Monday, February 08, 2010

பாக்குத் தீவில் சிதறுகாய்த் திருவிழா - 2

விடுதிக்கு வந்து சேர்ந்த அரைமணி நேரத்திற்குள் மெய்யாற்றிப் புதுப்பித்துக் கொண்டு, விக்டோரியாத் தெருவில் (Lebuh Victoria) இருந்து சோழியத் தெருவிற்குச் (Lebuh Chulia) சிறிது நடந்து வந்து, திரும்பி பினாங்குத் தெருவின் தென்முனைக்கு வந்துவிட்டோம். சோழியத்தெருவும் பினாங்குத்தெருவும் குறுக்குவெட்டும் சந்திப்பில் இருந்து நாலைந்து கட்டிடங்கள் தள்ளி வெள்ளித்தேர் புறப்படும் கோயில்வீடு இருந்தது. கோயில் வீட்டிற்கு அடுத்தாற்போல் விருந்தினர் உணவுகொள்வதற்கான கிட்டங்கி இருந்தது.

மாலை 7.15 அளவில் ஈரொழுங்கையால் (two lane) அமைந்த பினாங்குத் தெருவின் நெடுகிலும், சோழியத் தெரு சந்திப்பிற்கு அருகிலும், அடைந்து கிடக்கும் பெருங்கூட்டம். ஆங்காங்கு கூடியிருந்தோருக்குச் சாப்பிட ஏதேதோ பரியாகத் (free) தரும் தொண்டர்கள். அடுத்தநாள் காலையிற் புறப்படும் வகையில், அலங்காரம் செய்த தேர் கோயில்வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தது. கோயில்வீடு என்பது ஓர் இரண்டுமாடிக் கட்டிடம். இரண்டாம்மாடியில் தண்டாயுதபாணியின் திருமுன்னிலை (சந்நிதி) இருக்கிறது. கிட்டத்தட்ட 72 காவடிகள் முதல் மாடியில் வைக்கப் பட்டிருந்தன.

காவடிப் பூசை மாலை 6-15 க்குத் தொடங்கி ஒரு மணிநேரம் நடந்திருக்கிறது. பினாங்குத் தெருவெங்கும், டி.எம்.எஸ்.ஸும், பெங்களூர் இரமணியம்மாளும் இன்னும் பல்வேறு இசைஞர்களும், ஒலியுருவத்தில் செவியை நிறைத்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் பழைய பாட்டுக்கள். இப்பொழுதெல்லாம் அத்தகைய பாட்டுக்களை யாரும் பாடுவதில்லை. எல்லா இடத்திலும் குத்துப் பாட்டுக்களும், மேலையிசைப் பாட்டுக்களுமாய் ஆகிவிட்டன. பழைய சந்தப் பாட்டுக்களும், பற்றிப் (பக்திப்) பாடல்களும் அரிதாகவே கேட்கின்றன.

என் மனையாளின் ஒன்றுவிட்ட அண்ணன் இந்தியாவில் இருந்துவந்து காவடியெடுப்பதாய் நேர்ந்து கொண்டிருந்தவர்; இரண்டாமாண்டு காவடியெடுக்கிறார். அங்கு நாங்கள் போனபோது சட்டென்று கூட்டத்தில் எங்களை அடையாளம் கண்டு, அருகில் வந்து அணைத்துக் கொண்டார். அவரிடம் காவடியேற்பாடுகள் பற்றி அறிந்தபிறகு, வரிசையில் நின்று கோயில்வீட்டின் மேலே பூசை முடிந்து திருநீறு கொடுப்பதைப் பெற்றுக் கொள்ளுவதற்கு முற்பட்டோம். குறுகிய கதவும் மாடிப்படியுமாய். இருந்தாலும் ஏற ஒருவரிசையும், இறங்க ஒரு வரிசையுமாய் விழையாரத்தார் (volunteers) ஒழுங்கு செய்து கொண்டிருந்தார்கள். மேலே வரிசையாக அடுக்கிவைக்கப் பட்டிருந்த மயிற்பீலிக் காவடிகளைப் பார்த்துவிட்டு, அங்கிருந்த முருகனடியாரிடம் திருநீறும், படையற் சோறும் பெற்றுக் கொண்டு, மேலே இரண்டாம் மாடிக்குப் போய் தண்டாயுதபாணியின் ஊருலவத் (உற்சவத்) திருமேனியைக் கண்டு வணங்கி வந்தோம். சீனர்கள், தமிழர்கள் என்று பலரும் அங்கு அர்ச்சனைக்குத் தேங்காய், பழத் தட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கீழே வந்தால், அங்குமிங்குமாய்த் தெரிந்தவர்களின் முகங்கள் மிகப்பல. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, அவர்கள் வழி இன்னும் மற்றவரை அறிமுகம் செய்து கொண்டு சிறிது நேரம் போனது.

இந்த ஆண்டு ஏர் இந்தியா எக்சுபிரசும், ஏர் ஏசியாவும் நம்முரிலிருந்து மலேசியா செல்லப் பறனைக்கு ஆகும் செலவை எக்கச் சக்கமாய் குறைத்ததால், திருச்சி (6 மாதங்களுக்கு முன்பு பயணச்சீட்டு வாங்கியிருந்தால் ஏர் ஏசியாவில் கோலாலம்பூர் போகவர ரூ 4500 தானாம்). கொச்சி (திருச்சியைப் போலவே பயணச்சீட்டுச் செலவு) சென்னை (2 மாதங்களுக்கு முன்பு பயணச்சீட்டு வாங்கியிருந்தால் கோலாலம்பூருக்கு ஏர் இந்தியா எக்சுபிரசில் போகவர ரூ 10500 தான்) எனப் பல்வேறு ஊர்களில் இருந்து 400, 500 பேர் பறனையில் தைப்பூசம் பார்ப்பதற்கென்றே பினாங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

முன்னே சொன்னது போல் பழைய இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைச் சீமைகளில் இருப்போர் பலருக்கும் மலேசியா என்னும் நாடு பலவகையில் உணர்வொட்டிய உறவு கொண்டதால், வரும் ஆண்டுகளில் இந்தத் தொகை இன்னும் பெருகும் என்றே தோன்றுகிறது. முன்னோர் போய்வர இருந்த ஊரைப் பார்த்துவிட வேண்டும் என்று பிறங்கடையார் (பரம்பரையார்) முயலும் இந்தவகைப் பயணங்கள், பயணச்சீட்டுச் செலவைக் கூட்டாத வரையில் மென்மேலும் தொடரலாம். தமிழ்நாட்டிலிருந்து தில்லிக்கு இருள்வாய்த் தொடரிப் (Railway Train) பயணம் போய் வருவது மாறி இந்தப் பறனைப் பயணங்கள் எளிதாக ஆகிப்போயின. இனிக் கூட்டம் கூடிக் கொண்டுதான் போகும். நம்நாட்டிலிருந்து போனவர் போக திருவிழாவைக் குறிப்பாக அலகுக் காவடிகளைப் பார்த்து வியந்து போக வந்துசேரும் வெளிநாட்டினர் கூட்டம், உள்ளூர்க்காரர்கள் கூட்டம் எனப் பல்கிப் பெருகுவது இயற்கைதான்.

[தமிழ்நாட்டிலும் முன்பு பழனி போன்ற அறுபடைவீடுகளுக்குக் காவடி எடுத்துப் போவாரில் அலகுக் காவடிகள் இருந்தன. பின்னால் இந்திய உச்ச நீதிமன்றம் ஏதோ ஒரு வழக்கிற் போட்ட தடையால் அலகுக் காவடிகள் இந்தியாவில் தடைசெய்யப் பட்டிருக்கின்றன. ஏன் இந்தத் தடை என்று எனக்கு விளங்கவில்லை. இப்பொழுது மயிற்பீலிக் காவடியும், மேலுக்குச் சோடித்த காவடிகள் மட்டுமே பழனியில் அனுமதிக்கப் படுகின்றன. தென்கிழக்கு ஆசியாவிற் பார்க்கும் விதவிதமான காவடிகள், பெங்களூர் இரமணியம்மாள் பாட்டில் பட்டியலிடப்படும் காவடிகள், நம்மூரிற் கிடையா. இந்தத் தடை மலேசியா, சிங்கை, இந்தோனேசியா, தாய்லந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற தமிழர் தைப்பூச விழா கொண்டாடும் நாடுகளிலில்லை.]

உள்ளூர்க்காரர்களுக்கு மூன்று தைப்பூச விழாவிடங்கள் இருக்கின்றன. மலேசியாவின் நடுவில் இருப்போரெல்லாம் கோலாலம்பூர் பத்துமலைக்கும் [அந்தக் கொண்டாட்டம் இன்னும் மாணப் பெரியது. நுல்லியன் (million) கணக்கில் மக்கள் கூடுவது] தெற்கில் இருப்பவர்கள் ஜோகூர், சிங்கையிலும், வடக்கில் இருப்பவர்கள் பினாங்கிலும் கூடுவது வழக்கமாய்ப் போனது. இந்தத் திருவிழாவில் தமிழர் மட்டுமல்லாது சீனர், மலாய்க்காரர் எனப் பலரும் கலந்து கொள்கிறார்கள். தமிழர் 60 விழுக்காடு என்றால், சீனர் 30 விழுக்காடும், மலாய்க்காரர் 10 விழுக்காடும் இருப்பார்கள்.

ஒருசில ஆண்டுகளுக்கு முன்னெல்லாம் மாநிலத்தின் மலாய் ஆளுநரே பூசத் திருவிழாவில் கலந்து கொள்வாராம். இப்பொழுது இல்லை. இந்த மாநிலமும், அருகில் உள்ள உள்ள கெடா மாநிலமும், இவற்றை ஒட்டி வடகோடியில் இருக்கும் பெர்லிசு மாநிலமும் இப்பொழுது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆகிப் போனதால், மலாய்க்காரர்களிடமும், நடுவரசு ஆள்வோரிடமும், சற்று தயக்கம் இருக்கிறது. பினாங்கு மாநிலத்தின் முதல்வர் ஒரு சீனக்காரர்; துணைமுதல்வர் இராமசாமி எழுச்சி மிக்க தமிழர்.

“அதெப்படி தைப்பூசப் பண்டிகையில் இசுலாம்காரர் கலந்து கொள்ளலாம்?” என்று மத குருமார் கேட்டது தான் இப்பொழுது ஆளுநர் கலந்து கொள்ளாததற்குக் காரணமாம். ஆனால், அதையெல்லாம் தூக்கியெறிந்து, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, (கூடவே நலிந்து கிடக்கும் மலேசிய இந்தியக் காங்கிரசைத் தூக்கி நிறுத்துமாப் போலத் தமிழர் வாக்குகளை மனத்தில் வைத்து,) மலேசியத் தலைமையமைச்சர் நஜீப் இந்த ஆண்டு கோலாலம்பூர் பத்துமலைத் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார். இத்தனைக்கும் ”மலேசியக் கிறித்துவர்கள் தாங்கள் தொழும் போது, அல்லா என்று இறைவனை அழைக்கக் கூடாது, முசுலீம்கள் மட்டுமே அழைக்கலாம்” என்ற எக்கியக் (extreme) கொள்கை கொண்ட ஒரு சில முசுலீம் குழுக்கள் மற்றோரோடு முரண்பட்டு, உயர்நீதி மன்றத் தீர்ப்பிற்கும் மாறாய் போராட்டத்தில் ஈடுபட்டு, சில கிறித்துவத் தேவாலயங்களைத் தகர்த்திருக்கும் பரபரப்பிற்கு நடுவில் தைப்பூசத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார். [அதற்கு ஒருவாரம் முன்னால், தில்லிக்கும், சென்னைக்கும் நஜீப் வருகை தந்து, கலைஞரை கோபாலபுரத்தில் பார்த்து, வரவேற்பில் மகிழ்ந்தது வேறுகதை.]

பொதுவாய் மலாய்க்காரர்கள் தைப்பூசத்திற் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததுமாய் எண்ணிக்கைகள் ஏறி இறங்கி வந்துள்ளன. இந்த ஆண்டு பல மலாய்க்காரர்கள் தேர் போன இடங்களில் அர்ச்சனை செய்ததை நான் பின்னாற் பார்த்தேன். சீனர்களோ சொல்லவே வேண்டாம்.....ஒரே பற்றி (பக்தி) மயம். அதற்கு அப்புறம் வருவோம்.

பின் 9.00 - 9.30 மணியளவில் முண்டியடித்து கிட்டங்கிக்குள் நுழைந்து சாப்பாட்டுப் பந்தியில் அமர்ந்து இரவு உணவை உண்டு முடித்தோம். சும்மா சொல்லக் கூடாது எளிமையாய் இருந்தாலும், சுவையான நம்மூர்ச் சாப்பாடு. அடுத்த நாள் காலை 6 மணிக்கெல்லாம் தேரில் ஊருலவரை கொண்டுவந்து வைப்பதற்கு முன்னால் வந்து சேர்ந்துகொள்வதாய்த் தெரிந்தவரிடம் சொல்லிக் கொண்டு விடுதிக்குத் திரும்பினோம்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

குமரன் (Kumaran) said...

பரி = free இது புரியவில்லை. பிரசாதம் = படையற் சோறு; எவ்வளவு எளிமை?! இனி புழங்க நினைவில் கொள்ள வேண்டும்.

ந.குணபாலன் said...

உற்சவத் திருமேனி-ஊருலவத் திருமேனி-
இதனை எழுந்தருளி/எழுந்தருளி விக்கிரகம் என இலங்கையில் சொல்லப்படும்.