Wednesday, April 09, 2008

Tyre, Brake and acceleration

திரு. புருனோ கேட்டிருந்த சொற்களுக்கு என் பரிந்துரை:

ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலிகளில் படித்தால், இந்தப் பெயர்கள் எல்லாம் மாட்டுவண்டியில் இருந்தே புலம்பெயர்ந்து இருக்கின்றன. மாட்டு வண்டி நம்மூரிலும் இருக்கிறது. இந்த உறுப்புகளுக்கு ஆன பெயர்கள் கிட்டத் தட்ட இதே பொருட்பாடுகளில் தான் நம்மிடம் இருக்கின்றன. முதலில் இங்கு கேட்டிருப்பது tyre

1485, "iron rim of a carriage wheel," probably from tire "equipment, dress, covering" (c.1300), an aphetic form of attire. The notion is of the tire as the dressing of the wheel. The original spelling was tyre, which had shifted to tire in 17c.-18c., but since early 19c. tyre has been revived in Great Britain and become standard there. Rubber ones, for bicycles (later automobiles) are from 1870s.

நம்மூரிலும் மாட்டுவண்டிச் சக்கரத்திற்கு இரும்புப் பட்டை போடுகிறார். பட்டை என்பது சக்கரத்திற்கு ஒரு covering தானே? இருப்புப் பட்டை என்பது மரம் போன்ற பொருள் தேயாமல் இருப்பதற்காகப் போடப் பட்டது. பின்னால் மிதிவண்டி மேலைநாடுகளில் உருவானபோது, மாட்டு வண்டியில் இருந்தது போன்று மரச்சக்கரமும், இருப்புப் பட்டையும், மர ஆரங்களுமாய்த்  தான் தொடங்கியது. இந்தச் சக்கரங்கள் கனமாயும், அவற்றின் ஆற்றிலாமை (inertia) பெருத்திருந்ததால், என்னதான் முயன்றும் மிதித்து அழுத்துவதற்குச் சரவலாய் அமைந்தது.

இன்னொரு கண்டுபிடிப்பாளர், இரும்பு வளையத்தை வைத்து, அதன் மேல், அப்பொழுது, தென்னமெரிக்காவில் இருந்து பரவிய முழு உரப்பையால் (full rubber) ஆன ஓர் உருளை (cylinder) செய்து அதை வளையத்தின் (wheel) வெளியே பொருத்தி, வலையத்திற்கு உரங்கொடுக்க இரும்பு ஆரங்களைப் (spokes - same as radii) பொருத்தி, மிதிவண்டிச் சக்கரங்களை உருவாக்கினார்.  அது சரி. உரப்பை, அது என்ன?

rub (v.) early 14c., transitive and intransitive, of uncertain origin, perhaps related to East Frisian rubben "to scratch, rub," and Low German rubbeling "rough, uneven," or similar words in Scandinavian (compare Danish rubbe "to rub, scrub," Norwegian rubba), of uncertain origin. Related: Rubbed; rubbing.

rubber (n.)
"thing that rubs" (a brush, cloth, etc.), 1530s, agent noun from rub (v.). The meaning "elastic substance from tropical plants" (short for India rubber) first recorded 1788, introduced to Europe 1744 by Charles Marie de la Condamine, so called because it originally was used as an eraser.

உர, உரப்பு, உரப்புத் தூள், உரசல், உராய்வு, உரைதல், உரிஞ்சல் என்று இத்தனை சொற்களைக் கொண்ட தமிழருக்கு, rub எங்கிருந்து போயிருக்கும் என ஊகிக்கத் தெரியவில்லையா? வியப்புத் தான். ஏதேதோ மாற்றுச் சொற்களைப் பலரும் தேடிக்கொண்டிருக்கிறார். அந்த அளவு அடிப்படைத் தமிழ்ச்சொற்களை விட்டு வெளியே வந்துவிட்டோம். இராம.கி. அடையாளங் காட்டினால் இராம.கி.யை குற்றஞ் சொல்வது மட்டும் பலராலும் முடிகிறது.

rubber  பொருளை இயற்கையில் கண்டெடுத்த போது, உராய்ந்து கரிக் கறையை அழிக்கவே அது முதலில் பயன்பட்டது. எனவே rubber material (அழிக்கும், உராய்க்கும் பொருள்) என்று  கூட்டுச் சொல்லாய்த் தான் முதலில் அழைத்தார். பின், அதிகப்புழக்கத்தில் பொருளென்ற பின்சொல் சொல்லப் படாது போனது.  தமிழில் மிக எளிதில் rubber ஐ ”உரப்பை” என்று சொல்லி விடலாம். (ஒருகாலத்தில் இழுவை என்றும் சொன்னேன்.) ஏதும் குறை வராது. இலுப்பை மரம் போல் உரப்பை மரம் (rubber tree) என்ற சொல்லாட்சியை ஏற்றுக் கொள்ளலாம். மனம் தான் வேண்டும். தேய்வை, இழுவை, மீள்வை என்பவை இதற்குச் சரிவராது.

உரப்பையால் ஆன உருளைக்குப் பின்னால், "இவ்வளவு உரப்பையைப் பயன்படுத்த வேண்டுமா?" என்ற துணிப்பில், உரப்பைத் தூம்பை [tube; தூம்பு என்ற சொல்லைக் கண்டு மருளவேண்டாம். அது நல்ல தமிழ்ச்சொல். சிவகங்கைப் பக்கம், முற்றங்களில் சேகரமாகும் மழைநீரை, வீட்டிற்கு வெளியில் கொண்டுசேர்க்க (இது திண்ணை, வெளிப்பத்தி) ஆகியவற்றின் அடியில் போகும்) வைக்கும் குழாய்க்கு தூப்பாய் என்றே பெயர். தூம்பு/தூப்பு என்பவை எங்கள் பக்கத்துப் பாமரரும் அறிந்த நல்ல தமிழ்ச் சொற்கள்; தயங்க வேண்டாம். தூம்பு விளக்கு = tube light சொல்லிப் பழகுங்கள்.] உருவாக்கி அதனுள் காற்றை ஏற்றி, பின் வட்டத்தூம்பின் மேல் இரும்புப் பட்டைக்கு மாறாக ஒரு கடு உரப்பைப் (hard rubber) பட்டையை மூடிவைத்து உருவாக்கியதே இக்கால மிதிவண்டிச் சக்கரம். பின்னால் சகடை (car) உருவான போது, மிதிவண்டிச் சக்கர நுட்பமே இதற்கும் கொள்ளப் பட்டது.

இன்றும் அந்த கடு உரப்பையால் ஆன சக்கரப் பட்டை இருக்கிறது. இது தான் அடிப்படையில் tyre. ஆனால் சொல்லச் சுருக்கமாய் இருக்கவேண்டும் என்று கருதி பாவாணரே 40, 50 ஆண்டுகளுக்கு முன்னால் உருளி என்ற சொல்லைப் பயிலுவார். இது அவர் பரிந்துரைத்ததா, மற்றவர் பரிந்துரைத்ததா என்று எனக்குத்தெரியாது, ஆனால் அவர்நூல்வழி அறிந்தேன்; பொருளும் குலையாது, சொல்ல எளிதாக இருக்கிறது. (ஞாவகம் வைத்துக் கொள்ளுங்கள் உருளை = cylinder; உருளி = சக்கரப் பட்டை. இரண்டும் சற்று வெவ்வேறானவை.) [குயவன் சக்கரத்திற்குத் திருகு சக்கரம், திரில் என்று கூடப் பெயர்கள் தமிழில் இருக்கின்றன. tire சொல்லின் பிறப்பு எங்கோ ஒரு விட்டகுறை, தொட்ட குறை......]

வெளியே உரப்பையுருளி, உள்ளே உரப்பைத் தூம்பு; அப்புறம் ஆரங்கள். இன்னும் சில உறுப்புக்கள் உண்டு. இவை எல்லாம் சேர்ந்தது இந்தக் கால உந்துச் சக்கரம்.

அடுத்தது brake.

c.1440, from O.Du. braeke "flax brake," from breken "to break." The word was applied to many crushing implements, and the ring through the nose of a draught ox. It was infl. in sense by O.Fr. brac, a form of bras "an arm," thus "a lever or handle," which was being used in Eng. from 1380, and applied to "a bridle or curb" from 1430. One or the other or both took up the main modern meaning of "stopping device for a wheel," first attested 1772.

மாட்டுவண்டியில் மாட்டிற்கு மூக்கணாங் கயிறு போடுகிறார் அல்லவா? மாட்டுவண்டி போய்க் கொண்டே இருக்கும் போது, அந்த முக்கணாங்கயிறை ஒரு இழுப்பு இழுத்தால், அது மாட்டின் மூக்கில் உராய்ந்து வலி ஏற்படுத்தி, மாட்டிற்கு உணர்த்தி, அதை மேற்கொண்டு நகராது நிற்கச் செய்து விடும். அந்தக் கால brake நுட்பம் இது தான். (சிரிக்காதீர்கள்!) அதே நுட்பம் தான் இன்றும் பயன்படுகிறது. உருவங்களும், கருவிகளும், ஏந்துகளும் தான் மாறியிருக்கின்றன. என்ன, இந்தக் கால brake -இல் மாடு இருக்காது, மாறாக மாகன உறுப்புக்கள் (machine parts) இருக்கும். இங்கும் ஒரு (இரும்புக்) கயிறு, ஒரு இழுப்பு, அதனால் ஏற்படும் உராய்வு, பின் நிற்பு.

மேலே flax brake கயிற்றையே குறிப்பிடுகிறது. (இதைப் பழுதை என்றும் நம்மூரில் சொல்வார்; பழுதைக்கும், பாம்புக்கும் சேர்த்துச் சொல்லப்படும் சொலவடையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.) இன்றைக்குக் கயிறு என்ற சொல்லையே நாம் பயன்படுத்தினாலும், புரி என்ற சொல் கயிற்றுக்கு அந்நாளில் உண்டு. அது மாட்டுக்குப் போடும் மூக்கணாங் கயிற்றுக்கே கூட உண்டு. புரி(கை)யைக் கட்டியிழுத்தல் என்று பெயர். (இது போக கலங்களைக் கவிழாமல் வைக்க, புரிமனை அல்லது திரிமனை அல்லது கலவடை என்ற பொருளுண்டு. புரியாலான வட்ட உருளையின் மேல் கலத்தை வைக்கலாம். புரிக்கு மாறாகத் திரி என்ற சொல்லும் ஆளப்படும். கல வட்டை கலவடை ஆயிற்று.)

brake போடு என்று சொல்லாமல், புரிகையை இழு, அமுக்கு என்றும் சொல்லலாம். இன்னொரு break/broke/broken என்ற வினை தமிழில் பேர்தல் என்று சொல்லப்படும். மேலும் நகரவிடாமல், எதிர்த்தடை கொடுப்பது பொருவியது என்றும் சொல்லப்படும். பொரு என்னும் சொல் புர்.....என்னும் உராய்வு ஓசையை வைத்து எழுந்த சொல். பொரி என்ற சொல்லும் இந்த புர்...... என்னும் ஓசைக்குறிப்பில் எழுந்தது தான். புரிகை, பேர்தல், பொரு ஆகிய மூன்றும் ஒலியில் ஒன்று போல் தோற்றம் அளித்தாலும், வேறுபாடு ஆனவை; அவற்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

அடுத்தது accelerator. முடுக்கம் (acceleration) என்ற சொல் 50 ஆண்டுகளாகவே பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. அவன் முடுகிச் செல்கிறான். He goes accelerated. அந்த முடுக்கத்தை அளிப்பது முடுக்கி = accelerator. [velocity = கதி; speed = விரைவு, வேகம், torque = திருக்கம்..... மாகனவியல் (mechanics) சொற்களை எல்லாம் இங்கு வந்து கொட்டிவிடலாம். ஆத நகர்வுச் (automotive) சொற்களைப் பட்டியலிட்டால் தேவையானவற்றை எடுத்துரைக்கலாம்.

நண்பர்களே! தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. அவற்றை ஆள நமக்கு விருப்பம் வேண்டும். மேலைச் சொற்கள் எப்படி எழும்பின என்று பார்க்க வேண்டும். (இராம.கி இதேயே பார்க்கிறார் என்று குறைப்படுவதற்கு என்னிடம் மறுமொழி இல்லை. ஏதொன்றையும் செய்வதற்கு முன், தொடக்கம் எப்படியிருந்தது என்று அறியாமல் போக என் மனம் இடம் கொடுப்பதில்லை.) அதேபோன்ற நிலை நம்மிடமும் ஒரு காலத்தில் இருந்ததா? அவர்களின் நாகரிக வளர்ச்சிக்கும் நம் நாகரிக வளர்ச்சிக்கும் இடையே இருக்கும் இடைவெளி என்ன? இந்த இடைவெளியைச் சரி செய்ய நாம்விட்ட இடத்திலிருந்து தொடங்கிப் புது படிவாக்கத்திற்கு (application) சொற்களை உருவாக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். [அவர்கள் மாட்டுவண்டி - மிதிவண்டி - சகடு என்று முன்னேறினார். நாம் காலச் சூழ்நிலையால் மாட்டுவண்டியோடு நின்றுவிட்டோ ம். பிறகு இப்பொழுது மிதிவண்டி, சகடு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். இவற்றின் உறுப்புக்களுக்குப் பெயர் தேடும் போது நம் மாட்டுவண்டியையும் அதன் உறுப்புக்களையும் கொஞ்சம் அலசி அங்கிருந்து தொடங்க முடியுமானால் நல்லது. (சில நேரம் முடியாமற் போகலாம்).]

அப்படிச் செய்வதன் மூலம் சொற்களை நம் வயப்படுத்தலாம். land lord என்பதை நிலப்பிரபு என்று சொல்லுவதைக் காட்டிலும் பண்ணையார் என்று சொல்லுவது நல்லதில்லையா?

வரட்டுங்களா?

அன்புடன்,
இராம.கி.

16 comments:

SP.VR. SUBBIAH said...

சிரத்தை எடுத்துக் கொண்டு பதிவை இட்டுருக்கின்றீர்கள். ந்னறி

வெறும் நன்றி சொன்னால் பத்தாது.

தலை வணங்கிச் சொல்ல வேண்டும்!

தலை வணக்கத்துடன் கூடிய நன்றி உரித்தாகுக!

என் நண்பர் டாக்டர் புரூனோவிற்காக - மீண்டும் ஒருமுறை - நனறி!

Boston Bala said...

நன்றி

Sridhar V said...

வழக்கம் போல் உங்கள் பதிவில் பல அரிய தகவல்கள். மிக்க நன்றி!

//tube; தூம்பு என்ற சொல்லைக் கண்டு மருளவேண்டாம். அது நல்ல தமிழ்ச்சொல். சிவகங்கைப் பக்கம், முற்றங்களில் சேகரமாகும் மழைநீரை, வீட்டிற்கு வெளியில் கொண்டுசேர்க்க (இது திண்ணை, வெளிப்பத்தி) ஆகியவற்றின் அடியில் போகும்) வைக்கும் குழாய்க்கு தூப்பாய்ன்றே பெயர். தூம்பு/தூப்பு என்பவை எங்கள் பக்கத்துப் பாமரரும் அறிந்த நல்ல தமிழ்ச் சொற்கள்; தயங்க வேண்டாம். தூம்பு விளக்கு = tube light சொல்லிப் பழகுங்கள்//

இதில் மற்றும் ஒரு மாற்று கருத்து. 'tube' என்ற ஆங்கிலச் சொல்லை தமிழில் 'தூம்பு' என்று சொல்லப்படுகிறதா, அல்லது, தூம்பு என்பது தமிழ் சொல்லா என்று சந்தேகம் வருகின்றது.

திருச்சி என்பது ஆங்கிலத்தில் 'ட்ரிச்சி' என்று மருவியது போல் இந்த வார்த்தையும் தோன்றுகிறது.

பாமரர்களிடம் பிரபலம் எனபது மட்டும் அது தனி தமிழ்ச்சொல் என்பதை நிறுவி விடுமா? அப்படி பார்த்தால் 'ஷாப்புகடை' போன்ற சொற்கள் எல்லாமே நல்ல தமிழ் என்று எடுத்து கொள்ளலாமே.

பதிவை படித்தவுடன் மனதில் தோன்றியது என்பதால் பின்னூட்டம் இட்டேன். தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

செல்வா said...

தூம்பு என்பது உட்துளைப் பொருள். குழாய் என்பது உண்மை. புறநானூற்றுக் காலத்தில் இருந்து உள்ளது. சென்னைப்பல்கலைகழக அகராதியைப் பார்க்கலாம் (கீழே பார்க்கவும்). ஆனால் தமிழில் உட்துளைப்பொருளுக்கு ஏராளமான சொற்கள் உள்ளன. குழல், குழாய், சுரம், நாளம், வெண்டு, புரை, என்று பற்பல சொற்கள் உண்டு.
------சென்னை அகராதி-------
8. தூம்பு tūmpu : (page 2018)

, n. [T. tūmu, K. M. tūmbu.] 1. Tubularity; உட்டுளை. தூம்புடைத் தடக்கை (புறநா. 19). 2. Tube; உட்டுளைப் பொருள். (பிங்.) 3. Sluice, outlet; மதகு. குளந் தூம்பு விட்டு (சீவக. 2760). 4. Vent in a sluice; மதகின் உட்டுளை. (அக. நி.) 5. Channel for irrigation; வாய்க்கால். (பிங்.)

Anonymous said...

நன்றி ஐயா. பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. மின்னஞ்சலில் வந்த அந்த குறிப்புகளை நான் பதிவிட்டதன் முக்கிய காரணம் -> அதில் வரும் சொற்களுக்கு ஈடான தமிழ் பதங்களை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.

மீண்டும் ஒரு முறை நன்றி

வவ்வால் said...

//இழுவைத் தூம்பை [tube; தூம்பு என்ற சொல்லைக் கண்டு மருளவேண்டாம். அது நல்ல தமிழ்ச்சொல். சிவகங்கைப் பக்கம், முற்றங்களில் சேகரமாகும் மழைநீரை, வீட்டிற்கு வெளியில் கொண்டுசேர்க்க (இது திண்ணை, வெளிப்பத்தி) ஆகியவற்றின் அடியில் போகும்) வைக்கும் குழாய்க்கு தூப்பாய் என்றே பெயர். தூம்பு/தூப்பு என்பவை எங்கள் பக்கத்துப் பாமரரும் அறிந்த நல்ல தமிழ்ச் சொற்கள்; தயங்க வேண்டாம். தூம்பு விளக்கு = tube light சொல்லிப் பழகுங்கள்.]//

தூம்பு என்பது தண்ணீர் வெளியேற இருக்கும் அமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அது குழல் வடிவம் தான் என்பதில் தான் சந்தேகம், அது மழை நீர் வெளியேர அமைக்கப்பட்ட அமைப்பு அவ்வளவு தான், அது நேரடியாக குழல் அமைப்புக்கு இணையான சொல் என்று எப்படி எடுத்துக்கொள்வது?

underground drainage அமைப்பிலும் குழாய்கள் உள்ளதால் , பாதாள சாக்கடை என்பது குழல் அல்லது tube என்பதற்கு இணைச்சொல் ஆகிவிடுமா? tubelight என்பதை அப்படியானால் பாதாள சாக்கடை விளக்கு என்றா சொல்வார்கள் :-))

tubelight என்பதற்கு குழல் விளக்கு என்று ஏற்கனவே நல்லத்தமிழ் பெயர் உள்ளதே!

cycle என்றால் தமிழில் சுழற்சி என்று பொருள் வருகிறது என்பதால் யாரும் cycle வாகனத்தை சுழலி என்று சொல்லவில்லையே, மிதிவண்டி என்று தான் சொல்கிறார்கள்.முழுமையான தமிழ் சொல் துவிச்சக்கர மிதி வண்டி!

பெடலை மிதித்து செலுத்துவதால் மிதிவண்டி என்பது எளிமையாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது , அப்படி எளிமையாகவும், அர்த்தமுடனும் தமிழ்ப்படுத்தினால் மட்டுமே தமிழ் சொற்களைப்பயன்படுத்த மக்கள் முன்வருவார்கள்.

bicycle என்பதை இரட்டை சுழலி என்றெல்லாம் மொழிப்பெயர்த்தால் அப்புறம் யார் தமிழ் சொல்லைப்பயன்ப்படுத்த முன்வருவார்கள் :-))

ஆங்கில சொற்களுக்கு தமிழ் சொற்கள் சொல்கிறேன் என்று புறப்படுபவர்கள் செய்யும் கோணங்கித்தனங்களாலே பெரும்ப்பாலோர் தூய தமிழ் சொற்களை பயன்ப்படுத்த பயப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

Anonymous said...

RUBBER - மீள்மம்
VULCANIZED RUBBER - வலுப்பதனிட்ட மீள்மம்
www.geocities.com/tamildictionary/chemistry/
TAMIL CHEMISTRY GLOSSARY / வேதியியல் அருஞ்சொற்பொருள்

அருள் மொழி said...

நண்பர் வவ்வால் அவர்களே,

த்விச்சக்கரம் எப்படி தமிழ் ஆகும்?

மேலும், சுழலும் பொழுது தரையைத் தொட்டு சுழல வேண்டியதில்லை. உருளும் பொழுது தரையை அல்லது எதையாவது பரப்பில் தொட்டே உருள வேண்டும்.
ஆதலால் "உருளி" சரியாக உள்ளது.

இராம.கி said...

அன்பிற்குரிய சுப்பையாவிற்கு,

வருகைக்கும் கனிவான சொற்களுக்கும் நன்றி. மரு. புரூனோவின் வலைப்பதிவுகள் விரும்பிப் படிக்க வைக்கின்றன.

அன்பிற்குரிய பாலா,

வருகைக்கும் கவனிப்பிற்கும் நன்றி.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய ஸ்ரீதர் நாராயணன்,

தூம்பு என்பது நல்ல தமிழ்ச்சொல். சங்க இலக்கியச் சான்றுகளை எடுத்துத் தரவா? அதற்கு மாறாக தும்பிக்கை என்ற நடைமுறைச் சொல்லையே ஓர்ந்து பார்க்கலாமே? யானையின் tubular hand தும்பிக் கை என்று சொல்லப் படுகிறது. தும்பிக் கையை வெள்ளைக்கரனிடம் இருந்தா நாம் கற்றோம்? அதே போல தும்பி என்ற சொல் மலர்களில் தேனை உறிஞ்சிக் குறிக்கும் வண்டுகளுக்கும் சொல்லப் படுகிறது. இந்த வண்டுகளில் இருப்பதும் ஒரு tube தான். புத்தமதக் கோபுரங்கள் உட்துளை யுள்ள உயர்ந்த கோபுரங்கள் தூம்பிகை>தூபிகை என்று வடபுலத்தில் சொல்லப் படுகிறது. இதுவும் வெள்ளைக் காரனிடம் பெற்றதா? வேர்ச்சொல், விவரம் எல்லாம் நான் கொடுக்கலாம். ஒவ்வொன்றிற்கும் கொடுத்தால் கொஞ்சம் நீண்டதாய்ப் போய்விடும் என்று தவிர்த்தேன்.

நண்பரே! நம் தமிழ்ச்சொற்களைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். பாமரர்களிடம் நல்ல தமிழ் இருப்பது நம்மைக் கூர்ந்து கவனிக்கச் சொல்லுகிறது. நல்ல தமிழாய்ப் புழங்கும் வட்டாரச் சொற்களையும், பழம் தமிழ்ச் சொற்களையும் நாம் மீண்டும் பார்ப்பது நல்லது. நகரத்தில் வாழும் நம்மைப் போன்றோர் நமக்குத் தெரிந்த 3000, 4000 சொற்களையே வைத்து, அப்படி இப்படிப் புரட்டிப் போட்டுப் பிணைத்தோ (combination), மடக்கியோ (permutation), போட்டு இலக்கக் கணக்கில் சொற்களை உருவாக்கிவிடமுடியும் என்று எண்ணுகிறோம். என்னுடைய பட்டறிவில் வேர் தெரியாமல், வினை தெரியாமல் அது அமையாது என்றே உணர்கிறேன். சொல்லாக்கம் என்பது அடிப்படை தெரிந்தால் எளிது; அதே பொழுது அதை எந்திரத் தனமாய்ச் செய்துவிட முடியாது. மொழியின் அடிப்படை, மரபு, வழக்கம், பயனாறு புரிய வேண்டும்.

தூம்பு என்ற சொல்லின் தேவையை உணர்ந்தே நான் பரிந்துரைத்தேன். தூம்பின் குறுக்குவெட்டு வட்டமாய் இருக்கலாம், சதுரமாய் இருக்கலாம், முக்கோணமாய் இருக்கலாம், அறுகோணமாய் இருக்கலாம். ஆனால் எல்லாமே தூம்புதான். வட்டத் தூம்பு, சதுரத் தூம்பு, முக்கோணத் தூம்பு, அறுகோணத் தூம்பு. ஆனால் குழல் என்னும் பயன்பாடு ஒன்று வட்டத் தூம்பைக் குறிக்கலாம், அல்லது குழைவான (flexible) தூம்பைக் குறிக்கலாம். அது பொதுமைப் பயன்பாட்டிற்குச் சரி வராது. ஏனெனில் தூம்புகளின் முதல் இயல்பு அவற்றின் நீண்ட துளையாகும்; அந்தத் துளையின் குறுக்குவெட்டு என்பது இரண்டாம் நிலை வரையறுப்பு. அறிவியல், நுட்பியல், பொறியியலில் தமிழ் வளரவேண்டுமானால் தூம்பு என்ற சொல்லைத் தவிர்க்க முடியாது. இன்னும் சொன்னால் pipe, tube, hose விதப்பான வகைப்பாடுகளைக் காட்டவேண்டும். tube = தூம்பு; pipe = புழம்பு; hose = குழாய் என்று வரையறுக்கப் பட்ட பயன்பாடு இனிமேலாவது துல்லியம் கருதி வரவேண்டும்.

ஷாப்புக்கடை என்பது படித்தவர்களை அப்படி ஈயடிச்சான் படியெடுக்கும் நிலை. ஷாப்பு என்றும் சொல்லி அருகில் அவனுக்குத் தெரிந்த கடை என்று சொல்லும் போதே உளவியல் தென்படுமே? எத்தனை பாமரர்கள் புரியாத் தனமாகப் படித்தவரைப் படியெடுக்கிறார்கள்? நடுச் செண்டர், டிரங்குப் பெட்டி, கேட்டுக் கதவு, காம்பவுண்டுச் சுவர், சார் வாள், - இப்படி உள்ள சொற்களை எல்லாம் பட்டியல் போட்டால், உள்ளே நிலவும் உளவியல் புரியாதா? இவை ஒவ்வொன்றும் படித்தவர் படியாதவர் மேல் இழைக்கும் அவமானங்கள். இப்படிப் பேசினால் தான், படியாதவரைப் படித்தவர் நாகரிகமானவர் என்று எடுத்துக் கொள்ளுவாராம்? ஆங்கில அடிமைப் புத்தி எவ்வளவு வேலை செய்கிறது, பாருங்கள்?

நண்பரே! வட்டார வழக்குகளை நான் பொதுவாய்க் குறை சொல்லவே மாட்டேன். அவை வேரில் பழுத்த பலா. உள்ளே உள்ள சுளையை நாம் தான் சரியாகப் பிரித்து எடுக்க வேண்டும். நான் அவர்களிடம் இருந்து கற்றது ஏராளம். எனக்குத் தமிழ்மேல் ஆர்வம் கூட்டியதே அவர்கள் தான்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய செல்வா,

உங்கள் வருகைக்கும், விளக்கத்திற்கும் நன்றி. இளையோர் தமிழ் பற்றி அறியவேண்டிய செய்திகள் நிறையவே இருக்கின்றன. நம்மால் முடிந்ததை நாம் விடாது சொல்லுவோம்.

அன்பிற்குரிய புரூனோ,

தங்கள் வருகைக்கும் கனிவான சொற்களுக்கும் நன்றி. தங்கள் பதிவுகள் பயனுள்ளதாய் இருக்கின்றன. அவ்வப்பொழுது வந்து போய்க் கொண்டிருங்கள்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

திரு.வவ்வால்,

தங்கள் வருகைக்கும், கோணத்தனமான பார்வைகளுக்கும் நன்றி. .

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு

மீள்மம் என்ற சொல்லைப் புரிந்து கொள்ளுகிறேன். ஆனால் ஏற்பதற்குத் தயக்கமாய் இருக்கிறது. retractable rubber tube என்பதைச் சொல்லுவது சரவலாய் இருக்கும். மீளும் இழுவைத் தூம்பு என்று சொல்வதைக் காட்டிலும் மீளும் மீள்மத் தூம்பு என்பது சொல்லுதற்கும் புரிவதற்கும் சரவல் கொடுக்கும். அதே பொழுது இழுவை என்ற சொல் நான் பரிந்துரைத்ததல்ல. முன்னால் வழக்கில் இருப்பது தான். வேறு நல்ல சொல் rubber என்பதற்குக் கிடைத்தால் பயன்படுத்த முனைவேன்.

அன்புடன்,
இராம.கி. .

இராம.கி said...

அன்பிற்குரிய அருள்மொழி,

தமிழ்நாட்டில் மிதிவண்டி என்பதே இன்று புழக்கத்தில் இருக்கிறது. ஈருருளி என்ற சொல் சில ஆண்டுகள் முன் இருந்து பின் வழக்கில் எடுபடாது போயிற்று. எந்த சொல் நிலைக்கும், எது மறையும் என்பது நம்மால் முன்கூட்டிச் சொல்ல முடியாது.
நாம் ஆணத்திகளும் (commissar or authority) இல்லை.

இப்பொழுது தமிழீழத்தில் உருளி என்ற சொல் புழக்கத்தில் உள்ளதா?

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

"மீள்மம்" (rubber) என்கிற சொல் இணையத்தில் மிக அதிக புழக்கத்தில் உள்ளது. வேறு மாற்றுச் சொல் கண்டுப்பிடிக்க முடியவில்லை. Google தேடுபொறியில் "மீள்மம்" என்கிற சொல்லிற்கு நிறைய பொறுத்தங்கள் கிடைக்கின்றன.

Rubberக்கு மீள்மை (elasticity) ஒரு இயற்கை குணம்.

"இழுவை" என்கிற சொல் ஆங்கில சொல்லான "winch", "locomotive" க்கு அடிக்கடி பயனாகிறது.

Retractible Rubber "பின்னிழு மீள்மம்" பொறுந்தும் போலுள்ளது.

HK Arun said...

//இப்பொழுது தமிழீழத்தில் உருளி என்ற சொல் புழக்கத்தில் உள்ளதா?//

ஓம்!

உந்துருளி - Motor bike (உந்து சக்தியால் ஓடுவது)

ஈருருளி - Bicycle

மகிழூந்து - Car

பார ஊர்தி -Lorry

இச்சொற்கள் வழக்கில் உள்ளன.

நன்றி