Saturday, June 05, 2010

சிலம்பிற்குப் பின்வந்த வரலாற்றுச் செய்திகள் - 2

மருதன் இளநாகனாரின் ஒருசில பாடல்கள் வரலாற்றுச் செய்திகளையும் நமக்குச் சொல்கின்றன. அவற்றை இங்கு பதிவு செய்கிறேன்.

1. முதலில் நாம் பார்ப்பவை அகநானூறு 59 ஆம் பாடலின் 3-18 வரிகளாகும்.

- வடாஅது
வண்புனல் தொழுநை வார்மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தந்தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல
புந்தலை மடப்பிடி உணீஇயர், அம் குழை
நெடுநிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்
படிஞிமிறு கடியும் களிறே - தோழி
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை
இன்தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த
தண்நறுங் கழுநீர்ச் செண்இயற் சிறுபுறம்
தாம் பாராட்டிய காலையும் உள்ளார்
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய்நாட்டு
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே

இதில் முதற் செய்தி தொழுனையாற்றில் (யமுனையாற்றில்) ஆயர்பாடி மங்கையரின் சேலைகளைக் கண்ணன் எடுத்து ஒளித்துவைத்து, பலராமன் அந்தப் பக்கம் வரும்பொழுது மரக்கிளையைக் கீழே அழுத்தி மங்கையரின் நக்கனத் தோற்றம் வெளித்தெரியாதவாறு மறைத்தது பற்றியாகும். அதாவது கி.மு.50 இலேயே கண்ணனின் விளையாட்டுக்களைச் சொல்லும் பாகவதச் செய்திகள் மிகுந்த விவரிப்போடு தென்புலத்து மக்களுக்குத் தெரிந்திருக்கின்றன. கண்ணன் பற்றிய செய்திகள் சிலம்பில் தெரிந்ததில் வியப்பில்லை, சங்க இலக்கியத்திலும் கூடக் கி.மு.50 இல் அவை விரிவாகத் தெரிந்திருக்கின்றன.

இதில் இரண்டாம் செய்தி ”அந்துவன் பாடிய சந்து கது எழு நெடுவரை” என்னும் வரியில் அடங்கியிருக்கும் முகன்மையான செய்தியாகும். முருகனைப் பற்றி பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்து (=இசை) அப்படியே பரங்குன்றைப் பற்றியெழுகிறதாம் (கதுத்தல், கதுவுதல் = பற்றுதல்). அது என்ன அந்துவன் பாடிய இசை? - என்ற கேள்வி சட்டென நமக்குள் எழுகிறது. இதையறியப் பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்துள் நாம் போகவேண்டும். பரிபாடலுக்குள் செவ்வேளைப் பற்றியும், வையை பற்றியும் நல் அந்துவனாரின் இசைப் பாடல்கள் இருக்கின்றன. அந்த அந்துவனார் எனும் இசைப் புலவர் மருதன் இளநாகனாருக்கு நன்றாகத் தெரிந்த புலவர் போலும். பரங்குன்றைப் பாடியவர்களுள் இவர் பலராலும் அறியப்பட்டவர் போலும்.

பரிபாடலில் மொத்தம் 70 பாடல்கள் இருந்தன என்று ஒருவெண்பா சொல்லும்.

திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று - மருவிளிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்

அதாவது திருமாலுக்கு 8 உம், செவ்வேளுக்கு 31 உம், காடுகிழாளுக்கு (கொற்றவைக்கு) 1 உம், வையைக்கு 26 உம், மதுரைக்கு 4 உம் பாடப்பட்டதாய் இந்த வெண்பா சொல்லுகிறது. 70 மூலப்பாடல்களில் 33 - ஏ முழுதாகவோ (22), சிதைந்தோ (11) கிடைக்கப் பெற்றுள்ளன. வெவ்வேறு நூல்களில் பரிபாட்டு என்று திரட்டப்பட்ட, சிதைந்து போன 11 பாடல்களைப் பரிபாடல் திரட்டு என்று சொல்வார். கிடைத்தவற்றுள் திருமாலுக்கு 7 பாடல்களும், செவ்வேளுக்கு 8 பாடல்களும், வையைக்கு 10 பாடல்களும், மதுரைக்கு 6 பாடல்களும், இன்னதென்று தெரியாது மேலும் 2 பாடல்களும் கிடைத்ததாய் அண்மைத் தொகுப்பாசிரியர் சொல்கிறார். [மேலே கூறிய வெண்பாவோடு பொருத்திப் பார்த்தால், மதுரை பற்றிய பாடல்களிற் கணக்குக் கூடியிருக்கிறது, மற்றவற்றில் கணக்குக் குறைந்திருக்கிறது.] கிடைத்த பாடல்களுள் 11 பாலையாழிலும் (பாலையாழ் என்பது தொல்காப்பியக் காலப் பெயர், இது சங்க காலத்தில் அரும்பாலை என்று சொல்லபட்டது. கருநாடக சங்கீதத்தில் இது சங்கரா பரணம் என்றாகும். எல்லாத் தமிழைப் பண்களுக்கும் வடமொழிப் பெயர்தானே அராகமென இப்போது கொடுத்திருக்கிறார்). 5 நேர்திறப் பண்ணிலும் (இது அக்காலத்தில் வளர் முல்லை, இக்காலத்தில் சிவப்பிரியா), 4 காந்தாரப் பண்ணிலும் (சங்க காலத்தில் செவ்வழிப் பாலை; அண்மைக்காலத்தில் இரு மத்திமத் தோடி) பாடப்பட்டவையாகும். இன்னும் 2 பாடல்களுக்குப் பண்கள் தெரியவில்லை.

இவற்றில் 19 பாடல்களுக்கு எழுதியோர் பெயர்கள் தெரிகின்றன, அவருள் கடுவன் இளவெயினனார் 3 பாடல்களும், நல்லந்துவனார் 3 பாடல்களும், குன்றம்பூதனார் (இப்பெயர் குறும்பூதனார் என்றும் பிழைபட எழுதப் பட்டுள்ளது) 2 பாடல்களும், நல்லழிசியார் - 2 பாடல்களும், நல்வழுதியார் (நல்லெழுதியார் என்றும் பிழைபட எழுதப்பட்டுள்ளது. இவர் ஒரு பாண்டிய மன்னராய் இருந்திருக்கலாம்.) - 2 பாடல்களும், இளம்பெருவழுதி (இவரும் ஒரு பாண்டிய மன்னராய் இருக்கலாம்.)- 1 பாடலும், கரும்பிள்ளைப் பூதனார் - 1 பாடலும், கீரந்தையார் - 1 பாடலும், கேசவனார் - 1 பாடலும், நப்பண்ணனார் - 1 பாடலும், நல்லச்சுதனார் - 1 பாடலும், மையோடக் கோவனார் - 1 பாடலும் எழுதியிருக்கிறார். [இளம்பெருவழுதி, நல்வழுதியார் என இரு பாண்டியரும் ஒருவர் தானோ என்ற ஐயமும் எனக்குண்டு.]

இதே போல 19 பாடல்களுக்குப் பண்ணமைத்தோர் பெயர்கள் தெரிகின்றன. அவருள் மருத்துவன் நல்லச்சுதனார் (சில பாடல்களில் வெறுமே நல்லச்சுதனார் என்றும் இவர் குறிக்கப்படுகிறார். ஆய்ந்து பார்த்தால் ஒருவராக இருக்கவே வாய்ப்புண்டு) - 10 பாடல்களும், நன்னாகனார் (வெறுமே நாகனார் என்ற குறிப்பும் உண்டு) - 3 பாடல்களும், பெட்டன் நாகனார் - 2 பாடல்களும், கண்ணாகனார் (கண்ணனாகனார் என்ற பாடமும் உண்டு)- 2 பாடல்களும், பித்தாமத்தர் - 1 பாடலும், கேசவனார் - 1 பாடலும் பண்ணமைத்திருக்கிறார். பொதுவாக எந்தெந்த பாடலாசிரியர், பாணர், சமகாலத்திற் தமக்குள் உறவுகொண்டனர் என்பதை வலைப்பின்னற் தேற்றத்துள் (network theory) வரும் அண்ணக மடக்கை (adjacency matrix) வழி அலசிக் கண்டுபிடிக்க இயலும், அதன்படி (1, 7,14,22) என்ற 4 பாடல்கள் தவிர்த்து மற்ற 18 உம் சம காலத்தவை என்று அந்த அலசல் வழி அறிகிறோம். மேற்குறிப்பிட்ட நாலும் இத் தொகுப்பின் போதோ, முந்தியோ பாடப் பட்டிருக்கலாம்; பரிபாடற் தொகுப்பு பெரும்பாலும் சமகாலத்தில் எழுந்திருக்கலாம்.

இனி மருதன் இளநாகனாரின் அகம் 59 ஆம் பாடலுக்கு வருவோம். அந்துவனார் பாடிய செவ்வேள் பற்றிய பாடல் ஒன்று தான் நமக்குக் கிடைத்திருக்கிறது. கிடைக்காது போன பாடல்களில் செவ்வேள் பற்றி அதிகம் பாடல்களை அந்துவனார் பாடினாரோ என்னவோ? இளநாகனாரின் காலம் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலம் என்று முந்தையப் பகுதியில் குறிப்பிட்டுக் காட்டியிருந்தேன். அதையொட்டி, இன்னொரு கொடிவழி (பரம்பரை) கடந்திருக்கும் போது (அதாவது கிள்ளிவளவனுக்கு 50 அகவையாகும் போது) மருதன் இளநாகனார் இருந்திருப்பார் என்று கொள்ளலாம். இதன் வழி நல்லந்துவனார் காலமும் குறைந்தது அதே காலமாய் இருந்திருக்க வேண்டும்.

எனவே சிலம்புக் காலத்தில் இருந்து 25 ஆண்டுகள் கழித்து கி.மு.50 இல் பரிபாடல் பெரும்பாலும் தொகுக்கப் பட்டிருக்கலாம். பெரும்பாலும் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி காலத்தில் இது நடந்திருக்கலாம். உரைகாரர் மூலம் அகநானூறும், குறுந்தொகையும் பன்னாடு தந்தான் மாறன் வழுதி காலத்தில் தொகுக்கப் பட்டன என்று அறிகிறோம். பரிபாடலைத் தொகுப்பித்ததாய் நாம் ஊகிக்கும் மாறன் வழுதியும், அகநானூறு, குறுந்தொகை தொகுத்த மாறன் வழுதியும் ஒரே அரசனாய் இருக்கக் கூடுமா என்பது ஆய வேண்டியதாகும்.

2. இனி அகம் 77 இல் 7-12 ஆம் வரிகளைக் காணுவோம்.

கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்
உயிர்திறம் பெயர, நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர
செஞ்செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின்,

இந்த வரிகள் அந்தக் காலத்தில் நடந்த குடவோலை முறையை நமக்குத் தெரிவிக்கின்றன. பேரரசுச் சோழர், பல்லவர் காலத்துக் குடவோலை முறை பற்றிய உத்தர மேரூர் கல்வெட்டுக்களைப் பற்றிப் பெருமை கொள்ளும் நாம் அதற்கு முந்தைய, கி.மு.50 அளவான குடவோலை முறையை அகம் 77 தெரிவிக்கிறது என்ற செய்தியை வெகு எளிதில் மறந்து விடுகிறோம். நான் அறிந்தவரை ”தென்புலத்தில் தேர்தல்கள் எப்படி நடந்தன?” என்பதைக் குறிக்கும் முற்காலத்து முதன்மையான சான்று இது மட்டும் தான். ஆக கி.மு. 50 இல் நமக்குத் தேர்தல் என்பது தெரிந்திருக்கிறது. இனிப் பாடலுக்கு வருவோம்.

பாடல் பாலைத்திணையைச் சேர்ந்தது. வணிகத்தை நாடி அருஞ்சுரத்தைக் கடக்க விரும்பிய தலைமகன் போகும் வழியில் தான் காணப்போகும் கழுகுகளின் செயலை எண்ணிப் பார்க்கிறான், காதலியின் முகத்தையும் எண்ணிப் பார்க்கிறான், மனங்கலங்கித் தான் பிரிந்து செல்ல முற்படுவதைக் கைவிடுகிறான். பாடலின் உள்ளே அருஞ்சுரத்தின் கொடுமையின் விவரிப்பு இப்படி அமைகிறது.

அருஞ்சுரத்தின் கொடிய சூடு தாளாது ”இனி மேற்கொண்டு நகரமுடியாது” என்று இறந்து போனவர் உடம்பு சுரத்தின் பாதையிற் கிடக்கிறது. எங்கிருந்தோ செந்தலைக் கழுகு (Red-headed Vulture, Sarcogyps calvus) பறந்து ஓடிவருகிறது. உயிரற்றுக் கிடக்கும் உடம்பின் வயிற்றைக் குத்தி உள்ளிருக்கும் குடரை வெளியே இழுத்துப் போடுகிறது.

[இந்தக் கழுகு பற்றிய செய்திகளை முனைவர் க.ரத்னம் எழுதிய “தமிழ்நாட்டுப் பறவைகள்” என்ற பொத்தகத்தில் (மெய்யப்பன் தமிழாய்வகம், 2002) இருந்து தருகிறேன். ”இந்தக் கழுகு கருப்புநிற உடலைக் கொண்டது. இதன் தலை, கழுத்து, தொடை, கால் ஆகியன சிவப்பு நிறங் கொண்டவை. உயரமாகப் பறக்கும் போது கருத்த உடலின் பின்னணியிலான சிவந்த தலையும் வெண்திட்டுக்கள் கொண்ட தொடையும் இறகுகளிற் காணப்படும் வெண்பட்டையும் கொண்டு அடையாளம் காணலாம். தமிழ்நாடு முழுதும் வறள் காடுகளில் மக்கள் வாழ்விடத்தை அடுத்துக் காணலாம். பிற கழுகுகளைப் போலப் பெருங்கூட்டமாய் இது திரள்வதில்லை. செத்த பிணங்களைத் தின்ன பெருங் கூட்டமாய்க் கூடும். மற்றவகைக் கழுகளிடையே இதனையும் ஒன்றிரண்டாகக் காணலாம். மற்ற கழுகுகளை விரட்டிவிட்டு முதலில் தன் வயிறு நிறையத் தின்னும் ஆற்றல் வாய்ந்தது. இதனாலேயே இது கழுகு அரசன் (King Vulture) என்றும் அழைக்கப் படுகிறது. வயிறு நிறையத் தின்றபின் பறக்க எழ இயலாது இது திண்டாடும். சங்க இலக்கியத்தில் ’செஞ்செவி எருவை’ எனவும் பாலைநிலத்தில் பயணம் செய்வோர் வெப்பத்தின் கொடுமையால் மயங்கி விழுந்தபின் இறப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.”]

இறந்து போன உடம்பின் வயிற்றில் இருந்து செந்தலைக்கழுகு (செஞ்செவி எருவை = செக்கச் சிவந்த கழுகு) குடரை உருவுவது எப்படி இருக்கிறதாம் என்பதற்கு மாங்குடி மருதனார் ஓர் உவமை சொல்கிறார். அதில் தான் மேலே சொன்ன குடவோலைச் செய்தி வருகிறது. அந்தக் காலத்தில் ஊர் வாரியத்திற்கு நிற்பவர்களின் பெயரை ஒரு ஓலை நறுக்கில் எழுதி அதைச் சுருளாக்கி ஒரு குடத்தில் இடுவார்கள் முடிவில் குடத்தின் வாயின் மேல் ஒருதுணியை மூடிக்கட்டிச் சுருக்குப்போட்டு, சுருக்குப் போட்ட இடத்தில் களிமண்ணையோ, அல்லது ஒரு பிசினையோ கொண்டு ஒட்டி, களிமண்/பிசின் மேல் பொறிகொண்டு முத்திரை பொதித்துப் பின் குடத்தைப் பாதுகாத்து ஒரு பொது இடத்திற்குக் (அது வேறு ஊராகக் கூட இருக்கலாம்) கொண்டுவந்து கூடியிருந்தோர் அறியப் பொறியை உடைத்து நீக்கி, சுருக்கைப் பிரித்துத் துணியை விலக்கி, ஒவ்வொரு சுருளாக உள்ளிருந்து எடுத்து நீட்டி ஓலை நறுக்கைப் படித்து ”எத்தனை வாக்குகள் யாருக்குக் கிடைத்தன?” என்று பார்ப்பார்களாம்.

எப்படி வாக்குக் குடத்தில் இருந்து ஒலை நறுக்குச் சுருள்களை ”குண்டு குண்டான அரசு ஆவண மாக்கள் (இடை பெருத்த அரசு அதிகாரிகள்) இழுத்துப் பிரிக்கிறார்களோ அதுபோல, செந்தலைக் கழுகுகள் இறந்த குடரில் இருந்து குடலை உருவி நீட்டுகின்றனவாம். செந்தலைக் கழுகுகளுக்கு குண்டான அரசு அதிகாரிகள் உவமை. இறந்த உடம்பின் வயிற்றுக்கு வாக்குக் குடங்கள் உவமை. மாந்தக் குடலுக்கு ஒலை நறுக்குச் சுருள் உவமை. அகம் 77 எண்ணி எண்ணி வியக்கக் கூடிய பாட்டாகும். இதில் அடங்கிய வரலாற்றுச் செய்தி கி.மு.50 இல் குடவோலை முறை தமிழகத்தில் வழக்கில் இருந்தது என்பதே.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன் said...

பரிபாடல் வரிகளுக்கு அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் ஐயா. குடவோலை பண்டைத் தமிழரின் அரசியல் மாட்சிமையைக் காட்டுகிறது. கண்ணனை மகுளபாண்டி நாட்டான் என்று கள்ளழகர் பற்றிய ஓலைச்சுவடிப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.