Sunday, November 04, 2018

தூங்கெயில் - 7

எயிலின்பொருளாக மதில் (fortress, wall, fortification) ஊர், நகரம் (town,city) என்று தமிழ் அகரமுதலிகளிற் பொதுப்படக் கொடுப்பர். இவற்றுள் சரியான பொருள் காண்பது எப்போதுமே சிக்கல். இடம், பொருள், ஏவல் பார்க்கவேண்டும். சட்டென்று சொல்லிவிடமுடியாது. எது முதற்பொருள், எது வழிப்பொருள் என்பதும் காணவேண்டும்.

[சில திங்களுக்குமுன் மடற்குழுக்களிற் பேசிய ’தகரம்’ பற்றிச் சொன்னால் மேற்கூறுஞ் சிக்கல் புரியும். ”மயிர்ச்சாந்து, மணம்வீசும் மரவகை, மணம், வெள்ளீயம், உலோகத்தகடு, இதயத்தின் உள்ளிடம்” என அகரமுதலிகளிற் பொதுப்பட அதற்கு விளக்கமிருக்கும். அவற்றைப் படித்தபின், ”மணம்வீசும் மரவகை எது?” என்ற கேள்வியெழுந்தால், இதே அகரமுதலிகளில் விடை கிடைக்காது. விலங்கு, மீன் வகைப் பெயர்களிலும் இதுபோலவே, விதப்பு விளக்கம் கிடைக்காது. ”குறிப்பிட்ட விலங்கோ, மீனோ என்ன இனம்? என்ன குடும்பம்? என்ன வகை விதப்புயிரி (species)?”- என்ற கேள்விகளுக்கும் தமிழில் விடை காண்பது அரிது. வேறுவழியின்றி ஆங்கிலக் களஞ்சியத்தையே நாம் தேடி ஓடவேண்டும். ஒவ்வொன்றிற்கும் இப்படியானால், தமிழ் எப்படி அறிவியல் மொழியாகும்?

இதுபோகத் தமிழ்ச்சொல்லிற்கு அகரமுதலியிற் பொருள்காணும் வழக்கம் நம்மூரில் அரிதென்பதால் துறைசார் அகரமுதலிகளும் பெரிதாய் எழுவதே யில்லை. ஆனாலும், “எங்க வீட்டுக்காரருங் கச்சேரி போனார்” என்றபடி தமிழகப் பல்கலைக் கழகங்களில் அகரமுதலித் துறைகள் உள்ளன. ஏது ஒன்றிற்கும் ஆங்கில வழியிற்றான் அறிவியல் விளங்குமெனில், கால காலத்திற்கும் நோஞ்சானாய், சவலையாய்த் தமிழ் நிற்குமே? வீட்டுமுற்றம், சமையலறை, வெட்டிப்பேச்சு, சவடால், நையாண்டி, கேளிக்கை, திரைப்படம், மேடையுரை, கவியரங்கம், பட்டிமன்றமென வாழ்வின் ஒருபகுதிக்குமட்டும் தமிழை நறுக்கிக் கிடத்தி மற்றபடி ஆறங்கத்தைக் கீழே வீழ்த்தி ஆங்கிலத்தை வணங்குவது சரியா? எண்ணிப்பாருங்கள் தேவைகளுணராது நாமுள்ளதால், எந்தத் தமிழகப் பல்கலைக்கழகமும், ஆய்வு நிறுவனமும், தமிழ் வளர்ச்சித் துறையும் இதைச் சரிசெய்ய முன்வருவதில்லை. ”அம்மாவும் அப்பாவும் வேண்டாம்; ’மம்மியும் டாடியும்’ போதும்” என்று சொல்பவர் நாம் தானே?]

மேற்சொன்ன மதில், ஊர், நகரம் போன்றவை எயிலுக்கு முதற்பொருள்கள் அல்ல. கோட்டைப்பொருளை அகரமுதலிகள் குறிக்கவுமில்லை. மதிலும் எயிலும் ஒற்றைச்சொற்களல்ல; கூட்டுச்சொற்கள். மட்டு + இல் = மட்டில்> மத்தில்>மதில் என சொல் பிறக்கும். மட்டு>மத்து>மத்தித்தல்; மத்தி>மதி= அளவு; ”அம்மட்டும் போகாதே” என்கிறோமல்லவா? மதில் = அளவுகுறிக்கும் வரம்புச்சுவர். இக்கோட்டைக்கு இது வரம்பென (boundary) வரையறுப்பர். மட்டின் மேலிருந்த ”இல்” மதில் என்பது ஓரிரு கல் திண்ணத்தில் (thickness) அமையும் வெறுஞ்சுவரில்லை. அதன்மேல் பெரும்பாலும் கிடைமட்ட நடைத்தளம் உண்டு.

அதேபோல எய்வதற்கான இடம் எய்+இல் = எயிலாகும். மதிலும் எயிலும் எல்லாவிடத்தும் ஒன்றல்ல. எங்களூர்ப் பக்கத்துத் திருமெய்யம் போல், கானப்பேரெயில் (காளையார் கோயில்) போல், மதில் முழுக்க எயிலாகிக் கோட்டையாகலாம். அன்றி மதிலிற் சிலவிடங்கள் எயிலாகலாம். கோட்டையின் அடவு (design), கட்டுமானம் (construction) போன்றவற்றைப் பொறுத்து, வேல்வீரர், வில்வீரர் எயில் மாடங்களில் குவிந்திருப்பர். பழங் குமுகத்தில் அம்பெய்வோரை எயினரென்பர். அம்பு, ஈட்டிகளால் விலங்கு வேட்டையாடியும், மற்றமாந்தரைப் போரிற்கொன்றும், தன்னிருப்பை நிலை நாட்டவும் எய்தல் தொழில் பயனுறும். கோட்டைமதில் மேல் வில்லாளிகளும் ஈட்டியெறிஞரும் நடமாடும்படி அகலும் உள்ளகப் பாதை அகப்பாவாகும். (அகத்திற் பரவியது அகப்பா.) சீனப்பெருஞ்சுவரின் அகப்பா 2 வண்டிகள் ஒன்றையொன்று மோதாமற் பயணிக்குமளவிற்கு அகலங்கொண்டதாம். அகப்பாத் தளத்தைத் தாங்குமளவிற்குச் சுவரின் திண்ணம் (thickness) கூடியிருக்க வேண்டும்.

மதில்பற்றி இன்மொரு செய்தியுஞ் சொல்லவேண்டும். மத்திரை, மதிரையென பழங்கல்வெட்டில் வருவதை ஏற்காமல், மதுரையென மீத்திருத்தி இலக்கியங்கள் சொல்லியதால், ”சுவடிகளே சரி, கல்லைக் கீறியோர் படிப்பு அறியார்” என்பார் தமிழறிஞர். ஆனாற் படித்தவர் சரியா? தலைகீழாய் ஏன் இருக்கக் கூடாது? சுவடிகளில் மதிரையென்ற பெயரே முதலிலிருந்து (பின் சங்கதத்தைப் பார்த்து, வடமதுரை வெளிச்சத்தில் தமிழர் சூடுபோட்டுக் கொண்டதால்) நம்மூரை மீத்திருத்தமாய் மதுரையாக்கினாரா? சொல்ல முடியவில்லை. எது சரி? ஆழ்ந்துபார்த்தால், மதில்>மதிர்>மதிரை என்பது தமிழிற் சிறக்கப் பொருந்துஞ் சொற்பிறப்புத் தான். மக்கள்வழக்கில் கோட்டையால், அரசனால், தலைநகர்க்குப் பெயரிடுவது இயல்பே. சில பழந்தலைநகர்களின் பெயர்களைக் கவனித்தால் இது புலப்படும்.

மகதத்தின் முதல் தலைநகர் அரசகம் (ராஜ க்ருகம். அரசன் இருக்கும் வீடு). சேரநாட்டுக் கருவானது கருவூர், அதன் மதில் வலிந்திருந்ததால் வல்ஞ்சி> வஞ்சி (பலரும் வஞ்சிக்கொடியையும், வஞ்சி மரத்தையும் பிடித்துத் தொங்குவார். நானிங்கு குடவஞ்சி, கொங்குவஞ்சி என இரண்டையுஞ் சொல்கிறேன்), காழ்ஞ்சியது காஞ்சி (காழ்= திடம், உறுதி; காழ்த்த மதில்) சோழ அரசன் உறைந்தது உறந்தை, பகைவர் புகாதவூர் புகார்; மதிலாற் சிறந்தது மதிரை. சங்ககாலத்தெழுந்து (மணலூர்/கீழடிப் பள்ளிச்சந்தையில் அண்மையில் அகழாய்ந்தது ஒருவேளை பழ மதிரையோ, என்னவோ? மதிரைக்கு மிக அருகில் இன்னொரு நகரம் இருந்திருக்குமா???), மதிரை என்பது கண்ணகியால் எரிக்கப்பட்டு, இடம்மாறிப் பின்னைப் பாண்டியரால் மீளவெழுந்து, மாலிக் காபூராற் சீரழிந்து, 1300 இல் 3 ஆம் முறை கம்பண உடையாரால் மீண்டும் எழுந்து, ஆங்கிலரால் அழிக்கவும் பட்டது. 3 ஆம் கோட்டைச்சுவர் அழித்து அதில் மாரட்டு வீதியும், அகழி தூர்த்து வெளி வீதியும் எழுந்தன. சு.வேங்கடேசனின் அண்மைப் புதினமான “காவற் கோட்டம்” மூன்றாங் கோட்டையைப் பற்றிப் பேசும். படிக்கவேண்டிய புதினம். கீழடி ஆய்வு நமக்குப் பழம் மதிரையை அடையாளங் காட்டுகிறது.)

ஆலம்>ஆரம் என்பது மாலைபோல் அமையும் கோட்டையின் சுற்றுவரை யாகும். {circumference; இக்கலைச்சொல்லைச் சுற்றளவென்றே பலருஞ் சொல்வார். என் சிற்றகவையிலும் அப்படியே படித்தேன். அது சரியான தேர்வு அல்ல. கலைச்சொல் படைப்பதில் அவக்கரமாய் இப்படி ஏதோவொன்றை உருவாக்கிப் போட்டுவிடுகிறோம். அது கடைசிவரை குறைப்பட்டுத் தங்கிப் போகிறது. இயல்வெளியில் ஒரு வடிவத்தை இட்டளிப்பதை முகன வடிவியலில் (modern geometry) இடப்பென்பர் (topos). இடப்பியல் (topology), கணுக்குமை (connectedness), வட்டுமை (circularity) என்ற மூன்றுமே வடிவங்கள் பற்றி வடிவியலில் அடுத்தடுத்த புரிதல்களாகும். இவற்றின் பின்னரே அளத்தலுக்கான (measurement) மட்டிகை (metric) எழும். சரியான புரிதலில், அளத்தற் கருத்து முந்திவராது. ஏனெனில் அளவின் மதிப்பு கோல் நுணுகலாற் கூடலாம். அளவற்ற சுற்றுவரைகளும் வடிவியலிலுண்டு. தமிழகத்தின் ’சரியான’ சுற்றளவு என்னவென உங்களுக்குத் தெரியுமா? பகுவல் வடிவியல் (fractal geometry) வழியாய்ச் சற்று எண்ணிப் பாருங்களேன்? நான் சொல்வது புரியும். வட்ட மையத்திலிருந்து சுற்றுவரையின் தொலைவையும் ஆரமென இக்காலத்தில் விதப்பாகச்சொல்வர்.

பெருகு+ஆரம் = பெருகாரம் என்பது பெரிய மாலை. இது கோட்டையினுள்ளே சுற்றிவரும் பெரியபாதை. பெருகாரம்>ப்ரஹாரம் என்று சங்கதத்தில் திரித்து இன்று பெருங்கோயில்களின் உட்சுற்றைக் குறிப்பர். இதைச் சுற்றாலை யென்றுஞ் சொல்வர். திருவரங்கம் போன்ற பெருங்கோயில்களில் 7 பெருகாரம் இருப்பதாய்ச் சொல்வர். (திருக்கண்ணபுரத்திலும் 7 மதில்களிருந்து அதையொரு சோழன் அழித்துச் சுற்றியுள்ள கோயில்களைக் கட்டியதாய் ஒரு தொன்மமுண்டு,) சில கோயிற்பெருகாரங்கள் வீதியாகவே சொல்லப்பெறும். மதுரை அங்கயற்கண்ணி கோயிலின் ஆடிவீதி ஒரு பெருகாரந் தான்

அடுத்தசொல் உவளகம். உள்வு>உவ்வு; உவ்வு+அள்=உவள்= கோட்டையின் உட்பக்கம் interior of a fort என்று விரியும். உவளென்று சொல்லாது இற்றைத் தமிழில் உள்ளகமென நீட்டிமுழக்குவார். குறுஞ் சொற்களைப் பயில நாம் முன்வரவேண்டும். சிறைச்சாலை, மதில், வாயில், பள்ளம் அகழியென்ற பொருட்படவும் உவளைப் பயன்படுத்தியுள்ளார்.

இதற்கடுத்தது ஓதை. மதிலுக்கு வெளியுள்ள அகழியை ஓடையென்றுஞ் சொல்வார். மதிலுக்குள்ளே ஆனால் சற்று ஒட்டி ஒத்தியிருப்பது ஓதை. மதிலைக் காப்பாற்றும் படையினருக்கு மதிலையொட்டினாற் போல் உதவுஞ் சாலை இதுவாகும்.

மதிலுக்குக் கடகமென்ற பெயருமுண்டு. குடங்குதல் = வளைதல், சூழ்தல்; குட>குடம்>குடகம்>கடகம் = கோட்டையைச் சூழ்ந்த மதில் (இங்கே வட்டுமைக்கு மாறாகச் சூழ்தலே முகன்மையுறும்.) மதிலின் இன்னொரு பெயர் காப்பு; கவ்வியது கவ்வு>காவு>காப்பு என்றாகும். கவ்வு>காவு என்பதில் இருந்தே காவடியென்ற சொல் உருவானது. அதையிங்கு விளக்கினால் வேறிடத்திற்கு இட்டுச்சொல்லும். காப்பிற் சூழ்தலே முகன்மைப் பொருள் ஆகும். “திருத்துஞ்சு திண்காப்பின்” என்ற வரிகளை (பட்டினப்பாலை 41) ஓர்ந்து பார்க்கலாம்.

அடுத்துவருவது சாலம். தொடக்ககாலத்தில் கோட்டைகளை வெறுங்கல்லால் அன்றி, மரமுஞ் சேர்ந்தேகட்டினர். (ஆனானப்பட்ட மகதரின் கோட்டை பெரிதும் மரத்தால் ஆனது.) யாமரம் என்பது Hardwickia binata வைக் குறிக்கும். ஆச்சாமரமென்றும் குறிப்பிடுவார் யா எனும் கருமைவேரிற் தொடங்கி யா> யால்>யால்+அம் = யாலம் என்றாகிய பெயரும் இதற்குண்டு. சங்கதத்தில் ஸ்யாலம்>ஸாலம் ஆகிச் சாலமெனத் தமிழில் மீண்டு வரும். மராமரத்திற்கும் சாலப் பெயருண்டு. சாலத்தாலான மதிலையும் சாலமென்பர்.

சிலுகு>சிறுகு>சிறகு என்பது பறவை பறக்க உதவுங்குறிப்பை முதலில் தந்து, பறவை/பறனையின் (பறனை = plane) இருபக்க முடிவாய் (இறுவாய்) இருக்கும் wings-side உறுப்பைக்குறித்தது. (தெருவின் இரு பக்கங்களும் (sides) கூடச் சிறைகளே. சிறை-side என்பது போன்ற தமிழ்-ஆங்கில ஒப்புமைகளுக்கு வழக்கம்போல் இராம.கி.யைக் கடியாது சற்றாழ்ந்து ஓர்ந்து பார்க்கலாம்.) சிறை>இறை என்பது இறுதல்/முடிதல் பொருளில் மதில், ஒருபக்கம், எதிராளிகளைத் தனித்திறுத்தும் இடமெனப் பொருள்கொள்ளும். பார்க்க: இராம.கி.யின் http://valavu.blogspot.in/2011/05/blog-post.html]

அடுத்தது கோட்டைமதிலைக் காப்பாற்றும் நொச்சி. தனிநோக்கில் நொச்சி பாராது, உழிஞை, வஞ்சி, காஞ்சித் திணைகளோடு பொருத்திப் பார்ப்பது தமிழரின் அரசுக்கோட்பாட்டிற்கான புரிதலை நல்கும். தமிழரின் பழங்குடி வாழ்க்கையில், ”தன்(னு)மை, குடி, நிலம், கோட்டை” என்ற 4 உறுப்புக்களோடு தொடங்கிய இக்கோட்பாடு,   .

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசறுள் ஏறு.

எனும் குறளின் படி ஏழுறுப்பாய் விரிந்தது. இதே கருத்து அருத்தசாற்றத்திலும், பின்வந்த சில வடநூல்களிலுமுண்டு. வள்ளுவப் பொருட்பாலுக்கும், அருத்த சாற்றத்திற்கும் ஒப்புமை/வேற்றுமை காணும் பொழுது ஒரு பென்னம்பெரிய நூல் விரியக்கூடும் எந்த ஆராய்ச்சியாளர் முன்வருவார்? கூழென்ற சொல் treasury யைக் குறிக்கும். தவிர, economics ற்கு இணையாகவும் ”கூழியலைப்” பயனாக்கலாம். அரண் = கோட்டை/மதில். படை, கூழ், அமைச்சு, நட்பு என்பவை நிலத்திலிருந்து விரிந்தவை.

அமைச்சென்பது பழங்காலத்தில் மந்திரிகளை மட்டுமின்றி, அரசு இயந்திரத்தையும் உணர்த்தும் [bureaucracy; இதைக் கோத்தொழில் என்று சிலப்பதிகாரங் குறிக்கும். bureaucrat கோத்தொழிலர்/ கோவலர் என்றாவார். சிலம்பின் நாயகனுக்கு கோவலந்தொழில் (bureaucracy) செய்யும் முற்பிறப்பிற் பரதனென்ற இயற்பெயரையும், பரவத்தொழில் (trading. விலையைப் பரத்துபவர் பரதர்; பர-தரும் கடலோடும் பரத-வரும் வெவ்வேறானவர். எழுத்துச்சேர்க்கையும் பொருளும் வேறாகும்) செய்யும் இப்பிறப்பிற் கோவலனென்ற இயற்பெயரையும் அமைத்து ஊழ்விளையாட்டை இளங்கோ உணர்த்துவார்.]

2000 ஆண்டுகளுக்குமுன் அமைச்சர் என்றசொல் இக்கால இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/அதிகாரிகள் (IAS) போன்றோரையுங்கூடக் குறிக்கும். இதே சொல் பாகதம்/பாலியில் அமாத்ய என்றழைக்கப் படும். மேலைமொழிகளில் வரும் administer என்ற சொல்லும் அமாத்ய என்பதோடு தொடர்புள்ளதே. அசோகன் ஆட்சியில் 2000 க்கும் மேற்பட்டு அமாத்யர் இருந்தாராம். இற்றைத்தமிழில் அமைச்சர் என்றதன் பொருளைக் குறுக்கி மந்திரியென்றே புரிந்துகொள்ளப் படுகிறது. அரசியந்தரத்தைக் கட்டி அமர்த்தப்பட்டவர் (அமைத்தியவர்) அமைத்தர்>அமைச்சர். இன்னொருவகையில் அமைத்த>அமாத்ய. அமர்த்தல் = இருத்தல். அமை>அவை>சவை.>சபை எல்லாம் தொடர்புடைய சொற்கள். தமிழேதோ தனித்தது; பாகதம்/பாலி/சங்கதத்திலிருந்து இது கடன் வாங்கியது என்றுகொள்ளாது இதை மேற்கூறிய மொழிச்சொற்களோடு ஒருங்கே பார்த்தால் நான்சொல்லும் தொடர்புகள் புரியும்.   
 
அதிகார உழியைக் (=இடத்தை) கைப்பற்றக் கோட்டை மதிலரணை அழிக்குஞ் செயல் உழியை>உழிஞையாகும். உழிஞை செய்வோரை நொய்ய வைப்பது (வலிவிழக்க வைப்பது) நொச்சிப் பணி. அடுத்த பகுதியில் இவையிரண்டோடு, புரிசை, வாரி, வேணகை, வேதி, வேலி ஆகியவற்றையும் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: