Tuesday, June 08, 2010

தமிழி உயிர்மெய்களின் அடவு

தமிழியில் உள்ள இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களை மாற்றி அவற்றை கிரந்தக் குறியீட்டோடு நிறுவுவதற்குத் தமிழெழுத்துச் சிதைப்பாளர் இப்போது பெரிதும் முயன்று கொண்டிருக்கிறார். அதுவும் செம்மொழி மாநாடு இன்னும் 15 நாட்களில் வரப்போகிறதா? வயிற்றில் நெருப்புக் கட்டியதுபோல் சிலருக்கு இருப்புக் கொள்ளவில்லை ”இருக்கும் நாட்களுள் ஏதேனுங் குழப்பஞ்செய்து தமிழக அரசாணையைப் பெற்றுவிட மாட்டோமா?” என்று குட்டிக்கரணம் போடுகிறார். இன்னுஞ்சிலர் “கொம்புகளின் குதர்க்கம்” என உளறுகிறார். மொத்தத்தில் ”அவர்சொன்னார், இவர்சொன்னார்” என மேலோடக் கூறி, அரசியலாரோடு கூடிக் குலவி, உண்மைத் திராவிட ஆர்வலரையும் ”பெரியார் பெயர் சொல்லி” ஏமாற்றி, எல்லோருக்கும் எல்லாமுமாய் கவடம் பேசிக் கருமமே கண்ணாய்ச் சிதைப்புவேலை செய்கிறார். திராவிடச் சிந்தனையாளர் தெரிந்தோ, தெரியாமலோ, எழுத்துச் ”சீர்திருத்தம்” பேசுவதும் இச்சிதைப்பு வேலைக்கே கொண்டுபோய்ச் சேர்க்கும். எல்லா எழுத்தும் ”கணியில் இரண்டு பொத்தான் அடிப்பு” என வந்தபிறகு இனிமேல் எவ்வெழுத்துச் சீர்திருத்திற்கும் பொருளில்லை என்பது ஆழமாய்ச் சிந்திப்போருக்குப் புரியும்.

தமிழெழுத்துச் சிதைப்பாளர் தமிழுக்குமட்டும் உலைவைக்காது, கூடவே தமிங்கிலம் எனும் குறைப்பிள்ளையையும் பிறப்பித்தெடுக்க எழுத்துநடை போடுகிறார். தமிங்கில மொழியை எழுத்தில் கொண்டுவர 31 அடிப்படை எழுத்துக்கள் பற்றாது; 51 இருந்தாற்றான் எழுதமுடியும். (இணையத்தில் ஏராளமான தமிழ் இளைஞர் தம் அறியாமையிலும், சோம்பலிலும், ஒயிலாய் ஆடுவதாய் எண்ணிக்கொண்டும் உரோமனெழுத்தில் தமிழெழுத முற்படுவது இன்னொரு சோகம். இவருக்கும் 31 எழுத்துக்கள் பற்றா. இவர் முயற்சிகளும் தமிங்கிலத்தில் தான் கொண்டுசேர்க்கும்.) எனவே கிரந்த எழுத்துக்களை நுழைப்பதிலும் சிதைப்பாளர் மிகுவிருப்புக் கொள்கிறார். ஒருபக்கம் தமிழ் எழுத்துக்களைச் சிதைத்து, இன்னொருபக்கம் தமிங்கிலத்திற்குத் தேவையான எழுத்துக்களை நுழைக்க வழி பார்க்கிறார்.

உண்மையில் தமிழை எழுத இற்றைத் தமிழியிலிருக்கும் எழுத்துக்களே போதும். தேவையானால் ஏற்கனவேயுள்ள 5 கிரந்த எழுத்துக்களைக் கொண்டு பிறமொழி ஒலிகளைக் கொண்டுவரலாம். தமிழெழுத்துப் பாதுகாப்பாளரைப் ”பண்டிதர்” எனக் கேலிசெய்து, தமிழ்ப் புலவரை வேண்டாப்பிறவிகள் எனுமாப் போல ஒதுக்கி, ஒரு பண்பாட்டு ஒழிப்பே நடந்துகொண்டிருக்கிறது. வேடிக்கை பார்ப்போரும், சிதைப்பாளர் செய்வது நம் அடிமடியில் கைவைக்கும் செய்கை, கொஞ்சநஞ்சம் உள்ளதை உருவி நம்மை அம்மணமாக்கி இச்சிதைப்பாளர் ஓடப் பார்க்கிறார்” என்பதை அறியாமல் ”இன்னொருவருக்கு வந்தது போல்” வாளா இருக்கிறார்.

நடுவில் நிற்கும் பலருக்கும் ”தமிழ் உயிர்மெய்யெழுத்துக்கள் எப்படி எழுந்தன? அவற்றின் அடவு (design) எது?” என்ற பின்புலம் தெரியாமல் சிதைப்பாளர் முயற்சிகளுக்கு அரைகுறையாகத் தலையாட்டும் போக்கும் தென்படுகிறது. அறியாதாராய்ப் பொதுமக்கள் உள்ளதே ஏமாற்றின் அடிமானம் ஆகிறது. (பல தமிழசிரியருங்கூட ஏற்கனவே நடந்த திராவிட வழிகாட்டுதலில் மயங்கி எழுத்துச்சிதைப்பைச் சீர்திருத்தமென எண்ணித் தடுமாறுகிறார்.)

இக்கட்டுரையின் குறிக்கோள் 2700 ஆண்டுகளாய் இங்கு மாறாது இருக்கும் தமிழி உயிர்மெய்களின் அடவை விளக்கிச் சொல்வதாகும்.

பழங்கல்வெட்டுக்கள், நடுகற்கள், ஓட்டுச் சில்லுகள் ஆகியவற்றை ஆராய்ந்த தொல்லியலாளர், ”இந்தியத் துணைக்கண்டத்தில் சிந்து சமவெளி காலத்திற்கு அப்புறம் எழுந்த எழுத்துக்களில் ஆகப் பழையவை தமிழ்நாட்டிலும், இலங்கை அநுராதபுரத்திலும் தான் கிடைத்திருக்கின்றன” என்று கொஞ்சங் கொஞ்சமாய் ஏற்றுக் கொள்கிறார். தமிழ் நாட்டில் (கரூருக்கருகில் கொடுமணத்திலும், தேனி மாவட்டத்திலும்) கிடைத்த தமிழிப் பொறிப்புகள் தாம் இதுவரை இந்தியாவிற் கண்ட பொறிப்புக்களில் ஆகப் பழையனவாகும். கி,மு,4/5 ஆம் நூற்றாண்டு என்றே இவற்றின் காலம் சொல்லப்படுகின்றது. இலங்கையில் கிடைத்த பொறிப்பும் தமிழிக்கு இணையாகவே தெரிகிறது.

70, 80 ஆண்டுகளுக்குமுன் இதுபோல் பொறிப்புக்களை ”அசோகன் பெருமி” எனவழைத்தார். இப்பொழுது அசோகன் காலத்திற்கும் முன் கி.மு 4/5 ஆம் நூற்றாண்டுப் பொறிப்புக்களும் கிடைப்பதால் ”அசோகன் பெருமி எனச் சொல்வது பொருளற்றது” என்ற முடிவிற்குப் பெரும்பாலான தொல்லியலார் வந்துவிட்டார். உண்மையாகப் பார்த்தால், இலங்கையிற் கிடைத்தது பாகத மொழியின் பெருமிப் பொறிப்பு என்றும், தமிழகத்திற் கிடைத்தது தமிழிற் கிடைத்த தமிழிப் பொறிப்பு என்பதுமே சரியாகும்..

தமிழர் பலருங்கூடத் ”தமிழி” என்று பெருமிதத்தோடு, முற்கால எழுத்தைச் சொல்ல ஏன் தயங்குகிறாரென்று புரிவதில்லை. அதை ”அசோகன் வழிப்பட்ட பெருமி”, ”தமிழ்ப் பெருமி” என்று “ஊராருக்கு வந்த செய்தியாய்” ஒட்டுதல் இன்றிச் சொல்வது வியப்பாகிறது. இத்தனைக்கும் ”தமிழியில் இருந்து தான் பெருமி கிளைத்திருக்க வேண்டும், பெருமியிலிருந்து தமிழி கிளைத்திருக்க முடியாது” என வாதிக்க நிறையக் காரணங்களுண்டு.  [அக்காரணங்களை எடுத்துரைக்க இக்கட்டுரை களனில்லை. எனவே அவற்றைத் தவிர்க்கிறேன்.] தமிழி எழுத்துப்பொறிப்பு பரவலாக (அரசகட்டளைப் பொறிப்பாக மட்டுமன்றி அன்றாடப் பொதுமக்களும், வினைஞரும், வணிகரும் பயன்படுத்தக் கூடிய அளவுக்குப் பரவலாக) இருந்திருக்கிறது அதாவது, தமிழரிடையே படிப்பறிவு பரவலாய் கி.மு.5/4 ஆம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கலாம்.

இனி உயிர்மெய் அடவுகளைப் பார்ப்போம். முதலில் உயிருக்கும் மெய்க்குமே எழுத்துக்கள் அமைந்தன போலும். (உயிரெழுத்து அடவுகள்  எல்லாம் தனித் தனியே கிளைக்கவில்லை. அவை அ, இ, உ என்ற சுட்டெழுத்து வடிவுகளில் இருந்தே கிளைத்தன. மெய்யெழுத்து அடவுகளும்  க், ட், த், ப், ந், ய்,ர், ல், வ்  எனும் 9 மெய் வடிவுகளிலிருந்தே 18 ஆய்க் கிளைத்ததாய்த் தோற்றும். இவ் விளக்கத்தை வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.)   உயிர்மெய்களுக்கு அடையாளமாய், அடிப்படை மெய்யெழுத்தை ஒரு சதுரமாகக் கருதி, அதில் 2 தீற்றுக்களை (strokes) வெவ்வேறு திசைகளில் அமைப்பார். [இதன் விளக்கம் படம் 1 ஐக் கொண்டு அறிக. வெறுஞ் சதுரம் கொண்டு 2 வரிசைகளும், ககரங் கொண்டு 2 வரிசைகளும் இங்கு அடையாளங் காட்டப்படுகின்றன.]



இங்கு சதுரம், மெய்யெழுத்தையும், சிலபோது அகரமேறிய உயிர்மெய்யையும் குறிக்கிறது. [மெய்க்குப் பகரமாய்  சதுரம் பயன்படுத்துகிறேன்.] அதாவது மெய்யெழுத்திற்கும், அகரமேறிய உயிர் மெய்க்கும் வேறுபாடு தெரியாது குறித்துள்ளார். இதேபோல் ஒரு தீற்று சதுரத்தின் பக்கத்திற் கிளம்பி கிழக்கே நீண்டிருந்தால் அது அகரமேறிய உயிர்மெய்யையோ, ஆகாரம் ஏறிய உயிர்மெய்யையோ குறித்துள்ளது. இருவேறுபட்ட அடையாளங்கள் (அகரம், ஆகாரம்) ஒரே குறியீட்டிற்கு நெடுநாட்கள் இருந்தன. அதாவது க், க, கா என்ற எழுத்துப் பொறிப்புக்களில் (இதுபோல் 18 முப்படை எழுத்துப் பொறிப்புக்களில்) ஏதேனும் 2 பொறிப்புக்கள் ஒன்றுபோலவே காட்சியளித்தன. [அல்லது ஒரே பொறிப்பிற்கு 2 எழுத்தடையாளங்கள் இருந்தன.] 3 எழுத்துகளுக்கும் 3 குழப்பம் இலாப் பொறிப்புக்கள் எழுத்துக்களின் தொடக்கத்திலில்லை.

ஆனாலும், தமிழ்மொழிக்கு மட்டுமே தமிழியைக் கையாண்ட காலத்தில் இச் சிக்கல் பெரிதாகத் தெரியவில்லை. ஏறத்தாழ, (தொல்காப்பியக் காலமான) கி.மு.700 களிலிருந்து கி.பி.100 கள் வரை, சமகாலத்தில் இத்தடுமாற்றம் உணரப்படவில்லை. ஏனெனில் தமிழ் மொழியின் மெய்ம்மயக்கங்கள் தமிழ் பேசுவோர்க்குத் தெரிந்தன. எனவே, எழுத்துக் குறைபாடு புலப்படவில்லை.

தமிழ்ப் பயன்பாட்டில் சில விதப்பான வழக்குகள் உண்டு. ’க’ உயிர்மெய் வந்தால், அதன்முன் ’ங்’ மெய்யெழுத்துத் தான் வரமுடியும், ”ஞ், ந்” மெய்கள் வராது. அதேபோல க - விற்கு முன் ’ங’ உயிர்மெய்யாக வரமுடியாது. இது போல் எழுத்தொழுங்குகள் தமிழ்பேசியோருக்கு நன்றாகவே தெரிந்திருந்தன. அடுத்தடுத்து “கக” தமிழில் வராது, முன்வருவது க் என்றும் பின் வருவது க என்றே அமையும். இதுபோல வெவ்வேறு எழுத்தமைதிகள், எவ்வெழுத்து  சொல்முதலில் வரும், எது சொல்கடையில் வரும், எது உயிர்மெய் அகரம், எது மெய்யெழுத்து என்று சொல்லமைப்பை வைத்தே, பெரும்பாலும் தமிழரால் சொல்ல முடிந்தது. மொத்தத்தில் தமிழி எழுத்து, தமிழை மட்டுமே எழுதப் பயன்பட்ட காலத்தில் தொடக்க எழுத்துக் குறையை உணரவிடாது மொழி அணி செய்து போக்கியது. The Tamizh language effectively camouflaged the inherent defect in the initial Tamizhi script. There was no realization of the problem at the start.

கி.மு.600 க்கப்புறம், கொஞ்சங் கொஞ்சமாகத் தமிழகத்திற்கும் மகதத்திற்கும் இடையே பொருளியல், அரசியல், மெய்யியல் எனப் பல்வேறு துறைகளில் உறவாடல்கள் கூடிப்போயின. வடக்கிருந்து வேதநெறியும், செயினமும், புத்தமும், தெற்கிருந்து உலகாய்தம், சாங்கியம், அற்றுவிகம் (ஆசீவகம்) போன்றவையும் ஒன்றோடொன்று உறவாடத் தொடங்கின. மொழிகளும் ஒன்றிற்குள் ஒன்று ஊடுறுவத் தொடங்கின. அதுகாறும் எழுதத் தயங்கிய வடபுலத்தார், தென்புலத்திலிருந்து ஏற்பட்ட தாக்கத்தால் தமிழி எழுத்தைத் தங்களுக்கேற்பப் பயன்படுத்தத் தொடங்கினர். வடபால் மொழிகளான எழுதாக் கிளவிகள் சிறிதுசிறிதாய் எழுதுங்கிளவிகளாய் மாறத்தொடங்கின. தமிழ் கி.மு.700 இல் இருந்தே எழுதுங்கிளவியாய் இருந்தது. பாகதம் கி.மு.400/300 இல் தான் எழுதுங்கிளவியாயிற்று. பாலி அதற்குப்பின்னரே, எழுத்துநிலைக்கு வந்தது. சங்கதம் கி.பி.150 இல்தான் எழுதுங்கிளவியாயிற்று. இற்றைப் புரிதலின் படி இந்தியத் துணைக்கண்டத்தில் முதலில் எழுதத்தொடங்கிய மொழி தமிழே. இக்கணிப்பில் சிந்துசமவெளி மொழியைக் கணக்கிற் சேர்க்க வில்லை. அது இற்றைக் காலத்தும் படித்து அறியப்படாததாகவே உள்ளது.]

தமிழி எழுத்தைப் பாகத மொழிக்கும், பாகதங் கலந்த தமிழ்மொழிக்கும் பயன்படுத்தத் தொடங்கியபோதே, முன்சொன்ன க், க, கா எழுத்துக்களின் பொறிப்புத்தோற்றக் குறை பெரிதாகக் காட்சியளித்தது. தமிழ் போலல்லாது பாகதச்சொற்களுள் எவ்வெழுத்தும் தொடங்கலாம், எதுவும் முடியலாம், தமிழ் போல் மெய்ம்மயக்கங்கள் பாகதத்தில் கிடையா. ஒரு மெய்யெழுத்தின் பின் அதற்கினமான வல்லின உயிர்மெயே பலபோதுகளில் வருமெனும் ஒழுங்கு அம்மொழியிற் கிடையாது. ம் எனும் மெய்க்குப்பின் ”க” உயிர்மெய் வரலாம். தமிழில் வரமுடியாது. இவைபோலச் சொல்லமைப்பினுள் வரும் எழுத்துக் கூட்டமைப்புக்கள் பாகதத்திற்கும் தமிழுக்கும் வேறுபட்டன. எனவே மெய், அகரமேறிய உயிர்மெய், ஆகாரமேறிய உயிர்மெய் ஆகிய மூன்றிடையே தெளிந்த வேறுபாடு காட்டுவது பொறிப்பில் தேவையாயிற்று. இதற்கு எழுந்த தீர்வுகள் மூன்றாகும்.

ஒன்று பட்டிப்புரோலு தீர்வு. இத்தீர்வில் (எந்தத் தீற்றும் சேராத) வெறுஞ் சதுரமே மெய்யெனக் கொள்ளப்பட்டது. சதுரத்திலிருந்து கிளம்பிக் கிழக்கே ஒரு தீற்றுக் கொண்ட சதுரம் அகரமேறிய உயிர்மெய்யானது. அடுத்து, ஆகாரத்தைக் குறிக்க முதல்தீற்றை ஒடித்துக் கீழ்நோக்கிய கோணமாக்கி நீட்டியபடி [உடனுள்ள படம் -2 இல் கண்டபடி] பட்டிப்புரோலுக் கல்வெட்டில் எழுதியிருக்கிறார். [கிழக்கே நீண்ட 2 தீற்றுக்கள் கொண்ட சதுரத்தை ஆகாரம் ஆக்கியிருக்கலாம். ஏனோ, அப்படிச் செய்யவில்லை.] பட்டிப்புரோலு முயற்சி மட்டும் பழந்தமிழகத்தில் ஒருவேளை பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டு இருந்தால், புள்ளிக் கருத்தீடே நம் மெய்யெழுத்துகளுக்கு ஏற்பட்டிருக்காது.



2 ஆம் தீர்வு வடக்கே ஏற்பட்டது. இதன்படி ஒரு சதுரத்தின் கீழ் இன்னொன்று இருந்தால் மேற்சதுரம் மெய்யாகவும் கீழ்ச்சதுரம் உயிர்மெய்யாகவும் படிக்கப் பட்டது. [காண்க. படம் 2.] இரு ககரங்களைக் குறிக்க 2 சதுரங்கள் ஒன்றின் கீழ் இன்னொன்றாய் உள்ளதெனக் கொள்வோம். இரு சதுரக் கட்டைக்கு மேலே கிழக்கில் ஒரு தீற்றிடாவிட்டால் இதை ”க்க” என்றும், ஒரு தீற்றிட்டால் ’க்கா” என்றும் படிக்கவேண்டும். தமிழிலுள்ளதுபோல் மெய்ம்மயக்கம் பாகதத்தில் கிடையாதென்பதால் மேல்வரும் மெய்யோடு வேறெந்த   உயிர்மெய்யும் கீழே சேரலாம். ”க்க” மட்டுமல்லாது “ச்க, ட்க, த்க, ப்க, ம்க.....” என்று பல்வேறு ஒலிக் கூட்டுக்கள் கூடப் பாகதத்தில் பயிலலாம். தமிழில் ஒருசில கூட்டுக்கள் மட்டுமே வரலாம்.

வடக்கேற்பட்ட இந்த 2 ஆம் தீர்வும் சரியான தீர்வுதான். 2000 ஆண்டுகளுக்கும் முன் ஏற்பட்டஇத்தீர்வை ஒழுங்கான முறையிற் புரிந்துகொள்ளாது 1980 களில் ISCII உருவாக்கிய CDAC அறிஞரும், பின் அதிலிருந்து Unicode உருவாக்கிய ஒருங்குறிச் சேர்த்திய (unicode consortium) அறிஞரும் தவறான முறையில் abugida என்கிற ஆகாசக்கோட்டையைக் கட்டிவிட்டார். தொல்லியல், கல்வெட்டியல், எழுத்தியல் பற்றிய பழஞ்செய்திகளைத் தெரியாது எழுப்பிய தேற்றமே இந்த abugida தேற்றமாகும். (இந்த அபுகிடாத் தேற்றை இந்தியத் துணைக்கண்டம் மட்டுமின்றி தென்கிழக்கு ஆசிய எழுத்துக்களுக்கும் நீட்டிவிட்டார்.) எப்படி புவிநடுவம் எனும் தேற்றம் தவறோ ( ஓரளவுக்கு அது ஒழுங்கே கணக்கிடும் எனினும்), அதுபோல அகரமேறிய உயிர்மெய்யே வடபுலத்து மொழிகளுக்கு அடிப்படை என்பதும் தவறானதேற்றமே. எப்படிச் சூரிய நடுவத்தேற்றம் முற்றிலும் சரியோ, அதுபோல் மெய்களே வடபுல மொழிகளுக்கும் அடிப்படை என்பது முற்றிலுஞ்சரி. (அகரமேறிய மெய் அடிப்படை என்று தமிழின் எந்த இலக்கணமும் கூறவில்லை. பாணினியும் அப்படிக்கூறியது போல் தெரிய வில்லை. இது 20 ஆம் நூற்றாண்டுத் திரிவுக் கற்பனை.) இரண்டாம் தீர்வை ஒழுங்காகப் புரிந்துகொள்ளாத ஒருங்குறிச் சேர்த்தியம் மீண்டும் மீண்டும் முட்டுச் சந்திற்றான் போய் நிற்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழை ஒழுங்காய் அறியாது தமிழ்க்கணிமைக்குள் (tamil computing) இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞரும் அபுகிடாக் கூத்தை நம்பித் தமிழைச் சங்கதம் போல் இயக்கிக் கொண்டிருப்பது தான்.

[இங்கே ஓர் இடைவிலகல். வடபுல மொழி எழுத்துக்கள் இப்படி அடுக்குக் கிறுவத் தோற்றத்தைக் (appearance of a stacked orthography) காட்டியதால் அச்சுக் காலத்தில் சிக்கலை ஏற்படுத்தின. சில விதப்பான கூட்டுகளில் ஒன்றின்கீழ் இன்னொன்று என 4.5 மெய்யெழுத்துக் கூட அடியில் ஒரு உயிர்மெய்யோடு வடமொழி ஆவணங்களில் தொங்கும். ஒரு word ஆவணத்தில் முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையே ”இரட்டை வெளிப்பு (double spacing)” விட்டு உருவாக்கவேண்டுமென வையுங்கள். தமிழி போன்ற இழுனை எழுத்தில் (linear script- அதாவது ஓரெழுத்து, அடுத்தெழுத்து என நூல்பிடித்தாற் போல் இழுனையாய்ச் செல்லும் script என்பது, linear script ஆகும்) எந்தச்சிக்கலும் எழாது.

இரு பரிமானத்தில் அங்கங்கே முடிச்சுவிழுந்தாற்போல் எழுத்துக்கள் தொங்கும் (தேவநாகரி போன்ற) அடுக்கெழுத்தில் word ஆவணங்களை செய்வது கூட்டெழுத்துக்களின் காரணத்தால் சிக்கலானது. இதற்காகவே புதிதாய் அரைமெய்களை (half consonants) உருவாக்கினார். காட்டாக “மன்னை எக்ஸ்பிரஸ்” எனத் தென்னக இருவுள்வாய்த் (southern railways) தொடரியின் பெயரைத் தேவகநகரியில் எழுதும்போது  20 ஆண்டுகளுக்குமுன், ன்னை - யைக் குறிக்க, இரு னகரங்கள் ஒன்றின்கீழ் இன்னொன்று தொங்க, இரண்டும் சேர்த்தாற்போல் ஐகாரக்கொம்பை இழுத்துக் காட்டுவார். இதேபடிதான் ”க்ஸ்” என்பது ஒன்றின்கீழ் இன்னொன்றாய்க் காட்டப்படும். இன்றோ ’ன்’ என்பதற்கு ஓர் அரைமெய்யும், ’க்’ இற்கு ஓர் அரைமெய்யும் கொண்டு எல்லாவற்றையும் இழுனை எழுத்தாகவே காட்டி முன்னிருந்த முடிச்சுகளைத் தவிர்ப்பார். இந்தி ஆவணம் தமிழ் ஆவணம் போல் இன்று இழுனையாய் மாறிவிடும். ஆக நகரியின் ஒவ்வொரு மெய்க்கும் ஓர் அரைமெய்யை உருவாகியுள்ளார். இது ஒரு தீர்வெனினும் மூக்கைச் சுற்றிவளைக்கும் தீர்வு என்பதை அறியுங்கள். ஒரு புள்ளி எல்லாவற்றையும் தீர்த்திருக்கும். நான் சொல்வது புரிகிறதா?]

மூன்றாவது தீர்வு தென்புலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட தீர்வு. இதன்படி, இன்னொரு குறியீடாக மாத்திரை குறைக்கும் புள்ளி உருவாக்கப் பட்டது. சதுரத்தின்மேல் புள்ளியிட்டால் அரைமாத்திரை குறைக்கப்பட்டு மெய்யானது. புள்ளியிடா வெறுஞ்சதுரம் அகரமேறிய உயிர்மெய்யானது. கிழக்குப் பக்கம் எழும்பிய, ஒரு தீற்றுக் கொண்ட சதுரம், ஆகாரமேறிய உயிர்மெய்யைக் குறித்தது. மூன்றாவது தீர்வு முற்றுமுழுதாகத் தொல்காப்பியத்திற் சொல்லப் பட்ட தீர்வு. இதுதான் தமிழ்த் தீர்வு. [காண்க. படம் 2.]

இந்த 3 தீர்வுகளும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் எழுந்த தீர்வுகளாய் இருக்க வேண்டும். ஒன்று முந்தியது, இன்னொன்று பின்பட்டது என்று சொன்னால் 3 தீர்வுகள் எழுந்திருக்கா. தீர்வு கண்டுபிடிக்கப் பட்ட சிக்கலுக்கு மீண்டுந் தீர்வு காண எந்தப் பகுத்தறியும் மாந்தனும் முற்படமாட்டான் என்பதால், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 3 தீர்வுகள் சமகாலத்தில் எழுந்திருக்கவேண்டும் என்றே முடிவுசெய்ய வேண்டியுள்ளது.

அடிப்படை அடவில் ஒரு சதுரத்தின் 4 பக்கங்களிலும் ஒன்றோ, இரண்டோ தீற்றுகளைக் சேர்க்கமுடியுமெனில் மொத்தம் 8 அடவுகள் அமையும், இதோடு வெறும் சதுரத்தைச் சேர்க்கும்போது 9 அடவுகள் கிடைக்கும். புள்ளி ஒட்டிய சதுரம் மெய்யென்றும், எதுவுமேயில்லாச் சதுரம் அகரமேறிய உயிர்மெய் எனவும், ஒருதீற்றைக் கிழக்கில்கொண்ட சதுரம் ஆகாரத்தைக் குறித்தது என்றும் சொன்னேன். கிழக்கே 2 தீற்றுக்கள்கொண்ட சதுரம் முன்சொன்னது போல் எதற்குமே பயன்படாது போனது. ஆகார உயிர்மெய்க்காக, சதுரத்தின் கிழக்கிலிருந்து வெளிப்பட்ட தீற்று வட்டெழுத்தானபோது அது காலானது. வடபுல எழுத்துக்களில் இன்றுமது அடிப்படையெழுத்தில் இருந்து பிரியாது ஒட்டிக்கொண்டுள்ளது. தமிழி எழுத்து வட்டெழுத்தாகிப் பின் வீச்செழுத்தாகிப் பின் அச்செழுத்துக்காக அறவட்டாகப் பிரிக்கப்பட்டுக் காலானது.

இனி, மற்ற உயிர்மெய்களுக்குப் போவோம்.

ஒரு தீற்று சதுரத்தின் மேலே கிளம்பி வடக்கே நீண்டிருக்குமானால் அது இகர உயிர்மெய் எனப்பட்டது. இரு தீற்றுக்கள் சதுரத்தின் மேற்கிளம்பி வடக்கே நீண்டிருக்குமானால் அது ஈகார உயிர்மெய் ஆனது. சதுரத்தின் மேலிருந்து வடக்குநோக்கிப் புறப்பட்ட தீற்றுக்கள் வட்டெழுத்தும், வீச்செழுத்தும் எழுந்த வகையாற் திசைமாறிக் கொக்கியாகவும், சுழிக்கொக்கியாகவும் மாறின. ஆனாலும் இன்றுவரை (2700 ஆண்டுகளுக்கு அப்புறமும்) அவை வடக்கு நோக்கிப் புறப்பட்டுப் பின் திரும்பியே உருமாறுகின்றன. (நம் எழுத்துக்களைக் கூர்ந்து கவனியுங்கள்.)

ஒரு தீற்று சதுரத்தின் கீழிருந்து கிளம்பி தெற்கே நீண்டிருக்குமானால் அது உகர உயிர்மெய் எனப்பட்டது. இரு தீற்றுக்கள் சதுரத்தின் கீழிருந்து கிளம்பி தெற்கே நீண்டிருக்குமானால் அது ஊகார உயிர்மெய் எனப்பட்டது. சதுரத்தின் கீழிருந்து தெற்குநோக்கிப் புறப்பட்ட தீற்றுக்கள் வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்தவகையாற் திசைமாறி இன்று சுற்று (கு - வில் வருவது), விழுது (ஙு - வில் வருவது), இருக்கை (நு - வில் வருவது), கூட்டு (கூ-வில் வருவது), சுழிச்சுற்று (பூ -வில் வருவது), இருக்கைக்கால் (நூ -வில் வருவது), கொண்டை (மூ -வில் வருவது) ஆகிய குறிகளாக மாறியிருக்கின்றன. ஆனாலும் இந்த 7 குறிகளும் கீழிருந்துதான் புறப்படுகின்றன. தெற்கிற்பிறந்த தீற்றுக்கள் எனும் குறிப்பு 2700 ஆண்டுகள் ஆனபிறகும் மங்காதிருக்கிறது. [இன்றைக்கு எழுத்துச் சிதைப்பாளர்கள் உகர, ஊகாரத்திற்குக் காட்டும் குறியீடோ, எழுத்தின் பக்க வாட்டில் கிளம்பி கிழக்கேயோ, அன்றேல் திசைதிரும்பித் தெற்கே வந்தாற் போலோ, அமைகின்றன. பழைய உகரங்களின் அடிப்படைத் தீற்றுக்களை, அடிப்படை அடவை, இம்மாற்றத்தால் இவர்கள் காற்றில் பறக்க விடுகிறார். இற்றைய உகர, ஊகார உயிர்மெய்கள் பார்ப்பதற்குத் தான் ஏழு உகர/ஊகாரக் குறியீடுகளாய்த் தெரியும். அடிப்படையில் அவற்றினுள் பழைய அடவுக் கொள்கை இன்னும் காப்பாற்றப் படுகிறது. இது புரியாதவரே உகர, ஊகாரச் சீர்திருத்தம் போவார்.]

ஒரு தீற்று சதுரத்தின் பக்கம்கிளம்பி மேற்கே நீண்டிருக்குமானால் அவை எகர/ஏகார உயிர்மெய்களாகும். எகரம், ஏகாரத்தை வேறுபடுத்த சதுர மேற்பக்கத்திற் புள்ளிக் குறியீடு பயன்படும். மேற்பக்கத்திற் புள்ளியும் மேற்குப் பக்கத்திற் தீற்றும் இருந்தால் அது எகரம். மேலே புள்ளியில்லாது, மேற்குப் பக்கம் தீற்று இருந்தால் அது ஏகாரம். மேற்குநோக்கிய ஒற்றைத் தீற்று வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்தவகையாற் திசைமாறி இன்று கொம்பாகி விட்டது. அது கொம்பாக மாறியது முற்றிலும் இயற்கை வளர்ச்சியே. மேற்கே தீற்று இருந்ததை இன்றுவரை அது நமக்கு எடுத்துரைக்கிறது.

பொதுவாகத் தீற்றுக்கள் நாலுதிசையிலும் எழுந்தன. வெறுமே கிழக்குப் பக்கம் மட்டும் அவை எழவில்லை. இந்த அடிப்படை உண்மைஅறியாத அரைகுறைச் சீரழிப்பாளர் ”கொம்புகளின் குதர்க்கம்” என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார். ”ஆடத்தெரியாதவள் தெருக்கோணல் என்றாளாம்” - இது பழமொழி. பழந்தமிழ் உயிர்மெய்களின் அடவை ஒழுங்காகப் புரிந்து கொள்ளாதவரே ”கொம்புகளின் குதர்க்கம்” என வீண்குதர்க்கம் பேசுகிறார். குதர்க்கம் கொம்புகளிடம் இல்லை.  சிதைப்பாளரிடமே உள்ளது. ஒற்றைக் கொம்புகளுக்கும் வீரமாமுனிவர்க்கும் எத்தொடர்புமில்லை. சிதைப்பாளரிற்சிலர் ஏன் வீரமாமுனிவரைக் குதறுகிறார் என விளங்குவதில்லை. வீரமாமுனிவர் பங்களிப்பைக் கீழே காண்போம்.

இரு தீற்றுக்கள் சதுரத்தின் பக்கத்திலிருந்து கிளம்பி மேற்கே நீண்டிருக்கு மானால்  அது ஐகார உயிர்மெய். இன்றுங் கூட ஐகாரக்கொம்பு இரட்டைக் கொம்பாகவே மலையாளத்தில் எழுதப்படும். வீச்செழுத்தில் இருந்து தமிழ் அச்செழுத்து உருவாக்கியவர் இரட்டைக்கொம்பைப் பிரித்து எழுதாமல் அப்படியே சேர்த்து எழுதியபடி வைத்துக் கொண்டார். இதெல்லாம் ஒரு 350 ஆண்டுப் பழக்கம்.

இப்பொழுது சதுரத்தின் 4 பக்கங்களிலும் 2 தீற்றுக்கள் வரை போட்டுப் பார்த்தாயிற்று. [அதிலும் கிழக்கே 2 தீற்றுக்கள் கொண்ட அடவு கடைசிவரைப் பயன்படாமலே போனது. மொத்தம் 8 அடவுகளில் 7 அடவுகளே தமிழிப் பொறிப்புகளுக்குப் பயன்பட்டன. இனி ஒரு தீற்று ஒருதிசையிலும் இன்னொரு தீற்று இன்னொரு திசையிலுமாக ஆகக் கூடிய அடவுகள் 6 ஆகும்.

கிழக்கு/மேற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
கிழக்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
கிழக்கு/வடக்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
வடக்கு/மேற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
வடக்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
மேற்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்ருக்கள் உள்ள அடவு

இந்த 6 அடவுகளில் முதல் அடவையே ஒகர/ஓகார உயிர்மெய் குறிக்கப் பழந்தமிழர் பயன்படுத்தியிருக்கிறார். ஒகரம், ஓகாரத்தை வேறு படுத்தச் சதுரத்தின் மேற்பக்கத்திற் புள்ளிக்குறியீடு பயன்படும். மேற்பக்கத்திற் புள்ளியும் மேற்கு/கிழக்குப் பக்கங்களில் ஒவ்வொரு தீற்றும் இருந்தால் அது ஒகரம். மேலே புள்ளியில்லாது, மேற்கு/கிழக்குப் பக்கங்களில் ஒவ்வொரு தீற்றும் இருந்தால் அது ஓகாரம். பின்னால் வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்தவகையாற் மேற்குப்பக்கத்துத் தீற்று திசைமாறி இன்று கொம்பாகவும், கிழக்குப்பக்கத் தீற்று திசைமாறிக் காலாகவும் உருப்பெற்றுள்ளன. இந்த உருமாற்றங்களிலும் ஓர் ஒழுங்குள்ளது. கொம்பு வந்தாலே அது மேற்கே யிட்ட தீற்றின் மறுவுரு என்பதும், வெறுங்கால் வந்தாலே அது கிழக்கேயிட்ட தீற்றின் மறுவுரு என்பதும், விளங்கும். மேலே எடுத்துரைத்த ஆறு இருபக்க தீற்றுக்கள் உள்ள அடவுகளில் மீந்திருக்கும் ஐந்தும் பயன்படாமலே போயின. வேறேதேனும் புதுக்குறியீடுகள் எதிர்காலத்தில் ஏற்படுமானால் இவ் அடவுகளை எண்ணிப் பார்க்கலாம்.

ஔகாரத்திற்கு என எக்குறியீடும் தொடக்ககாலத்தில் இல்லை. தொடக்கத்  தமிழியில் 11 தீற்றுக் குறிமுறைகளே இருந்திள்ளன. ஔகாரத்திற்கான குறியீடு 8 ஆம் நூற்றாண்டிற்கு அப்புறமே எழுந்தது. இன்றதைச் சிறகு என்கிறோம். அந்த இந்தத் தீற்றுக்குறிமுறைகளின் கீழ் வராது . இச்சிறகை மலையாளத்தில் மிகச்சரியாய்ச் சிறிதாய்க் குறிப்பர் தமிழில் இதைப் பெரிது ஆக்கி ளகரத்திற்கும் சிறகிற்கும் வேறுபாடு தெரியாமல் ஆக்குவோம். இதே போல் காலுக்கும் ரகரத்திற்கும் வேறுபாடு காட்டாது எழுதுவோம். முதல் வகைத் தப்பை தமிழக அரசு இன்னும் தன் 2010 அரசாணையில் சுட்டிக்காட்ட வில்லை  ஆனாலு, ரகரத்திற்கும், காலுக்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டி யுள்ளது.   .

தமிழி எழுத்துக்களின் அடவு அடிப்படை, 2 தீற்றுக்களும், ஒரு புள்ளியும் தான். புள்ளியும் கூட மெய்யெழுத்தைக் குறிப்பதற்கும், எகர/ஏகாரங்களிலும், ஒகர/ஓகாரங்களிலும் குறில்/நெடில் வேறுபாடு காட்டவுமே பயன்பட்டுள்ளது. [ஒருவேளை தொடக்ககாலத்தில் இந் குறில் நெடில் வேறுபாடு தமிழில் இல்லையோ, என்னவோ?. இதைப் பற்றிய விளக்கம் நம் எகர/ஏகார, ஒகர/ஓகாரச் சொற்களின் ஒரு பொருள்/வேறொலிப்புச் சிக்கலுக்குள் கொண்டு போகும். எனவே அதைத் தவிர்க்கிறேன்.]

முடிவில் ஒன்று சொல்லவேண்டும். கால் (ஆகாரம்), கொக்கி (இகரம்), சுழிக் கொக்கி (ஈகாரம்), சுற்று (கு - வில் வருவது), விழுது (ஙு - வில் வருவது), இருக்கை (நு - வில் வருவது), கூட்டு (கூ-வில் வருவது), சுழிச்சுற்று (பூ -வில் வருவது), இருக்கைக்கால் (நூ -வில் வருவது), கொண்டை  (மூ -வில் வருவது), கொம்பு (ஒகரம்), சிறகு என்ற இந்த 12 குறியீடுகளுக்குமான வளர்ச்சி குறைந்தது 350 ஆண்டுகள் தாம். இவற்றிற்கான பெயர்களை நீங்கள் எந்த இலக்கண நூலிலும் காணமுடியாது 1400/1500களில் இவற்றிர்கு வேறுசில பெயர்கள் இருந்தன. தொல்காப்பிய உரை எழுதிய நச்சினார்க்கினியர்,  கால் என்பதை நாம் சொல்வது போலவே சொல்லியுள்ளார். இப்போது நாம் கொம்பு என்பதை அன்று கோடென்றே அவர் சொல்வார்.  (கோடும் வளைந்தது. கொம்பும் வளைந்தது.) அவருக்குப் பின்வந்தோர் கொக்கியையும், சுழிக் கொக்கியையும் மேல்விலங்கென்றார். மேலே சொன்ன உகர, ஊகாரக் குறியீடுகளின் மொத்தத்தையும் கீழ்விலங்கு என்பார்.  இவையெல்லாம் உயிர்மெய்யைக் குறிக்கும் குறியீடுகள்.

தொல்காப்பியர் காலத்தில் இக்குறியீடுகளை உயிர்மெய்க்குறியீடென்றார். அதுவே சரியான கலைச்சொல். அதையும் இந்த ஒருங்குறிச்சேர்த்தியத்தார் வடவரைப் பின்பற்றி உயிர்க்குறியீடுகள் - vowel mathras - என்பார். அதுவும் ஒரு முரண். நம்மூரில் மாத்திரை என்பது ஒலிக்கும் காலத்தைக் குறிக்கும்.  இவை உயிருக்கான குறியீடுகள் அல்ல. உயிர்மெய்க்கான குறீயிடுகள். வெறும் தீற்றுகளாய் வெவ்வேறு திசைகளில் கிளம்பியவற்றை உயிர்க்குறியீடு என்பது ”மரப்பாச்சி உயிருள்ளது” போல் குறிப்பதாகும். தமிழர்க்கு அது சரி யில்லை. They are vowel-consonant markers and not vowel markers. They do not have independent existence. This is conceptually important. ஓர் அவையில் என் இடம் என்று குறிக்க நான் கைக்குட்டை விட்டுப் போகலாம். ஏனெனில் அது என் உள்ளமை குறிக்கும் கருவி. கருவியையும் ஆளையும் தென்னவர் எப்போதும் குழம்பிக் கொள்ளார். வடபுலத்தில் வேண்டுமெனில் என்வாள் என்னைக் குறிக்கலாம். 

மொத்தத்தில் தொடக்க காலத்து அடவு என்றவகையில், இதில் செய்து பார்த்துத் திருத்திக் கொள்ளும் பாங்கு இருக்கிறது. இன்றுவரை அந்தப் பாங்கு மாறவில்லை. வீரமாமுனிவர் எகர/ ஏகாரங்களிலும், ஒகர/ஓகாரங்களிலும் வரும் புள்ளியைத் தவிர்த்து மேற்கே வரும் கொம்பை ஒற்றைச் சுழியாகவும் இரட்டைச் சுழியாகவும் மாற்றியமைத்தார். அது கொம்புகளில் இருந்து கிளைத்த ஒரு மாற்றம் என்ற அளவில் அடிப்படை அடவைக் குலைக்க வில்லை. இப்பொழுதும் மேற்கே இருந்து கிளைத்த தீற்றை அவை இன்னமும் நினைவூட்டுகின்றன.

இதுநாள் வரை இருக்கும் தமிழி அடவிற்கு மீறிச் சொல்லப்படுகிற எந்த முயற்சியும் 2700 ஆண்டுகள் (தொடக்க நிலை, வட்டெழுத்து நிலை, வீச்செழுத்து நிலை, அச்செழுத்து நிலை என எல்லாவற்றிலும்) தொடர்ந்து வந்த போக்கைக் குலைக்கும் ஒன்றாகும்.

அன்புடன்,
இராம.கி.


6 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

வணக்கம் ஐயா.

அரிய செய்திகளை அறியச் செய்தமைக்கு மிக்க நன்றி.

எழுத்துச் சிதைப்பாளர்களுக்கு எந்தவித ஆய்வுச் சிந்தனையும்; ஆராய்ச்சி நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை.

1.பெரியார் சீர்திருத்தம் முழுமைபெறும்
2.மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது
3.கற்க எளிமை - விரைவு

இப்படி, பொதுவான கரணியங்களை மட்டுமே கூவி கூவி எழுத்துச் சீர்திருத்தக் கருவாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆய்வுக் அழைத்தால் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறார்கள்.

விவாதத்திற்கு அழைத்தால் வாய்மூடி மௌன சாமியார் ஆகிறார்கள்.

ஆராய்ச்சிக்கு அழைத்தால் அமைதியாக நழுவிக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட வஞ்சக விபீடனர்களை நம்பி அரசியல்வாதிகள் சிலரும் - அறிஞர்கள் என்று சிலரும் - நயவஞ்சக நாசக்காரர்கள் சிலரும் எ.சீ-க்கு குடை பிடிக்கிறார்கள்; வெண்சாமரம் வீசுகிறார்கள்.

தமிழை அழிப்பதில் - சிதைப்பதில் சிலருக்கும் இருக்கும் ஆர்வக் கோளாறு காரணமாக 'நோபல் பரிசு' கொடுக்கலாம்.

இ.பு.ஞானப்பிரகாசன் said...

தனிப்பெரும் மதிப்பிற்குரிய உயர்திரு. இராம.கி ஐயா அவர்களுக்குப் பணிவன்பான வணக்கங்கள்!

ஐயா! தமிழ் இணைய உலகிற்கு அண்மையில்தான் நான் வந்தேன். வந்த புதிதிலேயே தங்கள் வலைப்பூவைத் திருக்காணும் வாய்ப்பு தற்செயலாகக் கிட்டியது. அஃது என் பேறு என்றுதான் சொல்ல வேண்டும். சிறு அகவை முதலே தமிழார்வம் மிகுந்தவன் நான். தங்கள் வலைப்பூ என் ஆர்வத்துக்குச் சரியான தீனியாக இருக்கிறது.

அடியேன் தமிழறிஞர்கள் பலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தங்களுடைய ஆராய்ச்சியின் வேகமும் பன்நோக்குத் தன்மையும் மலைக்கச் செய்கின்றன! பண்டைத் தமிழரின் உணவுகள், கணக்கீட்டு முறைகள், கோக்குடும்ப உறவுகள், வரலாற்று நிகழ்வுகள் எனப் பற்பலவற்றையும் ஆராய்ந்து இத்தனை இத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகளை யாத்திருக்கிறீர்களே!! கூடவே கலைச்சொல்லாக்கம், சொல்லாராய்ச்சி ஆகியவை வேறு! நினைக்கவே மலைப்பாக இருக்கிறது ஐயா!!! இத்தனைக்கும் நான் உங்கள் வலைப்பூவை முழுமையாகக் கூட இன்னும் படிக்கவில்லை. படித்த வரைக்குமே வியப்பில் தள்ளாடுகிறேன்!

தங்கள் அளவுக்கு இயலாவிட்டாலும் தங்களைப் போல் ஒரு தமிழறிஞனாக ஆக வேண்டுமென்பதுதான் அடியேனின் பேரவா! அது நிறைவேறத் தங்கள் வாழ்த்துகளை வேண்டுகிறேன்! வாழ்த்து பெற விழைவோர் நேரில் வந்து வணங்குவதுதான் மரபு. ஆனால் அடியேன் 'ஆசுடியோசெனிசிசு இம்ப்பெர்பெக்டே (Osteogenesis Imperfectae)' என்னும் எலும்பு மரபணுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளன். வீட்டை விட்டு ஓரடித் தொலைவு கூட அடியேனால் எந்த வகையிலும் வெளியில் வர முடியாது; வருவதும் இல்லை. எனவே இங்கிருந்தபடியே தங்களுக்கும் அடியேனுக்கும் தாயாகவும் பாலமாகவும் விளங்கும் தமிழின் எழுத்துகள் வழியே தங்கள் திருவடி தீண்டி வணங்குகிறேன்! தங்கள் வாழ்த்துகளைக் கோருகிறேன்!

நன்றி! வணக்கம்!

தங்கள் விசிறி:
--இ.பு.ஞானப்பிரகாசன்.
(e.bhu.gnaanapragaasan@gmail.com)

இ.பு.ஞானப்பிரகாசன் said...

தனிப்பெருமதிப்பிற்குரிய உயர்திரு. இராம.கி ஐயா அவர்களுக்குப் பணிவான வணக்கம்!

ஐயா! தமிழ் இணைய உலகிற்கு அண்மையில்தான் அடியேன் வந்தேன். வந்த புதிதிலேயே தங்கள் வலைப்பூவைக் காணும் வாய்ப்பு கிட்டியது என் பேறு. சிறு அகவை முதலே தமிழார்வம் மிகுந்த அடியேனுக்குத் தங்கள் வலைப்பூ சரியான தீனியாக உள்ளது.

அடியேன் தமிழறிஞர்கள் பலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தங்கள் ஆராய்ச்சி வேகமும் பன்நோக்குத் தன்மையும் மலைக்கச் செய்கின்றன! பண்டைத் தமிழரின் உணவுகள், கணக்கீட்டு முறைகள், கோக்குடும்ப உறவுகள், வரலாற்று நிகழ்வுகள் எனப் பற்பலவற்றையும் ஆராய்ந்து எத்தனையெத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகளை யாத்திருக்கிறீர்கள்! கூடவே கலைச்சொல்லாக்கம், சொல்லாராய்ச்சி ஆகியவை வேறு! நினைக்கவே மலைப்பாக உள்ளது ஐயா!

தங்கள் அளவுக்கு இயலாவிட்டாலும் தங்களைப் போல் ஒரு தமிழறிஞனாக ஆக வேண்டுமென்பதுதான் அடியேனின் பேரவா! அது நிறைவேறத் தங்கள் வாழ்த்துகளை வேண்டுகிறேன்! வாழ்த்து பெற விழைவோர் நேரில் வந்து வணங்குவதுதான் மரபு. ஆனால் அடியேன் 'ஆசுடியோசெனிசிசு இம்ப்பெர்பெக்டே (Osteogenesis Imperfectae)' எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளன். வீட்டை விட்டு ஓரடித் தொலைவு கூட அடியேனால் எந்த வகையிலும் வெளியில் வர முடியாது; வருவதும் இல்லை. எனவே இங்கிருந்தபடியே மானசீகமாகத் தங்கள் திருவடி தீண்டி வணங்கித் தங்கள் வாழ்த்துகளைக் கோருகிறேன்!

நன்றி! வணக்கம்!
--e.bhu.gnaanapragaasan@gmail.com

இ.பு.ஞானப்பிரகாசன் said...

தனிப்பெருமதிப்பிற்குரிய உயர்திரு. இராம.கி ஐயா அவர்களுக்குப் பணிவான வணக்கம்!

ஐயா! தமிழ் இணைய உலகிற்கு அண்மையில்தான் அடியேன் வந்தேன். வந்த புதிதிலேயே தங்கள் வலைப்பூவைக் காணும் வாய்ப்பு கிட்டியது என் பேறு. சிறு அகவை முதலே தமிழார்வம் மிகுந்த அடியேனுக்குத் தங்கள் வலைப்பூ சரியான தீனியாக உள்ளது.

அடியேன் தமிழறிஞர்கள் பலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தங்கள் ஆராய்ச்சி வேகமும் பன்நோக்குத் தன்மையும் மலைக்கச் செய்கின்றன! பண்டைத் தமிழரின் உணவுகள், கணக்கீட்டு முறைகள், கோக்குடும்ப உறவுகள், வரலாற்று நிகழ்வுகள் எனப் பற்பலவற்றையும் ஆராய்ந்து எத்தனையெத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகளை யாத்திருக்கிறீர்கள்! கூடவே கலைச்சொல்லாக்கம், சொல்லாராய்ச்சி ஆகியவை வேறு! நினைக்கவே மலைப்பாக உள்ளது ஐயா!

தங்கள் அளவுக்கு இயலாவிட்டாலும் தங்களைப் போல் ஒரு தமிழறிஞனாக ஆக வேண்டுமென்பதுதான் அடியேனின் பேரவா! அது நிறைவேறத் தங்கள் வாழ்த்துகளை வேண்டுகிறேன்! வாழ்த்து பெற விழைவோர் நேரில் வந்து வணங்குவதுதான் மரபு. ஆனால் அடியேன் 'ஆசுடியோசெனிசிசு இம்ப்பெர்பெக்டே (Osteogenesis Imperfectae)' எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளன். வீட்டை விட்டு ஓரடித் தொலைவு கூட அடியேனால் எந்த வகையிலும் வெளியில் வர முடியாது; வருவதும் இல்லை. எனவே இங்கிருந்தபடியே மானசீகமாகத் தங்கள் திருவடி தீண்டி வணங்கித் தங்கள் வாழ்த்துகளைக் கோருகிறேன்!

நன்றி! வணக்கம்!
--e.bhu.gnaanapragaasan@gmail.com

இ.பு.ஞானப்பிரகாசன் said...

தனிப்பெருமதிப்பிற்குரிய உயர்திரு. இராம.கி ஐயா அவர்களுக்குப் பணிவான வணக்கம்!

ஐயா! தமிழ் இணைய உலகிற்கு அண்மையில்தான் அடியேன் வந்தேன். வந்த புதிதிலேயே தங்கள் வலைப்பூவைக் காணும் வாய்ப்பு கிட்டியது என் பேறு. சிறு அகவை முதலே தமிழார்வம் மிகுந்த அடியேனுக்குத் தங்கள் வலைப்பூ சரியான தீனியாக உள்ளது.

அடியேன் தமிழறிஞர்கள் பலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தங்கள் ஆராய்ச்சி வேகமும் பன்நோக்குத் தன்மையும் மலைக்கச் செய்கின்றன! பண்டைத் தமிழரின் உணவுகள், கணக்கீட்டு முறைகள், கோக்குடும்ப உறவுகள், வரலாற்று நிகழ்வுகள் எனப் பற்பலவற்றையும் ஆராய்ந்து எத்தனையெத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகளை யாத்திருக்கிறீர்கள்! கூடவே கலைச்சொல்லாக்கம், சொல்லாராய்ச்சி ஆகியவை வேறு! நினைக்கவே மலைப்பாக உள்ளது ஐயா!

தங்கள் அளவுக்கு இயலாவிட்டாலும் தங்களைப் போல் ஒரு தமிழறிஞனாக ஆக வேண்டுமென்பதுதான் அடியேனின் பேரவா! அது நிறைவேறத் தங்கள் வாழ்த்துகளை வேண்டுகிறேன்! வாழ்த்து பெற விழைவோர் நேரில் வந்து வணங்குவதுதான் மரபு. ஆனால் அடியேன் 'ஆசுடியோசெனிசிசு இம்ப்பெர்பெக்டே (Osteogenesis Imperfectae)' எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளன். வீட்டை விட்டு ஓரடித் தொலைவு கூட அடியேனால் எந்த வகையிலும் வெளியில் வர முடியாது; வருவதும் இல்லை. எனவே இங்கிருந்தபடியே மானசீகமாகத் தங்கள் திருவடி தீண்டி வணங்கித் தங்கள் வாழ்த்துகளைக் கோருகிறேன்!

நன்றி! வணக்கம்!
--e.bhu.gnaanapragaasan@gmail.com

Vignesh M said...

வணக்கம் ஐயா!நல்ல பதிவு. முற்றிலும் ரசித்தேன். எ/ஏ மற்றும் ஒ/ஓ ஒலி வேறுபாடுகளைக் குறிப்பதற்குத் தனி குறியீடுகள் இருந்திருக்கவில்லை என்றும் அவ்வேவேறுபாடுகள் புள்ளியின் வயிலாகத் தான் அடையாளப்படுத்தப்பபட்டன என்று தாங்கள் காட்டியது தமிழ் எழுத்துக்களின் தோற்றம் பற்றிய ஒரு கேள்வியை என்னுள் ஏற்படுத்துகிறது. பிராகிருத சமஸ்கிருதம் முதல் இன்று வழங்கும் வடமாநில மொழிகள் வரை எகர-ஒகரங்களில் குறில் என்ற ஒலியே இல்லாமல் இருக்கின்றன. மாறாக தென்னிந்திய மொழிச் சொற்களில் எ-ஏ/ஒ-ஓ குறில்-நெடில் வேறுபாடுகள் இருப்பதோடு மட்டும் அல்லாமல் அவை சொற்பொருளையே மாற்றக் கூடிய அளவுக்கு இன்றியமையாத இயல் ஒலிகளாக விளங்குகின்றன. என்றால் வடக்கே புழங்கிய அசோக பிராமியைத் தழுவி தமிழி எழுத்து தோன்றியதைப் போலல்லவா கருத இடமளிக்கிறது? இதனை எப்படி முரணறப் புரிந்து கொள்வது?