Friday, June 15, 2007

தாலி - 3

சரி, மஞ்சள் என்ற கருத்துப் புரிகிறது, மஞ்சட்பொருள் திருமணத்தில் எப்பொழுது வந்தது?

முன்னே சொன்னது போல், இந்தக் காலத்தில் நாம் காணும் தாலிகட்டுப் பழக்கம் தமிழருள் எப்போது ஏற்பட்டது என்று உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. (கிடைத்திருக்கும் சான்றுகளைப் பார்த்தால், பெரும்பாலும் சங்கம் மருவிய காலத்தில் ஏற்பட்டிருக்க முடியும். அது பற்றிக் கீழே பார்ப்போம்.)

சிலம்பில் வரும் மங்கலவாழ்த்துப் பாடல் என்னும் முதற் காதையே "மங்கல வாழ்த்து" என்ற சொற்றொடரால் "திருமண வாழ்த்தை"த்தான் குறிக்கிறது. குறிப்பாக, மங்கலம் என்ற சொல் இங்கு திருமணத்தையே குறிக்கிறது. சிலம்பின் மங்கல வாழ்த்து 46-47 ஆம் வரிகளில்,

"முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது"

என்று சொல்லும் போது மங்கல அணி என்ற சொல்லாட்சியும் வருகிறது; அதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். "முரசுகள் இயம்பின, மத்தளங்கள் அதிர்ந்தன, சங்கு முழக்கம் முறைப்பட எழுந்தது, அரசெழுந்தது போல் வெண்குடைகள் எழுந்தன இத்தனைக்கும் பின்னே மணம் நடக்கும் அகலுள் (அகல் என்பது ஒரு சாலை அல்லது மண்டபம் அல்லது hall) மங்கல அணி எழுந்தது" என்று உணர்த்துகிறார்.

[19ம் நூற்றாண்டு வரையிலும் கூட நம்மூரில் திருமணங்கள் இரவில்தான் நடந்தன; பகலில் இல்லை. இராகு காலம், யம கண்டம் இல்லாமல் நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்தது அப்பொழுது இல்லை. இன்றைக்கு இருக்கும் காலநேரத் திருமண நடைமுறை ஒரு 100/120 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கியதே! தவிரவும் திருமணங்கள் பெரும்பாலும் பூரணையும் (பௌர்ணமி), சகட நாள்காட்டும் (உரோகிணி நட்சத்திரம்) கூடிய இரவில் தான் நடந்தன. (நிலாவெளிச்சத்தில் வெண்குடைகள் எழுவது அலங்காரமாய் தோற்றமளிக்கும்.]

அது என்ன, மங்கல அணி என்ற சொல்லாட்சி? அது எதைக் குறிக்கிறது என்பதைப் புரிய மிஞ்சிக் கிடக்கும் இன்றையப் பழக்கம் தெரிந்தால் போதும். இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு திருமணத்திலும், "கெட்டிமேளம், கெட்டிமேளம்" என்ற குரல் எழுந்து மேளம் அதிர்ந்து, சில இடங்களில் சங்கு முழங்கி [குறிப்பாகச் சிவகங்கைப் பக்கம் சில ஆண்டுகள் முன்பு வரை சங்கு முழக்கம் திருப்பூட்டும் போது (தாலி கட்டும் போது) இருந்தது], அரசாணைக் காலுக்கு அருகில் எல்லோரும் எழுந்து நிற்க, வந்தவர்கள் தொட்டு வாழ்த்தப் பெற்ற தாலி அகலுள் எழத் தான் செய்கிறது.

எனவே, சிலம்பில் மங்கல அணி என்ற சொல் தாலியைத்தான் மிகத் தெளிவாகக் குறிக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. அப்புறம் தாலி என்ற சொல் வரவில்லையே என்று சிலர் கேட்கக் கூடும். "தாலி என்ற சொல்லால் குறித்தால் தானா? அதை வேறு சொல் கொண்டு குறிக்கக் கூடாதா, என்ன?" என்பதே நம் மறுமொழி. தாலிப் பழக்கம் கி.பி. 100/150 அளவில் இருந்திருக்கிறது என்று சிலம்பை வைத்து அறுதியிட்டு உரைக்க முடியும். அச்சில் உய்வு (printed salvation) தேடும் வறட்டுக்காரர்களைத் தவிர மற்றவர்கள் இந்த உண்மைப் பொருளை நன்றாய் உய்த்துணர்வார்கள். [அதே பொழுது, சிலம்பில் குறிக்கப்படும் மேட்டுக்குடித் திருமணம் தமிழர் வழக்கத்தையும், ஆரியர் வழக்கத்தையும் கலந்து விரவியே குறிக்கிறது என்பதையும் இங்கு அழுத்திச் சொல்ல வேண்டும்.]

அடுத்த மங்கல அணி என்பது மனையறம் படுத்த காதையிலும் பேசப் படுவதைச் சொல்லலாம். நகரத்தார் வழக்கத்தில் திருமணமான மகனையும் மருமகளையும் (பெரும்பாலும்) ஓராண்டு முடிந்தோ, அல்லது ஓரோவழி மூவாண்டு முடிந்தோ, தனிக் குடித்தனம் வைப்பார்கள். இப்படித் தனிக் குடித்தனம் வைத்தலை "வேறு வைத்தல்" என்றும் சொல்லுவார்கள். இளங்கோவடிகளும் கூட "வேறு வைத்தல்" என்ற சொல்லாட்சியையே சிலம்பில் ஆளுகிறார். மகனைப் பெரிய வீட்டில் (பெற்றோர் வீட்டில்) இருந்து வேறு வைத்தலைத் தான் "மனையறம் படுத்தல்" என்று சொல்லுவார்கள்.

மனையறம் படுத்த காதையில் "மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே" என்றெல்லாம் கோவலன் சொல்லுவதைப் பலரும் ஏதோ திருமண நாள் இரவு நடந்தாக எண்ணிக் கொள்கிறார்கள். அது தவறு. அந்த உரை வேறு வைக்கும் சடங்கு நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு நடந்ததாகும். அந்த ஓராண்டில் அவர்களுக்கு ஏற்பட்ட நிறைவின் முடிவில் தான், கோவலன் கண்ணகியைப் பலவாறு பாராட்டுகிறான். அப்படிப் பாராட்டுவதில் கீழே வருவதும் ஒரு பாராட்டாகும்.

நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்
மறுவின் மங்கல அணியே அன்றியும்
பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்

"மணம்வீசும் மலர்சூடிய பெண்ணே! உன்நலம் பாராட்டுபவர்கள், குறையில்லாத மங்கல அணியைத் தவிர வேறு அணி சூடவில்லையே, அது எதனால்?"

என்று கேட்கிறான். வேறொன்றும் இல்லை; பல்லாண்டு மங்கலமாய் வாழ்ந்து பலபேறும் பெற்ற வாழ்வரசி தான் தனித்து வாழப் போகிறவளை வாழ்த்த வேண்டும் என்பது மரபு. இங்கும் மங்கல அணி என்பது தாலியையே குறிக்கிறது. இந்தக் காலத்தில் சுமங்கலி என்ற இருபிறப்பிச் சொல்லால் இது போன்ற வாழ்வரசிப் பெண்ணைக் குறிப்பார்கள். சிவ மங்கலி என்னும் நல்ல தமிழ்க்கூட்டுச் சொல் தான் திரிந்து சுமங்கலி என்றாகி வடமொழியாய்ப் பொய்த்தோற்றம் காட்டுகிறது. இன்றும் இறைவியின் முன்னிலையில் பெற்ற குங்குமத்தைத் தாலியின் மேல் இட்டுக் கொள்ளும் பழக்கம் தமிழ்ப் பெண்களுக்கு உண்டு. குங்குமம் பொற் தாலியில் ஒட்டாது; ஆனால் மஞ்சள் பொருளில் நன்றாய் ஒட்டிக் கொள்ளும். அப்பொழுது அது சிவமங்கலியாய் ஆவது வியப்பு ஒன்றும் இல்லை.

இன்னும் பார்த்தால், மங்கலம் என்ற சொல் சிலம்பு 5:146, 151 வரிகளிலும் பயில்கிறது. இனி நடுகற் காதையில் வேண்மாளைக் குறிக்கும் போது வரும் வரிகளைப் (சிலம்பு 28:51) பார்க்கலாம்.

தமனிய மாளிகைப் புனைமணி அரங்கின்
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதியேர் வண்ணம் காணிய வருவழி

வதுவை வேண்மாள் என்பது வதுவுற்ற அரசி வேண்மாளைக் குறிக்கிறது. வதுவை = wedding; இங்கே வதுவுற்ற என்பது wedded என்ற வினைச்சொல்லைக் குறிக்கிறது. மங்கல மடந்தை என்ற பெயர்ச்சொல் கண்ணகியைத் தான் குறிக்கிறது. "நிலவு எழுந்த பொழுதில் பொன்மாளிகையில் உள்ள புனைமணி அரங்கின் ஊடே மங்கல மடந்தையைக் காண வரும் வழியில்" என்ற பொருளை இங்கு கொள்ள வேண்டும்.

ஆகக் கணவன் இறந்த பின்னும் கூடக் கண்ணகி மங்கல மடந்தை என்றே சிலம்பிற் சொல்லப் பெறுகிறாள். இன்றைக்கும் கேரளத்தில் கண்ணகி கோயில் மங்கலதேவி கோயில் என்றே சொல்லப் பெறுகிறது. "கணவன் இருப்பதால் தான் மங்கலச் சிறப்பு" என்ற முட்டாட்தன மூதிகங்களைக் குறிக்காமல், இங்கு தனித்த முறையில் மங்கல மடந்தை என்று கண்ணகி சொல்லப் பெறுவது முற்போக்காளர்கள் சிந்தனையில் தைக்க வேண்டும். மங்கல வாழ்வு என்பது ஒரு முழுமை பெற்ற வாழ்வு, அவ்வளவு தான். பொதுவாய் வேறு வைத்துத் தனிக் குடித்தனம் நடத்தும் எந்த ஒரு பெண்ணுக்கும் குமுகத்தில் தனி ஆளுமை கிடைத்து விடுகிறது. அப்படி ஆளுமை கிடைத்த எவளும் மங்கல மடந்தை, வாழ்வரசி என்றே அழைக்கப் படுவாள். (இன்றைக்கு முட்டாள் தனமாகக் கணவனை இழந்தோரை வாழ்வரசி அல்லாதவள் என்று கூறினாலும்) பழைய புரிதலில் கண்ணகியும் மங்கல மடந்தையே. (இந்தச் சொல்லாட்சி சிலம்பு 28:51, 30:53, 50:88 ஆகியவற்றிலும் பயிலும்.) நிறைவு வாழ்க்கையை கண்ணகி நடத்தியதை மனையறம் படுத்த காதையின் முடிப்பு வரிகளில்,

"வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
மறப்பருங் கேண்மையொடு அறப் பரிசாரமும்
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமோடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற்
காண் தகு சிறப்பில் கண்ணகி தனக்கென்"

என்று சொல்லி யாண்டு சில கழிந்ததை உணர்த்துகிறார். இன்னொரு சொல்லாட்சியாய் நீர்ப்படை காதையில் (27:163) மாடலன், மங்கல மறையோன் என்று சொல்லப் பெறுவான்.

எங்கோ வேந்தே வாழ்கென்று ஏத்தி
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்

இன்றைக்கும் பெருமானரில் இரண்டு வகையை இனம் காட்டுவார்கள். ஒருவர் மந்திரங்களிலும், வேள்விகளிலும் தேர்ந்தவர், இன்னொருவர் தந்திரங்களில் (கோயில் பற்றிய புரிசைகளில்) தேர்ந்தவர். முதல்வகை ஆள் தான் இன்றைக்கும் திருமணங்களின் ஊடே வருகின்ற பார்ப்பனர் ஆவார். இரண்டாம் வகையைச் சேர்ந்த தந்திரி, ஓரோவழி முதல் வகையாருக்கு உதவி செய்யும் தோதாய் வரக்கூடும். இருந்தாலும் முதல் வகையாரையே, பெருமானர் சடங்குகள் நடத்த நாடுவர். மாடலன் முதல் வகை மறையவன்; அவன் மங்கல மறையோன் = மங்கல காரியங்களை நடத்தி வைக்கின்ற பார்ப்பனன் என்றே சொல்லப் படுகிறான். அதாவது "கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைச் செய்து வைக்கும் வாத்திமார்".

மங்கல அணி என்ற தமிழ்க் கூட்டுச்சொல் மங்கலம்>மங்கல்யம்>மாங்கல்யம் என்று சுருங்கிப் போய் இருபிறப்பியாய் மாறியது ஒன்றும் வியப்பான செயல் அல்ல.

{காட்டாக, "ஜல சமுத்ரம்" என்ற இருபிறப்பிச் சொல் இன்று "சமுத்ரம்" என்று சுருங்கச் சொல்லப் பட்டு பொருள் புரிந்து கொள்ளப் படுகிறது. சமுத்ரம் என்ற இருபிறப்பிச் சொல்லின் பிறப்பை அறியத் தமிழில் வராமல் முடியாது. கும்>கும்முதல்>குமிதல் என்ற தமிழ்வினையடி சேருதல் என்ற பொருளைத் தரும். குமிதல் என்பது தன் வினை. குமித்தல் என்பது பிறவினை. குமித்தம்/குமுத்தம் என்பது சேர்த்து வைத்ததைக் குறிக்கும் பெயர்ச்சொல். தென்மொழி/வடமொழிப் பரிமாற்றங்களில் (இவை இருவழிப் பரிமாற்றங்கள்; ஒருவழி மட்டுமே அல்ல.) குகர/சகரப் போலி பலநேரம் ஊடு வந்து நிற்கும். நம்முடைய குமுகம் அவர்களுடைய சமுகமாக உருமாறும். அப்படித்தான் குமுத்தம் சமுத்தம் ஆகி வழக்கம் போல ரகரம் ஊடுருவி சமுத்ரம் ஆகும்.

இனி, ஜலம் என்னும் சொல்லும் தமிழ் மூலம் காட்டுவது தான். சலசல என்று ஓசை எழுப்பும் நீர் சலம்>ஜலம் என்ற பெயரைக் கொள்ளும். (இது போன்ற ஓசைவழிச் சொற்கள் பல மொழிக் குடும்பங்களிலும் காணக் கிடைக்கும். ஒரு குடும்பம் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது.) ஜலம் என்னும் சொல்லும் சமுத்ரம் என்னும் சொல்லும் சேர்ந்து வடமொழியில் ஜலசமுத்ரம் என்ற கூட்டுச் சொல்லை உருவாக்கும். நாளாவட்டத்தில் புழக்கத்தின் காரணமாய் ஜல என்பது தொகுக்கப்பட்டு சமுத்ரம் என்பதே தனித்துக் கடலைக் குறித்தது. ஜல சமுத்ரம் போல ஜன சமுத்ரம் என்ற கூட்டுச் சொல்லையும் ஊன்றிக் கவனியுங்கள். [சமுத்ரத்தில் உள்ள தீவு சமுத்ரத் தீவு>சுமத்ரத் தீவு>சுமத்ராத் தீவு.]}

அன்புடன்,
இராம.கி.

5 comments:

Unknown said...

அன்புள்ள இராம.கி.
வணக்கம்.
சூன் 14, 15, 2007 ன் தாலி தொடர் பதிவுகள் அருமையான சிந்தனையின் வெளிப்பாடு. உங்களின் முயற்சி, நுண்ணியல் கருத்துக்களைப் படித்து மகிழ்கிறேன்.
மேன்மேலும் பணிதொடரட்டும்.
அன்புடன்.
இரா. இராதாகிருஷ்ணன்.
ஹூசுட்டன்
சூன் 17, 2007
radhamadal@gmail.com

Anonymous said...

நண்பர் இராமகி,


நட்சத்திரம் (நாள்காட்டி)

நட்சத்திரம் என்ற சொல் தமிழ் என்று 1950-ல் புறநானூற்று மாநாட்டில் வெளியிடப்பட்டது. "நக்கத்திரம்" என்ற சொல் சங்க இலக்கியத்திலும் உள்ளது. (see "puRan-aanuuRRuch choRpozivukaL" by Saiva Siddanta Publishing Society ).

http://www.unarvukal.com/forum/index.php?s=&showtopic=2385&view=findpost&p=19853

நட்சத்திரம் நாள் என்பதாகவுமிருக்கலாம்! தமிழில் நாள் என்றால் ஒரு 24 மணிக்கூறு கால அளவு என்பது உங்களுக்குத் தெரியும். நாள் என்றால் பகல்பொழுது என்றொரு பொருளும் உண்டு, அதுவும் உங்களுக்குத் தெரியும், பகல்பொழுதென்பது வெளிச்சமான காலப்பொழுது என்பதும் உங்களுக்குத் தெரியும், நக்கத்திரங்களும் வெளிச்சம் தருபவை என்பதும் உங்களுக்குத் தெரியும். இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமென்று எனக்குத் தெரியும். அப்புறம்-?


நகு+அ+திரம்.= நக்கத்திரம்.

நகு+அம் = நக்கம் என்பது, பகு+அம் = பக்கம் என்பது போன்றது.

இதேபோல், நகு+அ= நக்க என்று வரும். "அ" என்பது ஒரு புணர்ச்சி எழுத்துப்பேறு. திரம் ஒரு விகுதி.

நகுதல் = ஒளிவிடுதல் என்ற பொருளும் உள்ளது

- சிவமாலா


//சமுத்ரம் என்ற இருபிறப்பிச் சொல்லின் பிறப்பை அறியத் தமிழில் வராமல் முடியாது. கும்>கும்முதல்>குமிதல் என்ற தமிழ்வினையடி சேருதல் என்ற பொருளைத் தரும். குமிதல் என்பது தன் வினை. குமித்தல் என்பது பிறவினை. குமித்தம்/குமுத்தம் என்பது சேர்த்து வைத்ததைக் குறிக்கும் பெயர்ச்சொல். தென்மொழி/வடமொழிப் பரிமாற்றங்களில் (இவை இருவழிப் பரிமாற்றங்கள்; ஒருவழி மட்டுமே அல்ல.) குகர/சகரப் போலி பலநேரம் ஊடு வந்து நிற்கும். நம்முடைய குமுகம் அவர்களுடைய சமுகமாக உருமாறும். அப்படித்தான் குமுத்தம் சமுத்தம் ஆகி வழக்கம் போல ரகரம் ஊடுருவி சமுத்ரம் ஆகும்.//

சேரன் என்ற சொல்லைக் குறிக்க 'ச' என்ற சொல்லையே கற்களில் பொறித்திருந்தார்கள்

முத்திரை என்றால் மூன்று கடல் எனப் பொருள் தரும்

திரை என்றால் அலை அல்லது கடல்

முத்திரயம் என்றால் மூன்று கடல்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதைக் குறிக்கும், அல்லது மூன்று கடல்களும் சந்திக்கும் முனையை, இடத்தைக் குறிக்கும்.

முத்திரயம் என்ற சொல்லில் உள்ள 'ய' என்பதை எடுத்துவிட்டால் முத்திரம் என்ற சொல் உருவாகும்.
ச + முத்திரம் என்றால் சேர நாட்டுக்கு அப்பால் உள்ள கடல் பகுதி.

அந்த சொல்லே கால ஓட்டத்தில் பெருங்கடலைக் குறிக்கும் சொல்லாக உருவெடுத்தது.

இது திரு. அ.பி. மாசிலாமணி அவர்களின் கருத்து


chEran - just used “cha”. (not even chE). [ stone inscr. ]

muththirai = 3 seas. thirai = alai. kadal.
muththirayam = refers to a political control covering the 3 seas, an expanse of water where 3 seas meet.
drop the “ya” becomes muththiram.

sa+ muththiram – sEra nAttukku appAl uLLa kadal pakuthi, (Ocean). [ final construction and meaning]

now, samuththiram = ocean.

Root by AP MASILAMANI


//சமுத்ரத்தில் உள்ள தீவு சமுத்ரத் தீவு>சுமத்ரத் தீவு>சுமத்ராத் தீவு.]} //

இந்தோனேசியத் தீவுக் கூட்டங்களில் சுமத்ரா (சு + மதுரா) = நன்மதுரை அல்லது மூலமதுரை, போர்னியோ, புரூனெய் (பொருனை) போன்ற பகுதிகள் உள்ளன.

- குமரிமைந்தன்


சு + மதுரை = மூலமதுரை

- சிவமாலா

Anonymous said...

மங்கல நாண் என்ற சொல் தாலியைக் குறிக்கும் நண்பரே :-)

மங்கல நாண் வழிபாடு:

மங்கல நாணினை தேங்காயில் சுற்றி மஞ்சளரிசி இட்ட தட்டில் வைத்து மஞ்சள் குங்குமம் இட்டு மலர் தூவிடுவர்.

ஏகம்பரத்துறை எந்தாய் போற்றி

பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி

குவளைக் கண்ணி கூறன் காண்க

அவளும் தானும் உடனே காண்க


மங்கல நாண் பூட்டல்:
பெரியோர்கையில் கொடுத்து வாழ்த்துக்கள் பெற்று மங்கல நாணினை மணமகன் வாங்கி மணமகளின் கழுத்தில் அணிவித்து மூன்று முறை முடிச்சிட வேண்டும்.

செங்கமலத் திறை சிந்தையின் ஆற்றி

அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்டே

மங்கல நாணினை மணிக்களம் ஆர்ப்ப

நங்கையின் கழுத்தில் நறுந்தொடை சூழ்ந்தான்

மாது நல்லாளும் மணாளனும் இருந்திடப்

பாதி நல்லாளும் பகவனும் ஆனது

சோதி நல்லானைத் துணை பெய்யவல்லீரேல்

வேதனை தீர்தரும் வெள்ளடையாமே

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்

என்று மணமகன் மங்கல நாணினை மணமகள் கழுத்தில் பூட்டி மூன்று முடிச்சிடும் போது வருகை புரிந்துள்ள அனைத்துப் பெரியோர்களும் முனை முறியாத மஞ்சளரிசியை மணமக்கள் மீது தூவி ஆசிகள் வழங்குவர்.


பாண்டிமா தேவியார் தமது பொற்பில்

பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும்
ஆண் தகையார் குலச் சிறையார் அன்பினாலும்
......

தீப்பிணி பையவே செல்க என்றார்


- சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்


குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கவனோடும் உடன் சென்று அங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

- நாச்சியார் திருமொழி(ஆண்டாள்)

இராம.கி said...

அன்பிற்குரிய இராதாகிருஷ்ணன்,

தங்கள் வருகைக்கும் கனிவிற்கும் நன்றி.

அன்பிற்குரிய பூச்சிமுட்டை,

நக்கத்திரம் என்ற சொல் நக்ஷத்திரம்>நட்சத்திரம் என்ற திரிவுக்கு முன்னால் அமையலாம். ஓர்ந்து பார்க்க வேண்டியது "நக்கத்திரம் என்ற சொல் எப்படி எழுந்திருக்கலாம்?" என்பதே.

நகு+அம் = நக்கம் என்று தமிழில் வராது. அது நகம் என்றே வரும். வல்லினம் இங்கு மிகாது. நக்கு+அம் என்பதே நக்கம் என்று ஆகும். நக்கத்தின் பொருட்பாடுகள் கருப்பு, அம்மணம் என்பவையே. நகுதல் என்பதற்கு ஒளிவிடுதல் என்ற பொருள் உண்டுதான். ஆனால், நக்கத்திரத்தின் உள்ளே பொதிந்துள்ள வினைச்சொல் எது? அது நான் புரிந்து கொண்ட வரை, நகுதலாய் இருக்க வாய்ப்பில்லை. அதே பொழுது, நக்குதல் என்ற வினைச்சொல்லிற்கு ஒளிவிடும் பொருள் கிடையாது.

எனவே நக்கத்திரத்தின் சொற்பிறப்பாய், திரு.சிவமாலா கூறிய கருத்தை என்னால் ஏற்க இயலாது இருக்கிறது.

தமிழ்ச்சொற்கள் பலவற்றை வடமொழி போல் உடைத்து முன்னொட்டுக்களைப் போட்டுக் காட்டி, இப்படி "மு+திரை, மு+திரயம் என்பதில் யகரத்தை எடுத்துவிடலாம்" என்றெல்லாம் சொல்லும் வழிமுறைகள் திரு. சாத்தூர் சாகரனின் folk etymology வழிமுறைகள். அவைகள் விருவிருப்பான வழிமுறைகள்; ஆனால், பலநேரம் அவற்றை மொழியியல் வல்லுநர்கள் ஏற்பதில்லை. என்னை மன்னியுங்கள்.

நாம் சொல்லவரும் வழிமுறைகளில் அடிப்படை விதிமுறைகள் இருக்க வேண்டும். அவற்றிற்கான சான்றுகள் வேறு இடங்களில் இருந்து தரப்பட வேண்டும். There is always the danger of falling in to folk etymologies.

திரு. சிவமாலா, திரு. மாசிலாமணி போன்றோர் நல்ல முயற்சிகள் செய்கிறார்கள். ஆனால் அவற்றை மீண்டும் மீண்டும் ஆய்ந்து பார்த்து, பொதுப்பட்ட விதிகளைக் கூறி விளக்கினால் நன்றாய் இருக்கும். «Å÷¸Ç¢ý Å¢Çì¸í¸û Àħ¿Ãõ þôÀÊ ±ý¨Éì ÌÆôÀò¾¢ø ¬úò¾¢Â¢Õ츢ýÈÉ.

சுமத்ரா என்பதற்கு நன்மதுரை என்று குமரிமைந்தனும் சிவமாலாவும் சொல்லுவது சரியன்று. அôÀÊî ¦º¡øÖÅÐ காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை என்றே நான் சொல்லுவேன். நாம் அறிந்த மாந்தவியல், அகழாய்வியல், குமுகவியல் போன்றவற்றில் இருந்து இதை அணை செய்வதற்குத் தரவுகள் இல்லை.

மாறாக அந்தத் தீவு ÅÃÄ¡üÚì ¸¡Äò¾¢ø கடற்கொள்ளைக் காரர்கள் மிகுந்திருந்த தீவு; அதைத் தாண்டினால் தான் நாவலந்தீவில் இருந்து சீனம் போக முடியும் என்ற அடிப்படைக் கருத்தைப் புரிந்து கொண்டால் அது சமுத்ரத் தீவு என்பதாகத் தான் இருக்க முடியும் என்று புரியும். தவிர சீன, ºí¸¾க் குறிப்புகளும், பெருமி/தமிழிக் கல்வெட்டுக்களும், அதைத் தெளிவாகச் சமுத்ரத் தீவு என்§È சொல்லுகின்றன.

நண்பரே! சொற்பிறப்பியல் என்பது ஒரு ஒளிவிளக்கு, ´Õ ¸ÕÅ¢. அதை வைத்து சில செய்திகளைத் தேடலாம் ¾¡ý. ¬É¡ø ±¨¾Ôõ ¿¢ÚÅ¢ì¸ ÓÊ¡Ð. ¦º¡üÀ¢ÈôÀ¢ý ãÄõ «È¢ó¾ இடங்களையும், நடப்புகளையும் உறுதிசெய்ய மேலே சொன்ன மாந்தவியல், அகழாய்வு, குமுகவியல் போன்றவை வந்துசேர வேண்டும். Etymologies give you possibilities; but they have to be confirmed by other means. வெறுமே சொற்பிறப்பியல் என்பது தனித்து அந்தரத்தில் இயங்க முடியாது. அப்படி இயங்கினால் அது வெற்றுக் கற்பனைக்கே நம்மை இட்டுச் செல்லும்.

அன்புடன்,
இராம.கி.

Vijayakumar Subburaj said...

1. குமுத்தம் சமுத்தம் ஆகி வழக்கம் போல ரகரம் ஊடுருவி சமுத்ரம் ஆகும்.

சமுக்கம் என்பது தமிழா? அதன் பொருள் என்ன?

(வட/தென் கிழக்கிலிருக்கும் ?!) ஒரு நிலத்தை (வயல்/காடு) இவ்வாறு குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

2. அரவாடு என்ற சொல் தமிழர்களைக் குறிக்க, தெலுங்கு பேசுபவர்களால் பயன்படுத்தப் படுவது என அறிந்தேன். இதை "அரவம்" என்ற சொலுடன் தொடர்பு படுத்தியிருந்தீர்கள்.

(மன/அர) வாடு - (நம்/வேறு) அவர்கள்

அர என்றால் வேர (வேற, வேறு) இல்லையா?

தெலுங்கில் எந்த ரகரத்தைப் பயன்படுத்துகிறார்கள்? வல்லினமா? இடையினமா?

நன்றி.