Thursday, June 14, 2007

தாலி - 1

அண்மையில் "நந்தவனம்" என்ற வலைப்பதிவில், "தேவையில்லாத தாலியும் உருப்படியான தகவல்களும்" என்ற தலைப்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.தொ.பரமசிவன் எழுதிய ''பண்பாட்டு அசைவுகள்'' என்ற பொத்தகத்தை மேற்கோள் காட்டி, பதிவர் மகா, கீழ்க் கண்ட செய்திகளைக் கூறியிருந்தார்.
--------------------------
1. தாலி - என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.
2. நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
3. தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி மட்டுமே!
4. 'கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது' - வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார்.
5. 'பழந்தமிழர்களிடத்தில் தாலி வழக்கு இல்லவே இல்லை' - பெரும்புலவர் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனார்.
6. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பேச்சே கிடையாது.
7. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
8. கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம்.
9. இந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும், எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின.
10. பின்னர், 1968-ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லா திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.
--------------------------------
இவை போக மேலும், "தாலி பற்றிய பேச்சு வரும் பொழுதெல்லாம், இது காலம் காலமாக பின்பற்றப் படுவதாக சரடு விடுகிறார்கள். அதற்காகத்தான் இந்த பதிவு" என்றும் பதிவர் மகா குறித்திருந்தார்.

அவர் பதிவைப் படித்த போது, இதற்கு ஒரு மறுமொழி தரவேண்டும்; ஆனால் பொறுமையுடன் தரவுகளைச் சேகரித்துத் தரவேண்டும் என்று விழைந்தேன். திரு. மகா தந்திருப்பது போன்றவொரு முன்னிகை (comment), வீட்டிற் கிடக்கும் ஓலைச்சுவடிகளை, அவற்றின் உள்ளடக்கம் அறியாமல், குப்பை என்று கருதிக் கொண்டு, அள்ளி வீசியெறியும் (sweeping) பாமரத்தனத்தைச் சேர்ந்தது. கால காலமாய், பதினெட்டாம் பெருக்கின் போது காவிரியில் (அது போல மற்ற ஆறுகளில்) சுவடிகளை வீசியெறிந்தும், பொங்கலுக்கு முதல்நாள் நெருப்பிற்கு இரையாக்கியும், குப்பையில் மக்கிப் போயும், செல்லரித்துப் போகும் விதமாய்க் கரையானுக்கு உண்ணக் கொடுத்தும், தமிழர் தொலைத்த சுவடிகளும், அதிலிருந்த செய்திகளும் ஏராளம், ஏராளம். இப்பொழுது எஞ்சியுள்ள செய்திகள் நம்முடைய பண்பாட்டு மிச்சங்களிலும், மொழியிலும் தான் புதைந்து கிடக்கின்றன. இவற்றையும் அழித்து விட்டால், நாம் பண்ட்டு (bantu) மக்களைப் போல ஆகிவிடுவோம். தாலி பற்றிய மகாவின் கூற்று அந்த நிலைக்கே நம்மை இட்டுச் செல்லும். அப்படிச் செல்லும் போது, இவர் போன்ற "முற்போக்குச்" சிந்தனையாளர்கள் மிகவும் மகிழ்ந்து போகக் கூடும்!

மகாவைப் போன்ற இற்றைக்காலத் தமிழர்கள், தவறான புரிதலில் இருப்பதோடு, அதை நயந்து கொண்டு, தாலி என்ற சொல்லின் பொருளறியவும் முயலாது, கண்மூடித் தனமாய் பேசிக் கொண்டு இருப்பது பெரிய சோகம். இவர்களைப் பார்த்து கேட்கக் கூடியது ஒன்றுதான்.

"தமிழன் என்று பெருமிதத்தை இழந்தபின் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பெருமிதம் தொலைத்த அமெரிக்கக் கருப்பர்களின் நிலை உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? "தமிழராகிய எங்களிடம் எதுவும் கிடையாது, நாங்கள் வெறும் மண்ணாங்கட்டி" என்று நிலை நாட்டுவதில் நீங்கள் என்ன சாதிக்கிறீர்கள்? நீங்கள் எல்லாம் பாராட்டும் சீனக்காரன் கூட அவன் மரபைத் தொலைக்காமல் முற்போக்கை நாடுகிறானே என்று என்றாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?"

இப்படி, தமிழரின் வரலாற்றைச் சரியாய் உணராது, அதில் மேலோட்டமாய்த் தெரியும் மூதிகங்களை எல்லாம் உண்மை என்று எடுத்துக் கொண்டு, (அவற்றை விட்டொழிக்காமல்,) நம்முடைய மரபுகளையே தூக்கிக் கடாசி, அந்த இடத்தில் வெளிநாட்டிலிருந்து கீழிறக்கிய ஒட்டுண்ணி முற்போக்குச் சிந்தனை (அல்லது) இடதுசாரிச் சிந்தனையைப் பரிந்துரைப்பதே வழக்காய்க் கொண்ட இவர்கள் தாலியை மறுத்துரைப்பதன் மூலம் தங்களின் அறிவுய்தித்(intellectual)தனத்தை நிலைநாட்டிக் கொள்கிறார்களா? [தமிழில் பெரும்பாலும் வலது சாரிச் சிந்தனையை மட்டுமே கிடுக்கிக் (criticize) கொண்டு இருக்கிறோம். வறட்டுத் தனமான இடதுசாரிச் சிந்தனையும் கிடுக்கப் படவேண்டியதே!]

(தாலி கட்டுவது அடிமைத் தனம் என்று சொல்லுகின்ற இவர்களுக்கு, அதே பொழுது, வெள்ளைக்கார முறையில் மோதிரம் மாற்றுவது மட்டும் முற்போக்காய்த் தெரிவது தான் வேடிக்கை; திருமண முறிவு வரை தாலியைப் போல, மோதிரத்தைக் கழட்டாமல் தான் அங்கு பெரும்பாலும் இருக்கிறார்கள். "தாலிக்குள் முடங்கிக் கிடக்கும் மூதிகங்களை விட்டொழித்துப் பார்த்தால் மோதிரத்திற்கும் தாலிக்கும் வேறுபாடு ஒன்றும் பெரிதாய்க் கிடையாது" என்று கூட அறியாது முற்போக்காளர்கள் இருப்பார்களோ? :-) "வெள்ளைக்காரன் மரபு ஒசத்தி, நம்முடையது மட்டும் தாழ்த்தி" என்ற முடிவிற்கு இவர்கள் வருவதே ஓர் அடிமைத்தனம் அல்லவா?)

[உடனே "தமிழரிடம் இருக்கும் குறைகளை நான் மூடி மறைக்கிறேன்" என்று வெவ்வி வரத் துடிக்கும் இடது சாரியாளருக்கு, ஒரு சொல்: "நானும் உங்களைப்போல் ஆற்றைக் கடந்து தான், இந்தப் பக்கம் வந்திருக்கிறேன். கீழை நாட்டுப் போராட்டங்களை விவரமாய் ஒரு காலத்தில் அறிந்தவன் என்ற முறையிலும் சொல்லுகிறேன். உங்கள் பண்பாட்டுப் புரட்சியின் போக்கு நம்மைச் சரியான வழிக்குக் கொண்டு போகுமா என்பதை ஆழ்ந்து ஓர்ந்து பாருங்கள்."]

இவர்களுக்கும் விளக்கும் முகமாகத் தான் இந்தத் தொடரைப் பதிகிறேன்.

"தாலி என்ற அணிகலனைப் பெண்ணுக்கு அணிவிப்பது சரியா? இதற்குள் கிழாரியம் (feudalism), ஆணாதிக்கம் (male chauvanism) ஆகியவற்றின் கூறுபாடுகள் இல்லையா? இதைத் தவிர்க்காமல், ஆண்-பெண் இருவரும் வாழ்க்கை ஒப்பந்தம் செய்யவே முடியாதா?" என்று உரையாடலுக்குள் நான் போகவில்லை. (போக முடியாது என்றில்லை; போக முடியும், ஆனால் அந்த உரையாடலைச் செய்யப் பலரும் முன்வருவார்கள்; அதை நான் இருந்து செய்யவேண்டியது இல்லை. அப்படிச் செய்தாலும் "அந்தப் பழக்கத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்" என்ற விழைவில் நான் மாறுபடுபவனும் அல்லேன்.)

இங்கு என்னுடைய குறிக்கோள் தாலிப் பழக்கத்தைக் காப்பாற்றுவது அல்ல. மாறாக, மொழியியல், வரலாற்றுச் சான்றுகளைத் தந்து, தாலி என்பது இனக்குழு (tribal) சார்ந்த பழக்கமாய்த் தமிழரிடம் எழுந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தி, மகா கூறிய செய்திகளில் இருக்கும் சில புரிதற் பிழைகளைச் சுட்டுவது மட்டுமே என் குறிக்கோள் ஆகும்.

உண்மையில், தமிழரிடம் இனக்குழு சார்ந்த பழக்கங்கள் இன்றும் எத்தனையோ மிஞ்சிக் கிடக்கின்றன; (காட்டாக, திருநீறு இட்டுக் கொள்ளுவது, மஞ்சள்/குங்குமம் வைத்துக் கொள்ளுவது, சந்தனம் பூசிக் கொள்ளுவது ஆகியவை எல்லாம் சமயம் சார்ந்தது என்று பலரும் எண்ணிக் கொள்கிறார்கள்; ஆனால் ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், அவையெல்லாமே சேர, சோழ, பாண்டிய, போன்ற இனக்குழுச் சிந்தனைகள் வழியே, இன்றைய சிவ/விண்ணவ நெறிகளுக்குள் புகுந்த வழக்கங்கள் என்பது புலப்படும். அதைச் சொல்லப் போனால் இந்தத் தொடர் பெரிதும் நீண்டுவிடும். இன்னொரு நாள் அதைச் சொல்லப் புகுவேன்.) "அவற்றில் தாலியும் ஒன்று" என்று நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தொடர் மெதுவாக வரும். படிப்பவர்கள் பொறுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். (வேறொன்றும் இல்லை; சொந்த வேலைகள் அழுத்துகின்றன. இணையத்தில் நீண்ட நேரம் இருக்க முடிவதில்லை.)

அன்புடன்,
இராம.கி.

6 comments:

Anonymous said...

எவ்வளவுதான் பொறுமை காப்பது, சோலியைக் கட்டித் தாலியைச் சீக்கிரம் அனுப்புங்கள். :'(

நல்ல நேரம் போப்போது :'(

தாலியை முன்னர் பனையோலையில் அணிந்தார்களாம்.

சந்தனத்தைப் பாண்டியர்கள் மேனியில் பூசினார்கள். அது உணவு செமிபாடடைய உதவியது என்று கேள்வி. திருநீறு நெற்றியில் ஒன்றிணையும் மூளையின் இரத்த நாளங்களைக் குளிரப்படுத்தியது? அதேதான் நெத்தியில் இட்ட சந்தனமும் செய்ததா?

மஞ்சள் கிருமிகளை அழித்தது. நான் சொன்னது சரியோ?

bala said...

இராம.கி அய்யா,

தமிழ் பெண்கள் எந்த கால கட்டத்திலிருந்து சேலை அணிய ஆரம்பித்தார்கள்?சேலை என்பது ஆரியம் புகுத்திய சமாசாரமா?இதயும் ஓலைச் சுவடி பாத்து சொல்லுங்கய்யா.இந்த விஷயம்,தாலி விஷயமெல்லாம் தெரியாம தமிழன் சோற்றாலடித்த பிண்டம் போல வாழ்கிறானே என்று நினைக்கும் போது அழுகை வருதய்யா.

இராம.கி said...

அன்பிற்குரிய வேலிக் கோழி,

தாலியைப் பனையோலையில் அணிந்ததாய்ச் சொல்லுவது தாலப்பத்திரம் என்ற வட சொல்லாட்சி கருதியாகும். அது வேறு எங்கும் உறுதி செய்யப் படவில்லை.

சந்தனம், திருநீறு, மஞ்சள் பற்றி நீங்கள் கூறிய செய்திகளை வேறு ஒரு கட்டுரையில் தொடர்வேன். இப்பொழுது இந்தக் கட்டுரைத் தொடரில் தொடர்ந்தால் சொல்ல வருவது விலகிப் போகும்.

திரு.பாலா,

உங்களுடைய நக்கலையும் கும்மிகளையும் வேறு இடத்தில் வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

//சந்தனம், திருநீறு, மஞ்சள் பற்றி நீங்கள் கூறிய செய்திகளை வேறு ஒரு கட்டுரையில் தொடர்வேன். இப்பொழுது இந்தக் கட்டுரைத் தொடரில் தொடர்ந்தால் சொல்ல வருவது விலகிப் போகும்.//


நன்றி நண்பரே :-)

இ.பு.ஞானப்பிரகாசன் said...

'தால்' என்றால் 'தொங்குவது' என ஒரு பொருள் உண்டு இல்லையா ஐயா? எனவே, கழுத்திலிருந்து தொங்கும் அணி என்பதால் கூட இதற்குத் 'தாலி' எனும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் இல்லையா?

Anonymous said...

பெண்சிறுமிகள் அணியும் சிலம்பும் பழமையான தமிழர் மரபில் உள்ளது! திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்குச் சேவ்லுமுன் சிலம்பு களை நீக்கியே அணுப்பும் மரபும் தொன்மையான ஒன்றே! அதற்கான் சான்றாக தொல் தமிழ் இலக்கிய பாடல் ஒன்றில் "... வில்லோன் காலன கழலே தொடியோள் மெள்ளடி மேவின சிலம்பே ..." என சிலம்பு நீக்கப்பட்டார் சிறுமி - யாரோ ஒரு வில்லோனுடன் செல்வதைக் கண்டு வியப்பூம் அச்சமும் கோண்ட பெண்கள் புலம்புவதை அப்பாடல் தெளிவாக வெளிப்படுத்துகிறதே!