2 மாதமாய் காலைநேர நடையில் ஒழுங்காய்ப் போய்க்கொண்டு இருக்கிறேன். என் மனையாளும் இந்நடையில் கொஞ்ச நாட்களாய் சேர்ந்து கொள்கிறாள். இருவரும் பேசிக்கொண்டே நடந்தோம்.
அப்போது என் மனையாள், "இதுவரை குறைஞ்ச வட்டி கொடுத்த வங்கிகள்லாம், இப்ப வைப்பு வட்டி வீதத்தை (deposit interest rate) 8.5% / 9.0% ன்னு ஒயர்த்திக்கிணே போறாகளே, அது எப்படி முடியுது?" என்று கேட்டாள்.
"மேலோட்டமாய்ச் சொல்ல முடியாதும்மா. விளக்கமாச் சொன்னாத் தான் புரியும். நீ கேட்ட கேள்விக்குள்ள, இந்தக் காலப் பொருளியற் சூள்க்குமமே அடங்கி இருக்கு" என்றேன் நான்.
"கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்க", என்றாள் அவள்.
"போன வருசம் வாங்கிய அதே பொருளை, இந்த வருசம் வாங்கணும்னா, அதே அளவு பணம் போதுமா?" - அப்படின்னு எதிர்க்கேள்வி கேட்டேன்.
"அதெப்படிப் போதும்? விலைவாசி ஏறியிருக்குல்லே?" - இது அவள்.
"இந்த விலைவாசி ஏறினதைத் தான் பொருளியல்லெ பணவீக்கம்னு சொல்றது. போன வருசம் பொருள்வாங்க 100 உருவாய் போதும்னா, இந்த வருசம் அதே பொருளெ வாங்க, 106 உருவாய் தேவைப்படுதாம்னு புள்ளியியல்லெ சொல்றாக. (ஒரு நாலைந்து மாசங்களுக்கு முன்னாலே 105 உருவாய் இருந்தாலும் போதும்.)
"அப்படின்னா, என்ன அருத்தம்?"
"போன வருசத்து 100 உருவாய்க்கு இந்த வருச மதிப்பு, 100/106*100 = 94.34 ஆக, குறைஞ்சு போச்சுன்னு அருத்தம். இப்படியே போனா, அடுத்த வருச மதிப்பு இன்னும் குறைஞ்சிரும்னு அருத்தம். சுருங்கச் சொன்னா, பணத்தோட மதிப்பு, வருசா வருசம் குறைஞ்சுக்கிட்டே வருது. இப்படித் தொடர்ச்சியாக் குறைஞ்சா, யாராச்சும் பணத்தை வங்கிலெ போடுவாகளோ?"
"போட மாட்டாக; யோசிப்பாக"
"இப்ப, வங்கிங்கிறது என்ன? நம்மளைப் போல ஆளுகள்ட்டேர்ந்து வைப்பு நிதியாப் பணத்தை வாங்கி, தேவைப்படுறவகளுக்குக் கடனாக் கொடுக்கிறது தானே வங்கியோட வேலை, இல்லையா?"
"ஆமா"
"நம்மளெப் போல ஆளுகள் வங்கிலே பணம் போடத் தயங்குனா, அப்புறம் கடன் கொடுக்குறதுக்கு அவுக எங்கே போவாக?"
"கடுசு தான்"
"அதனாலே 'வைப்புநிதி வட்டியை நாங்க இனிமெக் கூட்டிக் கொடுக்கிறோம், தயங்காம வைப்புநிதிலே உங்க பணத்தைப் போடுங்க'ன்னு அவுக நமக்குச் சொல்றாக. அவுக சொல்றதைக் கேட்டு, 8.5% வட்டிக்கு ஆசைப்பட்டு, நாமளும் வைப்புநிதிலே பணம் போடப் பார்க்கிறோம். இப்படியே எல்லோரும் செய்ஞ்சா, போன வருசம் வரைக்கும் அஞ்சல் துறையுலே, 8% வட்டிலே, வைப்புநிதி வச்ச கூட்டமெல்லாம், 'மாறுடா சாமி'ன்னு வங்கிகளுக்குப் போயிரும். வங்கிகள் இதோட விடுமான்னா, விடாது"
"மேற்கொண்டு என்ன செய்வாக?"
"அவுக கடன் கொடுக்குறாக, இல்லையா, வீட்டுக் கடன், வண்டிக் கடன், வணிகக் கடன், தொழிற்கடன் இப்படிப் பலது; அது எல்லாத்துக்கும் வட்டியைக் கூட்டுவாக;
"அப்படியா?"
"ஆமா. உனக்குத் தெரியுமோ? வைப்பு வட்டிவீதம் 9% க்கு இணையா, கடன் கொடுக்கிறதுக்கான பெருமிய வட்டி வீதமும் (prime lending rate) 10.75% ஆ ஆயிருச்சு. இந்த ரெண்டுக்கும் இடைப்பட்ட இடைவெளி, இதைப் பரத்துன்னு (spread) பொருளியல்லெ சொல்லுவாக, 1.75% ஆயிருச்சு; அப்படி ஒரு பரத்து இருந்தாத் தான், அவுகளாலெ வங்கி நடத்த முடியும். ஏன்னா, அவுகளுக்கும் ஆளு பேரு வேலை செய்யுறாக, சம்பளம் கொடுக்கோணும், நுட்பியல் (technology) வசதிகள் இருக்கு, கட்டட வாடகை இன்னும் ஏதேதோ செலவுகள்; இதுபோக பொலுவுன்னு (profit) ஒண்ணு இருக்குல்லே."
"அது எப்படிங்க, 10.75% க்குக் கடன் வாங்குறவுக திருப்பி பணத்தைக் கட்ட முடியும்? ரொம்பக் கூடுதலாவில்லெ இருக்கு"
"கூடுதல் தான்; இப்படிக் கடன்வட்டிக் கூடுறதாலேயும், உள்ளமைத் திட்டின் (real estate) விலையும் கூடி வர்றதாலெ, வீட்டுக் கடன் வாங்குறதும் குறைஞ்சுக்கிட்டே வருதாம். எப்படி முடியும், சொல்லு? ஒரு 1000 சதுர அடி அடுக்கு வீடு, சென்னை நகரத்துக்குள்ளே இப்ப 30 லெச்ச உருவாய் விக்குது. 10.75% வட்டிக்கு வீட்டுக் கடன் வாங்குனா, மாசம் 26875 உருவாய் இல்லெ கட்டணும்? இவ்வளவு வட்டியை உள்ளுருமத் தொழில்லெ (Information industry) வேலை செய்யுறவுகளாலே கூடக் கட்ட முடியாதுல்லே; இதனாலே கடனுக்கான மொத்தக் காலத்தைக் கூட, இப்ப 20- லேர்ந்து 25 ஆண்டுகளா, 30 ஆண்டுகளா, ஆக்கிப் பார்க்குறாக. கடன் வாங்க ஆள் குறைஞ்சு போனா, எல்லா வங்கியும் எப்படிச் சரி பண்ணுறதுன்னு தெரியாம முழிக்கிறாக"
"மேலே என்ன ஆகுங்க?"
"வீட்டுக் கடன் வாங்குறதுலெ இருக்குற சரவல் ஒரு பக்கம் இருக்கட்டும்; 10.75% லெ கடன் வாங்கி வீடு கட்டுறவுக, வண்டி வாங்குறவுக எல்லாம் கணிசமானவுகன்னாலும், வங்கிலேர்ந்து பெரும்பகுதிக் கடன் வணிகக் கடன், தொழிற்கடன் வாங்குறவுகளுக்குத் தான் போகுது. இவுகல்லாம் 10.75% கடன் வாங்குனா, இவுகளோட பரத்தும் சேர்த்தா, இவுகளுக்கு நிகர ஆதாயம் (net income) கூடோணும் இல்லையா? அப்ப, அவுகளோட மொத்தப் பொலுவு 13% ஆவது ஆகோணும், இல்லையா? ஆகலைன்னா, அவுகளாலே தாக்குப் பிடிக்க முடியாமப் போயிறலாம்."
"அவுக என்ன பண்ணுவாக?"
"அவுக என்ன பண்ணுவாக? விலையைக் கூட்டுவாக. இப்ப ஓர் எடுத்துக் காட்டுக்குச் சொல்றேன். நாங்கள்லாம் வேதித் தொழில்லே (chemical industry) இருக்கோம். இதுலே பெரும்பாலான இயல்பொருட்கள் (raw materials) கரட்டுநெய்யை (crude oil) வச்சுத் தான் வருது. கரட்டுப் பாறைநெய் (crude petroleum) விலை இப்ப ஒரு பீப்பாய்க்கு 53 அமெரிக்க வெள்ளின்னு இருக்கு; பொதுவா, இந்தத் தொழில்லே எந்தக் காலத்திலும் 13%-15% தான் பொலுவு கிடைக்கும். இந்தப் பொலுவிலேயும் ஏற்ற இறக்கம் உண்டுன்னு வை. ஆனா, நிரவலாப் (average)பார்த்தா, 13-15% தான் கிடைக்கும். ஒரு பக்கம் கூடுன விலையிலே கரட்டுநெய், இன்னொரு பக்கம் கூடிப்போன கடன் வட்டி வீதம்னா, வேறே வழியில்லாம வேதித் தொழில்காரங்க அவுகளோட புதுக்குகளோட (products) விலைகளைக் கூட்ட வேண்டியது தான்.
"இது என்னங்க கூத்தா இருக்கு, விலையேற்றத்துலே தொடங்கி, விலையேற்றத்துலெ முடியுறதா?"
"ஆமா. விலையேற்றம் > பணவீக்கம் > வைப்பு வட்டி உயருகை > கடன் வட்டி உயருகை > மீண்டும் விலையேற்றம். இது ஒரு சுற்றுப் போலே போய்க்கிட்டே இருக்கு. என்ன ஒரே பரப்புலே இருக்குற புரிகைச் சுற்றாட்டம் (spiral cycle) இது இல்லை; திருக்கைச் சுற்றாட்டம் (helical cycle) இருக்கு. ஒரு சுற்று, அதுக்கு மேலே இன்னோரு சுற்றுன்னு இது உசந்துக்கிட்டே போகும். நான் இச் சுற்றுக்களைச் சுருக்கமாச் சொன்னேன். கரட்டுநெய்யோட பாதிப்பு நெடுகவே இருக்கு; அதோட உலக வாணிகம், தாரளமாக்கல், அப்படின்னு பல காரணிகள் உள்ளே புகுந்து வேலை செய்யும்."
"என்னங்க இது, சரியில்லையே?"
"ஆமா, சரியில்லே தான். ஆனா, அது தான் உள்ளது (reality). இப்ப, ஒரு தஞ்சாவூர் பொம்மை இருக்கு. அதை அப்படி இப்படி ஆட்டி விடுறே, ஆனாலும் குப்புறக் கவிழாம, பழைய நிலைக்கே அது திரும்பி வந்துருதுல்லே.
"ஆமா"
"அந்தக் கவிழாத உறுதி நிலைக்குத் திட நிலைன்னு (stable state) பேரு. திடம்கிறதுக்கும் திண்மைக்குறதுக்கும் கொஞ்சமா வேறுபாடுண்டு. பல பேர் ரெண்டையும் ஒண்ணுன்னு நினைச்சு சொல் மாறிப் பயன்படுத்துறதுண்டு. திணிச்சு, நெருங்கி இருக்கிற நிலை திண்ம நிலை (solid state); எந்தப் பொருளும் அசைக்கிற போது கவிழாம நிலைகொண்டு இருக்கிறது திட நிலை. எந்தப் பொருளையும் அசைச்சா, மீண்டும் திட நிலைக்கு வந்து சேர்றதுக்கு ஒரு திட(த்தன்)மை இருக்கோணும். ஒரு பொருளோடெ எடை தன்மயமாக் குவிஞ்சு ஒரு கருப்புள்ளிலே (centre of gravity) இருக்கிறதா நாம இந்தத் திடத் தன்மையைப் புரிஞ்சிக்கிறோம். இந்தக் கருப்புள்ளி அந்தப் பொருள் இருக்கிற தளத்துலேர்ந்து பார்த்தா, எவ்வளவு உயரம் குறைச்சு இருக்கோ, அந்த அளவுக்கு அப் பொருளைத் தட்டி விட முடியாது; தானாத் திட நிலைக்கே திருப்பி வந்து சேர்ந்திரும். இந்தத் தன்மையைத் திடமைன்னு (stability) அறிவியல்லே சொல்லுவாக சில பொருள்களுக்கு திடமைங்குறது அமையாம, இயல்பாவே திடவாமைங்குறது (instability) அமையலாம். வெறும் காற்றிலே, பொதுக்குன்னு விழுந்திரலாம்."
"பார்த்தீங்களா, உங்களை விளக்கச் சொன்னா, எனக்குப் புரியாம ஏதேதோ சொல்லி வகுப்பெடுக்கிறீக. தஞ்சாவூர் பொம்மை மட்டும் தான் எனக்குத் தெரியும். அதெ வச்சே நான் புரிஞ்சிக்குறேன்."
"வகுப்பெடுக்கலைம்மா, ஒவ்வொரு பொருளுக்கும் இப்படித் திடமைங்குற குணம் உண்டு, தஞ்சாவூர்ப் பொம்மைக்கு எக்கச் சக்கமான திடமை உண்டுன்னு விளங்குறதுக்காகக் கொஞ்சம் நீட்டிச் சொன்னேன். அவ்வளவு தான். பொதுவாச் சொன்னா, ஒவ்வொரு கட்டகத்துக்கும் (system) வேண்டிய அளவு திடமை இருந்தாந் தான், அதது நிலைச்சு நிற்கும்."
"அப்ப இக்காலப் பொருளியlல்லெ திடவாமை தான் பெரிசா இருக்குங்குறீக?"
"என்ன பண்ணுறதும்மா? திடவாமை நிறையவே இருக்குன்னு தான் நான் சொல்லோணும். இப்ப நீ ஏதோ ஒண்ணு சொல்றே. நன் அதெக் கேட்டுக் கோவப்படுறேன்; சத்தம் போடுறேன்; நீயும் கோவப்பட்டுத் திருப்பிச் சத்தம் போட்டு, ரெண்டு பேரும் உச்சக் குரல்லே பேசிக்கிணே போனம்னா, அது சரியா வருமா? யாராவது ஒருத்தர் தணிஞ்சு போய், பதவிசாச் சொல்லிப் புரிய வச்சாத் தானே, இருக்கிற சிக்கல் தீரும். அதெ விட்டு ரெண்டு பேரும் மாறி மாறி கோவத்துலெ பேசுனா, சரி வருமா? அதாவது கோவத்துக்கு கோவம் மறு மொழி ஆகாது, பின்னூட்டு ஆகாது, இல்லையா? அதே போல விலையேற்றத்து விளைவா விலையேற்றமே வந்து சேர்ந்துதுன்னா, அது ரெண்டும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் பொதிவுப் பின்னூட்டு (positive feedback) ஆகி, மேலும் மேலும் விலையேற்றம் தானே வரும்? இது சரியாகணும்னா, தொடக்கம் விலையேற்றமா இருந்து, முடிவு விலைக்குறைப்பா இருக்கணும். அப்படி இருந்தா, இந்தப் பொருளியற் கட்டகம் (economic system) திடமையோடெ இருக்குன்னு சொல்லலாம்.
அப்படின்னா, நம்ம பொருளியலைத் திட நிலைக்கு எப்படித் தான் கொண்டு வர்றது?"
"அதுக்குத் தான் அரசாங்கம் ஊடே வந்து, வரிகளையும், தீர்வைகளையும் குறைச்சுப் பார்க்குது. போனவாரம் கூடச் சிதம்பரம் சில சுங்க வரிகளைக் குறைச்சார்; ஒரு நாலைஞ்சு நாளிலிலே பணவீக்கம் 5.95% ன்னு ஆனுது."
"அப்புறம் என்னங்க, இனிமேச் சரியாயிறாதா?"
"இல்லைம்மா, சரியாகாது. இதெல்லாம் வெறும் பூச்சு வேலை. பல பொருளியல் அறிஞர்கள் இதுபற்றி ஆராய்ஞ்சிருக்காங்க; அரசாங்கம் வரிகள் வழியாப் புகுந்து விளையாடுறதுக்குக் கொஞ்சம் தான் வழி இருக்கு. திருப்பித் திருப்பி முதலாளியப் பொருளியல் இந்தப் பொதிவுப் பின்னூட்டில் மாட்டிc சீரழியும். அது அடிப்படையிலே மாறுனாத்தான் ஏதேனும் தீர்வு கிடைக்கும். முதலாளியப் பொருளியலின் அடிப்படைச் சிக்கல்களில் இதுவும் ஒண்ணு."
வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டோம். என் மனையாளுக்குப் புரியும் மாதிரி நான் சொன்னேனா என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் இது முகன்மையான பொருளியற் சிக்கல்களில் ஒன்று. தமிழில் உங்களுக்குத் தர முயன்றுள்ளேன்.
அன்புடன்,
இராம.கி.
3 comments:
எனக்கென்னவோ தஞ்சாவூர்ப் பொம்மைதான் விளங்கிச்சு. உங்கள் தமிழில் பிழையில்லை.. நீங்கள் பேசியது வங்கிபற்றியல்லவா.. அதுதான்.. கடன்காரனைத் தளம்ப வைச்சிட்டு.
"உன் பணம் பணம் என் பணம் பணம் உன் பணம் என் பணம்"
கரட்டு நெய்க்கும் கரட்டுப் பாறை நெய்க்கும் என்னங்க வித்தியாசம்.. (இடையிலை இருக்குற பாறைன்னு சொல்லவேணாம்.. எனக்கு முழு விளக்கம் வேணும் :D)
அன்பிற்குரிய பரம்பரைக் கடன்காரருக்கு,
உங்கள் வரவிற்கு நன்றி. கரட்டு நெய் என்பதையும், கரட்டுப் பாறை நெய் என்பதையும் பின்னால் ஆங்கிலச் சொல்லைக் குறித்துத் தந்திருந்தேனே?
கரடு என்பது துளிவிப்பின் (distillation) மூலம் பிரிக்கப் படாத பாறைநெய். (கரடு முரடானவன் என்ற சொல்லாட்சியைப் பார்த்தால் நான் சொல்லுவது புரியும். பண்படாத நிலை கரட்டு நிலை.)
பாறைநெய் என்பது நிலத்திற்கு அடியில் எடுக்கப் படுவது. பாறை நெய் என்பதை petroleum என்பதற்கும், கல்நெய் என்பதை petrol (gasoline) என்பதற்கும், மண்ணெய் என்பதை (kerosene) என்பதற்கும், வளி நெய் என்பதை gas oil என்பதற்கும், இன்னும் இது போன்ற பல சொற்களை என்னுடைய முந்தையப் பதிவு ஒன்றில் குறித்திருந்தேன். பழைய பதிவுகளில் படித்துப் பாருங்கள். திரு. சிமுலேசன் கூட அது பற்றிப் பேசியிருந்தார்.
இந்தக்கால refineries பற்றித் தமிழிற் பேச வேண்டுமானால் நமக்குப் பல புதிய நுட்பச் சொற்கள் வேண்டும். வெறுமே சுத்திகரிப்பு என்ற இருபிறப்பிச் சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு எத்தனை நாள் ஈ ஓட்டுவது? அப்படிச் செய்தால், "வேதித் தொழிலைத் தமிழில் சொல்ல முடியாது" என்று சிலர் சாமி எடுத்து ஆடுவார்கள்; சாவம் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள்.
இவர்களுக்கு நம் மொழியின் இயலுமையை புரிய வைப்போம்.
அன்புடன்,
இராம.கி.
கருப்பு பணத்தின் லீலைகள்
வருமான வரி, விற்பனை வரி மற்றும் இதர வரிகளின் சுமை மிக அதிகம். அதனால் மிகப் பெரும்பான்மையோர் வரி ஏய்ப்பு செய்கின்றனர். வரி வலையிருந்து தப்பும் பணம் கருப்பு பணமாகிறது. வரி ஏய்ப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் லஞ்சமாகப் பெறும் பணமும் இக்கருப்பு பொருளாதாரதில் சேர்கிறது.
கருப்பு பணத்தை பாதுகாக்க குறுக்கு வழிகள் உள்ளன. பிணாமி நபர்களிடம் கொடுத்தல், ரியல் எஸ்டெட், பஸ் ரூட், மற்றும் பல இடங்களில் பதுக்குவார்கள்.
காஞ்சி மடம் சீரழிந்தது கருப்பு பண நன்கொடைகளால்தான். அவ்வகையில் வரும் பணம் கணக்கில் வராததால், நிர்வாகிகளால் இஷ்டம் போல் செலவு செய்ய முடிந்தது. விளைவுகளை நாடறியும்..
தொழில் கூட்டாளிகளை, நிர்வாகதில் இருக்கும் கூட்டாளி ஏமாற்றுதல் ; காசாளர் மற்றும் நிர்வாகிகள் கடை பணத்தை திருடுதல் போன்றவை பெருக முக்கிய காரணம், பெரும்பாலும் வியாபரம் கருப்பில் நடப்பதால்.. மொத்ததில் நேர்மை குறைந்து திருட்டுதனம் நாடு முழுவதும் பரவி விட்டது.
கல்வி நிறுவனங்கள், அரசியல், சினிமா, ரியல் எஸ்டெட், பஸ் ரூட், நகை வியாபாரம், கந்து வட்டி, விபச்சாரம் போன்றவைகளில் கருப்பு பணம் விளையாடுகிறது. யாரும் கவலை படுவதுமில்லை, பயப்படுவதுமிலை.
வரி ஏய்ப்பு செய்யும் மக்கள், கொஞ்ச் கொஞ்சமாக அனைத்து சட்டங்களையும் மீற முற்படுகின்றனர். அதனால், அனைத்து துறைகளிலும் நேர்மை வெகுவாக குறைகின்றது. அனைத்து வகை வரிகளின் விகித்தை வெகுவாக குறைத்தால் மட்டுமெ நிலமையை சீராக்க முடியும். அதற்கு அரசின் வெட்டி செலவுகளை கடுமையாக குறைக்க வேண்டும். நடக்கற காரியமா ? சொல்லுங்கள் ?
http://nellikkani.blogspot.com/
Post a Comment