Monday, June 21, 2010

பெருதகை

கைநிறைய நெல் வைத்திருந்தோம்; திடீரென்று ஏதோ தவறி மண்ணிற் சிதறிவிட்டது. தொலைவில் இருக்கும் மற்றோருக்கு நெல்மணிகள் நம்மிடம் இருந்ததை எப்படி அடையாளம் காட்டுவது? சிதறிய நெல்மணிகளுக்கு அருகில் வந்து, அவற்றைச் சேர்த்து, பெருக்கிக்/பெருவிக் காட்டினாற் தான் நெல் இவ்வளவு இருந்தது என்று யாரும் நம்புவார்கள். To prove is to enlarge the relevant things, to concentrate, to bring them up, or to make it big.

நமக்கு ஏதோ ஒரு நிகழ்வு நடந்து விட்டது, நிகழ்வு நடக்கும் போது மற்றோர் இல்லை. அதை எப்படிப் பின்னால் மற்றோருக்கு உணர்த்திக் காட்டுவது? குறிப்பிட்ட நிகழ்வு நடந்ததற்கான சான்றுகளைச் சேர்த்துப் பெருவிக் காட்டினாற் தான் அந்த நிகழ்வு நடந்ததென்று மற்றோர் நம்புவார்கள். To prove is to enlarge the relevant things, to concentrate, to bring them up, or to make it big.

இதே போலக் கணிதத்தில் சில விவரங்களைச் சொல்லி, பின் கணிதக் கோட்பாடுகளைப் பயன்படுத்திச் சிலவற்றை நிறுவச் சொன்னால், அதை எப்படிச் செய்கிறோம்? கொடுத்த விவரங்களில் இருந்து கணிதக் கோட்பாடுகளுக்கிணங்க, பல்வேறு சமன்பாடுகளைத் திரட்டி, ஒன்றிலிருந்து இன்னொன்று எழும் என்று ஏரணங் காட்டிப் பெருகிக் சொல்லும் போது தான் ஏதொன்றையும் நம்மால் நிறுவமுடிகிறது. To prove is to enlarge the relevant things, to concentrate, to bring them up or to make it big.

வாழ்க்கையில் நிறுவுதல் (to establish) என்பது பெருகுதல்/பெருவுதலோடு (to prove) தொடர்புற்றது. சேர்க்கச் சேர்க்க அது பெருவும்/செறியும், பெருவும் பொழுது, செறியும் பொழுது தான் நம் நம்பிக்கை கூடுகிறது. உண்மை எதுவென்று புரியத் தொடங்குகிறது. மெலிந்து ஓரியாய்க் கிடந்தால் யார் நம்புவார்கள். slender proof என்று சொல்லிப் போய்விடுவார்கள். பெருவுதலுக்கும் slender -க்குமான முரணைப் பார்த்தீர்களா?

இந்தக் காலத் தமிழில் நிறுவுதல் என்ற ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டே to establish, to prove என்று பலவினைகளுக்கும் பொருத்தி ஒப்பேற்றிவிடுகிறோம். என்னைக் கேட்டால் நடைமுறையில் நிறுவுதல், பெருவுதல்/பருவுதல் என்ற இரு சொற்களையும் இதற்கு இணையாய் வைத்துக் கொள்வது அதிகப் பயனைத் தரும். ஏனென்றால் to prove என்பதோடு proof, provability, probability போன்றவை தொடர்புடையவை. எவ்வளவு முயன்றாலும் நிறுவம், நிறுவுமை போன்றவற்றின் பொருட்பாடுகளை proof, provability போன்றவற்றிற்கு நீட்டுவது கடினம்.

probability என்ற சொல்லிற்கு நிகழ்தகை, நிகழ்தகவு என்ற சொல் புழங்கிப் பார்த்திருக்கிறேன். ”இது நிகழும், நிகழாதுபோகும்; நிகழ்வதற்கு இத்தனை வாய்ப்புக்கள் உள்ளன” என்ற கருத்தை உள்ளடக்கியது ”நிகழ்தகை” என்ற சொல்லாகும். ஆனால் அந்தச் சொல் இன்னும் புழக்கத்தில் வரச் சரவற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. சொல்லின் ஊடே ழகரமும், தகரமும் அடுத்தடுத்து வரும்பொழுது புணர்ச்சியின் காரணமாய் அவற்றை ட-கரமாக மாற்றவேண்டும். இருந்தாலும் (நிகடகை என்பது சொல்லுதற்கு எளிதில்லை என்பதாலும்) புணர்ச்சி பழகாது பலரும் நிகழ்தகை என்றே எழுதுகிறார்கள். அதோடு, நிகழ்தகை என்ற சொல் probablity க்கும் to prove க்கும் உள்ள உறவை காட்டாது இருக்கிறது.

If inifinite attempts are made, any probability is almost provable. Probability is potential provability. Provability and probability are related through just a change of v to b. என்னைக் கேட்டால் அடிப்படைப் பொருள் வழுவாமல் தமிழில் இணைச்சொற்களை உருவாக்க முடியும். அவை, .

பெருவுதல்/பருவுதல் = to prove
பெருவு/பருவு = proof
பெருவுமை/பருவுமை = provability
பெருதகை/பருதகை = probability, probable, probabilistic
பெருதகையாக/பருதகையாக = probably

அன்புடன்,
இராம.கி.

Tuesday, June 08, 2010

தமிழி உயிர்மெய்களின் அடவு

தமிழியில் உள்ள இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களை மாற்றி அவற்றை கிரந்தக் குறியீட்டோடு நிறுவுவதற்குத் தமிழெழுத்துச் சிதைப்பாளர் இப்போது பெரிதும் முயன்று கொண்டிருக்கிறார். அதுவும் செம்மொழி மாநாடு இன்னும் 15 நாட்களில் வரப்போகிறதா? வயிற்றில் நெருப்புக் கட்டியதுபோல் சிலருக்கு இருப்புக் கொள்ளவில்லை ”இருக்கும் நாட்களுள் ஏதேனுங் குழப்பஞ்செய்து தமிழக அரசாணையைப் பெற்றுவிட மாட்டோமா?” என்று குட்டிக்கரணம் போடுகிறார். இன்னுஞ்சிலர் “கொம்புகளின் குதர்க்கம்” என உளறுகிறார். மொத்தத்தில் ”அவர்சொன்னார், இவர்சொன்னார்” என மேலோடக் கூறி, அரசியலாரோடு கூடிக் குலவி, உண்மைத் திராவிட ஆர்வலரையும் ”பெரியார் பெயர் சொல்லி” ஏமாற்றி, எல்லோருக்கும் எல்லாமுமாய் கவடம் பேசிக் கருமமே கண்ணாய்ச் சிதைப்புவேலை செய்கிறார். திராவிடச் சிந்தனையாளர் தெரிந்தோ, தெரியாமலோ, எழுத்துச் ”சீர்திருத்தம்” பேசுவதும் இச்சிதைப்பு வேலைக்கே கொண்டுபோய்ச் சேர்க்கும். எல்லா எழுத்தும் ”கணியில் இரண்டு பொத்தான் அடிப்பு” என வந்தபிறகு இனிமேல் எவ்வெழுத்துச் சீர்திருத்திற்கும் பொருளில்லை என்பது ஆழமாய்ச் சிந்திப்போருக்குப் புரியும்.

தமிழெழுத்துச் சிதைப்பாளர் தமிழுக்குமட்டும் உலைவைக்காது, கூடவே தமிங்கிலம் எனும் குறைப்பிள்ளையையும் பிறப்பித்தெடுக்க எழுத்துநடை போடுகிறார். தமிங்கில மொழியை எழுத்தில் கொண்டுவர 31 அடிப்படை எழுத்துக்கள் பற்றாது; 51 இருந்தாற்றான் எழுதமுடியும். (இணையத்தில் ஏராளமான தமிழ் இளைஞர் தம் அறியாமையிலும், சோம்பலிலும், ஒயிலாய் ஆடுவதாய் எண்ணிக்கொண்டும் உரோமனெழுத்தில் தமிழெழுத முற்படுவது இன்னொரு சோகம். இவருக்கும் 31 எழுத்துக்கள் பற்றா. இவர் முயற்சிகளும் தமிங்கிலத்தில் தான் கொண்டுசேர்க்கும்.) எனவே கிரந்த எழுத்துக்களை நுழைப்பதிலும் சிதைப்பாளர் மிகுவிருப்புக் கொள்கிறார். ஒருபக்கம் தமிழ் எழுத்துக்களைச் சிதைத்து, இன்னொருபக்கம் தமிங்கிலத்திற்குத் தேவையான எழுத்துக்களை நுழைக்க வழி பார்க்கிறார்.

உண்மையில் தமிழை எழுத இற்றைத் தமிழியிலிருக்கும் எழுத்துக்களே போதும். தேவையானால் ஏற்கனவேயுள்ள 5 கிரந்த எழுத்துக்களைக் கொண்டு பிறமொழி ஒலிகளைக் கொண்டுவரலாம். தமிழெழுத்துப் பாதுகாப்பாளரைப் ”பண்டிதர்” எனக் கேலிசெய்து, தமிழ்ப் புலவரை வேண்டாப்பிறவிகள் எனுமாப் போல ஒதுக்கி, ஒரு பண்பாட்டு ஒழிப்பே நடந்துகொண்டிருக்கிறது. வேடிக்கை பார்ப்போரும், சிதைப்பாளர் செய்வது நம் அடிமடியில் கைவைக்கும் செய்கை, கொஞ்சநஞ்சம் உள்ளதை உருவி நம்மை அம்மணமாக்கி இச்சிதைப்பாளர் ஓடப் பார்க்கிறார்” என்பதை அறியாமல் ”இன்னொருவருக்கு வந்தது போல்” வாளா இருக்கிறார்.

நடுவில் நிற்கும் பலருக்கும் ”தமிழ் உயிர்மெய்யெழுத்துக்கள் எப்படி எழுந்தன? அவற்றின் அடவு (design) எது?” என்ற பின்புலம் தெரியாமல் சிதைப்பாளர் முயற்சிகளுக்கு அரைகுறையாகத் தலையாட்டும் போக்கும் தென்படுகிறது. அறியாதாராய்ப் பொதுமக்கள் உள்ளதே ஏமாற்றின் அடிமானம் ஆகிறது. (பல தமிழசிரியருங்கூட ஏற்கனவே நடந்த திராவிட வழிகாட்டுதலில் மயங்கி எழுத்துச்சிதைப்பைச் சீர்திருத்தமென எண்ணித் தடுமாறுகிறார்.)

இக்கட்டுரையின் குறிக்கோள் 2700 ஆண்டுகளாய் இங்கு மாறாது இருக்கும் தமிழி உயிர்மெய்களின் அடவை விளக்கிச் சொல்வதாகும்.

பழங்கல்வெட்டுக்கள், நடுகற்கள், ஓட்டுச் சில்லுகள் ஆகியவற்றை ஆராய்ந்த தொல்லியலாளர், ”இந்தியத் துணைக்கண்டத்தில் சிந்து சமவெளி காலத்திற்கு அப்புறம் எழுந்த எழுத்துக்களில் ஆகப் பழையவை தமிழ்நாட்டிலும், இலங்கை அநுராதபுரத்திலும் தான் கிடைத்திருக்கின்றன” என்று கொஞ்சங் கொஞ்சமாய் ஏற்றுக் கொள்கிறார். தமிழ் நாட்டில் (கரூருக்கருகில் கொடுமணத்திலும், தேனி மாவட்டத்திலும்) கிடைத்த தமிழிப் பொறிப்புகள் தாம் இதுவரை இந்தியாவிற் கண்ட பொறிப்புக்களில் ஆகப் பழையனவாகும். கி,மு,4/5 ஆம் நூற்றாண்டு என்றே இவற்றின் காலம் சொல்லப்படுகின்றது. இலங்கையில் கிடைத்த பொறிப்பும் தமிழிக்கு இணையாகவே தெரிகிறது.

70, 80 ஆண்டுகளுக்குமுன் இதுபோல் பொறிப்புக்களை ”அசோகன் பெருமி” எனவழைத்தார். இப்பொழுது அசோகன் காலத்திற்கும் முன் கி.மு 4/5 ஆம் நூற்றாண்டுப் பொறிப்புக்களும் கிடைப்பதால் ”அசோகன் பெருமி எனச் சொல்வது பொருளற்றது” என்ற முடிவிற்குப் பெரும்பாலான தொல்லியலார் வந்துவிட்டார். உண்மையாகப் பார்த்தால், இலங்கையிற் கிடைத்தது பாகத மொழியின் பெருமிப் பொறிப்பு என்றும், தமிழகத்திற் கிடைத்தது தமிழிற் கிடைத்த தமிழிப் பொறிப்பு என்பதுமே சரியாகும்..

தமிழர் பலருங்கூடத் ”தமிழி” என்று பெருமிதத்தோடு, முற்கால எழுத்தைச் சொல்ல ஏன் தயங்குகிறாரென்று புரிவதில்லை. அதை ”அசோகன் வழிப்பட்ட பெருமி”, ”தமிழ்ப் பெருமி” என்று “ஊராருக்கு வந்த செய்தியாய்” ஒட்டுதல் இன்றிச் சொல்வது வியப்பாகிறது. இத்தனைக்கும் ”தமிழியில் இருந்து தான் பெருமி கிளைத்திருக்க வேண்டும், பெருமியிலிருந்து தமிழி கிளைத்திருக்க முடியாது” என வாதிக்க நிறையக் காரணங்களுண்டு.  [அக்காரணங்களை எடுத்துரைக்க இக்கட்டுரை களனில்லை. எனவே அவற்றைத் தவிர்க்கிறேன்.] தமிழி எழுத்துப்பொறிப்பு பரவலாக (அரசகட்டளைப் பொறிப்பாக மட்டுமன்றி அன்றாடப் பொதுமக்களும், வினைஞரும், வணிகரும் பயன்படுத்தக் கூடிய அளவுக்குப் பரவலாக) இருந்திருக்கிறது அதாவது, தமிழரிடையே படிப்பறிவு பரவலாய் கி.மு.5/4 ஆம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கலாம்.

இனி உயிர்மெய் அடவுகளைப் பார்ப்போம். முதலில் உயிருக்கும் மெய்க்குமே எழுத்துக்கள் அமைந்தன போலும். (உயிரெழுத்து அடவுகள்  எல்லாம் தனித் தனியே கிளைக்கவில்லை. அவை அ, இ, உ என்ற சுட்டெழுத்து வடிவுகளில் இருந்தே கிளைத்தன. மெய்யெழுத்து அடவுகளும்  க், ட், த், ப், ந், ய்,ர், ல், வ்  எனும் 9 மெய் வடிவுகளிலிருந்தே 18 ஆய்க் கிளைத்ததாய்த் தோற்றும். இவ் விளக்கத்தை வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.)   உயிர்மெய்களுக்கு அடையாளமாய், அடிப்படை மெய்யெழுத்தை ஒரு சதுரமாகக் கருதி, அதில் 2 தீற்றுக்களை (strokes) வெவ்வேறு திசைகளில் அமைப்பார். [இதன் விளக்கம் படம் 1 ஐக் கொண்டு அறிக. வெறுஞ் சதுரம் கொண்டு 2 வரிசைகளும், ககரங் கொண்டு 2 வரிசைகளும் இங்கு அடையாளங் காட்டப்படுகின்றன.]



இங்கு சதுரம், மெய்யெழுத்தையும், சிலபோது அகரமேறிய உயிர்மெய்யையும் குறிக்கிறது. [மெய்க்குப் பகரமாய்  சதுரம் பயன்படுத்துகிறேன்.] அதாவது மெய்யெழுத்திற்கும், அகரமேறிய உயிர் மெய்க்கும் வேறுபாடு தெரியாது குறித்துள்ளார். இதேபோல் ஒரு தீற்று சதுரத்தின் பக்கத்திற் கிளம்பி கிழக்கே நீண்டிருந்தால் அது அகரமேறிய உயிர்மெய்யையோ, ஆகாரம் ஏறிய உயிர்மெய்யையோ குறித்துள்ளது. இருவேறுபட்ட அடையாளங்கள் (அகரம், ஆகாரம்) ஒரே குறியீட்டிற்கு நெடுநாட்கள் இருந்தன. அதாவது க், க, கா என்ற எழுத்துப் பொறிப்புக்களில் (இதுபோல் 18 முப்படை எழுத்துப் பொறிப்புக்களில்) ஏதேனும் 2 பொறிப்புக்கள் ஒன்றுபோலவே காட்சியளித்தன. [அல்லது ஒரே பொறிப்பிற்கு 2 எழுத்தடையாளங்கள் இருந்தன.] 3 எழுத்துகளுக்கும் 3 குழப்பம் இலாப் பொறிப்புக்கள் எழுத்துக்களின் தொடக்கத்திலில்லை.

ஆனாலும், தமிழ்மொழிக்கு மட்டுமே தமிழியைக் கையாண்ட காலத்தில் இச் சிக்கல் பெரிதாகத் தெரியவில்லை. ஏறத்தாழ, (தொல்காப்பியக் காலமான) கி.மு.700 களிலிருந்து கி.பி.100 கள் வரை, சமகாலத்தில் இத்தடுமாற்றம் உணரப்படவில்லை. ஏனெனில் தமிழ் மொழியின் மெய்ம்மயக்கங்கள் தமிழ் பேசுவோர்க்குத் தெரிந்தன. எனவே, எழுத்துக் குறைபாடு புலப்படவில்லை.

தமிழ்ப் பயன்பாட்டில் சில விதப்பான வழக்குகள் உண்டு. ’க’ உயிர்மெய் வந்தால், அதன்முன் ’ங்’ மெய்யெழுத்துத் தான் வரமுடியும், ”ஞ், ந்” மெய்கள் வராது. அதேபோல க - விற்கு முன் ’ங’ உயிர்மெய்யாக வரமுடியாது. இது போல் எழுத்தொழுங்குகள் தமிழ்பேசியோருக்கு நன்றாகவே தெரிந்திருந்தன. அடுத்தடுத்து “கக” தமிழில் வராது, முன்வருவது க் என்றும் பின் வருவது க என்றே அமையும். இதுபோல வெவ்வேறு எழுத்தமைதிகள், எவ்வெழுத்து  சொல்முதலில் வரும், எது சொல்கடையில் வரும், எது உயிர்மெய் அகரம், எது மெய்யெழுத்து என்று சொல்லமைப்பை வைத்தே, பெரும்பாலும் தமிழரால் சொல்ல முடிந்தது. மொத்தத்தில் தமிழி எழுத்து, தமிழை மட்டுமே எழுதப் பயன்பட்ட காலத்தில் தொடக்க எழுத்துக் குறையை உணரவிடாது மொழி அணி செய்து போக்கியது. The Tamizh language effectively camouflaged the inherent defect in the initial Tamizhi script. There was no realization of the problem at the start.

கி.மு.600 க்கப்புறம், கொஞ்சங் கொஞ்சமாகத் தமிழகத்திற்கும் மகதத்திற்கும் இடையே பொருளியல், அரசியல், மெய்யியல் எனப் பல்வேறு துறைகளில் உறவாடல்கள் கூடிப்போயின. வடக்கிருந்து வேதநெறியும், செயினமும், புத்தமும், தெற்கிருந்து உலகாய்தம், சாங்கியம், அற்றுவிகம் (ஆசீவகம்) போன்றவையும் ஒன்றோடொன்று உறவாடத் தொடங்கின. மொழிகளும் ஒன்றிற்குள் ஒன்று ஊடுறுவத் தொடங்கின. அதுகாறும் எழுதத் தயங்கிய வடபுலத்தார், தென்புலத்திலிருந்து ஏற்பட்ட தாக்கத்தால் தமிழி எழுத்தைத் தங்களுக்கேற்பப் பயன்படுத்தத் தொடங்கினர். வடபால் மொழிகளான எழுதாக் கிளவிகள் சிறிதுசிறிதாய் எழுதுங்கிளவிகளாய் மாறத்தொடங்கின. தமிழ் கி.மு.700 இல் இருந்தே எழுதுங்கிளவியாய் இருந்தது. பாகதம் கி.மு.400/300 இல் தான் எழுதுங்கிளவியாயிற்று. பாலி அதற்குப்பின்னரே, எழுத்துநிலைக்கு வந்தது. சங்கதம் கி.பி.150 இல்தான் எழுதுங்கிளவியாயிற்று. இற்றைப் புரிதலின் படி இந்தியத் துணைக்கண்டத்தில் முதலில் எழுதத்தொடங்கிய மொழி தமிழே. இக்கணிப்பில் சிந்துசமவெளி மொழியைக் கணக்கிற் சேர்க்க வில்லை. அது இற்றைக் காலத்தும் படித்து அறியப்படாததாகவே உள்ளது.]

தமிழி எழுத்தைப் பாகத மொழிக்கும், பாகதங் கலந்த தமிழ்மொழிக்கும் பயன்படுத்தத் தொடங்கியபோதே, முன்சொன்ன க், க, கா எழுத்துக்களின் பொறிப்புத்தோற்றக் குறை பெரிதாகக் காட்சியளித்தது. தமிழ் போலல்லாது பாகதச்சொற்களுள் எவ்வெழுத்தும் தொடங்கலாம், எதுவும் முடியலாம், தமிழ் போல் மெய்ம்மயக்கங்கள் பாகதத்தில் கிடையா. ஒரு மெய்யெழுத்தின் பின் அதற்கினமான வல்லின உயிர்மெயே பலபோதுகளில் வருமெனும் ஒழுங்கு அம்மொழியிற் கிடையாது. ம் எனும் மெய்க்குப்பின் ”க” உயிர்மெய் வரலாம். தமிழில் வரமுடியாது. இவைபோலச் சொல்லமைப்பினுள் வரும் எழுத்துக் கூட்டமைப்புக்கள் பாகதத்திற்கும் தமிழுக்கும் வேறுபட்டன. எனவே மெய், அகரமேறிய உயிர்மெய், ஆகாரமேறிய உயிர்மெய் ஆகிய மூன்றிடையே தெளிந்த வேறுபாடு காட்டுவது பொறிப்பில் தேவையாயிற்று. இதற்கு எழுந்த தீர்வுகள் மூன்றாகும்.

ஒன்று பட்டிப்புரோலு தீர்வு. இத்தீர்வில் (எந்தத் தீற்றும் சேராத) வெறுஞ் சதுரமே மெய்யெனக் கொள்ளப்பட்டது. சதுரத்திலிருந்து கிளம்பிக் கிழக்கே ஒரு தீற்றுக் கொண்ட சதுரம் அகரமேறிய உயிர்மெய்யானது. அடுத்து, ஆகாரத்தைக் குறிக்க முதல்தீற்றை ஒடித்துக் கீழ்நோக்கிய கோணமாக்கி நீட்டியபடி [உடனுள்ள படம் -2 இல் கண்டபடி] பட்டிப்புரோலுக் கல்வெட்டில் எழுதியிருக்கிறார். [கிழக்கே நீண்ட 2 தீற்றுக்கள் கொண்ட சதுரத்தை ஆகாரம் ஆக்கியிருக்கலாம். ஏனோ, அப்படிச் செய்யவில்லை.] பட்டிப்புரோலு முயற்சி மட்டும் பழந்தமிழகத்தில் ஒருவேளை பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டு இருந்தால், புள்ளிக் கருத்தீடே நம் மெய்யெழுத்துகளுக்கு ஏற்பட்டிருக்காது.



2 ஆம் தீர்வு வடக்கே ஏற்பட்டது. இதன்படி ஒரு சதுரத்தின் கீழ் இன்னொன்று இருந்தால் மேற்சதுரம் மெய்யாகவும் கீழ்ச்சதுரம் உயிர்மெய்யாகவும் படிக்கப் பட்டது. [காண்க. படம் 2.] இரு ககரங்களைக் குறிக்க 2 சதுரங்கள் ஒன்றின் கீழ் இன்னொன்றாய் உள்ளதெனக் கொள்வோம். இரு சதுரக் கட்டைக்கு மேலே கிழக்கில் ஒரு தீற்றிடாவிட்டால் இதை ”க்க” என்றும், ஒரு தீற்றிட்டால் ’க்கா” என்றும் படிக்கவேண்டும். தமிழிலுள்ளதுபோல் மெய்ம்மயக்கம் பாகதத்தில் கிடையாதென்பதால் மேல்வரும் மெய்யோடு வேறெந்த   உயிர்மெய்யும் கீழே சேரலாம். ”க்க” மட்டுமல்லாது “ச்க, ட்க, த்க, ப்க, ம்க.....” என்று பல்வேறு ஒலிக் கூட்டுக்கள் கூடப் பாகதத்தில் பயிலலாம். தமிழில் ஒருசில கூட்டுக்கள் மட்டுமே வரலாம்.

வடக்கேற்பட்ட இந்த 2 ஆம் தீர்வும் சரியான தீர்வுதான். 2000 ஆண்டுகளுக்கும் முன் ஏற்பட்டஇத்தீர்வை ஒழுங்கான முறையிற் புரிந்துகொள்ளாது 1980 களில் ISCII உருவாக்கிய CDAC அறிஞரும், பின் அதிலிருந்து Unicode உருவாக்கிய ஒருங்குறிச் சேர்த்திய (unicode consortium) அறிஞரும் தவறான முறையில் abugida என்கிற ஆகாசக்கோட்டையைக் கட்டிவிட்டார். தொல்லியல், கல்வெட்டியல், எழுத்தியல் பற்றிய பழஞ்செய்திகளைத் தெரியாது எழுப்பிய தேற்றமே இந்த abugida தேற்றமாகும். (இந்த அபுகிடாத் தேற்றை இந்தியத் துணைக்கண்டம் மட்டுமின்றி தென்கிழக்கு ஆசிய எழுத்துக்களுக்கும் நீட்டிவிட்டார்.) எப்படி புவிநடுவம் எனும் தேற்றம் தவறோ ( ஓரளவுக்கு அது ஒழுங்கே கணக்கிடும் எனினும்), அதுபோல அகரமேறிய உயிர்மெய்யே வடபுலத்து மொழிகளுக்கு அடிப்படை என்பதும் தவறானதேற்றமே. எப்படிச் சூரிய நடுவத்தேற்றம் முற்றிலும் சரியோ, அதுபோல் மெய்களே வடபுல மொழிகளுக்கும் அடிப்படை என்பது முற்றிலுஞ்சரி. (அகரமேறிய மெய் அடிப்படை என்று தமிழின் எந்த இலக்கணமும் கூறவில்லை. பாணினியும் அப்படிக்கூறியது போல் தெரிய வில்லை. இது 20 ஆம் நூற்றாண்டுத் திரிவுக் கற்பனை.) இரண்டாம் தீர்வை ஒழுங்காகப் புரிந்துகொள்ளாத ஒருங்குறிச் சேர்த்தியம் மீண்டும் மீண்டும் முட்டுச் சந்திற்றான் போய் நிற்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழை ஒழுங்காய் அறியாது தமிழ்க்கணிமைக்குள் (tamil computing) இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞரும் அபுகிடாக் கூத்தை நம்பித் தமிழைச் சங்கதம் போல் இயக்கிக் கொண்டிருப்பது தான்.

[இங்கே ஓர் இடைவிலகல். வடபுல மொழி எழுத்துக்கள் இப்படி அடுக்குக் கிறுவத் தோற்றத்தைக் (appearance of a stacked orthography) காட்டியதால் அச்சுக் காலத்தில் சிக்கலை ஏற்படுத்தின. சில விதப்பான கூட்டுகளில் ஒன்றின்கீழ் இன்னொன்று என 4.5 மெய்யெழுத்துக் கூட அடியில் ஒரு உயிர்மெய்யோடு வடமொழி ஆவணங்களில் தொங்கும். ஒரு word ஆவணத்தில் முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையே ”இரட்டை வெளிப்பு (double spacing)” விட்டு உருவாக்கவேண்டுமென வையுங்கள். தமிழி போன்ற இழுனை எழுத்தில் (linear script- அதாவது ஓரெழுத்து, அடுத்தெழுத்து என நூல்பிடித்தாற் போல் இழுனையாய்ச் செல்லும் script என்பது, linear script ஆகும்) எந்தச்சிக்கலும் எழாது.

இரு பரிமானத்தில் அங்கங்கே முடிச்சுவிழுந்தாற்போல் எழுத்துக்கள் தொங்கும் (தேவநாகரி போன்ற) அடுக்கெழுத்தில் word ஆவணங்களை செய்வது கூட்டெழுத்துக்களின் காரணத்தால் சிக்கலானது. இதற்காகவே புதிதாய் அரைமெய்களை (half consonants) உருவாக்கினார். காட்டாக “மன்னை எக்ஸ்பிரஸ்” எனத் தென்னக இருவுள்வாய்த் (southern railways) தொடரியின் பெயரைத் தேவகநகரியில் எழுதும்போது  20 ஆண்டுகளுக்குமுன், ன்னை - யைக் குறிக்க, இரு னகரங்கள் ஒன்றின்கீழ் இன்னொன்று தொங்க, இரண்டும் சேர்த்தாற்போல் ஐகாரக்கொம்பை இழுத்துக் காட்டுவார். இதேபடிதான் ”க்ஸ்” என்பது ஒன்றின்கீழ் இன்னொன்றாய்க் காட்டப்படும். இன்றோ ’ன்’ என்பதற்கு ஓர் அரைமெய்யும், ’க்’ இற்கு ஓர் அரைமெய்யும் கொண்டு எல்லாவற்றையும் இழுனை எழுத்தாகவே காட்டி முன்னிருந்த முடிச்சுகளைத் தவிர்ப்பார். இந்தி ஆவணம் தமிழ் ஆவணம் போல் இன்று இழுனையாய் மாறிவிடும். ஆக நகரியின் ஒவ்வொரு மெய்க்கும் ஓர் அரைமெய்யை உருவாகியுள்ளார். இது ஒரு தீர்வெனினும் மூக்கைச் சுற்றிவளைக்கும் தீர்வு என்பதை அறியுங்கள். ஒரு புள்ளி எல்லாவற்றையும் தீர்த்திருக்கும். நான் சொல்வது புரிகிறதா?]

மூன்றாவது தீர்வு தென்புலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட தீர்வு. இதன்படி, இன்னொரு குறியீடாக மாத்திரை குறைக்கும் புள்ளி உருவாக்கப் பட்டது. சதுரத்தின்மேல் புள்ளியிட்டால் அரைமாத்திரை குறைக்கப்பட்டு மெய்யானது. புள்ளியிடா வெறுஞ்சதுரம் அகரமேறிய உயிர்மெய்யானது. கிழக்குப் பக்கம் எழும்பிய, ஒரு தீற்றுக் கொண்ட சதுரம், ஆகாரமேறிய உயிர்மெய்யைக் குறித்தது. மூன்றாவது தீர்வு முற்றுமுழுதாகத் தொல்காப்பியத்திற் சொல்லப் பட்ட தீர்வு. இதுதான் தமிழ்த் தீர்வு. [காண்க. படம் 2.]

இந்த 3 தீர்வுகளும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் எழுந்த தீர்வுகளாய் இருக்க வேண்டும். ஒன்று முந்தியது, இன்னொன்று பின்பட்டது என்று சொன்னால் 3 தீர்வுகள் எழுந்திருக்கா. தீர்வு கண்டுபிடிக்கப் பட்ட சிக்கலுக்கு மீண்டுந் தீர்வு காண எந்தப் பகுத்தறியும் மாந்தனும் முற்படமாட்டான் என்பதால், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 3 தீர்வுகள் சமகாலத்தில் எழுந்திருக்கவேண்டும் என்றே முடிவுசெய்ய வேண்டியுள்ளது.

அடிப்படை அடவில் ஒரு சதுரத்தின் 4 பக்கங்களிலும் ஒன்றோ, இரண்டோ தீற்றுகளைக் சேர்க்கமுடியுமெனில் மொத்தம் 8 அடவுகள் அமையும், இதோடு வெறும் சதுரத்தைச் சேர்க்கும்போது 9 அடவுகள் கிடைக்கும். புள்ளி ஒட்டிய சதுரம் மெய்யென்றும், எதுவுமேயில்லாச் சதுரம் அகரமேறிய உயிர்மெய் எனவும், ஒருதீற்றைக் கிழக்கில்கொண்ட சதுரம் ஆகாரத்தைக் குறித்தது என்றும் சொன்னேன். கிழக்கே 2 தீற்றுக்கள்கொண்ட சதுரம் முன்சொன்னது போல் எதற்குமே பயன்படாது போனது. ஆகார உயிர்மெய்க்காக, சதுரத்தின் கிழக்கிலிருந்து வெளிப்பட்ட தீற்று வட்டெழுத்தானபோது அது காலானது. வடபுல எழுத்துக்களில் இன்றுமது அடிப்படையெழுத்தில் இருந்து பிரியாது ஒட்டிக்கொண்டுள்ளது. தமிழி எழுத்து வட்டெழுத்தாகிப் பின் வீச்செழுத்தாகிப் பின் அச்செழுத்துக்காக அறவட்டாகப் பிரிக்கப்பட்டுக் காலானது.

இனி, மற்ற உயிர்மெய்களுக்குப் போவோம்.

ஒரு தீற்று சதுரத்தின் மேலே கிளம்பி வடக்கே நீண்டிருக்குமானால் அது இகர உயிர்மெய் எனப்பட்டது. இரு தீற்றுக்கள் சதுரத்தின் மேற்கிளம்பி வடக்கே நீண்டிருக்குமானால் அது ஈகார உயிர்மெய் ஆனது. சதுரத்தின் மேலிருந்து வடக்குநோக்கிப் புறப்பட்ட தீற்றுக்கள் வட்டெழுத்தும், வீச்செழுத்தும் எழுந்த வகையாற் திசைமாறிக் கொக்கியாகவும், சுழிக்கொக்கியாகவும் மாறின. ஆனாலும் இன்றுவரை (2700 ஆண்டுகளுக்கு அப்புறமும்) அவை வடக்கு நோக்கிப் புறப்பட்டுப் பின் திரும்பியே உருமாறுகின்றன. (நம் எழுத்துக்களைக் கூர்ந்து கவனியுங்கள்.)

ஒரு தீற்று சதுரத்தின் கீழிருந்து கிளம்பி தெற்கே நீண்டிருக்குமானால் அது உகர உயிர்மெய் எனப்பட்டது. இரு தீற்றுக்கள் சதுரத்தின் கீழிருந்து கிளம்பி தெற்கே நீண்டிருக்குமானால் அது ஊகார உயிர்மெய் எனப்பட்டது. சதுரத்தின் கீழிருந்து தெற்குநோக்கிப் புறப்பட்ட தீற்றுக்கள் வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்தவகையாற் திசைமாறி இன்று சுற்று (கு - வில் வருவது), விழுது (ஙு - வில் வருவது), இருக்கை (நு - வில் வருவது), கூட்டு (கூ-வில் வருவது), சுழிச்சுற்று (பூ -வில் வருவது), இருக்கைக்கால் (நூ -வில் வருவது), கொண்டை (மூ -வில் வருவது) ஆகிய குறிகளாக மாறியிருக்கின்றன. ஆனாலும் இந்த 7 குறிகளும் கீழிருந்துதான் புறப்படுகின்றன. தெற்கிற்பிறந்த தீற்றுக்கள் எனும் குறிப்பு 2700 ஆண்டுகள் ஆனபிறகும் மங்காதிருக்கிறது. [இன்றைக்கு எழுத்துச் சிதைப்பாளர்கள் உகர, ஊகாரத்திற்குக் காட்டும் குறியீடோ, எழுத்தின் பக்க வாட்டில் கிளம்பி கிழக்கேயோ, அன்றேல் திசைதிரும்பித் தெற்கே வந்தாற் போலோ, அமைகின்றன. பழைய உகரங்களின் அடிப்படைத் தீற்றுக்களை, அடிப்படை அடவை, இம்மாற்றத்தால் இவர்கள் காற்றில் பறக்க விடுகிறார். இற்றைய உகர, ஊகார உயிர்மெய்கள் பார்ப்பதற்குத் தான் ஏழு உகர/ஊகாரக் குறியீடுகளாய்த் தெரியும். அடிப்படையில் அவற்றினுள் பழைய அடவுக் கொள்கை இன்னும் காப்பாற்றப் படுகிறது. இது புரியாதவரே உகர, ஊகாரச் சீர்திருத்தம் போவார்.]

ஒரு தீற்று சதுரத்தின் பக்கம்கிளம்பி மேற்கே நீண்டிருக்குமானால் அவை எகர/ஏகார உயிர்மெய்களாகும். எகரம், ஏகாரத்தை வேறுபடுத்த சதுர மேற்பக்கத்திற் புள்ளிக் குறியீடு பயன்படும். மேற்பக்கத்திற் புள்ளியும் மேற்குப் பக்கத்திற் தீற்றும் இருந்தால் அது எகரம். மேலே புள்ளியில்லாது, மேற்குப் பக்கம் தீற்று இருந்தால் அது ஏகாரம். மேற்குநோக்கிய ஒற்றைத் தீற்று வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்தவகையாற் திசைமாறி இன்று கொம்பாகி விட்டது. அது கொம்பாக மாறியது முற்றிலும் இயற்கை வளர்ச்சியே. மேற்கே தீற்று இருந்ததை இன்றுவரை அது நமக்கு எடுத்துரைக்கிறது.

பொதுவாகத் தீற்றுக்கள் நாலுதிசையிலும் எழுந்தன. வெறுமே கிழக்குப் பக்கம் மட்டும் அவை எழவில்லை. இந்த அடிப்படை உண்மைஅறியாத அரைகுறைச் சீரழிப்பாளர் ”கொம்புகளின் குதர்க்கம்” என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார். ”ஆடத்தெரியாதவள் தெருக்கோணல் என்றாளாம்” - இது பழமொழி. பழந்தமிழ் உயிர்மெய்களின் அடவை ஒழுங்காகப் புரிந்து கொள்ளாதவரே ”கொம்புகளின் குதர்க்கம்” என வீண்குதர்க்கம் பேசுகிறார். குதர்க்கம் கொம்புகளிடம் இல்லை.  சிதைப்பாளரிடமே உள்ளது. ஒற்றைக் கொம்புகளுக்கும் வீரமாமுனிவர்க்கும் எத்தொடர்புமில்லை. சிதைப்பாளரிற்சிலர் ஏன் வீரமாமுனிவரைக் குதறுகிறார் என விளங்குவதில்லை. வீரமாமுனிவர் பங்களிப்பைக் கீழே காண்போம்.

இரு தீற்றுக்கள் சதுரத்தின் பக்கத்திலிருந்து கிளம்பி மேற்கே நீண்டிருக்கு மானால்  அது ஐகார உயிர்மெய். இன்றுங் கூட ஐகாரக்கொம்பு இரட்டைக் கொம்பாகவே மலையாளத்தில் எழுதப்படும். வீச்செழுத்தில் இருந்து தமிழ் அச்செழுத்து உருவாக்கியவர் இரட்டைக்கொம்பைப் பிரித்து எழுதாமல் அப்படியே சேர்த்து எழுதியபடி வைத்துக் கொண்டார். இதெல்லாம் ஒரு 350 ஆண்டுப் பழக்கம்.

இப்பொழுது சதுரத்தின் 4 பக்கங்களிலும் 2 தீற்றுக்கள் வரை போட்டுப் பார்த்தாயிற்று. [அதிலும் கிழக்கே 2 தீற்றுக்கள் கொண்ட அடவு கடைசிவரைப் பயன்படாமலே போனது. மொத்தம் 8 அடவுகளில் 7 அடவுகளே தமிழிப் பொறிப்புகளுக்குப் பயன்பட்டன. இனி ஒரு தீற்று ஒருதிசையிலும் இன்னொரு தீற்று இன்னொரு திசையிலுமாக ஆகக் கூடிய அடவுகள் 6 ஆகும்.

கிழக்கு/மேற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
கிழக்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
கிழக்கு/வடக்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
வடக்கு/மேற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
வடக்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
மேற்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்ருக்கள் உள்ள அடவு

இந்த 6 அடவுகளில் முதல் அடவையே ஒகர/ஓகார உயிர்மெய் குறிக்கப் பழந்தமிழர் பயன்படுத்தியிருக்கிறார். ஒகரம், ஓகாரத்தை வேறு படுத்தச் சதுரத்தின் மேற்பக்கத்திற் புள்ளிக்குறியீடு பயன்படும். மேற்பக்கத்திற் புள்ளியும் மேற்கு/கிழக்குப் பக்கங்களில் ஒவ்வொரு தீற்றும் இருந்தால் அது ஒகரம். மேலே புள்ளியில்லாது, மேற்கு/கிழக்குப் பக்கங்களில் ஒவ்வொரு தீற்றும் இருந்தால் அது ஓகாரம். பின்னால் வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்தவகையாற் மேற்குப்பக்கத்துத் தீற்று திசைமாறி இன்று கொம்பாகவும், கிழக்குப்பக்கத் தீற்று திசைமாறிக் காலாகவும் உருப்பெற்றுள்ளன. இந்த உருமாற்றங்களிலும் ஓர் ஒழுங்குள்ளது. கொம்பு வந்தாலே அது மேற்கே யிட்ட தீற்றின் மறுவுரு என்பதும், வெறுங்கால் வந்தாலே அது கிழக்கேயிட்ட தீற்றின் மறுவுரு என்பதும், விளங்கும். மேலே எடுத்துரைத்த ஆறு இருபக்க தீற்றுக்கள் உள்ள அடவுகளில் மீந்திருக்கும் ஐந்தும் பயன்படாமலே போயின. வேறேதேனும் புதுக்குறியீடுகள் எதிர்காலத்தில் ஏற்படுமானால் இவ் அடவுகளை எண்ணிப் பார்க்கலாம்.

ஔகாரத்திற்கு என எக்குறியீடும் தொடக்ககாலத்தில் இல்லை. தொடக்கத்  தமிழியில் 11 தீற்றுக் குறிமுறைகளே இருந்திள்ளன. ஔகாரத்திற்கான குறியீடு 8 ஆம் நூற்றாண்டிற்கு அப்புறமே எழுந்தது. இன்றதைச் சிறகு என்கிறோம். அந்த இந்தத் தீற்றுக்குறிமுறைகளின் கீழ் வராது . இச்சிறகை மலையாளத்தில் மிகச்சரியாய்ச் சிறிதாய்க் குறிப்பர் தமிழில் இதைப் பெரிது ஆக்கி ளகரத்திற்கும் சிறகிற்கும் வேறுபாடு தெரியாமல் ஆக்குவோம். இதே போல் காலுக்கும் ரகரத்திற்கும் வேறுபாடு காட்டாது எழுதுவோம். முதல் வகைத் தப்பை தமிழக அரசு இன்னும் தன் 2010 அரசாணையில் சுட்டிக்காட்ட வில்லை  ஆனாலு, ரகரத்திற்கும், காலுக்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டி யுள்ளது.   .

தமிழி எழுத்துக்களின் அடவு அடிப்படை, 2 தீற்றுக்களும், ஒரு புள்ளியும் தான். புள்ளியும் கூட மெய்யெழுத்தைக் குறிப்பதற்கும், எகர/ஏகாரங்களிலும், ஒகர/ஓகாரங்களிலும் குறில்/நெடில் வேறுபாடு காட்டவுமே பயன்பட்டுள்ளது. [ஒருவேளை தொடக்ககாலத்தில் இந் குறில் நெடில் வேறுபாடு தமிழில் இல்லையோ, என்னவோ?. இதைப் பற்றிய விளக்கம் நம் எகர/ஏகார, ஒகர/ஓகாரச் சொற்களின் ஒரு பொருள்/வேறொலிப்புச் சிக்கலுக்குள் கொண்டு போகும். எனவே அதைத் தவிர்க்கிறேன்.]

முடிவில் ஒன்று சொல்லவேண்டும். கால் (ஆகாரம்), கொக்கி (இகரம்), சுழிக் கொக்கி (ஈகாரம்), சுற்று (கு - வில் வருவது), விழுது (ஙு - வில் வருவது), இருக்கை (நு - வில் வருவது), கூட்டு (கூ-வில் வருவது), சுழிச்சுற்று (பூ -வில் வருவது), இருக்கைக்கால் (நூ -வில் வருவது), கொண்டை  (மூ -வில் வருவது), கொம்பு (ஒகரம்), சிறகு என்ற இந்த 12 குறியீடுகளுக்குமான வளர்ச்சி குறைந்தது 350 ஆண்டுகள் தாம். இவற்றிற்கான பெயர்களை நீங்கள் எந்த இலக்கண நூலிலும் காணமுடியாது 1400/1500களில் இவற்றிர்கு வேறுசில பெயர்கள் இருந்தன. தொல்காப்பிய உரை எழுதிய நச்சினார்க்கினியர்,  கால் என்பதை நாம் சொல்வது போலவே சொல்லியுள்ளார். இப்போது நாம் கொம்பு என்பதை அன்று கோடென்றே அவர் சொல்வார்.  (கோடும் வளைந்தது. கொம்பும் வளைந்தது.) அவருக்குப் பின்வந்தோர் கொக்கியையும், சுழிக் கொக்கியையும் மேல்விலங்கென்றார். மேலே சொன்ன உகர, ஊகாரக் குறியீடுகளின் மொத்தத்தையும் கீழ்விலங்கு என்பார்.  இவையெல்லாம் உயிர்மெய்யைக் குறிக்கும் குறியீடுகள்.

தொல்காப்பியர் காலத்தில் இக்குறியீடுகளை உயிர்மெய்க்குறியீடென்றார். அதுவே சரியான கலைச்சொல். அதையும் இந்த ஒருங்குறிச்சேர்த்தியத்தார் வடவரைப் பின்பற்றி உயிர்க்குறியீடுகள் - vowel mathras - என்பார். அதுவும் ஒரு முரண். நம்மூரில் மாத்திரை என்பது ஒலிக்கும் காலத்தைக் குறிக்கும்.  இவை உயிருக்கான குறியீடுகள் அல்ல. உயிர்மெய்க்கான குறீயிடுகள். வெறும் தீற்றுகளாய் வெவ்வேறு திசைகளில் கிளம்பியவற்றை உயிர்க்குறியீடு என்பது ”மரப்பாச்சி உயிருள்ளது” போல் குறிப்பதாகும். தமிழர்க்கு அது சரி யில்லை. They are vowel-consonant markers and not vowel markers. They do not have independent existence. This is conceptually important. ஓர் அவையில் என் இடம் என்று குறிக்க நான் கைக்குட்டை விட்டுப் போகலாம். ஏனெனில் அது என் உள்ளமை குறிக்கும் கருவி. கருவியையும் ஆளையும் தென்னவர் எப்போதும் குழம்பிக் கொள்ளார். வடபுலத்தில் வேண்டுமெனில் என்வாள் என்னைக் குறிக்கலாம். 

மொத்தத்தில் தொடக்க காலத்து அடவு என்றவகையில், இதில் செய்து பார்த்துத் திருத்திக் கொள்ளும் பாங்கு இருக்கிறது. இன்றுவரை அந்தப் பாங்கு மாறவில்லை. வீரமாமுனிவர் எகர/ ஏகாரங்களிலும், ஒகர/ஓகாரங்களிலும் வரும் புள்ளியைத் தவிர்த்து மேற்கே வரும் கொம்பை ஒற்றைச் சுழியாகவும் இரட்டைச் சுழியாகவும் மாற்றியமைத்தார். அது கொம்புகளில் இருந்து கிளைத்த ஒரு மாற்றம் என்ற அளவில் அடிப்படை அடவைக் குலைக்க வில்லை. இப்பொழுதும் மேற்கே இருந்து கிளைத்த தீற்றை அவை இன்னமும் நினைவூட்டுகின்றன.

இதுநாள் வரை இருக்கும் தமிழி அடவிற்கு மீறிச் சொல்லப்படுகிற எந்த முயற்சியும் 2700 ஆண்டுகள் (தொடக்க நிலை, வட்டெழுத்து நிலை, வீச்செழுத்து நிலை, அச்செழுத்து நிலை என எல்லாவற்றிலும்) தொடர்ந்து வந்த போக்கைக் குலைக்கும் ஒன்றாகும்.

அன்புடன்,
இராம.கி.


Saturday, June 05, 2010

சிலம்பிற்குப் பின்வந்த வரலாற்றுச் செய்திகள் - 2

மருதன் இளநாகனாரின் ஒருசில பாடல்கள் வரலாற்றுச் செய்திகளையும் நமக்குச் சொல்கின்றன. அவற்றை இங்கு பதிவு செய்கிறேன்.

1. முதலில் நாம் பார்ப்பவை அகநானூறு 59 ஆம் பாடலின் 3-18 வரிகளாகும்.

- வடாஅது
வண்புனல் தொழுநை வார்மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தந்தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல
புந்தலை மடப்பிடி உணீஇயர், அம் குழை
நெடுநிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்
படிஞிமிறு கடியும் களிறே - தோழி
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை
இன்தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த
தண்நறுங் கழுநீர்ச் செண்இயற் சிறுபுறம்
தாம் பாராட்டிய காலையும் உள்ளார்
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய்நாட்டு
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே

இதில் முதற் செய்தி தொழுனையாற்றில் (யமுனையாற்றில்) ஆயர்பாடி மங்கையரின் சேலைகளைக் கண்ணன் எடுத்து ஒளித்துவைத்து, பலராமன் அப் பக்கம் வரும்பொழுது மரக்கிளையைக் கீழே அழுத்தி மங்கையரின் நக்கனத் தோற்றம் வெளித்தெரியாதவாறு மறைத்தது பற்றியாகும். அதாவது கி.மு.50 இலேயே கண்ணனின் விளையாட்டுக்களைச் சொல்லும் பாகவதச் செய்திகள் மிகுந்த விவரிப்போடு தென்புலத்து மக்களுக்குத் தெரிந்துள்ளன. கண்ணன் பற்றிய செய்திகள் சிலம்பில் தெரிந்ததில் வியப்பில்லை, சங்க இலக்கியத்திலும் கூடக் கி.மு.50 இல் அவை விரிவாகத் தெரிந்திருக்கின்றன.

இதில் இரண்டாம் செய்தி ”அந்துவன் பாடிய சந்து கது எழு நெடுவரை” என்னும் வரியில் அடங்கியுள்ள முகன்மைச் செய்தியாகும். முருகனைப் பற்றி பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்து (=இசை) அப்படியே பரங்குன்றைப் பற்றி எழுகிறதாம் (கதுத்தல், கதுவுதல் = பற்றுதல்). அது என்ன அந்துவன் பாடிய இசை? - என்ற கேள்வி சட்டென நமக்குள் எழுகிறது. இதையறியப் பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்துள் நாம் போகவேண்டும். 

பரிபாடலுக்குள் செவ்வேள் பற்றியும், வையை பற்றியும் நல் அந்துவனாரின் இசைப் பாடல்கள் உள்ளன. அந்த அந்துவனார் எனும் இசைப் புலவர் மருதன் இளநாகனாருக்கு நன்றாகத் தெரிந்தவர் போலும். பரங்குன்றைப் பாடியவருள் இவர் பலராலும் அறியப்பட்டவர் போலும். பரிபாடலில் மொத்தம் 70 பாடல்கள் இருந்தன என்று ஒரு வெண்பா சொல்லும்.

திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று - மருவிளிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்

அதாவது திருமாலுக்கு 8 உம், செவ்வேளுக்கு 31 உம், காடுகிழாளுக்கு (கொற்றவைக்கு) 1 உம், வையைக்கு 26 உம், மதுரைக்கு 4 உம் பாடப்பட்டதாம். 70 மூலப்பாடல்களில் 33 - ஏ முழுதாகவோ (22), சிதைந்தோ (11) இப்போது கிடைக்கப் பெற்றுள்ளன. வெவ்வேறு நூல்களில் பரிபாட்டெனத் திரட்டப்பட்ட, சிதைந்துபோன 11 பாடல்களைப் பரிபாடல் திரட்டென்பார். கிடைத்தவற்றுள் திருமாலுக்கு 7 பாடல்களும், செவ்வேளுக்கு 8 பாடல்களும், வையைக்கு 10 பாடல்களும், மதுரைக்கு 6 பாடல்களும், இன்னதென்று தெரியாது மேலும் 2 பாடல்களும் கிடைத்ததாய் அண்மைத் தொகுப்பாசிரியர் சொல்கிறார். [மேலே கூறிய வெண்பாவோடு பொருத்திப் பார்த்தால், மதுரை பற்றிய பாடல்களிற் கணக்குக் கூடியுள்ளது, மற்றவற்றில் கணக்குக் குறைந்துள்ளது.] கிடைத்த பாடல்களுள் 11 பாலையாழிலும் (பாலையாழ் என்பது தொல்காப்பியக் காலப் பெயர், இது சங்க காலத்தில் அரும்பாலை என்று சொல்லபட்டது. கருநாடக சங்கீதத்தில் சங்கரா பரணம் என்றாகும். எல்லாத் தமிழ்ப் பண்களுக்கும் அராகம் எனும் வடமொழிப்பெயரைத் தானே இப்போது கொடுத்துள்ளார்?). 5 நேர்திறப் பண்ணிலும் ( அக்காலத்தில் வளர் முல்லை, இக்காலத்தில் சிவப்பிரியா), 4 காந்தாரப் பண்ணிலும் (சங்க காலத்தில் செவ்வழிப் பாலை; அண்மைக்காலத்தில் இரு மத்திமத் தோடி) பாடப்பட்டவையாகும். இன்னும் 2 பாடல்களுக்குப் பண்கள் தெரியவில்லை.

இவற்றில் 19 பாடல்களுக்கு எழுதியோர் பெயர்கள் தெரிகின்றன, அவருள் கடுவன் இளவெயினனார் 3 பாடல்களும், நல்லந்துவனார் 3 பாடல்களும், குன்றம்பூதனார் (இது குறும்பூதனார் என்றும் பிழைபட எழுதப் பட்டுள்ளது) 2 பாடல்களும், நல்லழிசியார் - 2 பாடல்களும், நல்வழுதியார் (நல்லெழுதியார் என்றும் பிழைபட  உள்ளது. இவர் ஒரு பாண்டிய மன்னராய் இருந்திருக்கலாம்.) - 2 பாடல்களும், இளம்பெருவழுதி (இவரும் பாண்டிய மன்னர் ஆகலாம்) 1 பாடலும், கரும்பிள்ளைப் பூதனார் - 1 பாடலும், கீரந்தையார் - 1 பாடலும், கேசவனார் - 1 பாடலும், நப்பண்ணனார் - 1 பாடலும், நல்லச்சுதனார் - 1 பாடலும், மையோடக் கோவனார் - 1 பாடலும் எழுதியுள்ளார். [இளம்பெருவழுதி, நல்வழுதியார் என வரும் 2 பாண்டியரும் ஒருவரோ என்ற ஐயமும் எனக்குண்டு.]

இதேபோல 19 பாடல்களுக்குப் பண்ணமைத்தோர் பெயர்கள் தெரிகின்றன. அவருள் மருத்துவன் நல்லச்சுதனார் (சில பாடல்களில் வெறுமே நல்லச்சுதனார் என்றும் குறிக்கப்படுகிறார். ஆய்ந்து பார்த்தால் ஒருவராகவே வாய்ப்புண்டு) - 10 பாடல்களும், நன்னாகனார் (வெறுமே நாகனார் என்ற குறிப்புமுண்டு) - 3 பாடல்களும், பெட்டன் நாகனார் - 2 பாடல்களும், கண்ணாகனார் (கண்ணனாகனார் என்ற பாடமுமுண்டு)- 2 பாடல்களும், பித்தாமத்தர் - 1 பாடலும், கேசவனார் - 1 பாடலும் பண்ணமைத்திருக்கிறார். பொதுவாக எந்தெந்த பாடலாசிரியர், பாணர், சமகாலத்திற் தமக்குள் உறவு கொண்டனர் என்பதை வலைப்பின்னற் தேற்றத்துள் (network theory) வரும் அண்ணக மடக்கை (adjacency matrix) வழி அலசிக் கண்டுபிடிக்க இயலும், அதன்படி (1, 7,14,22) என்ற 4 பாடல்கள் தவிர்த்து மற்ற 18 உம் சம காலத்தவை என்று அலசல் வழி அறிகிறோம். மேற்குறிப்பிட்ட நாலும் இத் தொகுப்பின் போதோ, முந்தியோ பாடப் பட்டிருக்கலாம்; பரிபாடற் தொகுப்பு பெரும்பாலும் சமகாலத்தில் எழுந்திருக்கலாம்.

இனி மருதன் இளநாகனாரின் அகம் 59 ஆம் பாடலுக்கு வருவோம். அந்துவனார் பாடிய செவ்வேள் பாடல் ஒன்றுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது. கிடைக்காது போன பாடல்களில் செவ்வேள் பற்றி அதிகம் பாடல்களை அந்துவனார் பாடினாரோ என்னவோ? இளநாகனாரின் காலம் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலம் என முந்தையப் பகுதியில் குறிப்பிட்டுக் காட்டினேன். அதையொட்டி, இன்னொரு கொடிவழி (பரம்பரை) கடந்திருக்கும் போது (அதாவது கிள்ளிவளவனுக்கு 50 அகவையாகும் போது) மருதன் இளநாகனார் இருந்திருப்பார் என்று கொள்ளலாம். இதன் வழி நல்லந்துவனார் காலமும் குறைந்தது அதே காலமாய் இருந்திருக்க வேண்டும்.

எனவே சிலம்புக் காலத்தில் இருந்து 25 ஆண்டுகள் கழித்து கி.மு.50 இல் பெரும்பாலும் பரிபாடல் தொகுக்கப் பட்டிருக்கலாம். பெரும்பாலும் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி காலத்தில் இது நடந்திருக்கலாம். உரைகாரர் மூலம் அகநானூறும், குறுந்தொகையும் பன்னாடு தந்தான் மாறன் வழுதி காலத்தில் தொகுக்கப் பட்டன என அறிகிறோம். பரிபாடலைத் தொகுப்பித்ததாய் நாம் ஊகிக்கும் மாறன் வழுதியும், அகநானூறு, குறுந்தொகை தொகுத்த மாறன் வழுதியும் ஒரே அரசனாகுமோ என்பது ஆய வேண்டியதாகும்.

2. இனி அகம் 77 இல் 7-12 ஆம் வரிகளைக் காணுவோம்.

கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்
உயிர்திறம் பெயர, நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர
செஞ்செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின்,

இந்த வரிகள் அந்தக் காலத்தில் நடந்த குடவோலை முறையை நமக்குத் தெரிவிக்கின்றன. பேரரசுச் சோழர், பல்லவர் காலத்துக் குடவோலை முறை பற்றிய உத்தர மேரூர் கல்வெட்டுக்களைப் பற்றிப் பெருமை கொள்ளும் நாம் அதற்கு முந்தைய, கி.மு.50 அளவான குடவோலை முறையை அகம் 77 தெரிவிக்கிறது என்ற செய்தியை வெகு எளிதில் மறந்து விடுகிறோம். நான் அறிந்தவரை ”தென்புலத்தில் தேர்தல்கள் எப்படி நடந்தன?” என்பதைக் குறிக்கும் முற்காலத்து முதன்மையான சான்று இது மட்டுமே. ஆக கி.மு. 50 இல் நமக்குத் தேர்தல் என்பது தெரிந்திருக்கிறது. இனிப் பாடலுக்கு வருவோம்.

பாடல் பாலைத்திணை சேர்ந்தது. வணிகத்தை நாடி அருஞ்சுரங் கடக்க விரும்பிய தலைமகன் போகும்வழியில் தான் காணப்போகும் கழுகுகளின் செயலை எண்ணிப் பார்க்கிறான், காதலியின் முகத்தையும் எண்ணிப் பார்க்கிறான், மனங்கலங்கித் தான்பிரிந்து செல்ல முற்படுவதைக் கை விடுகிறான். பாடலுள்ளே அருஞ்சுக் கொடுமையின் விவரிப்பு அமைகிறது.

அருஞ்சுரத்தின் கொடிய சூடு தாளாது ”மேற்கொண்டு நகரமுடியாது” என இறந்துபோனவர் உடம்பு சுரத்தின் பாதையிற் கிடக்கிறது. எங்கிருந்தோ செந்தலைக் கழுகு (Red-headed Vulture, Sarcogyps calvus) பறந்து ஓடிவருகிறது. உயிரற்றுக் கிடக்கும் உடம்பின் வயிற்றைக் குத்தி உள்ளிருக்கும் குடரை வெளியே இழுத்துப் போடுகிறது.

[இக் கழுகு பற்றிய செய்திகளை முனைவர் க.ரத்னம் எழுதிய “தமிழ்நாட்டுப் பறவைகள்” பொத்தகத்தில் (மெய்யப்பன் தமிழாய்வகம், 2002) இருந்து தருகிறேன். ”இக் கழுகு கரு நிற உடலைக் கொண்டது. இதன் தலை, கழுத்து, தொடை, கால் ஆகியன செந்நிறங் கொண்டவை. உயரமாகப் பறக்கையில் கருத்த உடலின் பின்னணியில் சிவந்த தலையும் வெண்திட்டுக்கள் கொண்ட தொடையும் இறகுகளிற் காணப்படும் வெண்பட்டையும் கொண்டு அடையாளம் காணலாம். தமிழ்நாடு முழுதும் வறள்காடுகளில் மக்கள் வாழ்விடத்தை அடுத்துக் காணலாம். பிற கழுகுகளைப் போல இது பெருங்கூட்டமாய்த் திரள்வதில்லை. செத்த பிணங்களைத் தின்ன பெருங் கூட்டமாய்க் கூடும். மற்றவகைக் கழுகளிடையே இதனையும் ஒன்றிரண்டாகக் காணலாம். இக்கழுகு மற்ற கழுகுகளை விரட்டிவிட்டு முதலில் தன் வயிறு நிறையத் தின்னும் ஆற்றல் வாய்ந்தது. இதனாலேயே இது கழுகரசன் (King Vulture) என அழைக்கப் படுகிறது. வயிறு நிறையத் தின்றபின் பறக்க எழ இயலாது திண்டாடும். சங்க இலக்கியத்தில் ’செஞ்செவி எருவை’ எனவும் பாலைநிலத்தில் பயணம் செய்வோர் வெங்கொடுமையால் மயங்கி விழுந்த பின், இறப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.]

இறந்துபோன உடம்பின் வயிற்றில் இருந்து செந்தலைக்கழுகு (செஞ்செவி எருவை = செக்கச் சிவந்த கழுகு) குடரை உருவுவது எப்படி இருக்கிறதாம் என்பதற்கு மாங்குடி மருதனார் ஓர் உவமை சொல்கிறார். அதில் தான் மேலே சொன்ன குடவோலைச் செய்தி வருகிறது. 

அக்காலத்தில் ஊர் வாரியத்திற்கு நிற்பவரின் பெயரை ஒரு ஓலை நறுக்கில் எழுதி அதைச் சுருளாக்கி ஒரு குடத்தில் இடுவார். முடிவில் குடத்தின் வாயின் மேல் ஒரு துணியை மூடிக்கட்டிச் சுருக்குப்போட்டு, சுருக்குப் போட்ட இடத்தில் களிமண்ணையோ, அல்லது பிசினையோ கொண்டு ஒட்டி, களிமண்/பிசின் மேல் பொறிகொண்டு முத்திரை பொதித்துப் பின் குடத்தைப் பாதுகாத்து ஒரு பொது இடத்திற்குக் (அது வேறு ஊராகக் கூட இருக்கலாம்) கொண்டுவந்து கூடியிருந்தோர் அறியப் பொறியை உடைத்து நீக்கி, சுருக்கைப் பிரித்துத் துணியை விலக்கி, ஒவ்வொரு சுருளாக உள்ளிருந்து எடுத்து நீட்டி ஓலை நறுக்கைப் படித்து ”எத்தனை வாக்குகள் யாருக்குக் கிடைத்தன?” என்று பார்ப்பார்களாம்.

எப்படி வாக்குக் குடத்தில் இருந்து ஒலை நறுக்குச் சுருள்களை ”குண்டு குண்டான அரசு ஆவண மாக்கள் (இடை பெருத்த அரசு அதிகாரிகள்) இழுத்துப் பிரிக்கிறார்களோ அதுபோல, செந்தலைக் கழுகுகள்,  இறந்த விலங்குகளின் வயிற்றிலிருந்து குடலுருவி நீட்டுகின்றனவாம். செந்தலைக் கழுகுகளுக்கு குண்டான அரசு அதிகாரிகள் உவமை. இறந்த உடம்பின் வயிற்றுக்கு வாக்குக் குடங்கள் உவமை. மாந்தக் குடலுக்கு ஒலை நறுக்குச் சுருள் உவமை. அகம் 77 எண்ணி எண்ணி வியக்கக்கூடிய பாட்டாகும். இதில் அடங்கிய வரலாற்றுச் செய்தி கி.மு.50 இல் குடவோலை முறை தமிழக வழக்கில் இருந்தது என்பதே.

அன்புடன்,
இராம.கி.

Friday, June 04, 2010

சிலம்பிற்குப் பின்வந்த வரலாற்றுச் செய்திகள் - 1

சிலம்பின் காலத்தை கி.மு.80க்குச் சற்றுபின் நடந்திருக்கலாம் என்று வரையறுத்த போது, வெற்றிவேற் செழியன் வஞ்சியின் மேல் அதிரடித் தாக்குதல் செய்து, பத்தினித் தெய்வத்தின் படிமத்தை வவ்விய செய்தியைச் சொல்லியிருக்கக் கூடிய, அகம் 149 ஆம் பாடலை ஏற்கனவே பார்த்த நாம் இன்னொரு இலக்கியமான நற்றிணையில் வரும் 216 ஆம் பாடலையும் பார்க்க வேண்டும். அதிலும் சிலம்பிற்குத் தொடர்பான செய்தியொன்று இருக்கிறது. அதையும் பல ஆய்வாளர் தனியே பொருத்தமில்லாது பார்த்திருக்கிறார். நற்றிணை 216 ஆம் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.

துனிதீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்;
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கைபோல் உதவி,
நம் உறு துயரம் களையார் ஆயினும்,
இன்னாது அன்றே, அவர் இல் ஊரே;
எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் துழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒருமுலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே

இதை எழுதியவர் மதுரை மருதன் இளநாகனார். மேலே வரும் நற்றிணைப் பாடலின் திணை: மருதம் என்பதாகும். மதுரையிலுள்ள பரத்தை ஒருத்தி, தலைமகன் தன்னை நாடி வாராவிடத்து, தலைமகன் பெருமையைத் தலைமகளுக்குச் சுற்றிவளைத்துத் தெரிவிக்கும் பாங்கில் பாணனிடமோ, விறலியிடமோ சொல்லியதாய் இப்பாடல் அமையும்.

[பாடலின் உள்ளே, “நீ நினைப்பது போல் நான் ஒன்றும் காசுக்கு உடன்படும் விலைமகள் அல்லள்; அவரும் விலைமாதரை நாடுங் கூட்டத்தைச் சேர்ந்தவர் இல்லை. இப்போது அவர் என்னோடு சேர்ந்திருக்கவில்லை. அவரைப் பிரிந்து நானும் தவிக்கிறேன். என் துயரைக் களையாது அவரிருந்தாலும், அவர்மேல் கொண்ட என்னன்பு சற்றும் குறையவில்லை. எப்பேற்பட்ட துன்பம் வந்தாலும் வேண்டப்பட்டவரே துன்புற்றுக் கலங்குவர். இப்போது நான் கலங்குகிறேன்” என்ற இறைச்சிப்பொருளை உள்வைத்து வெளியே வேறொரு பொருட்பாட்டை வைத்து அப் பாட்டுப் போகும். அப்படிச் சொல்லும்போது தான் ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி பற்றிய செய்தி வரும். முதலில் பாட்டின் வெளிப்படைப் பொருட்பாட்டைப் பார்ப்போம்.

”புலவிநீட்டம் தீர்க்க முனையும் கூட்டத்தோடு அவர் சேரார் எனினும், காணத் தக்க அவரைக் காணும்படிக்கு வாழ்தல் இனிதேயாகும். கண்பெறும் துன்பத்தை சட்டெனக் கை விலக்குதல் போல் நாமுற்ற துயரத்தை அவர் களையாரெனினும், அவரில்லாத இவ்வூர் இனிமையற்றது. நெருப்பாய்ச் சிவந்த வேங்கைக் கடவுளைக் (முருகனைக்) காக்கும் கோழியின் கூவொலி நிறைந்த காவற்பரணுள்ள களத்தில், அயலார்மனம் கலங்கும்படி தன் ஒரு முலையை அறுத்த அந்தத் (மாநிறக்குட்டை) திருமாவுண்ணியின் அவலத்தை அனைவரும் கேட்டோர் எனினும், வேண்டப்பட்டோர் தவிர்த்து மற்றோர் கலங்கமாட்டார் அன்றோ?” என வெளிப்படைப் பொருள் அமையும்.

இப் பரத்தை மதுரையில் வாழ்ந்த சாத்தார (சாதாரண) இற்பரத்தை. சோழநாட்டுப் பெண்ணொருத்தி மதுரைக் கொலைக்களத்தில் ஒரு முலை அறுத்த செய்தி இவளுக்குத் தெரிய வந்திருக்கிறது. [கண்ணகி ஒரு முலை அறுத்தபோது மதுரை முற்றிலும் அழிந்ததென்றே சிலம்பின் வழி உயர்வு நவிர்ச்சியாய்ப் பலரும் சொல்கிறார். அது முற்றிலும் இல்லை போலும். அரண்மனை ஒட்டிய சில பகுதிகள் மட்டுமே அழிந்திருக்கலாம், மதுரைப் பெருநகரம் மீண்டும் அச் சாம்பலிலிருந்து எழுந்திருக்கிறது, மீண்டும் மீண்டும் அக்கதை பொதுமக்களால் பல்வேறு கோணங்களில் உசாவப் பட்டு இருந்திருக்கலாம் என்பதை இப்பாட்டின் வழி குறிப்பால் உணர்கிறோம். ஏனெனில் பொதுமக்களில் ஒருத்தியிடம் எழுந்த எதிர்வினை இது. “ஊரில் பார்ப்பனரையும், குழவிகளையும் ஒரு சில பெண்டிரையும் விட்டு மற்று உள்ளோரை அவள் எரிக்கச் சொன்னாள்” என்று சில ஆய்வாளர் சொல்லுவது தவறான புரிதலாய் இருக்கலாம். இந்தவொளியில் மீண்டும்  சிலம்பை நாம் படிக்கவேண்டும். சிலம்பைத் தவறாகவே நம்மிற் பலரும் உணர்ந்துள்ளோம்.

கண்ணகி மாநிறம் என்ற குறிப்பு இப் பரத்தைக்குத் தெரிந்துள்ளது. அதோடு கண்ணகி அவ்வளவு உயரமின்றி, சற்றே குட்டையாய் தோற்றியிருக்கலாமோ என ஐயுறுகிறோம். கண்ணகி ஒருமுலை அறுத்தபோது ”அவள் கொற்றவையோ? தெய்வ வடிவோ?” என்ற அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டு திரு என்ற அடைமொழி வந்தது போலும். “கருத்த குட்டைச்சி” என்று விவரிப்பு கண்ணகியைப் பற்றி ஒரு சாத்தாரப் பெண்ணுக்கு ஏற்படக்கூடியதே. நாட்டுப் புறங்களில் சட்டென எழும் எந்த விவரிப்பும் உயரம், வண்ணம் பற்றியே அமையும். உண்ணி என்ற சொல் தெண்பாண்டிநாட்டில் இன்றும் உண்டு. உள்நி> உண்ணியாகும். உள்ளுதல் = குறைதல், சிறிதாததல், சுருங்குதல்.  உள்ளத்தி> ஒள்ளத்தி என்ற சொல் ”கொஞ்சம், குறைவு, சிறிது என்ற பொருளில் சிவகங்கை மாவட்டத்தில் வழங்கும். “எனக்கு ஒள்ளத்தியோண்டு  மாவுருண்டையில் பிட்டுக் கொடுங்க” “என்ன இவ ஒள்ளத்தியா ஒடுங்கி இருக்கா? இவளுக்கும் ஓங்கியவனுக்கும் சரிப்பட்டு வருமா?” இப்படிப் பல்வேறு வழக்காறுகள் உண்டு.

கோவலனின் கொலைக்களம் மதிலின் காவற்பரணுக்கு அருகில்  இருந்தது என்பதைச் சிலம்பின்வழி அறிகிறோம். காவற்பரணுக்கு அருகில் கோழிகள் உலவுவதும், கொக்கொக்கொக் என்று அவை இடைவிடாது கரட்டிக் கூவுவதும் இங்கு விவரிக்கப் படுகிறது. முருகன் சேவற்கொடியோன் தானே? [சூரபன்மனை வென்ற போது சூரன் வேங்கை மரம், கோழி, மயில் என 3 வகையில் உருமாறியதாகத் தொன்மமுண்டு. அதுவரை யானையைத் தன் ஊர்தியாகக் கொண்ட முருகன் சூரசங்காரத்திற்கு அப்புறம் மயிலை ஊர்தியாகவும், தன் காப்பிற்கு அறிகுறியாக கோழியைக் கொடியாகவும், வேங்கை மரத்தைக் காவல் மரமாய்க் கொண்டதாகத் தொன்மக்கதை சொல்லும். நெருப்பைப்போற் சிவந்த பூக்களைக் கொண்ட வேங்கை மரத்தடி முருகன் நிற்குமிடம் என முதியோர் சொல்வார்..

முன்னால் மார்ச்சு 2009 இல் கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் என்ற தொடரை எழுதியபோது, நண்பர் நா. கணேசனின் பல கருத்துக்களுக்கும் அதில் மறுமொழி சொல்லி, 3 கருத்துக்களுக்கு மட்டும் மறுமொழி சொல்லாது நான் விட்டுப்போனதால், அத்தொடர் முடிவுறாது உள்ளது. அதில் ஒரு கருத்து இத் திருமா உண்ணி பற்றியது ”திருமா உண்ணியாய் நற்றிணை 216-ல் கண்ணகி வருகிறாள். உண்ணி < நுண்ணிய (Cf. உண்ணி கிருஷ்ணன்) என்பது மலைநாட்டு வழக்கு. இன்னலெ < நென்னல் என்பது இன்றைய மலையாளம்” என்று நா. கணேசன் சொல்வார்.

பலரும் இத்திருமாவுண்ணியையும், சிலம்புக் கண்ணகியையும் வெவ்வேறாகவே பார்ப்பார். சிலம்பை கி.பி.177க்கு அப்புறமாய்த் தள்ளியவரிடம் ”இப்படி ஒரு பாடல் நற்றிணையில் வருகிறதே” என்று சொன்னால் ”ஒருமுலை குறைத்த திருமாவுண்ணியின் கதை தனிக்கதை, அக் கதையை கண்ணகியின்மேல் ஏற்றிவிட்டார், இருவரும் வெவ்வேறு” என்று சமதானம் சொல்வார். நல்லவேளை நா.க. இத் திருமாவுண்ணியை கண்ணகியென்றே சொல்லிவிட்டார். என்னைப் பொறுத்தவரை திருமாவுண்ணியும், கண்ணகியும் ஒன்றே. ஒருமுலை குறைத்தல் என்பது தமிழர் வரலாற்றில் இருமுறை நடந்திருக்க வாய்ப்புக்கள் மிகக் குறைவு. இரண்டும் ஒரே நிகழ்வைத்தான் வெவ்வேறு கோணங்களிற் குறித்திருக்க வேண்டும். அவற்றை எப்படிப் பொருத்துவது என்பதிற்றான் சூழ்க்குமமே அடங்கியுள்ளது.

திருமாவுண்ணி, கண்ணகி என்ற இருவரையையும் ஒருவராக்குவதில் ஒரு சில வரலாற்று நடப்புகளும் நமக்கு உதவி செய்கின்றன. மதுரை மருதன் இளநாகனார் சங்க இலக்கியத்தில் அதிகம் பாடியவர்களில் (பாடல் அடிகள் இல்லை; பாடல் எண்ணிக்கை. 43 பாடல்கள்.) ஒருவராவார்.  அகநானூற்றில் 23 பாடல்களும் (59, 77, 90, 131, 220, 255, 269, 297, 312, 343, 368. 34, 104, 121, 184, 193, 206, 245, 283, 358, 365, 380, 387) குறுந்தொகையில் 4 பாடல்களும் (77, 160, 279, 367), நற்றினையில் 12 பாடல்களும் (39, 216, 341, 21, 103, 194, 283, 290, 302, 326, 362, 392) அவர் பாடியுள்ளார். கூடவே புறநானூற்றில் 52, 55, 138, 139, 349 ஆம் பாடல்களைப் பாடியுள்ளார்.

52 ஆம் புறப்பாடல் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியைப் பாடியது: பாண்டியன், வழுதி என்ற பட்டங்களும், கூடகாரமும் தெளிவாக இவனை மதுரை ஆண்டவனாகக் காட்டிவிடுகின்றன. (வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்) என்ற பாடலின் வரியால் கூடல்நகரத்தின் மருதந்துறை பேசப் படுகிறது.

55 ஆம் புறப்பாடல் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பாடியது. கொற்கைப் பாண்டியருக்கு திருச்செந்தூரின் மேல் ஒரு தனிக் கவனம் இருந்திருக்கவேண்டும், இவன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியின் சமகாலத்தவனாக, பங்காளியாக இருந்திருக்கலாம்.

138, 139 ஆம் புறப்பாடல்கள் 2 உம் நாஞ்சில் வள்ளுவன்மேற் பாடப்பட்டவை. இவன் சேரனுக்கு அடங்கிய குறுநில மன்னன். தென்பாண்டி நாட்டிற்கு நாஞ்சில் நாடு அண்மையானது.

349 ஆம் புறப்பாடல் பெருஞ்சிக்கில் கிழான் மகளைச் சோழனொருவன் பெண்கேட்டதை ஒட்டிப் பாடியது. இவன் புகார்ச்சோழனாய் இருக்கலாம். சிக்கில் புகாருக்கு மிக நெருங்கியது. உறையூர்ச் சோழன் நாகநாட்டிற்குள் போய்ப் பெண்கேட்டு மருட்டியிருக்க முடியாது. இப்புகார்ச்சோழன் பெயர் தெரியவில்லை.

இவ்வரசரின் சமகாலத்தில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் உறையூரில் ஆண்டிருக்கிறான். ஏனெனில் ஐயூர் முடவனார் என்ற புலவர் சம காலத்தில் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் பாடியுள்ளார். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தான் பெரும்பாலும் உறையூர் அரியணையில் ஆட்சிக்கட்டிலிற் செங்குட்டுவனால் ஏற்றப்பட்டவன் ஆகலாமென, சிலம்பின் காலம்  கட்டுரைத் தொடரில் அறிந்தோம். மருதன் இளநாகனாரின் இப்பாடல்கள் எழுந்த காலம் சிலம்பு எழுந்து 25 ஆண்டுகளுக்குள் இருந்திருக்கவேண்டும். (ஒரு தலைமுறைக் காலம் என்பது 25 ஆண்டுகள்.) அப்படியானால் மருதன் இளநாகனார், ஐயூர் முடவனார், கூடகாரத்துத் துஞ்சிய நன்மாறன், இலவஞ்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நாஞ்சில் வள்ளுவன் (இது பட்டப்பெயர், இயற்பெயரல்ல) ஆகியோரின் காலம் கி.மு.50 ஆகும்.

அன்புடன்,
இராம.கி.