Thursday, June 28, 2007

free trade / fair trade - 1

அண்மையில் நண்பர் ஒருவர் தனிமடலில் free trade, fair trade என்பதற்கான இணைச்சொற்களைக் கேட்டிருந்தார். பின்னால், அவருக்கு மறுமொழித்திருந்தேன். இது பொதுவிலும் பயன் படட்டும் என்ற கருத்தில் இங்கு பதிகிறேன்.

trade என்பதற்கு வணிகம் என்றே சொல்லலாம். free என்பதற்குப் பரி என்றே முன்னால் நான் பரிந்துரைத்திருந்தேன். பலரும் "கட்டற்ற (non-joint), தளையற்ற (non-binding)" என்ற சுற்றிவளைத்த சொற்களைப் புழங்கிக் கொண்டு, பரியைப் புழங்க ஏனோ தயங்குகிறார்கள்; அதே பொழுது ஒரு சிலர் இதை ஏற்றுப் பயன்படுத்தவும் செய்கிறார்கள். கட்டு, தளை என்ற சொற்களை அடிப்படையாய் வைத்துக் கொண்டு "அது அல்லாத" என்னும் போது, anti-negative என்ற பயனாக்கம் ஏற்படுகிறதல்லவா? அது மொழி வளர்ச்சிக்குப் பயன் தருமோ? (கிட்டத் தட்ட George Orwell இன் 1984 புதினம் நினைவிற்கு வருகிறது. அதில் இது போன்ற சுற்றி வளைத்த சொற்கள் பலவும் வரும். ஒரு செயற்கை மொழியில் இதுபோன்ற சொற்கள் அமையலாம். அங்கு ஏரணம் மட்டுமே முகன்மை; நளினம் முகன்மையானது அல்ல. மொழி என்பது வெறும் ஏரணமா? ஒரு இயல் மொழியில் நேரடியாக free என்பதைத் சொல்ல வேண்டும் அல்லவா? மூக்கை நேரே தொடாமல் சுற்றிவளைத்துத் தொடுவது என்ன பழக்கம்?) முன்னால் அகத்தியத்திலும், அப்புறம் நண்பர் முகுந்தராசுக்கும் எழுதிய இருமடல்களின் படியைக் கீழே கொடுத்துள்ளேன்.

பரி என்று சொல்லுவதன் காரணத்தை இவற்றின் வழி புரிந்து கொள்ளலாம்.
-----------------------------------------
அன்புள்ள அகத்தியர்களுக்கு,

மரு.செயபாரதி எழுதியிருந்தார்:

"விடுதலைக்கும் சுதந்திரத்துக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. Liberty, Freedom, Independance ஆகியவற்றிற்கும் இடையே வித்தியாசம் உண்டு.
சிந்தனைக்கு...."

சென்ற மடலில் liberal பற்றிய என் முன்நாள் மடலைத் திருப்பி அனுப்பியிருந்தேன். இனித் தொடர்ச்சி.

எழுவரல் என்பது liberal என்பதற்கு ஆவது போல் எழுவுதி என்பதே liberty என்பதற்குச் சரிவரும். இங்கே எழுவுதி என்பது எழ முடிகிற தன்மை; தாழாத தன்மை; யாராலும் தடுத்து நிறுத்த முடியாத தன்மை. ஆனால் இந்தச் சொல்லிற்கு ஈடாகச் சுதந்திரம், விடுதலை என்று பலரும் மாறி மாறிப் பயன்படுத்துகிறார்கள். துல்லியம் கருதினால் சொல்லாட்சிகளை மாற்றவேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்.

சில ஆங்கில வாக்கியங்களைப் பார்ப்போம்.

I have the liberty to do it.
அதைச் செய்ய எனக்கு எழுவுதி உண்டு.
They lost the liberty and became slaves.
எழுவுதியை இழந்து அடிமைகள் ஆனார்கள்.
Liberty is in-alienable birth right.
எழுவுதி என்பது என்னிடம் இருந்து அயலிக்க முடியாத பிறப்புரிமை.

இனி freedom என்ற சொல்லைப் பார்ப்போம். சொற்பிறப்பியலின் படி,

freedom:

The prehistoric ancestor of free was a term of affection uniting the members of a family in a common bond, and implicitly excluding their servants or slaves - those who were not 'free'. It comes ultimately from Indo -european *prijos, whose signification ' dear, beloved' is revealed in such collateral descendents as Sanskrit priyas ' dear', Russian 'prijatel' 'friend', and indeed English friend. Its Germanic offspring *frijaz, displays the shift from 'affection' to 'liberty,' as shown in German frei, Dutch vrij, Sweedish and Danish fri, and English free. Welsh rhydd 'free' comes from the same Indo-European source.

இந்த விளக்கத்தின் படி "தமிழில் உறவின்முறை என்று தென்மாவட்டங்களில் சொல்லுகிறார்கள் பாருங்கள், அந்த உறவின்முறையில் உள்ளவர்கள் எல்லாம் free; மற்றவர்கள் free இல்லாதவர்கள்". இந்த உறவின் முறையில் உள்ள நம்மவர்கள் எல்லாம் பரிவுள்ளவர்கள்; பரிவுக்கு உரியவர்கள். மற்றவர்கள் பரிவுக்கு உள்ளுறாதாவர்கள். "பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்ற பாட்டை எண்ணிப் பாருங்கள். பரிதல் என்பது உற்றவருக்கு உரியது. இந்தப் பரிவு நம் உறவுக்கும், வகுப்பினருக்கும், இனத்தவருக்கும், மொழியினருக்கும் நாட்டினருக்கும் மட்டும் அல்ல, மாந்தனாய்ப் பிறந்த எல்லோருக்கும் உரியது என்பது இன்றையச் சிந்தனை. இதில் பரியுடைமை என்பதே freedom. (பரிவுடைமைக்கும் பரியுடைமைக்கும் வேறுபாடு கொண்டால் நன்றாக இருக்கும்.) தமிழ் உடைமை கொண்டாடுவது தமிழுடைமை - tamildom; அரசன் உரிமை கொண்டாடுவது அரசனுடைமை - kingdom. இறைவர் எல்லோர் மேலும் உடைமை கொண்டவர் ஆதலால் அவர் உடையார். தஞ்சைப் பெருவுடையார் என்ற சொல்லை ஓர்ந்து பாருங்கள். அதைப் போலப் பரியுடைமை.

"அவனுக்குப் பரிந்து நீ கேள்வி கேட்க வருகிறாயே?" என்றால் அவன் பரியுடைமையை நானோ, என் பரியுடைமையை அவனோ விட்டுக் கொடுக்க இயலாது என்றுதானே பொருள்? "நான் பரியாமல் வேறு யார் பரிவார்கள்? நான் அவன் உறவுக்காரன்; அவன் ஊர்க்காரன்; அவன் நாட்டுக்காரன்; அவன் மொழிக்காரன்; அவனும் மாந்தன் நானும் மாந்தன்" என்று இந்தப் பரியுடைமை நமக்குள்ளே விரியும். பரிதன்மை தான் freeness. பரிதன்மையை உடைமையாகக் கொண்டால் அது பரியுடைமை. இந்தப் பரியுடைமை என்பது நம்மோடு கூடப் பிறந்தது தான். இதைத் தான் விட்ட வெளித் தன்மை என்றும் விடுதலை என்றும் மொழி பெயர்க்கிறோம். ஒருவகையில் அது சரியென்றாலும், அடிப்படைப் பொருளை, விட்ட வெளித் தன்மை / விடுதலை என்பது, தனித்து நின்று, கொண்டு வரவில்லை என்றே நான் எண்ணுகிறேன். ஒரு குறுகிய அரங்கை (range) மட்டும் பார்த்து இந்தச் சொல் 19ம் நூற்றாண்டு, 20-ம் நூற்றாண்டுகளில் எழுந்திருக்கிறது. குறுகிய அரங்கு என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் விடுதலை எண்ணும் போது நாம் முன்னர் அடைபட்ட நிலை உள்ளே தொக்கி நிற்கிறது. அடைதலைக்குப் புறந்தலையாக விடுதலை என்று எண்ணும் போது ஏதோ ஒரு குறை, ஒரு எதிர்மறைச் சொல் போலத் தொனிக்கிறது. பரியுடைமை என்பது நேரடியாக பரிந்து வரும் போக்கைச் சுட்டுகிறது.

எழுவுதியும் பரியுடைமையும் ஒன்றா என்றால் கிட்டத்தட்ட ஒன்றுதான்; ஆனால் ஒரு நுணுகிய வேறுபாடு உண்டு. எழுவுதியில் தன்முனைப் போக்கு முகமையானது. பரியுடைமையில் சுற்றியிருப்போரையும் கருதும் போக்கு முகமையானது. அடிமைத்தளையில் இருந்து பரியுடைமை நிலைக்கு வருகிறோம். இதைச் செய்ய எனக்கு எழுவுதி வேண்டும். எழுவுதியை நிலைநாட்டி அதன் மூலம் பரியுடைமையை அடைகிறோம்.

அடுத்து independence:

புடலங்காய் பந்தலில் இருந்து தொங்குகிறது.
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தற்கீழ் மாலை மாற்றினர் மன்.

இப்படிச் சொல்லும் போது, பந்தல் என்பது மேலே இருந்து தொங்குகிறது என்று புரிந்து கொள்ளுகிறோம். பந்தல் என்பது காலில் நிற்கலாம். மேலே மோட்டு வளையில் முட்டுக் கொடுத்தும் தொங்கலாம். பந்துதல் என்பதன் அடிப்படைப் பொருள் கட்டுவதே. அந்தக் கட்டுமானத்திற்குப் பெயர் பந்தல்/பந்தர். பந்தர் என்பது ஒலை, துணி, தகரம் எனக் கட்டும் பொருளுக்குத் தக்க அசையும்; ஆடும்; உயரும்; தாழும். இத்தகைய இயக்கம் மேலும் இல்லாமல், கீழும் இல்லாமல் நடுத்தர நிலையில் இருப்பதால் அது பந்தரித்தல் என்றும் பந்தரம் என்றும் பின்னால் அந்தரம் என்றும் உருத் திரியும். பந்தப் படுவது என்பது கட்டப் படுவதே. ஒன்றைச் சார்ந்து அல்லது அடுத்து, பந்தப் படுவதே depend எனப்படுகிறது. அதாவது பந்தடுத்து அல்லது பந்தப்பட்டு நிற்பது என்பதே இந்த depend என்ற நிலை. பந்தப்பட்ட நிலை என்பது dependent status. பந்தப்படா நிலை = independent status. அதாவது இன்னொன்றைச் சாராநிலை. இதைத் தன்காலிலே நிற்கும் நிலை என்று பொருள் கொண்டு வடமொழி வழியே சுவ தந்திரம் என்று மொழிபெயர்த்தார்கள். தனிப்பட்ட, தனிநிற்றல், தன்னாளுமை என்றே நல்ல தமிழில் இதை மொழிபெயர்த்திருக்கலாம். வெறுமே independent என்று சொல்வதில் பொருள் வராது. independent of what என்ற கேள்வி உடனெயெழும். பல இடங்களில் இதற்கான விடை தொக்கி நிற்கலாம். இப்படித் தொக்கி நிற்கும் இடங்களில் விடுதலை என்பது சரியாக அமையக் கூடும்.

சில ஆங்கில வாக்கியங்களைப் பார்க்கலாம்.

India became independent in August 15, 1947.

இங்கே independent of British rule என்பது தொக்கி நிற்கிறது. எனவே இந்தியா 1947 -ல் ஆகசுடு 15 -இல் விடுதலை அடைந்தது என்று சொல்லலாம். அல்லது 1947- ஆகசுடு 15- இல் பந்தம் விடுத்தது என்றும் சொல்லலாம்.

There are 4 independent producers other than the MNC's for this drug in India.
இங்கே விடுதலையும் சரிவராது; சுதந்திரமும் சரி வராது. தனித்த, தனிப்பட்ட, சாராத, பந்திலாத போன்றவைதான் சரி வரும். தனிப்பட்ட/ தனித்த என்பது மிகச் சரியாகப் பொருந்தும். "இந்தியாவில் இந்த மருந்திற்கு பன்னாட்டுக் குழுமங்களைத் தவிர்த்து 4 தனித்த விளைப்பாளிகள் உள்ளனர்."

independence = பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை

freedom என்பதற்கும் independence என்பதற்கும் ஒற்றுமைகள் நிறைய இருந்தாலும் நுணுகிய வேறுபாடும் உண்டு.

காட்டாகப் பரியுடைமை என்பது இனி இந்தியாவைப் பொறுத்த வரையில் எதிர்காலத்துக்கும் உண்டு; அதை எந்நாளும் கையாளலாம்; கூடவே அதைக் காப்பாற்ற வேண்டும். தன்னாளுமை என்பது வந்து சேர்ந்து விட்டது. இனி இழக்காத வரையில், அதைப் பற்றிக் கவலைப் படவேண்டாம்.

இதுவரை கூறிய விளக்கங்கள் போதும் என்று எண்ணுகிறேன். துல்லியம் கருதி கீழ்க்கண்ட சொற்களைத் தமிழில் புழங்கலாம் என்பது என் பரிந்துரை.

Liberty = எழுவுதி
freedom = பரிவுடைமை
independence = பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை

அன்புடன்,
இராம.கி.

6 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தயாரிப்பாளர் என்ற சொல் உறுத்திக் கொண்டே இருந்தது. விளைப்பாளி என்ற நல்ல சொல்லைத் தந்ததற்கு நன்றி. இத்தனை நாள் பரி மென்பொருளில் உள்ள பரி என்னும் சொல்லுக்கு விளக்கம் கிடைக்காமல் இருந்தது. இப்போது அறிந்து கொண்டே. இது போல் மடற்குழுக்களில் புதைந்து கிடைக்கும் உங்கள் சொல்விளக்க மடல்களை ஓரிடத்தில் குவித்துத் தந்தால் உதவியாக இருக்கும்.

கட்டு, கட்டுப்பாடு எதிர்மறை என்றால் கட்டற்று இருப்பது நேர்மறையான சொல் என்று விதத்தில் தான் பயன்படுத்துகிறோம். பரி என்ற புதுச்சொல்லை ஒருவருக்கு அறிமுகப்படுத்தி, அவர் அகரமுதலி கொண்டு பொருள் தேடி முடிவதற்குள், கட்டற்ற என்பது இலகுவாகப் புரிந்து விடும் என்பது எங்கள் நம்பிக்கை. ஆனால், எல்லா இடங்களிலும் துறைக்கு ஒரு கலைச்சொல் என்று ஒப்பேற்ற முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

உங்கள் பரிந்துரைகள் பிடித்திருக்கிறது, பிடிக்க வில்லை, சரி, தவறு என்று ஆணித்தரமாக சொல்லும் அளவுக்கு இன்னும் மொழி ஆளுமை, தேர்ச்சி, அனுபவம் கிடையாது. ஆனால், பல்வேறு மாறுபட்ட கோணங்களில் கலைச்சொல்லாக்கத்தை அணுக உங்கள் பதிவு உதவுகிறது. நன்றி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

independence - சாராமை என்றும் சொல்லலாம் தானே?

செல்வா said...

அன்புள்ள இராம.கி,

நீங்கள் இந்தோ ஐரோபிய சொற்பிறப்புக்கும், ஒலியொற்றுமைக்கும்
இணங்கி வருமாறு ஆக்கும்
தமிழ்ச்சொற்களை கண்டு களிப்பவன்.
என்றாலும் சில இடங்களில் இயல்பான
பொருத்தம், எளிமை இருப்பதில்லை.
அப்படியிருல்லினும் உங்கள் ஆய்வுகள் பல்வேறு பலன் அளிக்க வல்லன. உங்கள் அரிய உழைப்பையும், பகிர்வையும் மிகவும் போற்றுகின்றேன்.

பொதுவாகவே, ஒரு மொழியில் வழங்கும் ஒரு சொல்லின் பொருட்
புலம் வேறு ஒரு மொழியில் வேறு
வகையில் அமையும். எனவே
பிறமொழி சொற்பிறப்பியல்வழி
ஆக்கும் சொற்கள் பல இடங்களில் வேறொரு மொழியில் பொருந்தி வராது, அல்லது சிறப்பாகவோ, இயல்பாகவோ பொருந்தாது.
எனவே உங்கள் பரிந்துரைகள்
(எழுவுதி, பரிவுடைமை) எனக்கு
போதிய நிறைவு தரவில்லை.

நீங்கள் கொடுத்த எடுத்துக்காட்டுத்
தொடர்களை ஏன் இப்படி மொழிபெயர்க்கலாகாது?
I have the liberty to do it.
அதைச் செய்ய எனக்கு தன்னுரிமை உண்டு.
They lost the liberty and became slaves.
தன்னுரிமை இழந்து அடிமைகள் ஆனார்கள்.
Liberty is in-alienable birth right.
தன்னுரிமை என்பது பிரிக்கவியலா பிறப்புரிமை.

இடத்திற்கு ஏறார்போலத்தான் மொழிபெயர்க்க இயலும்.

எனவே,

Liberty = தன்னுரிமை
என்பது போதும் என்பது என் கருத்து.

freedom = விடுதலை, விடுபாடு, தன்னோச்சம், தன்னுரிமைப்பாடு என பல சொற்களை இடத்திற்கு ஏற்றவாறு ஆளலாம்.

independence = பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை
இங்கும் விடுபாடு, விடுகோள், தன்னாண்மை முதலியன ஆளலாம்.

அன்புடன் செல்வா

இராம.கி said...

அன்பிற்குரிய ரவிசங்கர்,

விளைப்பாளி என்பதோடு புத்தாக்கர் என்றும் சொல்லலாம். product என்பதை புதுக்கு என்றே சொல்லுகிறேன். விளைப்பு என்பதை yield என்பதற்கும் இணையாகப் பயன்படுத்துகிறேன்.

கட்டற்ற என்ற சொல்லின் குறையை நான் விளக்கிவிட்டேன். அதைப் பயில்வதும், தவிர்ப்பதும் உங்கள் உகப்பு.

நல்ல அகரமுதலிகளைத் தேடிப் பிடியுங்கள். தமிழில் ஒவ்வொரு பெயர்ச்சொல்லிற்கும் அடியில் இருக்கும் வினைச்சொல் என்ன, அது எதைக் குறிக்கிறது, அதன் வேர் என்ன என்று பாருங்கள், உங்கள் கலைச்சொல்லாக்கங்கள் சிறக்கும். கூடவே மலையாளம், கன்னடம், தெலுங்கு என்ற மொழிகளில் இணைச்சொற்களையும் வட்டாரத் தமிழ் வழக்குகளையும் பாருங்கள். அடிப்படைத் தமிழ் எது என்று விளங்கும். சிறிது சிறிதாய் வடசொற் தோற்றம் விலகும்.

independence என்பதற்குச் சாராமை சரியாய் வராது. non-alliance அணிசேராமை. அணிசாராமை. சேருதலும் சாருதலும் ஒரே பொருள் தான்.

அன்பிற்குரிய செல்வா,

உங்கள் வருகைக்கும், கனிவிற்கும், கருத்திற்கும் நன்றி.

எழுவுதி பற்றிய முந்தைய மடலைத் தமிழ் இணையத்தில் (tamil.net) பார்த்தால் ஒருவேளை உங்களுக்குப் புரியலாம். பரியுடைமை என்ற சொல்லை ஆழ்ந்த ஓர்தலுக்கு அப்புறமே பரிந்துரைத்தேன். அதை ஏற்காமல் போவது உங்கள் உகப்பு.

தன்னுரிமை என்பது self-right. அது liberty அல்ல. எத்தனையோ liberals, self-right groups -ல் உறுப்பினராய் இருக்கிறார்கள். liberalism is different from self-right.
பெரியார் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் திராவிடர் கழகமாய் மாற்றினார். அந்த நலவுரிமைச் சங்கம் ஒரு தன்னுரிமைக் கழகம் தான். ஆனால் அதை liberal என்று புரிந்து கொள்ளுவது அவ்வளவு சரியாய் அமையாது.

self-righteous attitude என்பதையும் liberal attitude என்பதையும் எப்படிப் பிரித்துச் சொல்லுவீர்கள். நான் சொல்லும் வழியில் தன்னுரிமை மனப்பான்மையும், எழுவுதி மனப்பான்மையும் என்று சொல்லிவிட முடியும். A self -righteous individual need not be a liberal. ஒரு தன்னுரிமையாளன் எழுவுதியாளனாய் இருக்க வேண்டியதில்லை.

தன்னாண்மை என்பது ஆணாதிக்க உணர்வைக் காட்டும் என்பதால் அது போன்ற சொல்லாக்கங்களைத் தவிர்ப்பது நல்லது. management என்பதற்குப் பயன்படுத்தப் படும் மேலாண்மை என்ற சொல்லையும் அதே காரணத்தால் தான் நான் தவிர்த்து வருகிறேன். அதோடு, சுருங்கிய வினைச்சொல் to manage என்பதற்கு இணையாய் மேலாளுதல் என்று வருவதில்லை. அதன் பொருள் to rule over என்று ஆகிப் போகும்.

மானகைத்தல் = மான் (மாந்தரின் வேர்)+ அகைத்தல் (செலுத்துதல்) = மாந்தரைச் செலுத்துதல் = to manage என்றே நான் பரிந்துரைக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Vijayakumar Subburaj said...

தாங்கள் "பரி" என்ற சொல் இன்றும் பயன்படும் "பரிந்துரை", "பரிவர்த்தனை" பற்றி எதுவும் சொல்ல வில்லையே? அல்லது, இவை தொடர்பில்லாதவைகளா? நன்றி.

Anonymous said...

liberty எழுவுதி என்றால் liberation என்பது எழுவுதிமையா?