தால், என் கருத்துப் புதிதல்ல. பலரிடம் இன்றிருக்கும் மிதமிஞ்சிய அகத்தியப் பெருமிதங்கள் சங்கதம்-->தமிழென்ற ஒற்றைவழி உறவுபார்க்கும் அகத்தியதாசரின் வழிப்பட்டுத் தமிழில் வழங்குகின்றன. (வடக்கிருந்து வந்த அகத்தியனே தமிழை நமக்கீந்தானாம். அகத்தியந்தான் முதலிலக்கணமாம். தொல்காப்பியர் இவர் மாணவராம். ”காவ்யக்குடி சேர்ந்த த்ரணதூமாக்னி” என்பது தொல்காப்பியனின் பெயராம். இவை போன்ற கட்டுக்கதைகளை அருள்கூர்ந்து நம்புங்கள் :-)))) இதற்கு மாறாய் தமிழ் - பாலி/பாகதம் - சங்கதம் என்ற பெருவட்டங் காண்பது தமிழ்/ வரலாற்றாய்வில் மேலான நற்பயனைத் தரலாம். எல்லாமே சங்கதமென்பது ஓர் எக்கெனில் (extreme), சங்கத் தமிழோடு எல்லாமே முடிந்ததென்பது இன்னோர் எக்கு. (தனித்தமிழன்பர் சங்கத் தமிழுக்கும் அப்புறம் தமிழிருந்ததை ஏனோ தவிர்க்கிறார்.) இரண்டையுந் தவிர்த்துத் துலை நோக்கோடும் (balanced perspective), நெகிழ்வோடும், மொழி வளர்ச்சி, வரலாற்றுப் போக்குகளைக் காண்பதே நல்லது. அக்காலத்தில் தமிழர் வடக்கே போகாதும், வடவர் தெற்கே வாராதும் இருந்ததே இல்லை. நாமெல்லோரும் இந்தியத் துணைக்கண்டத்தில் தானே வதிகிறோம்? இந்த இடையாற்றின் நடுவேதான் தமிழர்க்குத் தனியடையாளம் ஏற்பட்டது.

அன்புடன்,
இராம.கி.

Thursday, October 25, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 18

அடுத்து புறம் 218 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணையும் முந்தையதைப் போற் பொதுவியல் தான். துறையும் கையறுநிலை தான். இந்தப் பாடலைக் கண்ணகனார் எனும் புலவர் பாடியுள்ளார். இவர் நற்றிணையில் 19 ஆம் பாடலையும் பாடியுள்ளார். கோப்பெருஞ் சோழனின் வடக்கிருத்தலின் ஓரிமையும் (uniqueness), அதையொட்டிப் பொத்தியாரும், பிசிராந்தையாரும், மற்றோரும் ”நல்லாரைக் காண்பதுவும் நன்றே” என்றபடி, அடுத்தடுத்து விதப்பாய் ஓரிடத்திற் கூடியதையும் வியந்து, ”சாலுதல்” வினைச்சொல்லின் பொருளை வைத்து ”இனம் இனத்தோடு சேரும்” என்ற கருத்தில் இப்பாட்டு அமைகிறது. ”இப்படி வியக்கின்ற பாட்டைக் கையறுநிலைத் துறையாக வகைப்படுத்தியது ஏன்?” என்பது தான் எனக்குப் புரியவில்லை. பாட்டைப் படியுங்கள்.

பொன்னுந் துகிரு முத்து மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்
தருவிலை நன்கல மமைக்குங் காலை
ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர்
சான்றோர் பால ராப
சாலார் சாலார் பாலரா குபவே

                        - புறம் 218

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

பொன்னும் துகிரும் முத்தும்
மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும்,
தொடை புணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு
என்றும்
சான்றோர் சான்றோர் பாலர் ஆ(கு)ப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம். பொன்னும் துகிரும் முத்தும் = தங்கமும், பவளமும், முத்தும்; இம்மூன்றோடு தென்கொங்கில் மெருகேற்றிப் பளிச்சிட வைத்து மாலையாக்கப்பட்ட sapphire, beryl, agate, carnelian, amethyst, lapis lazulli, jasper, garnet, soapstone and quartz போன்ற மணிகளும் (இவையெல்லாமே கொங்கிற் கிடைத்தவையல்ல; சில வேற்றிடங்களிலிருந்தும், இன்னும் வேறு நாடுகளிலிருந்தும் இறக்குமதி யானவை), ஈழத்திற் கிடைத்த மரகதமும் (emarald) பரிமாற்றுச் சரக்குகள் (exchange goods) ஆயின. தவிர மிளகு போன்றவையும் ஏற்றுமதியில் உரோமப் பேரரசு போன்றவற்றிலிருந்து நிறைய பரிமாற்றச் சரக்குகளைக் கொண்டு வந்து குமித்தன. இவை இங்கு கிடைத்ததே/பட்டை தீட்டப்பெற்றதே தமிழகம் நாவலந்தீவில் மகதத்திற்கு எதிராய்ச் சூளுரைத்ததற்குக் காரணமாகும்.

வரலாற்றாசிரியர் பலரும் பொருளியல் வழியில் இப்பரிமாற்றுச் சரக்குகள் இந்தியவரலாற்றைப் பலகாலம் நிருணயித்ததை இன்னும் உணரவே யில்லை. தமிழகத்தை வெறும் தொங்குசதையாக ஒதுக்கிப் பார்த்தவருக்கும், வடபுலம் வழியாகவே இந்தியாவை உணர முற்படுவோருக்கும் இது விளங்கவே விளங்காது. வயிரம் இற்றைத் தென்னாப்பிரிக்காவைத் தூக்கி நிறுத்துவதையும், தங்கமும், மற்ற மாழை மண்ணூறல்களும் (minerals) இற்றை ஆத்திரேலியாவை உயர்த்திவைப்பதையும் புரிந்தவரே, பரிமாற்றச் சரக்குகள் அற்றைத் தமிழகத்தை பொருளியல் உயர்த்திப் பிடித்ததைப் புரிந்து கொள்ள முடியும். தமிழிலக்கியத்தை இப்படிப்படித்தவர் நம்மில் மிக அரிது. தமிழாய்வும் இன்று குறைந்தேயிருக்கிறது. (அந்தச் சோகம்பற்றிப் பேசினால் நான் பொங்கிவிடுவேன். எனவே வேண்டாம்.)

பொன்னென்பது (இற்றைக் கருநாடகக் குவலாளபுரமெனும் கோலாருக்கு அருகில்) வடகொங்கிற் கிடைத்தது. கொங்குநாடென்பது, காலத்திற்குத்தக்க மூவேந்தரிடையே தொடர்ந்து பந்தாடப்பட்டது. (முடிவில் வடகொங்கு, கன்னடம்பேசும் நிலமாய் மாறிப்போனது. தென்கொங்கு மட்டுமே தமிழ்பேசும் நிலமாய்த் தங்கியது.) சங்ககாலக் கடைசியில் (கிட்டத்தட்ட இரும்பொறை அரசர் கொங்குக் கருவூரில் ஆளத்தொடங்கிய பின்) பெரும்பாலும் சேரர் பக்கமே வாய்த்தது. சேரராட்சி, பொருளியலில் உயர்ந்து நின்றதற்கு பொன்னும் ஒரு காரணமாகும். பொன்னென்பது இப்பாட்டிற் சோழனை உருவகமாய்க் குறிக்கிறது. பொன்னின் மேற்றான் துகிரும், முத்தும் மணிகளும் பதிக்கப்படுகின்றன. இங்கே சோழனின் மேற்றான் பொத்தியாரும் (துகிர்), பிசிராந்தையாரும் (முத்து), மற்ற மணிகளும் (கூடியுள்ள மற்ற சான்றோர்) அன்பாற்பதிகிறார். இம் மொத்த உருவகத்திற்கும் ஒரு பொருளுண்டு.

துகிரெனும் பவளம் பெரும்பாலும் சோழநாட்டுக் கிழக்குக் கடற்கரையிலே கிடைத்தது. பொன்னும், முத்தும் பொருளாதாரத்தில் நிலைக்கையில், துகிரின் கிடைப்பு ஒப்பீட்டளவிற் குறையத்தொடங்கியதும் சங்க காலத்திற் சிறிது சிறிதாய்ச் சோழராட்சி குன்றியதற்குக் காரணமாகும். இங்கே துகிரென்பது உருவகத்தாற் சோழநாட்டைச் சேர்ந்த பொத்தியாரைக் குறிக்கிறது.)

முத்து, மிகப்பெரிய அளவு தென்பாண்டிக் கிழக்குக் கடற்கரையிலே கிடைத்தது. பாண்டியரே முத்து வணிகத்தை நிலைநாட்டியவர் ஆனார். சேர நாட்டுச் சுள்ளியம் பெரியாறு கடலிற் சேரும் இடத்திற் கிடைத்த சூரணி முத்து வணிகத்தின் சிறுபகுதியே வகித்தது. ஆனால் கவாட முத்தும் (கவாடபுரம் என்பதே முத்தால் ஏற்பட்ட பெயர்தான்.), கொற்கை முத்தும் முத்து வணிகத்தின் 90% ஆளுமையை ஒருங்கே கொண்டிருந்தன. இங்கே முத்து என்பது பாண்டிநாட்டைச் சேர்ந்த பிசிராந்தையாரை உருவகத்தாற் குறிக்கிறது.

மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் = நிலைத்த பெருமலை தந்த, விரும்பத்தக்க, மணியும். இது கொடுமணத்தைச் சுற்றி மலைப் பகுதிகளிற் தென்கொங்கிற் கிடைத்தது. இங்கே மணிகள் என்பன வடக்கிருந்த சோழனைப் பார்க்க வெவ்வேறு இடங்களிலிருந்து கூடிவந்த சான்றோரை உருவகத்தாற் குறிக்கின்றன. 

இடைபடச் சேய ஆயினும் = (ஒன்றிற்கொன்று) இடைப்படத் தொலைவு ஆயினும். பொன்னும், பவளமும், முத்தும், மணியும் அருகருகே கிடைக்க வில்லை. ஒவ்வொன்றிற்கும் அடுத்ததிற்கும் இடையிருந்த தொலைவு கூடத்தான். எங்கிருந்தோ வந்த இந்தச் செய்பொருள்கள் அணிகலன் செய்வதற்காய் ஓரிடத்தில் ஒன்றுசேர்ந்தன. தொடுத்தது தொடையானது. “தொடை புணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்குங் காலை” = (மாலையாகத்) தொடுத்துச் சேர்த்து அரியவிலைக்குப் போகும் அணிகலனாக அமைக்கும் பொழுதில். ஒருவழித் தோன்றியாங்கு = ஒரேபாதையிற் தோன்றினாற் போல. என்றும் = என்றைக்கும். சான்றோர் சான்றோர் பாலர் ஆ(கு)ப = சான்றோர் சான்றோர் பக்கமே சேருவர். (சாலுதல் என்ற வினைச்சொல் நிறைதற் பொருளிற் சான்றோர் என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். சாலார் சாலார் பாலர் ஆகுபவே = சாலாதோர் சாலாதோர் பக்கமே சேருவர். (சாலுதலின் எதிர்மறையாளர் சாலாதவர்.)

மொத்தப் பொருள்:

தங்கமும், பவளமும், முத்தும்,
நிலைத்த பெருமலை தந்த, விரும்பத்தக்க, மணியும்
(ஒன்றிற்கொன்று) இடைப்படத் தொலைவாயினும்.
(மாலையாகத்) தொடுத்துச் சேர்த்து
அரியவிலைக்குப் போகும் அணிகலனாக அமைக்கும் பொழுதில் 
ஒரேபாதையிற் தோன்றினாற் போல
என்றைக்கும் 
சான்றோர் சான்றோர் பக்கமே சேருவர்;
சாலாதோர் சாலாதோர் பக்கமே சேருவர்.

மொத்தத்தில் ”இனம் இனத்தோடு சேரும்” என்று புலவர் கண்ணகனார் இங்கு சொல்கிறார்.

அன்புடன்,
இராம.கி. 

Wednesday, October 24, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 17

அடுத்ததாய்ப் புறம் 217 ஐப் பார்க்கலாம். இதன் திணை பொதுவியல்; துறை கையறு நிலை. சோழன் வடக்கிருந்தது தெரியாமலோ, அன்றி அது தெரிந்து தான் உணர்ச்சி வசப்பட்டோ, பிசிராந்தையார் உறையூருக்கு வந்திருக்க முடியாது; சிந்தனைத் தெளிவிற்றான் பாண்டிநாட்டுக்காரரான அவர் வந்திருக்கிறார். அப்படியென்றால், கோப்பெருஞ் சோழன் இறந்ததை பாண்டி நாட்டிலேயே பிசிராந்தையார் அறிந்திருக்கவேண்டும். தெரிந்தேதான் அவர் சோழன் நடுகல்லைத் தேடிவருகிறார். வந்தவிடத்தில் பிசிராந்தையாரும் வடக்கிருந்தாரென்று கிட்டத்தட்ட எல்லா உரையாசிரியருமே சொல்வது மிகைக் கூற்றாகவும் அற்றுவிகத்திற்கு மாறுபட்டதாகவும் தோற்றுகிறது. பார்க்க வருபவரெல்லாம் ஆற்றாமையில் சோழனோடு சேர்ந்து வடக்கு இருப்பதை அற்றுவிகம் என்ற சமயநெறி ஏற்றுக் கொள்ளாது. “வடக்கு இருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது” என்றே பாட்டின் கீழுள்ள கொளுக்குறிப்புச் சொல்கிறது. இற்றைக்கால உரை யாசிரியர் பிசிராந்தையாரையும், ஏன் பொத்தியாரையுங் கூட, வடக்கு இருந்ததாய் எழுதிவிட்டார். ஏன் இந்த முடிவிற்கு வந்தாரென்று புரிய வில்லை. இதைப்பற்றி அடுத்தபாட்டிலும் ஆழ்ந்து பேசுவோம். இப்போது இப்பாட்டைப் படியுங்கள்..

நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே
எனைப்பெருஞ் சிறப்பினோ டீங்கிது துணிதல்
அதனினு மருட்கை யுடைத்தே பிறனாட்டுத்
தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி
இசைமர பாக நட்புக் கந்தாக
இனையதோர் காலை யீங்கு வருதல்
வருவ னென்ற கோனது பெருமையும்
அதுபழு தின்றி வந்தவ னறிவும்.
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே
அதனால்,
தன்கோ லியங்காத தேயத் துறையும்
சான்றோ னெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை யிழந்தவிவ் வுலகம்
என்னா வதுகொ லளியது தானே

                            -புறம் 217

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

எனைப்பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே!
பிறன் நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன்
இசை மரபாக, நட்புக் கந்தாக, போற்றி ஈங்கு வருதல்
அதனினும் மருட்கை உடைத்தே!
இனையதோர் காலை
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்.
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே
அதனால்,
தன் கோல் இயங்காத தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சு உறப்பெற்ற
தொன்று இசை அன்னோனை இழந்த இவ் உலகம்
என் ஆவது கொல்? அளியது தானே

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம். எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்= எல்லாப் பெருஞ்சிறப்போடு இது செய்ய முற்படல்; ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால், இங்கே ”இது” என்பது வடக்கு இருத்தலைக் குறிக்கிறது. முந்தைய நிகழ்ச்சிகளை அறிந்தாற்றான் ”இது” எனுங்குறிப்புப் புலப்படும். வடக்கிருந்த சோழன் வாடியிறந்துவிட்டான். அவனுக்கான நடுகல்லும் எழுப்பப்பட்டுவிட்டது. யாரும் எண்ணா இந் நிலையில் பாண்டிநாட்டுப் பிசிராந்தையார் நடுகல்லெதிரே வந்துநிற்கிறார். கூடியிருந்த சான்றோர் எதிர்பார்க்காநிலையில் இதுநடந்தது கண்டு திகைத்துப் போனார். முல்>மல்>மர்>மரு>மருள்>மருட்கை என்பது வியப்பும், திகைப்பும் கலந்த மயக்கத்தைக் குறிக்கும். ”நினைக்குங்காலை மருட்கை உடைத்தே”= நினைக்கையிற் திகைக்க வைக்கிறது.     

பிறன்நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன்= வெளிநாட்டுத் தோற்றங் கொண்ட சான்றோன். தமிழகம் பொதுவெனினும், பாண்டிநாடு, பிறன்நாடு தானே? சோழநாட்டுப் புலவரான பொத்தியார் அப்படித் தானே குறிப்பிடுவார்? இசை மரபாக, நட்புக் கந்தாக, போற்றி ஈங்கு வருதல்= புகழ் மரபாக, நட்பின் பற்றுக்கோடாக (எம் அரசனைப்) போற்றி இங்கு (பிசிராந்தையார்) வருதல். சோழனுக்கும் ஆந்தையாருக்கும் இடையுள்ள நட்பே இவ்வருகைக்குப் பற்றுக் கோடாகும். அதனினும் மருட்கை உடைத்தே = அதைக் காட்டிலும், திகைக்க வைக்கிறது. இனையதோர் காலை = இத்தகைய காலத்தில். வருவன் என்ற கோனது பெருமையும் = ”(என்னைத்தேடிப் பிசிராந்தை) வருவான்” என்று சொன்ன எம் அரசனின் பெருமையும்

அது பழுதின்றி வந்தவன் அறிவும்.= அப்பெருமைக்குப் பழுதின்றி ஆக்கி வந்தவனின் அறிவும். இங்கே அறிவென்ற குறிப்பு முகன்மையானது. எல்லாம் தெரிந்தேதான் சோழனின் நடுகல்லைப் பார்க்கப் பிசிராந்தையார் வருகிறார். வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே = எத்தனை முறை வியந்தாலும் வியப்புண்டாகிறது. (இவ்வளவு வியப்பு உண்டென்றால், ஒரு வேளை பாண்டியன் அறிவுடை நம்பிக்கும், கோப்பெருஞ் சோழனுக்கும் தீராப் பகை இருந்தது போலும்! பாண்டிநாட்டார் யாரும் சோழநாட்டிற்குள் சட்டென்று உறவாட மாட்டார் போலும். அதனாற்றான் பாண்டிய அரசனின் பெருமையைச் சற்றும் விட்டுக் கொடுக்காது 191 ஆம் பாடலிற் பிசிராந்தையார் சொன்னார் போலும்.) 

தன் கோல் இயங்காத தேயத்து உறையும் = தன் செங்கோல் இயங்காத (பாண்டிய) தேசத்தில் உறையும்; செங்கோல் இயங்கும் இடமே ஆட்சி நடக்குமிடமாகும். சான்றோன் நெஞ்சு உறப்பெற்ற = சான்றோனின் நெஞ்சை (உரிமையோடு) அடையப்பெற்ற. தொன்று இசை அன்னோனை இழந்த இவ் உலகம் = பழம்புகழ் பெற்ற அன்னவனை இழந்த இவ்வுலகம் என் ஆவது கொல்? அளியது தானே! = என்னாகும்? இரங்கத் தக்கது தானே?

பாட்டின் மொத்தப் பொருள்:

எல்லாப் பெருஞ்சிறப்போடு வடக்கிருத்தலைச் செய்ய (எம் அரசன்) முற்பட்டதை நினைக்கையிற் திகைக்க வைக்கிறது. வெளியார்நாட்டிற் தோற்றங்கொண்ட சான்றோன், புகழ்மரபாக, நட்பின் பற்றுக் கோடாகப் (எம் அரசனை) போற்றி இங்குவருதல் அதைக்காட்டிலும் திகைக்கவைக்கிறது. இத்தகைய காலத்தில் “(என்னைத் தேடிப் பிசிராந்தை) வருவான்” என்று சொன்ன எம் அரசனின் பெருமையும், அப்பெருமைக்குப் பழுதின்றி ஆக்கி வந்தவனின் அறிவும் எத்தனை முறை வியந்தாலும் வியப்புண்டாகிறது. தன்செங்கோல் இயங்காத (பாண்டிய) தேசத்தில் உறையும் சான்றோனின் நெஞ்சை (உரிமையோடு) அடையப் பெற்ற, பழம்புகழ் பெற்ற அன்னவனை இழந்த இவ்வுலகம் என்னாகும்? இரங்கத்தக்கது தானே?

சோழனை வியந்தே இங்கு பொத்தியார் பாடுகிறார். பிசிராந்தையாரைப் பற்றி ஊடே ஒரு செய்தி வருகிறது. அவ்வளவுதான். அடுத்த பாட்டிற்குள் போவோம்.

அன்புடன்,
இராம.கி. 

Tuesday, October 23, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 16

அடுத்து புறம் 191 ஐப் பார்க்கப் போகிறோம். பலருக்கும் தெரிந்த பாடல் தான். புறநானூற்றின் 182-இலிருந்து 195 வரையுள்ள பாடல்கள் பெரும்பாலும் அற வியல், மெய்யியற் கருத்துக்களைப் புகல்வனவாகும். திணை: பொதுவியல்;  துறை: பொருண்மொழிக் காஞ்சி 

யாண்டுப லவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டவென்  மனை(வி)யொடு மக்களு நிரம்பினர்
யான்கண் டனையரென் னிளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கு மதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே

                            - புறம் 191

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

"யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?" என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனை(வி)யொடு மக்களும் நிரம்பினர்
என் இளையரும் யான் கண்டனையர் 
வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்
அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்
யான் வாழும் ஊரே

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

சூரியனைப் புவிசுற்றும் நீள்வட்ட வலயப்பாதையை 365 1/4 பகுதிகளாக்கி, ஒவ்வொரு பகுதியையும் ஒருநாளாய்க் கொள்ளும்போது, 4 நாட்கள்மட்டும் நமக்குச் சிறப்பாகத்தோற்றும். இதிற் சூரியனுக்கு மிக அருகில் வரும்நாளை வேனில் முடங்கல் (summer solstice) என்றும், சூரியனுக்கு மிகத்தொலைவில் வரும்நாளைப் பனி முடங்கல் (winter solstice) என்றுஞ்சொல்வர். தவிர, பகலும், இரவும் ஒரே கால அளவுகொண்ட 2 நாட்களை ஒக்க நாட்கள் (equinox) என்பார். ஒக்க நாட்களின் பின்புலங்களாய் (ஆட்டுருவங் காட்டும் விண்மீன் தொகுதியான) மேழவோரையும், (சமன்செய்து சீர்தூக்கும் கோலுருவங் காட்டும் விண்மீன் தொகுதியான) துலையோரையும் அமைவதால் அவற்றை மேழவிழு என்றும், துலைவிழு என்றுஞ்சொல்வர். வானவியலின்படி ஆண்டுத்தொடக்கம், வேனில்/பனி முடங்கலிலோ, அன்றி மேழ/துலை விழுவிலோ அமையமுடியும். . 

முன்செலவத்தோடு (precession) கணக்கிடுகையில், பனிமுடங்கலில் ஆண்டு தொடங்குவதைத் தைப்பொங்கலிற் தொடங்கியதாகவே கொள்ளலாம். மாற்றுவகையில் ஆண்டுத்தொடக்கம் சித்திரை மேழ விழுவிற் தொடங்கியது ஆகவுங் கொள்ளலாம். இருவகைத் தொடக்கங்களுக்கும் சங்க இலக்கியத்திற் சான்றுகளுண்டு. யாண்டு>ஆண்டு என்றசொல் யாடு>ஆடு என்றசொல்லை மூக்கொலி இழைத்துச் சொல்வதாகும். ஆண்டை, ஆட்டையென்று பேச்சு வழக்கிற் சொல்லும்போது, ஆட்டுருவங் கொண்ட மேழ இராசித் தொடக்கத்தையே குறிக்கிறது. [12 மாதங்களுக்கு ஒருமுறை அண்டையில் தோன்றி வளரும் முங்கில் அடிமுளையைத் தமிழிலும், மலையாளத்திலும் ”ஆண்டை” என்பதால், ஆண்டின் பெயர்க்காரணம் அதென்று சிலர்சொல்வர். ஆனால், ஆண்டின் தொடக்கத்தை எது குறிக்கிறதென்ற கேள்விக்கு இச் சிந்தனைவழி விடைகிடைப்பதில்லை. தவிர, “யாண்டெனும்” சொல்லாட்சியை மூங்கில்முளைக் காரணம் சரியாக விளக்காது.] 

நரை= வெளிறிய மயிர்; நரையென்ற சொல்லின் பிறப்பைச்சொன்னால் இங்குவிளக்கம் பெரிதும் நீளும். அதற்குத் தனிக்கட்டுரையே வேண்டும். ”யாண்டு பலவாக நரையில ஆகுதல்” = ஆண்டுகள் பல ஆயினும், நரை யிலாது ஆகுதல்; வெள்ளை நிறம் பெற்றதொரு நெய்தற் பறவை நாரை என்றே சொல்லப்பெறும்.

ஈ>இ, ஆ>அ, ஊ>உ, யா>எ என்பன அண்மை, சேய்மை, முன்மை, வினவுச் சுட்டுக்களாகும். இச்சுட்டுக்களின் விதப்பான வளர்ச்சியில் அன்னுதற் (=போலுதல்)  பொருளில் அன்னு>அ(ன்)னம்>அனம் என்னும் ஈற்றைச் சேர்த்து ஈ>ஈங்கு>இங்கு>இங்கனம்>இங்ஙனம், ஆ>ஆங்கு>அங்கு>அங்கனம்> அங்ஙனம்; யா>யாங்கு>யாங்கனம்>யாங்ஙனம்; யாங்கு>எங்கு>எங்கனம்> எங்ஙனம் என்ற வளர்ச்சிகளும் ஏற்பட்டு, ”படி, ஆறு, வகை” என்ற பொருட் பாடுகளைக் குறிக்கும். காட்டாக ”யாங்கு ஆகியர்?” என்பது ”எப்படியாயினர்? அல்லது ”எவ்வாறாயினர்?” அல்லது “எவ்வகையாயினர்?” என்று பொருள் கொள்ளும்.

வினவுதல் = கேள்வி கேட்டல்; ஒரு கருத்தின் உள்ளடக்கத்தை விள்ளிப் பிளந்து காட்டுவது வினவு (பிள்>விள்>விளவு>வினவு>வினா) என்று சொல்லப் படும்.

மாண்ட என் மனைவியொடு= மாட்சியுற்ற என் மனைவியொடு;. மா>மாள்> மாண்ட= பெருமைமிக்க. நிரம்புதலென்பது இங்கு உள்ளம்/மனம் நிறைதலைக் குறிக்கிறது. “என் மனசு நிரம்பிக் கிடக்கிறது” என்று சொல்கிறோமில்லையா? யாருக்கு உள்ளம் நிறைவாயிருக்கிறதோ, அவருக்குக் கவலையில்லை. இங்கே மனைவியொடு, (சுற்றியிருக்கும்) மக்களும் மனம்நிறைந்தனர். மக்களைப் புதல்வராக மட்டுமே விதந்து பல உரையாசிரியரும் குறிக்கிறார். அது தேவையில்லாத விதந்தோதலாகும். மக்கள் என்பதைச் சுற்றத்தார், நண்பர் என்று பிசிராந்தையார் வாழ்வில் அக்கறைப்பட்ட எல்லோரையும் குறிப்பதாகவே இங்கு கொள்ளலாம். 

இளையரென்பது புதல்வர்/புதல்வியர், ஏவலாளர் என 2 வகையினரையுங் குறிக்கும். மூத்தோர் என்ற சொல் உரிமையுள்ள (கிழமை) நிலையைக் குறிக்கும். இளையர் பணிசெய்வதிற் குற்றங்களிருந்தால் சமம், வேற்றம், தானம், தண்டம் (இத் தமிழ்ச்சொற்கள் சாம, பேத, தான, தண்டம் என்று சங்கதத்திற் திரியும்) என்ற 4 முறைகளிலே பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. கண்டித்தல் என்பது கட்டுப் படுத்தல் என்ற பொருள்கொள்ளும். நாலுவிதமான கண்டிப்புக்களே சற்றுமுன் சொன்னவையாகும். கண்டித்தலின் பெயர்ச்சொல் கண்டனையாகும். கண்டிப்போர் என்போர் கண்டனை செய்வோராவர். கண்டனையர்/கண்டனையாளர் என்பார் கண்டிப்பிற்கு ஆளாவோர். கண்டனைக்கு உட்படுபவராய் இளையர் இருக்கும் வரையே கிழமையர் கவலாதிருக்க முடியும். அதனாற்றான் நடத்தை அறிவியலில் (behavioural science) கடைவகைத் கண்டனையை எல்லா நேரமும் பயன்படுத்தாது, மற்ற 3 முறைகளாலே நடத்தைகளைச் சரிசெய்யும் படி சொல்வர். “என் இளையரும் யான் கண்டனையர்” என்பது அருமையான நடத்தை அறிவியற் கூற்றாகும்.

வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் = என்னுடைய வேந்தனும் (அறம்) அல்லாதவற்றைச் செய்யாது காப்பான். ”செய்யான் காக்கும்” என்ற வழக்கு இப்பொழுது “செய்யாது காப்பான்” என்றே சொல்லப்படுகிறது. அல்லவை என்பது (அறத்திற்குப்) புறம்பானவை என்று பொருள்படும். சம காலத்தில் பல்வேறு சேரரும், சோழரும், பாண்டியரும், குறுநில மன்னரும்/வேளிரும் இருந்தாலும், வேந்தன் என்பது உறையூர்/புகார், மதுரை, கருவூர்/வஞ்சி என்ற தலைநகர்களில் இருந்த முடிவேய்ந்த மன்னரை மட்டுமே குறித்திருக்கிறது. மற்றவரெல்லாம் மன்னர்/அரசர்/அரையர் என்று மட்டுமே சொல்லப்படுவார். அதன் தலை = அதற்கு மேல். ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் = (அறிவு) அகன்று பதப்பட்டு அடங்கிய, (எல்லோரும்) கொள்ளத் தகுந்த பல சான்றோர் யான் வாழும் ஊரே = அடங்கியது நான் வாழும் ஊராகும். பாட்டின் இந்த வரிகளில் ”அடங்கியது” எனும் வினைச்சொல் நேரடியாக வெளிப்படாது உள்ளொடுங்கி நிற்கிறது.

மொத்தப்பொருள்:

”ஆண்டுகள் பல ஆயினும், நரையிலாதல் எவ்வாறாயிற்று?”; என்று வினவுவீராயின், ”மாட்சியுற்ற என் மனைவியோடு, (சுற்றத்தார், நண்பர் என்ற) மக்களும் (மனம்) நிறைந்திருக்கிறார்; (புதல்வரும் ஏவலாளரும் ஆகிய) இளையரும் என் கண்டனைக்கு (கட்டுப்பாட்டிற்கு) ஆளானவரே. என் வேந்தனும் (அறம்) அல்லாதவற்றைச் செய்யாது காப்பான். அதற்குமேல், (அறிவு) அகன்று பதப்பட்டு அடங்கிய, (எல்லோரும்) கொள்ளத்தக்க பல சான்றோர் அடங்கியது நான் வாழும் ஊராகும்.”

நால்வேறு முகன்மைச் செய்திகளைச் சொல்லி “நான் கவலையிலாது இருக்கிறேன்; எனவே என்முகத்தில் நரையில்லை” என்று பிசிராந்தையார் அழுந்தச் சொல்கிறார். அடுத்த பாடலுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.   

Monday, October 22, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 15

இனி அடுத்து புறம் 223 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணையும் பொதுவியல் தான்; துறை: கையறுநிலை. இப்பாட்டிற் பொத்தியார் ”தன் இன்னுயிர் (சோழன்) உடம்பொடு (போக) விரும்பும் கிழமை” பற்றியும், சோழன் நடுகல்லுக்கருகில் இடம்கொடுத்து அளிப்பது பற்றியும் பேசுகிறார்.  நமக்குத் தெரியாத ஏதோவொரு செய்தி இதில் அடங்கியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. கொடுத்திருக்கும் தரவுகளை வைத்து உறுதியாகச் சொல்லமுடியவில்லை. பாடலைப் படியுங்கள். .

பலர்க்குநி ழலாகி யுலகமீக் கூறித்
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
நிலைபெறு நடுக லாகியக் கண்ணும்
இடங்கொடுத் தளிப்ப மன்ற வுடம்போ
டின்னுயிர் விரும்புங் கிழமைத்
தொன்னட் புடையார் தம்முழைச் செலினே

                          - புறம் 223

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

பலர்க்கு நிழலாகி, உலகம் மீக் கூறித்
தலைப்போகு அன்மையிற் சிறுவழி மடங்கி,
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
தொல் நட்புடையார் தம் உழைச் செ(ல்)லினே
இன்னுயிர் உடம்போடு விரும்பும் கிழமை
மன்ற இடம் கொடுத்து அளிப்ப

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

நுல்>நெல்>நில் என்பது ஒளியைக் குறிக்கும். ஒளி போன்ற பொன்னிறம் கொண்டதால் தான் நெல்லெனும் தவசத்திற்குப் பெயர் வந்தது. நில்லிற் பிறந்த நிலவென்ற சொல் திங்களின் ஒளியைக் குறித்தது. நில்லோடு அல் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து நிலல்*>நிழல் என்று ஒள்ளுதலையும், ஒளியையுங் குறித்தது. இன்னொரு வகையில், அல் எனும் விகுதி எதிர்மறை குறித்து ”நில் அல்லாதது” என்ற பொருளில் நிலல்*>நிழல் என்றாகிச் சாயையைக் குறித்தது. ஒன்றிற்கொன்று எதிரான பொருட்பாடுகள் ஒரே சொல்லிற்கு ஏற்பட முடியும். இங்கு சாயைப் பொருளே சரியானது. ”பலர்க்கு நிழலாகி” என்ற தொடரில் நம்மூர் வெதணம் (climate) வெளிப்படும். கோடை வெய்யில் சுள்ளென்றடிக்கையில், ஆல்போல் அகண்ட பெருமரங்களின் நிழல்தேடி ஓடுகிறோமே? அதுபோற் துன்பம் விளைகையில் ஆல்போல அரசன் நிழல் தருகிறான். ”பலர்க்கு நிழலாகி” என்பது துன்பக்காலத்தில் அரசன் அடைக்கலந் தருவதைக் குறிக்கிறது. பலர்க்கு நிழலாகி = பலர்க்கு நிழலாய் (அடைக்கலந்) தந்து 

உலகம் மீக்கூறல் = (நாட்டு) மக்கள் மிகுத்துக் கூறல்;  கோப்பெருஞ் சோழனுக்கும் அவன் புதல்வருக்கும் இடையே போரெழுந்தபோது, “இப்படியும் அரசன் இருப்பானா? தன் புதல்வர் ஆசைக்கு உடன்படாது, போரிடப் போகிறானே? கடைசிக்காலத்தில் மண்ணையா கொண்டு போவான்? மக்களில் ஒருவனுக்கு முடிசூட்டித் தான் துறவு பூணுவானா? அதைவிடுத்து மண்ணாசையில் மறுக்கிறானே?” என்று விதம் விதமாய் மிகுத்துப் பேசி யிருப்பர். ”உலகம் மீக்கூறல்” மூலமாய் பொத்தியார் இப்பேச்சை நமக்கு உணர்த்துகிறார். 

தலைப்போகு = தலைப்போக்கும் தண்டனை. தலைப்போகு + அன்மை = தலைப்போகன்மை = தலைப்போகா நிலை; இங்கே இது அரசப்பேற்றைக் குறிக்கிறது. இந்தச் சொல் தமிழிலக்கியத்திலேயே இங்கு மட்டும் தான் வருகிறது. சங்க இலக்கியம் ஓர் அகராதியல்ல என்பதற்கு இதுவுமோர் எடுத்துக்காட்டு. இதுபோன்ற சொற்களைப் புரிந்துகொள்ள இலக்கணம், நாட்டு வழக்காறு, சற்று ஏரணம் போன்றவற்றைப் பயன்படுத்தவேண்டும். கட்டாயமாகவும், அவக்கரமாகவும், ஏதோவொரு செயலை நண்பர் செய்யும் போது, “ஏன் இப்படிப் பறக்கிறாய்? தலைப்போகும் காரியமா, என்ன?” என்று கேட்கிறோமில்லையா? பொதுவாக, முற்றாளுமை (dictatorship) அதிகாரிகள் ”இதைச் செய்யாவிட்டால் உன் தலை போகும்” என்று மக்களை அச்சுறுத்தியே தாம் வேண்டியதைச் சாதித்துக்கொள்வர். முடியரசும் ஒரு முற்றாளுமை அரசு தான். ”தலைப்போக்குச் செயல்” என்பது ”பெருங்கேடு” விளைவிக்குந் தண்டனையாகும். அரசன் ஒருவனுக்குத் தான் தலைப்போக்குத் தண்டனையிலிருந்து (=சிரச்சேதம்) விதிவிலக்குண்டு. பொதுவாகத் தலைப்போகு அல்லாமை = தலைப்போகு அன்மை = தலைப்போகன்மை என்பது முடியரசில் அரசனுக்கு மட்டுமே வாய்க்கும் பேறாகும். போரிலாக் காலத்தில் இயற்கையாய் மரிப்பதே அரசர்க்கு இயல்பு. இங்கோ சோழன் வாழ்வில் மாறி நடக்கிறது. உண்ணாநோன்பின் வழி வடக்கிருந்து தன்னுயிரை ஈகிறான்.  .
   
சிறுவழி மடங்கி = சிறுவழி மாறி (=திரும்பி, ஒடுங்கி) தலைப்போகன்மைப் பேறுகொண்ட அரசன் சிறுவழி மாறி இங்கு உண்ணாநோன்பால் வடக்கிருந்து மரிக்கிறான். “தலைப்போகன்மையிற் சிறுவழி மடங்கி” என்பது கோப்பெருஞ் சோழன் வாழ்வில் விதப்பாய் நடந்த செய்தியாகும். இக்கருத்தை எந்த உரை யாசிரியரும் சரியானபடி கொணர்ந்ததாய் நான் காணவில்லை. கிட்டத்தட்ட அனைத்து உரையாசிரியரும், இதன்பொருள் காண்பதிற் தடுமாறிப் போயிருக்கிறார்.

நிலைபெறு நடுகல் = நின்று நிலைக்கும் நடுகல். சங்க காலக் குமுகாயத்தில் நடப்பட்ட நடுகலைச் சாய்த்தெறியாது காலகாலத்திற்கும் நின்று நிலைக்கச் செய்தார் போலும். பின்வந்த குமுகாயத்தினரோ, அதுபோன்ற மரபெல்லாம் காப்பாற்றவில்லை. சீரங்கத்திற்றான் வடக்கிருத்தல் நடந்ததோவென்று இத்தொடரின் முன்பகுதிகளில் ஊகித்திருந்தோம். அப்போது நட்ட கல் சீரங்கத்தில் எங்குள்ளதென்று தொல்லியலும் இதுவரை காட்டவில்லை; வழக்காறும் காட்டவில்லை. ஏதோ வரலாறு/மரபுகள் மாறிப் போயிருக்கின்றன. (அண்மையில் பேரா. க.நெடுஞ்செழியனின் வழி கேள்விப்பட்ட ஊகத்தை இங்கு சொன்னாற்பலரும் அதுகேட்டு அதிர்ந்து போவர்.)   

ஆகிய கண்ணும் = ஆகிய பொழுதும்

தொல் நட்புடையார் தம் உழைச் செ(ல்)லினே = தொல் நட்புடையாரின் பக்கம் சென்றால்

இன்னுயிர் உடம்போடு விரும்பும் கிழமை  = பொத்தியாரின் இன்னுயிர் (சோழன்) உடம்போடு (போக) விரும்பும் உரிமை கேட்கிறது. இங்கே உயிரையும், உடம்பையும் தனித்துப் பேசுவதால், பொத்தியாருக்கு அரசனின் சமய நெறியும், வடக்கிருத்தலின் மெய்ப்பொருளும் புரிந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். (இந்த நிலை எகுபதியப் பேரரசரோடு உயிர் துறந்தோரைப் பற்றிய எண்ணம் வருகிறது. அவரெல்லாம் விரும்பும் உரிமையால் இறந்தாரா? அன்றி குமுகாயத்தின்/ அரசின் கட்டாயத்தால் இறந்தாரா? - ஆய்விற்குரிய கேள்வி.     

மன்ற இடம் கொடுத்து அளிப்ப = உறுதியாக இடம்கொடுத்து அளிப்பர் 

பாட்டின் மொத்தப்பொருள்:

பலர்க்கு நிழலாய் (அடைக்கலந்) தந்து,
(நாட்டு) மக்கள் மிகுத்துக் கூறித்
தலைப்போகன்மையிற் சிறுவழி மாறி,
(இன்று) நிலைபெறும் நடுகல் ஆயினும்,
தொல் நட்புடையாரின் பக்கஞ் சென்றால்,
(என்) இன்னுயிர் (சோழன்) உடம்பொடு (போக) விரும்பும் உரிமையால்,
உறுதியாக இடம் கொடுத்தளிப்பர்.

பாட்டின் சுருக்கமான பொருளை ஆங்கில்த்திற் சொன்னால், “They will allow me to accompany the king in his journey”. இந்தப் பாட்டிற்கு அப்புறம் பொத்தியார் வடக்கிருந்தாரா என்பது தெரியாது. ஆனால் அப்படித்தான் எல்லா உரை யாசிரியரும் எழுதுகிறார். சங்க இலக்கியம் என்பது ஒரு வரலாற்றுப் பொத்தகமில்லை. ஆனால் ஆங்குமிங்கும் வரலாற்றுச் செய்திகள் அடங்கி யிருக்கின்றன. எனவே ஊகங்கள் இடைவருவதைத் தவிர்க்கமுடியாது. சிலபோது கேள்விகள் மட்டுமே எழுந்துகொண்டிருக்கின்றன.

இன்னுமொரு பொத்தியார் பாடல் மீந்திருக்கிறது. அதற்கு முன் அடுத்த பகுதியில், வடக்கிருந்த இடத்திற்கு பிசிராந்தையார் வந்து சேரும்போது கூடியிருந்தோர் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய மறுமொழியைப் பார்ப்போம். வடக்கிருத்தல் என்றாற் சொற்பொருளென்ன? - என்றும் இன்னும் நாம் அறியாதிருக்கிறோம். இதுவரை பார்த்த பாடல்களில் வடதிசை பற்றிய குறிப்பேயில்லை.

அன்புடன்,
இராம.கி.

Sunday, October 21, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 14

இனி அடுத்து புறம் 222 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணையும் பொது வியல்; துறை: கையறுநிலை. இப்பாட்டிற் பொத்தியாருக்கும், சோழனுக்கும் இடைநடந்த உரையாடல் வெளிப்படுகிறது. சோழன் வடக்கிருக்கத் தொடங்கிய போது உழுவல் நண்பரான பொத்தியார், உணர்ச்சிமேலிட்டுத் தானும் உடன் வடக்கிருக்க விழைகிறார். அப்பொழுது “உன் மகன் பிறந்தபின் வா” எனக்கூறிச் சோழன் தடுத்துவிடுகிறான். மகப்பிறப்பிற்கு அப்புறம் பொத்தியார் வந்து இடங்கேட்பதாய்ப் பாடல் அமைந்துள்ளது. .

அழலவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
என்னிவ ணொழித்த வன்பி லாள
எண்ணா திருக்குவை யல்லை
என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே

                           - புறம் 222

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.
 
அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா
என
இவண் ஒழித்த என் அன்பிலாள!
எண்ணாது இருக்குவை அல்லை?
இசைவெய் யோயே!
மற்று என்னிடம் யாது? 

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

உல்>உள்>அள்>அழல் = தீ; (மலையாளம்.அழல்; துளு. அர்ல, அர்லுனி; அழல்>அழனம் என்பதும் தமிழிற் தீயையே குறிக்கும். அனலும் அழலோடு தொடர்பு காட்டும். ழகரமும் ககரமும் தமிழிற் பல இடங்களிற் போலிகளாய் வந்துள்ளன. காட்டு. முழுத்தம்> முகுர்த்தம்> முகூர்த்தம். அழனி>அழ்னி*> அகுனி* என்பது அக்னி எனுஞ் சங்கதச் சொல்லோடு இனங்காட்டும். இது இருக்குவேதத்திலேயே உள்ளது) உல் எனும் வேர்ச்சொல்லில் இருந்து இன்னொன்றும் இப்பாட்டில் வந்திருக்கிறது. உல்>உள்>உள்வு>உவு>உவி> அவி>அவிர்; அவிர்தல் = ஒளிர்தல்; உள்ளிலிருந்தே உள்>ஒள்>ஒளி பிறந்தது. வேதல், எரிதலிலிருந்து ஒளிர்தற் கருத்து உருவாகும். வயங்குதல் = விளங்குதல்; வயங்கு+ இழை = வயங்கிழை = விளங்கும் அணிகலன்.

”அழல் அவிர் வயங்கிழை பொலிந்த மேனி” என்பது தீயால் புடமிட்டு ஒளிர்ந்து விளங்கும் இழையை அணிந்த மேனியைக் குறிக்கிறது. இங்கே ”மேனி” பெண்ணிற்கு ஆகுபெயராகிறது. நிழல்தல்/ நிழற்றல்>நிழத்தல் = இல்லை யென்றாக்கல்; ”அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி நிழலினும் போகா நின் வெய்யோள்” = ”தீயால் புடமிட்டு ஒளிர்ந்து விளங்கும் இழையை அணிந்த மேனியை இல்லையென்றாக்கியும் போகாத, நின் விழைவிற்குரியவள்”. ”தீயாற் (புடமிட்டு) ஒளிர்ந்துவிளங்கும் இழையணிந்த பெண்ணைவிட ஒளிர்தோற்றும் உன்மனைவி” என உயர்வு சொன்னான் சோழன்.

வெள்>வெய்>வெய்யோள் = விருப்பு, விழைவிற்கு உரியவள்; எனவே மனைவி யாவாள். ”விருப்பம், விழைவு, வெய், வேட்கை” போன்றவை ஒரே வேரில் இருந்து உருவானவை. வெள்ளிற்குத் திருமணப் பொருளுமுண்டு. வெய்யோளை மனைவி என்பது போல் வெய்வி என்றுஞ் சொல்லலாம், இந்தையிரோப்பிய மொழிகளிற் பழகும் ”wife” இன் தோற்றத்தை ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள் ”origin unknown" என்று போட்டிருக்கின்றன. ”இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் தமிழிய மொழிகளுக்கும் ஏதோவொரு முன்தொடர்பு இருக்கலாமெனப் பலகாலஞ் சொல்லிவருகிறேன். கேட்பதற்குத் தான் பலருந் தயங்குகிறார். அப்படிச் சொல்வதால் என்னைக் கேலியுஞ் செய்கிறார். அந்த அளவிற்கு மாக்சுமுல்லர் தேற்றமும், மோனியர் வில்லியம்சு அகரமுதலியும் தமிழாய்ந்தோரை ஆட்டிப்பிடித்து ஆளுகின்றன. சங்கதக் கருத்தாளரை உச்சிமேற் கொண்டு, முன்முடிவில்லாது தமிழாய்வர் கருதுகோள் வைக்கிறார்.

இப்பாட்டில் வரும் ”மனைவி வண்ணனை, பிள்ளைப் பிறப்புச்” செய்திகளைப் பார்த்தால், பொத்தியார் மனைவியும், பொத்தியாரும் நடுத்தர அகவையை மீறியிருக்க முடியாது. தவிர, வாராது போல் வந்த புதல்வன் பிறப்பான் என்று எண்ணிக் கூடப் பொத்தியார் வடக்கிருக்கச் சோழன் மறுத்திருக்கலாம். ஆனாலும் பிள்ளை பிறந்தபின், பொத்தியார் மீளவந்து வடக்கிருக்க இடங் கேட்கிறார். “நின் வெய்யோள் பயந்த புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா” = நின் மனைவி பயந்த புகழ்நிறைப் புதல்வன் பிறந்தபின் வா. பயத்தலென்பது அருமையான வினைச்சொல். மரங்கள் பயந்ததைப் பயம்>பழம் என்கிறோம் இல்லையா? மாந்தரிற் பயந்ததைப் பயல்>பையல்>பையன் என்கிறோம். எனவே பயத்தல் என்பது ஈதல், கொடுத்தல், தருதல் என்பதன் இன்னொரு சொல்லாகத் தெரிகிறது. இருந்தும், இக்காலத்திற் பயத்தலைப் புழங்காது, வேறேதோ வைத்துச் சுற்றிவளைத்துப் பயன்படுத்துகிறோம். (பயக்கிறோம் என்பதைப் பயன்படுத்துகிறோம் எனும்போது சற்று செயற்கையாய்த் தோற்ற வில்லையா?) ஆங்கிலத்தில் to pay என்கிறோமே, அதற்கும் இணையான வினைச்சொல் பயத்தல் தான். ”நான் இந்த ஆண்டிற்குரிய கட்டணத்தைப் பயந்தேன் - I paid the fees for this year."

நுட்பியல் ஏந்துகள் (technical facilities) இல்லா அக்காலத்திற் புதல்வனே பிறப்பான் என்பது ”பெண்மகவிலும், ஆண்மகவை உயர்த்தும் ஆதிக்கப் போக்கை” உணர்த்துகிறது. இன்றுவரை தமிழ்கூறு நல்லுலகம் அப்படியே தான் இருக்கிறது. ஆணாதிக்கம் 2500 ஆண்டுகள் இருந்தது போலும்.

”புதல்வன் பிறந்தபின் வாவென இவண் ஒழித்த என் அன்பிலாள” = புதல்வன் பிறந்தபின் வாவெனச் சொல்லி இங்கு (எனக்கு) இடமறுத்த என் அன்பின் ஆட்சியாளனே”

”எண்ணாது இருக்குவை அல்லை?” = (என்னைப் பற்றி) எண்ணாதிருப்பாய் அல்லையே?

இசை வெய்யோயே! = புகழை விரும்புகிறவனே!

மற்று என்னிடம் யாது? = அப்புறம் எனக்காக (நீ ஒதுக்கிய) இடம் யாது?

பாட்டின் மொத்தப்பொருள்:

”தீயாற் (புடமிட்டு) ஒளிர்ந்து விளங்கும் இழையணிந்த பெண்ணைவிட
ஒளிர்தோற்றும் உன்மனைவி
பயந்த
புகழ்நிறைப் புதல்வன் பிறந்த பின், வா”வெனச் சொல்லி
இங்கு (எனக்கு) இடமறுத்த என் அன்பின் ஆட்சியாளனே!
(என்னைப் பற்றி) எண்ணாதிருப்பாய் அல்லையே?
புகழை விரும்புகிறவனே!
அப்புறம், எனக்காக (நீ ஒதுக்கிய) இடம் யாது?

அடுத்த பாட்டும் பொத்தியார் பாட்டுத்தான். அதையும் பார்ப்போம். இந்தப் பாட்டில் பொத்தியாருக்கும் சோழனுக்கும் இடையிருந்த நட்பின் ஆழமும், வடக்கிருந்தே தீருவதெனும் உறுதியும் புரிகிறது.

அன்புடன்,
இராம.கி.   

Saturday, October 20, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 13

அடுத்து புறம் - 221 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணை: பொதுவியல்; துறை: கையறு நிலை. ”கொடையிற் சிறந்த கோப்பெருஞ்சோழன், தான் கொண்ட கொள்கையுறுதியால் வடக்கிருந்து உயிர்துறந்தான். அவனிறப்பைத் தொடர்ந்து, தாழியில் இருத்தியோ, அன்றிப் பதுக்கையிற் கிடத்தியோ, உடலைப்புதைத்து அதன்மேல் நடுகல்லும் நிறுத்தியாயிற்று. (காவிரிப் படுகையின் புவியமைப்பில், சோழன் ஈமக்குழி பதுக்கையாயிராது, பெரும்பாலும் தாழியாகவே வாய்ப்புண்டு.) அக்கல்லும் நின்றதோ, இருந்ததோ காட்டாது, கிடந்த கோலமே காட்டியிருக்கும். சோழனோடு தானும் வடக்கிருக்க முற்பட்டபோது சோழன்தடுத்ததை வேறுபாடலில் நினைவு கொள்ளும் பொத்தியார் இப்பாடலில் நடுகல்லைக் கண்டு நெகிழ்ந்து பாடுகிறார்.   

பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே
ஆடுநர்க் கீத்த பேரன் பினனே
அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே
திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே
மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில்
அனைய னென்னா தத்தக் கோனை
நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று
பைத லொக்கற் றழீஇ யதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை யுலக மரந்தை தூங்கக்
கெடுவி னலிசை சூடி
நடுக லாயினன் புரவல னெனவே.

                      - புறம் 221

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

பாடுநர்க்கு ஈத்த பல்புகழன்னே
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே
அறவோர் புகழ்ந்த ஆய்கோலன்னே
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே
மகளிர் சாயல்
மைந்தர்க்கு மைந்து
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
அனையன் என்னாது
அத் தக்கோனை நினையாக் கூற்றம்
நனந்தலை உலகம் அரந்தை தூங்க
இன்னுயிர் உய்த்தன்று
வாய்மொழிப் புலவீர்!
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே.
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

”பாடுநர், ஆடுநர்” என்பன இன்றும் பலருக்குத் தெரிந்த சொற்களேயாகும். பாடுநர்க்கும், ஆடுநர்க்கும் பரிசுகொடுத்த சோழன் "புகழுடையோன், பேரன்பினன்" என்றெல்லாம் பாராட்டப் பெறுகிறான். [இப்பாராட்டினூடே ஒரு நுணுகிய விதயத்தைக் கவனிக்கவேண்டும். பாடுநருக்கும் ஆடுநருக்கும் பரிசில்கொடுப்போன், செயினநெறியை ஆழ்ந்து கடைப்பிடிப்போனாகி, வடக்கிருந்து, வாழ்நாளை முடிப்பது பெரிதும் அரிது. ஏனெனில் பாடலும், ஆடலும், கேளிக்கைகொள்ளலும் செயினத்தின் சாவகக் கைப்பிடியாளருக்கு ஏற்பென்றாலும், வடக்கிருக்கும் அளவிற்குத் துறவுகொண்டவருக்கு அது புறம்பான செயலேயாகும். ஆனால் ஓர் அற்றுவிகச் சாவகனுக்கோ, துறவிக்கோ அது முடியும். ஏனெனிற் பாடுவதையும், ஆடுவதையும், ஏன் இன்னும் பல கலைகளில் ஈடுபடுவதையும், முடிவில் வடக்கிருப்பதையும் அற்றுவிகம் ஏற்றுக்கொள்ளும்; அற்றுவிகத்தின் அடிப்படையான நியதிவழிச் செயற்படும் நடைமுறை ஆழமான பொருள்கொண்டது. அதை மூடநம்பிக்கை என்பது மேலோட்டமான பார்வையாகும்.]

”ஊழ்வினை” என்ற கருத்தீட்டை இருவேறு நெறிகளும் இருவிதமாய்ப் பார்க்கும். ஊழெனும் வினையாய், இருபெயர்த் தொகுதியாய், அற்றுவிகம் பார்க்கும்போது, ஊழ்ந்த (= ஊன்றிய) வினையாக, வினைத்தொகைப் பெயராக, செயினம் பார்க்கும். பாடுநர், ஆடுநரைப் புரக்கும் செயலை மெய்யியல்வழி செயினமும் அற்றுவிகமும் இருவகையிற் பார்க்கும் வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். அது நெடிய புலனம்; எனவே தவிர்க்கிறேன்.

பாடுநர்க்கு ஈத்த பல்புகழன்னே = பாடுவோருக்குக் கொடுத்த பல்புகழன்;
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே = ஆடுவோர்க்குக் கொடுத்த பேரன்பினன்;

அறவோர் என்போர் அறநெறியை நாடுவோர். அறமென்ற சொல்லைப் பற்றி ஏராளமான விளக்கங்கள் வெவ்வேறு பார்வைகளிற் தமிழிற் கூறப்பட்டு விட்டன. ஆய் கோல் என்பது எதையும் சீர் தூக்கிப் பார்க்கும் கோலாகும். ”வளையாச் செங்கோலைக் கையில் வைத்துள்ள அரசன் யார்பக்கமும் வளையாது தன்னாட்சியில் நேர்மையைக் கடைப்பிடிப்பான்” என்றபொருளில் அச்சொல் ஆளப்படுகிறது. ஆட்சியிற் தொடர்ந்திருக்க வேண்டிய தொழில் ஆய்தலாகும். ”அறவோர் புகழ்ந்த ஆய்கோலன்னே” = அறவோர் புகழ்ந்த, எதையும் ஆய்ந்தறியும் செங்கோலன்

திறவோர் என்பது வெவ்வேறு புலங்கள், கலைகளிற் தேர்ச்சியும், திறமும் பெற்றவரைக் குறிக்கும். இவரைத்தான் experts என்று இக்காலத்தில் ஆங்கிலத்திற் சொல்லுகிறார். இக்காலத்திற் திறனை smartness க்கு ஈடாகச் சிலர் பொதுப்படப் புழங்குகிறார்; smart phone என்பதைத் திறன்பேசி என்றும் வழங்கத் தலைப்படுகிறார். ஆழ்ந்தோர்ந்தால் இரண்டும் வேறானவை. smartness என்பது ”எது வேண்டும், வேண்டாம்?” என்பதைப் பிரித்தறியும் தன்மையாகும்; தன்னளவில் நல்லது கெட்டது பிரித்தறியும் தன்மை. இதை சமர்த்தெனும் சங்கதச்சொல்லாலும் அழைப்பர். திறன் (capability) என்பது குறிப்பிட்ட புலத்தில் நுண்மாண் நுழைபுலம் காட்டுவதாகும். smart phone  ஐத் தெளிதிறன் பேசி அல்லது சூடிகை பேசி என்பதே சரியாக இருக்கும். இங்கே ”திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே” என்பது ”திறமுடையோர் புகழ்ந்த திட அன்பினன்” என்ற பொருள் கொள்ளும்.

சாயல், இங்கே சாய்மானம் என்று பொருள்படும். சங்ககாலக் குமுகாயம், ஆணாதிக்கக் குமுகாயமாக மாறிவிட்டது. தொடக்கத்திலிருந்த தாய்வழி மரபுகள் ஒருசில இடங்களிற் தொடர்ந்தாலும், பெண் என்பவள் மெல்லியள்; கொடிபோன்றவள். அவள்சாய ஆண்தோள் வேண்டுமென்ற எண்ணம் சங்க காலத்திற் தோன்றிவிட்டது. சாயலிற்கு நிறம், அழகு, தோற்றுருவம் போன்ற பொருட்பாடுகள் சரி வராது. மகளிர் சாயல் = மகளிர்(க்குச்) சாய்மானம், அதே போல மல்>மள்>மயி>மை>மைந்து= வலிமை என்று பொருள்கொள்ளும். மைந்தர்க்கு மைந்து = வலியோர்க்கு வலி,

துகள் என்பதற்குத் ”தூள், பூந்தாது, குற்றம்” போன்ற பொருட்பாடுகளைக் கூறுவார். இங்கே “துகளறு” என வருவதாற் குற்றம் (blemish) என்ற பொருளே சரியாகப் பொருந்தும். துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் = குற்றமற்ற கல்வியில் உயர்ந்தவருக்கான புகலிடம்; அனையன் என்னாது = அத் தன்மையன் (எம் தலைவன்) என்றுசொல்லாது; அத் தக்கோனை நினையாக் கூற்றம் = அத்தகையோனை நினையாத கூற்றம்; நனந்தலை உலகம் அரந்தை தூங்க= அகன்ற உலகின் வருத்தம் கூடும்படி; இன்னுயிர் உய்த்தன்று= (அவன்) இன்னுயிரைக் கொண்டுபோனது.

 ”வாய்மொழிப் புலவீர்” என்றவிளி கூர்ந்து கவனிக்கவேண்டிய ஒன்றாகும். இத்தொடரின் 10ஆம் பகுதியில், ”பாணரை முந்தையர், படியாதவர், தான் தோன்றி” என்றும், ”புலவரைப் பிந்தையர்; படித்தவர், கற்றுச்சொல்லி” என்றும் தனித்தனியாகப் பார்க்கும் இடதுசாரித் தமிழறிஞர் விதப்பான தேற்றங்களை எடுத்துப்புகல்வதாகச் சொன்னேன். ”புலவர் பாணரைப் போல்மமாக்கிப் பாடி யுள்ளார்” என்றுஞ் சில தமிழறிஞர் சொல்லப்புகுவார். ”பிசிராந்தையார் புலவரா, பாணரா?” என முடிவுசெய்வது கடினமெனில், ”பொத்தியார் புலவரா, பாணரா?” என்பதும் கடுங்கேள்வி தான்.. ஆழ்ந்துபார்த்தால், இருவருமே எனக்குப் புலவராயும் பாணராயுந் தெரிகிறார்.

”பாணர் என்பார் நிகழ்த்து கலையாளர்” என்று குமுகவியல் ஆய்வாளர் பக்தவத்சல பாரதி சொல்வார். எனக்குப் புரிந்தவரை பாணர்/புலவர் என்ற பிரிப்பு ஆராய்ச்சியாளரின் தற்குறிப்பேற்றமாகவே தெரிகிறது. ”பாடியவன் பாணன் என்றும், புலந்தவன் புலவன் என்றுமே வரையறையாற் சொல்ல முடியும். பாணன் புலவனாய்ப் புலந் தெளியலாம். புலவன் பாணனாய்ப் பாடவுஞ் செய்யலாம். பாணரோ, புலவரோ, இருவருமே வளமை, பணம், காசு என்பதிற் தடுமாறிப் போயிருக்கிறார். இங்கே “வாய்மொழிப் புலவீர்” என்பது பாணரைக் குறிக்கும் விளியாகும். இதை மாற்றிவைத்து “படிப்புமொழிப் பாணரே” என்று புலவரைச் சொல்லமுடியுமோ?

பாணரோடு, பொருநர், கோடியர், கூத்தர், அகவர், இயவர், கண்ணுளர், துடியர், கடம்பர், பறையர், கிணையர், குயிலுவர், வயிரியர், விறலியர், மதங்கியர் என்று பல்வேறு நிகழ்த்து கலைக்காரரை சேர்த்துச் சொல்லமுடியும். பண்ணைப் பண்ணுவார் பாணர்; பொருந்துவார் பொருநர்; கோடு = ஊதுகொம்பு; கோடுவார் கோடியர்; குல்>குத்து>கூத்து. குத்துவார் கூத்தர்; அகவுவார் அகவர்; இயைவார் இயவர்; கண்ணுதல் = பொருத்துதல், கட்டுதல். கட்டுவார் கண்ணுளர்; துடிப்பது துடி, எனவே துடியர்; குடம்>கடம் = குடமுழா; கடத்தை அடிப்பவர் கடம்பர்; பறை = தாளக் கருவி; பறைவார் பறையர்; கிணை என்பது தாளக்கருவியே, கிணையர்; குயிலுவர் = கூவுவார்; கருவி வாசிப்போர்; வயிர் = மூங்கில் கருவி’ வயிரியர்; விற>விறல்>விறலி = உள்ளக்குறிப்பிற் தோன்றி உடம்பில் வேறுபாடு காட்டுவோர் விறலியர்; மதங்கம் = இக்கால ம்ருதங்கம் அன்று மதங்கமென்றே சொல்லப்பட்டது, மதங்கியர் மதங்கம் வாசிப்போர்.

கெடுவில் நல்லிசை சூடி = கேடிலா நற்புகழ் சூடி; நடுகல் ஆயினன் புரவலன் எனவே.= நடுகல்லாயினான் புரவலனென்று; பைதல் ஒக்கல் தழீஇ அதனை = வாடும் சுற்றம் தழுவி அதனை; வைகம் வம்மோ  = புலர்த்துவோம், வருவீரா?

பாட்டின் மொத்தப் பொருள்:

பாடுவோருக்குக் கொடுத்த பல்புகழன்,
ஆடுவோர்க்குக் கொடுத்த பேரன்பினன்,
அறவோர் புகழ்ந்த, ஆயும் செங்கோலன்,
திறமுடையோர் புகழ்ந்த திட அன்பினன்,
மகளிர்(க்குச்) சாய்மானம் (ஆனவன்),
வலியோர்க்கு வலி(யானவன்),
குற்றமற்ற கல்வியால் உயர்ந்தோர்க்குப் புகலிடம் (ஆனவன்),
அத்தன்மை (உடை)யவன் (எம் தலைவன்) என்று சொல்லாது,
அத்தகையோனை நினையாத கூற்றம்
அகன்ற உலகின் வருத்தம் கூடும்படியாக,
(அவன்) இன்னுயிரைக் கொண்டு போனது.
வாய்மொழிப் புலவரே!
கேடிலா நற்புகழ் சூடி நடுகல்லாயினான் புரவலனென்று
வாடும் சுற்றம் தழுவி
அதனைப் புலர்த்துவோம், வருவீரா?

பாட்டைப்பாடிய பொத்தியார் செயின நெறியினரோ, அற்றுவிக நெறியினரோ அல்லர். ஆனால் சோழனோடு இழைந்தவர். அவனுக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காதவர்.  அடுத்த பாடலைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, October 19, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 12

அடுத்து புறம் 220 ஆம் பாடலைப் பார்ப்போம். இதுவும் பொதுவியல் திணையைச் சேர்ந்ததே. துறை முன்னதுபோற் கையறு நிலையாகும். பெருங்கோக்கிள்ளி இறந்தபின் அவனுடலை இடுகாட்டில்  அடக்கஞ் செய்து, எல்லோருந் திரும்பி வந்தபின், பொத்தியார் கலங்கிப் பாடுகிறார். ”யானை கட்டுங் கம்பம் யானையின்றித் தனித்ததுபோல் இக்கூடம் வெறிச்சிட்டுக் கிடக்கிறதே? யானைபோல் இருந்தவன் போய்விட்டானே?” என்கிறார்.

அதற்குமுன் ஒரு சிறிய இடைவிலகல். இப்பாட்டுத் தொகுதியிற் சோழனைக் குறிக்கும் பெயர்களான ”கோப்பெருஞ் சோழன், பெருங்கோக் கிள்ளி, பொலம் தார்த் தேர்வண் கிள்ளி” என்று எல்லாமே அடைகள் சேர்ந்த பொதுப்பெயர்கள் ஆகும். சோழனின் விதப்பான இயற்பெயர் என்னவென்று நமக்கு எங்குமே தெரியவேயில்லை. இப்படிப் பொதுப்பெயர், அடைப்பெயர், பட்டப் பெயர்களையே விளித்துக் குறிப்பிடுவது தமிழரின் பல்லாண்டுப் பழக்கம். [“பாவாணரெ”ன்ற பட்டப்பெயரைக் கண்டு வெதும்பி எரிச்சற்பட்டு தமிழ் வெறுப்பாளர் ஒருவர் ”ஞானமுத்து தேவநேயன்” என்ற இயற்பெயரால் அழைக்க வேண்டும் என்று இணைய மடற்குழுக்களிற் கொஞ்சகாலம் அடம்பிடித்தார். தமிழிலக்கியம் ஆழப்படிக்காத அவர் ”ஆதன், இரும்பொறை, கிள்ளி, சென்னி, மாறன், செழியன்” என்ற பெயர்களைக் கண்டு என்ன சொல்லியிருப்பாரோ தெரியவில்லை. ஏனெனில் இவை ஒன்று கூட இயற் பெயரில்லை.]

பொத்தியார் என்பதும் இயற்பெயராய்த் தோற்றவில்லை. ”நார்மடி, சீலை, ஒரு பழைய சோழநகர், மடல்விரியா வாழைப்பூ, சோளக்கதிர், தவசக்கதிர், மணி வகை, தோலுரியாப் பனங்கிழங்கு, அண்டம், பொது” என்று பொத்திக்குப் பொருள்சொல்வர். "வாழைப்பூ, பனங்கிழங்கு, சோளக்கதிர், தவசக்கதிர், மணிவகை, அண்டம் வரால், பொது" போன்றவை மாந்தப்பெயருக்கு ஒத்து வராது; ”நார்மடி, சீலை, பழைய சோழநகர்” என்றவை ஒத்துவரலாம். உடம்பைப் பொத்துவது பொத்தி என்று உணர்ந்தால் பொத்தி சீலையை, புடவையை உணர்த்துவது புரியும். உறையூர்க் கூறை(ப்புடவை)யின் பெருமை 20 ஆம் நூற்றாண்டு முன்பாதியிலும் இருந்தது. சிராப்பள்ளி நெசவாளர் உறையூர், புத்தூர் போன்றவிடங்களில் இன்றுங் கணிசமானவர். பொத்தியூரே உறையூருக்கு அடுத்துள்ள புத்துரானதோ என்ற ஐயம் எனக்குண்டு. (பொத்திகளைச் செய்வது பொத்தியூராகி, பொத்தியூரார் பொத்தியார் ஆகலாம்; அன்றிப் பொத்திகளை நெய்பவர் பொத்தியாராகலாம்.)

பதிற்றுப்பத்து 9 ஆம் பத்தின் பதிகத்தால், இவ்வூகத்திற்கு வலுக்கிடைக்கும். குட்டுவன் இரும்பொறைக்கும், மையூர்(>மைசூர்)க்கிழான் வேள்மகள் அந்துவஞ் செள்ளைக்கும் பிறந்த இளஞ்சேரல் இரும்பொறையின் சீர்த்திகளை,  . 

வெருவரு தானையொடு வெய்துறச் செய்துசென்று
இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
அருமிளைக் கல்லகத்து ஐந்தெயில் எறிந்து
பொத்தி யாண்ட பெருஞ்சோ ழனையும்
வித்தை யாண்ட இளம்பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று

என்று வரிசைப்படுத்துவர். இதன்படி இளஞ்சேரல் இரும்பொறை, சோழ, பாண்டிய வேந்தரும், விச்சியானும் வீழ 5 எயில்களை அழித்திருக்கிறான். இதற்கடுத்துப் பொத்தியாண்ட பெருஞ்சோழனையும், வித்தையிற் சிறந்த இளவல் பழையன் மாறனையும் வெல்கிறான். இதைப் படிக்கும்போது சோழ வேந்தனும், பொத்தியாண்ட பெருஞ்சோழனும் வெவ்வேறென்பது உறுதி ஆகிறது. (சோழ வேந்தனைக் காட்டிலும் அகவைமூத்த பங்காளி இப்பெருஞ் சோழன் ஆகவேண்டும். கிட்டத்தட்ட எல்லா உரையாசிரியருமே இப்பெருஞ் சோழனைக் கோப்பெருஞ்சோழனோடு போட்டுக் குழப்பியது எப்படியென எனக்கு விளங்கவில்லை.) சோழவேந்தன் புகாரிலோ, உறையூரிலோ இருப்பவன். பொத்தி, உறையூருக்கு அருகிலென்றால் சோழவேந்தன் உறையூரில் இருக்கமுடியாது; இளஞ்சேரல் இரும்பொறைக் காலத்தில் சோழ வேந்தன் புகாரிற்றான் இருந்தான் போலும். இப்படியோர் இயலுமையே 9 ஆம் பத்திற்குப் பொருந்துகிறது.

உறையூருக்கருகில் உள்ள இற்றையூர்களைப் பார்க்கின், புத்தூரின் பொருத்தம் புரிந்தது. 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலர் அரசுப் பதிவுகளில் Poothoor என்றே இதன் பெயர் இருந்திருக்கிறது. உறையூர் வெக்காளியம்மன் கோயில், அஞ்சு வண்ணர் கோயில், கமலவல்லி நாச்சியார் கோயில் போன்றவற்றின் கல்வெட்டுக்களில் புத்தூரின் பழம்பெயர் இருக்கிறதா என்றாயவேண்டும்.  (இன்னொன்றும் சொல்லவேண்டும். விசயாலனுக்கு சற்று முன்னால், பாண்டியன் கடுங்கோன் காலத்திலுங் கூட பெருஞ்சோழர் கும்பகோணத்திற்கு அருகிலேயே இருந்திருக்கிறார். அதேபொழுது  பொத்தப்பி சோழர் என்பார் ரேநாட்டுச் சோழர் என்று சொல்லி இற்றை சித்தூர் மாவட்டம் தள்ளிப் பழைய தொண்டைமண்டல நிட்சியில் இருந்திருக்கிறார். இந்தப் பொத்தப்பிச் சோழரும் பொத்தியூர் (உறையூருக்கு அருகிலுள்ள ஊர்) பெயர் கொண்டவரோ என்ற எண்ணமும் எனக்குண்டு. பொத்தப்பி - பொத்தியூர் தொடர்பை ஆய வேண்டும். இனிப் பாட்டிற்குள் போவோம்.     

பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களி றிழந்த பைதற் பாகன்
அதுசேர்ந் தல்கிய வழுங்க லாலை
வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக்
கலங்கினே னல்லனோ யானே பொலந்தார்த்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே

                                 - புறம் 220

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.
   
பெரும் சோறு பயந்து பல் யாண்டு புரந்த
பெரும் களிறு இழந்த பயிதல் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு
யானே
பொலம் தார்த் தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே
கலங்கினேன் அல்லனோ

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

பெருஞ்சோறு என்பது “பெரிய சோற்றுருண்டை, கோயில்களிற் கொடுக்கும் ”ப்ரசாதம்”, நீத்தார்கடன் நாட்களில் (= முன்னோருக்குப் பிண்டங் கொடுக்கும் திவச நாட்களில்) கூடுவோருக்கு அளிக்கும் விருந்து” என்று வெவ்வேறு பொருள்களிற் சங்க இலக்கியங்களிற் பயிலும். இச் சொற்பொருளைப் பல உரையாசிரியருஞ் சரியாக உள்வாங்கிக் கொண்டதில்லை. பெருஞ்சோற்று உருண்டை என்பது அதன் பரும அளவாற் கொண்ட பொருள். “ப்ரசாதம்” என்பது பெருஞ்சோற்றின் நேரடிச் சங்கத மொழிபெயர்ப்பு; தெய்வப் படையலென்பதால் “பெருமெ”னும் அடைபெற்று விதந்தது. “நீத்தார் கடன் விருந்து என்பது” பெரியோர் நினைவுகருதிச் செய்யும்விருந்து என்ற பொருளில் எழுந்தது. இங்கு யானையைத் தொடர்புறுத்துவதால் “பெருஞ் சோற்றுருண்டை” என்பதே பொருந்தும். பயத்தல்= கொடுத்தல். பயன்/பலன்  என்ற பெயர்ச்சொற்கள் பயிலுமளவிற்கு இவ் வினைச்சொல் இக்காலத் தமிழிற் பயன்படாதிருக்கிறது; புரத்தல்= காப்பாற்றல். ”பெரும்சோறு பயந்து பல்யாண்டு புரந்த” என்பதற்குப் “பெருஞ்சோற்றைக் கொடுத்துப் பல்லாண்டு புரந்த” என்பதையே பொருளாகக் கொள்ளலாம்.

பயிதல் என்பது படிதல், வாடுதலாகும். இச்சொல்லைப் புறம் 212 இல் பார்த்திருக்கிறோம். படி>பயி>பசி என்றும் சொற்றிரிவு ஏற்படும். பயிதற் பாகன்= வாடும் பாகன், சோகமுற்ற பாகன். ”பெரும் களிறு இழந்த பைதல் பாகன்” என்பது “பெரும் யானையை (இப்போது) இழந்து வாடும் பாகன்” என்ற பொருள்கொள்ளும். அல்குதல்= தங்கல். அழுங்கல்= ஆரவாரம்; பொதுவாகக் காட்டுயானைகள் குடும்பம் குடும்பமாயிருக்கும். வெவ்வேறு குடும்பங்களைப் பிடித்து ஒரே கூடத்திற் கட்டிப்போடும் போது ஒன்றிற்கு ஒன்று ஆரவாரஞ் செய்து தம் இருப்பையும், புலத்தையும் உறுதிசெய்யும்.

யானைக்குடும்பங்கள் பலவுள்ள கூட்டம் ஆரவாரத்தோடிருப்பது இயல்பே யாகும். ”அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை”= ”அவை சேர்ந்து தங்கிய ஆரவாரக்கூட்டத்தில்” . வெளில் என்பது யானைகட்டும் தூண், கம்பம் அல்லது தறி. பாழ்= வெறுமை, வெற்றிடம், சுன்னம், சுழியம் (zero) என்பதற்குப் பாழ் என்பதையே பரிபாடலிற் பயன்படுத்துவர். புள்ளியின் நீட்சியாய்ப் புள்ளியம்> பூழியம்>பூஜ்யம் என்பதும் பாழையே குறிக்கும். இப்படி zero விற்கு இணையாய் 4 வேறு தமிழ்ச்சொற்கள் நம்மிடம் இருக்கையில் அவற்றைவிடுத்துத் திரிவுச் சொல்லான பூஜ்யத்தையும், பூச்சியத்தையும் நாமேன் பயன்படுத்துகிறோம்? ஆழ ஆய்ந்தால், சுழியக்கருத்தீடு தெற்கிருந்து வடக்கே போனதே. கலுழ்தல்= கலங்குதல்; ”வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு” = (யானை கட்டும்) கம்பம் பாழாயிருக்கக் கண்டு கலங்கியதுபோல.

வண் கிள்ளி = வள்ளன்மை காட்டுங் கிள்ளி. ”பொலம் தார்த் தேர் வண் கிள்ளி” என்பதை “பொன்மாலைகள் வேய்ந்த தேரிற் (பயணித்து) வள்ளன்மை காட்டுங் கிள்ளி” என்று சொல்லலாம். தமிழில் எல்லாவிடங்களிலும் விதப்புச்சொல்லை ஆளுவதில்லை. இடம், பொருள், காலம் கருதிப் பொதுமைச்சொல்லையே விதப்பிற்கு நிகராய்ப் பலவிடங்களிற் பயன் படுத்துவது உண்டு. ஓர் இறப்பு நிகழ்விற்குப் போகிறோம். அப்பொழுது ஒருவருக்கொருவர் “இப்படிப் போய்ச்சேருவாருன்னு நான் நினைக்கவே இல்லை” என்று சொல்கிறோமல்லவா? போகிய= போய்ச்சேர்ந்த, இறந்த. ”பொலம் தார்த் தேர் வண் கிள்ளி போகிய” என்பதற்குப் “பொன்மாலைத் தேரில் வள்ளன்மை காட்டும் கிள்ளி போய்ச்சேர்ந்த” என்று பொருள் சொல்லலாம்.

அக்காலத்தில் ஒரு மரத்தடியிற்றான் ஊர்மன்றங்கள் கூடும். பொதியில், அம்பலம், மன்றம் என்பதெல்லாம் ஒருபொருட் சொற்கள். திருவரங்கத்தின் அடையாளமான அம்மரத்தடியில் இந்த ஊர்மன்றம் இருந்திருக்கலாம். மூதூர் மன்றமென்பது பல்லாண்டுகளாய்க் கூடிய ஊர்மன்றத்தைக் குறிக்கிறது பேரிசைப் பட்ட முதூரென்பது பெரும்புகழ் கொண்ட மூதூரென்று பொருள் கொளும். ”பேர் இசை மூதூர் மன்றம் கண்டே” = ”பெரும்புகழ் மூதூர் மன்றத்தைக் கண்டு”

பாட்டின் மொத்தப் பொருள்:

பெருஞ்சோற்றைக் கொடுத்துப் பல்லாண்டு புரந்த பெரும் யானையை
(இப்போது) இழந்து வாடும் பாகன் அது சேர்ந்து தங்கிய ஆரவாரக் கூடத்தில்
(யானை கட்டும்) கம்பம் பாழாயிருக்கக் கண்டு கலங்கியது போல
பொன்மாலைத் தேரில் வள்ளன்மை காட்டும் கிள்ளி போய்ச்சேர்ந்த
பெரும்புகழ் மூதூர் மன்றத்தைக் கண்டு யான் கலங்கினேன் அல்லனோ 

மூதூர் மன்றத்தைக் கண்டு கிள்ளி இவ்வுலகை விட்டுப் போனதையெண்ணிப் பொத்தியார் கலங்குகிறார், நண்பன் பிரிவைத் தாங்க இயலாத் துக்கம். களிறு கட்டிய தறியின் வழியாய் வெளிப்படுகிறது.

அன்புடன்,
இராம.கி.  .