உலக்கைப் பாலை மரம், 15-18 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது என்றாலும், பல இடங்களில் 8 மீட்டர் அளவிலே தான் காணப் படுகிறது. மரத்தில் நிறைய முடிச்சுக்கள் இருக்கும். சிறுகிளைகள் உருவாகி, உதிர்ந்தபின் இப்படி முடிச்சுக்களாக ஏற்படுகின்றன. காய்ந்த சிறு கிளைகளின் காம்புப் பகுதிகள் முட்களைப் போன்றே இருக்கும். எப்பொழுதும் பசுமையாய் இருக்கும் பாலையிலைகள் தடித்த தோலுடன், 5.0-13.5 செ.மீ. நீளத்தோடும், 2.5-5.0 செ.மீ. அகலத்தோடும் முட்டை வடிவத்தில், நுனிப்பகுதி அரைவட்டமாயும், இருக்கின்றன. இலைச் சந்துகளின் இடையே, ஒரு செ.மீ. நீளக் காம்புடன், தனிப் பூவாகவோ, அன்றி 2-6 பூக்கள் அளவில் பூங்கொத்தாகவோ, வெண்மை நிறத்தோடும், சிறிது நறுமணத்தோடும், டிசம்பர் - சனவரியில் பூக்கின்றன. (அது என்னவோ, பெரும்பாலான பாலைத்திணை மரங்களின் பூக்கள் வெள்ளை நிறத்திலேயே இருக்கின்றன. பால் நிறம் வெள்ளை தானே?) பொதுவாக, மற்ற பாலை மரங்களைப் பார்க்கையில், உலக்கைப் பாலை அதிகமாய்ப் பூப்பதில்லை. அப்படிப் பூத்த பின்னர், 1.5 செ.மீ. விட்டத்தில் நீள் உருளை வடிவில் காய்கள் உருவாகி, முடிவில் அவையும் முதிர்ந்து, மஞ்சள் நிறக் கனிகளாகின்றன. ஒவ்வொரு கனியிலும் ஒரு விதை இருக்கும். பெரும்பாலும் சிறார்கள் சுவைக்கும் இந்தப் பாலைப் பழங்கள் ஒரு சில இடங்களில் விற்கப் படுகின்றன. (உலக்கைப் பாலையின் படத்தை அருகில் கொடுத்துள்ளேன்.)
குடசப் பாலை (Holarrhena antidysenterica) என்பதை குழிசிப் பாலை என்றும் சொல்லுவது உண்டு. (குழிசி = குடம்; குழிசிப்பாலை>குளசிப்பாலை>குளப்பாலை.) இதைக் குத்துப் பாலை, கசப்பு வெட்பாலை என்றும் கூடச் சிலர் சொல்லுவார்கள். "வடவனம் வாகை வான்பூங் குடசம்" என்று பல்வேறு பூக்களைச் சொல்லும் இடத்தில், குறிஞ்சிப் பாட்டின் 67 - ஆம் வரி சொல்லும். வான்பூ என்பது வெள்ளைப்பூ என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடு. இதே சொல்லாட்சி மணி:3.164; சிலப் 13.157 ஆகியவற்றிலும் காணப்படுகிறது. வடமொழியில் இந்தப் பாலையை குடஜ, கலிங்க என்று சொல்லுவார்கள்.
குடசப் பட்டை, மருந்துப் பொருளாயும் பயன்படுகிறது. குடச மது என்பது 12 1/2 சேர் (1சேர் என்பது இந்தக் கால வழக்கில் 280 கிலோ கிராம் ஆகும்.) மரப்பட்டை, உலர் திராட்சை 6 1/4 சேர், பேரிலை இலுப்பைப்பூ (Bassia latifolia; ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?) பெருங்குமிழ் மரப்பட்டை (Gmelina Arborea) ஆகிய இரண்டையும் ஒவ்வொன்றும் 80 தோலா (1 தோலா = 12 கிராம்) போட்டு 256 சேர் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, மொத்தக் கொள்ளளவும் 4ல் ஒன்றாகும் படி செய்து, வடிகட்டி, அதற்குப் பின்னால் பூக்கோளி விளக்கையின் (Woodfordia floribunda) பூக்களை 2 1/ 2 சேர் போட்டு, treacle 12 1/2 சேர் போட்டு குளிர்ந்த இடத்தில், மண்ணில் புதைத்து, ஒரு மாதம் நொதிக்க வைத்து எடுத்தால் கசப்பில்லாத ஒரு மது கிடைக்கும். அது விடாமல் பிய்த்துக் கொண்டு போகும் கழிச்சலுக்கும், வயிற்றாலைக்கும், மருந்தாக அமையும்.
குடசப்பாலை வறண்ட உலர்காடுகளைக் காட்டிலும், 500 மீட்டருக்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில், குறிப்பாக ஏலகிரி, சேர்வராயன் மலைகளில், வளர்கிறது. காடுகளை அழிக்கும் போது கடைசியில் அழிவதும், மீண்டும் துளிர்க்கும் போது முதலிற் துளிர்ப்பதும் குடசப்பாலை தான். இலைகளும் பூக்களும் அழகானவை. இலைகள் சிறுகாம்புடன், 15-30 செ,மீ.நீளமும், 5-15 செ,மீ.அகலமும் கொண்டு கரும்பச்சை நிறத்தில் இருக்கும். மார்ச்சு-மே மாதங்களில் குடசப்பாலை பூக்கும். பூங்கொத்துக்கள் நறுமணம் உடையவை. பூக்கள் 2.5 செ.மீ. அளவில் மரத்தில் பூச்செண்டுகள் போலக் காட்சியளிக்கும். 30 செ.மீ. நீளமுள்ள குடசப்பாலை நெற்றுக்கள் சோடி சோடியாய் உருவாகும். 0.6 செ.மீ. விட்டமுடைய நெற்றுக்கள் குழல் வடிவமுடையவை. ஒவ்வொரு நெற்றிலும் 1.25 செ.மீ. நீளமுள்ள விதைகள் 25-30 இருக்கும்.
அடுத்தது வெட்பாலை (= வெள்+பாலை; வெள்ளையான பாலை; Wrightia tinctoria). இதை நிலப்பாலை என்றும் சொல்லுவார்கள். தந்த நிறத்தில் உள்மரம் இருக்கும். இதை வைத்துக் கடைசல் வேலைகள் செய்ய முடியும். சமவெளிகளிலும், 1500 மீ வரை மலைப்பகுதிகளிலும் வெட்பாலை இருக்கும். 800 மீட்டருக்கும் மேல் மலைப்பகுதிகளில் கருப்பாலை (Wrightia Arborea) என்ற இன்னொரு வகை மரமும் இந்தியாவில் பல இடங்களில் உண்டு. வெட்பாலை தமிழ்நாட்டில் செவ்வல், சரளை, செம்புறை நிலங்களில் விளைகிறது. எங்கள் ஊர்ப்பக்கங்களிலும், மானாவரி நிலங்களில் வேலியோரமாய், மழை குறைந்த இடங்களிலும் வளர்கிறது. பல்வேறு இடங்களில் அழிஞ்சல் மரத்துடன் வளர்கிறது. செதில் செதிலாய் இருக்கும் சாம்பல் நிறப்பட்டை இந்த மரத்தை மூடிக் கிடக்கிறது. சிறுகாம்புடன், 6-14 செ.மீ. நீளம், 3-6 செ.மீ.அகலத்தில் இலைகள்லிருக்கின்றன. பூக்கள் நறுமணத்தோடு இருக்கும். பூந்தண்டு இரு கவட்டு முறையில் இணைந்திருக்கும். இரு சூல் இலைகளால் ஆன, ஒரு புற வெடிப்பில் கனிகள் உருவாகும். இரட்டையாக இணைந்த இக் கனிகள் 25-30 செ.மீ. நீளம், 0.6-1.2 செ.மீ. விட்டம் உடைய கொம்புகள் போலத் தோற்றம் அளிக்கும். சிறு வெண்மயிர் குஞ்சத்துடன் கூடிய விதைகள். இவற்றை அரிசிகள் என்பார்கள்.
குடசப்பாலையின் பட்டையுடன், வெட்பாலைப் பட்டையையும் கலந்து மேலே சொன்ன மது, காய்ச்சம் (காய்ச்சம் என்ற தமிழ்ச்சொல் தான் காஷாயம் என்று ஒரு விதமாய் ஒலித்து வடமொழியாக்கிக் காட்டுவார்கள். நல்ல தமிழ்ச்சொல்லை நாம் தொலைத்து நிற்கிறோம். தமிழ் மருத்துவச் சொற்கள் பலவும் தேடிப் புதுக்க வேண்டியவை. வெட்பாலையின் வெண்ணிறப் பூக்கள் சமவெளிகளில் சூலை-ஆகசுடு மாதங்களிலும், மலைப்பகுதிகளில் மார்ச்சு - மே மாதங்களிலும் பூக்கும்.
முசுக்கைப் பாலை (Wrightia tomentosa) என்ற இன்னொரு வகையும் எல்லா மாவட்ட முல்லை நில வறண்ட திறந்தவெளி நிலங்களில், உதிர்புக் காடுகளில் வளரக்கூடியது. ஆனால், இந்த வகை தெற்கே செல்லச் செல்ல தமிழகத்தில் அருகிக் காணப்படுகிறது.
குடசப் பாலையையோ, வெட்பாலையையோ, அவற்றின் காய்களை யானைத் தந்தத்தோடு ஒப்பிட்டுக் குறிக்கும் பாடல் வரிகள் நற்றிணை 107 -ல் முதலைந்து வரிகளாய் வருகின்றன.
"உள்ளுதொறும் நகுவேன்-தோழி! வள் உகிர்ப்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண்கோட்டுக்
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை,
செல்வளி தூக்கலின், இலைதீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்"
"தோழி, நினைக்கும் போதெல்லாம் சிரித்துக்கொள்வேன். காய்ந்து போன வெள்ளைப் பூங்கொத்து நிறைந்த பாலைமரம், ஊடே வரும் காற்றில் ஒடுங்கி அசைகிறது; அந்த அசைவில் மலையிலிருந்து விழும் அருவியோசை போல், இலை கொட்டிய நெற்றுக்கள் ஒன்றையொன்று முட்டி ஒலிக்கின்றன. அது எப்படி இருக்கிறது தெரியுமா? கூர்நகம் கொண்ட பெண்யானை பிளந்திட்ட நார் இல்லாத வெண்கோட்டுத் தந்தம் போல் இருந்தது".
அடுத்து ஏழிலைப் பாலையைப் பார்ப்போம்.
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment