Friday, May 25, 2007

Digital -2

நண்பர் கணேசனின் முன்னிகைக்கு மறுமொழியாக மேலும் தொடர்ந்தேன். அது இங்கு இரண்டாம் பகுதியாய் வருகிறது.
---------------------------
அன்பிற்குரிய கணேசன்,

வழக்கம் போல நீங்கள் உங்கள் வழியிலேயே போகிறீர்கள். :-)

தமிழுக்கும் மேலை இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் ஆகச் சொல்லிணைகளை அடுத்தடுத்து நானும் காட்டிக் கொண்டே இருக்கிறேன். நான் பார்த்தது 1000 அடிப்படைச் சொற்களுக்கு மேலும் இருக்கும். இறையருள் இருப்பின், ஒருநாள் இதையெல்லாம் ஒரு பொத்தகமாகத் தொகுத்துப் போட முயலுவேன்.

நீங்கள் என்னுடைய இந்த பரந்தறிப் பார்வையை (empirical observation) எப்பொழுதும் மறுத்தே வந்திருக்கிறீர்கள். பரந்தறிவில் இருந்துதான் கருதுகோள்களும், தேற்றங்களும் ஆய்வுகளும் தீர்மானங்களும் பிறக்கின்றன. நமக்கு ஏற்கனவே கொண்ட கொள்கையை வைத்து மட்டும் பார்த்துக் கொண்டே இருப்பது சரியென்று தோன்றவில்லை. கொள்கைகள் இருப்பதே தவறில்லை; ஆனால் அவற்றைக் கொஞ்சம் உப்புப் பிசுக்கோடு (pinch of salt; மறுபடியும் இங்கு ஒரு சொல் இணை பியுங்கு = பிய்த்தெடுக்கும் அளவு >பிசுங்கு> பிசுக்கு - pinch) எடுத்துக் கொள்வது நல்லது.

analogous என்பதற்கு தொடராக இருப்பது என்று முதற்பொருள் இல்லை. Analogous is not synonymous with continuous. தொடராக இருப்பது என்பது வழிப்பொருள். "இன்னொன்றைப் போல் இது இருக்கிறது" என்பது தான் முதற்பொருள். ஆக அது உவமத்தைக் குறிக்கிறது.

உவம உறுப்பாக 36 -யைத் தொல்காப்பியர் குறிக்கிறார்.

அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, என்ற, வியப்ப, எள்ள, விழைய, இறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய என்ற முப்பத்தாறு உருபுகளில் நான் 'அன்ன'வை நாடியது தப்பாகப் போய்விட்டது :-) மற்ற 35 சொற்களை நாடியிருந்தால் மேலை இந்தியவியல் (western indology) ஆய்வாளர்களின் கொள்கை காப்பாற்றப் பாட்டிருக்கும், இல்லையா? மடத்தனமாக "அன்ன" என்ற சொல்லை ஒப்புமை கண்டு இன்னும் ஒரு இணைச் சொல்லா என்று நான் வியந்தேனே, அது தவறுதான் :-) அதுவும் இந்த 'அன்ன' என்ற சொல்லில் தொல்காப்பியருக்கு இருந்த காதலைப் பார்த்து நானும் கொஞ்சம் கிறங்கிப் போய்விட்டேன். தொல்காப்பியரைத் தூக்கிக் கடாசாமல் மேலை அறிஞரைத் தூக்கிக் கடப்பில் போட்டுவிட்டேன் பாருங்கள் :-) அது என் பிழைதான். தமிழைப் பற்றிப் பேசத் தொல்காப்பியருக்கு என்ன தகுதி? :-) [எழுத்ததிகாரத்தில் மட்டும் 9 இடங்கள், சொல்லதிகாரத்தில் 25 இடங்கள் அவர் பயன்படுத்துகிறார். இந்த இடங்களை, நான் அவக்கரமாக (இதைத்தான் அவசரம் என்று பேச்சுத்தமிழில் சொல்லி வடமொழியென மயங்குகிறோம்)ப் பார்த்தேன்; ஒரு தேடு பொறி இருந்தால் மிகச் சரியாக மூன்று அதிகாரத்திலும் பார்த்திருக்கலாம். தொல்காப்பியருக்கு "அன்ன பிறவும்", "அன்ன மரபும்" என்ற சொற்கூட்டின் மேல் அளவில்லாத பரிவு இருந்திருக்கிறது]

சுவை என்ற சொல்லிற்கு வேரே "சொவச் சொவ", "சவச் சவ" என்ற ஒலிக்குறிப்புத்தான். அப்படித்தான் சவைத்தல், சொவ்வுதல், சுவைத்தல் என்ற சொற்கள் எல்லாம் தமிழில் கிளைத்தன. soft என்ற சொல்லும் வாயில் போட்டு மெல்லும் போது கடினப் பொருள் சவைத்துப் போவதைக் குறிக்கிறது. மெல்லுதல் என்ற வினையால் சவைத்த நிலை ஏற்படுகிறது. மெல்லுதல் என்பது ஒருவகையில் சிறிய grinding. மெல்லுதல் என்பது ஒரு process -செயல்முறை; சவை என்பது ஒரு நிலை - state. I prefer to use a state than a process here. மெல் என்னும் சொல் சவைக்குச் சில இடங்களில் பகரியாக நிற்கலாமே ஒழிய முற்றிலும் அல்ல. இந்தத் துல்லியத்தைக் காட்ட முனைந்தால், "நான் ஒலி ஒப்புமை பார்க்கிறேன்" என்கிறீர்கள். இதுவும் என் பிழைதான். :-) சொவ்விய/சவ்விய நிலை என்பது இயற்கையாலோ, மாந்தரின் செய்கையாலோ ஏற்படலாம். மெல்லுதல் என்பது மாந்தரின் செய்கை மட்டுமே. இந்த நுணுக்கத்தைச் சொல்லத் தமிழுக்கு வலிவு இல்லையோ? :-)

வறை என்பது சரக்கு என்பதைக் குறிக்கும். தொல்பழங்காலத்தில் இயற்கையில் உலரவைத்துக் கிட்டிய பொருட்களையே பண்ட மாற்றில் கொடுத்து வந்தார்கள்; சருகுகள் (உலர்ந்த இலைகள், பூக்கள்; சருகிக் கிடந்த பொருள் சரக்கு), கண்டங்கள் (புலவின் உப்புக் கண்டங்கள்; கண்டுதல் என்பதும் வற்றுவதே; கண்டுமுதல் என்ற சொல் ஈரமில்லாத கூலத்தைக் குறிக்க வேளாண்மையிலும் வழங்குகிறது.) பண்டிக் கிடந்த பொருள்கள் (பண்டு என்றாலே உலர்ந்த பழம் என்று பொருள்) பண்டம் என எல்லாமே உலர்ந்த நிலையைக் காட்டியது. அது போல ware என்பதும் வறழ்ந்த நிலையைக் காட்டியது. ஈரமண்ணில் செய்து காய வைத்து உலர வைத்துச் சுட்ட கலமே வறை என்பது. அது வெறும் கலம் அல்ல. சுட்ட கலம். சுடாத கலம் விலைக்கு வராது. பயனுக்கும் ஆகாது. அதனால் தான் மென்கலம் என்ற சொல்லைத் தவிர்த்து சொவ்வறை என்று எழுதினேன். ஒலி ஒப்பீடு என்று மட்டுமே நான் பார்ப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்கள். அது மட்டும் அங்கு கிடையாது. இன்னும் ஆழம் போய் அதைப் பாருங்கள்.

மூசி பற்றி நீளமாக முன்பே எழுதிவிட்டேன். ஒவ்வொரு சொல்லும் எழுத்து பூர்வமாக தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் தமிழைத் தூக்கி விட்டெறிந்து விடலாம். பாவம், தமிழர்கள் முட்டாள் தனமாக தங்கள் சுவடிகளைச் செல்லரிக்கவிட்டும் பதினெட்டாம் பெருக்கில் கொட்டியும், நெருப்பில் இட்டும் குலைத்தெறிந்தார்கள்; எல்லோரும் ஞான சம்பந்தர் ஆகவேண்டும் என்றால் அது எப்படி?

சூழ்ச்சி அறியாது, சொல்பேச்சைக் கேட்டவர்கள் தமிழர்கள். இவர்களுக்கு இலக்கியம் கிடையவே கிடையாதைய்யா :-). எல்லாமே வடமொழிதான் :-). வடவர்கள் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் மனனம் செய்ததை வழுவாமல், இடைச்செருகல் இல்லாமல், கொடிவழியாகப் பாடம் சொல்லி ஒப்பிக்கிறார்கள் என்று சொன்னால் நம்புவீர்கள். "நாட்டுப்புறத்தான் வழிவழியாக தன் கொடிவழிக்குக் கூறினான்" என்றால் நீங்கள் ஒப்ப மாட்டீர்கள். "மூஞ்சி தமிழ் என்றால், பின் மூசியும் தமிழ் தான்" என்று இக்குப் போட்டுச் (if condition) சொன்ன உரையை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். பேசாமல் எலி என்று சொல்லிவிட்டால், ஏற்றுக் கொள்ள இயலுமோ? :-)

எண்ணியத்தின் குறை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

ஆங்கிலத்திலேயே digital - க்கு toe தான் மூலம் என்ற அவர்களே சரியாக விளக்கம் சொன்ன பிறகு, நான் toe -வைப் பார்க்காமல் வேறு எதைப் பார்ப்பேன்? "என்னடா இது? உடம்பின் பல்வேறு பாகங்களுக்கு நுணுகிய நிலையில் தமிழில் சொற்கள் சொல்லியிருக்கிறார்களே, இந்த toe -வுக்கு மட்டும் கால்விரல் என்று ஒரு கூட்டுச்சொல் தானா?" என்று ஆய்ந்து, "toe -வுக்கு இணையாகச் சொல் இருக்கிறதா?" என்று தேடித் தலை கீழாகப் பார்த்து, 'தத்தும் தவ்வு, தாவு, தாண்டு' என்ற வினைகளை நுணுகி, "அந்தச் செயல்களின் வேர் எதுவாக இருக்க முடியும்?" என்று ஊகித்துச் சொன்னால், "நீங்கள் ஏற்க மாட்டேன்" என்கிறீர்கள்.

"தோய் என்ற சொல்லுக்கு மற்ற பொருட்பாடுகள் இருக்கின்றன" என்றால் நான் என்ன சொல்வது? பலபொருள் ஒருசொல் தமிழில் இல்லையா? தோய்தல் - "நிலத்துப் பதிதல், செறிதல், அணைதல், உறைதல், கலத்தல், பொருத்துதல், கிட்டுதல், ஒத்தல், அகப்படுதல், நட்டல், துவைத்தலிடுதல்" என்ற எல்லாச் செயல்களையும் பாதம் பதியாமல் ஒரு மாந்தன் செய்யவியலாது. ஒன்றின் மேல் அல்லது ஒன்றிற்குள் பதிவது என்ற பொருளின் நீட்சியே நீங்கள் மேலே பார்ப்பது.

ஒரு சொல்லுக்குப் பத்துப் பொருட்பாடு இரூக்குமானால் முதலில் அவற்றை வகைப்படுத்த வேண்டும். பிறகு எது முதற்பொருள், எது வழிப்பொருள் என்று பார்க்க வேண்டும். ஏரண முறைப்படி எதில் இருந்து எதைப் பெறமுடியும் என்று காண வேண்டும். பிறகுதான் சரியான கருத்தைச் சொல்ல முடியும். மாந்தனுக்குத்தான் இவற்றை முதலில் பொருத்திப் பார்க்க வேண்டும் பிறகு மற்ற உயிரிகளுக்கும், உயிரற்ற பொருள்களுக்கும் பொருத்த வேண்டும்.

மறுபடியும் சொல்லுகிறேன். தோய்தலின் முதற்பொருள் பதிதலே. மேலே உள்ள பொருட்பாடுகளை ஆழ ஓர்ந்து பொதுமை கண்டால் பதிதல் என்பது பின்புலத்தில் இருப்பது தெரியும்.

இனி இன்னும் மூன்று பொருட்பாடுகளை அகரமுதலியிற் காணலாம். அவை முழுகுதல் (இதில் தான் நீங்கள் சொல்லும் ஆழ்வது வருகிறது), நனைதல், முகத்தல் என்றவை. இங்கே பொருள் நீட்சி பெருவது ஒன்றிற்குள் ஒன்றாகப் பதிவது என்ற கருத்தே.

நொதிப்பது என்ற பொருளை நான் அகரமுதலியில் பார்க்கவில்லை. ஒருவேளை உறைவது என்பதை வைத்துச் சொல்லுகிறீர்கள் போலிருக்கிறது. தயிர் உறைந்திருக்கிறதா என்று கேட்பது உண்டு. அங்கே உயிரிகள் கலந்திருக்கின்றனவா என்றே பொருள் கொள்ளுகிறோம். இந்தப் பொருளில் எழுந்த சொல்லே தோய்தயிர், தோயை போன்றவை. அங்கே உயிரிகள் பதிந்திருந்தால் தான் மற்ற செயல்களும் வினைகளும் நடந்திருக்கும். நொதித்தல் வினை தோய்தலுக்கு அப்புறம் வருவது. உயிரி வேண்டிய அளவு இல்லையேல் நொதித்தல் வேண்டிய அளவு நடந்திருக்காது. மாவு சரியாகப் பொங்கியிருக்காது; பருத்திருக்காது (பருத்து - bread :-)).

நான் சொன்ன சொற்களில் அன்னல் மின்னியல், தோயல் மின்னியல் என்பவற்றில் பெயரெச்சமாக வரும்போது 'ல்' என்னும் எழுத்தை விட்டுவிடலாம் என்று தோன்றியதை என் முந்தைய மடலில் குறிக்காது விட்டேன். அது என் தவறு. அன்ன மின்னியல் - analogue electronics, தோய மின்னியல் - digital electonics என்றே சொல்லலாம்.

ஒரு காலத்தில் பின்-அறுபதுகளில் electrical engineering, electronic engineering என்பவற்றிற்கு மின்பொறியியல் என்றும் மின்னிப் பொறியியல் என்றும் சொல்லிவந்தோம். இந்தக் காலத்தில் அதை மயக்கியே சொல்லுகிறார்கள். தெளிவு வேண்டின் பிரித்துச் சொல்லலாம்.

முடிவாக தமிழ் விக்சனரி மடற்குழுவில் கொடுத்த தொகுப்பிற்குத் தமிழ் இணைச்சொற்கள்.

1. Digit
= தோயை / தோய்.
2. Number Systems & Bases
= எண் கட்டகங்களும், படிமானங்களும்
3. Decimal Numbering System
= பதின்ம எண்ணுகைக் கட்டகம்
4. Range of binary numbers.
= இரும எண்களின் அரங்கை
5. octal number
= எட்டக எண்
6. Hexadecimal number
= பதினறும எண்
7. Binary to Decimal Conversion
= இருமத்தில் இருந்து பதின்மத்திற்கு மாற்றம்
8. Sum-of-Weight Method
= எடைக் கூட்டுச் செய்முறை
9. Decimal-to-Binary Conversion
= பதின்மத்தில் இருந்து இருமத்திற்கு மாற்றம்

அன்புடன்,
இராம.கி.

22 comments:

Anonymous said...

Sir, can you tell me where i can find the original discussion?

was it a yahoo group?

Anonymous said...

அண்ணே, விரைவாகவே சௌரிராசப் பெருமாளின் அருளைக் கூட்டிவிடுவோம். ஏடு தண்ணியிலயும் தீயிலயும் போனமாதிரி இதெல்லாம் கணியோட போக விடுறதில்லை. அடுத்த பொத்தகக் காட்சிக்குக் கொண்டாந்துருவோம்.
ஆறுமுகத்தமிழன்.

Anonymous said...

வறை என்பது சுட்ட கலம் என்று நீங்கள் சொன்னதைக் கண்டபிறகுதான் "ஊத்தைக்குழிதனிலே மண்ணை எடுத்தே உதிரப்புனலில் உண்டை சேர்த்து வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம் வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடு பாம்பே" என்ற பாட்டில் வருகிற வறையோடு என்ற பதத்தின் பொருள் அடியோடு புரிந்தது.
ஆறுமுகத்தமிழன்

மாதங்கி said...

வணக்கம்.

ஏரண முறைப்படி என்றால் என்ன. தயவுசெய்து கூறவும்.

இராம.கி said...

அன்பிற்குரிய மாதங்கி,

ஏரணம் = தருக்கம் = அளகை = ஏது சாற்றம் = logic

பின்னூட்டு அளித்த நண்பர்களுக்கு,

உடனுக்குடன் மறுமொழியளிக்க இயலாது இருக்கிறேன்.

பின்னூட்டு அளிக்க விழையும் நண்பர்களுக்கு,

முன்னிகை மட்டுறுத்தல் (comment moderation) இப்பொழுது இருப்பதாலும், மூன்று நாட்கள் நான் ஊரில் இல்லாது போவதாலும், பதிவுகளைப் பார்த்து உங்கள் முன்னிகைகளை புறவரிக்க (forward) முடியாமற் போகலாம். பொறுத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

மு.மயூரன் said...

//Sir, can you tell me where i can find the original discussion?

was it a yahoo group?//

இது ஒரு கூகிள் குழுமம்.

தமிழ் கலைச்சொல்லாக்கம் தொடர்பான உரையாடல்களுக்கு ஒரு பொதுவான இடம் வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.

தன்முனைப்புப்பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளும் பொருட்டும், பொதுமை பேணப்பட வேண்டும் என்பதாலும், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விக்கிபீடியா இயக்கத்தின் ஒரு பகுதியான விக்சனரியை மையப்படுத்தி இந்த குழு இயங்குகிறது.

குழும முகவரி

http://groups.google.com/group/tamil_wiktionary

தொடுப்பு

மு.மயூரன் said...

இராம.கி ஐயா,

மேற்கண்ட விக்சனரி குழுமத்தில் ஒரு பார்வையாளராகவேனும் நீங்கள் இணைந்திருப்பது பயன்மிக்கதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இந்த குழுமத்தில் இணைந்துகொள்ள முடியுமா?

இராம.கி said...

The original discussion on the word "digital" occurred in

http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/16957

It was in November 25, 2002. If you follow the succeeding discussions after this mail, you may get further info.

அன்பிற்குரிய ஆறுமுகம்,

உன் கனிவிற்கு நன்றி. பொத்தகம் மலர, இறையருள் கூடட்டும்.

வறை என்ற சொல் மிகச் சரியாக ware என்ற ஆங்கிலச் சொல்லிற்குப் பொருந்தும். அதைப் பயன்படுத்தப் பலரும் தயங்குவது அடிப்படைக் கோளாறு தான். சொவ்வறை தருவது போல் மென்பொருள், மென்கலன் என்ற சொற்கள் அவ்வளவு சரியாக மற்ற இணைச்சொற்களுக்கு பொருளைப் பொருத்திக் கொடுக்காது. ஆனாலும் பலர் தயங்குகிறார்கள்.

யாரோ ஒரு வெள்ளைக் காரன் (மாக்சு முல்லர் மற்றும் ஜோன்ஸ்) சொல்லிவிட்டானாம் ஆங்கிலமும், சங்கதமும் உடன்பிறப்புக்கள் என்று;
இதை நம்மவரும் ஏற்றுத் தமிழை ஒதுக்கித் தள்ளி வைத்துவிட்டார்கள்; இப்படிப் படித்தவர்கள் செய்ததும், மற்ற எல்லோருக்கும் வயதி (வசதி) யாய்ப் போயிற்று. நூற்றுக் கணக்கான தமிழ்ச் சொற்களை, சங்கதத்தின் வழி பார்த்து, முன்னுரிமையைச் சங்கதத்திற்கே கொடுத்து, தமிழை 50% விழுக்காட்டுக்கும் மேல் கடன் வாங்கும் ஏழையாக மாற்றி நம் பெருமிதத்தையே குலைத்துவிட்டார்கள்.

"எந்தவித முன்முடிவும் இல்லாமல் தமிழ் வேர்கள் வழி பாருங்கள், தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள உறவு புரியும்" என்று கரடியயய்க் கத்தினாலும் பலனில்லை; அந்த அளவு அறிவோட்டம் நம்மிடையே குறைந்து அடிமை மோகம் கூடி, மூதிகத் தாக்கம் ஏறிக் கிடக்கிறது.

இதற்கு மாறாய்த் தமிழ் மூலம் காட்டுகின்றவர்களைப் பித்தர்கள், வெறியர்கள் என்றும் சொல்லி, அவர்களைக் காட்சிப் பொருள்கள் ஆக்கி, மூதிகத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களை எல்லாம் வல்லமையாளர்கள் என்று சொல்லி இங்கு பம்மாத்தும், குழறுபடியும் நடக்கின்றன. கேட்க ஆள் இல்லை. மொத்தத்தில் நாம் கடக்கவேண்டிய தொலைவு மிக அதிகம்.

எவனொருவன் பெருமிதம் தொலைத்தானோ, அவன் வாழ்நாள் முழுக்கவும் அடிமையாக இருக்கக் கடப்பட்டவன் ஆகிறான். சொந்தச் சிந்தனை வற்றிப் போகிறது.

அன்பிற்குரிய மயூரன்,

உங்கள் அழைப்பிற்கு நன்றி. அந்தக் குழுவில் சேர முயலுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

பொட்டிப் பாம்பு said...

நண்பர் இராம.கி

ஒருசில சொற்களின் தமிழ் பாவனை தேவை. மேலும் சில கேள்விகளும் உள்ளது. இது வழமையான பின்னூட்டத்தைவிட சற்று நீண்டது. மன்னிக்கவும்.


GAME:

முதலாவதாக, எனக்கு Club, Game போன்ற சொற்களுக்குத் தமிழில் ஈடான சொற்கள் தேவை. என்பதை விளையாட்டு என்று சொல்வது சரியாகத் தெரியவில்லை. Sports என்பதையும் விளையாட்டு என்று சொல்லி கேம்(game) என்பதையும் விளையாட்டு என்று சொல்வது கையையும் காலையும் ஒரேமாதிரி அழைப்பதுபோல் எனக்குத் தோன்றுது.


[Middle English, from Old English gamen.]

ஆங்கிலத்தில் உள்ள கேமுக்கு அதன் வேர் எங்கிருந்து வந்தது என்பது புதிராக உள்ளதாம். ஒருவேளை தமிழில் ஏதாவது காமன் என்ற சொல் கேம் என்று மாறிப் போச்சுதோ? கமம் என்ற சொல் உண்டு, காமம் என்ற சொல் உண்டு, காமதேனு என்ற சொல் தமிழில் உண்டு, கமான் என்பது இருந்திருக்க வாய்ப்பில்லையா?

ஆங்கிலத்தில் உள்ள மங்கி என்ற சொல்லுக்கும் அதன் வேர் எங்கிருந்து வந்தது என்று தெரியாதாம். ஆனால் நம்மிடம் மந்தி என்ற சொல் வழக்கில் உள்ளதன்றோ? :-)


CLUB:

மேலும் ஒருமுறை நீங்களே "அம்பலம்" போன்ற சொற்கள் கிளப்(Club) என்பதற்கு நிகரான சொற்கள் எனக் கூறியிருந்தீர்கள். கிளப் என்பதற்குத் தமிழ் என்ன நண்பரே?


SURGERY:

பண்டுவம் என்பது 'Surgery' என்ற சொல்லுக்கு ஈடானது என்று கூறியிருந்தீர்கள். ஆனால் மைய மன்றத்தில் காந்தி வாண்டையார் ஒருமுறை தன் பதிவில் சிகிச்சை என்பதும் தமிழ் என்பதை விளக்கியிருந்தார். அதை சிகிழ் + சை என்று அவர் பிரித்துக் கூறியதாக ஞாவகம். அதையும் சற்று விளக்கிவிடுங்கள்.


CHOPPER & HELICOPTER:

Terminal – முனையம், plane பறனை என்பதும் விளக்கினீர்கள். Helicopterஐ சுரினைப் பறனை, உலங்கூர்தி என்றும் அழைக்கலாம் என்றீர் நண்பரே. இதில் சொப்பர்(Chopper) என்பதை எவ்வாறு அழைப்பது? Helicopter என்பதை எவ்வாறு அழைப்பது?


RADAR [ra(dio) d(etecting) a(nd) r(anging)]:

ராடர் என்று தமிழ் மிடையங்களும் தங்கள் நாவை நீட்டுகினம்.

அதற்கு மாலா சுருக்கமாக வானொற்றி என்ற பெயரைப் பரிந்துரை செய்துள்ளார். நீங்கள் ஏதாவது சொல்லை பரிந்துரைக்க விரும்புகிறீர்களா நண்பரே?

[radar - வானொற்றி. வான்கண்காணிப்புக்கருவி.
- BISMALA in Unarvukal]


AIRPORT:

ஏய்ர்ப்போர்ட்டை வான்புகல் என்று அழைக்க நீங்கள் பரிந்துரைத்தீர்கள். செல்வி சிவமாலா அதை வான்துறை என்றும் சேர்த்து அழைக்கலாம் என்று கூறியுள்ளார்.

வான்புகல், வான்துறை இரண்டும் பெருவங்கியம், நாதசுரம் போன்றவையா? துறை என்பதுதானே போர்ட்ட என்பதற்கு ஈடான தமிழ் நண்பரே? புகலைப்போல் துறையையும் பாவிப்பதில் தவறில்லையே?

[airport - வான்துறை
- BISMALA]


MEDIA:

மிடையம் என்ற சொல்லை நீங்கள் பரிந்துரைத்தீர்கள். ஊடகம் என்பதை இன்றும் நம் தமிழர் இறுக்கிப் பிடித்துள்ளார்கள். ஊடகத்திற்கு ஈடான ஆங்கில 'media' என்ற சொல்லிற்கு கீழ்வரும் விளக்கமும் தரப்படுகின்றது.

IN BRIEF: A form or system of communication.
http://www.answers.com/media

அப்படியென்றால் ஊடகம் என்பதை நாங்கள் பாவிப்பதில் தப்பில்லையா?


TRAFFIC:

சைகை என்பதை துரப்பு என்று கூறியுள்ளீர்கள். இதற்கான சொல் விளக்கம் தருவீரா நண்பரே?

[Traffic - துரப்பு]


QUARK - ATOM:

குவார்க் என்பதை குவார்க்கு என்று தமிழில் அழைத்தீர்கள். அது தமிழா இல்லை ஆங்கிலத்தில் உள்ளதைத் தமிழ் வடிவத்தில் ஒலித்தீர்களா நண்பரே?

[Quark - குவார்க்கு]


NEUTRON & NEURON

நியூரோன்(neuron) என்பதை எவ்வாறு அழைக்கலாம் நண்பரே? நொதுமி என்று நியூற்றோனை(Neutron) அழைக்கலாம் என்றீர், நொதுமியை வேறு ஏதோ உடல் பாகத்திற்கும் பாவிப்பதாகக் கேள்வியுற்றேன்.

[Neutron - நொதுமி]


FM & AM:

பண்பலை என்று F.M. ஐ அழைக்கின்றனர். அப்படியென்றால் A.M. என்பதை எவ்வாறு அழைப்பது? பண்பலை என்பது சரியா?
Frequency - பருவெண்


ATOM:

அணு என்பதைவிட அதுமம்தான் சரி என்று நீங்கள் கூறியது ஞாவகம் உள்ளது. அப்படியென்றால் அணுவை எதற்குப் பாவிக்கலாம்?

[Atom - அதுமம் (அல்+துமம்; துமிக்க முடியாதது)]


----------------------------
திருவாதிரை தான் எகிப்தியரின் ஓரியன். கார்த்திகை தான் pleieades. ஆதிரைங்குற விதப்பான சொல்லே astra என்ற பொதுமைச்சொல்லுக்கு இணையா இருக்கு. மேலை மொழிகளில் star என்ற சொல்லுக்கு இணை இப்போத் தெரியுதா?
--------------------------

இது நீங்கள் கூறியது. நக்கத்திரம் என்பதே நட்சத்திரமாக மாறியதாக மாலா விளக்கியுள்ளார்.

நாட்காட்டி என்று நீங்கள் உங்கள் திரிகளில் குறிப்பிடுவது நட்சத்திரத்தைத்தானே? அச்ரோ என்பதிலிருந்து ச்டார் என்ற சொல் வந்தது என்றால், அந்த அச்ரோ என்பது தமிழ் ஆதிரையில் இருந்து வந்தது என்றால். தமிழில் நட்சத்திரங்களை ஆதிரைகள் என்று அழைக்கலாம் அல்லவா?//துறக்கன் = சொர்க்கத்தான்; இப்படி மேலே ஏகி மேவவும் முடியாது, கீழே பரவிப் பாவவும் முடியாது இருக்கும் துறக்கம் தான் திரிசங்கு சொர்க்கம் என்பது. (astronauts?)//

இது நீங்கள் முன்னர் ஒருமுறை கூறியது நண்பரே.

மற்றும் மேலே அச்ரோ(astro) என்பதன் வேரைத் தமிழில் நீங்கள் விளக்கியதைப் பார்த்தோம். அப்படியாயின் அச்ரோனற்(astronaut) என்பதை ஆதிரை வீரர் என்று அழைக்கலாமா?

திரிசங்குக் கதையில் விண்வெளி சென்ற தமிழர்களை எவ்வாறு அழைத்தனர் என்று ஏதாவது தெரியுமா நண்பரே?வணிகம், வியாபாரம், வர்த்தகம், பொதினம்

இவற்றுக்கு இடையில் உள்ள வித்தியாசம் மற்றும் ஒற்றுமைகள் என்ன?

Business Trade Commercial போன்ற சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் எவை?


MAYOR & MAJOR:

பெருஞ்சித்தாத்தனார் என்பவர் மேயர் என்பதை மேலர் என அழைக்கலாம் என்று பரிந்துரைத்தாராம். அண்மையில் நீங்கள் அரணவம் என்பதில் இருந்து இராணுவம் வந்ததென்பதை விளக்கியிருந்தீர்கள். மேலும் என்பதை மேவர் என அழைக்கலாம் என்றீர்கள்.

நகரபிதா என்று அழைக்கப்படும் மேயரையும் இராணுவ மேயரையும் எவ்வாறு தமிழில் அழைக்கலாம்? மேலும் இராணுவத்தில் புழங்கப்படும் லியூற்றினட், சார்யன், கலனல் போன்ற பதவிகளுக்கான தமிழ்ப் பெயர்களை நீங்கள் தருவதாக முன்னர் ஒருமுறை கூறினீர்கள் நண்பரே. அவற்றை எதிர்பார்த்து உள்ளேன்.


AIDS & HIV:
வேட்டை நோய்

தமிழில் AIDS நோயை வேட்டை நோய் என்று அழைத்ததாகவும். அந்த வேட்டை நோயில் பதின்மூன்று வகை இருந்ததாகவும் நான் ஒருசில தினங்களுக்கு முன்னர் அறியப்பெற்றேன். அதுபற்றி நீங்கள் ஏதாவது அறிவீர்களா நண்பரே?

எய்ட்சு(AIDS): வேட்டை நோய்
எச். ஐ.வி(HIV): ஏமக்குறைவு நோய்


நேரமுள்ளபோது எனக்குப் பதிலளிக்கவும். மிக்க நன்றி நண்பரே.

பொட்டிப் பாம்பு said...

இரவு தூக்கத்தில் எழுதியதால் பிழைகளை வடிவாகக் கவனிக்கவில்லை. எழுத்து மற்றும் வசனப் பிழைகளைத் திருத்திவிடுகிறேன். நன்றி

மேலும் பராதுருப்பு என்பதற்கு வான்குடைப் படையனிர் அல்லது குதிகுடைப் படையினர் என்று அழைக்கலாமா?

பரசூட் என்பதை வான்குடை, குதிகுடை என அழைக்கலாம் என்று செல்வி மாலா பரிந்துரைத்திருந்தார்.

நன்றி நண்பரே.

parachute - குதிகுடை. வான்குடை.


திரி என்பது திறட்டா(thread)? அப்படியென்றால் ரொ(topic) தலைப்பா? போரும்(Forum) என்பது மன்றமா, குழுமமா? கற்றக்கறி(Category) என்பது கட்டகக்கூறா அல்லது கட்டகமா?


போச்ட்(post) என்பது பதிவா?

இன்போர்மேசன்(Information) என்பது உள்ளுருமமா அல்லது தகவலா?

மட்டுறுத்துனர் மோடறேட்டர் (moderator) என்றால், அட்மினிச்ரேற்றர்(administrator) என்பதை எவ்வாறு அழைப்பது? அட்மின்(Admin) என்பதை எவ்வாறு அழைப்பது?

பின்னூட்டமிடும் கெச்ட்(Guest) என்போரை நாம் விருந்தினர் என்றா அழைக்கவேணும்? ச்பெக்ரேரற்றர்(Spectator) என்பது பார்வையாளர் என்றால் வியூ(View) என்னும்போது நோக்கு என்றா சொல்வது? காட்டாக வியூ திச் பைல்(View This File) என்றால் இந்தக் கோப்பைப் பார் என்பதா இல்லை நோக்கு என்பதா?

பைல்(File) என்பதற்கும் போல்டர்(Folder) என்பதற்கும் எந்த தமிழ் சொற்களைப் பாவிக்கலாம்?

கொன்றோல் பனல்(Control Panel) என்பதை எவ்வாறு அழைக்கலாம்? மை கொன்றோல்(My Control) என்பதை எவ்வாறு அழைக்க? மை அசிச்ரன்ற்(My Assistant) என்பதை எவ்வாறு அழைக்க? றீபிறச்(Refresh), றீசெற்(Reset), றிவியூ(Review), குயிச்(Quiz), அற்றாச்(Attach), செற்றிங்(Setting) மற்றும்

தி ச்ரோற் இச் ஓப்பின்(The Store is Open) என்பவற்றை எவ்வாறு அழைக்க? (கடை திறந்திருக்கு என்று சொன்னால் சரியா? )----------------------------------
//என்பதை விளையாட்டு என்று சொல்வது சரியாகத் தெரியவில்லை.//

கேம் 'Game' என்பதை விளையாட்டு என்று சொல்வது சரியாகத் தெரியவில்லை.


//Helicopterஐ சுரினைப் பறனை, உலங்கூர்தி என்றும் அழைக்கலாம் என்றீர் நண்பரே. //

Helicopterஐ சுரினை, உலங்கூர்தி என்றும் அழைக்கலாம் என்றீர் நண்பரே.


//துறை என்பதுதானே போர்ட்ட என்பதற்கு ஈடான தமிழ் நண்பரே? //

துறை என்பதுதானே போர்ட்(port) என்பதற்கு ஈடான தமிழ் நண்பரே?


//பெருஞ்சித்தாத்தனார் என்பவர் மேயர் என்பதை மேலர் என அழைக்கலாம் என்று பரிந்துரைத்தாராம். //

பெருஞ்சித்தாத்தனார் என்பவர் மேயர்(Major) என்பதை மேலர் என அழைக்கலாம் என்று பரிந்துரைத்தாராம்.

//மேலும் என்பதை மேவர் என அழைக்கலாம் என்றீர்கள். //
மேலும் 'Major' என்பதை மேவர் என அழைக்கலாம் என்றீர்கள்.


//அந்த வேட்டை நோயில் பதின்மூன்று வகை இருந்ததாகவும் நான் ஒருசில தினங்களுக்கு முன்னர் அறியப்பெற்றேன். //

அந்த வேட்டை நோயில் 26 வகை இருந்ததாகவும் நான் ஒருசில தினங்களுக்கு முன்னர் அறியப்பெற்றேன்.


நன்றி நண்பரே

தமிழ்க் குறும்பன் said...

//சுவை என்ற சொல்லிற்கு வேரே "சொவச் சொவ", "சவச் சவ" என்ற ஒலிக்குறிப்புத்தான். அப்படித்தான் சவைத்தல், சொவ்வுதல், சுவைத்தல் என்ற சொற்கள் எல்லாம் தமிழில் கிளைத்தன. //

சவ என்பதிலிருந்துதான் சவ்வு என்பது வந்ததா? சவம் என்று இறந்த உடலை ஈழத்தில் அழைப்போம். சவத்தை வைக்கும் பெட்டி சவப்பெட்டி என்றும் அழைப்பர்.

சவத்தை என்று அருவருப்பைக் குறிப்பிடும் சொல்லும் உண்டு.

சவ என்பதற்கும் சவர்க்காரம் என்பதற்கும் தொடர்புள்ளதா?

இதோடு ஒலி ஒப்புமையுடைய ஆங்கிலச் சவல்(shovel) என்ற சொல் சவ என்ற தமிழ்வேர் அடிப்படையில் பிறந்ததாக தோன்றியிருக்குமோ?

Shovel: [Middle English, from Old English scofl.]//"மூஞ்சி தமிழ் என்றால், பின் மூசியும் தமிழ் தான்" என்று இக்குப் போட்டுச் (if condition) சொன்ன உரையை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.//

இப்பவும் மூஞ்சூறு என்ற ஒருவகை எலி உள்ளதே. இது வயல்களில் உள்ள வளையில்(புற்றில்) வாழும்.//தோய்தல் - "நிலத்துப் பதிதல், செறிதல், அணைதல், உறைதல், கலத்தல், பொருத்துதல், கிட்டுதல், ஒத்தல், அகப்படுதல், நட்டல், துவைத்தலிடுதல்" //

தோய் என்ற வேருக்கும் தோரணம் என்ற சொல்லிற்கும் ஏதாவது தொடர்புள்ளதா? தோரணத்தில் ஈக்கின்(காம்பின்) இருபக்கத்தில் உள்ள ஓலையை வெட்டி மடித்து(அணைத்து?) செய்வார்கள். மொத்தமாக மூன்று அல்லது நான்கு மடிப்பு ஒரு தோரணத்தில் இடம்பெறும். சிலவற்றில் கூட மடிப்பு இடம்பெறும்.

தோய் + அணை என்று தோரணம் வந்ததா? அல்லது தொய் என்ற வேறு வேர்களில் தோன்றியதா? ^_^


நன்றி நண்பரே

ரவிசங்கர் said...

பொட்டிப் பாம்பு -

thread - திரி, இழை
topic - தலைப்பு
post - இடுகை
admin - நிர்வாகி
forum - மன்றம்
group - குழுமம்
category - பகுப்பு
administrator, admin - நிர்வாகி
guest - விருந்தினர்
view - பார்க்க
spectator - பார்வையாளர்
file - கோப்பு
folder - அடைவு
control panel - கட்டுப்பாட்டகம்
my control - என் கட்டுப்பாட்டகம்
my assistant - என் உதவியாளர்
refresh - மீளேற்று
reset - மீளமை
review - திறனாய்வு, திறனாய்க
quiz - புதிர்
attach - இணைப்பு, இணை
setting - அமைப்பு

store is open - கடை திறந்து இருக்கு (ஏங்க, இது எல்லாமா கேப்பாங்க..கிண்டலுக்குக் கேக்குறீங்களா :))

ரவிசங்கர் said...

உங்கள் பின்னூட்டப் பக்கத்தில் இருந்து முந்தைய பின்னூட்டங்களைப் பார்க்க pop-up பெருந்தடையாக இருக்கிறது. தயவுசெய்து இதையும் முழுப்பக்கத்தில் திறக்குமாறு மாற்ற வேண்டுகிறேன்

Anonymous said...

அற்புதமான சொல்லாய்வு ஐயா, இதுவரை நான் பார்த்த பரிந்துரைகளில் "Digital" மிக பொருத்தமான பரிந்துரை இதுவே. அனால் "அன்னல்" என்பதை "அன்ன" என்று சொல்வதால் "அன்ன" பறவையுடன் குளப்பம் எற்படும் என்று தோன்றுகிறது.

பச்சைக் குழந்தை said...

இராமகி, கொன்றோல்(control) என்ற சொல்லிற்கு ஆங்கில அகராதியில் பின்வரும் விளக்கம் தரப்படுகின்றது.

(Middle English controllen, from Anglo-Norman contreroller, from Medieval Latin contrārotulāre, to check by duplicate register, from contrārotulus, duplicate register : Latin contrā-, contra- + Latin rotulus, roll, diminutive of rota, wheel.)

அதைவைத்து கோன் (அரசன், கட்டியக்காரன்) மற்றும் உருள் என்ற சொல்லையும் இணைத்து, கோன்றுருள் இடையில் 'ரு' வை ஏதாவது முறையில் ஒழித்துக்கட்டி கோன்றுள் என்று தமிழில் அழைக்கலாமா?

கோன்றுள் = control?ரவிசங்கர், நீங்கள் தந்துதவிய சொற்களுக்கு நன்றி.


//store is open - கடை திறந்து இருக்கு (ஏங்க, இது எல்லாமா கேப்பாங்க..கிண்டலுக்குக் கேக்குறீங்களா :)) //

ஓப்பின்(Open), குளோச்ட்(Closed) என்று கடைகளின் முன் தொங்க விடுவார்களே. அவற்றுக்கு இணையாகத் தமிழில் எதைப் பாவிக்கலாம்?

திறந்துள்ளது? மூடியுள்ளது? என்றால் ஏதோ இட்டுமுட்டாக இருக்கின்றது. அதுதான் வினவினேன்.

நன்றி

Radhamadal@gmail.com said...

இராம.கி அவர்களே,
வணக்கம்.
அருமையான சிந்தனை, ஆய்வு.
இனிமையான கட்டுரை அமைப்பு.
தொடர்ந்து மேன்மேலும் உங்களின் தமிழ்ப்பணி, தமிழ்மக்கட்பணி வளர்க. வாழ்க.
அன்புடன்
இராதாகிருஷ்ணன்
ஜூன் 12, 2007.

ரவிசங்கர் said...

பொட்டிப் பாம்பு தான் பச்சைக் குழந்தையா :)

நீங்க சொன்ன மாதிரி கோன்றுள் என்றெல்லாம் சொல் ஆக்க முடியுமா தெரியல. நிச்சயம் தமிழ் வேர்களில் இருந்தே நல்ல சொல் ஆக்க முடியும். எல்லாத்துக்கும் ஆங்கிலச் சொல் பார்த்து தான் தமிழாக்கணும்னு இல்ல.

நீங்க open / closed னு ஒற்றைச் சொல் கேட்டீங்களா? திறந்திருக்கு, மூடி இருக்குன்னு சொன்னா விவகாரம் ஆகிடும் தான் :) நேரடியா மொழிபெயர்க்கணும்னு அவசியம் இல்ல. நம்ம மக்களுக்குப் புரிந்த சொற்களை பயன்படுத்தலாமே? எடுத்துக்காட்டுக்கு, open என்பதற்கு "வருக"ன்னு எழுதலாம். closedக்கு ஒற்றைச் சொல் கொஞ்சம் யோசிக்கணும் தான். "முடிந்தது"னு சொன்னா பொருந்துமா? வேற தோணுச்சுன்னா சொல்றேன்,

தொழில்நுட்பம் இணையம் said...

RADAR ஏன்கிற ஆங்கில சொல்லிற்கு கதிரலைக் கும்பா என்கிற தமிழாக்கம் பிரபலமாக உள்ளது. இச்சொல் திண்ணை இணைய தளத்தில் முதல் உபயோகிக்கப்பட்டது.

மேலும் காண்க
GEOCITIES.COM/TAMILDICTIONARY/aviation.

தொழில்நுட்பம் இணையம் said...

TAMIL VLSI GLOSSARY
தமிழ் ஒருங்கிணைப்பியல் அருஞ்சொற்பொருள்
TAMIL ASIC DESIGN GLOSSARY
தமிழ் குறிப்பயஞ்சில்லியல் அருஞ்சொற்பொருள்
www.geocities.com/tamildictionary/vlsi/

தொழில்நுட்பம் இணையம் said...

தமிழ் சுற்றுப்பலகையியல் அருஞ்சொற்பொருள்/
TAMIL PCB DESIGN GLOSSARY
www.geocities.com/tamildictionary/pcb

TAMIL DATASHEETS said...

தமிழ் தரவுத்தாள் தளம்

தமிழின் முதல் மின்னனுவியல் கருவூலம்

TAMIL ELECTRONICS DATASHEETS
www.tamildata.co.cc

தமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம் said...

தமிழ் தரவுத்தாள் தளம்
www.tamildata.co.cc