Wednesday, January 24, 2007

தானமும் கொடையும் - 3

இனித் தானம் என்ற சொல்லின் இலக்கிய ஆட்சிகளைப் பார்ப்போம்.

[அதற்கு முன் ஓர் இடைவிலகல். ஒரு சிலர் தமிழ்ச்சொற்கள் பற்றி ஒரு விந்தையான கண்ணோட்டம் வைத்திருக்கிறார்கள்; குறிப்பிட்ட சொல் அப்படியே தொல்காப்பியத்தில், அல்லது சங்க இலக்கியத்தில் இல்லையா, அப்படியானால் அது வடசொல்லாகத் தான் இருக்கும் என்பது இவர்களின் நிலைப் பாடு. பிற்கால இலக்கியம் அதைக் கையாண்டிருந்தால் கூட, அது ஒரு கடன் சொல் தான் என்று இவர்கள் அழுத்தமாகக் கூறுவார்கள். அதாவது தொல்காப்பியம், சங்க இலக்கியம் என்பவற்றை ஓர் அகர முதலியைப் போல இவர்கள் கருதிக் கொள்ளுகிறார்கள். அவற்றில் இல்லையென்றால் அப்புறம் அந்தக் குறிப்பிட்ட சொல்லின் கதி அதோ கதி தான். இன்னுஞ் சிலர் "என் தந்தை, என் குரு ஆகியோர் கால காலமாய் இந்தச் சொற்களை வடசொல் என்று சொன்னார்கள், எனவே அவை வடசொற்கள் தான்" என்று ஆழ்ந்த நம்பிக்கையின் பேரில் சொல்லுவார்கள். (கருநாடக இசை சாம வேதத்தில் இருந்து எழுந்தது என்று ஒரு சிலர் நம்புவதைப் போன்றது இந்த நம்பிக்கை. "வேதம் என்பது எல்லாம் தெரிந்தது, எல்லாம் வல்லது, எல்லாம் சொல்வது" என்பது போன்ற இந்தக் கூற்றுக்கள் ஒரு வித நம்பிக்கை நிறைந்தவை; அவற்றை அலசி, மோனியர் வில்லியம்சு, பாணினி வழி அசைத்துப் பார்ப்பது இவர்களைப் போன்றோருக்கு ஆகாதது.)

என்னைப் பொறுத்தவரை தமிழ்ச் சொற்களை அப்படிப் பார்ப்பதில்லை. குறிப்பிட்ட சொல்லை ஒட்டிய இணைச் சொற்கள், வேர்ச் சொற்கள், இன்னும் பல்வேறு பட்டுமைகள் (possibilities), குறிப்பாக உள்ளே பொதிந்திருக்கும் வினைச் சொல்லின் வரலாறு, ஆகியவற்றைப் பார்த்தே இந்தச் சொல் தமிழா, தமிழில்லையா, என்று ஓர்ந்து பார்க்கிறேன். பிற்கால இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் வரும் சான்றுகளையும் முடிந்தவரை பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அப்பொழுது தான், ஓரளவாவது உறுதியாகச் சொல்லமுடியும். அதோடு ஏற்கனவே சொன்னவற்றை, மீண்டும் மீண்டும் புதிய தரவுகள் கிடைக்கும் போது மீள்பார்வையும் செய்ய விழைகிறேன். பல நேரம், நம்முடைய முடிவுகள் மீள்பார்வைக்கு வரவேண்டியது ஆகிறது. மொத்தத்தில் இது ஒரு வகை அறிவியற் தேடல்.]

தானம் என்ற சொல், திருக்குறளில் இரண்டு இடத்திலும், சிலம்பில் ஓரிடத்திலும் "கேளாமல் தருவது" என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. அவற்றை இனிப் பார்ப்போம். முதலில் வான்சிறப்பில் வரும் 19 வது குறள்.

தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.

என்ற இந்தக் குறளை "வானம் வழங்காது எனின், தானம், தவம் ஆகிய இரண்டும் வியனுலகம் தங்கா" என்று வரிமாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். வானம் என்பது இங்கே வெறும் விண்ணைக் குறிக்கவில்லை; புவியோடு காற்று மண்டலத்தையும் சேர்த்துக் குறிக்கிறது. புவியின் நீர்ப்பரப்பு சூரிய வெப்பத்தால் ஆவியாகிப் பின் மேலே போய்க் குளிர்ந்து முகிலாகி, மீண்டும் பொழிகிற நீர்ச் சுழற்சியில், மழை என்பது ஒரு பெரிய நீர்வரத்து; இந்த நீர்ச்சுழற்சியைப் புரியாத மாந்தன், வானமே மழையை வழங்குவதாய்ப் புரிந்து கொள்ளுகிறான். இது ஒரு குறைப் புரிதல் தான்; இருந்தாலும் (வள்ளுவரையும் சேர்த்த) பழம் மாந்தன் அப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறான்.

இதைத் தொடர்ந்து, "மழை வருவதற்கும், தானம் தவம் ஆகிய இரண்டிற்கும் என்னய்யா தொடர்பு?" என்ற சிந்தனை நமக்குள் எழுகிறது. தானம் என்பது பிறர் கேளாமல், ஒருவரின் தேவையை அறிந்து, மனம் உவந்து தரப்படுவது என்று பார்த்தோம். எப்பொழுது இப்படிப் பிறர்க்குத் தர மனம் வரும்? ஒருவர் வளமாக இருந்தால் அது போன்ற ஒரு மனம் வரும். உலகில் உள்ள பலருக்கும் எப்பொழுது அந்த மனம் வரும்? உலகில் வளம் இருந்தால் இது போல தானம் செய்ய மனம் வரும். வளம் இல்லையெனில் யாருக்கேனும் இது போன்ற மனம் வருமோ? வராது.

எனவே மழை என்ற ஒன்று இருந்தால் உலகில் வளம் ஏற்படும்; அது இருந்தால், தானம் என்பது உலகில் தங்கும்.

உயர்கணக்கில் தேற்றங்களை (theorems) நிறுவும் போது இருத்துமை கட்டியங்கள், பொந்திகைக் கட்டியங்கள் என்று சொல்வார்களே, அதைப் போல, மழை என்பது தானம், தவம் என்ற இரண்டிற்குமான இருத்துமை, பொந்திகைக் கட்டியமாகும். (They are the necessary and sufficient conditions; "இது இருந்தால் அது நடக்கும்" என்று பேச்சு வழக்கில் சொல்கிறோமே; அங்கே ஒன்றின் இருத்துமை என்பது necessary என்ற பொருளிலே தான் ஆளப்படுகிறது. பொந்துதல் என்பது பொருந்துதல் என்பதின் இடைக்குறை. பொந்தித்தல் என்பது நிறைதல். பொந்திகை என்ற பெயர்ச்சொல் எழுந்து sufficiency என்று பொருள் கொள்ளுவது இப்படித்தான்.) .

தானத்தைப் போலத் தவம் என்பதும் வளம், மழை ஆகியவற்றோடு தொடர்பு கொண்டது. தவம் என்பது வாழ்வுப் பற்றில் இருந்து விலகுவது, நீங்குவது என்ற பொருள் கொள்ளும். தபுத்தல் ( >தவத்தல்) என்ற வினையோடு தொடர்பு கொண்ட தவிர்த்தல் என்ற இன்னொரு வினையை இங்கே நினைவு கொள்ளுங்கள். தவம் என்பது பற்றை அறுத்த நிலை; அதற்கும் மேலே போய், பற்றையே துறப்பது துறவு எனப்படும். அதாவது தவத்தின் நீட்சி துறவு. வளமே இல்லாத நாட்டில், பற்றே ஏற்படாத நிலையில், அப்புறம் எதைத் துறப்பது, சொல்லுங்கள்?

துறவு, தவம் போன்றவற்றிற்குச் சரியான பொருள் வேண்டுமானால், மழை, அப்புறம் வளம், ஆகியவை மாந்தனின் எதிர்பார்ப்பாய் இருக்க வேண்டும். வானம் மழையை வழங்கவில்லை என்றால், உறுதியாய் ஒரு நாட்டின் வளம் குன்றும்; நல்லோர் தவம் இருக்க மாட்டார்கள்; தானம் செய்ய மாட்டர்கள்; "அவையெல்லாம் உலகில் இருந்து விலகிவிடும்" என்கிறார் திருவள்ளுவர். ஒரு நாட்டின் பஞ்ச காலத்தில், காட்டாக இன்றைய ஆப்பிரிக்காவில் சோமாலியாவில், நடப்பதைப் பார்க்கிறோம், அல்லவா? ,

இனி தானம் என்ற சொல் பயிலும் அடுத்த குறள் 295 -யைப் பார்ப்போம். இதில் மனத்தொடு சேர்ந்த வாய்மை நிலையை, தவம், தானம் ஆகிய இரண்டோ டு, வள்ளுவர் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

மனத்தொடு வாய்மை மொழியில் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை

மனத்தோடு உண்மை பேசினால், அது தவம் செய்பவர்களைக் காட்டிலும், தானம் செய்பவர்களைக் காட்டிலும், தலையாயது ஆகும் என்று இங்கு சொல்லுகிறார். மேலும் இதற்கு விளக்கம் தேவையில்லை என்று அடுத்த சொல்லாட்சிக்கு நகர்கிறேன்.

இது சிலம்பில் வஞ்சிக் காண்டத்தில், நீர்ப்படை காதையில், வரி 98-100ல்,

"கண்ணகி தாதை, கடவுளர் கோலத்து,
அள்நலம் பெருந்தவத்து, ஆசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்து அறங் கொள்ளவும் ...

என்று பயிலும். (ஆசீவகம் பற்றி எழுதுவதாகப் பலநாட்கள் முன் சொல்லிவிட்டு இன்னும் அந்த வேலையில் இறங்காது இருக்கிறேன். செய்யவேண்டியது நிறைய இருக்கிறது.) கண்ணகியின் முடிவு அறிந்து, அவள் தந்தை மாநாய்கன் "கடவுளர் கோலத்தில், நலம் கூடிய பெருந்தவம் நிறைந்த ஆசீவகர் முன், புன்ணியம் தரும் தானங்கள் செய்து" அறங் கொண்ட செய்தி இங்கு குறிப்பிடப் படுகிறது.

நாலாவது காட்டு இனியவை நாற்பது 27 ல் வருகிறது.

தானம் கொடுப்பான் தகையாண்மை முன் இனிதே
மானம் படவரின் வாழாமை முன் இனிதே
ஊனம் கொண்டு ஆடார் உறுதி உடையவை
கோள்முறையால் கோடல் இனிது.

இதற்குப் பொருள் சொல்ல முற்படவில்லை. வேண்டும் என்பவர்கள் தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து, வடசொல் வேர் பற்றிய ஒரு கருத்து. தானம் என்ற சொல்லையும், தாதா என்ற வடசொல்லையும் வைத்து, அவற்றின் வட சொல் வேராகப் பாணினியின் தாது பாடத்தில், கீழே வரும் 5 வகையில் தந்திருப்பார்கள். (வடமொழிச்சொற்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படையான வேர்களாக ஒரு பகுப்பாய்வு முறையில் கூறுபடுத்தி 2100 வேர்ச்சொற்களை அதில் காட்டியிருப்பார்கள். அவற்றின் இடையே இருக்கும் ஒத்திசைவு - consistency - பற்றிப் பல கேள்விகள் எழுப்ப முடியும். அதையெல்லாம் செய்தால், சங்கதம் என்னும் கலவை மொழியின் அடித்தளம் சரியாகப் புரிந்து போகும். ஆனால் "போற்றி" பாடிக்கொண்டிருக்கும் பலருக்கும் அது ஒவ்வாததாய் இருக்கும். அதனால், தூற்றத் தொடங்கி விடுவார்கள். அவற்றிற்கு மறுமொழி சொல்லியே, என் பொழுது போய்விடக் கூடும் என்பதால், பாணினியின் தாதுபாடத்தில் இருக்கும் அடிப்படை முரண்களைப் பற்றி பேசுவதை இங்கு முற்றிலுமாய்த் தவிர்க்கிறேன்.)

da_ to give; deri. datta, de_ya, yacchat, dadivas
dad to give; to offer; to present
da_y to give
da_s' to give; to offer an oblation
da_s to give

தானம் என்ற சொல்லிற்கு இன்னும் வேறு இரண்டு முகன்மையான பொருட்பாடுகள் உண்டு. அவற்றில் ஒன்று தான்றுதல் என்ற வினைச்சொல்லின் வழி வந்தது. தான்றுதல் என்றால் பதித்தல். தானித்தல் / தாணித்தல் என்றாலும் பதித்தல் தான். தான்றுதல்/தாண்டுதல் என்பதைத் தண்டுதல் என்றும் கூடச் சொல்லுவார்கள். (இதுதான் ஆங்கிலத்தில் வரும் to stand என்பதற்கு இணையான சொல்.) எண்களில் வரும் தோய்களை (digits) தானம் என்று குறிப்பிடுவது உண்டு (ஒரு 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் கூட இந்தச் சொல்லாட்சி நம்மூர்களில் கணக்குப் பாடத்தில் உண்டு. என்னுடைய திண்ணைப் பள்ளிக்கூடக் காலங்களில் ஒன்றாம் தானம், பத்தாம் தானம், நூறாம் தானம் என்ற பயன்பாட்டைப் படித்திருக்கிறேன்; பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், இப்பொழுது தமிழர் பலருக்கும், digit என்றால் தான் விளங்குகிறது. தானம் என்ற சொல் இந்தப் பொருளில் போயே போயிந்தி. இன்னும் மேலே போய், இடம் என்ற பொருளில், தானம் என்ற சொல்லைத் தான், முன்னே ஸ் சேர்த்து ஸ்தானம் என்று வடமொழியில் சொல்லுவார்கள். பலருக்கும் இந்துஸ்தானம், ராஜஸ்தானம் என்ற கலப்புச் சொல்லாட்சி தெரிந்திருக்கும். உள்ளே கிடக்கும் தமிழ்வேர் தான் அவர்களுக்குத் தெரியக் காணோம்.

இன்னொரு பயன்பாடு "தான, தன, தந்தன" போன்ற ஒலிக்குறிப்பில் எழும் சொல்லான தானம். இந்த ஒலிக்குறிப்பு, மொழி சாராத பொதுப்படையான ஒன்றாகும். இந்தத் தானம், நமக்கும் ஒன்றுதான், வடபுலத்திற்கும் ஒன்றுதான். பொதுவாக, ஓர் இசைப்பாடலைப் பாடும் போது, அராகம், தானம், தொடுப்பு (பல்லவி), விரிப்பு (சரணங்கள்), முடிப்பு என்ற வரிசையில் அமைப்பார்கள். அராகம் என்பது பண். இது வெறும் சுரக் கோவையாகப் பாடுவது. சுரக் கோவையில் ஆளத்தி (=ஆலத்தி = ஆலாபனம்) செய்து கேட்போருக்கு அந்தப் பண்ணின் விரிவை உணர்த்துவார்கள். அடுத்து அதோடு நிற்காமல், மேலே போய்த் தன்னனாப் போட்டு ஆளத்தி செய்வதும் வாய்ப்பாட்டிசையில் ஒரு பழக்கம். இதற்குத் தான் தானம் பாடுதல் என்ற பெயர் உண்டு. இந்தத் தானத்திற்கு அடுத்துப் பாடலின் தொடுப்பும், விரிப்பும் முடிப்பும் அமையும். பாடலின் மொத்த நீட்சியும் இசைஞனின் விருப்பிற்கு ஏற்ப, அமையலாம்.

தா, தரு என்ற சொற்களுக்குச் சற்று விலகிய நிலையில், தாள் என்னும் அடிப்பொருளில், தாள்தன்>தாதன் = அடியவன், தாள்தி>தாதி = அடியவள் என்ற சொற்களும் தாள்>தள், தாள்>தன், தாம், தான், தத்தம் என்று தன்னை/தம்மை அடிநிலையில் வைத்துச் சொல்லும் பகரப்பெயர் (pronoun) பயன்பாடுகளும் தமிழில் உண்டு. அவற்றையும் இங்கு விளக்கினால் இன்னும் கட்டுரை நீளம் கூடிப் போகும்; எனவே தவிர்க்கிறேன்.

இவ்வளவு விளக்கங்கள் இந்தத் தானம் என்ற சொல்லிற்குப் போதும் என்று நினைக்கிறேன். கட்டுரையை முடிக்குமுன் ஒரு செய்தி. இன்றையத் தமிழ் நடையில், அளித்தல், ஈதல், தருதல், கொடுத்தல் ஆகிய வினைகள் எல்லாம் அவற்றின் நுணுகிய வேறுபாடுகளைத் தொலைத்து ஒன்றிற்குப் பகரியாய் இன்னொன்று என்று நாம் புழங்கும் நிலைக்கு வந்துவிட்டன.

என்னுடைய சொல்லாய்வுக் கட்டுரைகளில் பல இடத்தும் எனக்கு முன்னவர்களான பாவாணரும் மற்றவரும் உள்நிறைந்து நிற்கிறார்கள். அவர்களில் இருந்து பலவிடத்து ஒன்றுபட்டும் சிலவிடத்து வேறுபட்டும் நான் இருக்கிறேன். என்னுடைய முடிபுகளுக்கு நானே பொறுப்பு.

அன்புடன்,
இராம.கி.

4 comments:

Anonymous said...

இராமகி. ஐயா,வணக்கம்.


எங்களிடம் மிக நேர்த்தியான-எல்லோரும் பயிலத்தக்க இலக்கணக் கட்டு இல்லை(தொல்காப்பியத்தை விடவும்)ஆங்கிலத்தில்,ஜேர்மனிய மொழியில் மாணவர்கள் பயிலத் தக்க இலக்கண நூல்களை"டுடன்"எனும் நிறுவனம் வெளியிடுகிறது.இதுபோல் நமக்கு-நமது மொழிக்கு ஏதாவது செய்யலாமே!உங்களது இத்தகைய முயற்சிகளை நூல்வடிவில் கொண்டு வருவது நல்லதே.


உங்களுடைய ஆயுளில் இதைச் செய்ய முனையலாமே?


புலம் பெயர் தமிழர்கள் நிதியிடும் வலுவோடிருக்கிறார்கள்.


தமிழ் மொழி சார்ந்த உங்கள் முயற்சிகளை இப்படித் தொகுக்க விரும்பினால்,என்னால் முடிந்த நிதியுதவியை நிச்சியம் உங்களுக்குச் செய்வேன்.


நமது மொழிக்கு நீங்கள் ஆற்றும் இத்தகைய அரிய பணியை,என்றைக்கும் வாசிக்க-கற்கக் கூடிய முறையில் தொகுத்தாக வேண்டும்.


நீங்கள் இதைச்(கலைச் சொற்கள் மற்றும் தமிழுக்கான புதிய முறையிலான இலக்கண வரைவுகள்) செய்ய முனைந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தமிழை இலகுவாகக் கற்கத் தக்க மொழியாக மாற்றுவதற்கு இவ் வகை முயற்சிகள் பயனுள்ளவை!

உங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து வாசிப்பதன் விளைவு: உங்களால் இது முடியுமென்று நான் நம்புகிறேன்.

தாழ்மையுடன்,

ஸ்ரீரங்கன்

Sri Rangan said...

இராமகி. ஐயா,வணக்கம்.


எங்களிடம் மிக நேர்த்தியான-எல்லோரும் பயிலத்தக்க இலக்கணக் கட்டு இல்லை(தொல்காப்பியத்தை விடவும்)ஆங்கிலத்தில்,ஜேர்மனிய மொழியில் மாணவர்கள் பயிலத் தக்க இலக்கண நூல்களை"டுடன்"எனும் நிறுவனம் வெளியிடுகிறது.இதுபோல் நமக்கு-நமது மொழிக்கு ஏதாவது செய்யலாமே!உங்களது இத்தகைய முயற்சிகளை நூல்வடிவில் கொண்டு வருவது நல்லதே.


உங்களுடைய ஆயுளில் இதைச் செய்ய முனையலாமே?


புலம் பெயர் தமிழர்கள் நிதியிடும் வலுவோடிருக்கிறார்கள்.


தமிழ் மொழி சார்ந்த உங்கள் முயற்சிகளை இப்படித் தொகுக்க விரும்பினால்,என்னால் முடிந்த நிதியுதவியை நிச்சியம் உங்களுக்குச் செய்வேன்.


நமது மொழிக்கு நீங்கள் ஆற்றும் இத்தகைய அரிய பணியை,என்றைக்கும் வாசிக்க-கற்கக் கூடிய முறையில் தொகுத்தாக வேண்டும்.


நீங்கள் இதைச்(கலைச் சொற்கள் மற்றும் தமிழுக்கான புதிய முறையிலான இலக்கண வரைவுகள்) செய்ய முனைந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தமிழை இலகுவாகக் கற்கத் தக்க மொழியாக மாற்றுவதற்கு இவ் வகை முயற்சிகள் பயனுள்ளவை!

உங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து வாசிப்பதன் விளைவு: உங்களால் இது முடியுமென்று நான் நம்புகிறேன்.

தாழ்மையுடன்,

ஸ்ரீரங்கன்

கோவி.கண்ணன் [GK] said...

ஐயா,

ஆழமாகவும் விளக்கமாகவும் எழுதி இருக்கிறீர்கள். நிறைய வேர்சொற்கள் தெரிந்து கொண்டேன்.

உங்களைப் போன்றவர்களின் சான்றுகள் நிறைந்த கருத்துக்களினால் தான் தமிழ்சொற்களை மீட்டு எடுத்து பயன்படுத்த முடிகிறது

நன்றி ஐயா !

இராம.கி said...

அன்பிற்குரிய சிறீரங்கன்,

உங்கள் கனிவிற்கு நன்றி.

இற்றை மொழிக்கு இலக்கணம் எழுதும் அளவிற்கு எனக்கு மொழியறிவு கிதையாது.

சொல்லாக்கம் பற்றிய நெறிமுறைகள், விளக்கங்கள், தமிழ்-வடமொழிக்கு இடையே உள்ள சொற்திரிவுகள் பற்றியும் ஒரு நூல் எழுதும் எண்ணமுண்டு. அது வேதித்தொழிலில் இருந்து ஓய்வு பெற்றபின் தான் முடியும். பார்ப்போம்.

அன்பிற்குரிய கோவி. கண்ணன்,

தங்களின் கனிவான சொற்களுக்கு நன்றி. கூடியமட்டும் நல்ல தமிழில் எழுதுங்கள். உங்கள் நண்பர்களையும் எழுதச் சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவிகளை அவ்வப்போது செய்வேன்.

தமிங்கிலப் பழக்கம் சிறிது சிறிதாகத் தமிழரிடம் குறையட்டும். இல்லையென்றால், மெல்லத் தமிழ் இனிச் சாகும்.

அன்புடன்,
இராம.கி.