Tuesday, June 19, 2007

தாலி - 4

இவ்வளவு நீண்டு, மங்கலம்/மஞ்சள் பற்றி முன் இடுகைகளிற் பேசிய நாம், அடுத்து, ஒளிப்பொருள் கொடுக்கும் வேர்ச்சொற்கள் ஆன "கொல், பொல், இல், எல், அல், ஒல், சுல், முல், வல்" போன்றவற்றையும், அவற்றில் இருந்து கிளைத்த நூற்றுக் கணக்கான சொற்களையும், முன்பு நான் எழுதிய கொன்றை பற்றிய கட்டுரையில் காணலாம்.

அந்த வரிசையில் துல் என்னும் வேரை அங்கு சொல்லாது விட்டிருந்தேன். இப்பொழுது அதைப் பார்ப்போம்.

புல் (>புலம்) என்பது போல துல் (>துலம்) என்பது ஒளியைக் குறிக்கும் ஒரு வேர்ச்சொல் தான். துலமெனும் பெயர்ச்சொல்லில் இருந்து மேற்கொண்டு உருவான துலங்கல் என்னும் வினைச்சொல்லும் ஒளி தெரியும் நிலையைத் தான் உணர்த்துகிறது. கரிதட்டிப் போன ஏனத்தைக் கழுவி விளக்கித் துலக்குவது அதைப் பளிச்சென்று ஒளி நிறைந்ததாய் ஆக்குகிறது அல்லவா? துலக்குதல் என்பது துலங்குதலின் பிறவினை. துலங்குதல் என்ற வினைச்சொல் துளங்குதல் என்றும் திரிந்து ஒளி தரும் செயலைக் குறிக்கும். கேட்டை என்ற நாள்மீனைத் துலங்கொளி (எடுப்பாகத் தெரியும் ஒளி) என்று அகரமுதலிகள் கூறும்.

துளங்கின் திரிவாகத் துளங்கு>தளங்கு>தயங்கு>தயக்கம் என்ற அளவில் விளக்கம் எனும் பொருளை உணர்த்தும். துள் எனும் வேரின் நீட்சியாய் துள்>(தள்)>தளவு>தளவம் என்ற சொல் செவ்வரி படர்ந்த செம்முல்லையைக் குறிக்கும். (இப்பொழுதெல்லாம் சென்னையில் முல்லை என்றால் செம்முல்லை தான் கிடைக்கிறது. வெண்முல்லை கிடைப்பது அரிதாகவே இருக்கிறது.)

துல் என்னும் வேரில் இருந்து துல்குதல்>துகுதல்>தகுதல் என்ற திரிவில், சொலிக்கின்ற தன்மையைச் சுட்டுவார்கள். "தகதக என்று சொலிக்கிறது" என்பது பேச்சு வழக்கு. "தளதள" என்பது கூட, சொலிக்கும் தன்மையைக் குறிக்கும். "அவள் உருவம் தளதள என்று இருந்தது."

தகுதல்>தகுத்தல்>தகித்தல் என்பது சுட்டு எரிக்கும் வினையைக் குறிக்கும். தகித்தல் என்பது இன்னும் சற்றே திரிந்து தவித்தல் என்று ஆகி, ஈரம் உலர்ந்து போய் ஏற்பட்ட தொண்டையில் ஏற்படும் வறட்சியைக் குறிக்கும்.

தகுவின் நீட்சியாய் தகு>தங்கு>தங்கம் என்ற பொருள் ஒளி பொருந்திய மஞ்சள் நிற மாழையைக் (metal) குறிக்கும். தகுவின் நீட்சியாய் தகை என்ற சொல் உருவாகி விளக்கம், அழகு என்ற பொருளைக் கொடுக்கும்.

அழகு என்பதுகூட ஒளி, மஞ்சள் ஆகியவற்றின் பின்புலத்தைக் குறிக்கும் ஒரு சொல் தான். [கொன்றை பற்றிய என் முன்னாள் கட்டுரையில் அல்>அலங்கல் என்றசொல் ஒளி விளக்கத்தைக் குறிப்பதையும், அலங்கல்>அலங்காரம் போன்ற சொற்கள் ஒளிநிறைந்த சோடிப்பைக் குறிப்பதையும், அல்> அழு> அழல் என்பது நெருப்பைக் குறிப்பதையும், அல்> அழு> அழுகு என்ற வினைச்சொல் அப்புவதைக் குறிப்பதையும், அழுகு> அழகு = மஞ்சள் பூசியது என்ற பொருளையும் விளக்கியிருப்பேன். அழுகு>அழுக்கு என்ற நீட்சி அப்படியே எதிர்ப்பொருளைக் கொண்டுவருவது அப்பிக்கிடக்கும் செயலால் தான்.

பொதுவாக, 'அழகு என்றாலே ஒளி விடுவது போல் bright -ஆக இருக்க வேண்டும் என்று தமிழர் எதிர்பார்க்கிறார்' என்றும், 'beauty என்பதை அப்படித்தான் தமிழ் மக்கள் புரிந்து கொள்கிறார்' என்றும், 'அழகிய முகம் என்ற கூட்டுச்சொல்லின் முன்னொட்டான அழகிய என்பது ஒரு வினைச்சொல்லச் சுட்டவேண்டும்' என்றும், 'அவ் வினைச்சொல் அழகுதல் என்றே அமையும்' என்றும், 'அச் சொல்லுக்கு மஞ்சள் பூசுதல் என்ற பொருளே அமைய முடியும்' என்றும், 'மஞ்சளைப் பூசிக்கொண்டால், அதை அழகாகத் தமிழர் கருதிக் கொள்கிறார்' என்றும் அக்கட்டுரையில் சொல்லியிருப்பேன்.]

இனித் துல்குதல்> துகுதல் என்பதன் நீட்சியாய், (துகு)> (திகு)> திகழ் என்ற சொல் திங்கள், நிலாவைவைக் குறிப்பதையும் ஓர்ந்து பார்க்கலாம். திகு> திங்கு> திங்கள் என்ற சொல் கூட ஒளிநிறைந்த நிலவைக் குறிக்கும் முகமாக எழுந்தது.

தமிழர் வானியல் வழி அறிந்த இன்னொரு செய்தியையும் இங்கு குறிப்பிட வேண்டும். அமைந்த கணக்கின் படி, சந்திரமான மாதங்கள் அமையுவாவில் (அமாவாசையில்) தொடங்குகின்றன. அமையுவாவில் இருந்து பூரணை (பௌர்ணமி) வரை உள்ள காலத்தைச் சொக்கொளிப் பக்கம் (சுக்ல பக்ஷம்) என்றும், பூரணையில் இருந்து திரும்பவும் அமையுவா வரும்வரை உள்ள காலத்தைக் கருவின பக்கம் (க்ருஷ்ண பக்ஷம்) என்றும் நம்மூரில் அழைப்பார். மேலும், ஓர் ஆண்டைச் சூரியமானத்தில் அறவட்டாக 12 பகுதியாய்ப் பகுத்தது போல நிலவுபோகும் வட்டப் பாதையையும் அறவட்டாக 30 பகுதியாகப் பிரிப்பார்கள். இதில் ஒவ்வொரு பகுதியும் 12 பாகை கொண்டது.

இப்படிப் 12 பாகையாய்ப் பிரித்த ஒவ்வொரு பகுதியிலும் நிலவு ஒவ்வொரு தோற்றம் காட்டித் திகழ்கிறது, அல்லது ஒளி தருகிறது. இப்படி ஒளி தரும் பகுதிகளுக்குத் தமிழில் திகழிகள் என்று பெயர். திகழி மறுவித் திகதி ஆகி, அது இன்னும் திரிந்து, வடமொழியில் திதி என்று சொல்லப் படும். சந்திர மானக் கணக்கின் படி நிலவின் சுற்று என்பது 30 திகழி/ திகழ்தி/ திகதி/ திதி கள் அடங்கியது. ஒரு சூரிய மான மாதத்திற்கும் கிட்டத்தட்ட 30 நாட்கள் என்னும் போது, பெயர்ப் பிறழ்ச்சியில் திகதி தேதியாகி சூரிய மானத்து நாட்களையும் குறிக்கத் தொடங்கிற்று. ஈழத்தார் இன்னும் திகதி என்ற சொல்லைக் காப்பாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் தேதி என்றே சொல்லிவருகிறோம். ஈழத்தார் சொல் இல்லையேல், இச் சொற்பிறப்பை நாம் கண்டறிந்திருக்க முடியாது.

திகழி, திகதி, திதி = ஒளி நிறைந்த சந்திரமான நாள்.
திகழ்தல் = ஒளி தருதல்.

திகழ்தல் என்ற சொல் *துகு என்ற சொல்லடியில் இருந்தே கிளைத்திருக்க முடியும். இனிக் ககர, வகரப் போலியில் துகு என்ற சொல்லடி துவு என்று ஆகிக் கீழே உள்ள சொற்களை உருவாக்கும்.

துவர் = சிவப்பு (துவரம் பருப்பு = சிவப்புக் கலந்த மஞ்சள் பருப்பு)
துவரி = காவி, இலவம் பூ
துவரித்தல் = செந்நிறம் ஊட்டுதல்
துவரை = செம்பயறு
துவரை>தோரை= செங்காய்ப்பனை, அரத்தம்
துவர்>தோர், நெய்த்தோர் = அரத்தம்
துவர்>துகிர் = பவழம்
துவள்>துவண்டை = காவியுடை

துல் என்னும் வேர் ஒளிகூட்டுவதைச் சொல்ல இன்னொரு திரிவையும் உன்னித்துப் பார்க்கலாம்.

துல்>தெல்>தென்>தென்படுதல் = தெரிதல்
துள்>தெள்; தெள்ளுதல் = விளங்குதல்; தெளிவு = விளக்கம்
துலம்>துலவம் = பருத்தி
தெளிதல்>தெரிதல்

தெல்லில் தோன்றிய சொற்கள் ஏராளம். அவை எல்லாவற்றிலும் ஒளி எனும் கருத்து உள்ளூடி நிற்கும்.

இச்சிந்தனையில் எண்ணிப் பார்த்தால், துல்> துகு> தகு> தகல் எனும் சொல் அகரமுதலிகளின் படி, ஒளிப் பொருளை உணர்த்துகிறது. மேலும் தகல்தல் என்று சொல்லுக்கு ஒளிதல் மட்டுமல்லாது எரிதல் என்ற பொருளும், முன்னே சொன்ன தகதக என்ற புடைப்புச் சொல்லால் சுடுதல் பொருளும் இருக்க வேண்டும். [தகல்தலின் நீட்சியாய் உள்ள தகல்நம்>தகனம் என்ற பெயர்ச்சொல் எரிதலைக் குறிக்கிறது.]

தமிழில் நூல்கள் அழிந்து போனதன் குறைவே இதுதான். ஏரண அறிவோடு பார்த்தால் தோன்றும் பொருட்பாடுகளில், இங்கொரு வினைச்சொல்லும், அங்கொரு பெயர்ச்சொல்லுமாய் இடைவெளி விட்ட சொற்களே தென்படுகின்றன. அதைவைத்தே, தமிழில் "இது கிடையாது, அது கிடையாது" என்று சொல்லப் புகுந்து விடுகிறார் மொழி புரியாத சிலர். வெள்ளத்திற்கும், நெருப்பிற்கும், சிதலுக்குமாய் நம் நூல்களைப் பறிகொடுத்து, இன்று ஒவ்வொன்றிற்கும் ஆழ்ந்த ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. மொழியாய்வு என்பது மொழி அகழாய்வாகவே சிலபோது ஆகிப் போய்விடுகிறது.

இனிப் பகல்>பால் ஆனது போல, அகல்>ஆல் ஆனது போல, மகன்>மான் (மகள்>மாள்) ஆக முடிவது போலத் தகல்>தால் என்றும் ஆக முடியும். தகல் என்னும் ஒளிப்பொருள் தாலுக்கும் வந்து சேரும். தாலின் பலுக்க வேறுபாடான "டால்" என்னும் ஒலிக்கூறு இன்றைக்கும் இந்தியப் பேச்சில் ஒளி என்ற பொருளைத் தருகிறது அல்லவா? "அந்தச் சங்கிலியைப் பாரேன்! டாலடிக்கிறது" எனும்போது ஒளிகூடிச் சிறக்கின்ற நிலையைத் தானே குறிக்கிறோம்? (ராரீரோ என்னும் ஒலிக்கூறு தாலேலோ என்று திருந்திய தமிழில் ஆகித் தாலாட்டைக் குறிப்பது போல், டால் என்னும் ஒலிக்கூறு தால் என்னும் நல்ல தமிழ்ச்சொல்லை நமக்கு உணர்த்தலாம்.)

தால் என்ற சொல் தால் என்னும் இயல்பையும் (மஞ்சள் நிறம்), தால் எனும் இயற்பொருளையும் (மஞ்சள் பொருள், பொன் போன்றவை) குறிக்கலாம். இனி, வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலி. மீண்டும் சொல்கிறேன்; இத் தாலி பொன்னாய் இருக்கவேண்டியது அல்ல. ஒளிநிறைந்த மஞ்சளால் கூட ஆகியிருக்கலாம்.

தகல்>தால்>தாலி

தகல்>தால் என்று சொல்லுதற்கு இன்னொரு காரணமும் உண்டு. தாலின் நீட்சியாய் எழுந்த தாழ் என்ற சொல், தாழம்பூ என்ற மஞ்சள் நிறப் பூவை நம்முன் கொண்டுவந்து சான்று கூறும். தகதக, தங்கம், தகை, திகழ்தல், திகழி, திங்கள், துவு வழிச் சொற்கள், தெல் வழிச் சொற்கள், தாழம்பூ ஆகியவற்றை ஒருங்குற எண்ணிப் பார்த்தால் தால் எனும் சொல் தமிழில் இருந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம். டால் எனும் பலுக்கற் பிறழ்ச்சி கூடத் தாலைத் தான் குறிக்கிறது என்றும் சொல்ல முடியும். ஏரணவியலின் துணைப் படி ஆய்ந்துபார்த்தால், தாலி என்பது மஞ்சள்பொருள் கட்டிய கயிறு என்றே பொருள் கொள்ள முடியும்.

அன்புடன்,
இராம.கி.

7 comments:

Anonymous said...

சிறப்பான பதிவு :-)

nayanan said...

அன்பின் ஐயா,

தாலடிக்கும் ஒப்பற்ற கட்டுரை.
இரவு முழுவதும் உறக்கம் வருமா
என்ற அய்யத்தோடே உறங்கச் செல்கிறேன். அத்தனை இன்பமான
கட்டுரை.

//இன்று ஒவ்வொன்றிற்கும் ஆழ்ந்த ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. மொழியாய்வு என்பது மொழி அகழாய்வாகவே ஆகிப் போய்விடுகிறது.
//

இதன் வேதனையையும் வலியையும்
உணரமுடிகிறது. 2/3 நாள்களுக்கு
முன்னர் ஒரு நிகழ்ச்சியில் உரைப்பதற்காக, சுழி-நிலை மீட்சி என்ற
தலைப்பில் நாம் அன்றாடம் புழங்கும்
தமிழின் அளவு அல்லது ஆங்கிலத்தின்
அளவு எவ்வளவு என்று அளக்க முனைந்தேன். அனைவருக்கும் அதிர்வைத் தருவதாக இருந்தது.
250 ஆங்கிலச் சொற்களுக்கு மேல் தொகுத்து
நாம் எவ்வளவு பேதித்துப் போய் இருக்கிறோம் என்பதைப் பற்றிப் பேசினோம். நான் 250 அன்றாடம் புழங்கும் ஆங்கிலச் சொற்களோடு
நிறுத்திக் கொண்டது அவமானம் தாங்க முடியாமல். கோழி வறுவலைக் கூட
சிக்கன் பிரை என்றுதான் கூறனும். அதற்கெல்லாம் தமிழ் என்று சொல்லி உலக ஓட்டத்திலிருந்து விலகக் கூடாது
என்று சொல்லும் மாக்களை
என்ன செய்வது என்றே புரியவில்லை.

சமற்கிருதம் புதிதாய் வந்தபோழ்தும்
இப்படித்தான் தாவியிருக்குமோ இந்தக்
குமுகம் என்று எண்ணத் தோன்றுகிறது.

"மனம் ஒரு அங்காடி நாய்" என்ற
பட்டினத்தார்(?)சொல்லுக்கு தமிழ்நாட்டு
மக்களின் பிறமொழி அணைவு ஒரு நல்ல காட்டு என்றே கருதுகிறேன்.

சிலப்பதிகாரத்தில் இருந்து தாங்கள்
எடுத்துத் தந்திருக்கும் தரவுகள்
வியக்க வைக்கின்றன.

நன்றி.

varalaaru.com - ல் கோகுல் என்பார் கதை ஒன்றில் கீழ்க்கண்ட வாறு சொல்கிறார்.

சுட்டி: http://www.varalaaru.com/Default.asp?articleid=432


//ஆனால் இன்று அவ்வாறு செய்ய முடியாது. உடனடியாக எழுந்து உள்ளறையில் அமைந்துள்ள தேவாரத்திற்குச் (11) சென்று "சாமி ! நானும் அவரும் எந்தக் குத்தத்தையும் செய்யவில்லை - எங்களைப் பிரித்துவிடாதே !" என்று வேண்டிக்கொண்டால்தான் அவளுக்கு நிம்மதி.


(11) தேவாரம் என்பது அந்நாளில் வீட்டில் அல்லது அரண்மனை வளாகத்தில் அமைந்த பூசையறை என்பதைத்தான் குறித்தது. இன்றைக்கு நாம் தேவாரம் என்று குறிப்பிடும் பாடல்கள் அந்நாளில் திருமுறைகள் என்றுதான் வழங்கப்பட்டன. பார்க்க "கபிலக்கல்" டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.
//

எங்கள் ஊர்ப் பக்கத்திலே தாவாரம் என்று சொல்வார்கள். அதனை "தாழ்வாரம்" என்றே கருதமுடிகிறது. இவர் சொல்வதைப் பற்றி தங்கள் கருத்தறிய ஆவல்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

நண்பரே, உங்களிடம் தமிழில் அரணவ(இராணுவ)ப் பெயர்களைப் பற்றி வினவியுள்ளேன். நானும் வேறு இடங்களில் முயன்று பார்த்தேன். ஒன்றும் ஆகவில்லை. நான் சொற்பிறப்பியலாளன் அல்ல எனினும், என்னாலான சிறு முயற்சி இதோ. (உங்களின் பரிந்துரைகளான ஆணத்தி, மேலர் போன்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன :-] )


PRIVATE(பிறைவேட்) - வீரர்
CORPORAL(கோர்ப்பொறல்) - காப்பர் [காப்பு - காவல்]
SERGEANT(சார்யன்ட்) - சேவகர் (சேவை)

LIEUTENANT(லியூற்றினட்) - மறவர்
CAPTAIN (CPT)(கப்டன்) - நாயகர்
MAJOR (MAJ)(மேயர்) - மேவர், மேலர்

LIEUTENANT COLONEL(LTC) - மறவர் கயாபதி, கைகோல் மறவர், செங்கு(ந்த) மறவர்
COLONEL(COL)(கலனல்) - கயாபதி, கைகோலர், செங்குந்தர்
BRIGADIER GENERAL(BG) - எயினர் அதிபதி[எயினாதிபதி], அரண(ணிய) அதிபதி[அரணாதிபதி]

MAJOR GENERAL(MG) - மேவர்(மேலர்) அதிபதி
LIEUTENANT GENERAL(LTG) - மறவர் அதிபதி
BRIGADIER(பிரிகேடியர்) - எயினர்[வேடர், மறவர்; எயில் - மதில், அரண்], அரணியர் [அரணியம் - பாதுகாவல்], படையாட்சி

GENERAL(யெனரல்) - அதிபதி
GENERAL OF THE ARMY(யெனரல் ஒவ் த ஆர்மி) - சேனாதிபதி (சேனை + அதிபதி)

OFFICER(ஆபிசர்) - ஆணத்தி
LIEUTENANT COMMANDER - மறவர்கோமான்
COMMANDER(கொமாண்டர்) - கோமான், தளபதி
COMMANDER IN CHIEF(கொமண்டர் இன் சீவ்) - அம்மான், கோன், தளவாய்(படைகளின் வாய்)

http://www.unarvukal.com/forum/index.php?s=&showtopic=2497&view=findpost&p=22821

உங்கள் பின்னூட்டை எதிர்பார்த்துள்ளேன், ஏதோ ஐந்தாறு கூடைக்குள் பெயர்களை இட்டாச்சு, இப்ப எந்தக் கூடை சரி, எது பிழை, எதைக் கூடையோடு மாற்ற வேணும் என்று நீங்கள் உதவினால் பேருதவியாக இருக்கும்.



மேலும் விமானம் தமிழ் என்பதையும் மாசிலாமணி அவர்களின் உதவியுடன் நிரூபித்துள்ளோம். உங்கள் கருத்தை நேரம் உள்ளபோது கூறவும்.


விமானத்திற்கு பின்வரும் விளக்கத்தை அ.பி. மாசிலாமணி அவர்கள் முன்வைத்தார்.

விமானம்: வி- சங்கத(சமக்கிருதம்) முன்னொட்டு, இதில் மானம் என்ற சொல் தமிழில் இருந்து வந்தது.

மான் , மன்னுதல் - சமமானது என்று பொருள் தரும்.

சங்கத முன்னொட்டான வி - விழு என்ற வேரில் இருந்து வந்ததென்றார் மாசிலாமணி.

விழு - சிறந்த, ஆங்கிலத்தில் எக்சலன்ட்(excellent) என்று அழைப்பர். எனவே விழுப்புண் என்றால் சண்டையிலோ போரிலோ ஏற்பட்ட வீரக் காயம்(heroic wound). விழு என்ற சொல்லையும் விபூதி என்ற சொல்லையும் மாசிலாமணி தனது முன்னைய இடுகைகளில் விளக்கியதாகத் தெரிவித்தார். எனவே மாசிலாமணி அவர்களின் கருத்தின்படி விமானம் என்பது விழுமியது, (பறவையை) ஒத்தது, சம்திங் எக்சலன்ட் அன்ட் ஈகுஅல் ரு பேர்ட் (something excellent and equal to bird)

http://www.unarvukal.com/forum/index.php?showtopic=3668

நன்றி நண்பரே

Anonymous said...

நண்பரே, எனது முன்னைய பின்னூட்டின் தொடர்ச்சி இது
------------------------------

//Vimaanam : vi- Skrt prefix; maanam, the main word, comes from Tamil, maan > maanuthal which means be equal, be measured etc. Skrt prefix vi- comes from “vizhu” – chiRantha, meaning something excellent. Thus vizhup puN means a heroic injury sustained in a battle or war. I have explained vizhu in connection with the word vipuuthi in one of my postings. Hence to construct the meaning of the word vimaanam, it means some “ vizhumiyathu, (paRavayai) oththathu” something excellent and equal to ( a bird).//

ஆனால் மாசிலாமணியே பலமுறை சங்கத மொழி தமிழில் இருந்து உருவாகியது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அப்படியென்றால் வி என்ற முன்னொட்டைத் தமிழர்கள் பாவித்திருக்க மாட்டார்களா என்ன? சரி ஒருவேளை வி என்ற முன்னொட்டு தமிழில் இல்லை என்று வைத்துக்கொண்டாலும், வி என்பது தமிழில் பறவையைக் குறிக்கும்

வி – பறவை, விசும்பு, காற்று, அழகு, விசை, விகுதி
அப்படியென்றால் மாசிலாமணி அவர்கள் கூறியதுபோல் விழுமியது என்ற கருத்தை நீக்கினாலும், வி என்பது பறவை என்று தமிழில் பொருள் தருதலால், விமானம் என்பதன் பொருள் பறவைக்குச் சமமானது, பறவை போன்றது என்று பொருள் தருமே.

வி என்பது விழுமியது என்று சொன்னால் 'வில்' என்பது விழுமிய ஆயுதம் என்று பொருள்படுமா? ஆனால் வில் தரைக்கு மேல் பறப்பதாலும், வி என்ற எழுத்து விசும்பு, காற்று, விசை ஆகிய பொருள் தருவதாலும் வில்லின் வேர் 'வி' என்பதே ஏரணம்(logic).


சரி, இனி இராமகி அவர்கள் என்ன கூறினார் என்று பார்ப்போம்:


//பறனை - பறத்தல் என்பதை flying என்ற பொருளில் தான் நாம் கையாளுகிறோம். பறக்கின்ற உயிரியைப் பறவை என்று சொல்லுவது போலப் பறக்கின்ற ஊர்தியை பறனை என்று அவர்(தமிழ் ஆர்வலர் அட்லாண்டா பெரியண்ணன் சந்திரசேகரன்) சொன்னார். 'னை' என்ற ஈறு தமிழ்ச் சொல்லாக்கத்தில் பயனாகிற ஒன்றுதான்.

விமானம் என்ற வடமொழிச் சொல்லிற்கு car or chariot என்ற பொருளே வடமொழிச் சொற்பிறப்பின் படி உண்டு. இந்த car என்பதன் நீட்சியாய் celestial car என்று பொருளும் உருவாகும். (இன்னும் கொஞ்சம் அகண்டு, கோயில் விமானம் போல பலநிலை மாடங்களையும் விமானம் என்ற சொல் குறிக்கும். இந்தப் புழக்கத்தை மாடம், கோபுரம் என்ற தமிழ்ச்சொற்களால் கொண்டுவந்துவிட முடியும்.)


பறத்தல் = to fly
பறப்பு = flight
பறவை = bird
பறனை = plane
வான்பறனை = aeroplane / air plane
வான்புகல் = airport
வானூர்தி = aircraft
வானூர்த்தியல் = aeronautics//

மேலும், இராமகியின் கருத்தின்படி சங்கதத்தில் விமானம் என்ற சொல்லின் நீட்சியாய் செலஸ்ரிகல் கார்(celestical car) என்று வழங்கியிருக்கலாம். ஆனால் தமிழில் வேர் உடைய இந்த சொல்லைச் சங்கதத்தில் வேர் தேடுவது பெருந்தவறு.

வி - பறவை
விமானம் - பறவையை ஒத்தது, பறவைக்கு ஈடானது

ஆனால் இதன் தொடர்ச்சியாக பறத்தல், பறப்பு ஆகியவற்றுக்கு எவ்வாறு சொல் அமைப்பது என்று தெரியவில்லை.

வான் நோக்கி அமைந்திருக்கும் கோயில் விமானம் அது வான் நோக்கியிருப்பதால் அந்தப் பெயரைப் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

மேலும் புட்பகம்(புள் + அகம்; புள் என்றாலும் பறவை என்று பொருள் தரும்) என்று தமிழ்ப் புராணங்களில் குறிக்கப்படும் வானவூர்தியும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

திரிசங்கு வைத்திருந்த தமிழன் விமானம் வைத்திருக்கவில்லை என்றால் வேடிக்கையாகத்தான் இருக்கும்.

நன்றி நண்பரே

இராம.கி said...

அன்பிற்குரிய புல்மூட்டை,

கனிவிற்கு நன்றி.

அன்பிற்குரிய நயனன்,

கனிவிற்கு நன்றி.

படித்தவர்களாகிய நம்மைப் போன்றோர் பேசும் தமிழோடு ஆங்கிலம் கலப்பது அளவற்றுப் போய்விட்டது என்பது மிகவும் உண்மை. இந்தப் பழக்கத்தால் தான், தமிழால் முடியாது என்று தத்துப் பித்தாக சிலர் உளறிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு இயக்கமாய் தமிங்கிலத்தை ஒழித்தால் தான் தமிழ் நிலைக்கும்; இல்லையேல் ஒழிந்துவிடும். இந்த வலைப்பதிவு உலகத்திலேயே பாருங்கள்; தமிங்கிலம் இவ்வளவு உள்நுழைந்து வேரோடி நிற்பதைப் பலரும் உணர்ந்தது போல் தெரியவில்லை.

சிலம்பில் நாம் அறிய வேண்டியது இன்னும் இருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

தாழ்வாரம் என்பது வேறு. அது கீழ்நோக்கிச் சாயும் வாரம் (தாழுகின்ற வாரம்).

தேவாரம் என்ற சொல்லிற்கு "வீட்டில் உள்ள வழிபாட்டு அறை" என்று பொருட்பாடு அகரமுதலிகளில் உண்டு.

தே + வாரம் = தேவாரம்; வரம்பு என்ற சொல்லைப் போல வரிவரியாய் எல்லை கட்டித் தெரியும் வீட்டுப் பகுதி. இங்கு இது தெய்வக் காரியத்திற்காக அமையும் இடம். எங்கள் ஊர்ப்பக்கம் சாமிவீடு என்று இதைச் சொல்லுவார்கள். (வீடு என்பது அறை என்றும் பொருள் கொள்ளும்). இந்தக் காலத்தில் நகர்ப்புறத்தில் பூசையறை என்று சொல்லப்படும்.

சம்பந்தர், அப்பர், சுந்தரரின் திருமுறைகளைத் தேவாரம் என்பது வேறொரு காரணம் பற்றியது. அதில் வாரம் என்பது இசைப்பாடல்கள் என்ற பொருளைக் கொடுக்கும். தவிர, பாடுகின்ற வேகம் ஒன்றிற்கு வாரம் என்ற பெயர் உண்டு. முதல் நடை, வார நடை, கூடை நடை, திரள் நடை என்று நான்கு விதமான நடையில் இசைப் பாடல்களைப் பாடலாம்.

'முதல்வழி யாயினும் யாப்பினுட் சிதையும்
வல்லோன் புணரா வாரம் போன்றே'

என்று தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியலில் வரும். வாரம் என்ற சொல் பாடும் நடையைக் குறிக்கும் பொருளில் 2500 ஆண்டுகளாய் உண்டு. இந்தக் காலத்தில் வாரம் பாடுதலை இரண்டாம் காலத்தில் பாடுதல் என்று சொல்லுவார்கள். திரள் நடை என்பது துரித காலம் என்று இன்று சொல்லப்படும்.

தேவாரம் என்பது வார நடையில் இறைவனைப் போற்றிப் பாடும் பாடல்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

திரு.வெங்கா, மற்றும் வேர்கொண்ட நாதருக்கு,

அரணப் பெயர்களைப் பற்றிப் பிரிதொரு முறை எழுதுவேன்.

விமானம் என்பது உயர் கட்டுமானம் (விம்மி உயர்ந்திருக்கும் நிலை; விம்முதல் = பருத்தல், மிகுதல், உயர்தல்; விம்மானம்>விமானம்) என்ற பொருளில் எழுந்த ஓர் இருபிறப்பிச் சொல் என்றே இன்றளவும் நான் கருதுகிறேன். அதோடு அந்தச் சொல்லின் பொருள் கருவறைகளின் மேல் உள்ள கட்டுமானத்திற்குத் தான் மிகச் சரியாக வரும். பறனைக்கு நிகராக அதைப் பயன்படுத்துவது எனக்கு உகப்பில்லை.

புட்பு என்பது பற்றி ஓர்ந்து பார்க்கவேண்டும். என்னால் இப்பொழுது சொல்ல முடியவில்லை.

அன்புடன்,
இராம.கி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தகல் - தால் - தாலி விளக்கத்தைப் படித்தவுடன் மனமறியா மெல்லிய புன்னகை பூத்தது. நல்ல விளக்கம். நன்றி