Friday, January 12, 2007

தானமும் கொடையும் - 1

"தானமும் கொடையும் ஒன்றா?" என்று நண்பர் கோவி.கண்ணண், சொல் ஒரு சொல் பதிவில் கேட்டிருந்தார். கேட்டதோடு அதுபற்றிக் கருத்துச் சொல்லும் படி, அங்கு அவர் அளித்த பின்னூட்டில் என்னை அழைத்திருந்தார். பாலை - தொடர்ச்சி என்ற என் பதிவை முடிக்க முயன்று கொண்டிருந்ததற்கு இடையில் இந்த அழைப்பு வந்தது. சரி, மறுக்க வேண்டாம், தெரிந்ததைச் சொல்லுவோம், என்ற எண்ணியதால் இந்த முயற்சி. சொல்லும் செய்தியைப் பின்னூட்டில் அங்கே தந்தால் நீண்டுவிடும் என்று கருதி, இங்கே தனிப் பதிவாக இடுகிறேன். நண்பர்கள் பொறுத்துக் கொள்வார்களாகுக.

தமிழ்ச் சொற்களைப் பற்றித் தொல்காப்பியர் பேசும் போது, "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்று தெளிவாகச் சொல்லுவார். தொல்காப்பியத்தின் படி, தமிழில் இடுகுறிச் சொற்கள் என்பன கிடையாது (ஆனால் நன்னூலாரோ அந்தக் கருத்தில் மாறுபட்டு இடுகுறிச் சொற்கள் தமிழில் உண்டென்பார்); நான் தொல்காப்பியர் வழி தமிழ்ச் சொற்களைப் பார்க்க முயல்பவன்; எனக்கு எல்லாத் தமிழ்ச் சொற்களுமே பொருண்மை உள்ளவைதான். "இந்தப் பொருண்மை என்பது சொற்களைச் சட்டென்று விழித்துப் பார்த்தால், தோன்றாது; கொஞ்சம் ஆழமாய்த் தேடிப் பார்க்கவேண்டும்" என்ற கருத்தில், தொல்காப்பியர் இன்னொரு இடத்தில், "மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா" என்றும் சொல்லுவார்.

ஆகப் பொருண்மை என்பது தேடாமல் கிடைக்காது. பொதுவாகச் சொற்களுக்குச் சொன்மை, பொருண்மை என்ற ஈர் இயல்புகள் உண்டு. "பார்த்தான்" என்ற சொல்லில் பார், த், ஆன் என்ற மூன்று கூறுகள் இருக்கின்றன, அல்லவா? ஆன் என்ற ஈற்றின் வழியாய் பேசுபவர் "படர்க்கை இடத்தில் இருக்கும் ஓர் ஆண்" என்ற குறிப்பும், த் என்ற இடைநிலை வழியாய், "வினை நடந்தது இறந்த காலம்" என்ற குறிப்பும் சொன்மையின் வெளிப்பாடுகளாய் அமையும். இனிப் பார் என்ற பகுதியின் வழியாய், கண்ணால் அறிந்ததைச் சுட்டுவது பொருண்மையின் வெளிப்பாடு ஆகும். இந்தப் புரிதலோடு, தானச் சொற்களுக்குத் தொல்காப்பியர் வழி நாம் பொருள் தேடலாம்.

கதிர், சுடர் என்று இருவர் இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே நடைபெறும் ஒரு பரிமாற்ற வினையில் இடம் பற்றிய குறிப்பைத் தமிழில் எப்படி விவரிப்பது என்பது தான் இங்கு முன்னிற்கும் கேள்வி.

பொதுவாக, வினை ஈற்றின் வழியே அறியும் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று இடங்கள் போக, உயர்ச்சி, ஒப்பு, தாழ்ச்சி என இன்னும் ஒரு மூன்று இடங்களை, தம் பகுதியின் வழியாக, ஒரு சில வினைச் சொற்கள் காட்டும். இதற்கு எடுத்துக் காட்டாய், சொல்லதிகாரம் எச்சவியலில் 444 ஆம் நூற்பாவில் ஈ, தா, கொடு என்று மூன்று கிளவிகளைப் பற்றித் தொல்காப்பியர்

ஈ,தா, கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைய

என்று பேசுவார். [கிளவி என்ற சொல் இன்று நம்மிடையே புழங்குவதில்லை. அதற்கு இணையாகச் சொல், மொழி என்பவற்றை இன்றையத் தமிழில் பயிலுகிறோம். கிளத்தல் = சொல்லுதல், பேசுதல், மொழிதல்.] முன்று காட்சிகளையும் விரிவாகப் பார்ப்போம்.

முதல் காட்சி:

இங்கே கதிருக்கு மிகுந்த பசி; அவர் கையில் காசில்லாதவர்; தாழ்வுற்ற நிலையில் உள்ளவர். சுடரோ செல்வம் மிகுந்தவர்; உயர்ந்தவர்; சுடரிடம் சோறு அதிகமாக இருக்கிறது. இதைச் சுடரிடம் இருந்து இரந்து (இரத்தல் = கேட்டுப் பெறுதல்) பெறும் போது, கதிர் எப்படிக் கேட்பார்? [இந்தத் தாழ்ச்சி என்பதைச் சரியாக நாம் புரிந்து கொள்ளவேண்டும். இது அகவை, அறிவு, பண்பு, செல்வம், உதவி, நன்றிக்கடன், தொண்டு, ஆளுரிமை ஆகிய ஏதோ ஒன்றால் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், பிறவிக்குல வேற்றுமை என்பது இதில் கிடையாது.]

"சோறு எனக்கு ஈ" (இங்கே பறவைப் பொருளை ஒதுக்கி ஈ என்பதை வினைச்சொல்லாய்ப் பார்க்க வேண்டும். ஈ என்ற வினை இன்று அரிதாகவே பயன்படுகிறது. பெரும்பாலும் வழு அமைதியாய் வேறு சொற்களேயே தமிழர் பயன்படுத்துகிறார்கள். ஈகை என்பது ஈதலில் இருந்து கிளைத்த பெயர்ச்சொல். "பாரி முல்லைக்குத் தேரை ஈந்தான்; அவனுடைய ஈகைக் குணம் இன்றும் போற்றுதற்கு உரியது" என்ற சொல்லாட்சிகளைப் பாருங்கள்.) இந்த ஈதல் என்ற வினை இழிந்தோருக்கு உரியது என்ற பொருளில் தொல்காப்பியச் சொல்லதிகாரம் 445 - ஆம் நூற்பா "ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே" என்று கூறுகிறது. [இழிந்தது என்ற சொல்லை நாம் இன்றையப் பொருள் கொண்டு பார்க்கக் கூடாது. இழிந்தது என்பது ஏதோ ஒன்றால் கீழே இறங்கிய நிலை; அவ்வளவு தான்.]

[ஒரு சிறு இடைவிலகல். இடுவது என்பது ஈகைப் பொருளில் வராது. இடுவது என்பது to place; to issue. கொஞ்சம் நீட்டி, அத்தகைய பொருளைக் கொடுப்பது சரியான பயன்பாடு அல்ல.]

இனி அடுத்த காட்சி:

இதில் கதிரும் சுடரும் ஒருவருக்கொருவர் ஒப்பானவர்கள்; நண்பர்கள் என்று கூட வைத்துக் கொள்ளலாம். சுடரைப் பார்க்கக் கதிர் வருகிறார்; அப்படி வரும் போது, எழுதுகின்ற தூவலைக் (pen) கொண்டு வர மறந்து போன கதிர், சுடரின் தூவலை, ஏதோ ஒன்றை எழுதுவதற்காக, இரந்து பெற விழைகிறார்; கதிர் இப்பொழுது எப்படிக் கேட்பார்?

"தூவலை எனக்குத் தா" இதைச் சொல்லுகிற தொல்காப்பியச் சொல்லதிகாரம் 446 - ஆம் நூற்பா "தாவென் கிளவி ஒப்போன் கூற்றே" என்று கூறுகிறது. (இங்கே தா விற்கு இருக்கும் மற்ற பொருள்களை ஒதுக்கிப் பார்க்க வேண்டும். தா என்ற வினைச்சொல் பெரிதும் புழக்கத்தில் இன்று இருக்கிறது. தரு/தா என்பதில் இருந்து கிளைத்த தருகை, தருவு>தரவு, தருவம்>தருமம், தானம் போன்ற சொற்கள் எல்லாம் பெயர்ச் சொற்கள். தரவு என்பதை இன்று பொருள் நீட்டி data என்பதற்குக் கூடப் பயன்படுத்துகிறோம். அதுவும் ஒருவகையில் சரிதான்.

data:
1646, pl. of datum, from L. datum "(thing) given," neuter pp. of dare "to give" (see date (1)). Meaning "transmittable and storable computer information" first recorded 1946. Data processing is from 1954. Database formed 1962, from data + base. தரு = to give (இந்த ஆங்கில வரையறைக் கவனித்தால் கூடத் தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் இருக்கும் உறவு புரியும். இது போன்ற பல சொற்களுக்கான உறவுகளை நானும் தான் சுட்டிக் காட்டிக் கொண்டே போகிறேன். ஆனால், முன்கருத்தில் தேங்கிப் போன பலரும் தங்கள் நம்பிக்கைகளில் இருந்து வெளியே வரமாட்டேம் என்கிறார்கள்; வடமொழி பற்றிய பழமை வாதங்களில் ஊறிப் போன அவர்கள், தங்களுடைய தேற்றங்களைத் தூக்கிப் போடத் துணிவில்லாமல், நைந்து போன கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.)

தருவம் என்பது தருமம் ஆவது தமிழ்முறைப் பலுக்கலில் மிகவும் எளிது. தருமம் என்ற சொல் தூய தமிழ் தான். இந்தக் காலத்தில் நம்மில் ஒரு சாரார், அதைத் தவறாக dharumam என்று ஒலிப்பதனாலேயே அது வடமொழியாகி விடாது. பேசினார் என்பதைக் கூடத்தான் இவர்கள் "பேஷினார்" என்று தவறாகச் சொல்லுகிறார்கள். அதனால் அது வடமொழி ஆகிவிடுமா? பலுக்கல் குழப்பத்தால் நூற்றுக் கணக்கான தமிழ்ச் சொற்களை வட சொற்கள் என்று ஐயுறுவது நம்மில் சிலருக்கு வாடிக்கையாகவே ஆகிவிட்டது.

தானம் என்ற சொல் தமிழா என்பதை மேலும் சில கருத்துக்களைச் சொல்லிக் கீழே பேசுகிறேன். (இதையுமே ஒரு சாரர் dhaanam என்று பலுக்குவார்கள்) அதற்கிடையில் தானத்திற்கும் donation க்கும் உள்ள தொடர்பை இங்கு புரிந்து கொள்ளுங்கள்.

donation:
c.1425, from M.Fr. donation, from L. donationem (nom. donatio), from donare "give as a gift," from donum "gift," from PIE *donum "gift" (cf. Skt. danam "offering, present," O.C.S. dani "tribute," Lith. duonis "gift," O.Ir. dan "gift, endowment, talent"), from base *do-/*de- "to give." Donate (v.) is an 1845 back-formation, chiefly Amer.Eng. )

இனி மூன்றாவது காட்சி:

இதில் சுடரைக் காட்டிலும் கதிர் உயர்ந்தவர்; காட்டாக, கதிர் என்ற அப்பா சுடர் என்ற தன் மகனைப் பார்த்து ஏதோ ஒன்றை எழுதிக் கொடுக்கச் சொல்லும் போது, எப்படிக் கேட்பார்? "தம்பி, இந்த மடலை எழுதிக் கொடு" "கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே" என்பது தொல்காப்பியச் சொல்லதிகாரம் 447 - ஆம் நூற்பா. [இங்கே கொடு விற்கு இருக்கும் மற்ற பொருள்களை ஒதுக்கிப் பார்க்க வேண்டும். கொடுவில் பிறந்த பெயர்ச்சொல் கொடை. நம்மைக் காட்டிலும் உயர்ந்தவருக்குத் தான் கொடுக்க முடியும். ஒரு புலவன், ஓவியன், ஆட்டத்தி (actress) என நம்மிலும் உயர்ந்த கலைஞருக்கு, ஏன் இறைவனுக்குக் கூட, கொடுப்பது கொடை. நம்மில் குறைந்தவருக்குச் செய்வது தொல்காப்பியர் கருத்துப்படி, ஈகை, கொடை அல்ல.]

இந்த மூன்றையும் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் முன்று வகையான இரப்போர்க்கு உள்ளதாகச் சொல்வார். இல்லென இரப்போர்க்கு உரியது ஈகை; இடன் இன்றி இரப்போர்க்கு உரியது தரவு. தொலைவாகி இரப்போர்க்கு உரியது கொடை.

சரி சுடர் என்பவர் ஈந்தார், தந்தார், கொடுத்தார். கதிர் என்பவர் என்ன ஆவார் என்பது அடுத்த கேள்வி. அவர் ஈதலுக்கு எதிராய்ப் பெறுவார், தருதலுக்கு எதிராய் பெறவோ, வாங்கவோ செய்வார். கொடுத்தலுக்கு எதிராய் வாங்குவார். கொடுத்தல் / வாங்குதல் என்ற இரு சொற்களிலுமே வளைவுப் பொருள் உண்டு. வளைந்த கையில் தானே கொடுக்கிறோம்? வளைந்த கையில் தானே வாங்குகிறோம்?

இது போக அளித்தல், வழங்கல், உதவல் என்பவை சுடரின் வினைக்கு உள்ள மற்ற சொற்கள். கிட்டுதல், கிடைத்தல் என்பது கதிருக்கு உள்ள மற்ற சொற்கள்.

மேலே உயர்ச்சி, ஒப்பு, தாழ்ச்சி என்ற மூன்று இடங்களை வைத்து மூன்று விதமான வினைச்சொற்களைக் கையாண்டது பற்றிப் பேசிய தொல்காப்பியர், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களில் எப்படிக் கையாள வேண்டும் என்று சொல்லதிகாரம் கிளவியாக்கத்தில் நூற்பா 28, 29, 30 ஆகியவற்றில் சொல்லுகிறார்.

28. செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம்மூ விடத்தும் உரிய என்ப.

செலவு, வரவு, தரவு, கொடை என்ற நான்கு சொற்களையும் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று இடத்திலும் பயனாக்கலாம் என்று சொல்வார்கள்; ஆனால்

29. அவற்றுள்,
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த

தரு சொல், வரு சொல் ஆகிய இரண்டையும் தன்மை, முன்னிலை ஆகிய இரண்டில் மட்டுமே சொல்ல வேண்டும். காட்டாக, "எனக்குத் தந்தான்; நினக்குத் தந்தான்" அல்லது ''என்னிடம் வந்தான்; நின்னிடம் வந்தான்" என்று வருவதே சரி. "அவனுக்குத் தந்தான்" அல்லது "அவனிடம் வந்தான்" என்று சொல்லுவது தொல்காப்பியர் காலத்துத் தமிழின் படி சரியில்லையாம். வேறு எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை 30-ஆம் நூற்பா விளக்குகிறது.

30. ஏனை இரண்டும் ஏனை இடத்த.

செலவுச் சொல், கொடைச் சொல் ஆகிய இரண்டும் படர்க்கை இடத்தில் வரும். காட்டாக, "அவனுக்குக் கொடுத்தான்" என்று சொல்லலாம். இது போல "அவனிடம் சென்றான்" என்று சொல்லலாம். இது போக ஒரு புறனடையையும் சொல்லுகிறார்.

448. கொடுவென் கிளவி படர்க்கை யாயினும்
தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பின்
தன்னிடத்து இயலும் என்மனார் புலவர்.

அதாவது, கொடு என்பதைப் படர்க்கையில் தான் சொல்ல வேண்டும் என்றாலும், சிலபோது தன்னைப் பிறன் போலக் கூறும்போது தன்னிலையில் சொல்லலாம்; காட்டாக ஒரு பாட்டன் இருக்கிறார்; தன் பேர்த்தியிடம் விளையாடிக் கொண்டிருக்கிறார். பேர்த்தி ஒரு பொம்மையைத் தர மாட்டேன் என்கிறாள். தாத்தா இப்படிச் சொல்லலாம்: "என் கண்ணுல்லெ, இந்தத் தாத்தாவுக்குக் கொடுக்க மாட்டியோ?"

இனித் தானம் என்ற சொல்லிற்குப் போகும் முன்னால், இன்னொரு இடை விலகல்; செலவு, வரவு, தரவு, கொடை என்ற சொற்கள் கணக்கியலிலும் பயன்படக் கூடியவை.

செலவு = expenditure
வரவு = income
தரவு = debit
கொடை = credit

தானத்தின் வேர்ச்சொல் விளக்கத்திற்கு அடுத்த பகுதி போகலாமா?

அன்புடன்,
இராம.கி.

13 comments:

மணியன் said...

நற்றமிழ் ஈந்தீர் எமக்கு,
இத்தமிழ் இனி தருவோம் எம் பதிவில்,
நன்றிகள் கொள்வீர் எம் கொடையென.

G.Ragavan said...

ஐயா, வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா என்று பாவேந்தர் ஒரு நூல் எழுதினார். ஆனால் நீங்கள் இன்னமும் ஆழமாக இது தமிழ்தான் என்று ஒரு நூல் எழுதத்தான் வேண்டும். இது எம்போன்றோரின் வேண்டுகோள். தமிழில் நாங்கள் அறிந்தது குறைவு. நீங்கள்தான் இந்த முயற்சியை எடுத்துச் செய்ய வேண்டும்.

கோவி.கண்ணன் [GK] said...

ஐயா,
அயர்வையும், ஓய்வையும் பொருட்படுத்தாது சிரத்தையுடன் விரிவாக எழுதியதற்கு நன்றி.

சென்ற வாரம் சிங்கப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் மானமிகு கீ.வீரமணி ஐயா குறுதி கொடை (இரத்த தானம்) என்ற சொற்பதம் பயன்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்துதான் தானம் என்ற சொல்லுக்கு கொடையை அதே இடத்தில் சரியாக பயன்படுத்தமுடியும் என்பதாக புரிந்து கொண்டு சொல் ஒரு சொல் பதிவில் சிறிய அளவு பதிவு கட்டுரையாக்கி நண்பர் குமரன் அவர்களுக்கு அனுப்பி பதிவிடச் சொன்னேன்.
நண்பர் குமரனும் ஜி.ராகவனும் சொற்களை பரிந்துரை செய்யும் போது வழக்கில் உள்ள ... மிகுந்த புழக்கம் இல்லாத சொற்களை பயன்படுத்திவருகின்றனர். அதனடிப்படையில் கொடை என்ற சொல் வழக்கத்தில் உள்ள சொல் அதை தானத்திற்கு பதில் பயன்படுத்தினால் தவறு அல்ல என்று நினைத்தேன்.

மேலும் இது பற்றி பின்னூட்டமிடுவேன்

அன்புடன்,

கோவி.கண்ணன்

கோவி.கண்ணன் [GK] said...

ஐயா,
அயர்வையும், ஓய்வையும் பொருட்படுத்தாது சிரத்தையுடன் விரிவாக எழுதியதற்கு நன்றி.

சென்ற வாரம் சிங்கப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் மானமிகு கீ.வீரமணி ஐயா குறுதி கொடை (இரத்த தானம்) என்ற சொற்பதம் பயன்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்துதான் தானம் என்ற சொல்லுக்கு கொடையை அதே இடத்தில் சரியாக பயன்படுத்தமுடியும் என்பதாக புரிந்து கொண்டு சொல் ஒரு சொல் பதிவில் சிறிய அளவு பதிவு கட்டுரையாக்கி நண்பர் குமரன் அவர்களுக்கு அனுப்பி பதிவிடச் சொன்னேன்.
நண்பர் குமரனும் ஜி.ராகவனும் சொற்களை பரிந்துரை செய்யும் போது வழக்கில் உள்ள ... மிகுந்த புழக்கம் இல்லாத சொற்களை பயன்படுத்திவருகின்றனர். அதனடிப்படையில் கொடை என்ற சொல் வழக்கத்தில் உள்ள சொல் அதை தானத்திற்கு பதில் பயன்படுத்தினால் தவறு அல்ல என்று நினைத்தேன்.

மேலும் இது பற்றி பின்னூட்டமிடுவேன்

அன்புடன்,

கோவி.கண்ணன்

முனைவர் அண்ணாகண்ணன் said...

நல்ல பதிவு.

இது தொடர்பான என் இடுகை இங்கே >>>

http://annakannan-kavithaigal.blogspot.com/2007/01/blog-post_16.html

Vijayakumar Subburaj said...

முதல் பதிவு.

"பேஷினார்" என்பது வடமொழியே, அதில் 'ஷி' இருகிறத்ல்லவா?. அதிலிருந்தே "பேசினார்" என்ற தமிழ் பதமும் வந்திருக்க வேண்டும். :-)

Vijayakumar Subburaj said...

முதல் பதிவு.

"பேஷினார்" என்பது வடமொழியே, அதில் 'ஷி' இருகிறத்ல்லவா?. அதிலிருந்தே "பேசினார்" என்ற தமிழ் பதமும் வந்திருக்க வேண்டும். :-)

Vijayakumar Subburaj said...

தமிழில் மொத்தம் வார்த்தைகள் எத்தனை? 3,00,000 என ஒரு திரைப்பட பாடலில் கேட்ட நியாபகம். தமிழில் மொத்தமாக இத்தனை வார்த்தைகள்தான் இருக்க வேண்டும் என கணக்கிட்டுக் கூற இயலுமா? மெய்யெழுத்தில், ரகரத்தில் வார்த்தைகள் துவங்காது போன்ற விதிகளை கணக்கில் கொண்டால், அதிகளவாக (maximum possible) எவ்வளவு தமிழ் வார்த்தைக்கள் இருக்கலாம்? மேலும் பகுக்க இயலாத சொற்கள் எத்தனை இருக்கலாம்? நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பதிலளிக்கவும். காத்திருக்கிறேன். நன்றி.

Vijayakumar Subburaj said...

தமிழில் மொத்தம் வார்த்தைகள் எத்தனை? 3,00,000 என ஒரு திரைப்பட பாடலில் கேட்ட நியாபகம். தமிழில் மொத்தமாக இத்தனை வார்த்தைகள்தான் இருக்க வேண்டும் என கணக்கிட்டுக் கூற இயலுமா? மெய்யெழுத்தில், ரகரத்தில் வார்த்தைகள் துவங்காது போன்ற விதிகளை கணக்கில் கொண்டால், அதிகளவாக (maximum possible) எவ்வளவு தமிழ் வார்த்தைக்கள் இருக்கலாம்? மேலும் பகுக்க இயலாத சொற்கள் எத்தனை இருக்கலாம்? நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பதிலளிக்கவும். காத்திருக்கிறேன். நன்றி.

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

Thank you Sir!
When i was learning MalayaaLam, this was my trouble spot. I was using thannu and koduthu interchangeably.
One of my friends taught me that 'thannu' should be used in 1st and 2nd persons and 'koduthu' should be used for 3rd person.

வெற்றி said...

ஐயா,
அருமையான பதிவு. படித்துப் பயனடைந்தேன். மிக்க நன்றிகள்.

/* ... நீங்கள் இன்னமும் ஆழமாக இது தமிழ்தான் என்று ஒரு நூல் எழுதத்தான் வேண்டும். இது எம்போன்றோரின் வேண்டுகோள். தமிழில் நாங்கள் அறிந்தது குறைவு. நீங்கள்தான் இந்த முயற்சியை எடுத்துச் செய்ய வேண்டும். */

ஐயா, என் அருமை நண்பர் கோ.இராகவன் உங்கள் முன் வைத்த அன்புக் கோரிக்கையை நானும் வழிமொழிகிறேன்.

கோவி.கண்ணன் said...

இராமகி ஐயா,

ரசனை என்ற செங்கிருத சொல் பரவலாக வழக்கில் இருந்து வருகிறது
அதன் தொடர்பில்,

ரசிகர், ரசிப்புத் தன்மை ... என சொற்கள் பயன்படுத்துகிறார்கள்.

ரசனை, ரசித்தல் என்ற சொல் பல்பொருள் பொதிந்த ஒரு சொல்லாக தெரிகிறது. இதற்கு ஒத்த பொருளைடைய சொல் எவ்வளவோ எண்ணியும் எனக்கு கிடைக்கவில்லை. இந்த சொல்லுக்கு மாற்று (தனித்) தமிழ்ச் சொல் என்ன ?

ஞானவெட்டியான் said...

இன்னும் கற்றுக்கொள்ள எவ்வளவு இருக்கிறது!
நானும் வழிமொழிகிறேன்.