Saturday, January 09, 2010

மாமூலனார் - 3

நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம்
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி
‘நிலம்புடை பெயர்வது அன்றுகொல், இன்று?” என
மன்னுயிர் மடிந்த மழைமாறு அமையத்து
இலை இல ஓங்கிய நிலையுயர் யாஅத்து
மேற்கவட்டு இருந்த பார்ப்பினங் கட்கு
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
நிணவரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
கண்ணுமிழ் கழுகின் கானம் நீந்தி
‘சென்றார்’ என்பிலர் - தோழி! - வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர்த் தேஎத்த பல்மலை இறந்தே
- அகம் 31
- திணை : பாலை
- துறை: பிரிவிடை ஆற்றாளாயினள் என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தன் தோழிக்குச் சொல்லியது.
- துறைவிளக்கம்: வேந்து வினை காரணமாய்க் காவற் தொழிலுக்கெனத் தலைவன் பிரிந்து சென்றான், அந்தப் பிரிவாற்றாது தலைவி வருந்தினாள்;  “வினை வயின் ஆடவர் பிரிந்தபோது, இப்படி நீ அழலாமோ? - என்று எல்லாப் பெண்டிரும் என்னிடம் கூறுகிறாரே, :அவரும் அக்காட்டின் வழி சென்றார் - என்று கூறுவாரல்லரே?” எனத் தலைவி மேலும் வருந்திக் கூறியது.

தெளிவுரை” (ஓர் உரைவீச்சாய் அமைகிறது.)

நெருப்பாய்ச் சிவந்த வெய்யொளிர்ச் சூரியன்
புலங்கடை கருகி மடங்குமாறு சுடுகிறது;

“நிலம் இதோ, புடைத்துப் பிளக்கிறதா?”
என்று கேட்பதுபோல்,
நிலத்து உயிர்கள் நொய்ந்து மடிய ஏதுவாய்,
மழை பெய்யாக் காலம்;

குறும்ப நாட்டு வயவர்,
காட்டுப்பாதையில் எதிர்ந்தாரை வில்லிட்டு வீழ்த்த,
செவ்வலரி மாலை இட்டது போல்,
புண்ணுமிழ் குருதி பரவி,
தசையொழுங்கற்று, குறைப்பட்டுக்
கிடக்கும் யாக்கைகளின்
கண்களைக் கொத்தும் கழுகுகள், 

இலையருகி, ஓங்கி வளர்ந்த,
யா மரத்தின் உயரக் கிளைகளில்
தஞ்சமடைந்த குஞ்சுகளுக்கு
அவற்றை ஊட்டுகின்றன. 

ஆனாலும், தோழி!
விற்போரில் ஈடுபட்டு,
வலிய ஆடவர்
வென்றியொடு வாழும்,
இக்காட்டின் வழியே
அவரும் "தமிழ்மூவேந்தர் காக்கும்
மொழி பெயர் தேயத்தின்
பன்மலைகள் கடந்து,
சென்றார்” என்று உரைப்பார் அல்லரே, ஏன்?

பொதினியின் பாதையை அகம் - 1 இலும், துளுநாட்டுப் பாதையை அகம் 15- இலும் குறிப்பிட்ட மாமூலனார் இங்கே குறும்ப நாட்டு பாதையை 31 ஆம் பாடலில் விவரிக்கிறார். குறும்பர்நாடென்பது இன்றைய ஆந்திரம், கன்னடம் இவற்றின் இருமருங்கிலும் பரவிய இராயல சீமையாகும். சோழர், பாண்டியர் என்னும் இருநாட்டாரும், கொங்குநாட்டைக் கடந்து வெய்யிலூர் (இன்றைய வேலூர்) வழியே, இராயல சீமைக்குள் புகுந்து வடநாடு ஏகலாம். அன்றேல் தகடூர் (தர்மபுரி) வழியேயும் வடநாடு செல்லலாம்.

இராயல சீமை வழி போவது, இன்றுமட்டுமல்ல, அன்றும், இருப்பதற்குள், கடின வழியாகும். வேனிற் காலத்தில் வெம்மை கூடி பாலை படர்ந்த பெருவெளி/வழி இது. மழை என்பது எப்போதோ ஏற்படும் பைதிரம். குறும்பர் என்போர் ஆறலைக்கள்வராய் (வழிப்பறிக் கள்வராய்) இருந்தவர். குறும்பரை குருப என்று தெலுங்கிலும், கன்னடத்திலும் குறிப்பர். மலையாளத்தில் இவர் குறுமர் என்று அழைக்கப்படுவார். இன்றையக் கேரளத்தின் வயநாட்டிலும், தமிழ்நாட்டில் நீலகிரிப் பக்கமும் பழங்குடியினராய் இன்றும் இருக்கிறார். மலைப் பாதையில் இருந்து கீழிறங்கி இன்றைய இராயல சீமையில் இவரின் பெருஞ்சாரார் கம்பளம் பின்னும் இடையராய் மாறினார்.

இவர் பற்றி மிகுந்த விவரம் எட்கர் தர்சுடனின் (தமிழாக்கம் முனைவர். க. ரத்னம்) ”தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் - தொகுதி நான்கு”, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் வெளியீட்டில் பார்க்கலாம். குறும்பர் சற்றே குட்டையானவர். குறும்பு என்பது அவ்வளவு வளமில்லாத, முள்ளும் செடியும், புதரும் விரவிய, சிறுகுன்றாகும். ”கல்லுடைக் குறும்பு” எனும் சொற்றொடர்  கவனிக்கலாம். இவருக்குச் சரியான வாழ்வு ஆதாரம் அன்று கிடையாது. பின்னால் ஆடுகளை மந்தையாக்கி, ஆட்டு மயிரில் இருந்து முரட்டுக் கம்பளம் செய்யும் நெசவு நிலைக்கு மாறிக் கொண்டனர். உரோமம் பறிப்பதற்காக வளர்க்கப்பட்ட குறும்பர்களின் ஆடு, குறும்பாடு என்றே அன்று சொல்லப் பட்டது.

வயவரென்போர் வீரர். இற்றை இராயலசீமைக்கு வடக்கே மாராட்டம் போயின்,  அன்றைக்கும் மொழிபெயர் தேயமே. மொழிபெயர் தேயம் எனில் எதோ வேற்று மொழி பேசும் இடம் என்று பொருளல்ல. மொழி பெயரும் தேயம் மொழிபெயர் தேயம். அதாவது அங்கே தமிழ் பெரிதும் பேசப்பட்டு இருக்கும்; ஆனால், கொஞ்சங் கொஞ்சமாய் நகர, நகர, மொழி பெயர்ந்து கொண்டிருக்கும். இங்கே வடக்கிற் பெயருகிறது. இற்றைக்கு 2000 ஆண்டுகள் முன் அங்கு தமிழ்மொழி பெயர்ந்து மாறிய மொழி பாகதமே. நூற்றுவர் கன்னர் (சாதவா கன்னர்), குறிப்பாக வசிட்டி மகன் என்னும் வசிட்டி புத்ர தம் நாணயத்தின் ஒரு பக்கம் தமிழிலும், இன்னொரு பக்கம் பாகதத்திலும் அச்சு அடித்திருந்ததை அவதானித்தால், மொழிபெயர் தேயத்தில் தமிழும், பாகதமும் அருகருகே வழங்கிய மெய்மை புலப்படும். முடிவில் இக்கலப்பு கூடிப்போய், கன்னடம், தெலுங்கு எனும் இரு தமிழிய மொழிகள் தோன்றின. [பட்டிப்புரோலு எனும் ஆந்திர இடத்தில் பாகதம், தமிழ் என்ற இரண்டுமே புழங்கியது பெருமி / தமிழிக் கல்வெட்டின் வழி தெரிகிறது

புலங்கடை என்பது வீட்டிற்கு வெளியே, புறத்தே இருக்கும் பெருவெளி இன்று புழக்கடை என்று தமிழ்நாட்டின் ஒருசாரார் இதைப் புழங்குகிறார். புலங் கடையும், புழக்கடையும் தொடர்புள்ள ஆனால் வெவ்வேறு சிந்தனையிற் தோன்றிய சொற்கள்.. மண்டிலம் என்ற சொல் இங்கு சூரியனைக் குறிக்கும்.

குறும்பநாட்டு வயவர் ஆறலைக் கள்வராய் ஆன காரணத்தால், பாதையின் ஊடே போகும் சாத்துக்களை (வணிகர் கூட்டம்; traders caravans) மறைந்திருந்து வில்லிட்டுக் கொன்று, சாத்துப் பொருள்களைக் கொண்டு செல்லும் கள்வர் போலவே இருந்திருக்கிறார். எனவே பாதைக்கு அருகில் இறந்தோர் யாக்கைகள் குலைந்து கிடப்பதும், அவற்றின் உறுப்புக்களைக் கொத்தி எடுத்துச் செல்லும் காவுண்ணிப் பறவைகள் (scavenging birds) அங்கு திரிவதும் இயல்பாய் நடப்பதே. கழுகு ஒரு காவுண்ணிப் பறவையாகும். யாக்கைகளில் இருந்து கண்ணைக் கவ்விக் கொண்டு போய் தம் இளம் பார்ப்புகளுக்கு [=குஞ்சுகள்; பொதுவாய் எந்த உயிரினமும் இளமையில் சற்று வெளிறிய நிறத்திலும், அகவை கூடும்போது அடர் நிறத்திலும் அமைவது இயற்கை. வெளிறிப் போனது = பால்போல ஆனது என்ற கருத்திலேயே பார்ப்பென்ற சொல் பறவைக் குஞ்சுகளைக் குறித்தது. ”வெளிறிய இனத்தார்”  பொருளில் தான் பெருமானருக்கு (brahmins) பார்ப்பனர் என்ற சொல்லும் ஏற்பட்டது.]

யாமரம் பற்றி சொல்லாய்வறிஞர் ப.அருளி அவருடைய “யா” என்னும் பொத்தகத்தில் [ப.அருளி, அறிவன் பதிப்பகம், காளிக்கோயில் தெரு, தமிழூர், புதுச்சேரி 605009, 1992] மிக விரிவாகச் சொல்லியிருக்கிறார். படிக்கவேண்டிய பொத்தகம் அது. யாமரம் அதிகமிருந்த காரணத்தால் இந்தொனேசியாவின் யாவகத் தீவிற்குப் பெயருண்டாயிற்று. (=ஸ்யாவகம்>சாவகம்>ஜாவகம்). இந்தத் தீவுகளின் பலவற்றிற்கும் தமிழ்த் தொடர்பான பெயர்களே உண்டு.

“தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேயத்தே” எனும் சொற்றொடர் நமக்கு ஓர் ஆழ்ந்த வரலாற்றுச் செய்தி உரைக்கிறது. கலிங்க அரசன் காரவேலன் தன் கல்வெட்டில் [இதன் காலம் கி.மு.165 என்றும், கி.மு 117க்கு அருகில் என்றும், இல்லையில்லை கி.மு.30-40க்கு அருகில் என்றும், முவ்வேறு கருத்துக்கள் உண்டு. நான் உறுதியாகக் கி.மு.30-40 என்னும் காலக் கணிப்பை மறுப்பேன். மற்ற 2 காலக் கணிப்புக்களையும் நான் இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். எனவே என் முன்னிகையை இப்பொழுது தவிர்க்கிறேன்.] தமிழ் மூவேந்தரின் முன்னணி [த்ராவிட சங்காத்தம்] 1300 ஆண்டுகள் இருந்தது ஆகவும், அதைத்  தான் முதலிற் குலைத்ததாகவும், கொங்குக் கருவூரைக் கைப்பற்றியதையும், கலிங்கத்துக் காரவேலன் கூறுவான்.

இக்கல்வெட்டை முதலிற் படித்த தொல்லாய்வர் ஜெய்ஸ்வாலும், பானர்ஜியும் 1300 எனும் ஆண்டுக்குறிப்பைச் சற்றும் நம்பாததால், 113 என்று மாற்றிப் படித்ததாக அவர் அறிக்கையில் குறிப்பார். அதேபொழுது அடிக்குறிப்பில் ”இது 1300 ஆண்டுகளாய் இருக்க வழியுண்டு” என்றுஞ் சொல்லியுள்ளார். பின் வந்த எல்லோரும் கிளிப் பிள்ளையாய் 113 ஆண்டுகளையே குறிக்கிறார். 1300 ஆண்டுகள் எனும் குறிப்பை வாய்ப்பாக மறந்துவிட்டார். தமிழர் வரலாற்றை மீளாய்வு செய்வோர் காரவேலைன் கல்வெட்டையும் மீளாய்வு செய்ய வேண்டும்.  மொழி பெயர் தேயம் என்பது தமிழும் பாகதமும் உடனுறை பகுதி என முன்னால் சொன்னோம். இதற்கு அருகில் விண்டுமலை (=விந்தியமலை) உள்ளது. அதுவே இங்கு ”மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” எனப்படுகிறது. நூற்றுவர் கன்னரின் அரசு விண்டு மலைத்தொடருக்கு இருபுறமும் இருந்தது. தென்பகுதியில் தமிழும் வடபகுதியில் பாகதமும் நிலவின. 

அப் பகுதியில் நூற்றுவர் கன்னர் தம் அதிகாரம் தூக்கி நிறுத்தும் வரையில் (அதாவது கி.மு.26 - கி.பி..250 வரையில்) சிறு சிறு அரசரே இருந்தனர். இன்றைக்கு உலகத்தின் காவற்காரர் அமெரிக்கா என்று சொல்வது போன்று, அன்றைக்கு ”மெய்யான தமிழகத்திற்கும்” வெளியே, ஆனால் தமிழ் பெரிதும் புழங்கிய நூற்றுவர் கன்னரின் மொழிபெயர் தேயத்தின் காவற்காரர் தமிழ் மூவேந்தரே. இதை மாமூலனார் இங்கு உறுதி செய்கிறார். வெறுமே, சேரன், சோழன், பாண்டியன் என்று அவர் தனித்துச் சொல்லாது, முவேந்தர் கூட்டணி இருந்ததை உறுதிசெய்கிறார் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். எனவே மாமூலனாரின் இப்பாட்டு காரவேலன் கல்வெட்டிற்கும் முந்தையது,

மூவேந்தர் கூட்டணி உடன்படிக்கையை நாம் இங்கு சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

1. தங்களுக்குள் என்ன சண்டை இருந்தாலும், மூவேந்தர் யார் மேலும் வெளியார் படையெடுத்தால், மூவரும் ஒருவருக்கொருவர் உதவியாய், தமிழகத்திற்கு வெளியே செயற்பட வேண்டும்; 
2. மூவருக்கும் இடைப்பட்ட எந்த வேளிரையும், இவர் அடக்கியாளலாம்; அதே பொழுது வெளியார் வேளிர் மேல் படையெடுத்தால், அதை ஒருங்கே எதிர்க்கவேண்டும்.
3. தமிழகத்தில் இருந்து போகும் சாத்துக்களையும், வரும் சாத்துக்களையும் காப்பாற்றும் வகையில், மூவேந்தரின் நிலைப் படைகள் (standing armies) மொழிபெயர் தேயத்தில் நிறுத்தப்பட வேண்டும். இந்தக் காக்கும் தொழிலில் முப்படைகளும் ஒன்றிற்கொன்று உதவ வேண்டும்.

மாமூலனாரின் பாடல்கள் பெரிதும் சேரநாட்டைச் சார்ந்து இருப்பதால், இப்பாட்டின் தலைவனும் ஒருவேளை சேர அரசனின் படைசேர்ந்தவனாய் இருக்கலாம். ”அவன் இப்பகுதிக்குக் காவல் காரணமாய்ச் சென்றானா என்று யாரும் சொல்லாது இருக்கிறாரே?” என்பதே இங்கு தலைவியின் பெருங்கவலையாய் அமைகிறது.

அன்புடன்,
இராம.கி.

3 comments:

குமரன் (Kumaran) said...

மிகவும் அருமையான ஆராய்ச்சியுரைகள் ஐயா. ஒவ்வொரு சொல்லையும் நன்கு ஆய்ந்துள்ளீர்கள். ஆய்வின் ஆழத்தை முதலில் வியந்து, பின்னர் ஒரே ஒரு குறையேனும், குறை இல்லாவிடில் கேள்வியேனும் காணவேண்டும் என்று மீண்டுமொரு முறை படித்தேன். தோற்றேன். அதனால் சிறிது வருத்தம் தான். இன்னும் அறிந்து கொள்ளும் வாய்ப்பில்லாமல் போகிறதே.

பாண்டியன் said...

1300 ஆண்டுகள் என்பதே சரியாக இருக்கும்.

Kaniyanbalan said...

ஐயா,
தமிழினியில் தங்கள் கட்டுரைகளை படித்துள்ளேன். இப்பொழுது உங்கள் வளவு இணையதளத்தில் உள்ள பெரும்பாலான கட்டுரைகளைப் படித்து மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்தேன். தமிழனின் வரலாற்றுப் பெருமையையும் அறிவியல் திறனையும் வெளிப்படுத்தும் தங்கள் பணி பாராட்டுக்குரியது. தமிழ் அரசுகளின் கூட்டணி பற்றி பேசும், கலிங்க மன்னன் காரவேலனின் கதிகும்பா கல்வெட்டு மொத்தம் 17 வரிகளைக் கொண்டது. அதில் 10-11 வரிகள்தான் தமிழ் அரசுகளின் கூட்டணி பற்றி பேசுகிறது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வருமாறு:

Line 10-11 - And in the eleventh year [His majesty] secured jewels and precious stones from the retreating [enemies] [His Majesty] caused to be cultivated pithunda, founded by former kings of Kalinga , with ploughs drawn by asses. Also [His Majesty] shattered the territorial confederacy of the Tamil states having populous villages, that was existing since thirteen hundred years.

இதன்படி தமிழரசுகளின் கூட்டணி 13 நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது என அக்கல்வெட்டு தெரிவிக்கிறது. காரவேலன் தனது 11வது வருடத்தில், கலிங்க மன்னர்களால் முன்பு உருவாக்கப்பட்ட பித்துண்டா என்ற நகரத்தை அழித்து கழுதைகளைப் பூட்டிய ஏரைக் கொண்டு உழுதான், என சொல்லப்பட்டுள்ளது. மேலும் தப்பி ஓடிய எதிரிகளிடமிருந்து நகைகளையும் மதிப்புமிக்க கற்களையும் அபகரித்தான், எனவும் குறிப்பிடுகிறது. இந்த பித்துண்டா என்ற நகரம் முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்பட்டுள்ளதால், இந்நகரம் மொழிபெயர் தேயத்தில், கலிங்கத்தின் எல்லை ஓரத்தில் இருந்த மூவேந்தர்களின் காவலரண்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். மூவேந்தர்கள் மொழிபெயர் தேயத்தில் காவலரண்களைக் கொண்டிருந்தனர், என்பதை மாமூலனார் பற்றிய உங்கள் கட்டுரைகள் உறுதிப்படுத்துகின்றன. எனவே பித்துண்டா என்பது கரூர் நகரமல்ல. மொழிபெயர் தேயத்தில், கோட்டை அரண்களைக் கொண்ட மூவேந்தர்களின் காவலரண்களில் ஒன்றே. சதானந்த அகர்வால் அவர்களால் எழுதப்பட்ட "சிரி காரவேலா" என்ற நூலில் சமற்கிருதத்தில்,

Line 11: तेरसवस सत कतं भिदति तमिर देह संघातं (தேரஸ்வஸ் சதகத் பிததி தமிர் தேஹ் சங்காத்) என்றுள்ளது.

இதில் "தமிர் தேஹ் சங்காத்" என்பது தமிழ் அரசுகளின் கூட்டணி ஆகும். "தேரஸ்வஸ் சதகத்" என்பது 13 நூற்றாண்டுகள் ஆகும்.

ஆதாரம்:
Alexander Cunningham published this inscription in 1877 in the Corpus Inscriptionum Indicarrum Vol. I. Sadananda Agrawal has prepared the text in Sanskrit, which has been published in his book Śri Khāravela, 2000.
(and)
http://www.jatland.com/home/Hathigumpha_inscription
-கணியன் பாலன்.