Monday, January 29, 2007

கணிதச் சொற்கள்

ஒரு மாதத்திற்கு முன்னால், தமிழ் விக்சனரி மடற்குழுவில் கணிதம் பற்றிய சிறு சொற்தொகுப்பைக் கொடுத்து, இணையான தமிழ்ச் சொற்களைக் கேட்டிருந்தார்கள். (விக்சனரி மூலமாய் அந்த இளைஞர்கள் செய்யும் நல்ல பணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.) அதற்குச் சிலர் தங்களின் பரிந்துரையைக் கொடுத்திருந்தார்கள். அந்தப் பரிந்துரைகளைப் படித்த பின், தொகுதியின் பல சொற்களை நான் அசை போட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய பரிந்துரைகளை இங்கே கொடுக்கிறேன். இவற்றை ஏற்பது படிப்போரின் உகப்பு.

அந்தச் சொற்தொகுதியில் முதலில் வந்தது number; இதற்கு அவர்கள் கொடுத்த "எண்" என்ற சொல்லோடு, சிலபோது "எண்ணிக்கை" என்ற சொல்லும் பயன்படக் கூடும்.

இரண்டாவதாய் literal என்பதற்கு மதிப்புரு என்று சொல்லியிருந்தார்கள்; இதைக் காட்டிலும், எழுத்தாறு என்பது சரியாய் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. "எழுதிய படி" என்பதைத்தான் "எழுத்து ஆறு = எழுத்தாறு" என்று சொல்லுகிறேன். "literal ஆக எடுத்துக் கொள்ளாதே" என்பதை "எழுத்தாற்றாய் எடுத்துக் கொள்ளாதே!" என்று சொல்லலாம். "If you take it literally, you will get only this meaning." "இதை எழுத்தாற்றாய் எடுத்துக் கொண்டால், இந்தப் பொருட்பாடு தான் கிடைக்கும்."

(எழுத்தல்>எழுதல் என்ற வினைச்சொற்கள் இலத்தல்>இழுத்தல் என்னும் வினையில் இருந்தே திரிந்து வந்திருக்க முடியும் என்று பாவாணர் சொல்லுவார். அதன் அடிப்படையில் இங்கு தொடர்ந்து வரும் சொற்களும் உடனொட்டிய பொருட்பாடுகளைக் காட்டும். letter = எழுத்து, literature = இலக்கியம், literacy = எழுதுகை அறிவு, literary = இலக்கிய)

தொகுதியின் மூன்றாவது சொல், கணிதத்தில் வரும் term என்பதாகும்; இதற்கு இணையாய் உறுப்பு என்று அங்கு சொல்லியிருந்தார்கள். ஒரு கணக்குச் சரத்தில் (mathematical series) இருக்கின்ற சரக் கண்ணிகளை வெறுமே உறுப்பு என்று சொல்வது எனக்கென்னவோ, சரியாய் வராது என்று தோன்றுகிறது. ஒரு கொத்தின் (set) உள்ளே இருப்பவற்றை வேண்டுமானால், உறுப்புக்கள் (members) என்று சொல்லலாம். ஆனால், term என்பது உறுப்பு என்று சொல்லுதற்கும் மேம்பட்டது. கொடுத்திருக்கும் ஒரு சரத்தில் மேலும் மேலும் term களைக் கூட்டிக் கொண்டே போனால், சரத்தின் மதிப்பு இன்னும் துல்லியப்பட்டுக் கொண்டே வரும். காட்டாக,

e = 1+ 1/1! + 1/2! + 1/3! + 1/4! + ............ 1/n! +....... ,

என்ற மடக்கைச் சரத்தில் (exponential series), முதல் இரு term களைக் கூட்டினால் 2 என்ற மதிப்புக் கிடைக்கும். இதோடு, மேலும் இரு term களைச் சேர்த்துக் கொண்டால், இன்னும் துல்லிய மதிப்பாய் 2.666667 என்று கிடைக்கும். இன்னும் கூட்டுத் தொகையில் term களைச் சேர்க்கச் சேர்க்கச் சரத்தின் பக்கமடை மதிப்பு (approximate value) மேலும் மேலுந் துல்லியமாய்த் (accuracy) தெரிய வரும். சுருங்கச் சொன்னால், சரத்தின் மதிப்பு தீர்மானமாகும்.

தீர்தல்/தீர்த்தல் என்ற வினை முடிதல்/முடித்தல் என்ற பொருளைக் கொடுக்கிறது. "அவனைத் தீர்த்து விடு" என்று பேச்சு வழக்கின் மூலம், "அவனை முடித்து விடு" என்று தானே பொருள் கொள்ளுகிறோம்? தீர்த்துவிடு என்பது ஆங்கிலத்தில் terminate என்ற பொருள்தானே கொள்கிறது? (இதே போலத் தீர்வு என்ற சொல்லும் முடிவு என்ற பொருள் கொள்ளுகிறது அல்லவா?) அடுத்து, determine = தீர்மானி; determination = தீர்மானம் என்று பொருள் கொள்ளுவதை எண்ணிப் பார்க்கலாம். (பலரும் decisions என்பதற்கும் தீர்மானங்கள் என்றே சொல்லுகிறார்கள். காட்டாக, மாநாட்டுத் தீர்மானங்கள் என்ற பொதுச் சொல்லாட்சி. என்னைக் கேட்டால் அவற்றிற்கு decisions என்பதற்கு முடிபுகள் என்பதே சரியாக இருக்கும்.)

இப்படி ஓர்ந்து பார்த்தால், சரத்தின் மதிப்பைத் தீர்ப்பவை, தீரப் படுத்துபவை, termகள் ஆகும். தீர்மம் என்ற சொல் term என்பதற்குச் சரியாக இருக்கும். அதோடு தொடர்புறும் மற்ற சொற்களோடும், அது ஒத்திசையும். ஆற்று முனையைக் குறிக்கும் ஆற்றுத் தீரம் என்ற சொல்லாட்சியை இங்கே நினைவு கொள்ளுங்கள். (நதி தீரம் என்று வடமொழிப் படுத்திச் சொல்லுவார்கள். தீரம் என்பது வடமொழியல்ல; வடமொழியில் சற்றே ஓசை திரிந்து பயன்படுத்தப் படும் சொல்; அவ்வளவுதான்.) தேர்தலில், ஒருவரைத் தெரிந்தெடுக்கும் போது விதிக்கின்ற பொறுப்புக் காலத்தையும் தீர்மம் என்றே சொல்லலாம். [காட்டாக, இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரின் தீர்மம் 5 ஆண்டுகள் ஆகும்.] இதன் அடிப்படையில் technical terms என்பதை நுட்பத் தீர்மங்கள் என்று சொல்லலாம் (பலரும் கலைச்சொற்கள் என்றே சொல்லிப் பழகிவிட்டோம். துல்லியம் பார்த்தால் இதுவும் மாறவேண்டும்.)

term என்பதை ஒட்டி, terminal, terminus ஆகிய இரண்டையும் தீர்முனை, தீர்முனையம் என்று சொல்லலாம்; இதில் சுருக்கம் வேண்டினால், தீர் என்பதைத் தவிர்த்து முனையம் என்று சொல்லலாம். (அப்படித்தான் சென்னை வான்புகல் நிலையத்தில் - airport - சொல்லுகிறார்கள்; காமராஜ் உள்நாட்டு முனையம்; அண்ணா பல்நாட்டு முனையம்.) terminology என்ற சொல்லை தீர்மவியல் என்று சொல்லலாம்.

நான்காவதாய் expression என்பதற்குக் கோவை என்று அந்தத் தொகுதியில் கொடுத்திருந்தார்கள். கோத்தல் என்பது சேர்த்தல் என்றும், கோவை என்ற பெயர்ச்சொல் சேர்த்தது என்றும் பொருளைத் தரும். சேர்த்தது என்பது சரம் என்ற பொருளை உள்ளார்ந்து தரக்கூடும். ஆனால், expression என்பது ஒரு சரமாய் இருக்கத் தேவையில்லை. கணிதத்தில் relations (=உறவுகள்), equations (=சமன்பாடுகள் அல்லது ஒக்கங்கள்), functions (=பந்தங்கள்) போல expression என்பது ஒரு சில குறிப்பிட்ட, பந்தப்படாத வேறிகளை (independent variables) வைத்துக் கொண்டு, பந்தப்படும் வேறிகளை (dependent variables) வெளிப்படுத்துவதைக் குறிக்கும். இன்னும் கொஞ்சம் விளக்கமாய்ச் சொன்னால், ஒரு கட்டகத்தில் (system) பந்தப்படாத வேறிகள் நினைத்தபடியெல்லாம் இருக்க முடியாது. இதற்கென்று ஒரு நுணுமக் எண்ணிக்கை (minimum number) உண்டு. அந்த நுணும எண்ணிக்கைக்கிற்கு மேல், வேறிகள் இருக்குமானால், அந்த வேறிகள் எல்லாம் நுணும வேறிகளில் (minimum variables) இருந்து வெளிப்படுத்துவதாகவே இருக்கும். expression என்பதை வெளிப்பாடு என்று சொல்லுவதே சரியாக இருக்கும். கணிதம் அல்லாத துறைகளிலும் வெளிப்படுத்துதல் என்ற வினையையே to express என்பதற்கு இணையாகப் பயன்படுத்துகிறோம்.

அடுத்து ஐந்தாவதாய், natural number என்பதற்கு இணையாக இயல்பு எண் என்று கொடுத்திருந்தார்கள். இயல் எண் என்றே சுருங்கச் சொல்லிவிடலாம். கூடிய மட்டும் கூட்டுச் சொற்களைச் சொல்லும் போது, தேவையில்லா ஈறுகளை விலக்குவது நல்லது. இதன் மூலம் சொற் சுருக்கமும் பலுக்க எளிமையும் கிடைக்கும்.

ஆறாவது real number; இதை மெய்யெண் என்று குறித்திருந்தார்கள். ஆனால் மெய் என்பது truth என்பதற்கே சரியாக வரும். real என்பதற்குச் சரியாக வருமோ? முதலில், real என்ற கருத்தைத் தமிழில் எப்படிச் சொல்கிறோம் என்று பார்ப்போம். எல்லோரும் சொல்லும் ஒரு வாக்கியம் "Is it really true?". இதைத் தமிழில் ஆக்கும் போது "இது உள்ளபடியே உண்மையா?" என்றுதானே சொல்லுகிறோம்? "அது என்ன உள்ளபடி?" என்று மேலே உள்ள வாக்கியத்தை ஓர்ந்து பார்த்தால், நாம் தேடும் சொல் சட்டென்று புலப்பட்டு விடும்.

இன்னொரு பயன்பாட்டையும் சொல்லுகிறேன்.

கொஞ்சம் கருப்பாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு மணம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். (கருப்பு என்றால் மாநிறத்திற்கும் சற்று அடர்ந்த நிறம். மாநிறம் என்றால் தமிழில் என்னவென்று தெரியுமோ? மாங்கொழுந்து நிறம் எதுவோ, அதுதான் மாநிறம். மாங்கொழுந்தில் மஞ்சள் கெழுவும் (yellow colour) ஊடே ஓடினாற் போல் இருக்கும். மஞ்சள் பூசிய தமிழ் மகளிரும், அந்தப் பழக்கத்தின் காரணமாய் கொஞ்சம் மாங்கொழுந்து போல் இருப்பார்கள். தமிழரில் கணிசமானவர் மாநிறம் தான். மாநிறத்தை வேறு மாதிரி விளக்கிச் சொல்வது கடினம்.) "அவள் என்ன நிறம்?" என்று மற்றவர் கேட்டால், எங்களூர்ப் பேரிளம் பெண்கள், கொஞ்சம் நளினமாக, "உள்ளது போல் இருப்பாள்" என்று சொல்லுவார்கள். அதாவது கொஞ்சம் கருப்பு என்று சொல்வதற்குக் கூச்சப்பட்டு, "எல்லா இடத்திலும் எப்படிக் கருப்பு உள்ளதோ, அதுபோல கருப்பு" என்ற பொருளில் சொல்லுவார்கள். இங்கே reality என்பது உள்ளது என்று சொல்லப் படுகிறது. கருப்பு என்பது தமிழரின் reality. (இதில் வெட்கப்படத் தேவையில்லை). அங்கும் இங்குமாய்க் கொஞ்சம் வெளிர்மை (fairness) ஒரு சிலரிடம் தென்படலாம். ஆனால் உள்ளது எதுவோ, அதுதானே கிடைக்கும். உள்ளது என்பது reality தான்.

இனி உள்ள படிக்கே என்று மேலே சொன்னோமே, அதன் தொடர்ச்சியாய் உள்ளமை என்ற சொல் realistic என்பதைக் குறிக்கும். (உள்ளமை என்று சொன்னவுடன் உண்மை என்ற தொடர்பான சொல் நினைவுக்கு வந்து என்னைப் புன்சிரிக்கு ஆளாக்கியது. என்னய்யா இது? மெய் வேண்டாம் என்கிறாய், ஆனால் உண்மைக்கு அருகில் பரிந்துரைக்கிறாயே? என்னுடைய மறு கேள்வி: உண்மையும், மெய்யும் ஒன்றா? மெய்யியல் என்று philosophy க்குச் சொல்கிறார்களே? அப்பொழுது மெய்மை என்பது உண்மைக்கும் மேற்பட்டது அல்லவா? இங்கே நாம் அறிவாராய்ச்சிக்குள் போகவில்லை எனினும் சரியான சொல்லாட்சிக்குப் போகிறோம்.)

சரி, real estate என்பதை எப்படிக் குறிக்கலாம்? மிக எளிது. உள்ளகத் திட்டுகள் (திட்டு என்பது அடையாளம் காண்பதற்குத் தகுந்தாற்போல் திட்டாகத் தெரிவது) real estate developer என்பவர் உள்ளகத் திட்டை வளர்த்தெடுப்பவர் ஆவார்.

இந்தச் சிந்தனையில் real number என்பதை உள்ளக எண் என்றே சொல்லலாம்.

ஏழாவதாய் complex number என்பதைக் கலப்பெண் என்று குறிப்பிட்டிருந்தார்கள். கலத்தல் என்பது blending, mixing, assorted என்ற பொருட்பாடுகளையே கொள்ளும். பல்வேறாய்க் கிடக்கின்ற எண் complex number ஆகும். அது உள்ளகப் பகுதி (real part) ஒன்றும் அமைகணப் பகுதி (imaginary part) ஒன்றுமாய் இரட்டைத் தொகுதியாய் உருவம் காட்டி நிற்கும். அதை பலக்கிய எண், பலக்கெண் என்று சொல்லுவது சிறப்பாக இருக்கும்.

அடுத்து எட்டாவதாய், function என்பதைச் செயலி என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இந்த செயல் என்பதை எல்லாவறிற்கும் இழுத்துப் பிடித்து, process, procedure, operation, movement எனப் பல்வேறு வினைகளுக்கும் ஒன்றே போல் சொல்லுவது என்னைப் பொறுத்தவரை மொண்ணையான பயன்பாடாகும். மேலே முன்னாற் சொன்னது போல் பந்தம் என்று சொல்லுவது சரியாக இருக்கும். (பந்தம் என்பதும் வடமொழி அல்ல; நல்ல தமிழே. பலரும் மிகுதியான சொற்களைத் தமிழ் வேர் அறியாமல் வடசொற்கள் என்று தவறாகப் புரிந்து கொள்ளுகிறார்கள்.) பந்தப் படுவது என்பது ஒன்றை நாடி நிற்பது. உறவு கொண்டு இருப்பது.

ஒன்பதாய் வந்த prime number என்ற சொல்லிற்கு, பகா எண், வகுபடா எண் என்று சொல்லியிருந்தார்கள். ஆங்கிலத்தில் பொதிவான (positive) முறையில் பெயரிடும் போது, நாம் சுற்றி வளைத்து நொய்வில்லாதது (non-negative) என்று பெயரிடுவது சரியில்லை. காட்டாக free என்பதை நேரடியாகத் தமிழில் சொல்லுவதற்கு மாறாகச் சிலர் தளையுறாத, கட்டுறாத என்று மொழிபெயர்ப்பார்கள். இது போன்ற மொழியாக்கத்தால், அறிவியல் தமிழ் முன்னேற முடியாது என்பது என் புரிதல். எந்தவொரு ஆங்கிலச் சொல்லிற்கும் நேரடியாகச் சொல்லாக்குவதே நாள்பட நிலைக்கும்.

பின் prime என்பதை எப்படிச் சொல்லுவது? அதன் பொருள் முன்னே நிற்பது; அடிப்படையானது. தமிழில் பெருமிக் கிடப்பது என்பது முன்வந்து இருப்பதே! பெருவுடையார் = prahadeeswarar; பெருகதம் = pragatham; பெருவாரம் = prahaaram; பெருமானர் என்பவர் முன்னே இருப்பதாக அந்தக்காலக் குமுகாயத்தில் குறிக்கப் பட்டவர் (இந்தக் காலத்தில், இது போன்ற புரிதல் முற்றிலும் மாறி விட்டது. இருந்தாலும் வரலாற்றுக் காரணமாய், பெருமானர் என்ற சொல் அதே போலப் புழங்குகிறது.) இந்தச் சொற்களின் வழியில் prime number = பெருமெண். இந்தச் சொற்களுக்கு எல்லாம் அடிப்படை வினைச்சொல் = பெருவுதல் = முன்வருதல்.

அடுத்து பத்தாவதாய் prime factor. இதைப் பகாக் காரணி என்று குறித்திருந்தார்கள். prime என்பது பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். factor என்பதைக் காரணி என்று எல்லா இடத்தும் சொல்லுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதிலும் இங்கே கணிதம் பற்றிச் சொல்லுவதில் முற்றிலும் உடன்பாடு இல்லை. அது வினைச் சொல்லிற்குச் சரியாக வராது. When you factor a given number, you get prime numbers as quotient. பேசாமல் வகுத்தல் என்ற வினையில் இருந்து சிறிது மாற்றி, வகுதை = factor; வகுத்தெடுப்பு = factorization, factoring என்று சொல்லுவது அறிவியலில் மேற்கொண்டு போக வழி வகுக்கும். prime factor = பெரும் வகுதை

பதினொன்றாய் coefficient என்பதற்குக் கெழு என்று கொடுத்திருந்தார்கள். அதோடு தகை என்றும் சொல்லலாம்.

அடுத்து பன்னிரண்டாய் monomial என்பதற்கு ஓருறுப்புக்கோவை என்று சொல்லியிருந்தார்கள். இந்தச் சொல் விளக்கமாய் இருப்பதால் தவிர்க்க விழைகிறேன்.

உண்மையில் mono என்ற முன்னொட்டு monobasic, monoacid, monochord, monochrome, monocle, monocline, monoclonal, monocoque, monocotlyledon, monoculture, monocyte, monogamy, monogenesis, monoglot, monogram, monograph, monolith, monologue, monomania, monomer, monomial, monoplane, monopole, monopoly, monorail, monosyllable, monotone, monotype, monovalent எனப் பல்வேறு சொற்களில் பயிலுகிறது.

தமிழில் ஒன்று, ஒற்றை என்ற சொற்களை மட்டுமே வைத்துச் சொல்லாக்கும் பழக்கம் இந்தக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. இதற்கு மாறாய் இன்னொரு மரபு உண்டு. முதல் என்று சொல்லும் பழக்கம். மாதத்தில் ஒன்றாம் தேதி என்று சொல்லாமல் முதல் தேதி என்று சொல்லும் பழக்கம், முதன்மைச் செய்தி, முகன்மைச் செய்தி, முகப்பு என்ற சொற்கள் நம்மை முகன என்ற முன்னொட்டை இங்கு பரிந்துரைக்க வைக்கிறது. main என்ற ஆங்கிலச்சொல்லிற்கும் முகன என்றே சொல்லாட்சி தரலாம். main road = முகனச் சாலை.

மேலே உள்ள சொற்தொகுதியை தமிழ்ச்சொல் இணையோடு கீழே கொடுத்துள்ளேன்.

monobasic = முகனக் களரி (களரி = alkali, காடி = acid என்ற சொற்கள் ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்னால் கோவை நுட்பியற் கல்லூரியில் பரிந்துரைத்தவை.)
monoacid = முகனக் காடி
monochord = முகனக் குறுக்கம் (வட்டத்தில் உள்ள குறுக்கங்கள் எல்லாவற்றிலும் பெரிதான குறுக்கம் விட்டம் என்று சொல்லப்படும்.)
monochrome = முகனக் குருவம் (குரு, நிறம், கெழு, வண்ணம் எனப் பல சொற்கள் இருந்தாலும், குருவம் என்ற சொல் chrome என்பதற்குப் பொருத்தமாய் வேர்ச்சொல் வழியில் அமையும்.)
monocle = முகனக் கண்ணாடி
monocline = முகனச் சரிவு
monoclone = முகனக் குலனை (ஒரே குலத்தில், ஒன்றே போல் இன்னொன்று உருவாவது குலனை)
monocoque = முகனக் கொக்கி
monocotlyledon = முனியிலைச் செடி (முகனிலை>முனியிலை)
monoculture = முகனச் செழிக்கை, (செடி, மரம், உயிரி போன்றவற்றை செழிக்க வைப்பது செழிக்கை = culture. தானே வளர்வது வளர்ச்சி = growth. வளர்த்தெடுப்பு என்பது development.)
monocyte = முகனக் குழை (குழை என்பது சிறிய உயிர்)
monogamy = முகனக் காமம் (காமம் என்பது இங்கே மணவினையைக் குறிக்கிறது)
monogenesis = முகனக் கனுகை (கன்னுதல் கனியைக் கொடுக்கும். கன்னுதல் என்பதைத்தான் கன்றுதல் என்று கன்று ஈனும் செயலைக் குறிக்கப் பயன்படுத்துகிரோம். கன்னுகை>கனுகை)
monoglot = முகன மொழியர்
monogram = முகனக் கீற்றம்
monograph = முகனக் கிறுவு
monolith = முகனக் கல்
monologue = முகன உரை
monomania = முகன முன்னிப்பு (ஒரே முன்னிப்பாய் இருப்பது; ஒற்றைச் சிந்தனை)
monomer = முகனமர்
monomial = முகன வகை
monoplane = முகனப் பறனை
monopole = முகனத் துருவம்
monopoly = முகனப் பள்ளி
monorail = முகன இருளை (இருளை என்ற சொல் rail என்பதைக் குறிக்கும். இருள்வாய் = railway)
monosyllable = முகன அசை
monotone = முகனத் தொனி
monotony = முகனத் தொனிவு
monotype = முகன அடிப்பு
monovalent = முகன வலுதை

(மேலே உள்ள சொற்தொகுதியை விளக்கிச் சொல்லலாம்; அதை விடுக்கிறேன்.)

பதிமூன்றாவது சொல்லாய் polynomial என்பதற்கு அடுக்குக் கோவை என்று சொல்லியிருந்தார்கள். என்னுடைய பரிந்துரை பலனம் / பலன வகை

அடுத்தது பதினான்காய் equation என்ற சொல்; இதற்கு எல்லோரும் பயன்படுத்தும் இணைச்சொல் சமன்பாடு; கூடவே ஒக்கம் என்ற சொல்லையும் நான் பரிந்துரைப்பேன். equality = ஒக்கல்; ஏனென்றால் கும்முதல் >சம்முதல் என்ற வினைச்சொல்லிற்கு சேர்த்தல், குவித்தல் என்ற அடிப்படைப் பொருளும், அதன் விளைவாய் ஒன்றே போல என்ற வழிப்பொருளும் உண்டாகும். ஒக்குதல் என்ற வினைக்கு ஒன்றோடு ஒன்று சமமாய் இருக்கிறது என்ற பொருள் சட்டென்று தென்படும். இந்த வரிசையில் இருக்கும் சில சொற்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

equable = ஒக்கக் கூடிய
equalize = ஒக்கலிடு
equate = ஒக்கு
equator = ஒக்க வரை
equatorial = ஒக்க வரைப்பு

அடுத்து பதினைந்தாம் சொல்லாய் slope என்பதற்குச் சாய்வு என்று கொடுத்திருந்தார்கள். என்னுடைய பரிந்துரை சரிவு. ஓர்ந்து பார்த்தால், சாய்வைக் காட்டிலும் சரிதல் இன்னும் பொருத்தமாய் இருக்கும். sloppy = சரிவான

பதினாறாய் variable என்ற சொல்; இதற்கு மாறி என்று சொல்லியிருந்தார்கள். நான் வேறி என்றே சொல்லுவேன். மாறுதல் என்பது to change.

பதினேழாம் சொல்லாய் constant என்பதற்கு மாறிலி என்று சொல்லியிருந்தார்கள். மாறுதல் என்று இங்கு பயன்படுத்துவதை விலக்குவது போக, முன்னே சொன்னது போல் இது அதில்லை என்ற சொல்லாக்க நெறியைக் கூடியமட்டும் தவிர்ப்பேன். constant என்பதற்கு நிலைப்பி என்றும், constancy என்பதற்கு நிலைப்புமை என்றும் சொல்லுமாறு பரிந்துரைக்கிறேன்.

பதினேழாவது சொல் exponent. இதை அடுக்குறி என்று சொல்லியிருந்தார்கள். நான் மடக்கு/மடக்கை என்றே சொல்லுவேன். மடக்கு என்பது மீண்டும் மீண்டும் பெருக்குவதைக் குறிக்கும்.

அன்புடன்,
இராம.கி.

பொதிவுப் பின்னூட்டும் பொருளியற் சிக்கலும்

2 மாதமாய் காலைநேர நடையில் ஒழுங்காய்ப் போய்க்கொண்டு இருக்கிறேன். என் மனையாளும் இந்நடையில் கொஞ்ச நாட்களாய் சேர்ந்து கொள்கிறாள். இருவரும் பேசிக்கொண்டே நடந்தோம்.

அப்போது என் மனையாள், "இதுவரை குறைஞ்ச வட்டி கொடுத்த வங்கிகள்லாம், இப்ப வைப்பு வட்டி வீதத்தை (deposit interest rate) 8.5% / 9.0% ன்னு ஒயர்த்திக்கிணே போறாகளே, அது எப்படி முடியுது?" என்று கேட்டாள்.

"மேலோட்டமாய்ச் சொல்ல முடியாதும்மா. விளக்கமாச் சொன்னாத் தான் புரியும். நீ கேட்ட கேள்விக்குள்ள, இந்தக் காலப் பொருளியற் சூள்க்குமமே அடங்கி இருக்கு" என்றேன் நான்.

"கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்க", என்றாள் அவள்.

"போன வருசம் வாங்கிய அதே பொருளை, இந்த வருசம் வாங்கணும்னா, அதே அளவு பணம் போதுமா?" - அப்படின்னு எதிர்க்கேள்வி கேட்டேன்.

"அதெப்படிப் போதும்? விலைவாசி ஏறியிருக்குல்லே?" - இது அவள்.

"இந்த விலைவாசி ஏறினதைத் தான் பொருளியல்லெ பணவீக்கம்னு சொல்றது. போன வருசம் பொருள்வாங்க 100 உருவாய் போதும்னா, இந்த வருசம் அதே பொருளெ வாங்க, 106 உருவாய் தேவைப்படுதாம்னு புள்ளியியல்லெ சொல்றாக. (ஒரு நாலைந்து மாசங்களுக்கு முன்னாலே 105 உருவாய் இருந்தாலும் போதும்.)

"அப்படின்னா, என்ன அருத்தம்?"

"போன வருசத்து 100 உருவாய்க்கு இந்த வருச மதிப்பு, 100/106*100 = 94.34 ஆக, குறைஞ்சு போச்சுன்னு அருத்தம். இப்படியே போனா, அடுத்த வருச மதிப்பு இன்னும் குறைஞ்சிரும்னு அருத்தம். சுருங்கச் சொன்னா, பணத்தோட மதிப்பு, வருசா வருசம் குறைஞ்சுக்கிட்டே வருது. இப்படித் தொடர்ச்சியாக் குறைஞ்சா, யாராச்சும் பணத்தை வங்கிலெ போடுவாகளோ?"

"போட மாட்டாக; யோசிப்பாக"

"இப்ப, வங்கிங்கிறது என்ன? நம்மளைப் போல ஆளுகள்ட்டேர்ந்து வைப்பு நிதியாப் பணத்தை வாங்கி, தேவைப்படுறவகளுக்குக் கடனாக் கொடுக்கிறது தானே வங்கியோட வேலை, இல்லையா?"

"ஆமா"

"நம்மளெப் போல ஆளுகள் வங்கிலே பணம் போடத் தயங்குனா, அப்புறம் கடன் கொடுக்குறதுக்கு அவுக எங்கே போவாக?"

"கடுசு தான்"

"அதனாலே 'வைப்புநிதி வட்டியை நாங்க இனிமெக் கூட்டிக் கொடுக்கிறோம், தயங்காம வைப்புநிதிலே உங்க பணத்தைப் போடுங்க'ன்னு அவுக நமக்குச் சொல்றாக. அவுக சொல்றதைக் கேட்டு, 8.5% வட்டிக்கு ஆசைப்பட்டு, நாமளும் வைப்புநிதிலே பணம் போடப் பார்க்கிறோம். இப்படியே எல்லோரும் செய்ஞ்சா, போன வருசம் வரைக்கும் அஞ்சல் துறையுலே, 8% வட்டிலே, வைப்புநிதி வச்ச கூட்டமெல்லாம், 'மாறுடா சாமி'ன்னு வங்கிகளுக்குப் போயிரும். வங்கிகள் இதோட விடுமான்னா, விடாது"

"மேற்கொண்டு என்ன செய்வாக?"

"அவுக கடன் கொடுக்குறாக, இல்லையா, வீட்டுக் கடன், வண்டிக் கடன், வணிகக் கடன், தொழிற்கடன் இப்படிப் பலது; அது எல்லாத்துக்கும் வட்டியைக் கூட்டுவாக;

"அப்படியா?"

"ஆமா. உனக்குத் தெரியுமோ? வைப்பு வட்டிவீதம் 9% க்கு இணையா, கடன் கொடுக்கிறதுக்கான பெருமிய வட்டி வீதமும் (prime lending rate) 10.75% ஆ ஆயிருச்சு. இந்த ரெண்டுக்கும் இடைப்பட்ட இடைவெளி, இதைப் பரத்துன்னு (spread) பொருளியல்லெ சொல்லுவாக, 1.75% ஆயிருச்சு; அப்படி ஒரு பரத்து இருந்தாத் தான், அவுகளாலெ வங்கி நடத்த முடியும். ஏன்னா, அவுகளுக்கும் ஆளு பேரு வேலை செய்யுறாக, சம்பளம் கொடுக்கோணும், நுட்பியல் (technology) வசதிகள் இருக்கு, கட்டட வாடகை இன்னும் ஏதேதோ செலவுகள்; இதுபோக பொலுவுன்னு (profit) ஒண்ணு இருக்குல்லே."

"அது எப்படிங்க, 10.75% க்குக் கடன் வாங்குறவுக திருப்பி பணத்தைக் கட்ட முடியும்? ரொம்பக் கூடுதலாவில்லெ இருக்கு"

"கூடுதல் தான்; இப்படிக் கடன்வட்டிக் கூடுறதாலேயும், உள்ளமைத் திட்டின் (real estate) விலையும் கூடி வர்றதாலெ, வீட்டுக் கடன் வாங்குறதும் குறைஞ்சுக்கிட்டே வருதாம். எப்படி முடியும், சொல்லு? ஒரு 1000 சதுர அடி அடுக்கு வீடு, சென்னை நகரத்துக்குள்ளே இப்ப 30 லெச்ச உருவாய் விக்குது. 10.75% வட்டிக்கு வீட்டுக் கடன் வாங்குனா, மாசம் 26875 உருவாய் இல்லெ கட்டணும்? இவ்வளவு வட்டியை உள்ளுருமத் தொழில்லெ (Information industry) வேலை செய்யுறவுகளாலே கூடக் கட்ட முடியாதுல்லே; இதனாலே கடனுக்கான மொத்தக் காலத்தைக் கூட, இப்ப 20- லேர்ந்து 25 ஆண்டுகளா, 30 ஆண்டுகளா, ஆக்கிப் பார்க்குறாக. கடன் வாங்க ஆள் குறைஞ்சு போனா, எல்லா வங்கியும் எப்படிச் சரி பண்ணுறதுன்னு தெரியாம முழிக்கிறாக"

"மேலே என்ன ஆகுங்க?"

"வீட்டுக் கடன் வாங்குறதுலெ இருக்குற சரவல் ஒரு பக்கம் இருக்கட்டும்; 10.75% லெ கடன் வாங்கி வீடு கட்டுறவுக, வண்டி வாங்குறவுக எல்லாம் கணிசமானவுகன்னாலும், வங்கிலேர்ந்து பெரும்பகுதிக் கடன் வணிகக் கடன், தொழிற்கடன் வாங்குறவுகளுக்குத் தான் போகுது. இவுகல்லாம் 10.75% கடன் வாங்குனா, இவுகளோட பரத்தும் சேர்த்தா, இவுகளுக்கு நிகர ஆதாயம் (net income) கூடோணும் இல்லையா? அப்ப, அவுகளோட மொத்தப் பொலுவு 13% ஆவது ஆகோணும், இல்லையா? ஆகலைன்னா, அவுகளாலே தாக்குப் பிடிக்க முடியாமப் போயிறலாம்."

"அவுக என்ன பண்ணுவாக?"

"அவுக என்ன பண்ணுவாக? விலையைக் கூட்டுவாக. இப்ப ஓர் எடுத்துக் காட்டுக்குச் சொல்றேன். நாங்கள்லாம் வேதித் தொழில்லே (chemical industry) இருக்கோம். இதுலே பெரும்பாலான இயல்பொருட்கள் (raw materials) கரட்டுநெய்யை (crude oil) வச்சுத் தான் வருது. கரட்டுப் பாறைநெய் (crude petroleum) விலை இப்ப ஒரு பீப்பாய்க்கு 53 அமெரிக்க வெள்ளின்னு இருக்கு; பொதுவா, இந்தத் தொழில்லே எந்தக் காலத்திலும் 13%-15% தான் பொலுவு கிடைக்கும். இந்தப் பொலுவிலேயும் ஏற்ற இறக்கம் உண்டுன்னு வை. ஆனா, நிரவலாப் (average)பார்த்தா, 13-15% தான் கிடைக்கும். ஒரு பக்கம் கூடுன விலையிலே கரட்டுநெய், இன்னொரு பக்கம் கூடிப்போன கடன் வட்டி வீதம்னா, வேறே வழியில்லாம வேதித் தொழில்காரங்க அவுகளோட புதுக்குகளோட (products) விலைகளைக் கூட்ட வேண்டியது தான்.

"இது என்னங்க கூத்தா இருக்கு, விலையேற்றத்துலே தொடங்கி, விலையேற்றத்துலெ முடியுறதா?"

"ஆமா. விலையேற்றம் > பணவீக்கம் > வைப்பு வட்டி உயருகை > கடன் வட்டி உயருகை > மீண்டும் விலையேற்றம். இது ஒரு சுற்றுப் போலே போய்க்கிட்டே இருக்கு. என்ன ஒரே பரப்புலே இருக்குற புரிகைச் சுற்றாட்டம் (spiral cycle) இது இல்லை; திருக்கைச் சுற்றாட்டம் (helical cycle) இருக்கு. ஒரு சுற்று, அதுக்கு மேலே இன்னோரு சுற்றுன்னு இது உசந்துக்கிட்டே போகும். நான் இச் சுற்றுக்களைச் சுருக்கமாச் சொன்னேன். கரட்டுநெய்யோட பாதிப்பு நெடுகவே இருக்கு; அதோட உலக வாணிகம், தாரளமாக்கல், அப்படின்னு பல காரணிகள் உள்ளே புகுந்து வேலை செய்யும்."

"என்னங்க இது, சரியில்லையே?"

"ஆமா, சரியில்லே தான். ஆனா, அது தான் உள்ளது (reality). இப்ப, ஒரு தஞ்சாவூர் பொம்மை இருக்கு. அதை அப்படி இப்படி ஆட்டி விடுறே, ஆனாலும் குப்புறக் கவிழாம, பழைய நிலைக்கே அது திரும்பி வந்துருதுல்லே.

"ஆமா"

"அந்தக் கவிழாத உறுதி நிலைக்குத் திட நிலைன்னு (stable state) பேரு. திடம்கிறதுக்கும் திண்மைக்குறதுக்கும் கொஞ்சமா வேறுபாடுண்டு. பல பேர் ரெண்டையும் ஒண்ணுன்னு நினைச்சு சொல் மாறிப் பயன்படுத்துறதுண்டு. திணிச்சு, நெருங்கி இருக்கிற நிலை திண்ம நிலை (solid state); எந்தப் பொருளும் அசைக்கிற போது கவிழாம நிலைகொண்டு இருக்கிறது திட நிலை. எந்தப் பொருளையும் அசைச்சா, மீண்டும் திட நிலைக்கு வந்து சேர்றதுக்கு ஒரு திட(த்தன்)மை இருக்கோணும். ஒரு பொருளோடெ எடை தன்மயமாக் குவிஞ்சு ஒரு கருப்புள்ளிலே (centre of gravity) இருக்கிறதா நாம இந்தத் திடத் தன்மையைப் புரிஞ்சிக்கிறோம். இந்தக் கருப்புள்ளி அந்தப் பொருள் இருக்கிற தளத்துலேர்ந்து பார்த்தா, எவ்வளவு உயரம் குறைச்சு இருக்கோ, அந்த அளவுக்கு அப் பொருளைத் தட்டி விட முடியாது; தானாத் திட நிலைக்கே திருப்பி வந்து சேர்ந்திரும். இந்தத் தன்மையைத் திடமைன்னு (stability) அறிவியல்லே சொல்லுவாக சில பொருள்களுக்கு திடமைங்குறது அமையாம, இயல்பாவே திடவாமைங்குறது (instability) அமையலாம். வெறும் காற்றிலே, பொதுக்குன்னு விழுந்திரலாம்."

"பார்த்தீங்களா, உங்களை விளக்கச் சொன்னா, எனக்குப் புரியாம ஏதேதோ சொல்லி வகுப்பெடுக்கிறீக. தஞ்சாவூர் பொம்மை மட்டும் தான் எனக்குத் தெரியும். அதெ வச்சே நான் புரிஞ்சிக்குறேன்."

"வகுப்பெடுக்கலைம்மா, ஒவ்வொரு பொருளுக்கும் இப்படித் திடமைங்குற குணம் உண்டு, தஞ்சாவூர்ப் பொம்மைக்கு எக்கச் சக்கமான திடமை உண்டுன்னு விளங்குறதுக்காகக் கொஞ்சம் நீட்டிச் சொன்னேன். அவ்வளவு தான். பொதுவாச் சொன்னா, ஒவ்வொரு கட்டகத்துக்கும் (system) வேண்டிய அளவு திடமை இருந்தாந் தான், அதது நிலைச்சு நிற்கும்."

"அப்ப இக்காலப் பொருளியlல்லெ திடவாமை தான் பெரிசா இருக்குங்குறீக?"

"என்ன பண்ணுறதும்மா? திடவாமை நிறையவே இருக்குன்னு தான் நான் சொல்லோணும். இப்ப நீ ஏதோ ஒண்ணு சொல்றே. நன் அதெக் கேட்டுக் கோவப்படுறேன்; சத்தம் போடுறேன்; நீயும் கோவப்பட்டுத் திருப்பிச் சத்தம் போட்டு, ரெண்டு பேரும் உச்சக் குரல்லே பேசிக்கிணே போனம்னா, அது சரியா வருமா? யாராவது ஒருத்தர் தணிஞ்சு போய், பதவிசாச் சொல்லிப் புரிய வச்சாத் தானே, இருக்கிற சிக்கல் தீரும். அதெ விட்டு ரெண்டு பேரும் மாறி மாறி கோவத்துலெ பேசுனா, சரி வருமா? அதாவது கோவத்துக்கு கோவம் மறு மொழி ஆகாது, பின்னூட்டு ஆகாது, இல்லையா? அதே போல விலையேற்றத்து விளைவா விலையேற்றமே வந்து சேர்ந்துதுன்னா, அது ரெண்டும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் பொதிவுப் பின்னூட்டு (positive feedback) ஆகி, மேலும் மேலும் விலையேற்றம் தானே வரும்? இது சரியாகணும்னா, தொடக்கம் விலையேற்றமா இருந்து, முடிவு விலைக்குறைப்பா இருக்கணும். அப்படி இருந்தா, இந்தப் பொருளியற் கட்டகம் (economic system)  திடமையோடெ இருக்குன்னு சொல்லலாம்.

அப்படின்னா, நம்ம பொருளியலைத் திட நிலைக்கு எப்படித் தான் கொண்டு வர்றது?"

"அதுக்குத் தான் அரசாங்கம் ஊடே வந்து, வரிகளையும், தீர்வைகளையும் குறைச்சுப் பார்க்குது. போனவாரம் கூடச் சிதம்பரம் சில சுங்க வரிகளைக் குறைச்சார்; ஒரு நாலைஞ்சு நாளிலிலே பணவீக்கம் 5.95% ன்னு ஆனுது."

"அப்புறம் என்னங்க, இனிமேச் சரியாயிறாதா?"

"இல்லைம்மா, சரியாகாது. இதெல்லாம் வெறும் பூச்சு வேலை. பல பொருளியல் அறிஞர்கள் இதுபற்றி ஆராய்ஞ்சிருக்காங்க; அரசாங்கம் வரிகள் வழியாப் புகுந்து விளையாடுறதுக்குக் கொஞ்சம் தான் வழி இருக்கு. திருப்பித் திருப்பி முதலாளியப் பொருளியல் இந்தப் பொதிவுப் பின்னூட்டில் மாட்டிc சீரழியும். அது அடிப்படையிலே மாறுனாத்தான் ஏதேனும் தீர்வு கிடைக்கும். முதலாளியப் பொருளியலின் அடிப்படைச் சிக்கல்களில் இதுவும் ஒண்ணு."

வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டோம். என் மனையாளுக்குப் புரியும் மாதிரி நான் சொன்னேனா என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் இது முகன்மையான பொருளியற் சிக்கல்களில் ஒன்று. தமிழில் உங்களுக்குத் தர முயன்றுள்ளேன்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, January 24, 2007

தானமும் கொடையும் - 3

இனித் தானம் என்ற சொல்லின் இலக்கிய ஆட்சிகளைப் பார்ப்போம்.

[அதற்கு முன் ஓர் இடைவிலகல். ஒரு சிலர் தமிழ்ச்சொற்கள் பற்றி ஒரு விந்தையான கண்ணோட்டம் வைத்திருக்கிறார்கள்; குறிப்பிட்ட சொல் அப்படியே தொல்காப்பியத்தில், அல்லது சங்க இலக்கியத்தில் இல்லையா, அப்படியானால் அது வடசொல்லாகத் தான் இருக்கும் என்பது இவர்களின் நிலைப் பாடு. பிற்கால இலக்கியம் அதைக் கையாண்டிருந்தால் கூட, அது ஒரு கடன் சொல் தான் என்று இவர்கள் அழுத்தமாகக் கூறுவார்கள். அதாவது தொல்காப்பியம், சங்க இலக்கியம் என்பவற்றை ஓர் அகர முதலியைப் போல இவர்கள் கருதிக் கொள்ளுகிறார்கள். அவற்றில் இல்லையென்றால் அப்புறம் அந்தக் குறிப்பிட்ட சொல்லின் கதி அதோ கதி தான். இன்னுஞ் சிலர் "என் தந்தை, என் குரு ஆகியோர் கால காலமாய் இந்தச் சொற்களை வடசொல் என்று சொன்னார்கள், எனவே அவை வடசொற்கள் தான்" என்று ஆழ்ந்த நம்பிக்கையின் பேரில் சொல்லுவார்கள். (கருநாடக இசை சாம வேதத்தில் இருந்து எழுந்தது என்று ஒரு சிலர் நம்புவதைப் போன்றது இந்த நம்பிக்கை. "வேதம் என்பது எல்லாம் தெரிந்தது, எல்லாம் வல்லது, எல்லாம் சொல்வது" என்பது போன்ற இந்தக் கூற்றுக்கள் ஒரு வித நம்பிக்கை நிறைந்தவை; அவற்றை அலசி, மோனியர் வில்லியம்சு, பாணினி வழி அசைத்துப் பார்ப்பது இவர்களைப் போன்றோருக்கு ஆகாதது.)

என்னைப் பொறுத்தவரை தமிழ்ச் சொற்களை அப்படிப் பார்ப்பதில்லை. குறிப்பிட்ட சொல்லை ஒட்டிய இணைச் சொற்கள், வேர்ச் சொற்கள், இன்னும் பல்வேறு பட்டுமைகள் (possibilities), குறிப்பாக உள்ளே பொதிந்திருக்கும் வினைச் சொல்லின் வரலாறு, ஆகியவற்றைப் பார்த்தே இந்தச் சொல் தமிழா, தமிழில்லையா, என்று ஓர்ந்து பார்க்கிறேன். பிற்கால இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் வரும் சான்றுகளையும் முடிந்தவரை பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அப்பொழுது தான், ஓரளவாவது உறுதியாகச் சொல்லமுடியும். அதோடு ஏற்கனவே சொன்னவற்றை, மீண்டும் மீண்டும் புதிய தரவுகள் கிடைக்கும் போது மீள்பார்வையும் செய்ய விழைகிறேன். பல நேரம், நம்முடைய முடிவுகள் மீள்பார்வைக்கு வரவேண்டியது ஆகிறது. மொத்தத்தில் இது ஒரு வகை அறிவியற் தேடல்.]

தானம் என்ற சொல், திருக்குறளில் இரண்டு இடத்திலும், சிலம்பில் ஓரிடத்திலும் "கேளாமல் தருவது" என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. அவற்றை இனிப் பார்ப்போம். முதலில் வான்சிறப்பில் வரும் 19 வது குறள்.

தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.

என்ற இந்தக் குறளை "வானம் வழங்காது எனின், தானம், தவம் ஆகிய இரண்டும் வியனுலகம் தங்கா" என்று வரிமாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். வானம் என்பது இங்கே வெறும் விண்ணைக் குறிக்கவில்லை; புவியோடு காற்று மண்டலத்தையும் சேர்த்துக் குறிக்கிறது. புவியின் நீர்ப்பரப்பு சூரிய வெப்பத்தால் ஆவியாகிப் பின் மேலே போய்க் குளிர்ந்து முகிலாகி, மீண்டும் பொழிகிற நீர்ச் சுழற்சியில், மழை என்பது ஒரு பெரிய நீர்வரத்து; இந்த நீர்ச்சுழற்சியைப் புரியாத மாந்தன், வானமே மழையை வழங்குவதாய்ப் புரிந்து கொள்ளுகிறான். இது ஒரு குறைப் புரிதல் தான்; இருந்தாலும் (வள்ளுவரையும் சேர்த்த) பழம் மாந்தன் அப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறான்.

இதைத் தொடர்ந்து, "மழை வருவதற்கும், தானம் தவம் ஆகிய இரண்டிற்கும் என்னய்யா தொடர்பு?" என்ற சிந்தனை நமக்குள் எழுகிறது. தானம் என்பது பிறர் கேளாமல், ஒருவரின் தேவையை அறிந்து, மனம் உவந்து தரப்படுவது என்று பார்த்தோம். எப்பொழுது இப்படிப் பிறர்க்குத் தர மனம் வரும்? ஒருவர் வளமாக இருந்தால் அது போன்ற ஒரு மனம் வரும். உலகில் உள்ள பலருக்கும் எப்பொழுது அந்த மனம் வரும்? உலகில் வளம் இருந்தால் இது போல தானம் செய்ய மனம் வரும். வளம் இல்லையெனில் யாருக்கேனும் இது போன்ற மனம் வருமோ? வராது.

எனவே மழை என்ற ஒன்று இருந்தால் உலகில் வளம் ஏற்படும்; அது இருந்தால், தானம் என்பது உலகில் தங்கும்.

உயர்கணக்கில் தேற்றங்களை (theorems) நிறுவும் போது இருத்துமை கட்டியங்கள், பொந்திகைக் கட்டியங்கள் என்று சொல்வார்களே, அதைப் போல, மழை என்பது தானம், தவம் என்ற இரண்டிற்குமான இருத்துமை, பொந்திகைக் கட்டியமாகும். (They are the necessary and sufficient conditions; "இது இருந்தால் அது நடக்கும்" என்று பேச்சு வழக்கில் சொல்கிறோமே; அங்கே ஒன்றின் இருத்துமை என்பது necessary என்ற பொருளிலே தான் ஆளப்படுகிறது. பொந்துதல் என்பது பொருந்துதல் என்பதின் இடைக்குறை. பொந்தித்தல் என்பது நிறைதல். பொந்திகை என்ற பெயர்ச்சொல் எழுந்து sufficiency என்று பொருள் கொள்ளுவது இப்படித்தான்.) .

தானத்தைப் போலத் தவம் என்பதும் வளம், மழை ஆகியவற்றோடு தொடர்பு கொண்டது. தவம் என்பது வாழ்வுப் பற்றில் இருந்து விலகுவது, நீங்குவது என்ற பொருள் கொள்ளும். தபுத்தல் ( >தவத்தல்) என்ற வினையோடு தொடர்பு கொண்ட தவிர்த்தல் என்ற இன்னொரு வினையை இங்கே நினைவு கொள்ளுங்கள். தவம் என்பது பற்றை அறுத்த நிலை; அதற்கும் மேலே போய், பற்றையே துறப்பது துறவு எனப்படும். அதாவது தவத்தின் நீட்சி துறவு. வளமே இல்லாத நாட்டில், பற்றே ஏற்படாத நிலையில், அப்புறம் எதைத் துறப்பது, சொல்லுங்கள்?

துறவு, தவம் போன்றவற்றிற்குச் சரியான பொருள் வேண்டுமானால், மழை, அப்புறம் வளம், ஆகியவை மாந்தனின் எதிர்பார்ப்பாய் இருக்க வேண்டும். வானம் மழையை வழங்கவில்லை என்றால், உறுதியாய் ஒரு நாட்டின் வளம் குன்றும்; நல்லோர் தவம் இருக்க மாட்டார்கள்; தானம் செய்ய மாட்டர்கள்; "அவையெல்லாம் உலகில் இருந்து விலகிவிடும்" என்கிறார் திருவள்ளுவர். ஒரு நாட்டின் பஞ்ச காலத்தில், காட்டாக இன்றைய ஆப்பிரிக்காவில் சோமாலியாவில், நடப்பதைப் பார்க்கிறோம், அல்லவா? ,

இனி தானம் என்ற சொல் பயிலும் அடுத்த குறள் 295 -யைப் பார்ப்போம். இதில் மனத்தொடு சேர்ந்த வாய்மை நிலையை, தவம், தானம் ஆகிய இரண்டோ டு, வள்ளுவர் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

மனத்தொடு வாய்மை மொழியில் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை

மனத்தோடு உண்மை பேசினால், அது தவம் செய்பவர்களைக் காட்டிலும், தானம் செய்பவர்களைக் காட்டிலும், தலையாயது ஆகும் என்று இங்கு சொல்லுகிறார். மேலும் இதற்கு விளக்கம் தேவையில்லை என்று அடுத்த சொல்லாட்சிக்கு நகர்கிறேன்.

இது சிலம்பில் வஞ்சிக் காண்டத்தில், நீர்ப்படை காதையில், வரி 98-100ல்,

"கண்ணகி தாதை, கடவுளர் கோலத்து,
அள்நலம் பெருந்தவத்து, ஆசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்து அறங் கொள்ளவும் ...

என்று பயிலும். (ஆசீவகம் பற்றி எழுதுவதாகப் பலநாட்கள் முன் சொல்லிவிட்டு இன்னும் அந்த வேலையில் இறங்காது இருக்கிறேன். செய்யவேண்டியது நிறைய இருக்கிறது.) கண்ணகியின் முடிவு அறிந்து, அவள் தந்தை மாநாய்கன் "கடவுளர் கோலத்தில், நலம் கூடிய பெருந்தவம் நிறைந்த ஆசீவகர் முன், புன்ணியம் தரும் தானங்கள் செய்து" அறங் கொண்ட செய்தி இங்கு குறிப்பிடப் படுகிறது.

நாலாவது காட்டு இனியவை நாற்பது 27 ல் வருகிறது.

தானம் கொடுப்பான் தகையாண்மை முன் இனிதே
மானம் படவரின் வாழாமை முன் இனிதே
ஊனம் கொண்டு ஆடார் உறுதி உடையவை
கோள்முறையால் கோடல் இனிது.

இதற்குப் பொருள் சொல்ல முற்படவில்லை. வேண்டும் என்பவர்கள் தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து, வடசொல் வேர் பற்றிய ஒரு கருத்து. தானம் என்ற சொல்லையும், தாதா என்ற வடசொல்லையும் வைத்து, அவற்றின் வட சொல் வேராகப் பாணினியின் தாது பாடத்தில், கீழே வரும் 5 வகையில் தந்திருப்பார்கள். (வடமொழிச்சொற்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படையான வேர்களாக ஒரு பகுப்பாய்வு முறையில் கூறுபடுத்தி 2100 வேர்ச்சொற்களை அதில் காட்டியிருப்பார்கள். அவற்றின் இடையே இருக்கும் ஒத்திசைவு - consistency - பற்றிப் பல கேள்விகள் எழுப்ப முடியும். அதையெல்லாம் செய்தால், சங்கதம் என்னும் கலவை மொழியின் அடித்தளம் சரியாகப் புரிந்து போகும். ஆனால் "போற்றி" பாடிக்கொண்டிருக்கும் பலருக்கும் அது ஒவ்வாததாய் இருக்கும். அதனால், தூற்றத் தொடங்கி விடுவார்கள். அவற்றிற்கு மறுமொழி சொல்லியே, என் பொழுது போய்விடக் கூடும் என்பதால், பாணினியின் தாதுபாடத்தில் இருக்கும் அடிப்படை முரண்களைப் பற்றி பேசுவதை இங்கு முற்றிலுமாய்த் தவிர்க்கிறேன்.)

da_ to give; deri. datta, de_ya, yacchat, dadivas
dad to give; to offer; to present
da_y to give
da_s' to give; to offer an oblation
da_s to give

தானம் என்ற சொல்லிற்கு இன்னும் வேறு இரண்டு முகன்மையான பொருட்பாடுகள் உண்டு. அவற்றில் ஒன்று தான்றுதல் என்ற வினைச்சொல்லின் வழி வந்தது. தான்றுதல் என்றால் பதித்தல். தானித்தல் / தாணித்தல் என்றாலும் பதித்தல் தான். தான்றுதல்/தாண்டுதல் என்பதைத் தண்டுதல் என்றும் கூடச் சொல்லுவார்கள். (இதுதான் ஆங்கிலத்தில் வரும் to stand என்பதற்கு இணையான சொல்.) எண்களில் வரும் தோய்களை (digits) தானம் என்று குறிப்பிடுவது உண்டு (ஒரு 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் கூட இந்தச் சொல்லாட்சி நம்மூர்களில் கணக்குப் பாடத்தில் உண்டு. என்னுடைய திண்ணைப் பள்ளிக்கூடக் காலங்களில் ஒன்றாம் தானம், பத்தாம் தானம், நூறாம் தானம் என்ற பயன்பாட்டைப் படித்திருக்கிறேன்; பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், இப்பொழுது தமிழர் பலருக்கும், digit என்றால் தான் விளங்குகிறது. தானம் என்ற சொல் இந்தப் பொருளில் போயே போயிந்தி. இன்னும் மேலே போய், இடம் என்ற பொருளில், தானம் என்ற சொல்லைத் தான், முன்னே ஸ் சேர்த்து ஸ்தானம் என்று வடமொழியில் சொல்லுவார்கள். பலருக்கும் இந்துஸ்தானம், ராஜஸ்தானம் என்ற கலப்புச் சொல்லாட்சி தெரிந்திருக்கும். உள்ளே கிடக்கும் தமிழ்வேர் தான் அவர்களுக்குத் தெரியக் காணோம்.

இன்னொரு பயன்பாடு "தான, தன, தந்தன" போன்ற ஒலிக்குறிப்பில் எழும் சொல்லான தானம். இந்த ஒலிக்குறிப்பு, மொழி சாராத பொதுப்படையான ஒன்றாகும். இந்தத் தானம், நமக்கும் ஒன்றுதான், வடபுலத்திற்கும் ஒன்றுதான். பொதுவாக, ஓர் இசைப்பாடலைப் பாடும் போது, அராகம், தானம், தொடுப்பு (பல்லவி), விரிப்பு (சரணங்கள்), முடிப்பு என்ற வரிசையில் அமைப்பார்கள். அராகம் என்பது பண். இது வெறும் சுரக் கோவையாகப் பாடுவது. சுரக் கோவையில் ஆளத்தி (=ஆலத்தி = ஆலாபனம்) செய்து கேட்போருக்கு அந்தப் பண்ணின் விரிவை உணர்த்துவார்கள். அடுத்து அதோடு நிற்காமல், மேலே போய்த் தன்னனாப் போட்டு ஆளத்தி செய்வதும் வாய்ப்பாட்டிசையில் ஒரு பழக்கம். இதற்குத் தான் தானம் பாடுதல் என்ற பெயர் உண்டு. இந்தத் தானத்திற்கு அடுத்துப் பாடலின் தொடுப்பும், விரிப்பும் முடிப்பும் அமையும். பாடலின் மொத்த நீட்சியும் இசைஞனின் விருப்பிற்கு ஏற்ப, அமையலாம்.

தா, தரு என்ற சொற்களுக்குச் சற்று விலகிய நிலையில், தாள் என்னும் அடிப்பொருளில், தாள்தன்>தாதன் = அடியவன், தாள்தி>தாதி = அடியவள் என்ற சொற்களும் தாள்>தள், தாள்>தன், தாம், தான், தத்தம் என்று தன்னை/தம்மை அடிநிலையில் வைத்துச் சொல்லும் பகரப்பெயர் (pronoun) பயன்பாடுகளும் தமிழில் உண்டு. அவற்றையும் இங்கு விளக்கினால் இன்னும் கட்டுரை நீளம் கூடிப் போகும்; எனவே தவிர்க்கிறேன்.

இவ்வளவு விளக்கங்கள் இந்தத் தானம் என்ற சொல்லிற்குப் போதும் என்று நினைக்கிறேன். கட்டுரையை முடிக்குமுன் ஒரு செய்தி. இன்றையத் தமிழ் நடையில், அளித்தல், ஈதல், தருதல், கொடுத்தல் ஆகிய வினைகள் எல்லாம் அவற்றின் நுணுகிய வேறுபாடுகளைத் தொலைத்து ஒன்றிற்குப் பகரியாய் இன்னொன்று என்று நாம் புழங்கும் நிலைக்கு வந்துவிட்டன.

என்னுடைய சொல்லாய்வுக் கட்டுரைகளில் பல இடத்தும் எனக்கு முன்னவர்களான பாவாணரும் மற்றவரும் உள்நிறைந்து நிற்கிறார்கள். அவர்களில் இருந்து பலவிடத்து ஒன்றுபட்டும் சிலவிடத்து வேறுபட்டும் நான் இருக்கிறேன். என்னுடைய முடிபுகளுக்கு நானே பொறுப்பு.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, January 23, 2007

தானமும் கொடையும் - 2

"தானத்தின் வேர்ச்சொல் விளக்கத்திற்கு போகலாமா?" என்று சென்ற பகுதியில் முடித்திருந்தேன். பூங்கா வலையிதழுக்காக "பொங்கலோ பொங்கல்!" என்ற கட்டுரை எழுதியதிலும், சென்னையில் பொத்தகக் காட்சிக்கு போய்ப் பொத்தகங்கள் வாங்கி வருவதிலுமாய் பொழுது போய், நான் சொன்ன அடுத்த பகுதி, மேற்கொண்டு தொடராமலே நின்று போனது. மீண்டும் இழுத்துப் பிடித்து வந்திருக்கிறேன். தொய்வு ஏற்பட்டதற்கு மன்னியுங்கள்.

[தொய்வுறுதல் என்பது to get slackened / to lag என்ற பொருள் கொள்ளும்; "கொஞ்சம் தொய்ஞ்சு போச்சு! இனிமெ இழுத்துப் பிடிச்சுருவோம்" என்பது எங்களூர் பேச்சு வழக்கு; இதற்கு, இன்னொரு வட்டாரச்சொல் delay என்ற பொருளில் உள்ள சுணங்குதல் என்பதாகும்; தா(ழ்)மதம் என்னும் வேறொரு சொல் ஓர் இருபிறப்பி. அதன் உள்ளே இலங்கும் தாழ்தல் என்னும் வினை தமிழ்; தாமதம் என்ற முடிப்பு மட்டும் வடமொழி. கூடிய மட்டும் வெவ்வேறு தமிழ்ச் சொற்களை புழக்கத்தில் கொண்டு வர என் இடுகைகள் மூலமாய் நான் பரிந்துரைக்கிறேன். நாம் அறிந்த தமிழ்ச்சொற் தொகுதிகளைச் சிறிது சிறிதாய்க் கூட்டிக் கொள்ளுவோம்.]

"வாழை மரம் குலை தள்ளியது" என்ற வழக்கைக் கேட்டிருக்கிறீர்களா? இங்கு வாழை மரம், குலை ஈன்றதைத் தான், தள்ளியது என்று சொல்லுகிறோம். வாழைக்குலை மட்டுமல்லாமல், வாழைக்கன்று தாய் வாழைக்குப் பக்கத்தில் மண்ணிலிருந்து எழுந்தால் கூடத் தள்ளியது என்றே நாட்டுப் புறங்களில் சொல்லுவார்கள். தென்னை மரம் பாளை விடுதலைக் கூடப் பாளை தள்ளுதல் என்று சொல்லுவார்கள். இது போல, நெற்கதிர் தோன்றுவதைக் கதிர் தள்ளியது என்பார்கள். இப்படியெல்லாம் பயிலும் தள்ளுதற் சொல் தருதல் என்றே பொருளையே சுட்டும். நம்மை உலகிற்கே தருபவளைக் கூடத் "தள்ளை" என்று பழந்தமிழில் சொல்வார்கள். [தாய் குழந்தையை பிறக்கச் செய்வதோடு (பிரிதல் கருத்தின் நீட்சி பிறத்தல்) நம்மைத் தரவும் செய்கிறவள் தானே தள்ளை? தள்ளை>தய்யை>தாய் என்று கூட இதன் வளர்ச்சியாய் ஒரு சாரார் சொற்பிறப்புக் காட்டுவார்கள். இன்னொருவரோ த(ம்) ஆய் என்று பிரித்து இனம் காட்டுவார்கள். நான் இன்னும் தாய் பற்றிய சொற்பிறப்பில் தெளியாமல் இருக்கிறேன்.] இதே சொல்லை, மலையாளத்தில் தள்ள என்றும், தெலுங்கில் தல்லி என்றும் சொல்லுவார்கள். (தெலுங்கு நடிகை விசயசாந்தி தெலிங்கானா மாநிலம் உருவாக வேண்டி நடத்தும் கட்சியைத் தல்லி தெலிங்கானா என்று சொல்லுகிறார்கள்.)

தள்ளுதற் சொல்லைப் போன்றே, இரு திணைக்கும் பொதுவாக ஈனுதற் சொல்லும் ஆளப்படும். ஈன்றாள் என்பவள் தாய்; வாழை குலை ஈன்றது. ஈன் என்ற சொல்லை வைத்து ஈனியல் (genetics) என்ற புதுச் சொல்லை உருவாக்குவார்கள். ஈன் = gene; ஈனுதல் = தருதல்.

துள் என்னும் வேரில் இருந்து, தள் என்னும் சொல்லடி பெறப்படும். துள்ளுவது என்பது முன்னே வருவது. ஒரு நீர்ப்பரப்பில் துள்ளி வருவது என்பது நீரின் அசைவால் தெறித்து ஒரு சிறு கூறு மேலே எழுவது ஆகும். அந்தத் தெறிப்பைத் துளி என்று கூறுகிறோம். துளிப்பு என்பது துளிதுளியாய் ஏற்படுகின்ற நிலை. மேலை மொழிகளில் drop என்ற இணைச்சொல்லை ஒட்டிப் பல சொற்கள் அமையும். நம்முடைய துளிப்புக்கும் அவர்களின் drop ற்கும் உள்ள தொடர்பைக் கவனித்தீர்களா?

நாம் குதிப்பது கூடத் துள்ளுவது என்றே சொல்லப் படும். "ஒரேயடியாகத் துள்ளாதே!". துள்ளுதலில் இருந்து துளும்புதலும், தளும்புதலும் எனப் பல்வேறு வினை நீட்சிகள் ஏற்படும். எல்லாமே ஓர் அசைவாக, நீர்ப்பரப்பு முன்னே வருவதைக் குறிக்கும். துள் என்னும் வேரில் பிறந்த சொற்கள் பலவும் இப்படி முன் வருவதைச் சீராகக் காட்டும்.

துள்>துருதல்>துருத்தல் என்ற வளர்ச்சியில் இருக்கும் "முன்வருதல்" பொருளைப் புரிந்து கொண்டால், தள்ளுதல் என்ற சொல்லின் போக்கும் கூட நமக்குப் புரிந்து போகும். துருத்தி என்பது ஆறு, ஏரி, கடலோரம் ஆகிய நீர்நிலைகளை ஒட்டி, முன்னே வந்திருக்கும் ஒரு நிலப்பகுதி. சோழநாட்டில், திருப்பூந்துருத்தி என்ற ஊர், கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில், காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில், ஆற்றுத் துருத்தியில் உள்ள ஊராகும். இதே போல மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள குத்தாலத்திற்கும் திருத்துருத்தி என்ற பெயர் உண்டு. இந்த ஊர்க் கோயிலின் வடபுறத்தில் காவிரியாறு ஓடுகிறது. இப்படி நீருக்குள் துருத்திக் கொண்டிருப்பது துருத்தி. (அண்மையில் pier என்பதற்கு இணையான ஒரு சொல்லை நண்பர் சுந்தரவடிவேல் கேட்டிருந்தார்; துருத்தி என்றே அதற்கு இணைச் சொல் தரமுடியும்.)

உலைத் துருத்தி (foundry blow pipe bag), ஊது துருத்தி (Scottish blow pipe) போன்ற பயன்பாடுகளையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம். "பாரேன், அந்தப் பெண் எவ்வளவு துருதுருப்பாய் இருக்கிறது" என்னும் போது துருதுருப்பு என்ற சொல்லால், ஒருவர் முன்வரப் பார்க்கும் போக்கைக் குறிக்கிறோம். இன்னும் போய், ஒரு படை அல்லது ஊர் அல்லது நாடு ஆகியவற்றின் முன்னால் வந்து நிற்கும் தலைவனைக் கூடத் துரை என்றே சொல்லுகிறோம். (கண்டவன் எல்லாம் துரை ஆகி விடமுடியாது. மற்றவரில் இருந்து துருத்தி, எழுந்து, முன் வந்தவன் துரை ஆவான்.) இது போலத் துரவிக் கொண்டு (முன்தள்ளிக் கொண்டு) போவது துரத்தல். அப்படித் துரவுவது/துரத்துவது driving; துரவி drive; துரவர் driver; துரவியதால் கடப்பது தூரம். பலரும் முன் தள்ளுவதால் சாலையில் ஏற்படும் முட்டுப் போக்கு நிலை துரப்பு (traffic). இப்படித் துரவில் இருந்து பல சொற்கள் கிளைக்கும். (அவற்றையெல்லாம் சொன்னால், இந்தக் கட்டுரை இன்னும் விரிந்து போகும் என்பதால் நிறுத்திக் கொண்டு, அடுத்த செய்திக்கு நகர்கிறேன்.)

துருத்தி என்ற சொல்லில் இடைக்குறை ஏற்பட்டுத் துத்தி>தத்தி என்று ஆகி நாயனத்திற்கு பின்னால் ஒலிக்கும் ஒத்துக் கருவியைக் குறிக்கும். (உண்மையில் ஒத்து என்பவர் ஓர் இசையின் பின்னால் இருப்பவரல்ல; அவர்தான் அந்த இசைக்கே அடிப்படையானவர்; ஆதாரமானவர். அவருடைய அடிச் சுரத்தின் மேல் தான், நாயனக்காரர் பண் எழுப்பி இசைக்கிறார். ஆகத் துத்தி என்பவர் முன்வந்து நிற்கும் ஓர் ஆயக்கால் - reference - போன்றவர். நம் ஊர்ப்பக்கங்களில், ஊருலாத் திருமேனியைத் - உற்சவரைத் - தூக்கிச் செல்லும் போது வாகனத்திற்கு அடியில் போடும் கட்டைக்கு ஆயக்கால் என்னும் பெயருண்டு. அந்த ஆயக்காலின் மேலே தான் ஊருலவரின் திருமேனி நிற்கிறது. reference என்பதும் அப்படித்தான். ஆயக்கால்களின் மேல்தான் ஒரு கட்டுரையில் நாம் சொல்லும் கருத்துக்கள் நிற்கின்றன.)

இதே போலத் துருத்தம் என்ற சொல், இடை குறைந்து, துத்தம் என்று ஆகிக் குரல் என்னும் முதல் ஓசைக்கு (சட்சத்திற்கு) அடுத்து, சற்றே முன் வந்து நிற்கும் இரண்டாம் சுரத்தைக் காட்டும் (துத்தம் என்னும் இந்தத் தமிழிசைச் சுரம் வ்ரிஷபம்< விஷபம்< விடபம்< விடைவம் என்று இன்றைக்குக் கருநாடக இசையில் சொல்லப் படுகிறது. விடைத்து இருப்பதை, முன்வந்து பெருத்து இருப்பதாகவே நாம் கொள்ளுகிறோம். "என்ன ஆச்சு, பெரிசு விடைச்சுக்கிணு இருக்கு? கோவமோ?" பொதுவாய் விடைத்து இருக்கும் ஒரு விலங்கு, விடை என்னும் வ்ரிஷபம் ஆகும்.)

இதே போல, முன் வந்தாற்போல் காட்சியளிக்கும் ஊதுகொம்பைத் துத்தரி என்றும், இன்னொரு வகை ஊதுகொம்பைத் துந்துபி என்றும் சொல்லுவார்கள். சில பழங்கோயில்களில் துந்துபி விழாக் காலங்களில் ஒலிக்கும். வரலாற்றுத் திரைப்படங்களில் இதைப் பார்த்திருப்பீர்கள்.

இன்னொரு விதமாய், விண்ணவர்கள் தங்கள் நெற்றியின் முன்னே இட்டுக் கொள்ளும் திருமண்ணுக்கும் கூடத் துத்தி என்ற பெயருண்டு. (இந்தக் காலத்தில் நாமம் என்றே சொல்லிப் பழகியவர்களுக்கு துத்தி என்று சொல்லுவது புரியாது.)

உடம்பில் துந்திக் கொண்டு (முன் தள்ளிக் கொண்டு) இருக்கும் வயிற்றுக்குக் கூடத் துந்தி>தொந்தி என்ற சொல்லாட்சி உண்டு. தொந்திக் கணபதியைத் தெரியாதார் யார்? துந்தியின் நடுவில் இருக்கும் கொப்பூழுக்கும் கூட தலைக் குறைவாய் த் என்னும் ஓசையை ஒழித்து, உந்து>உந்தி என்ற சொல் உருவாகும். உந்துதல் என்ற ஆழமான வினைச் சொல்லுக்கும் கூட முன்தள்ளுதல் என்ற பொருள் உண்டு. பேருந்து, சீருந்து, மகிழுந்து, சரக்குந்து, துள்ளுந்து இப்படிப் பல்வேறு சொற்களும் கிளைத்தது இந்த உந்தென்னும் வினையில் இருந்து தான்.

இனி, யானையின் முன் தள்ளிய கை துதிக் கை. (அதையே வேறுவிதமாய், மூன்று தோலும், இரண்டு துளையுமான தோற்றத்தால், துயிக்கை என்றும் சொல்லுவது உண்டு. துய்>துயி = துளை; துயி என்பது வடமொழிப் பலுக்கில் வழக்கம் போல் ரகரம் நுழைந்து, துய்ரி>த்ரி என்று ஆகும் (மோனியர் வில்லிம்சு இதற்கு வேர்ச்சொல் தரவில்லை. வடமொழியைப் பற்றி நம்மவர் கொண்டுள்ள பல்வேறு நம்பிக்கைகளும் இப்படித்தான் இருக்கின்றன. ஏரணம் - logic - பார்த்து ஆழம் போனால், அடிப்படை மாறிப் போய் விடுகிறது). மூன்று என்ற தமிழ்ச் சொல்லும் கூட மூ என்னும் மூக்கு வேரில் இருந்துதான் கிளைத்தது. மூக்கைக் (மூன்று தோல்; இரு துளை) குறுக்காய்ப் படம் போட்டால் மூன்று என்ற எண்ணும் சொல்லும் வந்துவிடும்; எண்களின் சொற்பிறப்புக்களை இன்னொரு வேளையில் பார்க்கலாம்.)

முன் வந்து நின்று, இறைவனைப் பரவுவது (to pray) துதிப்பது ஆகும். (துதிப்பது என்பது, பூதிகமாய்ப் - physical - பார்த்து, ஒரு வரிசையில் முன்வந்து நிற்பது அல்ல. பலரும் கூடியிருக்கும் போது, அவர்களின் சார்பாய் முன்வந்து பாடுவது; இறைவனின் பெயர்களைச் சொல்லி வேண்டுவது) துதித்தலின் பெயர்ச்சொல் துதித்தம். அது திரிந்து துயித்தம்>தொயித்தம்>தோத்தம்>தோத்ரம் என்று வடமொழியில் போய்ச்சேரும். அதை மீண்டும் கடன் வாங்கி, நம் மூலமே தெரியாது, தோத்திரம் என்று தமிழில் சொல்லுவோம். (அது என்னவோ தெரியவில்லை, பத்தொன்பதாம் நூற்றாண்டு மணிப்பவளத் தமிழ் இன்றைக்கும் கிறித்துவ தேவாலயங்களில் ஆழமாக நிலை கொண்டு இருப்பதால், அங்கு "தோத்திரம், தோத்திரிக்கிறோம்" என்ற கரடு முரடான சொல்லாட்சி மிகுதியாகவே இருக்கிறது; நல்ல தமிழில் "தேவனே! உம்மைத் துதிக்கிறோம் அய்யா!" என்று எல்லா இடத்தும் சொல்ல அவர்கள் ஏனோ தயங்குகிறார்கள். மறைமலை அடிகளாருக்கு அப்புறம் நாமெல்லாம் பழகிய இந்தக் காலத் தமிழில், விவிலிய நூலை யாராவது நடை பெயர்த்தால் நன்றாக இருக்கும். செய்வார்களோ?)

துல்>துள் என்னும் வேர் தல்>தள் எனத் திரிந்து மேலும் நீண்டு, தரு>தார்>தா>த எனப் பலவாறாய்த் திரியும். இந்தத் திரிவுகளில் பல்வேறு தமிழ்ச் சொற்கள் கிளைத்துள்ளன. [இதே போல வள் என்னும் வேர் கூட வரு>வார்>வா>வ என்று திரியும். எந்த வளைவும் நெருங்கியதைக் குறிக்கும். வருதலும் நெருங்குதலே. வள் என்னும் வேர் தமிழுக்குக் கொடுத்த சொற்கள் மிகப் பல. மூன்றாவது காட்டாய் கள்>கரு>கார்>கா>க என்ற திரிவும் ஓசை எழுப்புதலைக் குறிக்கும். கர் என்று ஓசையிடுவது காருதல், கத்தல் போன்ற சொற்களை உருவாக்கும்.]

தள்ளி வந்த வாழைக் குலையைத் தார்/தாறு என்று அழைக்கிறோம். கமுகுத் தாரும் இதே போல சொல்லப்படும். கடலில் கிடைக்கும் அரும் பண்டத்தைத் தார் என்னும் திரிபின் அடியாகப் பிறந்த தாரம் என்ற சொல் குறிக்கும். (புறநானூறு 30ஆம் பாட்டில் வரும் கடற் பல் தாரம் = கடற் பஃறாரம் என்ற சொல்லாட்சியைக் கவனியுங்கள்.) முன்வந்து தயக்கமில்லாமல் தருவது தார ஆளம்; அதாவது தாராளம். தவத்தின் நீட்சியான தபுதார நிலை பற்றியும் இங்கே எண்ணிப் பார்க்கலாம்.

தார் என்னும் அடியோடு அம் என்னும் ஈற்றைச் சேர்த்து, முற்றிலும் பெரிதாய், ஓங்கி முன்வந்த சுர நிலையை, ஏழு சுரங்களில் இருக்கும் உச்ச சுரத்தைக் குறிக்கும். அதை நிஷாதம் என்று கருநாடக இசையில் குறிப்பார்கள். ஆகத் தமிழில் இரண்டு சுரங்களின் பெயர்கள் (துத்தம், தாரம்) இப்படித்தான் துரு, தரு>தார் என்பதில் கிளைத்தன.

தரவு, தருமம் போன்ற சொற்களைப் பற்றி இந்தக் கட்டுரையின் முதற்பகுதியில் கூறினேன். இது போகத் தரகு என்ற ஒரு சொல்லும் உண்டு; அது trade என்ற பொருளில் வரும். தரகர் என்பவர் பொருடகளைக் கொண்டு விற்பவர் அல்லது வாங்கி விற்பவர். இடைத் தரகர் என்பவர் தரகிற்கு நடுவில் இருப்பவர் ஆவார். [இந்தக் காலத்தில் தரகு என்ற சொல் ஏதோ இழிபொருள் கொண்டதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. வேண்டுமானால், தரகிற்கு மாறாய்த் தருதை = trade என்றும், தருதையர் = trader என்று சொல்லிப் பார்க்கலாம். அப்படியாவது புழக்கம் ஏற்படட்டும். பொதுவாக, நல்ல நல்ல சொற்களை எல்லாம் நம்முடைய அடிமை வரலாற்றின் தொலைத்துவிட்டு, இன்றைக்கு வணிகர், வர்த்தகர் என்ற சொற்களை மட்டுமே வைத்துக் கொண்டு, அதன் விளைவாய்த் "தமிழில் மாறுகை (commerce) பற்றிச் சொல்ல முடியாது" என்று பலரும் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். புகாரில் பல்வேறு பண்டங்களை புலியிலச்சினை பொருத்தி ஏற்றி இறக்கிக் கொண்டிருந்த நம்மிடம் சொற்கள் இல்லாமற் போகுமா? ஈடுபாட்டோடு முயன்றால் மாறுகைத் தொழிலில் ஏதொன்றையும் தமிழில் சொல்ல முடியும். "பிழை என்பது நம்மிடம் இருக்கிறது; மொழியிடம் அல்ல" என்று எத்தனை தரம் தான் சொல்லுவது? தமிழை எங்கும் பயன்படுத்த முதலில் நமக்கு விருப்பம் வரவேண்டும்.]

தருநன் என்ற சொல்லும் தருமன் என்ற சொல்லும் தருபவன் என்ற பொருளையே குறிக்கும். அதே போல, தருமம் என்ற சொல் தருகின்ற செயலைக் குறிக்கும். இதையும் முட்டாள் தனமாய், dharumam என்று பலுக்கி அது வடமொழியோ என்று ஐயுற்றுத் தடுமாறுகிறோம்.

இனித் தருவின் இன்னொரு திரிவாய் இருக்கும் தா என்ற வினை வேரில் இருந்து கிளைத்த சொல் தான் தானம் என்பதாகும். (தானம் என்ற சொல்லைப் போலவே ஈறு கொள்ளும் கானம், ஞானம், மானம் என்ற வேறு சொற்களை எண்ணிப் பார்த்தால் தானம் என்ற சொல்லின் தமிழ் இயலுமை புரியும்.)

தரு/தா என்ற சொல்லடியில் இருந்து இரு வேறு சொற்கள் இவை போன்று கிளைத்தாலும், தானம் என்ற சொல் கேளாமல் தருவது என்ற பொருளையும், தருமம் என்ற சொல் கேட்டுத் தருவது என்ற பொருளையும் கொள்ளும். தான தருமம் என்ற கூட்டுச் சொல்லைப் பழகுவதே, இந்த இரண்டு விதப் பொருள்களையும் சட்டென்று ஒரே பொழுதிற் சுட்டிக் காட்டும். [இரண்டிற்கும் ஒரே பொருள் இருக்குமாயின் இது போன்ற ஒரு கூட்டுச்சொல் ஏற்பட்டே இருக்காது.]

தள்ளியதன் விளைவால் ஏற்படும் கூலக் கதிர்களையும் கூடத் தானம் என்றே தமிழில் குறிக்கிறோம். (இந்தகைய தமிழ்த் தானத்தை வழக்கம் போல் யகரம் நுழைத்து வடமொழிப் பலுக்காக்கிப் பலரும் தான்யம் என்பார்கள். நாமும் அது எப்படி வந்தது என்று தெரியாமல் திருதிருவென்று விழிப்போம்.) தானம் என்பது நாம் கேளாமல், கூலக் கதிர்கள் தானாகவே தந்தது. cereal என்பதற்கு தானம், கூலம் போன்ற சொற்களை இன்றைக்கு ஆளுகிறோம். முல்லைத் திணையில் மிகச் சிறிதாய்த் தொடங்கிய வேளாண் தொழில், பின்னால் மருதத் திணையில் மேலும் பெருகிச் சிறந்தது. அப்படிச் சிறந்த பின், தானங்களைச் சேர்த்துத் தேக்கி வைத்து வறட்சிக் காலத்தில் பண்டமாற்றுச் செய்ய முடியும் என்ற காரணத்தால், செல்வத்தைச் சேர்த்து வைப்பதற்கு இணையாய்த் தானம் என்ற சொல்லும் கருதப்பட்டது. முடிவில் தானம் என்பது திரிந்து தனத்தையும் (=செல்வத்தையும்) கூடக் குறித்தது. பின்னால் மற்ற செல்வங்களுக்கும் தனம் என்ற சொல்லே பெயராகியது. இனி, அரசின் தனத்தை ஆளுகிறவன் தன அதிகாரி என்று சொல்லப்பட்டான். கோயிலுக்குக் கொடுத்த தானத்தை ஆள்பவர் (அதிகாரி) தானக்காரர், தானத்தார் என்று சொல்லப்பட்டார். தானங்களை வரவு வைத்துக் கோயிலில் கணக்குப் பார்ப்பவர் தானக் கணக்கர் (donation accountant) என்று அழைக்கப்பட்டார்.

தானம் என்ற சொல்லின் இலக்கிய ஆட்சிகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


அன்புடன்,
இராம.கி.

Tuesday, January 16, 2007

பொங்கலோ பொங்கல்!

(இது பூங்கா வலையிதழுக்காக, அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், எழுதிய கட்டுரை. என்னுடைய வலைப்பதிவில் சேர்த்து வைப்பதற்கும், பின்னூட்டு இருந்தால் மறுமொழிக்கவும் வேண்டி, இங்கு பதியப்படுகிறது.)

பொங்கலைப் பற்றிக் கேட்டால், சட்டென்று பலரும் "தமிழர் திருநாள், உழவர் திருவிழா, நன்றி சொல்லும் நேரம்" என்று சொல்லப் புகுவார்கள். அப்படிச் சொல்வது ஒருவகையில் சரிதான்; ஆனால் அது முழுமையில்லாத, ஒருபக்கமான, பக்கமடைச் (approximate) செய்தியாய் அமைந்து விடும். முழுமையாய்ச் சொல்ல, சரியானபடி அறிய, இன்னும் கொஞ்சம் ஆழப் போக வேண்டும். குறிப்பாக "தை முதல் நாளில் இவ்விழாவை ஏன் வைத்தார்கள்?" என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். மேலும், இந்த விடைகாணலின் முதற்படியாக, சூரியனைப் புவி சுற்றும் சாய்ந்த நீள்வட்டத்தைப் (inclined ellipse; இதைப் புவியின் பரிப்பு மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு. பரிதல் = செல்லுதல்) புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டால் தான், நம்முடைய பருவங்களின் காரண கருமங்கள், பண்டிகைகளின் உட்கருத்து, போன்றவை புலப்படும். பொங்கல் விழா தொடங்கிய காலம், அதன் வெளிப்பாடு, அந்த விழா முற்காலத்தில் எதைக் குறித்திருக்கும் என்ற காலமாற்றத்தில் ஏற்பட்ட வேறுபாடுகளை இங்கு சொல்ல முற்படுகிறேன்.

சூரிய நாள்காட்டைப் (நாள்காட்டு> நாள்காட்டம்> நாக்ஷத்திரம்> நக்ஷத்ரம் = star) புவியோடு சேர்ந்து பல கோள்கள் வலந்து (வலத்தல் = to revolve) கொண்டிருக்கின்றன. இந்த வலந்தைகளின் (planets) வலம், கிட்டத்தட்ட ஒரே தளத்தில் தான் நடக்கிறது. இந்தச் சுற்று வலயத்தை ”ஏகலோடி” என்று வானியலிற் சொல்லுவர். (ecliptic; வலந்தைகள் ஏகி ஓடும் தளம் ஏகலோடி; ஏகுதல் = செல்லுதல்; ஏகலோடியை ஞாயிற்று மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு.) இந்த ஏகலோடியில் வலக்கும் மற்ற கோள்களோடு நம்முடைய புவியைத் தொடர்புறுத்தும் முகமாக, இன்னொரு வட்டத்தையும் வானியலில் கற்பித்துச் சொல்லுவார்கள். அது வேறு ஒன்றும் இல்லை; புவிக் கோளத்திற் கற்பிக்கும் ஞால நடுவரையையே (terrestrial equator;), தொலைவிற் தெரியும் வானவரம்பு (horizon) அளவுக்குப் பெரிது படுத்தி, அதை வான் நடுவரையாய் (celestial equator) உருவலித்துக் காட்டுவதாகும். இந்த வான் நடுவரையை, இன்னொரு விதமாய், விசும்பு வலயம், விசும்பு வட்டம் என்றும் சொல்லுவதுண்டு.

விசும்பு வட்டம் என்பது புவியின் தன்னுருட்டோடு (self-rotation) தொடர்புடையது; ஏகலோடி என்பது எல்லாக் கோள்களும் சுற்றும் ஒரு வலயத் தளம். இந்த விசும்பு வட்டம், ஏகலோடி என்ற இரு வட்டங்களும் ஒன்றையொன்று ஒருக்களிப்பாய் (obliquity) வெட்டிக் கொள்கின்றன. (சிவகங்கை வட்டாரத்தில் ”ஒருக்களித்தல்/ ஒருக்கணித்தல்” என்று புழங்கும் வினைச்சொல் ”சாய்ந்து இருத்தல்” என்ற பொருளைக் காட்டும். ”ஒருக்களித்துப் படுத்தான்” என்றால், ”மல்லாக்கப் படுக்காமல் கொஞ்சம் திரும்பிக் கிடைமட்டத்திற்குச் - horizontal - சாய்ந்தாற்போல் ஒருபக்கமாய் உடம்பை வைத்துப் படுப்பது” என்று பொருள் கொள்ளும்) இத்தகைய ஒருக்களிப்பின் காரணமாய், கோடையும் (summer), வாடையும் (winter), இடையே பசந்தமும் (பச்சையாய்ப் பசிய இருப்பது பசந்தம்; spring; இதை ஒலிப்பு மாற்றி ப/வ போலியில் வசந்தம் என்று இன்று சொல்லுகிறோம்.), கூதிரும் (இலைகள் கூம்பி உதிர்வது கூதிர்; autumn; கூதிருக்கு அப்புறம் நீளும் முன்பனிக் காலத்தில் அடிக்கும் காற்று கூதல்) எனப் பருவங்கள் மாறி மாறி வருகின்றன. அதன் விளைவால் கோடையில் வெக்கையும், வாடையில் குளிரும் நம்மை வாட்டுகின்றன. குளிருக்கு அவ்வளவு பழகாத (ஆனால் வெக்கையை எப்படியும் பொறுத்து விடலாம் என்று பழகிய) தமிழர், "குளிர்காலம் குறையாதா?" என்று எதிர்பார்ப்பது இயற்கையே. பருவச் சுழற்சியின் காரணத்தால், குளிர் அதிகமாய் இருக்கும் நாளே, "குளிர் இனிக் குறையப் போகிறது" என்று உணர்த்தும் நாளாகும். அந்த நாள் வரும் போது, "இனிமேல் வரப் போவது மகிழ்வான காலம், வாட்டுகின்ற குளிர் தொலைந்து போகும்" என்று தமிழர் களி கொண்டு விழா எடுப்பது இயற்கையே.

இப்படி ஒரு நீண்ட பின்புலத்தை எடுத்துச் சொல்லுவது பொங்கல் விழாவின் அடிப்படையைச் சொல்லுதற்குத் தான்.

ஆண்டின் ஒவ்வொரு பருவ காலத்திலும், பகலும் இரவும், ஒரே அளவுப் பொழுதாக 12 மணி நேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீளுகிறது; வாடையில் இரவு நீளுகிறது. ஆனாலும் ஆண்டின் இரண்டே இரண்டு நாட்களில் மட்டும், பகலும் இரவும் (=ஒரே அளவுள்ள) ஒத்த நாட்களாக அமைகின்றன. அந்த நாட்களை ஒக்க நாட்கள் (equinoxes) என்றே மேலையர் அழைக்கின்றனர். மற்ற நாட்களில் பகலோ, இரவோ, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் அதிக நேரம் வியலுகிறது. (அதாவது பகல் குறைந்து இரவு நீண்டோ, அல்லது பகல் நீண்டு, இரவு குறைந்தோ, இருக்கின்றன). இப்படிப் பகலும் இரவும் ஒன்றே போல ஒக்க இருக்கும் மார்ச்சு 22 - ஆம் நாளைப் பசந்த ஒக்க நாள் (spring equinox) என்றும், செப்டம்பர் 23 - ஆம் நாளைக் கூதிர் ஒக்க நாள் (autumn equinox) என்றும் சொல்லுவார்கள்.

இது போக, நீள்வட்டத்தில் செல்லும் புவியில் இருந்து சூரியனின் தொலைவை அளந்தால், மேலே கூறிய இரண்டு ஒக்க நாட்களில் மட்டும் நடுவார்ந்த தூரம் (median distance) இருக்கும். மற்ற நாட்களில் எல்லாம், புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் கூடியோ, குறைந்தோ, வரும். இப்படிக் கூடுதல், குறைச்சல் வரும் போது, வலயத்தின் ஓரிடத்தில் மட்டும்,இருப்பதிலேயே அதிக தூரமாகவும், வலயத்தின் இன்னொரு இடத்தில், இருப்பதிலேயே குறைந்த தூரமாகவும் அமையும். இருப்பதிலேயே கூடிய தூரமாய் புவியும் சூரியனும் அமையும் நாளைப் பனி முடங்கல் என்றும் (winter solistice; முடங்கல் = அமைதல்; முடங்கிப் போதல்; மாட்டிக் கொள்ளுதல்; பனிக் காலத்தில் அமைதல் - திசம்பர் 22-ம் நாள்), அண்மைத் தூரத்தில் புவியும் சூரியனும் அமையும் நாளை வேனில் முடங்கல் என்றும் (summer solistice; வேனில் = வெய்யிற் காலம் - சூன் 22ம் நாள்) நாம் சொல்லுகிறோம்.

புவிக்கு தன்னுருட்டம் (self-rotation), வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration; பம்பரம் போன்ற ஆட்டம்) என்னும் இன்னோர் இயக்கமும் இருக்கிறது. அதைப் புவியில் இருந்து புரிந்து கொள்வதற்கு மாறாக இந்த ஒக்க நாட்களின் இயக்கமாய்ப் புரிந்து கொள்ளுவது இன்னும் எளிதாக இருக்கும். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் செல்லச் செல்ல இந்த ஒக்க நாட்கள் சிறிது சிறிதாக முன் நகர்ந்து கொண்டிருக்கின்றன. (மேலே சொன்ன மார்ச்சு 22, திசம்பர் 22 என்பவை இந்தக் காலத்தில் நிகழ்பவை; ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால், அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அவை இதே நாட்களில் நிகழ்ந்தவை அல்ல.) இந்த ஒக்கநாட்களின் இயக்கத்தை முற்செலவம் (precession; precede = முன்செல்லு) என்று வானியலில் கூறுவார்கள்.

இந்தக் காலத்தில் பசந்த ஒக்கநாள் என்பது மீன (pisces) ஓரையில் விழுகிறது (=ஏற்படுகிறது). கூடிய விரைவில், இன்னும் ஐந்தாண்டுகளில் கி.பி. 2012 - ல் அது அஃகர (aquarius) ஓரையின் தொடக்கத்தில் வந்து விழும். அப்படி விழும் போது, புதிய உகத்திற்கு நாம் போகிறோம் (உகம் = ஒன்று சேரும் காலம்; உகம்>யுகம்>yuga என்ற வடமொழியில் சொல்லுவார்கள்.) என்று வரலாற்றாசிரியர்கள் சொல்லுகிறார்கள். அதே போல, வரலாற்றின் முன்காலத்திற்கு முற்செலவத்தின் துணை கொண்டு போனால், ஒரு காலத்தில் ஏப்ரல் 14 -ல் மேழ ஒரையின் தொடக்கத்தில் (மேஷ ராசி) இந்த ஒக்க நாள் விழுந்திருக்கும். அதாவது ஒரு காலத்தில் மேழத்தில் விழுந்த பசந்த ஒக்க நாள் இன்று 24 நாட்கள் முன்னேயே மீனத்தில் மார்ச்சு 22-ல் நிகழ்கிறது. இது போல முற்செலவத்தின் நகர்ச்சியால், கூதிர் ஒக்கநாள், பனி முடங்கல், வேனில் முடங்கல் ஆகிய மற்றவையும் 24 நாட்கள் முன்தள்ளிப் போகின்றன. அதாவது அக்டோபர் 15ல் விழ வேண்டிய கூதிர் ஒக்கநாள் செப்டம்பர் 23-லேயே நடக்கிறது. சனவரி 14ல் நடக்க வேண்டிய பனிமுடங்கல் திசம்பர் 22 -இலும், சூலை 14ல் நடக்க வேண்டிய வேனில் முடங்கல் சூன் 22 -இலும் நடக்கின்றன.

இந்த முற்செலவம் என்ற இயக்கம் மாந்த வாழ்க்கையில் ஒரு நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் பருவங்களைக் குறிக்கும் எந்தக் குறிப்பையும், முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். மொத்தமாய் ஒரு முழு முற்செலவம் முடிய கிட்டத்தட்ட 25783 ஆண்டுகள் ஏற்படுகின்றன (அளவு கோல்கள் நுணுக நுணுக, இந்த முற்செலவு இயக்கத்தின் நடப்புக் காலமும் துல்லியப் பட்டு வருகிறது). 25783 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால், ஒரு ஓரையில் (உகத்தில்) 25783/12 = 2148.58 ஆண்டுகள் என்ற ஒரு பருவ காலம் அமையும். இந்தப் பருவகாலத்தை உகம் (=யுகம்) என்று சொல்லுகிறார்கள். உகம் உகமாய் மாந்த வாழ்க்கை மாறுகிறது என்பது இப்படித் தான். இப்பொழுது மீன உகத்தில் இருக்கும் நாம் அடுத்து ஐந்தே ஆண்டுகளில் அஃகரை உகத்திற்குள் நுழையப் போகிறோம்;

இந்திய வானியலில் முற்செலவம் என்ற அயனத்தையும், வலயம், தன்னுருட்டு ஆகியவற்றையும் சேர்த்து இயக்கங்களைக் கணக்கிடும் முறைக்கு ”உடன் அயன முறை” (உடன் = சக என்று வடமொழியில் அமையும்; சக அயன முறை = sayana method) என்று பெயர். மேலையர் பெரும்பாலும் இந்த முறையில் தான் காலங்களையும்க் கணிக்கிறார்கள். மாறாக, முற்செலவம் என்ற அயனத்தை முற்றாகக் கழித்து மற்றவற்றைப் பார்ப்பது நில்லயன முறை (nirayana method) எனப்படும். இந்திய வானியலில் முற்செலவத் திருத்தம் (precession correction) கொண்ட நில்லயன முறை என்பதே விதப்பாகப் பின்பற்றப்படுகிறது.

நில்லயன முறையின் படி, தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை வட செலவு (=உத்தர அயனம்) என்றும், ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை தென் செலவு (=தக்கண அயனம்) என்றும் சொல்லுவார்கள். நில்லயன முறையின்படி, தென்செலவை முடித்துக் கொண்டு, வடசெலவைச் சூரியன் தொடங்குவது தை முதல் நாளில் தான். அதே பொழுது இந்தக் காலத்தில் உடன் அயன முறையின்படி, வடசெலவு தொடங்குவது திசம்பர் 22 ஆகும். இங்கே கூறும் கால வேறுபாடு முற்செலவத்தால் ஏற்படுவது.

இன்னொரு விதமாய்ப் பார்த்தால், சனவரி 14/15ல் நடக்க வேண்டிய பனி முடங்கல், ஒரு நாள் முன் போய் சனவரி 13/14ல் நடக்க, 25783/365.25636556 = 70.587672, ஆண்டுகள் ஆக வேண்டும். இந்த அளவை வைத்துக் கொண்டு, வெறும் முழு நாட்களாய்ப் பார்க்காமல், இன்னும் நுணுக்கமாய் நாட்கள், மணி, நுணுத்தம் என்று கணக்குப் போட்டால், இன்று திசம்பர் 22ல் நடக்கும் பனி முடங்கல், 1722 ஆண்டுகளுக்கு முன்னால் சனவரி 14-லேயே நடந்திருக்கும் என்று புலப்படும். அதாவது கி.பி.285-க்கு அண்மையில் பனிமுடங்கல் என்பது, பொங்கல் நாளில் நடந்திருக்கும்.

அந்தப் பொழுதில், நில்லயன முறையும், உடன் அயன முறையும் ஒரே கணக்கைக் காட்டும். இன்னொரு வகையிற் சொன்னால், இந்திய அரசின் அதிகாரக் கணக்கின் படி, முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்கிய ஆண்டு கி.பி. 285 ஆகும்.

இந்திய வானியலில் முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்கிய நிலையை நினைவு படுத்தி, ”பசந்த ஒக்க நாளும் மேழ விழுவும் கி.பி.285 இல் ஒன்று சேர்ந்திருந்தன” என்று சொல்லுவார்கள். (ஒருக்களித்த விசும்பு வட்டத்தில் மேழ ஓரை தொடங்கும் நாளை மேழ விழு என்றும், துலை ஓரை தொடங்கும் நாளைத் துலை விழு என்றும் சொல்லுவது வானியல் முறை. மலையாளத்தில் மேழ விழுவை மேஷ விஷு என்றும், துலை விழுவைத் துலாம் விஷு என்றும் சொல்லுவார்கள்.)

மேலவிழு, துலை விழு ஆகியவற்றைச் சொன்னது போலவே, “பொங்கல் நாள்” என்பது ஒரு காலத்தில் (அதாவது கி.பி.285ல்) ”பனிமுடங்கலைச் சுட்டிக் காட்டிய பண்டிகை” என்பது இதுவரை சொன்ன விளக்கத்தால் புலப்படும். பனிமுடங்கலைக் கொண்டாடுவதன் மூலம், "அந்த நாளுக்கு அப்புறம் இரவு குறைந்து பகல் நீளும், இனிமேல் மகிழ்ச்சி பொங்கும், பனி குறையும், சூரியன் நெடு நேரம் பகலில் இருப்பான், இனிமேலும் வீட்டிற்குள் அடங்கியிருக்க வேண்டாம்" என்று உணர்த்துகிறோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்த கதிரவன் இனித் திரும்பி வந்து வடக்கு நோக்கி வரத் தொடங்குவதற்காக, அவனுக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் ஒரு விழா தான் இந்தப் பொங்கல் விழா.

அந்த அடிப்படையைப் பார்க்கும் போது, பொங்கல் விழா என்பது சங்கம் மருவிய காலத்தில் தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். இதற்கு ஏற்றாற் போல சங்க இலக்கியத்தில் (கி.பி.285க்கு முந்திய இலக்கியத்தில்) எங்கணுமே பனிமுடங்கலை ஒட்டி எழுந்த பொங்கல் விழா பற்றிய குறிப்பு பதிவு செய்யப் படவே இல்லை. அப்படியானால் ”பொங்கல் விழாவை கி.பி.285 ற்கு முன் தமிழர் என்ன சொல்லிக் கொண்டாடினர்?” என்ற கேள்வி எழுகிறது.

அந்தக் கேள்விக்கான விடையை, விழாவைக் கொண்டாடும் முறையிலிருந்து புரிந்து கொள்ளலாம். பொங்கலின் போது சிவன், விண்ணவன் என்று எந்தச் சமயத்தின் தொன்மக் கதைகளும் ஊடே கலந்து சொல்லப் படுவதில்லை. பொங்கலுக்கான படையல் என்பதும் வெட்ட வெளியில் சூரியனுக்குக் கீழே அளிக்கப் படுகிறது. அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே அன்று வைக்கப்படும். மேலையர் காய்கறிகளை இந்தப் படையலோடு வைப்பதைத் தவிர்ப்பார்கள்), வெல்லம் ஆகியவற்றோடு தான் படையல் இடப்படுகிறது. விழாவிற்கு முன்னால், வீட்டைத் தூய்மை செய்து, முடிந்தால் வெள்ளையடித்து, கோலமிட்டுச் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் கூடச் சமயஞ் சேராத ஈடுபாடே இருக்கும். விழாவின் போது செய்யும் "பொங்கலோ, பொங்கல்" என்ற கூப்பாடு கூட நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே குறிக்கிறது.

இத்தகைய குறிப்புக்கள் அத்தனையும், இந்த விழாவை தமிழர் என்னும் இனக்குழு (tribe) தொடர்பான விழா என்று தெளிவாக உணர்த்துகின்றன. இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் (religions emphasizing philosophy) தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும், ஆனால் வேறு எதையோ அது குறித்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளுகிறோம். ”அந்த வேறு எது?” என்பது அடுத்த கேள்வி.

[இன்றைக்கும் கூட இனக்குழு வழிபாடுகள் எல்லாமே, குறிப்பாக அய்யனார் கோயில்கள், அம்மன் கோயில்கள், கருப்பண சாமி கோயில்கள் ஆகியவற்றில் நடக்கும் - tribal worships - எல்லாம் பொங்கலிட்டுப் படையல் இடுவது (இது பெரும்பாலும் கறியாகவும், ஓரோவழி மரக்கறியாகவும் இருக்கும்), மாவிளக்கு வைப்பது என இயற்கையளவிலேயே இருப்பதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புரியும்.]

[இந்த இடத்தில் கொஞ்சம் இடைவிலகல். பொதுவாக, மெய்யியற் சமயங்கள் நம்மூரில் களப்பிரர் ஆட்சிக்கு அப்புறமே நிலைத்தன. அதுவரை நம்மூரில் விரவியவை இனக்குழுச் சமயங்களும் (tribal religions), வடபுலத்தில் இருந்து வந்த செயினம், புத்தம் (இவற்றோடு இங்கே பெரிதும் பங்களிக்கப் பட்ட ஆசீவகம்), வேதநெறி ஆகியவையுமே.

மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கும் (மாணிக்க வாசகரின் காலம் பற்றிப் பலர் வேறுபடக் கூடும். என்னுடைய இன்றையப் புரிதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு தான்), ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமந்திரத்திற்கும்
முன்னால் சமய வரைபாட்டைச் சொல்லும் நூல்கள் தமிழில் ஏற்படாததே மெய்யியற் சமயங்கள் தமிழர் வரலாற்றில் பின்னால் ஓங்கியவையே என்பதை உணர்த்தும். அதே பொழுது சிவன் கோயில், விண்ணவன் கோயில் போன்றவை சங்க காலத்திலும் இருந்திருக்க முடியும். ஆனால் அவை ஏதோ ஒரு மெய்யியலைச் (சித்தாந்தத்தைச்) சுட்டிக் காட்டின என்று சொல்லமுடியாது. (என்னுடைய புரிதலின் படி மாணிக்க வாசகரே தமிழில் எழுந்த முதல் சிவநெறி மெய்யியற்காரர்.)

கோயிலைக் குறிக்கும் சொற்கள், குறிப்பாக ஆலயம் என்ற சொல் ஆல மரத்து வெளி என்ற பொருளையும், அம்பலம் என்ற சொல் திறந்த வெளி என்பதையும், கோட்டம் என்ற சொல் கூடுகின்ற இடம் என்ற பொருளையுமே காட்டுகின்றன. எல்லோரும் பெரிதாக இன்று பயன்படுத்தும் கோயில் என்ற சொல் கூட "இறைவன் வீடு" என்று இன்றைக்கு வலிந்து கூறப்படும் பொருளைக் காட்டிலும், கோவுகிற இல் = கோவில் என்று பொருள் கொள்ளுவது சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. கோத்தல்/கோவுதல் என்ற வினைச்சொல்லிற்கு ஒன்றுசேர்த்தல் என்றே பொருள் அமைகிறது. ஊரில் உள்ளவர் ஒன்று கூடும் இடம் கோவில் என்ற பொருள் இந்த வினைச்சொல்லின் அடிப்படையில் இயல்பாக வருகிறது. ஆக ஆலயம், அம்பலம், கோட்டம், கோவில் என்ற இந்தச் சொற்கள் எல்லாமே இனக்குழுப் பொருள்களையே தருகின்றன.

அந்த வகையில் சங்க இலக்கியங்கள் காட்டும் இறை வழிபாடுகள் எல்லாம் வெறுமே இனக்குழு வழிபாடுகளாகவே இருக்கின்றன. அவற்றில் மீநிலைச் சமயப் பொருள்கள் பொதுவாக அமைவதில்லை. [பெரும் ஆதன் (=பரமாத்மா), உயிர் ஆதன்(=ஜீவாத்மா), பதி - பசு - பாசம் போன்று விளக்கம் சொல்லும் மெய்யியல்கள் எழுவதற்கு முன்னமே இருந்த பொருளை நான் இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.] தமிழகத்துள் சங்க காலத்திற்குச் சற்று முன்னால் நுழைந்த வடபுலத்து வேத நெறியும் கூட முதலில், வேத நெறியின் வழி வேள்வி நடத்துவது, வேண்டுதல், அவி சொரிதல் என இனக்குழு வழிபாட்டையே காட்டுகிறது. இந்த வேத நெறி தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிப் பலவிதமான தவறான புரிதல்கள் தமிழ் இணையத்தில் உலவுகின்றன. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் நான் பேச முற்படவில்லை. வேறு ஒரு பொழுது பார்க்கலாம்.

இந்த இனக்குழு வழிபாட்டைக் கேள்வி கேட்டு வாதப் படுத்துவதின் மூலம், உலகாய்தம், செயினம், புத்தம், ஆசீவகம் போன்றவை கலகச் சமயங்களாய் (polemic religions) நம்மூரில் எழுந்தன. அவற்றிற்கு விடை சொல்லும் முகத்தால், எதிர்வினையாக, வடநாட்டில் உபநிடதங்களும், தமிழகத்தில் மாணிக்க வாசகராலும், திருமூலராலும், திருவாசகமும், திருமந்திரமும் எழுந்தன. திருவாசகத்திற்கு முந்திய மெய்யியற் செய்திகளை நான் தமிழில் கண்டதில்லை.]

”சரி, கி.பி.285-க்கு முன்னால், இந்த விழா எதுவாக இருந்திருக்கும்?” என்பதை இனிப் பார்ப்போம்.

கி.பி.285 கால அளவில் தான், நம்மூரில் ஆண்டு ஒன்றை நான்கு பருவங்களாய்ப் பிரிக்கும் பழக்கம் பெரிதும் புழக்கத்திற்கு வந்தது. சங்க இலக்கியம் முழுதிலும் இந்த நான்கு பருவக் காலம் குறிப்பிடாதது வியப்பாக இருக்கிறது. மாறாகப், பின்பனி தொடங்கி, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி ஈறாக ஆறு பெரும்பொழுதுகள் ( = இருதுப் பருவங்கள்) குறிப்பிடப்படுகின்றன.

இப்படிப் பின்பனியில் ஆண்டைத் தொடங்குவதற்கு சங்க இலக்கியத்திலும்,வடமொழி சாற்றங்களிலும் சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பிய வழக்கத்தின் படி காரில் இருந்து ஆண்டு தொடங்கியதும் புலப்படுகிறது. இளவேனிலிற் தொடங்கியது சங்க காலம் முடியும் போதே ஏற்பட்டிருக்க வேண்டும். (சிலம்பில் இந்திரவிழா இளவேனிலில் தொடங்குகிறது.)

எந்தவொரு சூரிய ஆண்டுத் தொடக்கமும் (tropical year beginning) பனிமுடங்கல், வேனில் முடங்கல், இரு ஒக்க நாட்கள் என்ற நான்கு நாட்களில் தான் தொடங்க முடியும். அவற்றில் ஒக்க நாட்கள் என்பவை வானியல் அறிவு கூடிய காலத்தில் கணக்கிட்டுப் பார்த்தே அறிய முடியும். ஆனால் முடங்கல் நாட்களோ வெறும் குச்சியின் நிழலை வைத்தே அறிந்து விட முடியும்.

இனக் குழுக்களாய் வாழ்ந்த காலத்தில் கூட நேரம் என்பது நிழலை வைத்தே கண்டறியப் பட்டது. இந்திய வானியலில் சாய் என்ற சொல் நிழலின் வழி வானியல் படித்த வரலாற்றை நமக்கு உணர்த்தும். (சாய் என்பது வடமொழியில் jya என்று ஒலிபெயர்ப்பாகும்; வடமொழியில் இந்த ஒலிபெயர்ப்புச் சொல்லுக்குப் பெண்ணின் மார்பு வளைவு என்ற பொருள் இருந்ததைக் கண்டு, அரபு வழி கிரேக்கம் போன போது, sine என்ற சொல்லெடுக்கும். தமிழனின் சாய் எப்படியோ திரிந்து இன்று மேலை நாடுகளிற் sine ஆகி நிற்கிறது.)

பின்பனியில் ஆண்டைத் தொடங்குவது என்பது சூரியனின் வட செலவில் இருந்து தொடங்குவதற்கு இணையானது. அப்படியானால் தைமுதல் நாள் பொங்கல் விழாவைக் குறிப்பதற்கு முன்னால் ஆண்டுத் தொடக்கத்தைக் குறித்தது என்ற பொருளையே ஏரணத்தின் மூலம் நாம் பெறுகிறோம். ஏதோ ஒரு காரணத்தால், நாள்காட்டுகளில் இருந்து இந்திய வானியலில் ஓரைகளுக்கு நகர்ந்த காலம் கி.பி.285. அதே காலத்தில் தான் இப்போதைய முற்செலவச் சுற்றும் தொடங்கியிருக்கிறது. ஆறு பெரும்பொழுதுகளுக்கு மாறாய் நான்கு பருவங்களைப் பேசும் பழக்கமும் தோன்றியிருக்கிறது. களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் நிலைத்ததும் இதே காலமே. இன்னும் இது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டிய செய்திகள் பலவும் இருக்கின்றன.

பெரும்பொழுதுகளுக்கு மாதங்கள் குறிப்பிடும் போது இந்தக் காலத்தில் (மாசி,பங்குனி), (சித்திரை, வைகாசி), (ஆனி, ஆடி), (ஆவணி, புரட்டாசி), (ஐப்பசி, கார்த்திகை), (மார்கழி, தை) என்று ஆறு இருமாதங்களைக் குறிப்பிடுவார்கள். இத்தகைய இன்றையப் புரிதலை மீண்டும் முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்தால், ஒவ்வொரு இருதுவையும் 24 நாட்களுக்கும் மேல் முன்தள்ளிப் பார்க்க வேண்டும். அப்படித் தள்ளும் போது, பின்பனி என்பது சங்க காலத்தில் (தை, மாசி) என்ற மாதங்களையும், இளவேனில் என்பது (பங்குனி, சித்திரை) மாதங்களையும், முதுவேனில் என்பது (வைகாசி, ஆனி) மாதங்களையும், கார் என்பது (ஆடி, ஆவணி) மாதங்களையும், கூதிர் என்பது (புரட்டாசி, ஐப்பசி)மாதங்களையும், முன்பனி என்பது (கார்த்திகை, மார்கழி) மாதங்களையும் குறித்திருக்க வேண்டும். அப்படியானால், ஆண்டுத் தொடக்கம் என்பது தை முதல் நாளே என்பது புரியும்.

பிறகு எப்படி ஆண்டு/ஆட்டை என்ற சொல் எழுந்தது? மேழ ஓரை என்பது ஆடு என்ற உருவைக் குறிக்கும் ஓரையே. ஆட்டின் வழி ஏற்பட்ட சொற்கள் ஆண்டு, ஆட்டை என்பவை. ஆடு தலையாக எண்ணப் பட்டது நெடுநல் வாடையில்,

திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி -----

என்று குறிப்பிடப்படுகிறது. உறுதியாக நெடுநல் வாடை என்பது கி.பி.285க்கு முன்னர் எழுந்த பாட்டே ஆகும்.

அப்படியானால், இரண்டு விதமான ஆண்டுத் தொடக்கங்கள் (ஒன்று தையில் தொடங்குவது, இன்னொன்று சித்திரையில் தொடங்குவது) இந்த நாவலந்தீவில் இருந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய், தைத்திங்கள் என்பது ஆண்டுத் தொடக்கம் என்ற குறிப்பு ஒழிந்து, அதே பொழுது, பழைய நினைவுகளைக் குறிக்கும் முகத்தான் சூரியப் படையலோடு அது அமைந்து போனது; அதே காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் சித்திரைத் தொடக்கமே ஆண்டுத் தொடக்கம் ஆயிற்று போலும்.

சூரியன் மேழத்தில் நுழைவதே இன்றையத் தமிழர் புரிதலில் ஆண்டுப் பிறப்பு. அதே போல சூரிய மானத்தின் படி, சூரியன் ஓர் ஓரையில் இருந்து இன்னோர் ஓரைக்குப் போவதே மாதப் பிறப்பாகும். சூரிய மானப் பெயர்களான, மேழம் (=மேயம்>மேஷம்), விடை (ரிஷபம்), ஆடவை (மிதுனம்), கடகம், மடங்கல் (=சிகையம்>சிம்ஹம்), கன்னி, துலை(=துலாம்), நளி (விருச்சிகம்), சிலை (தனுசு), சுறவம் (மகரம்), கும்பம், மீனம் என்ற பெயர்களையே மலையாளத்தார் போலத் தமிழரும் புழங்கினால் நன்றாக இருக்கும். [இப்பொழுது சூரியச் சந்திரமானப் பெயர்களான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம். பழைய கல்வெட்டுக்களில் ஞாயிற்று மாதங்களும் (காட்டாக மகர ஞாயிறு), திங்கள் மாதங்களும் (தைத் திங்கள்) பதிவாக்கப் பட்டிருக்கின்றன.]

இன்றோ, மேலையரின் தாக்கத்தால் மீண்டும் பனிமுடங்கலுக்கு இணையான சனவரி 1 தொடக்கத்தை ஆண்டுத் தொடக்கமாய்க் கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது. மாதங்களைக் கூட சூரிய மாதங்களையோ, சூரியச் சந்திர மாதங்களையோ சொல்லாமல் மேலையர் மாதங்களை வைத்தே சொல்லும் பழக்கமும் கூடி வருகிறது. ஒரு 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் கூட மார்கழி மாதத்து இசைவிழா என்று தான் சொல்லக் கேட்டிருக்கிறோம்; இன்றைக்கு "டிசம்பர் சீஸன்" என்றால் தான் பலருக்கும் விளங்குகிறது. காலத்தின் கோலம் பாருங்கள்!

கட்டுரையை முடிப்பதற்கு முன்னால் ஒரு வேண்டுகோள்.

பொங்கல் விழாவில் "சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு நன்றி சொல்லுகிறோம்" - அவ்வளவு தான். அந்த நன்றி, சமயம் சாராத, பொது இறைப் பெயருக்குப் போகிறது. பொங்கலும் படையலும் மெய்யியற் சமயம் சாராதவை. என்னைக் கேட்டால், இந்த விழா எந்தச் சமயத்தவரும் பழகக் கூடிய விழா. [திருவோணம் என்ற விழாவைக் கூட பல சமய நெறியினரும் கேரளத்தில் கொண்டாடுகின்றனர். மாவலி மீண்டும் தங்கள் வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியைத் தருவான் என்று எண்ணுகிறார்கள். இன்றைக்குத் திருவோணம் தமிழகத்தில் கொண்டாடவில்லை என்றாலும் அது உறுதியாகத் தமிழர் பண்டிகை தான்; மாவலியும், பெருங்கலாதனும்(>பெருகலாதன்>ப்ரகலாதன்; ஆதன் என்பதே அவன் சேர அரசன் என்பதை நமக்கு உணர்த்தும்) நம் தமிழ் அரசர்கள் தான். சங்க இலக்கியத்தில் பல இடங்களில் திருவோணம் நம்மூரில் - குறிப்பாக மதுரையில் - கொண்டாடப் பட்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன. பழந்தமிழகத்தில் ஒரு பகுதியான கேரளத்தில் மட்டுமே இப்பொழுது திருவோணம் கொண்டாடப் படுகிறது.]

பொங்கலைப் பொதுவாய்த் தமிழர் கொண்டாடுவதற்கு என்ன தயக்கம், இதில் சமயம் எங்கே வந்தது, என்று புரியவில்லை. பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும் மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே! கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.

பொங்கலோ பொங்கல்!

அன்புடன்,
இராம.கி.

Friday, January 12, 2007

தானமும் கொடையும் - 1

"தானமும் கொடையும் ஒன்றா?" என்று நண்பர் கோவி.கண்ணண், சொல் ஒரு சொல் பதிவில் கேட்டிருந்தார். கேட்டதோடு அதுபற்றிக் கருத்துச் சொல்லும் படி, அங்கு அவர் அளித்த பின்னூட்டில் என்னை அழைத்திருந்தார். பாலை - தொடர்ச்சி என்ற என் பதிவை முடிக்க முயன்று கொண்டிருந்ததற்கு இடையில் இந்த அழைப்பு வந்தது. சரி, மறுக்க வேண்டாம், தெரிந்ததைச் சொல்லுவோம், என்ற எண்ணியதால் இந்த முயற்சி. சொல்லும் செய்தியைப் பின்னூட்டில் அங்கே தந்தால் நீண்டுவிடும் என்று கருதி, இங்கே தனிப் பதிவாக இடுகிறேன். நண்பர்கள் பொறுத்துக் கொள்வார்களாகுக.

தமிழ்ச் சொற்களைப் பற்றித் தொல்காப்பியர் பேசும் போது, "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்று தெளிவாகச் சொல்லுவார். தொல்காப்பியத்தின் படி, தமிழில் இடுகுறிச் சொற்கள் என்பன கிடையாது (ஆனால் நன்னூலாரோ அந்தக் கருத்தில் மாறுபட்டு இடுகுறிச் சொற்கள் தமிழில் உண்டென்பார்); நான் தொல்காப்பியர் வழி தமிழ்ச் சொற்களைப் பார்க்க முயல்பவன்; எனக்கு எல்லாத் தமிழ்ச் சொற்களுமே பொருண்மை உள்ளவைதான். "இந்தப் பொருண்மை என்பது சொற்களைச் சட்டென்று விழித்துப் பார்த்தால், தோன்றாது; கொஞ்சம் ஆழமாய்த் தேடிப் பார்க்கவேண்டும்" என்ற கருத்தில், தொல்காப்பியர் இன்னொரு இடத்தில், "மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா" என்றும் சொல்லுவார்.

ஆகப் பொருண்மை என்பது தேடாமல் கிடைக்காது. பொதுவாகச் சொற்களுக்குச் சொன்மை, பொருண்மை என்ற ஈர் இயல்புகள் உண்டு. "பார்த்தான்" என்ற சொல்லில் பார், த், ஆன் என்ற மூன்று கூறுகள் இருக்கின்றன, அல்லவா? ஆன் என்ற ஈற்றின் வழியாய் பேசுபவர் "படர்க்கை இடத்தில் இருக்கும் ஓர் ஆண்" என்ற குறிப்பும், த் என்ற இடைநிலை வழியாய், "வினை நடந்தது இறந்த காலம்" என்ற குறிப்பும் சொன்மையின் வெளிப்பாடுகளாய் அமையும். இனிப் பார் என்ற பகுதியின் வழியாய், கண்ணால் அறிந்ததைச் சுட்டுவது பொருண்மையின் வெளிப்பாடு ஆகும். இந்தப் புரிதலோடு, தானச் சொற்களுக்குத் தொல்காப்பியர் வழி நாம் பொருள் தேடலாம்.

கதிர், சுடர் என்று இருவர் இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே நடைபெறும் ஒரு பரிமாற்ற வினையில் இடம் பற்றிய குறிப்பைத் தமிழில் எப்படி விவரிப்பது என்பது தான் இங்கு முன்னிற்கும் கேள்வி.

பொதுவாக, வினை ஈற்றின் வழியே அறியும் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று இடங்கள் போக, உயர்ச்சி, ஒப்பு, தாழ்ச்சி என இன்னும் ஒரு மூன்று இடங்களை, தம் பகுதியின் வழியாக, ஒரு சில வினைச் சொற்கள் காட்டும். இதற்கு எடுத்துக் காட்டாய், சொல்லதிகாரம் எச்சவியலில் 444 ஆம் நூற்பாவில் ஈ, தா, கொடு என்று மூன்று கிளவிகளைப் பற்றித் தொல்காப்பியர்

ஈ,தா, கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைய

என்று பேசுவார். [கிளவி என்ற சொல் இன்று நம்மிடையே புழங்குவதில்லை. அதற்கு இணையாகச் சொல், மொழி என்பவற்றை இன்றையத் தமிழில் பயிலுகிறோம். கிளத்தல் = சொல்லுதல், பேசுதல், மொழிதல்.] முன்று காட்சிகளையும் விரிவாகப் பார்ப்போம்.

முதல் காட்சி:

இங்கே கதிருக்கு மிகுந்த பசி; அவர் கையில் காசில்லாதவர்; தாழ்வுற்ற நிலையில் உள்ளவர். சுடரோ செல்வம் மிகுந்தவர்; உயர்ந்தவர்; சுடரிடம் சோறு அதிகமாக இருக்கிறது. இதைச் சுடரிடம் இருந்து இரந்து (இரத்தல் = கேட்டுப் பெறுதல்) பெறும் போது, கதிர் எப்படிக் கேட்பார்? [இந்தத் தாழ்ச்சி என்பதைச் சரியாக நாம் புரிந்து கொள்ளவேண்டும். இது அகவை, அறிவு, பண்பு, செல்வம், உதவி, நன்றிக்கடன், தொண்டு, ஆளுரிமை ஆகிய ஏதோ ஒன்றால் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், பிறவிக்குல வேற்றுமை என்பது இதில் கிடையாது.]

"சோறு எனக்கு ஈ" (இங்கே பறவைப் பொருளை ஒதுக்கி ஈ என்பதை வினைச்சொல்லாய்ப் பார்க்க வேண்டும். ஈ என்ற வினை இன்று அரிதாகவே பயன்படுகிறது. பெரும்பாலும் வழு அமைதியாய் வேறு சொற்களேயே தமிழர் பயன்படுத்துகிறார்கள். ஈகை என்பது ஈதலில் இருந்து கிளைத்த பெயர்ச்சொல். "பாரி முல்லைக்குத் தேரை ஈந்தான்; அவனுடைய ஈகைக் குணம் இன்றும் போற்றுதற்கு உரியது" என்ற சொல்லாட்சிகளைப் பாருங்கள்.) இந்த ஈதல் என்ற வினை இழிந்தோருக்கு உரியது என்ற பொருளில் தொல்காப்பியச் சொல்லதிகாரம் 445 - ஆம் நூற்பா "ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே" என்று கூறுகிறது. [இழிந்தது என்ற சொல்லை நாம் இன்றையப் பொருள் கொண்டு பார்க்கக் கூடாது. இழிந்தது என்பது ஏதோ ஒன்றால் கீழே இறங்கிய நிலை; அவ்வளவு தான்.]

[ஒரு சிறு இடைவிலகல். இடுவது என்பது ஈகைப் பொருளில் வராது. இடுவது என்பது to place; to issue. கொஞ்சம் நீட்டி, அத்தகைய பொருளைக் கொடுப்பது சரியான பயன்பாடு அல்ல.]

இனி அடுத்த காட்சி:

இதில் கதிரும் சுடரும் ஒருவருக்கொருவர் ஒப்பானவர்கள்; நண்பர்கள் என்று கூட வைத்துக் கொள்ளலாம். சுடரைப் பார்க்கக் கதிர் வருகிறார்; அப்படி வரும் போது, எழுதுகின்ற தூவலைக் (pen) கொண்டு வர மறந்து போன கதிர், சுடரின் தூவலை, ஏதோ ஒன்றை எழுதுவதற்காக, இரந்து பெற விழைகிறார்; கதிர் இப்பொழுது எப்படிக் கேட்பார்?

"தூவலை எனக்குத் தா" இதைச் சொல்லுகிற தொல்காப்பியச் சொல்லதிகாரம் 446 - ஆம் நூற்பா "தாவென் கிளவி ஒப்போன் கூற்றே" என்று கூறுகிறது. (இங்கே தா விற்கு இருக்கும் மற்ற பொருள்களை ஒதுக்கிப் பார்க்க வேண்டும். தா என்ற வினைச்சொல் பெரிதும் புழக்கத்தில் இன்று இருக்கிறது. தரு/தா என்பதில் இருந்து கிளைத்த தருகை, தருவு>தரவு, தருவம்>தருமம், தானம் போன்ற சொற்கள் எல்லாம் பெயர்ச் சொற்கள். தரவு என்பதை இன்று பொருள் நீட்டி data என்பதற்குக் கூடப் பயன்படுத்துகிறோம். அதுவும் ஒருவகையில் சரிதான்.

data:
1646, pl. of datum, from L. datum "(thing) given," neuter pp. of dare "to give" (see date (1)). Meaning "transmittable and storable computer information" first recorded 1946. Data processing is from 1954. Database formed 1962, from data + base. தரு = to give (இந்த ஆங்கில வரையறைக் கவனித்தால் கூடத் தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் இருக்கும் உறவு புரியும். இது போன்ற பல சொற்களுக்கான உறவுகளை நானும் தான் சுட்டிக் காட்டிக் கொண்டே போகிறேன். ஆனால், முன்கருத்தில் தேங்கிப் போன பலரும் தங்கள் நம்பிக்கைகளில் இருந்து வெளியே வரமாட்டேம் என்கிறார்கள்; வடமொழி பற்றிய பழமை வாதங்களில் ஊறிப் போன அவர்கள், தங்களுடைய தேற்றங்களைத் தூக்கிப் போடத் துணிவில்லாமல், நைந்து போன கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.)

தருவம் என்பது தருமம் ஆவது தமிழ்முறைப் பலுக்கலில் மிகவும் எளிது. தருமம் என்ற சொல் தூய தமிழ் தான். இந்தக் காலத்தில் நம்மில் ஒரு சாரார், அதைத் தவறாக dharumam என்று ஒலிப்பதனாலேயே அது வடமொழியாகி விடாது. பேசினார் என்பதைக் கூடத்தான் இவர்கள் "பேஷினார்" என்று தவறாகச் சொல்லுகிறார்கள். அதனால் அது வடமொழி ஆகிவிடுமா? பலுக்கல் குழப்பத்தால் நூற்றுக் கணக்கான தமிழ்ச் சொற்களை வட சொற்கள் என்று ஐயுறுவது நம்மில் சிலருக்கு வாடிக்கையாகவே ஆகிவிட்டது.

தானம் என்ற சொல் தமிழா என்பதை மேலும் சில கருத்துக்களைச் சொல்லிக் கீழே பேசுகிறேன். (இதையுமே ஒரு சாரர் dhaanam என்று பலுக்குவார்கள்) அதற்கிடையில் தானத்திற்கும் donation க்கும் உள்ள தொடர்பை இங்கு புரிந்து கொள்ளுங்கள்.

donation:
c.1425, from M.Fr. donation, from L. donationem (nom. donatio), from donare "give as a gift," from donum "gift," from PIE *donum "gift" (cf. Skt. danam "offering, present," O.C.S. dani "tribute," Lith. duonis "gift," O.Ir. dan "gift, endowment, talent"), from base *do-/*de- "to give." Donate (v.) is an 1845 back-formation, chiefly Amer.Eng. )

இனி மூன்றாவது காட்சி:

இதில் சுடரைக் காட்டிலும் கதிர் உயர்ந்தவர்; காட்டாக, கதிர் என்ற அப்பா சுடர் என்ற தன் மகனைப் பார்த்து ஏதோ ஒன்றை எழுதிக் கொடுக்கச் சொல்லும் போது, எப்படிக் கேட்பார்? "தம்பி, இந்த மடலை எழுதிக் கொடு" "கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே" என்பது தொல்காப்பியச் சொல்லதிகாரம் 447 - ஆம் நூற்பா. [இங்கே கொடு விற்கு இருக்கும் மற்ற பொருள்களை ஒதுக்கிப் பார்க்க வேண்டும். கொடுவில் பிறந்த பெயர்ச்சொல் கொடை. நம்மைக் காட்டிலும் உயர்ந்தவருக்குத் தான் கொடுக்க முடியும். ஒரு புலவன், ஓவியன், ஆட்டத்தி (actress) என நம்மிலும் உயர்ந்த கலைஞருக்கு, ஏன் இறைவனுக்குக் கூட, கொடுப்பது கொடை. நம்மில் குறைந்தவருக்குச் செய்வது தொல்காப்பியர் கருத்துப்படி, ஈகை, கொடை அல்ல.]

இந்த மூன்றையும் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் முன்று வகையான இரப்போர்க்கு உள்ளதாகச் சொல்வார். இல்லென இரப்போர்க்கு உரியது ஈகை; இடன் இன்றி இரப்போர்க்கு உரியது தரவு. தொலைவாகி இரப்போர்க்கு உரியது கொடை.

சரி சுடர் என்பவர் ஈந்தார், தந்தார், கொடுத்தார். கதிர் என்பவர் என்ன ஆவார் என்பது அடுத்த கேள்வி. அவர் ஈதலுக்கு எதிராய்ப் பெறுவார், தருதலுக்கு எதிராய் பெறவோ, வாங்கவோ செய்வார். கொடுத்தலுக்கு எதிராய் வாங்குவார். கொடுத்தல் / வாங்குதல் என்ற இரு சொற்களிலுமே வளைவுப் பொருள் உண்டு. வளைந்த கையில் தானே கொடுக்கிறோம்? வளைந்த கையில் தானே வாங்குகிறோம்?

இது போக அளித்தல், வழங்கல், உதவல் என்பவை சுடரின் வினைக்கு உள்ள மற்ற சொற்கள். கிட்டுதல், கிடைத்தல் என்பது கதிருக்கு உள்ள மற்ற சொற்கள்.

மேலே உயர்ச்சி, ஒப்பு, தாழ்ச்சி என்ற மூன்று இடங்களை வைத்து மூன்று விதமான வினைச்சொற்களைக் கையாண்டது பற்றிப் பேசிய தொல்காப்பியர், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களில் எப்படிக் கையாள வேண்டும் என்று சொல்லதிகாரம் கிளவியாக்கத்தில் நூற்பா 28, 29, 30 ஆகியவற்றில் சொல்லுகிறார்.

28. செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம்மூ விடத்தும் உரிய என்ப.

செலவு, வரவு, தரவு, கொடை என்ற நான்கு சொற்களையும் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று இடத்திலும் பயனாக்கலாம் என்று சொல்வார்கள்; ஆனால்

29. அவற்றுள்,
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த

தரு சொல், வரு சொல் ஆகிய இரண்டையும் தன்மை, முன்னிலை ஆகிய இரண்டில் மட்டுமே சொல்ல வேண்டும். காட்டாக, "எனக்குத் தந்தான்; நினக்குத் தந்தான்" அல்லது ''என்னிடம் வந்தான்; நின்னிடம் வந்தான்" என்று வருவதே சரி. "அவனுக்குத் தந்தான்" அல்லது "அவனிடம் வந்தான்" என்று சொல்லுவது தொல்காப்பியர் காலத்துத் தமிழின் படி சரியில்லையாம். வேறு எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை 30-ஆம் நூற்பா விளக்குகிறது.

30. ஏனை இரண்டும் ஏனை இடத்த.

செலவுச் சொல், கொடைச் சொல் ஆகிய இரண்டும் படர்க்கை இடத்தில் வரும். காட்டாக, "அவனுக்குக் கொடுத்தான்" என்று சொல்லலாம். இது போல "அவனிடம் சென்றான்" என்று சொல்லலாம். இது போக ஒரு புறனடையையும் சொல்லுகிறார்.

448. கொடுவென் கிளவி படர்க்கை யாயினும்
தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பின்
தன்னிடத்து இயலும் என்மனார் புலவர்.

அதாவது, கொடு என்பதைப் படர்க்கையில் தான் சொல்ல வேண்டும் என்றாலும், சிலபோது தன்னைப் பிறன் போலக் கூறும்போது தன்னிலையில் சொல்லலாம்; காட்டாக ஒரு பாட்டன் இருக்கிறார்; தன் பேர்த்தியிடம் விளையாடிக் கொண்டிருக்கிறார். பேர்த்தி ஒரு பொம்மையைத் தர மாட்டேன் என்கிறாள். தாத்தா இப்படிச் சொல்லலாம்: "என் கண்ணுல்லெ, இந்தத் தாத்தாவுக்குக் கொடுக்க மாட்டியோ?"

இனித் தானம் என்ற சொல்லிற்குப் போகும் முன்னால், இன்னொரு இடை விலகல்; செலவு, வரவு, தரவு, கொடை என்ற சொற்கள் கணக்கியலிலும் பயன்படக் கூடியவை.

செலவு = expenditure
வரவு = income
தரவு = debit
கொடை = credit

தானத்தின் வேர்ச்சொல் விளக்கத்திற்கு அடுத்த பகுதி போகலாமா?

அன்புடன்,
இராம.கி.

Tuesday, January 02, 2007

பாலை - தொடர்ச்சி - 2

உலக்கைப் பாலை மரம், 15-18 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது என்றாலும், பல இடங்களில் 8 மீட்டர் அளவிலே தான் காணப் படுகிறது. மரத்தில் நிறைய முடிச்சுக்கள் இருக்கும். சிறுகிளைகள் உருவாகி, உதிர்ந்தபின் இப்படி முடிச்சுக்களாக ஏற்படுகின்றன. காய்ந்த சிறு கிளைகளின் காம்புப் பகுதிகள் முட்களைப் போன்றே இருக்கும். எப்பொழுதும் பசுமையாய் இருக்கும் பாலையிலைகள் தடித்த தோலுடன், 5.0-13.5 செ.மீ. நீளத்தோடும், 2.5-5.0 செ.மீ. அகலத்தோடும் முட்டை வடிவத்தில், நுனிப்பகுதி அரைவட்டமாயும், இருக்கின்றன. இலைச் சந்துகளின் இடையே, ஒரு செ.மீ. நீளக் காம்புடன், தனிப் பூவாகவோ, அன்றி 2-6 பூக்கள் அளவில் பூங்கொத்தாகவோ, வெண்மை நிறத்தோடும், சிறிது நறுமணத்தோடும், டிசம்பர் - சனவரியில் பூக்கின்றன. (அது என்னவோ, பெரும்பாலான பாலைத்திணை மரங்களின் பூக்கள் வெள்ளை நிறத்திலேயே இருக்கின்றன. பால் நிறம் வெள்ளை தானே?) பொதுவாக, மற்ற பாலை மரங்களைப் பார்க்கையில், உலக்கைப் பாலை அதிகமாய்ப் பூப்பதில்லை. அப்படிப் பூத்த பின்னர், 1.5 செ.மீ. விட்டத்தில் நீள் உருளை வடிவில் காய்கள் உருவாகி, முடிவில் அவையும் முதிர்ந்து, மஞ்சள் நிறக் கனிகளாகின்றன. ஒவ்வொரு கனியிலும் ஒரு விதை இருக்கும். பெரும்பாலும் சிறார்கள் சுவைக்கும் இந்தப் பாலைப் பழங்கள் ஒரு சில இடங்களில் விற்கப் படுகின்றன. (உலக்கைப் பாலையின் படத்தை அருகில் கொடுத்துள்ளேன்.)

குடசப் பாலை (Holarrhena antidysenterica) என்பதை குழிசிப் பாலை என்றும் சொல்லுவது உண்டு. (குழிசி = குடம்; குழிசிப்பாலை>குளசிப்பாலை>குளப்பாலை.) இதைக் குத்துப் பாலை, கசப்பு வெட்பாலை என்றும் கூடச் சிலர் சொல்லுவார்கள். "வடவனம் வாகை வான்பூங் குடசம்" என்று பல்வேறு பூக்களைச் சொல்லும் இடத்தில், குறிஞ்சிப் பாட்டின் 67 - ஆம் வரி சொல்லும். வான்பூ என்பது வெள்ளைப்பூ என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடு. இதே சொல்லாட்சி மணி:3.164; சிலப் 13.157 ஆகியவற்றிலும் காணப்படுகிறது. வடமொழியில் இந்தப் பாலையை குடஜ, கலிங்க என்று சொல்லுவார்கள்.

குடசப் பட்டை, மருந்துப் பொருளாயும் பயன்படுகிறது. குடச மது என்பது 12 1/2 சேர் (1சேர் என்பது இந்தக் கால வழக்கில் 280 கிலோ கிராம் ஆகும்.) மரப்பட்டை, உலர் திராட்சை 6 1/4 சேர், பேரிலை இலுப்பைப்பூ (Bassia latifolia; ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?) பெருங்குமிழ் மரப்பட்டை (Gmelina Arborea) ஆகிய இரண்டையும் ஒவ்வொன்றும் 80 தோலா (1 தோலா = 12 கிராம்) போட்டு 256 சேர் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, மொத்தக் கொள்ளளவும் 4ல் ஒன்றாகும் படி செய்து, வடிகட்டி, அதற்குப் பின்னால் பூக்கோளி விளக்கையின் (Woodfordia floribunda) பூக்களை 2 1/ 2 சேர் போட்டு, treacle 12 1/2 சேர் போட்டு குளிர்ந்த இடத்தில், மண்ணில் புதைத்து, ஒரு மாதம் நொதிக்க வைத்து எடுத்தால் கசப்பில்லாத ஒரு மது கிடைக்கும். அது விடாமல் பிய்த்துக் கொண்டு போகும் கழிச்சலுக்கும், வயிற்றாலைக்கும், மருந்தாக அமையும்.

குடசப்பாலை வறண்ட உலர்காடுகளைக் காட்டிலும், 500 மீட்டருக்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில், குறிப்பாக ஏலகிரி, சேர்வராயன் மலைகளில், வளர்கிறது. காடுகளை அழிக்கும் போது கடைசியில் அழிவதும், மீண்டும் துளிர்க்கும் போது முதலிற் துளிர்ப்பதும் குடசப்பாலை தான். இலைகளும் பூக்களும் அழகானவை. இலைகள் சிறுகாம்புடன், 15-30 செ,மீ.நீளமும், 5-15 செ,மீ.அகலமும் கொண்டு கரும்பச்சை நிறத்தில் இருக்கும். மார்ச்சு-மே மாதங்களில் குடசப்பாலை பூக்கும். பூங்கொத்துக்கள் நறுமணம் உடையவை. பூக்கள் 2.5 செ.மீ. அளவில் மரத்தில் பூச்செண்டுகள் போலக் காட்சியளிக்கும். 30 செ.மீ. நீளமுள்ள குடசப்பாலை நெற்றுக்கள் சோடி சோடியாய் உருவாகும். 0.6 செ.மீ. விட்டமுடைய நெற்றுக்கள் குழல் வடிவமுடையவை. ஒவ்வொரு நெற்றிலும் 1.25 செ.மீ. நீளமுள்ள விதைகள் 25-30 இருக்கும்.

அடுத்தது வெட்பாலை (= வெள்+பாலை; வெள்ளையான பாலை; Wrightia tinctoria). இதை நிலப்பாலை என்றும் சொல்லுவார்கள். தந்த நிறத்தில் உள்மரம் இருக்கும். இதை வைத்துக் கடைசல் வேலைகள் செய்ய முடியும். சமவெளிகளிலும், 1500 மீ வரை மலைப்பகுதிகளிலும் வெட்பாலை இருக்கும். 800 மீட்டருக்கும் மேல் மலைப்பகுதிகளில் கருப்பாலை (Wrightia Arborea) என்ற இன்னொரு வகை மரமும் இந்தியாவில் பல இடங்களில் உண்டு. வெட்பாலை தமிழ்நாட்டில் செவ்வல், சரளை, செம்புறை நிலங்களில் விளைகிறது. எங்கள் ஊர்ப்பக்கங்களிலும், மானாவரி நிலங்களில் வேலியோரமாய், மழை குறைந்த இடங்களிலும் வளர்கிறது. பல்வேறு இடங்களில் அழிஞ்சல் மரத்துடன் வளர்கிறது. செதில் செதிலாய் இருக்கும் சாம்பல் நிறப்பட்டை இந்த மரத்தை மூடிக் கிடக்கிறது. சிறுகாம்புடன், 6-14 செ.மீ. நீளம், 3-6 செ.மீ.அகலத்தில் இலைகள்லிருக்கின்றன. பூக்கள் நறுமணத்தோடு இருக்கும். பூந்தண்டு இரு கவட்டு முறையில் இணைந்திருக்கும். இரு சூல் இலைகளால் ஆன, ஒரு புற வெடிப்பில் கனிகள் உருவாகும். இரட்டையாக இணைந்த இக் கனிகள் 25-30 செ.மீ. நீளம், 0.6-1.2 செ.மீ. விட்டம் உடைய கொம்புகள் போலத் தோற்றம் அளிக்கும். சிறு வெண்மயிர் குஞ்சத்துடன் கூடிய விதைகள். இவற்றை அரிசிகள் என்பார்கள்.

குடசப்பாலையின் பட்டையுடன், வெட்பாலைப் பட்டையையும் கலந்து மேலே சொன்ன மது, காய்ச்சம் (காய்ச்சம் என்ற தமிழ்ச்சொல் தான் காஷாயம் என்று ஒரு விதமாய் ஒலித்து வடமொழியாக்கிக் காட்டுவார்கள். நல்ல தமிழ்ச்சொல்லை நாம் தொலைத்து நிற்கிறோம். தமிழ் மருத்துவச் சொற்கள் பலவும் தேடிப் புதுக்க வேண்டியவை. வெட்பாலையின் வெண்ணிறப் பூக்கள் சமவெளிகளில் சூலை-ஆகசுடு மாதங்களிலும், மலைப்பகுதிகளில் மார்ச்சு - மே மாதங்களிலும் பூக்கும்.

முசுக்கைப் பாலை (Wrightia tomentosa) என்ற இன்னொரு வகையும் எல்லா மாவட்ட முல்லை நில வறண்ட திறந்தவெளி நிலங்களில், உதிர்புக் காடுகளில் வளரக்கூடியது. ஆனால், இந்த வகை தெற்கே செல்லச் செல்ல தமிழகத்தில் அருகிக் காணப்படுகிறது.

குடசப் பாலையையோ, வெட்பாலையையோ, அவற்றின் காய்களை யானைத் தந்தத்தோடு ஒப்பிட்டுக் குறிக்கும் பாடல் வரிகள் நற்றிணை 107 -ல் முதலைந்து வரிகளாய் வருகின்றன.

"உள்ளுதொறும் நகுவேன்-தோழி! வள் உகிர்ப்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண்கோட்டுக்
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை,
செல்வளி தூக்கலின், இலைதீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்"

"தோழி, நினைக்கும் போதெல்லாம் சிரித்துக்கொள்வேன். காய்ந்து போன வெள்ளைப் பூங்கொத்து நிறைந்த பாலைமரம், ஊடே வரும் காற்றில் ஒடுங்கி அசைகிறது; அந்த அசைவில் மலையிலிருந்து விழும் அருவியோசை போல், இலை கொட்டிய நெற்றுக்கள் ஒன்றையொன்று முட்டி ஒலிக்கின்றன. அது எப்படி இருக்கிறது தெரியுமா? கூர்நகம் கொண்ட பெண்யானை பிளந்திட்ட நார் இல்லாத வெண்கோட்டுத் தந்தம் போல் இருந்தது".

அடுத்து ஏழிலைப் பாலையைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

பாலை - தொடர்ச்சி - 1

"பாலையும் பண்ணும்" என்ற என் முந்தையப் பதிவிற்கு வந்த பின்னூட்டுக்கள் பலவும் பாலை மரங்களைப் பற்றியே எழுந்தன. பண்களைப் பற்றிய செய்திகளில் யாருக்கும் விழைவு ஏற்படாததில் எனக்கு வருத்தமே. இருந்தாலும் கேட்டவற்றிற்கு மறுமொழிக்க வேண்டும் எனத் தனியாக மரங்கள் பற்றி இங்கு பதிகிறேன்.

எப்படி நம்முடைய பண்பாடு, கலைகள் பற்றிய அறிவு தமிழ்மக்களிடையே கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்து வருகிறதோ, அதேபோல, சென்ற 50 ஆண்டு காலமாய், தமிழகச் சுற்றுப்புறம் பற்றிய புதலியல் (botany) அறிவும், இயற்கை அறிவும் நமக்குக் குறைந்து வருகிறதோ என்ற ஐயம் எனக்கு உண்டு. தமிழர்கள் என்போர் சிறிது சிறிதாய் மறைந்து, அவர்களுக்குப் பகரியாய் (substitute) தமிங்கிலர்கள் என்போர் உருவாவதன் உட்புலம், இந்த அறிவுக் குறைவிலும் அடங்கியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். எங்கெங்கோ வேறு நாடுகளிலும், மாநிலங்களிலும் இருக்கின்ற பைன், தேவதாரு போன்ற மரங்களைப் பற்றியெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ளுகிற நாம், நம்மூர் மரங்களையும், உயிரிகளையும் பற்றித் தெரிந்து கொள்ள மாட்டேம் என்கிறோம். நம்முடைய பள்ளிப் பாடத்திட்டங்களும், கொஞ்சம் கொஞ்சமாய் "தமிழம்" என்ற உணர்வைக் குறைத்து, வெறுமையாக்கி, அதில் இந்தியம், உலகம்" என்ற பெரிய உணர்வுகளை மட்டுமே நிறைத்துக் கொண்டிருக்கின்றன. (இதைப் படிக்கும் ஒரு சில மீநிலைத் தேசப் பற்றாளர்கள், "ஆகா, இங்கே பார், ஒரு தேசத் துரோகி" என்று உடனே ஓடிவரக் கூடும். அவர்களுக்குச் சொல்லுவது இதுதான். "நான் ஒன்றும் இந்தியத்திற்கோ, உலகத்திற்கோ எதிராளி அல்ல. தமிழம் என்பதை அறியாமல் ஒதுக்கி, மற்றதை மட்டுமே பேசி, என்னை ஓர் உள்ளீடு அற்றவனாக, ஆக்கிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை; அவ்வளவு தான். என்னைத் தமிழன் - இந்தியன் என்றே அடையாளம் கண்டு கொள்ளுகிறேன். தேசப்பற்று குறைந்தவன் என்று சிலர் கருதினால், இருந்துவிட்டுப் போகிறேன். பர்வா நஹிங்" :-))

அண்மைக் காலங்களாய் இந்திய (குறிப்பாகத் தமிழக) மரங்களைப் பற்றிப் பல பொத்தகங்கள் தமிழில் வந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பட்டியல் இட்டு இந்தத் தொடர்முடிவில் கொடுக்க எண்ணியுள்ளேன். பொங்கலுக்குச் சற்று முன்னால் சென்னையில் நடக்கும் பொத்தகக் கண்காட்சி / சந்தையில், இது போன்ற பொத்தகங்களை வாங்கிப் பயனுறும் படி பதிவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். இவற்றை வாங்கி உங்கள் வீட்டு நூலகத்தில் வைத்து, அவ்வப்போது படித்துப் பார்த்து, நாம் போகும் இடங்களில் உள்ள மரங்களை அடையாளம் தெரிந்து கொள்ளுவது நல்லது. நம்மூர் இயற்கை அதன் வழியே புரியும். நம்மூர் என்ற பெருமிதமும் கூட அந்த அறிவால் வந்து சேரும். தமிழன் என்ற உணர்வுக்கு இந்த அறிவும் பெருமிதமும் ஒரு தேவையே. (இதே போல ஈழத்து மரங்கள் பற்றிய பொத்தகங்களும் தமிழ்நாட்டில் வந்து பரவினால் மற்றோரும் தெரிந்து கொள்ளலாம். தமிழக - தமிழீழச் செய்திப் பரிமாற்றம் இன்னும் கூடவேண்டும். அருகருகில் இருந்துகொண்டு உணர்வால் இப்படி இருவரும் விலகி நிற்பது நல்லதல்ல.)

இயற்கை அறிவுக் குறைச்சலுக்கு (என்னையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்.) இந்தப் பாலை மரமும் ஓர் எடுத்துக் காட்டு. கீறினால் பால் வரும் பல மரங்களுக்கு தமிழன் வைத்த பொதுப் பெயர் பாலையாகும். இலத்தீன் வழியே பெயரிடும் புதலியற் பெயரைப் போன்றது தான் இது. ஆனால் அதற்குச் சமமானதல்ல. பாலை என்ற சொல்லை இசையில் மட்டுமே பழந்தமிழன் கையாளவில்லை; திணைக்கும் கூடக் கையாண்டிருக்கிறான். நாலைந்து மரக் குடும்பங்களுக்கும் இந்தப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்"

என்று சிலப்பதிகாரம் 11ம் காதையில் 60ம் வரியில் இருந்து பாலை நிலம் பற்றிய வரையறையை இளங்கோவடிகள் சொல்லுவார். முல்லை, குறிஞ்சி மட்டுமல்லாமல் மருதமும் கூடத் திரிந்து இன்றைக்குப் பாலைத் தோற்றம் காட்டுகின்றன. ஓராண்டிற்கு 8 மாதங்கள் கூடப் பாலைத் தோற்றம் காட்டும் நிலங்கள் தமிழகமெங்கும் விரவிக் கிடக்கின்றன. "பாலை தான் இன்றையத் தமிழகத்தின் முகமோ?" என்று கூடச் சிலபோது எனக்கு மருட்டாய்த் தோற்றுவது உண்டு.

உங்களுக்குத் தெரியுமா? சங்க இலக்கியத்தில் மிகுதியான பாட்டுக்கள், பாலைத்திணையில் தான் வருகின்றன. நானும் கூட ஒரு பாலைநாட்டான் தான். எங்கள் ஊர்ப் பக்கத்தில் இருக்கும் நிலத்தைப் பாலைநாடு என்றே நாட்டார்கள் (இவர் பெரும்பாலும் முக்குலத்தோர்) பெயரிட்டுச் சொல்லுவார்கள். இரண்டு பகுதி கொண்ட எங்கள் ஊரின் ஒரு பகுதிப் பெயர் கூடப் பாலையூர்/பாலையப்பட்டி தான் (இன்னொரு ஊர்ப் பகுதி கண்டனூர்). ஆனாலும் பாருங்கள் பாலையை அவ்வளவு கூர்ந்து அறியாமலேயே மேம்போக்காய் என் இளம் பருவத்தைக் கழித்திருக்கிறேன். இப்பொழுது அகவை முற்றிய நிலையில் ஓர்ந்து பார்த்தால், வெட்கமாக இருக்கிறது. கண் கெட்ட பிறகு, சூரிய வணக்கமாய் பாலை பற்றிப் பேசுகிறேன். எதற்கும் ஒரு காலம் வேண்டுமோ, என்னவோ? :-)

பல்வேறு பாலை மரங்கள் பற்றி இங்கு பேசவதாக இருக்கிறேன். ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

பாலை என்று சொன்னவுடன், முதலில் நினைவிற்கு வருவது பாலைத் திணையைக் குறிக்கும் மூன்று மரங்கள்; ஒன்று. உலக்கைப் பாலை. (இதை மஞ்சப் பாலை என்றும் சிலர் சொல்லுவார்கள்). இரண்டாவது, குடசப்பாலை (Holarrhena antidysenterica). மூன்றாவது வெட்பாலை (Wrightia tinctoria.). பாலைத்திணையில் இந்த மூன்று அடிப்படை மரங்கள் போக அங்கு ஓமை, ஞெமை, மரா, குரா, யா எனப் பல மரங்களும் உண்டு. அவற்றின் தமிழ்ப்புலம் பற்றியும், அவற்றிற்கான ஆங்கிலப் புதலியற் பெயர்களையும் இங்கு பேசினால் பதிவு பெரிதும் நீண்டு போகும் என்பதால் அவற்றை விடுக்கிறேன்.)

உலக்கைப் பாலையை ஆங்கிலத்தில் Manilkara Hexandra அல்லது Mimusops hexandra என்று சொல்லுவார்கள். (பெரும்பாலும் Minusops என்பதையே புதலியலில் இப்பொழுது வழங்குகிறார்கள். Mimusops என்ற சொல்லுக்கு 'மாந்தக் குரங்கைப் போல' என்று பொருள். Wedge-leaved ape-flower என்ற பெயர் அதன் பூவிற்கு அப்படி வந்ததோ, என்னவோ? பூவில் ஆறு மகரந்தத் தண்டுகள் இருப்பதால், பின்னால் உள்ள hexandra என்ற பெயர் எழுந்தது.). தமிழில் புதலியல் ஒழுங்காய் வளர வேண்டுமானால், புதலியல் முறையில் அவற்றிற்குத் தமிழில் இரட்டைப் பெயரிட வேண்டும் என்று ஒரு சீரான முறையில், "தமிழ்நாட்டுத் தாவரங்கள்" என்ற பொத்தகத்தில், முன்னாள் தமிழக வனத்துறைத் தலைவர் ச.சண்முகசுந்தரம் இந்தப் பாலையைக் கணுப்பாலை மகிழம் என்று புதிய புதலியற் பெயர் வைத்து அழைப்பார்.

மகிழம் என்ற பொதுப்பெயர் ஏற்கனவே இன்னொரு வகையான இளஞ்சி மகிழத்தைக் (Mimusops elangi) குறிப்பிடும். இளஞ்சி மகிழத்தின் பூவும் அதன் நறுமணமும் பெரும் புகழ் கொண்டவை. நாகையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் ஆழியூருக்கு அருகில் உள்ள திருக்கண்ணங்குடி பெருமாள் கோயிலின் தலமரம் இந்த இளஞ்சி மகிழம் தான். (இளஞ்சி மகிழத்தைக் காயா மகிழ் என்று திருமங்கை ஆழ்வார் சிறப்பிப்பார்.) மகிழத்தை வடமொழியில் பகுள / வகுள என்று அழைப்பார்கள். நம்மாழ்வாருக்கு, வகுள ஆபரணர் (= மகிழத்தை அணிந்தவர்) என்ற பெயரும் உண்டு. ஒருவேளை பாலை>பால என்ற சொல், பகுல>பகுள>வகுள என்று வடபுலத்தில் ஆகி மீண்டும் தமிழகத்தில் நுழையும் போது மகிழம் என்ற பொதுப் பெயர் பெற்றதோ என்று விளங்கவில்லை. இன்னும் சான்று தேடிக் கொண்டு இருக்கிறேன். பகுத்தது பால் என்று தமிழில் திரிவதை எண்ணிப் பார்த்தால், நான் சொல்ல வருவது புரியும்.

இதே Mimusops மரக் குடும்பத்தில், மேலே சொன்ன இரு வகைகள் போக, இன்னும், இரு வகைகளாய் Mimusops kauki (வெளிரிய இலை கொண்ட மரம் kauki), Mimusops littoralis (திருமரைக்காட்டிற்கு அருகில் கடற்புறத்தில் பரந்து கிடந்ததால் இது littoralis) ஆகியவற்றையும் சொல்லுவார்கள். (மறுபடியும் ஓர் இடைவிலகல். அந்த ஊர் மறைக்காடு அல்ல; மரைக்காடு தான். கால காலமாய் நாம் எழுத்துப் பிழை செய்து, அதை வடமொழியிலும் முட்டாள்தனமாய் மொழிபெயர்த்து, வேதாரண்யம் என்று சொல்லி, எத்தனை நாள் தடுமாறிக் கட்டிக் கொண்டு, அலையப் போகிறோமோ தெரியவில்லை, உருப்படியாகப் பழைய பெயரை, இனிமேல் கையாளத் தொடங்கலாமே? அலையாத்திக் காடுகளில், மரை மான் மிகுதியாய் இருந்ததால், இது மரைக்காடு. பாடல் பெற்ற கோயில் என்பதால் திரு மரைக்காடு.)

மாராட்ட (Maharashtra) மாநிலத்தில் கொங்கணப் பகுதியிலும், கூர்ச்சர (Gujarat) மாநிலத்தில் காந்தேஷ் பகுதிகளிலும் உள்ள உலர்காடுகளிலும், தக்காணத்தில் கர்நாட்டிக் பகுதிகளிலும் இந்தப் பாலை மரங்கள் அதிகமாக உள்ளன. (கர்நாட்டிக் என்பது ஒரு வெள்ளைக்கார சொல்லாட்சி. கர்நாடக மாநிலத்திற்கும் அதற்கும் தொடர்பே இல்லை. விசாகப் பட்டினத்தில் தொடங்கித் தெற்கே கிழக்குக் கடற்கரை முழுக்க, குமரிமுனை வரைக்கும் உள்ள, பகுதியைத் தான் கர்நாட்டிக் என்று குழப்பமான வகையில் புவிவரைவில் - geography - அழைக்கிறார்கள். இதைச் சோழமண்டல / கோரமண்டலக் கடலோரம் என்றும் அழைப்பதுண்டு.)

கடல்மட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயர்பகுதி வரை புதர்க் காடுகளில், உலக்கைப் பாலையும், குடசப் பாலையும் வளர்கின்றனவாம். ஒரு காலத்தில் எங்கள் காரைக்குடிப் பகுதியில் இந்த மரங்கள் மிகுதியாக இருந்தன; இன்று அவை பெரும்பாலும் வெட்டப்பட்டு, மறைந்து வருகின்றன. கரும் புரசு (Chloroxylon swietenia) வளருகின்ற இடங்களில் எல்லாம் இந்தப் பாலை மரங்களைக் காணலாம். முன்னே சொன்ன, மரைக்காட்டுக் கடற்கரைப் பகுதியில் உள்ள இன்னொரு கடினமான பாலை மரத்தை Manilkara littoralis என்பார்கள். இதனை அந்தமான் துப்பாக்கிக் குண்டு மரம் (andaman bullet wood) என்றும் சொல்லுவது உண்டு.

கன்னடத்தில் பொதுவாகப் பாலையைப் பாலெ/ஹாலெ என்று அழைப்பார்கள். தெலுங்கிலும் இது போன்ற பெயரே உண்டு. மலையாளத்திலும் இதே பெயர். வடபுலத்தில் Ranjana என்று அழைப்பார்கள். "பாலை நின்ற பாலை நெடுவழி" என்று சிறுபாணாற்றுப் படை 11 - ஆம் வரியிலும், "பாலை சான்ற சுரம்" என்று மதுரைக் காஞ்சி 314 - ஆம் வரியிலும் காட்டுவார்கள். ஐங்குறு நூறு 317 - ஆம் பாட்டில்,

சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்
பைதற வெந்த பாலை வெங்காட்டு
அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்
சென்ற நெஞ்சே நீடிய பொருளே

"சூழ்ந்து வா தோழி! பசுமை இல்லாது வெந்து பாழ்பட்ட கொடிய பாலைக்காட்டு அருஞ்சுரத்தில் போன தலைவரிடம், தூதாய்ச் சென்ற என் நெஞ்சு விரைந்து திரும்பி வராது இருக்கிறது; காலமும் நீள்கின்றது. இதன் பொருள் என்ன வென்று தெரியவில்லையே? அதை ஆராய்வோம், வா" என்று தோழியிடம் உரைத்தாளாம். பொதுவாகப் பாலை நிலத்து மரங்கள் இப்படி ஒரு வெறுமை விதர்ப்பைக் காட்டுவதைச் சங்க இலக்கியம் நெடுகவும் அறியமுடியும்.

பெரும்பாலான பாலை நிலத்து நிலத்திணைகள், மேலே சொன்ன தமிழகக் கிழக்குக் கடற்கரையில் இருப்பதைப் போலவே தமிழீழக் கடலோரமும் இருக்கப் பெரும் வாய்ப்பு இருப்பதால், ஈழத்து நண்பர்களும், திரு.சுந்தரவடிவேலும், பாலை என்று முந்தையப் பதிவின் பின்னூட்டுக்களில் தெரிவித்த மரம் இந்த Mimusops மரங்களில் ஒன்றாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். (குறிப்பாக எந்தப் பாலை என்று என்னால் தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை. ஈழத்து நண்பர்களில் புதலியலாளர் யாரேனும் இருந்தால் உறுதி செய்யலாம்.)

[ஒரு கட்டுரை எழுதினால், இடை விலகிக் கொண்டே இருப்பது எனக்குப் பழக்கமாய் ஆகிவிட்டது. செய்திகள் ஓடிவந்து "சொல், சொல்" என்று ஆணையிட்டால், என்ன செய்வது? இதோ, இன்னொரு இடைவிலகல்.

இன்றைய கடல்வரைவியல் (oceanography), புவியியல் (geology) ஆய்வுகளைச் சங்க இலக்கியச் சான்றுகளோடு பொருத்திப் பார்த்தால், இந்தப் பக்கம் இராமேசுரம் தொடங்கி, மரைக்காடு முடியும் நிலப்பகுதிக்கும், அந்தப் பக்கம் தலைமன்னார் தொடங்கி யாழ்ப்பாணத்திற்குச் சற்று மேல் வரை முடியும் நிலப்பகுதிக்கும், இடைப்பட்டு, இதே போல நீரில் பாக் நீரிணைக்கும், மன்னார் வளைகுடாவுக்கும், இடைப்பட்ட கடல், ஆழம் குறைந்திருந்த காலங்களில் நிலமாய் இருந்திருக்க வேண்டும் என்பதை ஓர்ந்து பார்க்க முடியும். அப்படி நிலமாய் இருந்த காலத்தை உறுதி செய்வதில் தான் ஆய்வாளர்களிடம் வேறுபாடுகள் இருக்கின்றன. ஒருசில ஆய்வாளர்கள் அது 2500/3000 ஆண்டுகள் முன்னர் என்றும், இன்னும் சிலர் அது 8000 ஆண்டுகள் முந்தியது என்றும் சொல்லுகிறார்கள். எது சரி என்று இன்றைக்கு அறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் கடலுக்குள் அழிந்த இந்த நிலம் பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாய் இருந்தது. பாண்டியன் முடத் திருமாறன் தன் காலத்துக் கடல்கோளுக்கு அப்புறம், சோழனிடம் வவ்விக் கொண்ட முத்தூர்க் கூற்றம் என்பது, அழிந்து போன இந்தப் பகுதிக்கு அடுத்திருக்கும் இன்றைய ஆவுடையார் கோயில், தொண்டி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை அடங்கியுள்ள பகுதியே.

அழிந்து போன இந்த நிலத் தொடர்பு இல்லையென்றால் ஈழத்தீவிற்கும், இந்தியத் துணைக்கண்டத்திற்குமான முற்று முழுதான தொடர்பைச் சரியாக விளக்க முடியாது. பாலை மரம் இரண்டு பக்கமும் பரவியது இந்தப் பழந்தமிழக நிலத் தொடர்பால் தான். ஆயிரம் தான் மற்றவர் சொன்னாலும், பழந்தமிழகத்தில் ஈழத்தீவும் ஒரு பகுதியே.]

அடுத்த பகுதிக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.