Thursday, June 28, 2007

free trade / fair trade - 2

இனி முகுந்திற்கு எழுதிய மடல். இது தமிழ் உலகம் மடற்குழுவில் வந்தது என்று எண்ணுகிறேன்.
---------------------------------------
அன்பிற்குரிய முகுந்த்,

[பின் குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள விளக்கத்திற்கு ஏற்ப free software-க்கு சரியான தமிழ் பதம் உருவாக்கித்தருமாறு, தமிழ் சான்றோர்களை, தமிழ் free software நிரலாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். ]

என்று கேட்டிருந்தீர்கள். நேற்று, எழுவுதி-பரியுடைமை-விடுதலை பற்றிய என் முந்தைய மடல்களை முன் வரித்திருந்தேன். அதைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இவை ஒட்டிய மற்ற சொற்கள் எல்லாம் தனித் தனித் துறைகளில் மட்டுமல்லாமல் பொதுப்புலத்தில் வருபவை. இதை மறந்து, நாம் ஒவ்வொருவரும் (நம் துறைகளில் ஆழ்ந்து போவதால்) மிக விதப்பாக (over-specialized) ஆகிவிடுவதால், துறைவிட்டுத் துறை ஆளக் கூடிய சொற்களை ஒதுக்கி நமக்கே நமக்காய் நம் துறைக்குக் கலைச் சொற்களை உருவாக்க முற்பட்டு விடுகிறோம். இதன் விளைவாய் வருதை (ordinary) யான சொற்களையெல்லாம் கூடக் கலைச் சொற்கள் ஆக்கிவிடுகிறோம். இந்த "free" என்பது ஒரு வருதைச் சொல்லே.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். தமிழில் வருதையான சொற்களில் கூட நுணுகிய வேறுபாட்டில் இரண்டு சொற்கள் அருகருகே இருக்கும். அந்த வேறுபாட்டை நுணுகி அறிந்து துல்லியமாகச் சொல்லும் கலையை நம்மில் பலரும் தொலைத்துக் கொண்டு இருக்கிறோம். நம் வட்டார வழக்குகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள மாட்டேம் என்கிறோம். கற்ற சொற்களைப் பயில மாட்டேம் என்கிறோம். அண்மையில் நண்பர் இரா. முருகனின் அரசூர் வம்சம் என்ற தொடர்கதையை திண்ணை வலையிதழில் படித்துவருகிறேன். அதில் நம்பூதிரிப் பெண்ணொருத்தி தமிழ்ப் பார்ப்பனப் பெண்ணிடம் பேசுவதாக அவர் மலையாளங் கலந்த தமிழில் ஓரிடத்தில் எழுதுவார். அதில் திரக்கு என்ற சொல்லை மிகுந்த கூட்டம் என்ற பொருளிலும், தன்னேர்ச்சி என்ற சொல்லைத் தானாக நடந்த 'அசம்பாவிதம்' என்ற பொருளிலும் எழுதியிருப்பார். பாருங்கள் இங்கே மலையாள வட்டார வழக்கு எப்படி இருக்கிறது? நான் ஏதோ ஆழ்ந்து அறிந்ததாக இங்கு தமிழுலகம் வந்து "துரக்கு" என்ற சொல்லை கூட்ட நெரிசல்/ traffic என்ற பொருளிலும், தன்னேர்ச்சி என்பதை accident -ற்கும் பயன்படுத்தினேன். அவர் ஆளுகையைப் படித்தவுடன், வட்டார வழக்கு நம்மைக் காக்கிறது என்று மனத்திற்கு ஒரு மகிழ்வு ஏற்பட்டது. அதே பொழுது இதை முன்னே அறியாது போய்விட்டோ மே என்ற வெட்கமும் ஏற்பட்டது. ஆக, நல்ல விருதையான சொற்கள் நம்மிடம் இருக்கின்றன. விவரம் அறியாமல் புதுப்புதுச் சொற்களைத் தெரிந்தவற்றிற்குக் கூட உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். கூடவே, இந்தக் கால வாழ்வில் ஒரு கருத்தைச் சொல்லும் போது அதனோடு கிட்ட நெருங்கி வரும் இன்னொரு கருத்தைச் சொல்லிச் சொற்குழப்பம் ஏற்படுத்தி ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். எங்கு போனாலும் chaltha hai என்று ஆகிவிடுவது நம் கவனக் குறைவினால் தானே!

இனித் தளையறு/விடுதலை மென்பொருட்கள் என்பதற்கு வருவோம்.

அடிமைப்பட்டிருந்த நாடு தன் தளையறுத்து விடுதலையானதை நினைவு படுத்தி உருவான இரண்டு முழச் சொற்கள் இவை. நம்முடைய சிந்தனை அளவை நாமே கட்டுப் படுத்திக் கொண்டு உருவாக்குகின்ற சொற்கள் இவை. மானகையியலில் (management science) எப்படியும் ஒன்பது புள்ளிப் புதிரைப் பற்றிப் படித்திருப்பீர்கள். கையை எடுக்காமல் ஒன்பது புள்ளிகளை நாலே நேர்கோட்டில் சேர்க்க வேண்டும் என்பார்கள். நம்மை அறியாமல் அந்த ஒன்பது புள்ளிகளின் வரம்பாக வெளியில் உள்ள எட்டுப் புள்ளிகளைக் கொள்ள நினைப்போம். உண்மையில் அந்த எட்டுப் புள்ளி வரம்பை உடைத்து வெளியே வந்தால் தான் இந்தப் புதிரைச் சுளுவி எடுக்க (சுளுவியெடுத்தல் - to solve) முடியும். அதுபோல ஒரு 50, 60 ஆண்டுகாலச் சிந்தனையில் இருந்து வெளிவந்து நாட்டுவிடுதலை என்பதற்கும் மீறிச் சிந்தித்தால் தான் free என்பதைப் புரிந்துகொள்ள முடியும். மாந்த வரலாற்றில் free ஆக இருந்த காலமும், அடிமையாக இருந்த காலமும் ஒரு இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன். எகிப்திய, சுமேரிய நாகரிகங்களில் அடிமை முறை இருந்தது. நம்மூர்ச் சிந்து சமவெளியிலும் இருந்திருக்கக் கூடும். தமிழ்க் குமுகாயத்திலும் இருந்திருக்க வேண்டும். சங்க காலம் என்பது பொற்காலம் அல்ல. அது ஒரு காலகட்டம். என்ன, நம்மால் ஓரளவு அறியப்பட்ட ஒரு கால கட்டம். அவ்வளவு தான்.

பரி(free)யாய் இருத்தல், பரியுடைமை (freedom) பற்றி முன்மடலில் சொல்லிவிட்டதால் அதை மீண்டும் இங்கு சொல்லவில்லை. மறுபடியும் ஆங்கிலச் சொல் ஒப்புமையா என்ற குற்றச் சாட்டு எனக்கு வந்து சேரும். வந்துவிட்டுப் போகிறது.:-) சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வந்துசேரும்? தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் தொடர்பு அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற என் எண்ணம் வலுப் பெறுகிறதே ஒழியக் குறையவில்லை. அதன் சரியான பரிமாணத்தை நம் நண்பர்கள் பலர் புரிந்து கொள்ளவில்லை. frei, free, ப்ரிய, prijos போன்றவை ஒப்புமைச் சொற்கள் என்றால் பரி என்ற தமிழ்ச் சொல்லும் ஒப்புமையாகத் தான் இருக்க வேண்டும். இதில் நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?

free software - பரிச் சொவ்வறை, பரி மென்கலம்,
open source software - திறவூற்றுச் சொவ்வறை,
licenced software - உரி(ம)ச் சொவ்வறை
shared software - shareware - பகிர் சொவ்வறை, பகிர்வறை

பரி என்ற சொல்லில் இலவயம் என்ற பொருளும் அடங்கும். ஒருவருக்கு இலவயமாகக் கொடுக்கும் போது நம்மைச் சார்ந்தவர் என்ற பரிதல் உள்ளே இருக்கிறது. அவருக்குப் பரிந்துதானே இலவயமாகத் தருகிறீர்கள்? தன்னாளுமை (சுதந்திரம்), விடுதலை, தடையற்ற என்ற பொருள்களும் இதில் உள்ளடங்கி இருக்கின்றன.

அன்புடன்,
இராம.கி,
-----------------------

இனி fair என்பதற்கான இணைச்சொல். பலரும் "நேர்மையான, நேரிய, செவ்விய, கவினிய, தகவுடைய" என்ற சொற்களையே பயிலுகிறார்கள். பாத்தி (compartment) பாத்தியாகப் பார்த்தால், இந்தச் சொற்கள் அந்தப் பயன்பாட்டிற்குச் சரியாகத்தான் தோன்றுகின்றன. ஆனால் அந்தப் பயன்பாட்டின் மூலம் ஒப்பேற்றும் உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. பலகாலமாய், இணைச்சொல் துல்லியம் பற்றி நான் சொல்லி வந்திருக்கிறேன். ஒரு பொருளை உணர்த்த, நெருங்கிவரும் இன்னொரு சொல்லால் சொல்லுவது கவிதைக்குச் சரிப்பட்டுவரும்; அறிவியலுக்குச் சரிப்பட்டு வராது என்பது என் கொள்கை. தமிழைக் கவிதை மொழியாகவே எத்தனை நாள் வைத்திருப்பது?

முதலில் fair என்பதை ஆங்கிலச் சொற்பிறப்பியல் வழி பார்ப்போம்.

O.E. faeger "beautiful, pleasant," from P.Gmc. *fagraz (cf. O.N. fagr, O.H.G. fagar "beautiful," Goth. fagrs "fit"), from PIE *fag-. The meaning in ref. to weather (c.1205) preserves the original sense (opposed to foul). Sense of "light complexioned" (1551) reflects tastes in beauty; sense of "free from bias" (c.1340) evolved from another early meaning, "morally pure, unblemished" (c.1175). The sporting senses (fair ball, fair catch etc.) began in 1856. Fair play is from 1595; fair and square is from 1604. Fair-haired in the fig. sense of "darling, favorite" is from 1909. Fairly in the sense of "somewhat" is from 1805; it earlier meant "totally." Fairway (1584) originally meant "navigational channel of a river;" golfing sense is from 1910. First record of fair-weather friends is from 1736.

இதில் free from bias, morally pure, unblemished, favorite, somewhat, totally என்ற பொருட்பாடுகள் எல்லாம் வழிநிலைப் பொருள்களாய் அமைந்தவை. முதற்பொருள் beautiful என்பதில் இருந்தே கிளைத்திருக்கிறது. beauty / அழகு என்ற கருத்தோ ஒளிநிறைந்த தோற்றத்தில் தான் முதலில் எழுந்தது. ஆழ ஓர்ந்து பார்த்தால் fair என்பதற்கு ஒளிநிறைந்த என்ற பொதிவுப் பொருளே (positive meaning) அடிப்படையாய் இருக்கமுடியும்.

தமிழில் வயத்தல், வியத்தல் என்ற இரண்டு வினைச்சொற்களுமே ஒளிசெய்தல், விளங்குதல் என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். வயங்குதல் என்பதும் கூட ஒளிசெய்தல், விளங்குதல் என்று உணர்த்தும். வய மீன் என்பது உரோகினி நாள்காட்டைச் சுட்டும். ஒளிநிறைந்த மீன் என்ற பொருள்.

ஒரு பெண்ணைப் பார்த்து, "அவள் சிவப்பும் இல்லை, கருப்பும் இல்லை, ஆனால் fair" என்று ஆணாதிக்கக் குமுகாயத்தில், பொதுவாகச் சொல்லும் போது, "முகம் களையாக ஒளிநிறைந்து இருக்கும், நிறம் இங்கே பொருட்டில்லை" என்று தானே வழக்கில் பொருள் இருக்கிறது?

வியத்தல் என்ற சொல்லில் இருந்து கிளைத்த வியப்பு என்ற சொல்லும் கூட முகம் மலர்ந்த, ஒளிகூடிய தோற்றத்தையே உணர்த்தும். இனிப் பெருமைப் பொருள் இதனின்று அடுத்துக் கிளைப்பதும் இயற்கை தான், விய, வியல், வியன், வியக்கம் ஆகிய சொற்கள் எல்லாம் பெருமை, சிறப்பு என்ற பொருட்பாடுகளைக் கொண்டு வந்து தரும். கூடவே வியல் என்ற சொல் பொன்னையும் குறிக்கும். வியலன்>வியாழன் என்பதும் பொன்னிற Jupiter யைக் குறிப்பது தான். வியந்துதல் என்பது ஒன்றை விளக்கும் வினையாகி, மேலும் சகரப் போலியில் வியஞ்சுதல் என்றாகி, வியஞ்சகம் என்ற பெயர்ச்சொல்லை "விளங்கும்படி செய்கை" என்று பொருளில் காட்டும். ஒரு பொருளை விளக்கி உணர்த்துவதை வியக்கனம் என்றே தமிழில் சொல்லுவார்கள். வியக்கனம்>வியாக்கணம் ஆகி மேலும் வியாகரணம் என்று வடமொழியில் திரிந்து, விளக்க நூல்களைக் குறிக்கும். நாம் தான் சொற்பிறப்பு தெரியாமல் இதை வடமொழி என்று மயங்கிக் கிடப்போம்.

வியத்தல் என்ற வினையில் எழும் வியவு என்ற சொல் fairness (brightness, beauty) போன்ற பொருட்களைத் தெளிவாகவே குறிக்கும். கீழே பல்வேறு கூட்டுச் சொற்களை வியவு என்ற சொல்லாட்சி வைத்துக் காட்டியிருக்கிறேன். ஆங்கிலத்தில் இப்பொழுது fair என்பதற்கு என்ன பொருளெல்லாம் சொல்லுகிறார்களோ, அதை ஒரே சொல்லால், பெரும்பாலும், கொண்டுவர இயலும். இதில் கட்டற்ற, தளையற்ற என்ற பயன்பாடுகள் அந்த அளவிற்கு வாய்ப்பாக அமையாது.

fair comment = வியவு முன்னிகை
fair competition = வியவுப் போட்டி
fair copy = வியவுப் படி
fair dealing = வியவு அணுகை = வியவணுகை
fair margin = வியவு வரந்தை
fair market value = வியவுச் சந்தை மதிப்பு, வியவு மாறுகடை மதிப்பு
fair play = வியவு ஆட்டம் = வியவாட்டம்
fair price = வியவு விலை
fair rent = வியவு வாடகை
fairs and festivals = வியந்தைகளும் விழவுகளும் (இந்த fair யை காட்சி என்றே தமிழாக்கி வருகிறோம்; என்னைக் கேட்டால் வியந்தை என்றே சொல்லலாம். ஒரு fairக்குப் போனால் அங்கிருக்கும் காட்சிப் பொருட்களைப் பார்த்து வியந்துதானே வருகிறோம்? வியந்தை என்பது ஒரே சொல்லாக சொல்லுதற்கு எளிதாய் அமைந்து விடுமே?)
fair trade = வியவு வணிகம்
fair treatment = வியவு நடத்தை
fair valuation = வியவு மதிப்பீடு
fair wage = வியவுக் கூலி
fair weather = வியவு வானிலை
fairy tale = வியவுக் கதை

ஆக, நீங்கள் கேட்ட சொற்களுக்கு,

fair trade = வியவு வணிகம்
free trade = பரி வணிகம்

என்பதே என் பரிந்துரை.

11 comments:

Anonymous said...

ஐயா,

இலங்கையில் Trade என்பதை "வியாபாரம்" என்றும், Commerce என்பதை "வர்த்தகம்" என்றும், Business என்பதை "வணிகம்" என்றும் குறிப்பிடுகின்றோம். இந்த பயன்பாட்டில் பிழையேதும் உண்டா?

ரவிசங்கர் said...

fairன் மூலம் வியத்தல் என்று வைத்துக் கொண்டாலும் fair price, fair rent என்பதில் நியாயம் என்ற பொருள் தானே அதிகம் தொனிக்கிறது? வியந்தை, வியவுக் கதை போன்றவை ஏற்புடையவையாக உள்ளன.

--

வட்டார வழக்குகள், அண்டை மொழிகள், உலக மொழிகளை இன்னும் ஆழ்ந்து கற்றுக் கொள்ள வேண்டியதன் தேவையை உங்கள் பதிவு திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டுகிறது. நன்றி

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

வணிகம், வர்த்தகம், வியாபாரம் ஆகியவை trade என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பலசொற்கள் தான்.

கொடுக்கல் வாங்கல் என்பவை வளைவுப் பொருளில் ஏற்பட்ட சொற்கள். கொடுப்பவரின் கை வளைந்து கொடுக்கிறது. (கொடுத்தல் = வளைத்தல்; கொடுக்காய்ப் புளி என்ற காயை எண்ணிப் பாருங்கள்). வாங்குதல் என்பது வல்>வள்>வட்கு>வக்கு>வங்கு>வாங்கு என்ற வழியில் வளைவுப் பொருளைக் குறிக்கும். வாங்கும் போது, வாங்குபவரின் கை வளைகிறது.

வில் என்பது விலகுதல், பிரிதலைக் குறிக்கும். வி>விற்பு>விற்பனை என்பதும் ஒருபொருள் நம்மிடம் இருந்து விலகுதலைக் குறிக்கும்.

வல்>வள்>வளைகு>வளகு>வணகு>வணங்கு என்பதும் வளைதலைக் குறிப்பதே.

வளைகு>வணைகு>வணிகு>வணிகம் என்பது வளைதற் பொருளைக் குறிப்பது தான். வணிகம் என்பது விற்பது, அல்லது வாங்குவதைக் குறிக்கும் ஒரு சொல். அதில் வளைவுப் பொருள் தொக்கி நிற்பது இயல்பானதே.

(பண்ணுவது என்ற சொல்லின் அடிப்படையில் ஏற்படும் பண்ணிகம் என்ற சொல் goods/articles ஐக் குறித்து, பின்னால் பண்ணுகின்ற வேலையைக் குறிக்கும். பண்ணிகம்>வண்ணிகம் ஆகி வணிகம் ஆவது சங்க இலக்கியங்களில் ஆளப்படுவதைப் பாவாணர் தன் வடமொழி வரலாறு என்ற நூலில் குறிப்பார். இன்றைக்கு வணிகம் என்ற சொல்லை trade என்று அல்லாமல் பண்ணுவது என்ற பொருளில் குறித்தால் சற்று சரவலாய் இருக்கும் என்று நான் அப்படி ஆள்வதில்லை. மாறாகப் production என்பதை விளைப்பு, புத்தாக்கம் என்றே குறித்து வருகிறேன். ஆனால் வணிகம் என்ற சொல்லை production க்கு இணையாய்ப் புழங்கினால், மறுப்புச் சொல்ல நான் யார்? மொழி என்பது பேசுபவர்கள் வாயில் இருக்கிறது. இலக்கணிகள் கையில் இல்லை அல்லவா?)

வல்>வள்>வள்+து = வட்டு>வட்டுதல் = வளைதல்
வட்டுதல்>வத்துதல் = வணிகம் செய்தல்; வத்துதல்>வத்தகம் = வணிகம். வத்தகம் வடமொழியில் திரியும் போது ரகரத்தை உள்நுழைத்துக் கொள்ளும். (மகதம் வரை வத்தகத்தை கி.மு.600-400 ல் கொண்டுபோனவர்களில் தமிழர்களின் பங்கு பெரியது என்று வரலாற்று ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது. தவிர தங்கம் நம் குவலாள புரத்தில் இருந்து தான் நாவலந்தீவு எங்கணும் சென்றது. வைரம், மணிகள், முத்து என்று செல்வத்தைச் செறித்து வைத்து பொருள்களில் பலவும் தென்னாட்டில் இருந்தே போயின. வணிகத்தை ஒட்டிய பல வடபுலச் சொற்களும் தமிழ் மூலமே காட்டுகின்றன.) வத்தகம்>வர்த்தகம்; இது கோத்தல் என்ற சொல்லைக் கோர்த்தல் என்று சொல்லுகிறார்களே, அது போல ஏற்படுவது.

வியாபாரம் என்ற சொல் கொஞ்சம் உருமாறித் தோற்றுகிறது. அது வாய்பகரம். metathesis என்ற முறையில் அது வாய்பகரம்>வியாபகரம்>வியாபாரம் என்று ஆகும்.

நாம் ஒரு கடைக்குப் போகும் போது, "இது என்ன விலை, சொல்லுங்க" என்று சொல்லுகிறோம் இல்லையா? பகருதல் என்றால் சொல்லுதல், குறிப்பாக மறுமொழி சொல்லுதல்; இங்கே விதப்பாக விலை சொல்லுதல், விற்றல் என்று பொருள் கொள்ளும். இதன் தொடர்ச்சியாக எழும் பகர்ச்சி என்ற சொல்லுக்குப் பொருள் அகரமுதலி சொல்லுவது போலச் சொல் மட்டும் இல்லை; விலையும் கூடத்தான். (ஆங்கிலத்தில் வரும் price இதற்கு இணையானது தான். விலை என்பதோடு பகர்ச்சி என்பதையும் தமிழில் ஆளமுடியும்.) விலை சொல்லும் வேலை தான் வாய்பகரம்.

நீங்கள் கூறிய commerce, business என்பவற்றிற்கு வணிகத்தை ஒட்டிய சொற்களைப் புழங்குவது அவ்வளவு துல்லியம் தராது. என்னுடைய முந்தையக் கட்டுரைகளை இந்த வலைப்பதிவில் படித்தால் அவற்றைக் கண்டுகொள்ளலாம்.

இருந்தாலும் சுருக்கமாகக் கூறுகிறேன். ஒரு பண்டத்திற்கு இன்னொரு பண்டம் மாறு கொள்ளுவதைப் பண்ட மாற்று என்று சொல்லுகிறோம் அல்லவா? (பண்டம் ஒரு பக்கம் பணமாகவும், இன்னொரு பக்கம் பொருளாக இருக்கலாம்.) அப்படி மாறு கொள்ளுவதைத் தான் market, merce என்று சொல்லுகிறார்கள். "பாரத தேசம்" என்ற பாடலில் பாரதி கூட "கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்" என்று சொல்லுவான். மாறுகொள்ளுகை என்பதையே சுருக்கி மாறுகை என்று commerce ஐ அழைக்கிறோம். com என்பது குமிதல்/சேருதல் என்ற பொருளை உணர்த்தும் முன்னொட்டு.

business என்பதற்குப் பொதினம் என்ற சொல்லை அடையாளம் காட்டி அது சில ஆண்டுகளாய்ப் புழங்கி வருகிறது.

நண்பரே! தமிழில் இவை போன்றவற்றிற்குத் துல்லியமான தனியான சொற்கள் இல்லாது வணிகம், வர்த்தகம், வியாபாரம் என்ற சொற்களையே வைத்து ஒப்பேற்றுதல் நல்லதல்ல என்றே நான் எண்ணுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய ரவிசங்கர்,

நியாயம் என்பது நயம் என்ற தமிழ்ச் சொல்லின் வடமொழித் திரிவு. இப்படி யகரமும் ரகரமும் நுழைந்து பல சொற்களை வடமொழிக்கு நாம் இழந்திருக்கிறோம். நம்முடைய சொற்கள் உருமாறிப் போயின. அவற்றின் வேரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. இவை போன்ற விளைவுகளால், நம் நய மன்றம் நியாய மன்றம் ஆகிப் போனது. நம்முடைய நயதி, நியதி ஆகி மேலும் திரிந்து நீதி ஆகி விட்டது. "என்னங்க இது நல்லது நடக்க வேணாமா? சட்டம்னு ஒண்ணு எதுக்கு இருக்குங்க" என்ற சிந்தனையில் நீதி என்பது நல்லது நடத்தல் என்றே பொருள் கொள்ளப் படுகிறது.

நயத்தல் என்பது விரும்புதல், சிறப்பித்தல், மேம்படுதல் என்ற பொருட்பாடுகளைக் கொள்ளும். மொத்தத்தில் நல்லதைக் கொண்டுவருதல் நயத்தல் ஆகும்.

இதே காரணமாய் மிகுதி, மலிந்த என்ற பொருளும் நயத்திற்கு வந்து சேரும். நயவிலை என்ற சொல் fair price என்பதைத் தான் குறிக்கும். நீங்கள் சொன்ன நியாய விலையின் வேரை அறிந்து கொள்ளுங்கள்.

இருந்தாலும் நயம் என்ற முன்னொட்டை இங்கு நாடாமல், வியவு என்பதைக் கொண்டு நான் குறித்ததற்குக் காரணம் இந்தச் சொல்வரிசையில் ஏற்படும் ஒருமை கருதியே.

வியவு என்றாலும் மிகுதி, பெருமை, பொன், நல்லது என்ற பொருட்பாடுகள் வந்து சேரும். நல்லது என்பற்குக் கூட ஒளிமிகுந்த என்ற பொருள் தான் உண்டு. நெல் நிலா என்ற சொற்களும் ஒளி கூடிய நிலையைக் குறிப்பவை தான். என்னுடைய கொன்றை பற்றிய கட்டுரையைப் படியுங்கள்.

வட்டாரச் சொற்களை அறிவதையும், அவற்றைப் பேணுவதையும் பற்றிப் புரிந்து கொண்டதற்கு நன்றி.

தமிங்கிலம் தரணியெங்கும் காட்டுத் தீயாய்ப் பரவிக் கொண்டு இருக்கும் நேரத்தில் நான் கொஞ்சம் விந்தையானவனாகத் தான் தெரிவேன். என்னைப் புரிந்து கொண்டவர்கள் மிகக் குறைவு. பலருக்கும் chaltha hai என்பது தான் இயல்பாக இருக்கிறது. கவிதை, கதை, துணுக்கு எழுத மட்டுமே தமிழ் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

நடந்து கொண்டிருப்பது சப்பானிய மொழியில் சொன்னால் ஒரு செப்புக்கு/அராக்கரி. தம் வயிற்றைத் தம் வாளால் கிழித்துக் கொள்ளுவது.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

ஐயா, நய என்னும் சொல் சிங்களத்தில் இன்னமும் புலங்குகின்றது.

ரவிசங்கர் said...

நயவிலை தெரிந்த ஏற்புடைய சொல்லாக இருக்கிறது. இதே பாணியில் நய வணிகம் என்று சொல்வதையும் விரும்புவேன். விளக்கங்களுக்கு நன்றி

ரவிசங்கர் said...

வேண்டுகோளை ஏற்று மறுமொழி அளிக்கும் சாளரத்தைத் தனிப்பக்கத்தில் தந்ததற்கு நன்றி.

//தமிங்கிலம் தரணியெங்கும் காட்டுத் தீயாய்ப் பரவிக் கொண்டு இருக்கும் நேரத்தில் நான் கொஞ்சம் விந்தையானவனாகத் தான் தெரிவேன். என்னைப் புரிந்து கொண்டவர்கள் மிகக் குறைவு. பலருக்கும் chaltha hai என்பது தான் இயல்பாக இருக்கிறது. கவிதை, கதை, துணுக்கு எழுத மட்டுமே தமிழ் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.
//

அப்படி இல்லை. குறைந்தது என்னைப் போன்றவர்களாகவது உங்கள் நோக்கத்தை அறிந்திருக்கிறோம். பின்பற்றவும் செய்கிறோம். சில சமயம் கருத்துகள், அணுகுமுறைகள் மாறலாம். அவ்வளவே.

இராம.கி said...

அன்புள்ள பெயரில்லாதவருக்கு,

நய என்ற சொல் சிங்களத்தில் என்ன பொருளில் புழங்குகிறது?

அன்பிற்குரிய ரவிசங்கர்,

நய என்ற சொல்லை நியாய என்பதற்கு இணையாகப் பல இடங்களில் பயன்படுத்த விழைவதால், வியவு என்பதையே fair என்பதற்கு இணையாகப் பயன்படுத்துவது நல்லது.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

சிங்களத்தில் நய = cheap (monetary)

Anonymous said...

It is a pity that you are more bothered about the roots of words
than in the meaning/context.You are adding more confusion.Fair trade has nothing to do with color or light.You dont know the meaning or context in which it is used.The tamil word you have used is not the right one to denote fair trade.

இராம.கி said...

முதலில் உள்ள பெயரில்லாதவருக்கு,

சிங்களப் பொருள் அறிந்து கொண்டேன். நன்றி.

For the second anony,

Thank you for visiting my blog. What you have given above is a subjective judgement and not a criticism. You are entitled to that and I respect. Let me go on my way and you yours.

Normally, I don't know what to answer to persons who have a closed mind and who seemed to imply that they know everything. Perhaps, it is a pity that you were not able to comprehend what I have wriiten in my entry. You may also have very little grasp about how words come up in different languages, their meaning and context.

In spite of the fact that I have spent substantial (almost 40) years in learning and contributing in historical linguistics, etymology, and coinage of technical terms, my proposals are just proposals and are not definitive. It is up to the users to take it or to leave it.

I don't create confusion.

With regards,
iraamaki