Monday, February 08, 2010

பாக்குத் தீவில் சிதறுகாய்த் திருவிழா - 1

பொதுவாகக் கூட்டம் நிறைந்த இடங்களுக்குத் திருவிழாக் காலங்களில் பெருங்கோயில்களுக்குள் உள்நுழைந்து நெரிசற்படுவதை நான் தவிர்ப்பேன். [இப்படித் தவிர்ப்பதால், திருவிழாக்களை ஒட்டிய குறிப்பிடத்தக்க பட்டறிவுகளைப் பெறாமலே போகக் கூடும், அது ஓர் இழப்பு, என்பது வேறுகதை.] அதற்கு மாறாய், அருகிருக்கும் சிறு கோயில்களுக்குப் போய்வந்து விடுவேன். இந்த முறை ”அதெல்லாம் கிடையாது; தைப்பூசத்திற்கு பினாங்கு போகத்தான் வேண்டும்” என்று மனையாள் விருப்பம் தெரிவிக்க, ”இவ்வளவு காலம் நான் இழுத்த இழுப்புக்கு நெகிழ்ந்து கொடுத்தவளுக்கு நன்றிக்கடனாய் நான் நெகிழ்ந்து கொடுக்காவிட்டால் எப்படி?” யென்று நானும் ஒப்புக் கொண்டு கோலாலம்பூர், சிங்கை, பினாங்கு என்று சுற்றக் கிளம்பினோம். இப்படி நீண்ட தொலைவில் வெளியூர்ப் பயணம் போவது எப்பொழுதாவது அருகி நடப்பது தான்.

28 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் சிங்கையில் இருந்து பேருந்திற் புறப்பட்டு அன்று மாலை 6.45 மணியளவில் பினாங்கில் உள்ள தங்கும் விடுதிக்குப் போய்ச் சேர்ந்தோம். விக்டோரியா தெரு. விக்டோரியா இண் (Victorio Inn). இதற்கு முன்பு நாலு முறை இந்தத் தீவைப் பார்த்திருந்தாலும், தீவின் பெருநகரான சியார்ச்சு டவுனை (ஒருகாலத்தில் Tanjong என்றழைக்கப்பட்ட சிற்றூர் இன்று George Town என்னும் பெருநகராய் நிற்கிறது.) தைப்பூச விழாக் கோலத்தில், தேர்போகும் வழியில் எங்கு பார்த்தாலும்,

தண்ணீர்ப் பந்தல்,
கொடையாளர் விளம்பரங்கள்,
திருவிழாப் பதாகைகள்,
அலங்காரத் தோரணங்கள்,
விடுமுறையோடு சேர்ந்த கடையடைப்பு,
ஒழுங்கை, தெரு, வீதி, சாலையெங்கும் பரபரப்பு,
வழிப்போக்கர்களின் கவனமற்ற ஒயில்நடை,
பத்தில் இருவர், மூவராவது குவியறையோடு (camera) அங்குமிங்கும் அலைதல்,
பளிச், பளிச், “இங்கே பாருங்க, கொஞ்சம் சிரிங்க......”
சாலையின் நடுவத்திலும் (median), இருபக்க அஞ்சடியிலும் இன்னாருடையது என்னும் அடையாளக் குறிப்போடு கிடக்கும் தேங்காய்க் குமியல்கள், (அஞ்சடி என்பது மலேசியாவில் platform நடைமேடையைக் குறிக்க உருவான கலைச்சொல். மற்றவூர்த் தமிழாக்கங்களில் நான் பார்த்ததில்லை)

- என்ற விந்தைத் தோற்றத்தில் நான் பார்த்ததில்லை. மூச்சை முட்டவைக்கும் முன்னேற்பாடுகள். அம்மம்மா!

அந்தத் தீவை காலப்போக்கில் விதம் விதமாய்ப் பாக்குத் தீவு (Pulau Pinang), பிரின்சு ஆவ் வேல்சு தீவு (Prince of Wales Island), முத்தாரத் தீவு (pulau Muthiara, Orient Island of Pearls) - என்று பல பெயரிட்டுப் பொருளோடு அழைத்திருக்கிறார்கள்.

பாக்குத் தீவு என்பது புதலியற் (botany) கரணியத்தால் முதலில் ஏற்பட்ட பெயர். தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக மலேசியா, பிலிப்பைனில் தோன்றி, மற்ற நாடுகளுக்குப் பாக்குமரம் பரவியிருக்கக் கூடும் என்றே புதலியலார் ஊகிக்கிறார்கள். இந்தத் தீவின் கடற்கரையைச் சுற்றிப் பாக்குமரம் பெரிதாய் வளர்ந்தது போலும். தீவிற்குள் நுழைந்த பலருக்கும், பாக்கு மரங்கள் சட்டென்று காட்சியளித்திருக்கக் கூடும். பாக்கு பற்றிய குறிப்பு நம்முடைய சிலம்பிலேயே வருகிறது. அந்த மரம் நம்மூருக்கு எப்பொழுது வந்து சேர்ந்தது என்று வரலாறு சொல்லமுடியாது. பாக்குத் தீவு என்னும் பொருளில் மாலத்தீவில் Fua Mulaku என்ற பெயரிலும், இந்திய அசாம் மாநிலத்தின் தலைநகராய் Guwahati - யும் அமைந்திருப்பதாகச் சொல்லுவார்கள்.

அடுத்த பெயர் ஏற்பட்ட கதை வரலாற்றுச் சுவையாரமானது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் வழி புறப்பட்டுப் போன, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பணியைச் சேர்ந்த விரான்சிசு லைட் (Francis Light) என்பவர், கடார அரசரை (=கெடா சுல்தானை) ஏமாற்றி, அவர் மகளை மணந்து, இந்தத் தீவைச் சீதனமாய்ப் பெற்று, பின்னால் படைகள், உடன்படிக்கை, பொய்யுறுதி, --- இத்தாதிகள் மூலம் தீவுக்கு அப்பால் முகனை (main) நிலத்தில் இருந்து மேலும் இருமடங்கு நிலம்பெற்று, மொத்தத்தில் நாமெல்லாம் நன்கு படித்த ”இராபர்ட் கிளைவ் வேலைகளைச்” செய்து, இந்தத் தீவிற்கு மேன்மை தாங்கிய பிரிட்டிசு இளவரசரின் பட்டப் பெயரைச் சூட்டியிருக்கிறார். படிக்கப் படிக்க நம்மூர்ப் பாளையக்காரர்கள் ஏமாந்த கதை அப்படியே மனத்திரையில் ஓடுகிறது. எப்படி ஒரே கதையை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வெள்ளையர்கள் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலகட்டங்களில், நடத்தி நிலம் கவர்ந்தார்கள் என்பது நம்முடைய ஆழ்ந்த வியப்பிற்கும் ஆய்விற்கும் உரியது.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னையில் இருந்து வெள்ளையர் நாட்டாமை நடைபெற்றிருக்கிறது. அந்தமானுக்கு முன்னால், இந்தத் தீவுதான் இந்திய விடுதலைப் போராளிகளைச் சிறைவைத்த இடம். எங்கள் சிவகங்கை மருதுபாண்டியரின் கொடிவழியைப் பூண்டோடு ஒழித்துப் பின் எஞ்சியிருந்தோரைக் கொண்டு சேர்த்த இடமும் பினாங்குத் தீவுதான். மலேசியாவின் பெருந்தலைவர்கள் (அன்றும் இன்றும்) பலரும் எழுந்தது இந்தத் தீவும், அருகில் உள்ள நெற்களஞ்சியமான கடார மாநிலமும் தான். தஞ்சாவூர்க்காரர்கள் மாதிரி கடாரக்காரர்களை நினைத்துக் கொள்ளுங்கள். கடாரம், பினாங்கு இரண்டிலும் பழைய இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைச் சீமையின் மிச்ச சொச்சங்கள், தொட்டுத் தொடர்புகள், பேச்சுவழக்குகள், மரபுப் பண்பாடுகள், மூன்று நான்கு தலைமுறைக்கும் அப்புறமும் பெரிதும் வழங்குகின்றன. “வாங்கண்ணே, எப்ப வந்தீக? பசியாறிட்டிகளா?.....”

மூன்றாவது பெயர், கும்பணியின் ஆட்சிக்குள் பினாங் மாநிலம் பெருகி வளர்ந்தபிறகு, அதன் துறைமுகம், மலாக்கா நீரிணையின் (Malacca starits) கிடுக்கான (critical) இடத்தில் இருந்து கொண்டு, ஊடுவரும் கப்பற் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திச் சுங்கம் பெற்றிருக்கிறது. அப்படிப் பெற்ற செல்வத்தையும், பெருகி வளர்ந்த வணிகத்தையும் குறிக்கும் முகமாய் ஏற்பட்ட பெயர். முத்தாரத் தீவு நல்ல தமிழ்ப்பெயர். மலாய் மொழியில் pulau Muthiara என்று அப்படியே எழுத்துப் பெயர்ந்திருக்கிறார்கள். ஆங்கிலத்திலோ Orient Island of Pearls என்று மொழிபெயர்ந்திருக்கிறது. அந்தப் பெயருக்குள் இருக்கும் தமிழ்ப் பங்களிப்பு இன்றைக்கு யாருக்குத் தெரிகிறது சொல்லுங்கள்? பினாங்குத் தீவில் இன்றைக்கு 10 விழுக்காடாய் இருக்கும் தமிழர் அந்தத் தீவின் வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 180, 190 ஆண்டுகள் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

நீரிணையின் தொடக்கத்தில் பினாங்கும், நீரிணையின் கடைசியில் சிங்கையும் இருந்து ஊடே போன முழுப் போக்குவரத்தையும் கட்டுப் படுத்திய காலம் இன்று மாறிவிட்டது. பினாங்கின் ஒளி கிள்ளானுக்குப் (Port Klang) போய்விட்டது. [S.S.Rajulaa, S.S.State of Madras, M.V.Chidambaram எல்லாம் மக்கிப் போன பழங்கதைகள்......சென்னையில் இருந்து பினாங்குக்குச் சென்ற வாரம் ஏர் ஆசியா நேரடிப் பறனைப் போக்குவரத்தைத் தொடங்கியிருக்கிறதாம். இது ஒரு புதுக்கதை எழுப்புகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.] பினாங்குத் தீவின் துறைமுகச் செல்வாக்கு இன்று குறைந்தாலும் சிங்கைத் துறைமுகத்தின் செல்வாக்கு சற்றும் குறையவில்லை. சிங்கையின் தொடக்க காலத்திலும் தமிழர் பங்களிப்பு மிகப் பெரிதே.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

குமரன் (Kumaran) said...

குவியறை - இச்சொல் புதிதாக இருக்கிறது. சொற்பிறப்பினை வேறெங்கேனும் சொல்லியிருக்கிறீர்களா ஐயா?