Friday, December 08, 2006

தமிழிசை - ஒரு பார்வை - 2

திரு. நாகராஜனுக்கு மறுமொழியாய் 2 நாட்களில் அளித்தேன். அது. கீழே வருகிறது.

At 10:12 PM 12/6/2004, you wrote:

>சபைக்கு வந்தனம்,
>சங்கர மடத்து விவகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. நான் இதில் சொல்ல ஏதும் இல்லை. " பல நாள்
>திருடன் ஒரு நாள் பிடிபடுவான்" என்பது பழமொழி.
...snip...
>கோடிகாட்டும் முகமன் அது. அதில் " தஞ்சை மும்மூர்த்திகளான முத்துத் தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை,
>அருணாசலக் கவிராயர்" என்ற குறிப்பு வருகிறது. அவர்கள் மூவரும் சீர்காழியில் பிறந்தவர்கள் இல்லையோ?
------------------------------------------------
இராம.கி. மறுமொழி:

அவர்கள் சீர்காழியில் பிறந்தவர்கள் தான். இருந்தாலும் அவர்கள் தரணி தஞ்சைத் தரணி. அரசனும், புரவலரும் தஞ்சையை வைத்தே பெரிதும் இருந்தார்கள். இதனால் சீர்காழி மூவரின் பாணி, தஞ்சைப் பாணி என்று சொல்லப் பட்டது. மாற்றாக ஓர்ந்து பாருங்களேன். திருவாரூரில் பிறந்தவர்களை திருவாரூர் மூவர் என்றா அழைக்கிறார்கள்? இல்லையே? அவர்கள் சங்கீத மும்மூர்த்திகள் என்று முற்று முழுமையாக அல்லவா
சொல்லுகிறார்கள்? வேறு யாருமே மூர்த்திகள் இல்லாதது போல் ஒரு தொனி தோற்றம் அளிக்கிறதே? இன்னொரு மூவர் இவர்களுக்கு நூறாண்டு முன்னாடி இருந்தார்கள் என்று சொல்லும் போது கட்டுரை ஆசிரியர் ஒரு வேறுபாடு காட்டுதற்காக அப்படிக் குறித்திருக்கலாம். இதெல்லாம் ஒரு பழக்கம் தானே? நுணுகிக் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் இதையெல்லாம் கேள்வி கேட்கலாம். ஆனால் கட்டுரையின் அடிப்பொருளை
விட்டுவிடக் கூடாது அல்லவா?
---------------------------------------------------
>அடுத்தது, " சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நடன மரபான 'சதிரை' பரதமாக்கி சதிர்க்
>கலைஞர்களை'காணாமல் போகச் செய்தது" மாதிரி எத்தனை இழப்புக்கள்?" என்று ஒரு குற்றச்சாட்டு.
...snip...
>அப்போது நிகழ்ந்த வாத விவாதங்களும் வெகு பிரசித்தம்.
>நா.மம்மது அவர்கள் 'தமிழிசை மரபு மறக்கடிக்கப்பட்டுவிட்டது' என்னும் தலைப்பில் பல விவரங்களைச்
>சொல்கிறார்.
-----------------------------------------------------
இராம.கி. மறுமொழி

"சதிர் என்பது விரசம் கலந்த நடனம், செல்வந்தர்களின் உல்லாசத்திற்காக ஏற்பட்ட நடனம்" என்று சொல்லுவது ஒரு பக்கப் பார்வை அல்லவா? அதையா அந்தக் கட்டுரையாளர் சொன்னார்? உங்களுடைய வாசகத்தின் பொருள் எனக்குப் புரியவில்லை. இன்றைக்கு ஓதுவார்கள் கிட்டத் தட்டக் காணாமல் போனது போல சதிர்க் கலைஞர்களும் காணாது போய்விட்டார்களே என்ற அங்காலாய்ப்பு அல்லவா அது? ருக்மணி அருண்டேலின் முயற்சியை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. இப்படி மரபுக் கலைஞர்களின் கலையை இன்னொரு தளத்திற்குக் கொண்டு வந்தவுடன் ஏற்படும் உடன் விளைவைப் பற்றிக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். அது தவறா? நம் குமுகத்தில் இருந்த சில கலைஞர்கள் இன்றையப் போக்கிற்கு இணைந்து வந்து சேராமல் போய்விட்டார்களே என்ற வருத்தமல்லவா அது?

தவிரவும், சதிர் என்பது அரங்கில் ஆடும் ஆட்டம். சதிர் என்பது சதுரம், மேடை என்ற பொருளைக் கொள்ளும் சொல். இன்றைக்கு அரங்கேற்றம் என்பதும் அரங்கில் ஏறுவது தான். அரங்கும் சதிர்/சதுர் என்பதும் ஒரே பொருள் உள்ளவை தான். சதிரில் விரசம் இல்லாது இறைவன் கோயிலில் ஆடியதும் வரலாறுதான். குறவஞ்சி ஆடியவள் விரசத்தோடு மட்டுமா ஆடினாள்? அல்லது ஒன்பான் சுவையில் இன்பச்சுவை காட்டாமலேயே இன்று பரதம் ஆடுகிறார்களா, என்ன? விரசம் இல்லாமல் ஆடியது இல்லையென்றால் இராசராசன் ஆணையால் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் இத்தனை பெண்டுகள் பொட்டுக் கட்டியிருந்திருக்க மாட்டார்கள்.
---------------------------------------------------------
> " நம் தமிழ் மண் களப்பிரர், பல்லவர், நாயகர், மராட்டியர், இசுலாமியர், ஆங்கிலேயர்,
> பிரெஞ்சுகாரர் என்று அன்னியரின் ஆட்சிக்கு உட்பட்ட காலங்கள் பலப்பல" என்று ப ...
...snip...
>... களப்பிரரும், நாயகரும்,
> மராட்டியரும் கூடவா அன்னியர்கள்? இவர்கள் மொழி தமிழ் இல்லை என்பதை ஒப்புக்கொண்டாலும்
> அன்னியர்களாக எப்படி அடையாளம் காட்டப்படுகிறார்கள்?
---------------------------------------------------------
இராம.கி. மறுமொழி

தமிழ் என்று வரும்போது இவர்கள் அன்னியர்கள் (அல்>அன்>அன்றியர்>அன்னியர் என்ற மூக்கொலித் திரிவு. அல்லாதவர்கள் அன்றியர்; அதாவது மாறுபட்டவர்)தான். இங்கே இந்திய நாடு என்ற கருத்தைக் கொண்டு வராதீர்கள்; இந்திய நாடு அல்லது நாவலம் தீவு (ஜம்புத் தீவே, பரத கண்டே என்று சொல்லும் வடமொழிச் சொலவம் உங்களுக்கு நினைவு வரும் என்று நினைக்கிறேன்.) என்னும் போது இவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டவர்;
மொழி என்று வரும்போது அன்றுபட்டவர்; இந்த அடிப்படை புரிந்தால் அப்புறம் குழப்பம் ஏது? நாடு என்பது வேறு புலன். பண்பாடு, மொழி என்பவை இன்னொரு புலன். இவை ஒன்றிற்கொன்று முரணானவை அல்ல.

ஊரென்று வரும்போது கூடப் பிரிவுகள் வந்து சேரும். நம்மில் பலரும் அதை ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். உங்களுக்கு ஒரு காட்டுச் சொல்கிறேன்.

எங்கள் ஊரில் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் (குறைந்தது 600 ஆண்டுகளுக்குப் பின்னும்) முக்குலத்தோர் என்பவர் தான் நாட்டார்கள். செல்வத்திற் பிறந்து ஊர்ப் பெரிய மனிதராய் இருக்கும் ஒரு செட்டியார் இன்றைக்கும் நகரத்தார் தான். நகரத்தார் என்பவர் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து வெளியேறி வந்து, பாண்டிநாட்டில் சுந்தர பாண்டியனால் குடியேற்றி வைக்கப் பட்ட வந்தேறி (immigrant) தான். இந்த உண்மை இன்றைக்கும் எல்லாக் கோயில்களிலும் அன்றாடம் வெளிப்படும். அது நகரத்தார் கோயிலானாலும் கூட, என்றைக்கோ பாண்டிய அரசன் வைத்த வழமைச் சட்டத்தால் நாட்டாருக்குத் தான் முதற் காளாஞ்சி. நகரத்தாருக்கு அடுத்தது தான். இப்படிப் பிரிவு பாராட்டுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை ஏற்பதும் ஏற்காததும் நம் உகப்பு. நான் தேச வழமையைச் சொன்னேன்.

கலை பற்றிப் பேசும் போது அதுவும் தமிழிசை பற்றிப் பேசும்போது இந்தியர்கள் என்ற கட்டுகை (category) பேசப்படுவதில்லை. இந்தியர்களுக்குள் இவர் நம் மொழியார், இவர் வேற்று மொழியார் என்ற பாகுபாடு எழத்தான் செய்யும். அதில் தவறேதும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. கட்டுகைக் குழப்பம் இல்லாமல், பேசுகிறது எந்தப் புலம் என்று பார்த்துத்தான் அது சரியா, தவறா என்று முடிவு செய்ய முடியும்.
-------------------------------------------------------------

>மராட்டியர், நாயக்கர் தமிழ் மண்ணில் ஆண்டபோது இசையின் தமிழ் வடிவை அழித்து தெலுங்கு வடமொழியை
>அந்த இடத்தில் இருத்தினார்கள் என்று ஒரு பார்வையை முன்வைக்கிறார். வரலாறு அப்படியா சொல்கிறது?
>தமிழ் நிலத்தின் இசையை, நடனத்தை போற்றி அன்னியர் சிதைகாமல் பாதுகாத்து பிந்தைய
>சந்ததிகளுக்குக் கொடுத்ததாகவே படித்த நினைவு.
--------------------------------------------------------------------
இராம.கி. மறுமொழி

வரலாறு வேறு எப்படிச் சொல்கிறது என்று திரு. அரவக்கோன் சான்றுகள் காட்டினால் நலம். இந்த மன்னர்கள் தமிழ் வடிவை அழிக்கவில்லை. ஆனால் அவர்கள் மொழியாகிய தெலுங்கு, அன்றேல் வடமொழியில் பாடுவதைப் பெரிதும் வரவேற்றார்கள். இந்த வரவேற்பு இல்லாவிட்டால் இவ்வளவு தெலுங்கு, வடமொழிச் சீர்த்தனைகள் 20ம் நூற்றாண்டில் புழங்க வேண்டிய தேவை என்ன? அன்று அரசன் விரும்பியதை பாடகர்கள் செய்து காட்டினார்கள். அது போனியாயிற்று. அப்படி தமிழல்லாத மொழியில் பாடிய பாடகர்கள் பேர் குமுகாயத்தில் சொல்லிக் கொள்ளப் பட்டது. அரசன் எவ்வழி அவ்வழி மக்கள். இல்லையென்றால் எப்படிச் சொல்வது? அன்றையப் போக்கு அது.

தியாகைய்யருக்குத் தாய்மொழி தெலுங்கு. எனவே தமிழ்பேசும் மேளகாரர்களிடம் இருந்து திருவாரூரில் தான் கற்ற தமிழிசையை (அவருக்குத் தமிழ் தெரியாமல் இருந்திருக்கவே முடியாது.) தெலுங்கு மொழியின் சீர்த்தனை (சீரைப் பாடுவது சீர்த்தி அல்லது சீர்த்தனை. அது வடுகில் கீர்த்தனையாகும். நாமும் மூலம் தெரியாமல் விழிப்போம்.) பாடினார். அவர் தெலுங்கில் பாடியதை ஓரளவு நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் தமிழ் அறிந்த சியமா சாத்திரிகள் ஏன் தெலுங்கில் பெரிதும் பாடினார்? அதற்கு அரசவையிலும் புரவலர்களிடமும் வரவேற்பு தஞ்சைத் தரணியில் இருந்தது என்று தானே? தீட்சிதர் ஏன் வடமொழியில் பாடினார், தமிழில் பாடவில்லை? தமிழில் பாடியதாய் பாட்டு இதுவரைக் கிடைத்திருக்கிறதா? பட்டணம் சுப்பிரமணிய அய்யரும், இராமநாதபுரம் (பூச்சி) சீனிவாச அய்யங்காரும் தமிழராய்ப் பிறந்தும் தமிழைப் புறக்கணித்து பாட்டுக்களை இயற்றுவதற்குத் தெலுங்கை மட்டும் ஏன் கைக் கொண்டனர்?

வேறு ஒன்றும் இல்லை. தமிழில் பாடினால் பெயர், புகழ் கிட்டாது, கொடை வாராது என்பது தானே? அன்றைய ஆளும் வர்க்கத்தை அண்ட வேண்டுமானால் அதற்குரிய மொழிகளை நாடவேண்டும் என்பதனால் தானே அப்படி செய்யச் சொன்னது? இந்தப் பழக்கம் 20ம் நூற்றாண்டு வரை வந்திருக்கிறது.

"தமிழிசை இயக்கம்" என்ற இரா. இளங்குமரன் பொத்தகத்தில் இருந்து எடுத்து 20ம் நூற்றாண்டு முதல் சில ஆண்டுகளில் நடந்த ஒரு நிகழ்வைச் சொல்லுகிறேன்.

"பட்டுக் கோட்டையில் ஒரு நிகழ்ச்சி. மகராசபுரம் (இன்றைக்கு இருப்பவரின் தாத்தா என்று எண்ணுகிறேன்.) அழைக்கப் பட்டிருக்கிறார். கோயில் விழா; பட்டுக்கோட்டை நாடிமுத்துப் பிள்ளை முன்னின்று நடாத்துகின்றார். வழக்கம் போல மகராசபுரம் தெலுங்கிசையைத் தொடங்குகிறார். அவையில் இருந்த மாப்பிள்ளையன் என்பார் "தமிழ்ப்பாடல் தமிழ்ப்பாடல்" என்கிறார்.

"பாடமுடியாது" என்கிறார் மகராசபுரம்.

"ஆம் நீர் பாடமுடியாது" என்கிறார் மாப்பிள்ளையான்.

"என்னையா இது?" என்கிறார் நாடிமுத்தர்.

"இது உங்கள் சொந்த நிகழ்ச்சி இல்லை; கோயில் நிகழ்ச்சி; எங்களுக்குத் தமிழ்ப்பாட்டு வேண்டும்" என்றார் மாப்பிள்ளையன்.

நாடிமுத்தர் மகராசபுரத்திடம், "ஏனையா, தமிழ்ப்பாட்டுப் பாடவேண்டியது தானே?" என்றார். "முடியாது" என்றார் மகராசபுரம்.

"சரி, மூட்டையைக் கட்டிப் புறப்படும்" என்றார் நாடிமுத்தர். இஃதொரு சான்று.

இன்னொரு சான்று:

திருவையாற்றிலே தியகராசர் விழாவிலே எம்.எம்.தண்டபாணி தேசிகர் தமிழ்ப்பாட்டு ஒன்று பாடிவிட்டார். கூட்டமே எழுந்துவிட்டது! பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த கூட்டமா? இல்லை! தெலுங்கிசையைப் பாடவந்த கூட்டம்! என்ன சொல்லிக் கிளம்பியது? "தியாகராசர் வளாகமே தீட்டுப் பட்டு விட்டது! இனித் தீட்டுக் கழித்தால் அன்றிப் பாடமாட்டோ ம் என்று கூட்டமாய்க் கிளம்பிவிட்டது! இது தெலுங்கு நாட்டில் நடந்ததில்லை!

"காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார் வீதித் தேந்தாம் என்று அரங்கேறிச் சேயிழையார் நடமாடும் திருவையாற்"றில் நிகழ்ந்ததாகும்.

இன்னும் இது போல காட்டுகள் பலவற்றை எடுத்துக் காட்டுவார் இளங்குமரனார். வரலாறு விந்தையானது அய்யா! அதை மறந்து புதுக் கற்பிதங்கள் படைக்கக் கூடாது.
------------------------------------------------------
>அந்த காலத்தில் தமிழுக்கு அரச சபையில் கிடைத்த இடம் என்ன? மும் மூர்த்திகளின் பாடல்களை அவர்களது
>சீடர்கள் பாதுகாத்து தமது சீடர்களுக்குக் கொடுத்ததுபோல சீகாழி ...
...snip...
>... அரசர்களால் சிறப்புப் பெற்ற தமிழ்
>கலைஞர்கள் எத்தனைபேர்? அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது பழமொழி. திட்டமிட்டுத்
>தமிழைஅழித்ததாக சொல்வது எந்தமட்டில் சரி?
-------------------------------------------------------
இராம.கி. மறுமொழி

சீர்காழி மூவரின் பாடல்களைப் பாதுகாத்துத் தான் வந்தார்கள். திருவாரூர் மூவரின் பாடல்களைப் பாதுகாத்தது கூட சீர்காழி மூவரின் சீடர்கள்தான். அதுதான் வரலாறு. திருவாரூர் மூவர்களுடைய இசைக் கிருதிகளை வெளிக் கொணர்ந்தது திருப்பாம்பரம் நடராச சுந்தரம் பிள்ளை தான். இன்றைக்கு அந்தச் செய்தி கூடத் தெரியாமல் கருநாடக இசை மும்மூர்த்திகளின் சீடர்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு நடராச சுந்தரத்தின் வழித் தோன்றலான திருப்பாம்பரம் சாமிநாதன் அவர்களின் பங்களிப்பைத் தமிழிசை விழாக்களில் பார்க்கலாம்.

கர்நாடகத்தில், கேரளத்தில் தமிழ்க் கலைஞர்கள் சிறப்புப் பெற்றிருக்கலாம்; தமிழ்ப்பாட்டு சிறப்புப் பெற்றிருக்கிறதா? அங்கு போய் 1950, 60 களில் தமிழ்ப்பாட்டுப் பாடத் துணிந்தனரா? தெரிந்தால் சொல்லுங்கள். கேட்டுக் கொள்கிறோம்.

நமக்குத் தெரிந்த ஒருவர் இப்படிச் சொல்கிறார்:

"முத்துசாமி தீக்ஷிதர், தியாகையர், பட்டணம் சுப்பிரமணிய ஐயர் இந்த மூன்று பெயருடைய கீர்த்தனங்களைத் தான் வழக்கத்தில் அதிகமாகப் பாடுகிறார்கள். இவற்றுள்ளே தீக்ஷிதரின் கீர்த்தனைகள் பச்சை ஸம்ஸ்கிருத பாஷையிலே எழுதப்பட்டவை. இவை கங்கா நதியைப் போல கம்பீர நடையும் பெருந்தன்மையும் உடையன. வேறுபல லக்ஷணங்களும் இருந்த போதிலும், ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப் பட்டிருப்பதால் இவை நமது நாட்டுப்
பொதுஜனங்கள் ரஸானுபவத்துடன் பாடுவதற்குப் பயன்பட மாட்டா.

வித்துவான்கள் பழைய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணிப் புராதன வழிகளைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். ஆனால் தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளில் பழம்பாட்டுக்களை மீட்டும் மீட்டும் சொல்லுதல் நியாயமில்லை. அதனால் நமது ஜாதி ஸங்கீத ஞானத்தை இழந்து போகும் படி நேரிடும்"

இப்படி சுதேசமித்திரன் 1916- மே 3 ம் நாளில் வெளிடான நாளிதழில் எழுதியது சுப்ரமண்ய பாரதி (;-)) என்ற கட்டுரையாளர். அடையாளம் தெரிகிறதா? வரலாற்றை இவனுமா தவறாக எழுதி வைத்திருக்கிறான்?
--------------------------------------------------------------------
>அடுத்தது மொழிப் பற்று (வெறி என்றும் சொல்லலாம்). தமிழில் வேற்றுமொழிக் கலப்பு கூடாது என்னும் கட்டுப்பாட்டுடன் எழுதுவது.
>இங்கு ராஜாஜி இராசாசி ஆகிவிடுகிறார் ஆனால் ஜி.என்.பி அப்படியே இருக்கிறார் சி.என்.பி
>ஆகவில்லை. வடமொழிச் சொல்லான " ஸ்வரம்" என்பதனை சுரம் என்று குறிப்பிடுகிறார். ஒரு வேளை
>'சுரம்' என்பதுதான் 'ஸ்வரம்' ஆகிவிட்டது என்கிறாரோ என்னமோ.
---------------------------------------------------------------
இராம.கி.மறுமொழி

மொழி வெறி என்ற குற்றச் சாட்டு காலங் காலமாய்ச் சொல்லுவது. விடை சொல்லித்தான் சலித்துப் போனது.

ஒரு ஒப்புமை வாதத்தைக் கேளுங்கள். இப்பொழுது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். அதில் கிரிக்கெட் மட்டையை வைத்துத்தான் விளையாட வேண்டும்; இதற்குப் பந்து போடும் முறை வேறு. நீங்கள் பதியப் பந்து (base ball) விளையாடுவதாற்கான உருளைக் கட்டைக் கொண்டுவந்துதான் அடிப்பேன் என்றால் எப்படி? பதியப்பந்து முறையில் தான் பந்தை வீசுவேன் என்றால் எப்படி? யார் வெறியர்? "கிரிக்கெட்டைக்
கிரிக்கெட்டாக ஆடுங்கள், அதில் இன்னொன்றைக் கலந்து ஆடாதீர்கள்" என்று சொல்லுபவர் வெறியரா? பரத நாட்டியத்துள் வட்டு நடனம் (record dance) கலந்து ஆடக் கூடாது என்று சொல்லுபவன் வெறியனா? இரவி வர்மா முறையில் தீட்டப்பட்ட ஓவியத்துள் நான் cubism உத்திகளை உள் நுழைப்பேன் என்று அடம் பிடிப்பதைச் சுட்டிக் காட்டுபவன் வெறியனா? என்ன சொல்லுகிறீர்கள்?

தனித்தமிழ் என்பது ஒரு அடையாளம். அதை நோக்கி நாம் நகர வேண்டும். எவ்வளவு தூரம் போகிறோம் என்பது நம் உகப்பு. என்னைப் பொறுத்தவரை, முற்றிலும் தெலுங்கு பாடும் இடத்தில் ஒரு அம்புசம் கிருட்டிணா பாடப்பட்டால் எனக்கு அது முன்னேற்றமே. (அண்மையில் சஞ்சய் சுப்பிரமணியம் முற்றிலும் தமிழில் அம்புசம் கிருட்டிணாவை மட்டுமே பாடிச் சிறப்புச் செய்திருக்கிறார்; இந்தக் காலப் பாடற்காரர்கள் மேடையில்
தமிழ்ப்பாட்டுக்கள் கூட வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாய் உணர்ந்து வருகிறார்கள்; அதை வித்வத் சபைகள் கெடுக்காமல் இருந்தல் சரி.) இன்னும் ஒரு இளங்கோவடிகள், ஒரு நல்லந்துவனார், ஒரு பாரதி, ஒரு பாரதிதாசன், ஒரு கோபால கிருட்டிண பாரதி எனப் பாடினால் அது எனக்குத் தொடக்கம். இதில் என்ன மொழிவெறி?

எனக்குப் புரியாத மொழியில் (கேட்டால் இசைக்கு மொழி கிடையாது என்ற அல்லிருமைத் தத்துவம் சொல்லுவார்கள்) செவிடனைப் போலக் கேட்டுக் கொண்டிருப்பதற்கு தமிழில் பாடு என்று சொன்னால் தப்பா? அது தனித்தமிழோ, 50 விழுக்காடு வடமொழி கலந்த தமிழோ, ஏதோ ஒன்று, தமிழில் பாடுங்கள் அய்யா! இந்தக் கூக்குரலைக் கேட்க மறுத்தால், அப்புறம் நான் என்ன சொல்வது? கருநாடக இசை போயே போயிந்தி! அப்புறம் டண்டணக்கா, டண்டணாக்கா தான்; மேல்தட்டு இளையரும் ஆடத் தொடங்கி விடுவார்கள்.

சுரம். இந்த மடலில் ஓர் உருப்படியான செய்தியைச் சொல்ல எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. தமிழில் நரம்பு, தந்திரிகை, சுரம், கோவை என்ற சொற்கள் இதற்கு உண்டு. கொஞ்சம் பஞ்ச மரபு என்ற இசைநூலைப் படியுங்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தின் பூதியல் (physics) பேராசிரிய வீரபாண்டியனின் வலைப்பக்கம் போய்ப் பாருங்கள். அவர் சிலம்பின் அடிப்படையில் குழலிசையின் மூலம் குரல் (சட்ஜமம்) என்ற முதற் தானத்தின் பருவெண் (frequency) என்ன என்று கண்டுபிடித்து எழுதியிருக்கிறார். அருமையான ஆய்வு.

நரம்பு என்ற சொல் கற்றாழையின் நாரான நரல் என்பதில் இருந்து எழுந்தது. நரலை யாழில் கட்டுவார்கள். (யாழ்தல் என்ற வினைச் சொல்லுக்குக் கட்டுதல் என்றே பொருள். ஒவ்வொரு சுரத்திற்கும் ஒரு நரல்; நரலுதல் என்றாலே ஒலித்தல். நரலுகின்றவன் நரன். இந்தச் சொற்கள் எல்லாமே தமிழ். ஓவ்வொரு நரலும் யாழில் வெவ்வேறு ஒலித்தானங்களைக் கொண்டுவரும். இன்றைக்கு ச,ரி,க,ம,ப,த,நி என்று சொல்லப்படுபவை அன்று ஆ,
ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்றே குறிக்கப் பட்டன. இந்த ஏழு இசையைக் குறிப்பன ஏழு நரம்புகள் (நரல் +ம் +பு = நரம்பு). இது நரல் கருவியில் ஏற்பட்ட சுரத்தானம்.

இதே போல வங்கியக் கருவிகளில் அடிப்படையானது குழல். குழலில் ஒரு பக்கம் காற்றைச் செலுத்தி இன்னொரு பக்கம் வெவ்வேறு தூரத்தில் துளைகளை ஏற்படுத்தி வெவ்வேறு பருவெண்களைக் கொண்ட ஓசையை எழுப்பினர். சுரத்தல் என்பது துளையிடுதல். சுர் என்று துளையிடும் கருவி போகிறதல்லவா? அப்படி ஒலியால் ஏற்பட்ட சொல் அது. ஒவ்வொரு துளையும் ஒவ்வொரு சுரத்தை ஏற்படுத்தும். ஏழு துளைகள் ஏழு சுரங்கள். சுரம் என்ற சொல்லின் பிறப்பு மட்டுமல்ல, அது குழலோடு தொடர்பு கொண்டது என்ற வரலாற்றையும் நமக்குப் புரிய வைப்பது தமிழிசையே! வடமொழி தன் வழக்கப் படி வகரத்தை உள்நுழைத்துச் சுரத்தை ஸ்வரம் என்று திரிக்கும். வடமொழி சொற்பிறப்பு அகரமுதலி (Monier Williams) அந்தச் சொல்லின் அறிவியல் பிறப்பு அறியாமல் அதை ஸ்வ + ரம் என்று குதறி சுயமாக இனிமை பயப்பது என்று சொல்லிக் "கேப்பையில் நெய்வடிகிறது" என்று சொல்லும். நம்மைப் போன்ற கேட்பாருக்கு அறிவு எங்கே போனது என்று தான் தெரியவில்லை. Most of the knowledge are deductive. when you come to explain to others, you use inductive method. This is true also of word derivation. you don't start a derivation of a word as "self produced sweet sound".

தமிழிசையின் நெளிவு சுழிவுகளை எழுதப் புகுந்தால் எண்ணற்றவை இருக்கின்றன. வெறுமே மொழிபெயர்த்து வைக்கப் பட்ட வடமொழிச் சங்கதிகளை வைத்துக் கொண்டு, மூலத்தைப் பழித்து, வெறியன் என்று சொல்லப் புகுவது எதனால் என்று தான் எனக்குப் புரியவில்லை.
------------------------------------------------------------------
>"சுரத்தின் வன்மை மென்மை என்ற பாகுபாட்டைக் குறிக்க நிறை,குறை என்றோ கோமளம், தீவிரம்
>என்றோதான் பெயரிடுவார்கள்" என்பதில் கோமளம், தீவிரம் இரண்டும் வட஦ ...
...snip...
>... ஡றிவிடுகிறது. இவர்
>குறிப்பிடும் பல்லவர் காலத்தில்தான் அப்பரும் சம்பந்தரும் தமிழிசையில் சைவம் பரப்பினார்கள். மன்னனின்
>ஒப்புதல் இல்லாமல் இது நிகழ்ந்திருக்கமுடியுமா?
-----------------------------------------------------------------
இராம.கி. மறுமொழி

கட்டுரையாளர் கோமளம், தீவிரம் என்று சொன்னது பழைய இசைக் கலைஞரிடையே பழகும் சொற்களைக் கூறியிருப்பார். மேளகாரர்கள் தனித்தமிழ் பழகியிராதவர்கள். அவர்களிடம் வடமொழிச் சொற்கள் இருக்கக் கூடும். ஆரோகணம், அமரோகணம் என்பன முற்றிலும் தமிழ் தான். ஆருதல் என்பது ஏறுதல் என்ற பொருளுடைய சொல். அமருதல் என்பது குறைந்து வருதல். விளக்கை அமர்த்து என்று சொல்லுகிறோம் இல்லையா?
அமரோகணம் திரிந்து அவரோகணம் என்று ஆகி வடமொழியாய் நம்மை மருட்டும்.

மணிப்பவளம் தான் மணிப்ரவாளம் என்று திரிந்தது. மணிமிடைப் பவளம் என்பது அகநானூற்றில் ஒரு பகுதி. பவளம் என்ற சொல் முற்றிலும் தமிழே. ரகரத்தை உள்நுழைத்து தமிழ்ச் சொற்களைத் தன்வயம் ஆக்குவது வடமொழிக்கு உள்ள வழக்கம்.

அப்பரும், சம்பந்தரும் தமிழிசையில் சிவநெறியைப் பரப்பினார்கள். ஆனால் 18, 19 ம் நூற்றாண்டுகளில் ஓதுவார்களை யார் போற்றினார்கள்? கோயிலிலேயே இறைவன் திருமேனிக்கு முன்னால் எல்லா மந்திரங்களையும் சொல்லி, பூசை முடித்து கடைசியில் "என்னப்பா? அந்த ஓதுவாரைக் க் கூப்பிடு; ரெண்டு தேவாரம் பாடட்டும்" என்று சொல்லிவிட்டு குருக்கள் போய்விடுவார். அப்புறமாய் ஓதுவார் நாலு பாட்டுப் பாடியபின் குருக்கள் வந்து சேருவார்; சிவன் கோயில் நடைமுறையைப் பார்த்தால் இப்படி கடனுக்குச் செய்யும் பாங்கு விளங்கும். ஒரு விண்ணவக் கோயில் பட்டாச்சாரியார் மூலவர் திருமேனிக்கு மிக அருகிலேயே தானே தோய்ந்து நாலாயிரப் பனுவலில் ஓரிரண்டையாவது பாடுவார். ஒரு சிவாச்சாரியார் ஆவுடையப்பருக்கு அருகில் இதைச் செய்து பார்த்திருக்கிறீர்களா? அங்கு தமிழ் நிரம்ப தூரம் தள்ளி நிற்க வேண்டும்; இதில் பிறகு எங்கே தமிழில் சிவநெறியை வளர்ப்பது? அப்பராவது, சம்பந்தராவது? நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது, அய்யா. நற்றுணையாவது நமச்சிவாயமே என்று சொல்லுவது அவனுக்குக் கேட்கிறதா, என்ன? தமிழிசையை என்று நாம் பேணியிருக்கிறோம்?
---------------------------------------------------------------------
>தூயதமிழ் பாடல்கள் என்பது இருக்கமுடியுமா என்பதுமெனது ஐயம். " சிவபெருமான் கிருபை வேண்டும்" 'சுந்தரி
>சௌந்தரி நிரந்தரியே' என்று இவர்குறிப்பிடும் பாடல்களில் வடமொழி ...
...snip...
>" நம் முன்னோர் கண்ட பண்களின் தமிழ் பெயர்கள் எல்லாம் திட்டமிட்டேவஞ்சகமாக அழித்து ஒழிக்கப்
>பட்டன; சிதைக்கப்பட்டன" என்று யாரை குற்றம் சாட்டுகிறார் என்பது பற்றின விளக்கம் இல்லை.
-----------------------------------------------------------------
இராம.கி. மறுமொழி

இங்கே ஒரு நிகழ்வைச் சொல்லுகிறேன்.

பாரதி கவிதா மண்டல அலுவலகத்தில் பாவேந்தர் பாரதிதாசனார் இருந்தார். அப்போது பஞ்சாபகேசய்யர் என்பார் "தெலுங்கு சம்ஸ்கிருதம் போன்று தமிழில் கீர்த்தனங்கள் பாடமுடியாது. அவ்வாறு பாடினாலும் அவை தாளத்திற்கும் சங்கதி போட்டுப் பாடுவதற்கும் ஒத்து வராது" என்றார்.

அப்பொழுது பாவேந்தர் உடனிருந்த எஸ்.ஆர். சுப்பிரமணியத்தைப் பார்த்து, "சுப்ரமண்யா, அவன் என்ன சொன்னான்? தியாகராசர் கீர்த்தனை போல் தமிழில் பாடமுடியாது! அது என்ன, தியாகராசர் கீர்த்தனை? இங்கு ஏதாவது இருக்கிறதா?" என்றார்.

'இருக்கிறது' என்று சுதேச மித்ரன் வாரப்பத்திரிக்கையில் உள்ள மொழிபெயர்ப்பும், இசையமைப்பும் என்ற பத்துக் கீர்த்தனைகளைக் கொடுத்தார் சுப்பிரமணியம். மேல் நிகழ்ந்ததைச் சுப்பிரமணியமே கூறுகிறார்.
- - - - - - - - - - - - -
சாப்பிட்டு வந்தவுடன் கவிஞர் எழுதினார்.

'நிஜமர்ம முலனு' என்னும் கீர்த்தனையைத் தியாகராசர் முத்திரையுடன் எழுதினார்.

"உடையாரே பாடு" என்றார். அவருடன் சேர்ந்தும் பாடினார். "அவன் என்னமோ சொன்னானே, சங்கதி; அதெல்லாம் போட்டுப் பாடு" என்றார். அவரும் பாடிவிட்டு "இந்தப் பாட்டு அற்புதம்! அற்புதம்!" என்றார்.

"பத்துக் கீர்த்தனைகள் மொழிபெயர்த்தார். கவிதா மண்டலத்தில் வெளியிட்டோ ம்"
- - - - - - - - - - - -
-என்று எஸ்.ஆர்.சுப்பிரமணியம் பாவேந்தரின் மொழிபெயர்ப்புக் கீர்த்தனைகள் பிறந்த சூழலைக் குறித்துள்ளார். (ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் கவிதா மண்டலம் 1:3:35 ஆண்டு 1935)

நான் கேட்கிறேன். இந்த 10 மொழிபெயர்ப்புத் தியாகராசர் சீர்த்தனைகளில் ஏதாவது ஒன்றை ஒரு கருநாடக இசைக் கலைஞர் பாடியிருப்பாரா? அதெப்படி சு.ம.காரனின் ஆக்கத்தைத் தொடமுடியும் என்று கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஒடுக்கியாயிற்று. :-)

பாரதி தாசன் பின்னாளில் இன்னும் நல்ல தமிழ்ச் சீர்த்தனைகளையும், இசைப் பாடல்களையும் எழுதினார். அவர் மட்டுமல்ல; இன்னும் பலர் இருந்திருக்கிறார்கள். தூய தமிழ்ப் பாடல்களை நான் எடுத்துக் காட்டட்டுமா? மடல் இன்னும் நீளும். பூனை தன் கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடாது அய்யா. நான் தூய தமிழ்ப் பாடல்களை மட்டுமே பாடவேண்டும் என்று சொல்பவன் அல்லன். எனக்கு "சிவபெருமான் கிருபை வேண்டும், சுந்தரி சௌந்தரி நிரந்தரியே" என எல்லாமே இணக்கம் தான். "ராமா நீ ணசால சுகமா?" பாடும் இடத்தில் எனக்கு எம் மக்களுக்குப் புரியும் வகையில் தமிழ் பாடினால் போதும். இங்கே தூய தமிழா, இல்லையா என்ற அறிவுய்யராய் (அறிவால் உய்கின்றவர் அறிவுய்யர் = அறிவு ஜீவி) வழக்காடிக் கொண்டிருப்பதில் எனக்கு விருப்பு இல்லை.

ஆபிரகாம் பண்டிதர் மீட்புக் காலத்தின் முன்னோடி; அவர் கர்ணாமிருத சாகரம் என்ற தலைப்பு வைத்ததில் வியப்பே இல்லை. தமிழ் மீட்பு மறைமலையாருக்குப் பின் மிக உயர்ந்த வளர்ச்சி பெற்றது. 19 ம் நூற்றாண்டுகளின் பின் பாதியில், 20 நூற்றாண்டுகளின் முன்பாதியில் கிட்டத்தட்ட 50/50 தமிழும் வடமொழியும் கலந்து ஒரு கலவையாய் அன்றைய அறிவுய்யர்கள் எழுதினார்கள். அது 90/10 என்ற நிலையில் வந்து 20 நூற்றாண்டின் நடுவில் தான். இன்றைக்கு அந்தத் தலைப்பை அவரைப் போன்றவர் வைத்திருப்பாரா என்பது அய்யமே! தாங்கள் கொஞ்சம் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பது நல்லது. குறிப்பாக, ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் தமிழ்நடை மாறி வந்திருப்பதையும் கூர்ந்து படிப்பது நல்லது.
------------------------------------------------
>" நம் முன்னோர் கண்ட பண்களின் தமிழ் பெயர்கள் எல்லாம் திட்டமிட்டேவஞ்சகமாக அழித்து ஒழிக்கப்
>பட்டன; சிதைக்கப்பட்டன" என்று யாரை குற்றம் சாட்டுகிறார் என்பது பற்றின விளக்கம் இல்லை.
----------------------------------------------------
இதைப் பற்றியும் பல தமிழிசைப் பொத்தகங்கள் வந்துள்ளன. எழுதப் புகுந்தால் விரியும்; பக்கங்கள் நீளும். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்றா இன்று சொல்லுகிறோம்? சட்ஜமம்...... நிஷாதம் என்று தானே கருநாடக இசைக்காரர்கள் சொல்லுகிறார்கள்?

அரிகாம்போதியைச் செம்பாலை / முல்லையாழ் என்றா சொல்லுகிறீர்கள்?
நடபைரவியைப் படுமலைப் பாலை / குறிஞ்சியாழ் என்றா சொல்லுகிறீர்கள்?
"ப" இல்லாத தோடியை செவ்வழிப் பாலை / என்றா சொல்லுகிறீர்கள்?
சங்கரா பரணத்தை அரும்பாலை என்றா சொல்லுகிறீர்கள்?
தோடியை விளரிப் பாலை என்றா சொல்லுகிறீர்கள்?
கரகரப்பிரியாவை கோடிப்பாலை என்றா சொல்லுகிறீர்கள்?
கல்யாணியை மேற்செம்பாலை என்றா சொல்லுகிறீர்கள்?

நீங்கள் இந்தப் புலனத்தில் இதுகாறும் நடந்திருக்கும் ஆய்வுகளை அறிந்தவர்கள் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
---------------------------------------------------------
>இதில் எனக்குக் கிடைக்கும் செய்தி கட்டுரை ஆசிரியருக்கு வடமொழியின்பாற் இருக்கும் வெறுப்பும்
>தமிழின்பாற் வெளிப்படும் எல்லைகடந்த பாசமும். ஆனால் இன்று தமிழ்நிலத்தில் தமிழ்
>இளையதலைமுறையினரிடம் படும் பாடு இவருக்குத் தெரியாதா? இந்த அவல நிலைக்கு யாரைக் காரணம்
>காட்டுவார்? தமிழை, இசையை இன்று நமது ஊடகங்கள் சின்னாபின்னம் செய்வதை என்னசொல்வது? இதற்கு
>ஏதேனும் திட்டம் இருக்கிறதா இவரிடம்?
--------------------------------------------------------------
இராம.கி. மறுமொழி

இது போன்ற குற்றம் சாட்டுதலைப் பல இடத்தும் பார்த்தாகிவிட்டது. வடமொழியை வெறுப்புக் காட்ட வேண்டிய தேவை என்ன? இப்படி எங்களின் இசை அடிப்படையைக் குலைத்து அழிப்பதைச் சுட்டிக் காட்டாமல், "ஆண்டை, நீங்கள் செய்வது சரி" என்று ஆமாம், சாமி போட வேண்டுமா, என்ன?

தமிழ்நிலத்தில் தமிழ் படும் நிலைக்குக் காரணம் முற்றிலும் நம்மைப் போன்ற அறிவுய்யர்களே. முற்றிலும் ஆங்கிலத்திற்கு நம்மை அடகு வைத்து, தமிழைத் தவிக்க விடுகிறோம். பழகிய தமிழ்ச் சொற்களைக் கூடத் தவிர்த்துப் பண்ணித்தமிழ் பழகுகிறோம். அதை ஏதோ ஒயிலான செயல் என்று படிப்பறியாதவருக்குங் கூடச் சொல்லிக் கொடுக்கிறோம். "படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்" என்பது பழமொழி.
-------------------------------------------------------------
>" தனித் தமிழ் இயக்கம், தன்மான இயக்கம், தமிழிசை இயக்கம், பவளவிழா காணவேண்டிய காலத்தில் ஓர்
>தேய்வு நிலையை நீர்த்துப்போன நிலையை அடைந்து வருகிறது. இந்தத் தளர்ச்சியை மீட்டெடுத்து
>மறுமலர்ச்சி காண தலைவர்களையும் சான்றோர்களையும் தொண்டர்களையும் மீண்டும் தமிழகம் காணுமா?" என்று
>முடிகிறது கட்டுரை. இன்றைய தமிழ் நிலத்தில் இதெல்லாம் இவர்களால் நிகழுமா?
--------------------------------------------------------------
இராம.கி. மறுமொழி

நிகழும் என்ற நம்பிக்கையில், எதிர்பார்ப்பில் தான் அந்தக் கட்டுரையாளர் முடித்திருக்கிறார்.
-------------------------------------------------------------
>" என்றென்றும் வாழும் தமிழிசை" இது ப.சோழநாடன் கட்டுரை
>'தமிழிசையின் சிறப்பு' 'ஏழிசை' என்பதாக தலைப்புக்களிட்டு கட்டுரையை தருகிறார். பெரும்பாலும்
>விவரங்களையே கொடுக்கும் இதிலும் வேற்றுமொழி ( குறிப்பாக வடமொழி) வெறுப்பு அடிநாதமாக இருக்கிறது.
------------------------------------------------------------------
இராம.கி. மறுமொழி

உங்களுக்குப் படிக்கின்ற எல்லாக் கட்டுரைகளும் வடமொழி வெறுப்பாகவே தோன்றுகிறது. அதற்கு என்ன செய்ய?
-----------------------------------------------------------------
>முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் நேர்காணலிலும் "கர்நாடக இசை என்பதே தமிழிசைதான்" என்று
>தலைப்பிடப்பட்டுள்ளது. சி. அண்ணாமலையின் கேள்விகள் மூலம் நமக்குப் பல விவரங்கள் கிடைக்கின்றன.
...snip...
>உள்ளடக்கிய ' கருநாடக இசை'யாக வழங்கப்படுகிறது" என்று இவர் சொல்லும் கருத்துக்கு நா.மம்மது என்ன
>பதில் சொல்வார் என்று தெரியவில்லை.
------------------------------------------------------------------------
இராம.கி.மறுமொழி

இந்தக் கருத்து பலராலும் ஒப்ப முடிகிற ஒரு கருத்துத்தான். எனக்குத் தமிழ்ப்பாடலும் வேண்டும்; தமிழிசையும்
வேண்டும்.
--------------------------------------------------------------------
>இது தொடர்பாக ஒரு வினாவை நான் சபைமுன் வைக்க விரும்புகிறேன்.
>தமிழ்ப் பாடல்கள் அல்லது இன்று சொல்வதுபோல கர்நாடக இசைநிகழ்ச்சிகளில் பாடப்பெறும் மற்றமொழிப்
...snip...
>பின்பற்றுபவர்களும் வேற்றுமொழியின்பால் வெறுப்பு காட்டும் தலைவர்களும் தமிழ் இசையை மீட்டுத்தர
>என்னசெய்யப் போகிறார்கள்? இவர்களிடம் ஏதேனும் மாற்று ஏற்பாடு உள்ளதா?
------------------------------------------------------------------------
இராம.கி. மறுமொழி

இறைவனைப் பற்றிய பாடல்கள் மட்டும் பாடுபவைதான் தமிழிசைப் பாடல்கள் என்று இல்லை. இறைப் பாடல்கள் அல்லாமலும் பாடல்களும் ஒளிப்பேழைகளும் வந்திருக்கின்றன. தேடினால் கிடைக்கத்தான் செய்கிறது. இதில் தேடுதல் நமக்கு இருக்கிறதா என்பதே முகமையானது.
--------------------------------------------------------------------------
>மீண்டும் வந்தனம் சொல்லி,
>அரவக்கோன்
------------------------------------------------------------------------
அன்புடன்,
இராம.கி.

- அடுத்த பகுதியில் உரையாடல் இன்னும் தொடர்கிறது.

2 comments:

Anonymous said...

தமிழ்நிலத்தில் தமிழ் படும் நிலைக்குக் காரணம் முற்றிலும் நம்மைப் போன்ற அறிவுய்யர்களே. முற்றிலும் ஆங்கிலத்திற்கு நம்மை அடகு வைத்து, தமிழைத் தவிக்க விடுகிறோம். பழகிய தமிழ்ச் சொற்களைக் கூடத் தவிர்த்துப் பண்ணித்தமிழ் பழகுகிறோம். அதை ஏதோ ஒயிலான செயல் என்று படிப்பறியாதவருக்குங் கூடச் சொல்லிக் கொடுக்கிறோம். "படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்" என்பது பழமொழி.
100 விழுக்காடு இதுதான் உண்மை!!!அறிவு பூர்வமான பதில்கள்!! தேசிகருக்கு நடந்த அவமானம் கேள்விப்பட்டு அப்போதே நொந்தேன்.
உங்களைப் போன்றோர் இணையத்தின் மூலம் உண்மை விளம்புவது மகிழ்ச்சியாக உள்ளது.
சில பாடகர்கள் தமிழிலும் பாடுகிறார்கள்...அவர்களை வரவேற்போம்.
யோகன் பாரீஸ்

இராம.கி said...

அன்பிற்குரிய யோகன்,

உங்கள் கருத்திற்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.