(இது பூங்கா வலையிதழுக்காக, அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், எழுதிய கட்டுரை. என்னுடைய வலைப்பதிவில் சேர்த்து வைப்பதற்கும், பின்னூட்டு இருந்தால் மறுமொழிக்கவும் வேண்டி, இங்கு பதியப்படுகிறது.)
பொங்கலைப் பற்றிக் கேட்டால், சட்டென்று பலரும் "தமிழர் திருநாள், உழவர் திருவிழா, நன்றி சொல்லும் நேரம்" என்று சொல்லப் புகுவார்கள். அப்படிச் சொல்வது ஒருவகையில் சரிதான்; ஆனால் அது முழுமையில்லாத, ஒருபக்கமான, பக்கமடைச் (approximate) செய்தியாய் அமைந்து விடும். முழுமையாய்ச் சொல்ல, சரியானபடி அறிய, இன்னும் கொஞ்சம் ஆழப் போக வேண்டும். குறிப்பாக "தை முதல் நாளில் இவ்விழாவை ஏன் வைத்தார்கள்?" என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். மேலும், இந்த விடைகாணலின் முதற்படியாக, சூரியனைப் புவி சுற்றும் சாய்ந்த நீள்வட்டத்தைப் (inclined ellipse; இதைப் புவியின் பரிப்பு மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு. பரிதல் = செல்லுதல்) புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டால் தான், நம்முடைய பருவங்களின் காரண கருமங்கள், பண்டிகைகளின் உட்கருத்து, போன்றவை புலப்படும். பொங்கல் விழா தொடங்கிய காலம், அதன் வெளிப்பாடு, அந்த விழா முற்காலத்தில் எதைக் குறித்திருக்கும் என்ற காலமாற்றத்தில் ஏற்பட்ட வேறுபாடுகளை இங்கு சொல்ல முற்படுகிறேன்.
சூரிய நாள்காட்டைப் (நாள்காட்டு> நாள்காட்டம்> நாக்ஷத்திரம்> நக்ஷத்ரம் = star) புவியோடு சேர்ந்து பல கோள்கள் வலந்து (வலத்தல் = to revolve) கொண்டிருக்கின்றன. இந்த வலந்தைகளின் (planets) வலம், கிட்டத்தட்ட ஒரே தளத்தில் தான் நடக்கிறது. இந்தச் சுற்று வலயத்தை ”ஏகலோடி” என்று வானியலிற் சொல்லுவர். (ecliptic; வலந்தைகள் ஏகி ஓடும் தளம் ஏகலோடி; ஏகுதல் = செல்லுதல்; ஏகலோடியை ஞாயிற்று மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு.) இந்த ஏகலோடியில் வலக்கும் மற்ற கோள்களோடு நம்முடைய புவியைத் தொடர்புறுத்தும் முகமாக, இன்னொரு வட்டத்தையும் வானியலில் கற்பித்துச் சொல்லுவார்கள். அது வேறு ஒன்றும் இல்லை; புவிக் கோளத்திற் கற்பிக்கும் ஞால நடுவரையையே (terrestrial equator;), தொலைவிற் தெரியும் வானவரம்பு (horizon) அளவுக்குப் பெரிது படுத்தி, அதை வான் நடுவரையாய் (celestial equator) உருவலித்துக் காட்டுவதாகும். இந்த வான் நடுவரையை, இன்னொரு விதமாய், விசும்பு வலயம், விசும்பு வட்டம் என்றும் சொல்லுவதுண்டு.
விசும்பு வட்டம் என்பது புவியின் தன்னுருட்டோடு (self-rotation) தொடர்புடையது; ஏகலோடி என்பது எல்லாக் கோள்களும் சுற்றும் ஒரு வலயத் தளம். இந்த விசும்பு வட்டம், ஏகலோடி என்ற இரு வட்டங்களும் ஒன்றையொன்று ஒருக்களிப்பாய் (obliquity) வெட்டிக் கொள்கின்றன. (சிவகங்கை வட்டாரத்தில் ”ஒருக்களித்தல்/ ஒருக்கணித்தல்” என்று புழங்கும் வினைச்சொல் ”சாய்ந்து இருத்தல்” என்ற பொருளைக் காட்டும். ”ஒருக்களித்துப் படுத்தான்” என்றால், ”மல்லாக்கப் படுக்காமல் கொஞ்சம் திரும்பிக் கிடைமட்டத்திற்குச் - horizontal - சாய்ந்தாற்போல் ஒருபக்கமாய் உடம்பை வைத்துப் படுப்பது” என்று பொருள் கொள்ளும்) இத்தகைய ஒருக்களிப்பின் காரணமாய், கோடையும் (summer), வாடையும் (winter), இடையே பசந்தமும் (பச்சையாய்ப் பசிய இருப்பது பசந்தம்; spring; இதை ஒலிப்பு மாற்றி ப/வ போலியில் வசந்தம் என்று இன்று சொல்லுகிறோம்.), கூதிரும் (இலைகள் கூம்பி உதிர்வது கூதிர்; autumn; கூதிருக்கு அப்புறம் நீளும் முன்பனிக் காலத்தில் அடிக்கும் காற்று கூதல்) எனப் பருவங்கள் மாறி மாறி வருகின்றன. அதன் விளைவால் கோடையில் வெக்கையும், வாடையில் குளிரும் நம்மை வாட்டுகின்றன. குளிருக்கு அவ்வளவு பழகாத (ஆனால் வெக்கையை எப்படியும் பொறுத்து விடலாம் என்று பழகிய) தமிழர், "குளிர்காலம் குறையாதா?" என்று எதிர்பார்ப்பது இயற்கையே. பருவச் சுழற்சியின் காரணத்தால், குளிர் அதிகமாய் இருக்கும் நாளே, "குளிர் இனிக் குறையப் போகிறது" என்று உணர்த்தும் நாளாகும். அந்த நாள் வரும் போது, "இனிமேல் வரப் போவது மகிழ்வான காலம், வாட்டுகின்ற குளிர் தொலைந்து போகும்" என்று தமிழர் களி கொண்டு விழா எடுப்பது இயற்கையே.
இப்படி ஒரு நீண்ட பின்புலத்தை எடுத்துச் சொல்லுவது பொங்கல் விழாவின் அடிப்படையைச் சொல்லுதற்குத் தான்.
ஆண்டின் ஒவ்வொரு பருவ காலத்திலும், பகலும் இரவும், ஒரே அளவுப் பொழுதாக 12 மணி நேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீளுகிறது; வாடையில் இரவு நீளுகிறது. ஆனாலும் ஆண்டின் இரண்டே இரண்டு நாட்களில் மட்டும், பகலும் இரவும் (=ஒரே அளவுள்ள) ஒத்த நாட்களாக அமைகின்றன. அந்த நாட்களை ஒக்க நாட்கள் (equinoxes) என்றே மேலையர் அழைக்கின்றனர். மற்ற நாட்களில் பகலோ, இரவோ, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் அதிக நேரம் வியலுகிறது. (அதாவது பகல் குறைந்து இரவு நீண்டோ, அல்லது பகல் நீண்டு, இரவு குறைந்தோ, இருக்கின்றன). இப்படிப் பகலும் இரவும் ஒன்றே போல ஒக்க இருக்கும் மார்ச்சு 22 - ஆம் நாளைப் பசந்த ஒக்க நாள் (spring equinox) என்றும், செப்டம்பர் 23 - ஆம் நாளைக் கூதிர் ஒக்க நாள் (autumn equinox) என்றும் சொல்லுவார்கள்.
இது போக, நீள்வட்டத்தில் செல்லும் புவியில் இருந்து சூரியனின் தொலைவை அளந்தால், மேலே கூறிய இரண்டு ஒக்க நாட்களில் மட்டும் நடுவார்ந்த தூரம் (median distance) இருக்கும். மற்ற நாட்களில் எல்லாம், புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் கூடியோ, குறைந்தோ, வரும். இப்படிக் கூடுதல், குறைச்சல் வரும் போது, வலயத்தின் ஓரிடத்தில் மட்டும்,இருப்பதிலேயே அதிக தூரமாகவும், வலயத்தின் இன்னொரு இடத்தில், இருப்பதிலேயே குறைந்த தூரமாகவும் அமையும். இருப்பதிலேயே கூடிய தூரமாய் புவியும் சூரியனும் அமையும் நாளைப் பனி முடங்கல் என்றும் (winter solistice; முடங்கல் = அமைதல்; முடங்கிப் போதல்; மாட்டிக் கொள்ளுதல்; பனிக் காலத்தில் அமைதல் - திசம்பர் 22-ம் நாள்), அண்மைத் தூரத்தில் புவியும் சூரியனும் அமையும் நாளை வேனில் முடங்கல் என்றும் (summer solistice; வேனில் = வெய்யிற் காலம் - சூன் 22ம் நாள்) நாம் சொல்லுகிறோம்.
புவிக்கு தன்னுருட்டம் (self-rotation), வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration; பம்பரம் போன்ற ஆட்டம்) என்னும் இன்னோர் இயக்கமும் இருக்கிறது. அதைப் புவியில் இருந்து புரிந்து கொள்வதற்கு மாறாக இந்த ஒக்க நாட்களின் இயக்கமாய்ப் புரிந்து கொள்ளுவது இன்னும் எளிதாக இருக்கும். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் செல்லச் செல்ல இந்த ஒக்க நாட்கள் சிறிது சிறிதாக முன் நகர்ந்து கொண்டிருக்கின்றன. (மேலே சொன்ன மார்ச்சு 22, திசம்பர் 22 என்பவை இந்தக் காலத்தில் நிகழ்பவை; ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால், அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அவை இதே நாட்களில் நிகழ்ந்தவை அல்ல.) இந்த ஒக்கநாட்களின் இயக்கத்தை முற்செலவம் (precession; precede = முன்செல்லு) என்று வானியலில் கூறுவார்கள்.
இந்தக் காலத்தில் பசந்த ஒக்கநாள் என்பது மீன (pisces) ஓரையில் விழுகிறது (=ஏற்படுகிறது). கூடிய விரைவில், இன்னும் ஐந்தாண்டுகளில் கி.பி. 2012 - ல் அது அஃகர (aquarius) ஓரையின் தொடக்கத்தில் வந்து விழும். அப்படி விழும் போது, புதிய உகத்திற்கு நாம் போகிறோம் (உகம் = ஒன்று சேரும் காலம்; உகம்>யுகம்>yuga என்ற வடமொழியில் சொல்லுவார்கள்.) என்று வரலாற்றாசிரியர்கள் சொல்லுகிறார்கள். அதே போல, வரலாற்றின் முன்காலத்திற்கு முற்செலவத்தின் துணை கொண்டு போனால், ஒரு காலத்தில் ஏப்ரல் 14 -ல் மேழ ஒரையின் தொடக்கத்தில் (மேஷ ராசி) இந்த ஒக்க நாள் விழுந்திருக்கும். அதாவது ஒரு காலத்தில் மேழத்தில் விழுந்த பசந்த ஒக்க நாள் இன்று 24 நாட்கள் முன்னேயே மீனத்தில் மார்ச்சு 22-ல் நிகழ்கிறது. இது போல முற்செலவத்தின் நகர்ச்சியால், கூதிர் ஒக்கநாள், பனி முடங்கல், வேனில் முடங்கல் ஆகிய மற்றவையும் 24 நாட்கள் முன்தள்ளிப் போகின்றன. அதாவது அக்டோபர் 15ல் விழ வேண்டிய கூதிர் ஒக்கநாள் செப்டம்பர் 23-லேயே நடக்கிறது. சனவரி 14ல் நடக்க வேண்டிய பனிமுடங்கல் திசம்பர் 22 -இலும், சூலை 14ல் நடக்க வேண்டிய வேனில் முடங்கல் சூன் 22 -இலும் நடக்கின்றன.
இந்த முற்செலவம் என்ற இயக்கம் மாந்த வாழ்க்கையில் ஒரு நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் பருவங்களைக் குறிக்கும் எந்தக் குறிப்பையும், முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். மொத்தமாய் ஒரு முழு முற்செலவம் முடிய கிட்டத்தட்ட 25783 ஆண்டுகள் ஏற்படுகின்றன (அளவு கோல்கள் நுணுக நுணுக, இந்த முற்செலவு இயக்கத்தின் நடப்புக் காலமும் துல்லியப் பட்டு வருகிறது). 25783 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால், ஒரு ஓரையில் (உகத்தில்) 25783/12 = 2148.58 ஆண்டுகள் என்ற ஒரு பருவ காலம் அமையும். இந்தப் பருவகாலத்தை உகம் (=யுகம்) என்று சொல்லுகிறார்கள். உகம் உகமாய் மாந்த வாழ்க்கை மாறுகிறது என்பது இப்படித் தான். இப்பொழுது மீன உகத்தில் இருக்கும் நாம் அடுத்து ஐந்தே ஆண்டுகளில் அஃகரை உகத்திற்குள் நுழையப் போகிறோம்;
இந்திய வானியலில் முற்செலவம் என்ற அயனத்தையும், வலயம், தன்னுருட்டு ஆகியவற்றையும் சேர்த்து இயக்கங்களைக் கணக்கிடும் முறைக்கு ”உடன் அயன முறை” (உடன் = சக என்று வடமொழியில் அமையும்; சக அயன முறை = sayana method) என்று பெயர். மேலையர் பெரும்பாலும் இந்த முறையில் தான் காலங்களையும்க் கணிக்கிறார்கள். மாறாக, முற்செலவம் என்ற அயனத்தை முற்றாகக் கழித்து மற்றவற்றைப் பார்ப்பது நில்லயன முறை (nirayana method) எனப்படும். இந்திய வானியலில் முற்செலவத் திருத்தம் (precession correction) கொண்ட நில்லயன முறை என்பதே விதப்பாகப் பின்பற்றப்படுகிறது.
நில்லயன முறையின் படி, தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை வட செலவு (=உத்தர அயனம்) என்றும், ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை தென் செலவு (=தக்கண அயனம்) என்றும் சொல்லுவார்கள். நில்லயன முறையின்படி, தென்செலவை முடித்துக் கொண்டு, வடசெலவைச் சூரியன் தொடங்குவது தை முதல் நாளில் தான். அதே பொழுது இந்தக் காலத்தில் உடன் அயன முறையின்படி, வடசெலவு தொடங்குவது திசம்பர் 22 ஆகும். இங்கே கூறும் கால வேறுபாடு முற்செலவத்தால் ஏற்படுவது.
இன்னொரு விதமாய்ப் பார்த்தால், சனவரி 14/15ல் நடக்க வேண்டிய பனி முடங்கல், ஒரு நாள் முன் போய் சனவரி 13/14ல் நடக்க, 25783/365.25636556 = 70.587672, ஆண்டுகள் ஆக வேண்டும். இந்த அளவை வைத்துக் கொண்டு, வெறும் முழு நாட்களாய்ப் பார்க்காமல், இன்னும் நுணுக்கமாய் நாட்கள், மணி, நுணுத்தம் என்று கணக்குப் போட்டால், இன்று திசம்பர் 22ல் நடக்கும் பனி முடங்கல், 1722 ஆண்டுகளுக்கு முன்னால் சனவரி 14-லேயே நடந்திருக்கும் என்று புலப்படும். அதாவது கி.பி.285-க்கு அண்மையில் பனிமுடங்கல் என்பது, பொங்கல் நாளில் நடந்திருக்கும்.
அந்தப் பொழுதில், நில்லயன முறையும், உடன் அயன முறையும் ஒரே கணக்கைக் காட்டும். இன்னொரு வகையிற் சொன்னால், இந்திய அரசின் அதிகாரக் கணக்கின் படி, முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்கிய ஆண்டு கி.பி. 285 ஆகும்.
இந்திய வானியலில் முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்கிய நிலையை நினைவு படுத்தி, ”பசந்த ஒக்க நாளும் மேழ விழுவும் கி.பி.285 இல் ஒன்று சேர்ந்திருந்தன” என்று சொல்லுவார்கள். (ஒருக்களித்த விசும்பு வட்டத்தில் மேழ ஓரை தொடங்கும் நாளை மேழ விழு என்றும், துலை ஓரை தொடங்கும் நாளைத் துலை விழு என்றும் சொல்லுவது வானியல் முறை. மலையாளத்தில் மேழ விழுவை மேஷ விஷு என்றும், துலை விழுவைத் துலாம் விஷு என்றும் சொல்லுவார்கள்.)
மேலவிழு, துலை விழு ஆகியவற்றைச் சொன்னது போலவே, “பொங்கல் நாள்” என்பது ஒரு காலத்தில் (அதாவது கி.பி.285ல்) ”பனிமுடங்கலைச் சுட்டிக் காட்டிய பண்டிகை” என்பது இதுவரை சொன்ன விளக்கத்தால் புலப்படும். பனிமுடங்கலைக் கொண்டாடுவதன் மூலம், "அந்த நாளுக்கு அப்புறம் இரவு குறைந்து பகல் நீளும், இனிமேல் மகிழ்ச்சி பொங்கும், பனி குறையும், சூரியன் நெடு நேரம் பகலில் இருப்பான், இனிமேலும் வீட்டிற்குள் அடங்கியிருக்க வேண்டாம்" என்று உணர்த்துகிறோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்த கதிரவன் இனித் திரும்பி வந்து வடக்கு நோக்கி வரத் தொடங்குவதற்காக, அவனுக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் ஒரு விழா தான் இந்தப் பொங்கல் விழா.
அந்த அடிப்படையைப் பார்க்கும் போது, பொங்கல் விழா என்பது சங்கம் மருவிய காலத்தில் தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். இதற்கு ஏற்றாற் போல சங்க இலக்கியத்தில் (கி.பி.285க்கு முந்திய இலக்கியத்தில்) எங்கணுமே பனிமுடங்கலை ஒட்டி எழுந்த பொங்கல் விழா பற்றிய குறிப்பு பதிவு செய்யப் படவே இல்லை. அப்படியானால் ”பொங்கல் விழாவை கி.பி.285 ற்கு முன் தமிழர் என்ன சொல்லிக் கொண்டாடினர்?” என்ற கேள்வி எழுகிறது.
அந்தக் கேள்விக்கான விடையை, விழாவைக் கொண்டாடும் முறையிலிருந்து புரிந்து கொள்ளலாம். பொங்கலின் போது சிவன், விண்ணவன் என்று எந்தச் சமயத்தின் தொன்மக் கதைகளும் ஊடே கலந்து சொல்லப் படுவதில்லை. பொங்கலுக்கான படையல் என்பதும் வெட்ட வெளியில் சூரியனுக்குக் கீழே அளிக்கப் படுகிறது. அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே அன்று வைக்கப்படும். மேலையர் காய்கறிகளை இந்தப் படையலோடு வைப்பதைத் தவிர்ப்பார்கள்), வெல்லம் ஆகியவற்றோடு தான் படையல் இடப்படுகிறது. விழாவிற்கு முன்னால், வீட்டைத் தூய்மை செய்து, முடிந்தால் வெள்ளையடித்து, கோலமிட்டுச் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் கூடச் சமயஞ் சேராத ஈடுபாடே இருக்கும். விழாவின் போது செய்யும் "பொங்கலோ, பொங்கல்" என்ற கூப்பாடு கூட நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே குறிக்கிறது.
இத்தகைய குறிப்புக்கள் அத்தனையும், இந்த விழாவை தமிழர் என்னும் இனக்குழு (tribe) தொடர்பான விழா என்று தெளிவாக உணர்த்துகின்றன. இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் (religions emphasizing philosophy) தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும், ஆனால் வேறு எதையோ அது குறித்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளுகிறோம். ”அந்த வேறு எது?” என்பது அடுத்த கேள்வி.
[இன்றைக்கும் கூட இனக்குழு வழிபாடுகள் எல்லாமே, குறிப்பாக அய்யனார் கோயில்கள், அம்மன் கோயில்கள், கருப்பண சாமி கோயில்கள் ஆகியவற்றில் நடக்கும் - tribal worships - எல்லாம் பொங்கலிட்டுப் படையல் இடுவது (இது பெரும்பாலும் கறியாகவும், ஓரோவழி மரக்கறியாகவும் இருக்கும்), மாவிளக்கு வைப்பது என இயற்கையளவிலேயே இருப்பதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புரியும்.]
[இந்த இடத்தில் கொஞ்சம் இடைவிலகல். பொதுவாக, மெய்யியற் சமயங்கள் நம்மூரில் களப்பிரர் ஆட்சிக்கு அப்புறமே நிலைத்தன. அதுவரை நம்மூரில் விரவியவை இனக்குழுச் சமயங்களும் (tribal religions), வடபுலத்தில் இருந்து வந்த செயினம், புத்தம் (இவற்றோடு இங்கே பெரிதும் பங்களிக்கப் பட்ட ஆசீவகம்), வேதநெறி ஆகியவையுமே.
மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கும் (மாணிக்க வாசகரின் காலம் பற்றிப் பலர் வேறுபடக் கூடும். என்னுடைய இன்றையப் புரிதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு தான்), ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமந்திரத்திற்கும்
முன்னால் சமய வரைபாட்டைச் சொல்லும் நூல்கள் தமிழில் ஏற்படாததே மெய்யியற் சமயங்கள் தமிழர் வரலாற்றில் பின்னால் ஓங்கியவையே என்பதை உணர்த்தும். அதே பொழுது சிவன் கோயில், விண்ணவன் கோயில் போன்றவை சங்க காலத்திலும் இருந்திருக்க முடியும். ஆனால் அவை ஏதோ ஒரு மெய்யியலைச் (சித்தாந்தத்தைச்) சுட்டிக் காட்டின என்று சொல்லமுடியாது. (என்னுடைய புரிதலின் படி மாணிக்க வாசகரே தமிழில் எழுந்த முதல் சிவநெறி மெய்யியற்காரர்.)
கோயிலைக் குறிக்கும் சொற்கள், குறிப்பாக ஆலயம் என்ற சொல் ஆல மரத்து வெளி என்ற பொருளையும், அம்பலம் என்ற சொல் திறந்த வெளி என்பதையும், கோட்டம் என்ற சொல் கூடுகின்ற இடம் என்ற பொருளையுமே காட்டுகின்றன. எல்லோரும் பெரிதாக இன்று பயன்படுத்தும் கோயில் என்ற சொல் கூட "இறைவன் வீடு" என்று இன்றைக்கு வலிந்து கூறப்படும் பொருளைக் காட்டிலும், கோவுகிற இல் = கோவில் என்று பொருள் கொள்ளுவது சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. கோத்தல்/கோவுதல் என்ற வினைச்சொல்லிற்கு ஒன்றுசேர்த்தல் என்றே பொருள் அமைகிறது. ஊரில் உள்ளவர் ஒன்று கூடும் இடம் கோவில் என்ற பொருள் இந்த வினைச்சொல்லின் அடிப்படையில் இயல்பாக வருகிறது. ஆக ஆலயம், அம்பலம், கோட்டம், கோவில் என்ற இந்தச் சொற்கள் எல்லாமே இனக்குழுப் பொருள்களையே தருகின்றன.
அந்த வகையில் சங்க இலக்கியங்கள் காட்டும் இறை வழிபாடுகள் எல்லாம் வெறுமே இனக்குழு வழிபாடுகளாகவே இருக்கின்றன. அவற்றில் மீநிலைச் சமயப் பொருள்கள் பொதுவாக அமைவதில்லை. [பெரும் ஆதன் (=பரமாத்மா), உயிர் ஆதன்(=ஜீவாத்மா), பதி - பசு - பாசம் போன்று விளக்கம் சொல்லும் மெய்யியல்கள் எழுவதற்கு முன்னமே இருந்த பொருளை நான் இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.] தமிழகத்துள் சங்க காலத்திற்குச் சற்று முன்னால் நுழைந்த வடபுலத்து வேத நெறியும் கூட முதலில், வேத நெறியின் வழி வேள்வி நடத்துவது, வேண்டுதல், அவி சொரிதல் என இனக்குழு வழிபாட்டையே காட்டுகிறது. இந்த வேத நெறி தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிப் பலவிதமான தவறான புரிதல்கள் தமிழ் இணையத்தில் உலவுகின்றன. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் நான் பேச முற்படவில்லை. வேறு ஒரு பொழுது பார்க்கலாம்.
இந்த இனக்குழு வழிபாட்டைக் கேள்வி கேட்டு வாதப் படுத்துவதின் மூலம், உலகாய்தம், செயினம், புத்தம், ஆசீவகம் போன்றவை கலகச் சமயங்களாய் (polemic religions) நம்மூரில் எழுந்தன. அவற்றிற்கு விடை சொல்லும் முகத்தால், எதிர்வினையாக, வடநாட்டில் உபநிடதங்களும், தமிழகத்தில் மாணிக்க வாசகராலும், திருமூலராலும், திருவாசகமும், திருமந்திரமும் எழுந்தன. திருவாசகத்திற்கு முந்திய மெய்யியற் செய்திகளை நான் தமிழில் கண்டதில்லை.]
”சரி, கி.பி.285-க்கு முன்னால், இந்த விழா எதுவாக இருந்திருக்கும்?” என்பதை இனிப் பார்ப்போம்.
கி.பி.285 கால அளவில் தான், நம்மூரில் ஆண்டு ஒன்றை நான்கு பருவங்களாய்ப் பிரிக்கும் பழக்கம் பெரிதும் புழக்கத்திற்கு வந்தது. சங்க இலக்கியம் முழுதிலும் இந்த நான்கு பருவக் காலம் குறிப்பிடாதது வியப்பாக இருக்கிறது. மாறாகப், பின்பனி தொடங்கி, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி ஈறாக ஆறு பெரும்பொழுதுகள் ( = இருதுப் பருவங்கள்) குறிப்பிடப்படுகின்றன.
இப்படிப் பின்பனியில் ஆண்டைத் தொடங்குவதற்கு சங்க இலக்கியத்திலும்,வடமொழி சாற்றங்களிலும் சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பிய வழக்கத்தின் படி காரில் இருந்து ஆண்டு தொடங்கியதும் புலப்படுகிறது. இளவேனிலிற் தொடங்கியது சங்க காலம் முடியும் போதே ஏற்பட்டிருக்க வேண்டும். (சிலம்பில் இந்திரவிழா இளவேனிலில் தொடங்குகிறது.)
எந்தவொரு சூரிய ஆண்டுத் தொடக்கமும் (tropical year beginning) பனிமுடங்கல், வேனில் முடங்கல், இரு ஒக்க நாட்கள் என்ற நான்கு நாட்களில் தான் தொடங்க முடியும். அவற்றில் ஒக்க நாட்கள் என்பவை வானியல் அறிவு கூடிய காலத்தில் கணக்கிட்டுப் பார்த்தே அறிய முடியும். ஆனால் முடங்கல் நாட்களோ வெறும் குச்சியின் நிழலை வைத்தே அறிந்து விட முடியும்.
இனக் குழுக்களாய் வாழ்ந்த காலத்தில் கூட நேரம் என்பது நிழலை வைத்தே கண்டறியப் பட்டது. இந்திய வானியலில் சாய் என்ற சொல் நிழலின் வழி வானியல் படித்த வரலாற்றை நமக்கு உணர்த்தும். (சாய் என்பது வடமொழியில் jya என்று ஒலிபெயர்ப்பாகும்; வடமொழியில் இந்த ஒலிபெயர்ப்புச் சொல்லுக்குப் பெண்ணின் மார்பு வளைவு என்ற பொருள் இருந்ததைக் கண்டு, அரபு வழி கிரேக்கம் போன போது, sine என்ற சொல்லெடுக்கும். தமிழனின் சாய் எப்படியோ திரிந்து இன்று மேலை நாடுகளிற் sine ஆகி நிற்கிறது.)
பின்பனியில் ஆண்டைத் தொடங்குவது என்பது சூரியனின் வட செலவில் இருந்து தொடங்குவதற்கு இணையானது. அப்படியானால் தைமுதல் நாள் பொங்கல் விழாவைக் குறிப்பதற்கு முன்னால் ஆண்டுத் தொடக்கத்தைக் குறித்தது என்ற பொருளையே ஏரணத்தின் மூலம் நாம் பெறுகிறோம். ஏதோ ஒரு காரணத்தால், நாள்காட்டுகளில் இருந்து இந்திய வானியலில் ஓரைகளுக்கு நகர்ந்த காலம் கி.பி.285. அதே காலத்தில் தான் இப்போதைய முற்செலவச் சுற்றும் தொடங்கியிருக்கிறது. ஆறு பெரும்பொழுதுகளுக்கு மாறாய் நான்கு பருவங்களைப் பேசும் பழக்கமும் தோன்றியிருக்கிறது. களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் நிலைத்ததும் இதே காலமே. இன்னும் இது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டிய செய்திகள் பலவும் இருக்கின்றன.
பெரும்பொழுதுகளுக்கு மாதங்கள் குறிப்பிடும் போது இந்தக் காலத்தில் (மாசி,பங்குனி), (சித்திரை, வைகாசி), (ஆனி, ஆடி), (ஆவணி, புரட்டாசி), (ஐப்பசி, கார்த்திகை), (மார்கழி, தை) என்று ஆறு இருமாதங்களைக் குறிப்பிடுவார்கள். இத்தகைய இன்றையப் புரிதலை மீண்டும் முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்தால், ஒவ்வொரு இருதுவையும் 24 நாட்களுக்கும் மேல் முன்தள்ளிப் பார்க்க வேண்டும். அப்படித் தள்ளும் போது, பின்பனி என்பது சங்க காலத்தில் (தை, மாசி) என்ற மாதங்களையும், இளவேனில் என்பது (பங்குனி, சித்திரை) மாதங்களையும், முதுவேனில் என்பது (வைகாசி, ஆனி) மாதங்களையும், கார் என்பது (ஆடி, ஆவணி) மாதங்களையும், கூதிர் என்பது (புரட்டாசி, ஐப்பசி)மாதங்களையும், முன்பனி என்பது (கார்த்திகை, மார்கழி) மாதங்களையும் குறித்திருக்க வேண்டும். அப்படியானால், ஆண்டுத் தொடக்கம் என்பது தை முதல் நாளே என்பது புரியும்.
பிறகு எப்படி ஆண்டு/ஆட்டை என்ற சொல் எழுந்தது? மேழ ஓரை என்பது ஆடு என்ற உருவைக் குறிக்கும் ஓரையே. ஆட்டின் வழி ஏற்பட்ட சொற்கள் ஆண்டு, ஆட்டை என்பவை. ஆடு தலையாக எண்ணப் பட்டது நெடுநல் வாடையில்,
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி -----
என்று குறிப்பிடப்படுகிறது. உறுதியாக நெடுநல் வாடை என்பது கி.பி.285க்கு முன்னர் எழுந்த பாட்டே ஆகும்.
அப்படியானால், இரண்டு விதமான ஆண்டுத் தொடக்கங்கள் (ஒன்று தையில் தொடங்குவது, இன்னொன்று சித்திரையில் தொடங்குவது) இந்த நாவலந்தீவில் இருந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய், தைத்திங்கள் என்பது ஆண்டுத் தொடக்கம் என்ற குறிப்பு ஒழிந்து, அதே பொழுது, பழைய நினைவுகளைக் குறிக்கும் முகத்தான் சூரியப் படையலோடு அது அமைந்து போனது; அதே காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் சித்திரைத் தொடக்கமே ஆண்டுத் தொடக்கம் ஆயிற்று போலும்.
சூரியன் மேழத்தில் நுழைவதே இன்றையத் தமிழர் புரிதலில் ஆண்டுப் பிறப்பு. அதே போல சூரிய மானத்தின் படி, சூரியன் ஓர் ஓரையில் இருந்து இன்னோர் ஓரைக்குப் போவதே மாதப் பிறப்பாகும். சூரிய மானப் பெயர்களான, மேழம் (=மேயம்>மேஷம்), விடை (ரிஷபம்), ஆடவை (மிதுனம்), கடகம், மடங்கல் (=சிகையம்>சிம்ஹம்), கன்னி, துலை(=துலாம்), நளி (விருச்சிகம்), சிலை (தனுசு), சுறவம் (மகரம்), கும்பம், மீனம் என்ற பெயர்களையே மலையாளத்தார் போலத் தமிழரும் புழங்கினால் நன்றாக இருக்கும். [இப்பொழுது சூரியச் சந்திரமானப் பெயர்களான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம். பழைய கல்வெட்டுக்களில் ஞாயிற்று மாதங்களும் (காட்டாக மகர ஞாயிறு), திங்கள் மாதங்களும் (தைத் திங்கள்) பதிவாக்கப் பட்டிருக்கின்றன.]
இன்றோ, மேலையரின் தாக்கத்தால் மீண்டும் பனிமுடங்கலுக்கு இணையான சனவரி 1 தொடக்கத்தை ஆண்டுத் தொடக்கமாய்க் கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது. மாதங்களைக் கூட சூரிய மாதங்களையோ, சூரியச் சந்திர மாதங்களையோ சொல்லாமல் மேலையர் மாதங்களை வைத்தே சொல்லும் பழக்கமும் கூடி வருகிறது. ஒரு 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் கூட மார்கழி மாதத்து இசைவிழா என்று தான் சொல்லக் கேட்டிருக்கிறோம்; இன்றைக்கு "டிசம்பர் சீஸன்" என்றால் தான் பலருக்கும் விளங்குகிறது. காலத்தின் கோலம் பாருங்கள்!
கட்டுரையை முடிப்பதற்கு முன்னால் ஒரு வேண்டுகோள்.
பொங்கல் விழாவில் "சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு நன்றி சொல்லுகிறோம்" - அவ்வளவு தான். அந்த நன்றி, சமயம் சாராத, பொது இறைப் பெயருக்குப் போகிறது. பொங்கலும் படையலும் மெய்யியற் சமயம் சாராதவை. என்னைக் கேட்டால், இந்த விழா எந்தச் சமயத்தவரும் பழகக் கூடிய விழா. [திருவோணம் என்ற விழாவைக் கூட பல சமய நெறியினரும் கேரளத்தில் கொண்டாடுகின்றனர். மாவலி மீண்டும் தங்கள் வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியைத் தருவான் என்று எண்ணுகிறார்கள். இன்றைக்குத் திருவோணம் தமிழகத்தில் கொண்டாடவில்லை என்றாலும் அது உறுதியாகத் தமிழர் பண்டிகை தான்; மாவலியும், பெருங்கலாதனும்(>பெருகலாதன்>ப்ரகலாதன்; ஆதன் என்பதே அவன் சேர அரசன் என்பதை நமக்கு உணர்த்தும்) நம் தமிழ் அரசர்கள் தான். சங்க இலக்கியத்தில் பல இடங்களில் திருவோணம் நம்மூரில் - குறிப்பாக மதுரையில் - கொண்டாடப் பட்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன. பழந்தமிழகத்தில் ஒரு பகுதியான கேரளத்தில் மட்டுமே இப்பொழுது திருவோணம் கொண்டாடப் படுகிறது.]
பொங்கலைப் பொதுவாய்த் தமிழர் கொண்டாடுவதற்கு என்ன தயக்கம், இதில் சமயம் எங்கே வந்தது, என்று புரியவில்லை. பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும் மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே! கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.
பொங்கலோ பொங்கல்!
அன்புடன்,
இராம.கி.
37 comments:
ஹய்யோ...இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா ? பதிவை எழுத உங்களுக்கு எப்படியும் ரெண்டு நாள் பிடிச்சிருக்குமே !!!
நன்றி !!!!
ஆகா என்ன நீண்ட விளக்கம்,
இப்படியும் பொங்கலுக்கு ஒரு மறு பக்கம் உள்ளதா
என ஆச்சரியமாக உள்ளது.
மிக்க நன்றி இராமகி.
-கடலூர் முகு-
இராமகி ஐயா,
பொங்கலைப் போன்றே அதுகுறித்த இனிப்பான பலதகவல்களை அறிந்து கொண்டேன்
நன்றி ஐயா !
ஐயா,
வழக்கம் போல் கலக்கல்.தங்களின் காலங்கள் தொடரை முன்பே பலமுறை
படித்திருப்பதால், இக்கட்டுரைக்கான புரிதல் சுளுவாகிறது.
புறநானூற்றில் பிட்டங்கொற்றனைப் போற்றி வரும் பாடல்கள் ஒன்றில் பொங்கலுக்கான
குறிப்பு இருப்பதாக ஒரு சில தமிழறிஞர் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அது பற்றி தங்கள் கருத்து என்னவோ?
பொங்கல் வாழ்த்துக்கள் தங்களுக்கும்!
பிரதாப்
அன்பின் இராம.கி ஐயா,
முதலில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான பதிவு. இதுவரை அறிந்திராத பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
அன்புடன்
வெற்றி
//அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு,
மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக்
காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி,
வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு
போன்றவையே அன்று வைக்கப்படும்//
எங்கள் வீட்டில் மொச்சை, கத்திரி போட்டு சாம்பார்
வைக்க வேண்டுமென்று சொன்னார்கள்.
இப்பதான் புரிகிறது.
இது இந்து மத பண்டிகையாக இருந்தால் நிலத்திற்கு
அடியில் விளையும் பொருட்கள் வைக்க மாட்டார்கள் அல்லவா?
அமெரிக்கர்களின் 'நன்றி கூறும் பண்டிகை'யும் உம் இது போலதான்
இருக்கிறது. இங்கு விளையும் சோளம் மற்றும் வான்கோழி
தான் பிரதான பொருட்கள்.
பல தகவல்கள் தெரிந்து கொண்டேன். பொங்கலுக்கு மட்டும் எப்படியாவது மொச்சைக் குழம்பு வைத்து விடுவார்கள் அம்மா. அதுவும் ஏனென்று புரிந்தது. நல்லதொரு விளக்கம். அனைவரும் கண்டிப்பாகப் படித்திட வேண்டியது.
மாணிக்கவாசகரை முதல் மெய்யியலார் என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் தமிழில் எழுந்த முதல் முழுமையான சமய நூல் நக்கீரரின் திருமுருகாற்றுப்படை என்கிறார்களே?
//அருமையான பதிவு. இதுவரை அறிந்திராத பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி///
ஐயா!
மிக நல்ல ஆய்வுக்கருத்துக்கள். நீங்கள் குறிப்பிடுவது போன்று மதம்சாராத இனக்குழுக்கொண்டாட்டம் என்பதே எனது எண்ணப்பாடும். ஐரோப்பியர்களிடமும் பனிக்கால முடிவில் இரவில் நெருப்பெரித்து மகிழ்வுறும் கொண்டாட்டம் தற்போதும் சில இடங்களில் இருந்து வருகிறது. அதுவே கோலிப்பண்டிகையாக அங்கு வந்து சேர்ந்திருக்கலாம். ஹோலி எனும் ஆங்கில அல்லது இலத்தின் சொல்லடிக்கு மகிழ்ச்சி என்றுதான் பொருளென நினைக்கின்றேன். பிழையெனில் மன்னிக்கவும். தவறைச்சுட்டவும்.
விரிவான பதிவுக்கு நன்றி.
ஐயா அவர்களுக்கு,
தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள். இப்பொழுதுதான் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது. இனிய தமிழில் வானவியலை (astronomy) மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி!!!
ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவுகள் படிக்கும்பொழுது புதிய பல தமிழ் கலைச் சொற்களை அறிந்து கொள்ள முடிகிறது.
தகவலுக்காக மட்டும் -
இதைத்தான் வடமொழியில் உத்தராயன புண்யகாலம் என்று சொல்கிறார்கள். உத்தரம் என்றால் வடக்கு. மகாபாரத்தில் பீஷ்மர் உத்தராயன புண்ய காலம் வரை அம்பு படுக்கையில் காத்திருந்து உயிர் விடுகின்றார் என்று சொல்லப் படுகிறது.
ஒரு கேள்வி -
//சூரியன் மேழத்தில் நுழைவதே இன்றையத் தமிழர் புரிதலில் ஆண்டுப் பிறப்பு.//
தை மாதத்தில் சூரியன் மேழத்தில் நுழைவது இல்லையே...? தை மாதத்தில் சூரியன் மகரத்தில் (சுறவம்) அல்லவா நுழைகிறான். அதனால்தானே 'மகர சங்க்ராந்தி' என்றும் பல இடங்களில் இதையே சொல்கிறார்கள்?
சூரியன் மேழத்தில் நுழைவது 'பங்குனி' மாதத்தில் அல்லவா? அதை தெலுங்கர் மற்றும் கன்னடியர் 'யுகாதி' (புதிய வருடம்) என்று கொண்டாடுகின்றனர்.
தமிழர் மற்றும் மலையாளிகள் 'விஷு' என்னும் சித்திரை மாதப் பிறப்பை 'புது வருடமாக கொண்டாடுகிறோமெ... அப்பொழுது சூரியன் 'ரிஷப'த்தில் அல்லவா நுழைகிறது?
கேள்விகளில் தவறிருந்தால் மன்னிக்கவும். மேலும் பல தகவல்கள் அறிந்து கொள்ளவே ஆசை...
போன பின்னூட்டத்தில் சிறு தகவல் பிழை செய்து விட்டேன்.
தை மாதம் பிறக்கும் பொழுது, சூரியன் 'மகரத்தில்' இருந்து விடுபட்டு 'கும்பத்திற்கு' ஏகுகிறார். மாசியில் மீனம், பங்குனியில் மேழம்.
மீண்டும் உங்கள் அரிய தகவல்களுக்கு நன்றி!
உங்கள் பதிவை மீண்டும் ஊன்றி படித்ததில் எனது கேள்விகளுக்கு விடைகள் கிடைத்து விட்டது.
எனது முந்திய பின்னூட்டங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!!!
தண்ணீர் தேசத்திற்கு பிறகு தமிழில் நான் படித்த அற்புதமான அறிவியல் கலந்த இலக்கிய படைப்பு. அதற்கு என் மரியதையை உரித்தாக்குகிறேன்.
என் பாட்டன், பாட்டியும் மற்றும் என் கிரமத்தவரும், இன்னும் தை பொங்கலை வருசப் பொறப்பு என்றுதான் சொல்கின்றனர்.
//பொங்கலைப் பொதுவாய்த் தமிழர் கொண்டாடுவதற்கு என்ன தயக்கம், இதில் சமயம் எங்கே வந்தது, என்று புரியவில்லை. பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும் மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே! கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.//
ஆனந்தம்! ஆனந்தம் மனிதத்தை உயரே தூக்கிப்பிடித்துள்ளீர்.
//புவிக்கு தன்னுருட்டம் (self-rotation), வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration; பம்பரம் போன்ற ஆட்டம்) என்னும் இன்னோர் இயக்கமும் இருக்கிறது. அதைப் புவியில் இருந்து புரிந்து கொள்வதற்கு மாறாக இந்த ஒக்க நாட்களின் இயக்கமாய்ப் புரிந்து கொள்ளுவது இன்னும் எளிதாக இருக்கும். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் இந்த ஒக்க நாட்கள் என்பவை சிறிது சிறிதாக முன்நகர்ந்து கொண்டிருக்கின்றன.//
அறிவியலை தமிழில் சொல்லமுடிகிறது. இனி எதற்கு ஆங்கிலம் வழி அறிவியல் படிப்புகள். இன்னும் அறிவியல் கலந்த படைப்புகளை தாருங்கள்.
//(சிவகங்கை வட்டாரத்தில் ஒருக்களித்தல்/ ஒருக்கணித்தல் என்ற வினைச்சொல் சாய்ந்து இருத்தல் என்ற பொருளைக் கொள்ளும். ஒருக்களித்துப் படுத்தான் என்றால், மல்லாக்கப் படுக்காமல் கொஞ்சம் திரும்பிக் கிடைமட்டத்திற்குச் - horizontal - சாய்ந்தாற்போல் ஒருபக்கமாய் உடம்பை வைத்துப் படுப்பது//
சிவகங்கை மட்டும் அல்ல கொங்கு நாடு மற்றும் மத்திய தமிழகத்திலும் அதே வார்த்தை அர்தம் மாறமல் புழக்கத்தில் உள்ளது.
அற்புதமான படைப்பிற்கு அடியேனின் நன்றி.
-இவன்
>>>>இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா ?<<<<<<
என்ன ஒரு அருமையான தகவல் களஞ்சியம். இன்னும் இரண்டு முறையேனும் படித்தால்தான் பாதியாவது புரியும். (குறை என் புரிந்துகொள்ளும் அளவில்தான். கட்டிரையில் அல்ல)
அப்படிப்பட்ட கட்டுரைக்கு வந்த முதல் பின்னூட்டம் செருப்பாலடிச்ச மாதிரி இருக்கு. (மரு)மகன் தொ.கா.தனத்த அங்கனயே விட்டுருங்க...
மீண்டும் அருமையான தகவல்கள். ஒரு சிறிய சந்தேகம். பொங்கல் பானையில் வீபூதி குங்குமம் வைப்பார்கள் அதனால் சமய வழிப்பாடு என்று சொல்லப்பட்டிருந்தது. என் அம்மா பொங்கல் பானையின் வெளி வாயில் (வெங்கலபானை) இஞ்சி, மஞ்சள் கொத்து கட்டி, சுண்ணாம்பு குழைத்து பட்டையாய், வீபூதி பட்டை போல தீட்டுவாள். மற்றப்படி பொங்கலோ பொங்கல் என்று நாங்கள் கத்தினால் பொங்கல் ஆயிற்று :-)
அன்பிற்குரிய செந்தழல் ரவி,
வருகைக்கு நன்றி. இதை எழுத இரண்டு நாட்களுக்கும் மேல் பிடித்தது.
அன்பிற்குரிய கடலூர் முகு,
வரவிற்கு நன்றி.
அன்பிற்குரிய கோவி.கண்ணன்,
கனிவிற்கு நன்றி.
அன்பிற்குரிய பிரதாப்,
காலங்கள் தொடரை இன்னும் முடிக்காது இருக்கிறேன். பிட்டங்கொற்றன் பற்றிய புறநானூற்றுப் பாடல்களை மீண்டும் படித்து விட்டேன். அதில் பொங்கல் விழா பற்றிய குறிப்பை என்னால் காணமுடியவில்லை. உங்களுடைய விளக்கம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்; தெரிந்து கொள்ளுகிறேன்.
அன்பிற்குரிய வெற்றி,
வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி.
அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,
நான் சொன்னது எங்கள் பக்கத்து வழக்கம். மொச்சை பற்றி உங்களிடம் இருந்து தெரிந்து கொள்ளுகிறேன். பொதுவாக மேலையர் காய்கறிகளை அன்று சேர்க்க மாட்டார்கள்; அந்தப் பழக்கமும் கூட நம்முடைய இனக்குழு (tribal) மரபுகள் ஒட்டியது என்றே நான் புரிந்து கொள்ளுகிறேன்.
அன்பிற்குரிய இராகவன்,
மொச்சை பற்றிய செய்தி எனக்குப் புதிது.
திருமுருகாற்றுப்படை என்பது நம் பண்டைய முருகன் வழிபாட்டை விவரிக்கும் நூல். அது மெய்யியல் நூலாக முடியுமா? அது மெய்யியல் தேற்றங்களை வைக்கிறதா? சங்க காலச் சமயப் புரிதல்கள் பற்றி இன்னொரு பொழுதில் பேசலாம்.
அன்பிற்குரிய செல்வநாயகி
வருகைக்கு நன்றி.
அன்பிற்குரிய மலைநாடான்,
ஏன் ஆங்கிலம் இலத்தீனுக்குப் போகவேண்டும்? நாம் தமிழில் களி என்பதும், கோலாகலம் (கோல கோலம் > கோலாகலம் = களியாட்டத்திலும் களியாட்டம்) என்பதும், வடபுலத்தில் ஹோலி என்பதும் ஒன்றே. களி / கோலம் என்பது மகிழ்ச்சி தானே.
இந்தக் களி கொள்ளும் பண்டிகை என்பது தையில் பனி முடங்கலை ஒட்டி வருவதல்ல. அது பசந்த ஒக்கநாளை ஒட்டி வருவது. உடன் அயன முறைப்படி அது இன்றைக்கும் மார்ச்சு 22க்கு அருகிலேயே இந்திய நாட்டில் கொண்டாடப்படுகிறது. (நில்லயன முறைப்படி அது சித்திரை முதல் நாளில் கொண்டாட வேண்டியது. ஆனால் இந்தக் கோல நாளுக்கு மட்டும் நில்லயன முறையை யாரும் பயன்படுத்துவது இல்லை. ஏன் என்பது எனக்குப் புதிராக இருக்கிறது.) இந்தப் பசந்த ஒக்கநாள் களியாட்டம் (பல்வேறு நிறப் பொடிகளையும் நீரையும் தூவிச் செய்வது)வடநாட்டில் தான் பெரிதும் கொண்டாடப் படுவது.சிறிது சிறிதாகச் சென்னையில் வடவர் புழக்கத்தால் கூடி வருகிறது.
அன்பிற்குரிய ஸ்ரீதர் வெங்கட்,
உங்களுடைய முதலிரண்டு பின்னூட்டுக்களும் வந்தவுடன் வெளியிட்டுவிட்டேன். பின்னால் தான் உங்களின் மூன்றாவது பின்னூட்டைப் பார்த்தேன். உங்கள் வேண்டுகோளை நடத்த முடியாமற் போனதிற்கு மன்னியுங்கள்.
நான் சொல்லவந்த கணக்கைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி. இந்திய வானியலில் தமிழர் பங்கு சற்று அதிகமானது. ஆனால் பலரும் அதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். விளக்கிச் சொல்லவும் ஆளில்லை.
அன்பிற்குரிய இவன்,
உங்கள் பாராட்டிற்கு நன்றி. தைப்பொங்கலை ஆண்டுப் பிறப்பு என்று சொல்லுவதில் தவறு இல்லை. திருவள்ளுவர் ஆண்டு அப்படித்தான் செய்கிறது.
ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், பொங்கல் என்ற பண்டிகை சமயம் சாராதது என்று தான் சொல்ல முடியும். வீட்டின் முன்னே கோலம் போடுகிறோம்; நல்ல நாளில் வீட்டு வாசலில் வாழை கட்டுகிறோம். அதெல்லாம் சமய வழக்கமா, இல்லையே? அவை தமிழரின் பண்பாடு சேர்ந்த பழக்கங்கள். அது போல பொங்கல் வைப்பதும் பண்பாடு ஒட்டிய இனக்குழுச் செயலே.
அறிவியலைத் தமிழில் எழுதுவதற்கு எந்தத் தடையும் இல்லை. நமக்கு விருப்பம் இருக்கவேண்டும்; அவ்வளவுதான்.
கொங்கு நாட்டிலும், நடு நாட்டிலும் ஒருக்களித்தல் என்று புழங்குவது அறிந்து கொண்டேன்.
அன்பிற்குரிய கொட்டாங்கச்சி,
எங்கள் சிவகங்கைப் பாணியிலேயே பின்னூட்டு அளித்திருக்கிறீர்கள். நன்றி.
அன்பிற்குரிய உஷா,
பொங்கல் பானையில் திருநீற்றுக் குங்குமம் இடவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வீட்டை அலங்கரிப்பது போல, பானையையும், அடுப்பையும் கூட நாம் அலங்கரிக்கிறோம். அதில் கோல மாவு, சுண்ணாம்பு, மஞ்சள் எனப் பலவாறாய்க் கலந்து கோலம் போடுகிறோம். மஞ்சள் தண்டால் அதைச் சுற்றிக் கட்டுகிறோம்; [அதில் ஒருசிலர் திருநீறு பூசுவதும், குங்குமம் வைப்பதும் அவர்களின் மீநிலைச் சமயப் பழக்கம்; அவ்வளவு தான். அவற்றிற்கு மாறாய், கோலத்தின் இடையே குறுக்கை (cross) இட்டால் குறைந்தா போய்விடும்? அதே போல மூன்றாம் பிறையிட்டால் சாமி கோவிக்குமா, என்ன? கிடையாது. ஏன், கோலமிடாமலே இருந்தாலும் கூடத் தவறில்லை. கோலம் என்பது ஓர் அழகு; அவ்வளவு தான்.]
நம்மூரில் இதுபோலப் பலவற்றை இனங் காண முடியாமல் எல்லாவற்றையும் சமயம் கலந்து பார்க்கும் பழக்கம் கூடிவருகிறது. [இதற்கு அந்த வலைத்தளம், இந்த வலைத்தளம் என்று ஒரு சில வலைப்பதிவர்கள் சான்று காட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. வலைத்தளங்களில் எழுதுபவை எல்லாம் கல்வெட்டுக்கள் அல்ல; அவை ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்களாகவும், அவர்களின் தனிப் புரிதல்களாகவும் இருக்கலாம்.]
நம்மூரில் பூ வைத்துக் கொள்ளுவது, பொட்டு வைத்துக் கோள்ளுவது, வீட்டின் முன் கோலம் போடுவது, நல்லநாள், பெரிய நாளில் வாழை மரம் கட்டுவது, தோரணங்களில் தென்னை யோலை கட்டுவது, தமிழிசையில் பாடுவது, நம்மூர் முறைப்படி ஓவியம் போடுவது, கல்லில் சிலை வைப்பது இன்னும் இது போல நூற்றுக் கணக்கான பண்பாட்டுக் கூறுகளில் எல்லாம் சமயத்தை நுழைத்து இது இந்து, இது இந்து அல்லாதது என்று பிரித்து நாட்டில் குழ்ப்பத்தைக் கொண்டுவருவது நன்மை பயக்காது என்று மட்டுமே சொல்ல முடியும்.
இனக்குழுக் கூறுகள், பண்பாட்டுக் கூறுகள் என்பதற்கு சமய முலாம் கொடுக்க முனைந்தால், அப்புறம் எங்கு பார்த்தாலும் நாவலோ நாவல் தான்! இந்த மண் ஒரு நானூறு ஆண்டுகள் நாவலோ நாவலில் சீரழிந்திருக்கிறது. தமிழக வரலாற்றைச் சரியாக அறிந்தவர்கள் இது நடவாமல் இருப்பதில் கவனமாய் இருப்பார்கள். (நாவலோ, நாவல் என்பது சமய வாதம் செய்யும் போது செய்யும் கூப்பாடு; நா. பா.வின் மணிபல்லவம் படியுங்கள்; புரியும்)எதற்குத் தான் நாவலோ, நாவல் என்று வரைமுறை கிடையாதா?
உஷா, மேலே எழுதியது உங்களுக்கு என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் கேட்டதற்கு அருகில் வந்ததால், அது தமிழர்க்குப் பொதுவாய் எழுதியது.
பொங்கல் விழா முடிந்து போனாலும், அன்பர்கள் எல்லோருக்கும் பொங்கலோ பொங்கல்! எல்லா வளமும் சுரக்க என் வேண்டுதல்கள்.
அன்புடன்,
இராம.கி.
அன்பின் இராம.கி. அவர்களே,
பொங்கல் தொடர்பான வானியல் செய்திகளை மிக நன்றாக அளித்துள்ளீர்கள். ஆனால், இந்தக் கொடுந்தமிழ் நடையை மாற்றி எல்லாரும் புரிந்து கொள்ளுமாறு எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பாரதம் முழுவதும் சங்க்ராந்தி பற்றி பறிந்த எல்லா அறிஞர்களும் இதே வானியல் நிகழ்வுகளைப் பற்றி இப்படியே தான் சொல்வார்கள். ஏனென்றால் இவை அனைத்தும் பாரத, இந்துப் பண்பாட்டின் கூறுகளே அல்லவா?
// பொங்கலின் போது சிவன், விண்ணவன் என்று எந்தச் சமயத்தின் தொன்மக் கதைகளும் ஊடே கலந்து சொல்லப் படுவதில்லை. பொங்கலுக்கான படையல் என்பதும் வெட்ட வெளியில் சூரியனுக்குக் கீழே அளிக்கப் படுகிறது.//
சூரியன் என்பது தெய்வம் என்ற எண்ணத்தில் தான் அந்தப் படையல் வைக்கப் படுகிறது இல்லையா? இன்றளவும் சூரியனைத் தெய்வமாக வழங்கும் பழக்கம் இந்து மதத்தில் தானே உள்ளது? அதுவும் சைவம்,வைணவம், சாக்தம் என்ற எல்லா மதப்பிரிவுகளிலுமே சூரிய வழிபாடு உள்ளதே. இது ஒன்றே போதாதா பொங்கல் இந்துப் பண்டிகை என்பதற்கு?
ஏருடைக் கதிர்களாகி - அப்பர்
சீராச் சுடர்கள் இரண்டாய் - நம்மாழ்வார்
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் - அபிராமி பட்டர்
மேலும், equinox, solastice பற்றி எல்லாம் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். தைப் பொங்கல் மட்டுமல்ல இந்த எல்லா வானியல் நிகழ்வுகளையுமே ஏதாவதொரு வகையில் கொண்டாடும் பழக்கம் இந்து மதத்தில் தானே உள்ளது? இந்தக் கொண்டாட்டங்களை ஆபிரகாமிய மதங்கள் திட்டமிட்டு அழித்து வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
// மேலையர் காய்கறிகளை இந்தப் படையலோடு வைப்பதைத் தவிர்ப்பார்கள்), //
நீத்தார் கடன் சடங்குகள் எல்லாவற்றிலும் கூட மேலைக் காய்கறிகள் தவிர்க்கப் படுகின்றன. கேட்டால் நீத்தார் கடனும் சமயச் சடங்கல்ல, இனக்குழு அது, இது என்று சொல்லுவீர்கள் :))
// கோலமிட்டுச் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் கூடச் சமயஞ் சேராத ஈடுபாடே இருக்கும். //
இது வெற்று வாதம். இந்து மதம் தவிர வேறு எந்த மதத்தில் கோலமிடும் பழக்கம் உள்ளது என்று கொஞ்சம் விளக்க முடியுமா?
மேலும், நீங்கள் சொல்வது போல கோலம் வெறும் அழகுச் சித்திரம் மட்டும் அல்ல. பூமியைத் தாயாக மதித்துப் போற்றிய சமய, கலாசாரம் நிலமடந்தையைப் போற்றி அழகு செய்யும் வெளிப்பாடு தான் அது!
இதெல்லாம் குழு கலாச்சாரம் என்று வேண்டுமென்றே திரிக்கும் உள்நோக்க அரசியலை என் பதிவிலேயே சாடியுள்ளேன்.
http://jataayu.blogspot.com/2007/01/blog-post.html
இராமகி ஐயா.. இனிமேல் பொங்கலையும் சிறப்பாகக் கொண்டாடுவேன்.
தகவல்களுக்கு மிக்க நன்றி.
மிக மிக நல்ல பதிவு ஐயா. ஏற்கனவே அரைகுறையாய் தெரிந்திருந்த விதயங்களை இந்தப் பதிவைப் படித்ததன் மூலம் நன்கு புரிந்து கொண்டேன். மிகத் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். பல கலைச்சொற்களையும் குறித்து வைத்துக் கொண்டேன்.
சில ஐயங்கள்/கேள்விகள்.
சூரியன், காரண கருமங்கள் போன்ற சொற்கள் தமிழா? நீங்கள் அவற்றை முதல் பத்தியில் பாவித்திருப்பதைக் கண்டு கேட்கிறேன்.
பண்டிகை என்ற சொல்லின் அடிப்படை எது? எந்தப் பொருள் குறித்து இந்த சொல் அமைந்தது?
அன்பிற்குரிய திரு. ஜடாயு,
"இந்தக் கொடுந்தமிழ் நடையை மாற்றி எல்லாரும் புரிந்து கொள்ளுமாறு எழுதினால்" என்று சொல்லியிருந்தீர்கள். நான் வியந்து போனேன். "கொடுந்தமிழ்" என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா என்ற அய்யமே எனக்கு வந்துவிட்டது. கொடுந் தமிழ்நடை என்பதும் கொடுந்தமிழ் நடை என்பதும் வெவ்வேறானவை. நான் கொடுந்தமிழ் நடை எழுதவில்லை. ஓரளவு செந்தமிழ் நடையில் தான் எழுதினேன். எங்கள் ஊர் வட்டார நடையில் எழுதினால், அது புரிவது கடினமாய் இருப்பதாய் படிப்போரில் சிலர் முன்னே கூறியதால், இந்த நடைமாற்றம் ஏற்பட்டது. அது கொடுந் தமிழ்நடை என்று நீங்கள் புரிந்து கொண்டால், நான் சொல்ல ஒன்றுமில்லை. என் நடை எனக்கு என்றுதான் சொல்லமுடியும். என்னால் பண்ணித்தமிழ் எழுத்து நடைக்கு மாறுவது இயலாதது.
"பாரதம் முழுவதும் சங்க்ராந்தி பற்றி பறிந்த எல்லா அறிஞர்களும் இதே வானியல் நிகழ்வுகளைப் பற்றி இப்படியே தான் சொல்வார்கள். ஏனென்றால் இவை அனைத்தும் பாரத, இந்துப் பண்பாட்டின் கூறுகளே அல்லவா?" என்று சொல்லியிருந்தீர்கள். வானியல் நிகழ்வுகள் என்பவை உலகெங்கும் ஒன்றுதான்; நில்லயன முறையில் சூரியன் வடசெலவு கொள்வது உலகெங்கும் ஒரே நிகழ்வு தான். அந்த நிகழ்வில் பாரத, இந்துப் பண்பாட்டின் கூறுகள் எங்கே வந்தன என்று எனக்குப் புரியவில்லல. நிகழ்வுகளைக் கூறும் முறையில், புரிந்து கொள்ளும் முறையில் வேண்டுமானால் பண்பாட்டுக் கூறுகள் எழலாம். எல்லாவற்றிலும் "இந்துப் பண்பாடு" பார்க்கும் வழக்கம் என்னிடம் கிடையாது. "அந்த விழாவைத் தமிழ்நாட்டில் நடத்தும் முறையில் சமயத் தாக்கமோ, தொன்மக் கதைகளோ கிடையாது" என்றே நான் சொன்னேன். கட்டுரையை நீங்கள் சரியாக விளங்கிக் கொண்டது போல் தெரியவில்லை.
"சூரியன் என்பது தெய்வம் என்ற எண்ணத்தில் தான் அந்தப் படையல் வைக்கப் படுகிறது இல்லையா? இன்றளவும் சூரியனைத் தெய்வமாக வழங்கும் பழக்கம் இந்து மதத்தில் தானே உள்ளது? அதுவும் சைவம், வைணவம், சாக்தம் என்ற எல்லா மதப்பிரிவுகளிலுமே சூரிய வழிபாடு உள்ளதே. இது ஒன்றே போதாதா பொங்கல் இந்துப் பண்டிகை என்பதற்கு?" என்று கேட்டிருந்தீர்கள். படையல் வைப்பது சூரியனுக்கு முன்னால் என்பதால் சூரியன் தெய்வம் என்ற பொருள் இங்கு இல்லை. (வெவ்வேறு சமயத்தார் வெவ்வேறு குறியீடுகளைக் கொள்ளுவதால் அவை எல்லாம் தெய்வம் என்ற பொருள் இல்லை. எப்படிக் குறுக்கை (cross), பிறை (crescent), கிரந்தம் (granth sahib), தோரா (torah) போன்றவை தெய்வம் ஆகாதோ, அதுபோலச் சூரியன் என்பதுவும் தெய்வமாய் உணரப் படத் தேவையில்லை; உங்களுக்கு வேண்டுமானால் அது தெய்வமாய்த் தெரியலாம். அது உங்கள் உகப்பு.) சூரியன் வடசெலவு செய்வதால் இங்கே பழங்கால இனக்குழுப் (tribal) பழக்கத்தில் பனிமுடங்கலின் போது வெளியே வைத்துப் படையல் செய்யப் படுகிறது.
அந்தப் படையல் நான் புரிந்து கொண்டவரை எல்லாம் வல்ல ஒரே இறைவனுக்கே வைக்கப் படுகிறது. பொங்கல் என்பது சமயங்களுக்கும் முந்திய ஓர் இனக்குழுப் பண்டிகை. (இனக்குழுப் பண்டிகைகளைச் சமயப் பண்டிகைகளாகப் பார்ப்பது தேவையற்ற செயல். எல்லாவற்றையும் அப்படிச் செய்தால், அப்புறம் எதுதான் இனக்குழுச் செயல்?) தவிர, கி.பி.285க்கும் முன்னால் அது தமிழரின், (ஒருவேளை இந்தியரின்) ஆண்டுத் தொடக்கமாய் இருந்திருக்க மிகப் பெரிய வாய்ப்பு உண்டு. இன்றையத் தமிழக அரசின் அதிகாரத்தின்படி, அது இந்தக் காலத் தமிழர் ஆண்டுத் தொடக்கமும் கூட என்று புரிந்து கொள்ளுவது நல்லது.
பின்னால் வந்த சமயங்கள் பொங்கல் விழாவைத் தன்மயமாக்கி வெவ்வேறு பொருள் கொடுப்பது அவற்றின் கதையாடல் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். (எப்படி எகிப்திய சூரியப் பண்டிகையை கிறித்தவர் தம்வயப் படுத்தி கிறித்துமசு என்று ஆக்கினாரோ, அது போல. ஏசுகிறித்துவின் பிறந்தநாள் திசம்பர் 25 அல்ல என்று ஆழ்ந்த புலமையோடு பல அறிஞரும் மறுப்பார்கள்.) "சூரிய வழிபாடு" என்று அந்தப் பண்டிகைக்குப் புதுப்பொருள் கொடுப்பது உங்களுக்கு வேண்டுமானால் விதப்பாக இருக்கலாம். பொதுமையாகப் பார்த்தால் அப்படிச் சொல்லமுடியாது. இதில் சிவநெறி, விண்ணெறி என்று வெவ்வேறு சமயங்களை நீங்கள் நுழைக்க முற்படுவது சரியல்ல. தமிழர் என்ற பொதுமையில் அது தேவையில்லாதது.
"தைப் பொங்கல் மட்டுமல்ல இந்த எல்லா வானியல் நிகழ்வுகளையுமே ஏதாவதொரு வகையில் கொண்டாடும் பழக்கம் இந்து மதத்தில் தானே உள்ளது?" என்று சொல்லியுள்ளீர்கள். வானியல் நிகழ்வுகளை, குறிப்பாக இரண்டு ஒக்கநாட்கள், வேனில் முடங்கல், பனிமுடங்கல் ஆகியவற்றை (காட்டாக, இதே பொங்கல் நாளைச் சப்பானிய நாட்டுப் புறத்தார் "ஹொங்கலொ ஹொங்க" என்று சொல்லிக் கொண்டாடுகிறார்கள்) உலகில் வெவ்வேறு இனத்தார் பல்வேறு வகையில் கொண்டாடுகிறார்கள். பனிமுடங்கலை நீங்கள் சொல்லும் இந்து மதத்தோடு புணர்த்திப் பார்ப்பதும், கிறித்துவம், இசுலாம் போன்றவை அந்தக் கொண்டாட்டைத் திட்டமிட்டு அழிப்பதாகவும் நீங்கள் சொல்லுவது உங்களுடைய புரிதல். அதே போல திரு. நல்லடியார் "பொங்கல் என்பது இந்துப் பண்டிகை" என்று சொல்லுவது அவருடைய புரிதல். நீங்கள் இருவரும் சொல்லுவது போல நான் எண்ணவில்லை. இரண்டு எதிர்முனையில் இருக்கும் நீங்கள் தான் இதில் ஒன்றுபடுகிறீர்கள்.
"நீத்தார் கடன் சடங்குகள் எல்லாவற்றிலும் கூட மேலைக் காய்கறிகள் தவிர்க்கப் படுகின்றன. கேட்டால் நீத்தார் கடனும் சமயச் சடங்கல்ல, இனக்குழு அது, இது என்று சொல்லுவீர்கள் :))". உண்மை; நீத்தார் கடன் சடங்குகளையும் இனக்குழு சார்ந்த செயல்கள் என்றே சொல்லுவேன். பிண்டம் கொடுப்பது என்பது இனக்குழு சார்ந்ததே. நீத்தார் கடன் என்ன, "எங்கள் பக்கம் வீட்டில் நடக்கும் ஒவ்வோர் மணவிழாவிற்கு முன்னால் கூட எங்கள் முன்னோருக்குப் படைக்கும் வழக்கம் இருக்கிறது; வெறுமே விளக்கை ஏற்றி அதற்கு முன்னால் நாங்கள் படைக்கிறோம்; பொங்கலிடுகிறோம்; அன்று கூட மேலைக் காய்கறிகள் கிடையாது தான்." அய்யனாருக்குக் கிடாய் வெட்டிப் படைக்கிறோம்; (ஏன் சென்னைக்கு அருகில் பெரிய பாளையம் பவானி அம்மனுக்குக் கூட, ஆடி மாதம் கிடாய் வெட்டுகிறார்கள்.) பதினெட்டாம் படிக் கருப்பருக்கும், தொட்டியக் கருப்பருக்கும், முத்துமாரிக்கும் படைக்கிறோம்; எங்கணுமே மேலையர் காய்கறி கிடையாது; இந்தச் செயல்களை எல்லாம் நீங்கள் "இந்து மதம்" என்று கொண்டுவர முயன்றால் எப்படி? இவையெல்லாம் நாட்டார் வழக்காறு. இந்திய மாந்தவியலில் இவற்றை "non-brahminized practices" என்று சொல்லுவார்கள். There are many such practices in Tamil Society. Not all temples are brahminized yet. (பெரிய பாளையம் கோயிலில் ஒரு நாலைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட பெருமானக் குருக்கள் கிடையாது; இப்பொழுது எல்லாம் மாறிப் போய்விட்டது. இதைத் தயவு செய்து இழை மாற்றிக் கொண்டு போகாதீர்கள்.)
"இது வெற்று வாதம். இந்து மதம் தவிர வேறு எந்த மதத்தில் கோலமிடும் பழக்கம் உள்ளது என்று கொஞ்சம் விளக்க முடியுமா?" என்று கேட்டிருந்தீர்கள். எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, சிந்து சமவெளி, அசுடெக், மாயன், இங்க்கா, ஏன் சீனம், சப்பான் போன்ற பல்வேறு நாகரிகங்களின் ஓவிய, சிற்ப, கட்டிடக் கலைகளைக் கூர்ந்து பாருங்கள். கோல உணர்வு இழையோடுவது தெரியும். கோலம் என்பது அழகுக் கலை; அதையும் சமயத்தையும் முடிச்சுப் போடாதீர்கள். சமயத்தை மீறி மற்றவற்றை உங்களால் பார்க்கவே முடியாதா? எல்லாவற்றையும் சமயம் என்னும் ஒற்றைப் பரிமானத்தில் கொண்டுவர முயல்வது என்ன பழக்கம், அய்யா?
இப்படிச் சொல்லுவதால், நான் ஒழுங்கான சமயத்தான் அல்லன் என்று பொருளல்ல. நான் சிவநெறி, விண்ணெறி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவன் தான். தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பனுவல் ஆகியவற்றை முறையே படிப்பவன் தான். ஆனாலும், மாந்த நேயத்தை சமயம் என்ற ஒன்றின் மூலமாக மட்டுமே பார்க்காதவன். "இந்த உலகம் பெரியது. இதற்குப் பல்வேறு பரிமானங்கள் உண்டு; என்னுடைய பார்வை என்பது முழுமையான பார்வையல்ல; ஒருபக்கப் பார்வையே" என்ற சமயப் புரிதலில் வழுவாதவன்.
"நீங்கள் சொல்வது போல கோலம் வெறும் அழகுச் சித்திரம் மட்டும் அல்ல. பூமியைத் தாயாக மதித்துப் போற்றிய சமய, கலாசாரம் நிலமடந்தையைப் போற்றி அழகு செய்யும் வெளிப்பாடு தான் அது!" என்று சொல்லியிருக்கிறீர்கள். நான் மேலும் சொல்ல எதுவும் இல்லை. எனக்குக் கோலம் என்பது அழகுக் கலை மட்டும் தான். இன்றைக்கும் மார்கழியில் என் அண்டைப் புறத்தார் செய்யும் கோலங்களில் மனம் ஈடுபட்டு ஆழ்ந்து போகிறேன். ஒருகாலத்தில் ஓவியத்தில் ஈடுபட்ட எனக்கு அது களிகொள்ளும் கலை தான்.
"இதெல்லாம் குழு கலாச்சாரம் என்று வேண்டுமென்றே திரிக்கும் உள்நோக்க அரசியலை என் பதிவிலேயே சாடியுள்ளேன்.
http://jataayu.blogspot.com/2007/01/blog-post.html" என்று எழுதியுள்ளீர்கள். உள்நோக்க அரசியல் என்பதெல்லாம் எனக்குக் கிடையாது. நான் அறிந்ததை உள்ளமையோடு (realistic) சொன்னேன். அவ்வளவு தான். எல்லாவற்றையும் "இந்து மதம்" என்ற ஒற்றைச் சிந்தனைக்குள் அடைக்கும் போக்கு எனக்குக் கிடையாது. உங்கள் அரசியல் உங்களுக்கு.
அன்பிற்குரிய சிறில் அலெக்ஸ்,
"இனிமேல் பொங்கலையும் சிறப்பாகக் கொண்டாடுவேன்" என்று எழுதியிருந்தீர்கள். உங்கள் புரிதலுக்கு மகிழ்ச்சி.
அன்பிற்குரிய குமரன்,
"சூரியன், காரண கருமங்கள் போன்ற சொற்கள் தமிழா?" என்று கேட்டிருந்தீர்கள். சுள் என்னும் வேர் தமிழ். அந்த வேரின் வழியாகக் கிளைத்த சூரியன் என்னும் சொல் ஓர் இருபிறப்பி. பழகிப் போன காரணத்தால் நான் பயிலுகிறேன். கருமம் முற்றிலும் தமிழே. முன்னே ஏதோ ஒரு கட்டுரையில் விளக்கியிருக்கிறேன். கருத்தல் என்ற வினையிற் பிறந்த காரணம் என்பது இருபிறப்பி. தமிழ்வழி, அதைக் கரணியம் என்பாரும் உண்டு. நான் காரணம் கரணியம் என்ற இரண்டையுமே புழங்கியுள்ளேன்.
"பண்டிகை என்ற சொல்லின் அடிப்படை எது? எந்தப் பொருள் குறித்து இந்த சொல் அமைந்தது?" என்று கேட்டிருக்கிறீர்கள். "பண்டு" என்னும் சொல் மரபு என்ற பொருளில் அமையும். பண்டின் வழியானது பண்டிகை. அதாவது மரபு வழியானது பண்டிகை.
அன்புடன்,
இராம. கி
இந்த நாட்டில் வழங்கி வந்த/ வருகின்ற பழக்கவழக்கங்களுக்கு நாகரீக மெக்காலேயின் அடிவருடிகள் கொடுத்தப் பெயர் இந்து மதத்தினுடையது என்பதே! நம் நாட்டைப் பற்றி நம்மவர்க்கு பெருமையான எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக செய்த திட்டம்.
இந்து என்பதே இடத்தினை மையமாக வைத்து சொல்லப் படுகின்ற வார்த்தை. இமாலத்துக்கு தெற்கிலும் இந்து மா சமுத்திரத்துக்கு வடக்கிலும் வாழும் மக்கள் யாவரும் இந்துக்களே!
பாரதி பாப்பாப் பாட்டில் சேதமில்லா இந்துஸ்தானம் இதை தொழுது வணங்கிடடி பாப்பா! என்று கூறுகிறார்.
அவர் கூறிய இந்துஸ்தானத்தில் இன்றைய பாகிஸ்தானும் அடக்கம்.. வங்காள தேசமும் அடக்கம்!
வியப்பில்லை இவர்கள் இப்படி பேசுவதில்! விட்டுத் தள்ளூங்கள்!
//பொங்கல் தொடர்பான வானியல் செய்திகளை மிக நன்றாக அளித்துள்ளீர்கள். ஆனால், இந்தக் கொடுந்தமிழ் நடையை மாற்றி எல்லாரும் புரிந்து கொள்ளுமாறு எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.//சொன்னவர்-ஜடாயு.
ஜடாயு அவர்களே, இப்பதிவின் தமிழ்நடையை கொடுந்தமிழ் என்று சொல்லுவதை மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இராமகி ஐயா,
கோலம் உலகலாவியது என்ற கருத்தைப் பற்றி எனக்கு ஐயமிருக்கிறது. உங்களுக்கு நேரமிருக்கும்போது ஒரு விரிவான பதிவு அளிக்குமாறு வேண்டுகிறேன்.
//பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும் மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே! கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.//
இராமகி அய்யா பொங்கல் வாழ்த்துகள்.
தஞ்சை மாவட்டத்தில் மிராசுதார்கள் எனச் சொல்லப்படும் முஸ்லிம்கள் பொங்கலை இஸ்லாமிய நெறிமுறையோடு கொண்டாடுவதுண்டு. தை முதல் நாளன்று, அறுவடை செய்துவரும் முதல் நெல்லை அவசர அவசர்மாக காயவைத்து, பின் பதம் பார்த்து அவித்து சோறு சமைப்போம். இச்சோறு 'புது அரிசி சோறு' என அழைக்கப்படும். கொஞ்சமாக 3 மரக்கால் அல்லத் 6 மரக்கால் சோறாக்கி அச் சோற்றை மூன்று பகுதியாக பிரித்து ஒரு பகுதி உற்றம் சுற்றம் சூழ உண்டு களித்து, இரண்டாவது பகுதியை ஏழை எளியவர்களுக்கு கொடுத்து விட்டு, மூண்றாவது பகுதி 'மத்ராசா' வில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.இதில் பூசை புனஸ்காரம் கிடையாது.
புது அரிசி சோறு சமைத்தவுடன் கொஞ்சம் பிசு பிசு வென களி போல இருக்கும் அதனாலென்ன 'தால்ச்சா' எனப்படும் குழம்போடு கலந்து சாப்பிடுவோம். மாட்டுப் பொங்கலன்று மிராசுதார் வீட்டு மாடுகள் (கறவை+உழவு) அனைத்திற்கும் விடுமுறை, பண்னையாட்கள் முதல்நாளே மாட்டை ஓட்டிச் சென்று விடுவார்கள்.
பொங்கலன்று பண்னையாட்கள் வரிசை வரிசையாக வந்து மிராசுதார்களூக்கு கரும்பு வாழை சேவல் கொடுத்து விட்டு பகரமாக மிராசுதார் வழங்கும் வேட்டி சட்டை புடவை வாங்கிச் செல்வார்கள்.
பொங்கலன்று ராவூத்தர் வீட்டில் சமைக்கப்படும் சமையலை சாப்பிடமாட்டார்கள் கேட்டால் சாமி கண்ணைக் குத்திவிடும் என்பார்கள்.
உங்களின் இந்த பதிவு பொங்கல் பற்றிய எனது நெடுநாளைய புரிதல்களை விலக்கி,சரியான திசைக்கு உட்படுத்தியிருக்கிறீர்கள்.
எளிய நடையில் சுருக்கினால் நிறையபேருக்கு கைக்குறிப்பாக (பிரதி எடுத்து)கொடுக்க சுலபம்.
மிக நன்றி!
பொங்கல் வாழ்த்துகள்!
பொங்கலோ பொங்கல்!
படிக்கவே அரை மணி நேரம் ஆயிற்று...இதை எழுத எவ்வளவு உழைப்பு போய் இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
அருமையாக தொகுத்தளித்துள்ளீர்கள்..
புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!
பொங்கல் வாழ்த்துக்கள் !!
சுட்டிக் கொடுத்த கோவியாருக்கு ஒரு சிறப்பு நன்றி..!!
என் பதிவில் இதை நான் இனைக்கிறேன்.
பொங்கல் வாழ்த்துக்கள்
நன்றியுடன் வாழ்த்துக்கள்!
அறிந்திருக்க வேண்டியதை
அறிய வைத்தீர் வாழ்த்துக்கள்!
புரியாதார் புரிந்திடவும்
புனை செய்வோர் தெரிந்திடவும்
புரிய வைத்தீர் வாழ்த்துக்கள்!
சென்ற வருடம் எழுதிய உங்களது கட்டுரையை இந்த வருடம் தமிழ் வருட துவக்கம் மாற்றியமைக்கு காட்டாக காட்டியபோது. இப்படி கேள்விகளை எழுப்புகிறார்கள். உங்களின் பதிலை எதிர்பார்த்து இருக்கிறேன்.
"Just to support his guesswork, he assumes in
SANGAKALAM MUNPANI was in KAARTHIKAI, MAARGAZHI and
PINPANI was in THAI, MAASI. Please read the para 2 of
page 10 once again.
We all know PINPANI is MAASI, PANGUNI not THAI, MAASI,
and so does he. But just to show new year was
celebrated in THAI, he pushed two months back."
" it clearly says the new year
begins when the sun enters the Mesha rasi."
மேலதிக தகவல்களை தெரிவிக்கவும். உண்மையை அறியவேண்டிதான் கேட்டார்கள் மதசாயம் பூச அல்ல.
நன்றி,
பனிமலர்.
||சூரிய ஆண்டுத் தொடக்கம் (tropical year beginning) என்பது பனிமுடங்கல், வேனில் முடங்கல், இரு ஒக்க நாட்கள் என்ற நான்கு நாட்களில் தான் தொடங்க முடியும். ||
இன்னும் எளிய நடையில் எழுத உங்களால் இயலாது என்று நான் எண்ணவில்லை;நீங்கள் முயன்று இவ்வித நடையில் எழுதுகிறீர்கள் என்றே தோன்றுகிறது..
மேற்கண்ட வாக்கியத்திற்கான பொருள் எனக்கு சத்தியமாகப் புரியவில்லை..இந்த இடத்திலிருந்து பதிவின் தொடர்ச்சியும் புரியவில்லை.
கம்யுனிகேஷன் என்பதற்கான பொருள் சொல்லவந்த கருத்து அனைவருக்கும் கடத்தப் படுவதில்தான் இருக்கிறது;முயன்று எழுதியதற்கான பலன் அது அனைவரையும் சென்றடைவதில்தான் இருக்கிறது..
உங்களைப் புண்படுத்தும் நோக்கம் ஏதுமில்லை.
அண்ணே!
என்னத்தையோ வாய்க்கு வந்தத ஒளரிப்புட்டீங்கன்னு நினைக்கிறேன். நாங்கல்லாம் விஞ்ஞான ஜோதிடரப்பூ. கொஞ்சம் அடக்கி வாசிங்கோ.
திரு.முருகேசன்,
கட்டுரையை வாசித்த நீங்கள், சோதியத்திற்கும் வானியலுக்கும் வேறுபாடு தெரியாமற் கூடப் பேசமுற்படுகிறீர்கள். இதில் நான் எழுதியது உளறல் என்ற அடாவடிக் கூற்று வேறு. அரைகுறைப் படிப்பு எங்கேயும் கொண்டு சேர்க்காது.
Indian astronomy - An introduction by S.Balachadra Rao, Astrophysics of the solar system by K.D. Abhyankar போன்ற பொத்தகங்களைப் படித்துப் பாருங்கள். முடியுமானால் முற்செலவம் (precession) பற்றிக் கூகுளில் போட்டுப் பாருங்கள். ஏராளமாய்ச் செய்திகள் கொட்டும். அவற்றை ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.
கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு.
உங்கள் சோதிடம் உங்களோடு மட்டும் இருக்கட்டுமப்பு.
அன்புடன்,
இராம.கி.
அன்புடன்,
இராம.கி.
நனறு. பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
"இதெல்லாம் குழு கலாச்சாரம் என்று வேண்டுமென்றே திரிக்கும் உள்நோக்க அரசியலை" -- மிகவும் உண்மை!! முதலில் தமிழர்கள் சமயம் சாராத வர்கள் என்பார்கள். பின்னர், சமணம், புத்தம் என்பார்கள். இறுதியில் அல்லேலுயாவில் முடிப்பார்கள்.
இவரது அருமையான தமிழ் புலமை வீணாகிறதே என்று நிறையவே வருத்தமுள்ளது.
இன்றுதான் உங்கள் கட்டுரையை படிதேன்,தெளிந்தேன் நன்றி
ஞா.சிவமுருகன்
சிறப்பு ஐயா! மிகப் பயனுள்ளது. தொல்தமிழ் மரபின் காலக்கணித வானவியல் தொடர்நாட்காட்டி பற்றிய தேடலில் தாங்கள் மிகப்பெரும் தெளிவைத் தந்துள்ளீர்கள். வியப்பும் பெருமகிழ்வும் மனமார்ந்த நன்றியும் ஐயா.
https://youtu.be/BLjmLMX4JQY
https://youtu.be/lL_KqmrDnwA
https://youtu.be/v8KCNXzmpQ0
தமிழ் சிந்தனையாளர் பேரவை இதுபற்றிய விரிவான காணொளி வெளியிட்டிருக்கிறார் அவற்றை நீங்கள் பார்த்தால் ஆய்வுக்கு பயன்படலாம்
Post a Comment