Tuesday, February 16, 2010

தமிழில் கிரந்தம்

தமிழில் கிரந்தம் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றிப் பலமுறை சொல்லியிருந்தாலும், திருப்பித் திருப்பிச் சொல்வதில் சலிப்பு ஏற்பட்டாலும், இதைச் சொல்ல வேண்டியுள்ளது. என் செய்வது? தூங்குவது போல் பாசாங்கு செய்வோரைச் சங்கூதித் தான் எழுப்ப வேண்டும். மென்மையாகச் சொல்லி எழுப்ப முடியாது.

1. சங்கதம் போன்ற மொழிகளில் நகரி எழுத்தை ஆளும் போது அங்கு ஓரெழுத்து ஓரொலியாகும். Sound of a Nagari character = function of (Shape of the character). This is one to one correspondence. ஒன்றிற்கு ஒன்று எனும் பொருத்தம் கொண்டது. தமிழ் போன்ற மொழிகளில் தமிழி எழுத்தை ஆளும்போது, இங்கு ஓரெழுத்துப் பல்லொலியாகும். அந்த எழுத்து நாம் பேசும் மொழியில் (சொல்லில்) வரும் இடத்தையும், அண்மையில் வரும் மற்ற ஒலிகளையும் பொறுத்து குறிப்பிட்ட எழுத்தின் ஒலி மாறும். Sound of a Tamizi character = function of (Shape of the character, the place of occurrence in a word, nearby sounds). This is one to many correspondence. ஒன்றிற்குப் பல என்னும் பொருத்தம் கொண்டது. இது பார்ப்பதற்குக் கடினம் போல் தோற்றினாலும், பழக்கத்தில் எக் குழப்பமும் இல்லாது குறைந்த எழுத்துகளில் பல்லொலிகளை எழுப்பவைக்கும் முறையாகும்.

நகரி/சங்கதம் போன்ற கட்டகங்களின் (systems) அடிப்படை, தமிழி/தமிழ் போன்ற கட்டகங்களின் அடிப்படையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. கிரந்த எழுத்து வேண்டுவோர் நகரி/சங்கதக் கட்டகத்தைத் தமிழி/தமிழ் கட்டகத்துள் புகுத்த நினைக்கிறார். இது நாம் புழங்கும் வட்டத்தைச் சதுரமாக்கும் முயற்சி. அடிப்படைக் கட்டக வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் இப்படி முயன்று கொண்டிருந்தால் பை எனும் பகா அளவைக் காணவே முடியாது. அறிவியல் தெரிந்தவர் இதைச் செய்ய முயலமாட்டார். இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழிய மொழிகள் முதலில் (இன்றும் பலவகையிலும்) தமிழி/தமிழ் அடிப்படையையே கொண்டிருந்தன. இந்தியாவிற்குள் வாழ்வுதேடி வந்தோர் அவற்றை வலிந்து மாற்றி எல்லா மொழிகளையும் சங்கதப் (சங்கடப்) படுத்திக் கொண்டிருந்தார். அதில் தப்பியது தமிழ் மட்டுமே. அதையும் மாற்றிக் குலைப்பதே கிரந்தம் வேண்டுவோரின் குறிக்கோளாகும். குலைப்பவர் வெறியரா? குலையாது காப்பவர் வெறியரா?

2. கிரந்தம் தவிர்த்து எழுதினால், இவரின் முதல் தாக்குதல் “பொருள் மாறிப் போய்விடும்” என்பதாகும். ”இல்லை ஐயா, பொருள் சிறிதும் குறையாமற் சொல்லத் தமிழ்ச்சொல் உள்ளது” என்றால், ”அது பழஞ்சொல், பண்டிதத் தமிழ்” என நொள்ளை சொல்வார். மற்ற மொழிகளில் புதுச்சொற்கள் உருவாகும் நடைமுறையைக் கண்டுகொள்ளவே மாட்டார். தமிழில் மட்டும் குறை கண்டு கொண்டே இருப்பார். தமிழ் புதுமையாவதை இவர் விரும்பார். மாறாகக் கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம்” என்று களியாட்டப் புலங்களில் மட்டுமே தமிழ் நின்று, கற்படிமம் (fossil) ஆவதையே விரும்புகிறார். மற்றதற்கெல்லாம் ஆங்கிலம் கலந்து கலப்பின மொழி (bastard language) உருவாவதையே வேண்டி நிற்கிறார். இவரி விழைவு தமிங்கிலம் தான். தமிழ் அல்ல.

3. இவரின் 2 ஆம் தாக்குதல் “கிரந்தம் தவிர்த்தால் ஒலிப்பு மாறிவிடும்” என்பதாகும். ஏதோ உலகமெங்கும் உள்ளோர் ஒலிப்பு மாறாது பிறமொழிச் சொற்களை ஒலிப்பதாகவும், தமிழர் மட்டுமே தவறு செய்வதாகவும் இவர் அங்கலாய்ப்பார். ஒரு பத்து நாட்களுக்கு முன் கோலாலம்பூர், சிங்கை, பினாங் போய்வந்தேன். கோலாலம்பூரில் ஒரு மீயங்காடியை (Hyper market) Pasar besar என்று மலாய் மொழியில் எழுதியிருந்தார். நம்மூர்க்காரர் மூலம்தான் பசார் என்ற சொல்லையே அவர் அறிந்திருக்கிறார் அச் சகரமே அதை இனங் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அதுவும் தென்பாண்டி ஒலிப்பை அப்படியே காட்டி விடுகிறது.

பசாரின் மூலம் ஓர் அரபிச் சொல்; சங்க காலத்தில் இறக்குமதியானது. பந்தர் என்ற சந்தை/அங்காடி ஊரே, சேரலத்தில் முசிறிக்கு அருகில் இருந்திருக்கிறது பந்தர் என்ற சொல் பாரசீகத்தும் பரவியது. இன்றும் ஒரு பெரிய துறைமுகம் ஈரானில் பந்தர் அப்பாசு என்று இருக்கிறது. பந்தர்> பந்தார்> பஞ்சார்> பசார் என்ற திரிவில் அது பசார் ஆனது. வடக்கே பஞ்சார் என்பது பஜார் ஆனது. நாம் பசார் என்று அந்தப் பிறமொழிச் சொல்லை எழுதினால் அதை நக்கலடிக்கும், நையாண்டியடிக்கும் பெருகபதியர் (ப்ரஹஸ்பதிகள்) மலாய்க்காரரிடம் போய்ச் சொல்வது தானே? ”அதைப் பசார் என எழுதாதீர், பஜார் என எழுதுக” என்று முறையிடவேண்டியது தானே? இத்தனைக்கும் மலாய் மொழியில் ஜகரம் இருக்கிறது. ஆனாலும் மலாய்க்காரர் சற்றும் கவலைப்[படாமல், வெட்கப்படாமல் பசார் என்று எழுதுகிறார்.

Besar என்பது நம்முடைய பெரியது என்பதோடு தொடர்பு கொண்டது. [அந்தச் சொற்பிறப்பை இங்கு நான் விளக்கவில்லை.] இந்த இடுக்கைக்குத் தேவையானதோடு நிறுத்திக் கொள்வோம். ஒவ்வொரு மொழியினரும் வேற்று மொழிச் சொற்களைத் தம் இயல்பிற்கெனத் திருத்திக் கொண்டே தான் வந்திருக்கிறார். புழங்குகிறார். அது ஒன்றும் தவறே அல்ல. தாழ்வு மனப்பான்மை கொண்டவருக்கு மட்டுமே அது தவறாய்த் தெரியும். பெருமிதங் கொண்டோருக்குத் தெரியாது. [பெருமிதங் கொண்ட ஆப்பிரிக்கக் கருப்பருக்குத் தம் கருப்பு வண்ணம் தவறாகத் தோன்றவில்லை. பெருமிதம் குலைந்து 400 ஆண்டு அடிமையாகிப் போய்ப் பின் உயிர்த்தெழுந்த அமெரிக்கக் கருப்பருக்கு மட்டுமே தம் கருப்பை மறைப்பதற்கு வெள்ளை, பூஞ்சை என்ற வண்ணங்கள் வண்டி வண்டியாகத் தேவைப் படுகின்றன. அவை கொண்டு அழுத்தி அழுத்தித் தேய்க்கிறார். தோலின் கருப்பு நிறம் தான் போகமாட்டேன் என்கிறது.]

4. இவரின் மூன்றாம் தாக்குதல் “இயற்பெயரில் எப்படிக் கிரந்தம் தவிர்ப்பது? மாற்றார் நம்மைப் பார்த்துச் சிரிப்பாரே?” ”மற்றவன் இப்படி நினைக்கிறானா?” என்று இவர் எண்ணுவதே இல்லை. மற்றவருக்குப் பெருமிதம் இருக்கிறது, எனவே அவர் கவலையே படாமல் தொல்காப்பியனைத் தோல்காப்பியன் ஆக்குகிறார், அழகப்பனை அலகப்பன் ஆக்குகிறார், ஆறுமுகத்தை ஆருமுகம் ஆக்குகிறார். 

நமக்கோ நம்முள் கிடக்கும் அடிமையூற்று இன்னும் அடங்கவில்லை. கூனிக் குறுகி ”பழுப்பு பதவிசில்” (Brown sahib) ஒளிரப் பார்க்கிறோம். [Here Tamils and dogs are not allowed] என்ற வாசகம் எப்போதுமே நம் மனத்தில் தொங்கிக் கொண்டே இருக்கிறது. நம்முடைய கருப்பு/பழுப்பு மெய்யில் வெண்பொடி/ பூஞ்சைப் பொடி பூசி நம் நிறத்தை அழித்துக் கொள்ளத் துடிக்கிறோம்.] 

[அதே பொழுது, வளரும் நாடான மலேசியாவிலோ, மகாதீர் முகமது எனும் மாந்தர் மலாய்க்காரருக்கு பெருமிதப் பாடத்தை விடாது கற்றுக் கொடுத்திருக்கிறார்.மலாயர் தமக்கு இருப்பதைக் கொண்டு பெருமைப் படுகிறார். புதுப் பெருமைகளை உருவாக்குகிறார்.] நமக்கும் பெருமிதத்திற்கும் இன்றுங்கூட காத தொலைவு இருக்கிறது. வெட்கித் தலைகுனிந்து கொண்டே இருக்கிறோம். பூச்சுக்களைத் தேடியலைகிறோம்.

5. இவர்களின் நாலாம் தாக்குதல் “கிரந்தம் தவிர்த்தால் அறிவியல் எப்படிக் கற்பது? நாம் தனிமைப் படுவோமே?” என்பதாகும். ”மண்ணாங்கட்டி” என்றே சொல்லத் தோன்றுகிறது. இப்பொழுது மட்டும் தமிழர் தனிமைப் படாமல் இருக்கிறோமா என்ன? அதுதான் சென்ற ஆண்டு பார்த்தோமே? ஒரு நூறாயிரத்தைக் கொன்றதற்கு இந்த உலகம் கவலைப்பட்டதா, என்ன? தனித்துத் தானே கிடந்தோம்? தமிழர் அழிந்தால் (உயிருடனோ, அன்றி மனத்தாலோ அழிந்தால்) நல்லது என்று தானே இப் பாழாய்ப்போன உலகம் நினைக்கிறது?

அறிவியலை அப்படியே ஒப்பிக்கும் கிளிப்பிள்ளையா நாம்? கிளிப் பிள்ளையாக வேண்டுமானால் கிரந்தம் வைத்துக் கொள்ளுங்கள். புரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழ் பழகுங்கள், பிற சொற்களை கிரந்தம் தவிர்த்து எழுதப் பழகுங்கள். வேண்டுமானால் ஒரு சில இடங்களில் உங்கள் சோம்பேறித்தனம் கருதி ஓரோவழி பழகிக் கொள்ளுங்கள். குடி முழுகாது. ஆனால் அதை வேதவாக்கு என்று கொள்ளாதீர். அடிமைப் புத்தியை விட்டொழியுங்கள், தமிழன் என்ற பெருமிதம் கொள்ளுங்கள். கிரந்தம் இல்லாமலும் தமிழில் அறிவியல் ஓடோடி வரும்.

என்னால் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளமுடியும், ஆனால் ”அடிமையாய் இருப்பதே சுகம்” என்று வீண்வாதம் செய்யும் பேதையரை மட்டும் பொறுத்துக் கொள்ளமுடியாது. சரியாகத் தான் பாரதி சொன்னான்.

“சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ
இந்த வசையெனக் கெய்திடலாமோ?”

பேதையரைக் காணும் வேதனையுடன்,
இராம.கி.

7 comments:

சி. கணேசன் said...

//மலேசியத் தலைமையமைச்சர் நஜீப் இந்த ஆண்டு கோலாலம்பூர் பத்துமலைத் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார்.//

இது நீங்கள் எழுதியது.(பாக்குத் தீவில் சிதறுகாய்த் திருவிழா - 2)

இராம.கி said...

அன்பிற்குரிய கணேசன்,

என்னுடைய கட்டுரைகளில் இன்னும் தேடினால் உங்களுக்குப் பல எடுத்துக் காட்டுகள் கிடைக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக அவற்றில் கிரந்த எழுத்துக்கள் விரவியிருக்கும். அவை நான் விரும்பி எழுதியவை அல்ல. படிப்போர் “கிரந்த எழுத்துக்களை முற்றிலும் தவிர்க்க வேண்டாம்” என்று சொன்னதால் நான் அவ்வப்பொழுது செய்து கொள்ளும் சமதானம்.

என்ன செய்வது? வேற்றுக் கருத்தாரோடு உரையாடும் போது, இருவருக்கும் இடைப்பட்ட மொழியில் உரையாடத்தானே வேண்டியிருக்கிறது? நான் ஒரு தளத்திலும், படிப்போர் இன்னொரு தளத்திலும் இருந்தால் சொல்வது விளங்காமலே போகும் அல்லவா? யாரோ ஒருவர் செருமன் மொழியில் உரையாடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் தமிழில் உரையாடுகிறேன் என்றால் அவருக்குப் புரிபடுமா? அது போன்ற கருத்தாடல்களில் கலப்பு மொழி புழங்கத்தான் வேண்டியிருக்கிறது. அதே பொழுது கலப்பு மொழியை நான் ஆதரிக்கிறேன் என்ற பொருளில்லை.

நான் முழுக்க முழுக்க வளையாது சற்றேனும் நெகிழ்ந்து கொடுக்காது இருந்தால், கருத்துப் பரிமாற்றம் ஏற்படாமலே போகுமே? அதையும் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

கலப்பு மொழியை ஓரோவழி பயன்படுத்தினாலும், அதைக் குறைத்துக் கொள்வதைத் தமிழர்க்கு உணர்த்தினால் நல்லது என்று எண்ணுகிறேன்.

என் விழைவு கிரந்தம் தவிர்த்தலே. அதை என் கட்டுரைகள் பலவற்றையும் படித்திருந்தால் குறிக்கோள் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

அன்புடன்,
இராம.கி.

சி. கணேசன் said...

நீங்கள் கிரந்த எழுத்துகளைக் கலந்து எழுதினால் அதற்கு மேலே உள்ளவாறு `விளக்கம்' சொல்வீர்கள்.

மற்றவர்கள் எழுதினால்...

//என்ன செய்வது? தூங்குவது போல் பாசாங்கு செய்வோரைச் சங்கூதித்தான் எழுப்ப வேண்டும். மென்மையாகச் சொல்லி எழுப்ப முடியாது.//

//இது நாம் புழங்கும் வட்டத்தைச் சதுரமாக்கும் முயற்சி. அடிப்படைக் கட்டக வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் இப்படி முயன்று கொண்டிருந்தால் பை என்னும் பகா அளவைக் காணவே முடியாது. அறிவியல் தெரிந்தவர்கள் இதைச் செய்ய முயலமாட்டார்கள்.//

//அதில் தப்பியது தமிழ் மட்டுமே. அதையும் மாற்றிக் குலைப்பதே கிரந்தம் வேண்டுவோரின் குறிக்கோளாக இருக்கிறது. குலைப்பவர்கள் வெறியர்களா? குலையாது காப்பவர்கள் வெறியர்களா?//

//இவர்கள் தமிழ் புதுமையாவதை விரும்பாதவர்கள்.//

//தாழ்வு மனப்பான்மை கொண்டவருக்கு மட்டுமே அது தவறாய்த் தெரியும். பெருமிதங் கொண்டோருக்குத் தெரியாது.//

//நமக்கோ நம்முள் கிடக்கும் அடிமையூற்று இன்னும் அடங்கவில்லை.//

//நமக்கும் பெருமிதத்திற்கும் இன்றுங் கூட காத தொலைவு இருக்கிறது. வெட்கித் தலைகுனிந்து கொண்டே இருக்கிறோம். பூச்சுக்களைத் தேடியலைகிறோம்.//

//அடிமைப்புத்தியை விட்டொழியுங்கள், தமிழன் என்ற பெருமிதம் கொள்ளுங்கள்.//

//என்னால் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளமுடியும், ஆனால் ”அடிமையாய் இருப்பதே சுகம்” என்று வீண்வாதம் செய்யும் பேதையரை மட்டும் பொறுத்துக் கொள்ளமுடியாது.//

பேதையரைக் காணும் வேதனையுடன், இராம.கி.//

என்றெல்லாம் `இன்மொழிகள்' சொல்வீர்கள்.

வாழ்க!

இராம.கி said...

அன்பிற்குரிய கணேசன்,

நான் சொல்ல வேண்டியதை விளங்கச் சொல்லியிருக்கிறேன் என்றே எண்ணுகிறேன்.

என் நடைமுறை எது, எதை வலியுறுத்துகிறேன், எதைப் பின்பற்றுகிறேன் என்பது என்னை விடாது படித்து வந்தோருக்கு நன்றாகவே தெரியும். அதை நீங்கள் புரிந்து கொள்ள முயலாது, வெறுமே வறட்டுவாதம் பேசினால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. உங்கள் உகப்பு உங்களுக்கு.

உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.

அன்புடன்,
இராம.கி.

சி. கணேசன் said...

`கிரந்த எழுத்துகளைத் தவிர்த்தல் வேண்டும்' என வலியுறுத்துவதனையும் `ஏன் தவிர்த்தல் வேண்டும்' என விளக்குவதனையும் நான் ஏதும் சொல்லவில்லை.

ஆனால் எதற்காக வசைமொழிகள்? கடுஞ்சொற்களால் எவரையும் திட்டாமல் விளக்கி எழுதக் கூடாதா? எழுத முடியாதா?

//என் நடைமுறை எது, எதை வலியுறுத்துகிறேன், எதைப் பின்பற்றுகிறேன் என்பது என்னை விடாது படித்து வந்தோருக்கு நன்றாகவே தெரியும். அதை நீங்கள் புரிந்து கொள்ள முயலாது, வெறுமே வறட்டுவாதம் பேசினால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. உங்கள் உகப்பு உங்களுக்கு.//

`அதை' நான் புரிந்துகொள்ளவில்லை என எவ்வாறு உறுதியாகச் சொல்கிறீர்கள்?

இன்னாச் சொற்களை அளவின்றிப் பெய்து பிறரைத் திட்டுவது மிக மிகப் பொருளுள்ள வாதம்! `பிறரைத் திட்டாமல் எழுதினால் என்ன' என்று கேட்டால் அது `வறட்டுவாதம்'!

வாழ்க!

குறும்பன் said...

சி. கணேசன் இராம.கி பற்றி எனக்கும் ஓரளவு தெரியும். அவர் சொன்னதும் புரிகிறது. உங்களுக்கு புரியவில்லையா? அவர் கிரந்த எழுத்தை முடிந்த எல்லா இடங்களிலும் பயன்படுத்துவோரைதான் சாடுகிறார்.

பாண்டியன் கடுங்கோ said...

நண்பரே, ஈஸ்வரம் என்று முடியும் கோயில் பெயர்களை காட்டாக திருக்கேதீஸ்வரம் என்பதை திருக்கேதீச்சரம் என்று எழுதலாம். இங்கே சரம் மலையையோ பூச்சரத்தையோ குறிக்கிறது. ஆனால் இராமேஸ்வரம் என்பதை இரமேச்சரம் என்று எழுதி, அதே நேரத்தில் இராமேச்சுரம் என்றும் எழுதுறார்கள். சரமா? சுரமா? ஆரியர்கள் தமிழைக் கோயிலில் சிதைத்து விட்டார்கள் என்ற வேதனை ஒருபுறமிருக்க, எது சரி, எது பிழை என்று தெரியாத சூழ்நிலை உள்ளதுதான் கொடுமை.

அதுபோக, சங்கமேஸ்வரர் என்பதை எவ்வாறு எழுதுவது? சங்கமேச்சரர் என்றா அல்லது சங்கமேச்சுரர் என்றா?

இங்கே ஈஸ்வரர் என்பது இறைவன் என்பதில் இருந்து வந்தது என்று சொல்வோரும் உண்டு. ஆனால் தேவாரம், திருவாசகத்தில் ஈசன் என்பது கைக்கொள்ளப்படுவதால், அது நிச்சயமாக சமஸ்கிருத திரிபாக இருக்காது என்று தெரிகிறது.

மேலும் மலேசிய முருகன் கோயில் பட்டுக்குகை முருகன் கோயிலா இல்லை பத்துமலை முருகன் கோயிலா? எது சரி, அல்ல இரண்டும் சரியா?