Sunday, December 10, 2006

தமிழிசை - ஒரு பார்வை - 3

நடந்த உரையாடலில் இன்னும் சிலநண்பர்கள் பங்கெடுத்திருந்தார்கள். அவர்களின் மடல்களை நான் இங்கு இடவில்லை. மாறாக திரு. நாகராஜனோடு நடந்த உரையாடலை மட்டுமே தருகிறேன். அவர் 10/12/2004 அனுப்பிய மடல் இனிக் கீழே.
---------------------------------------------------

சபைக்கு வந்தனம்,

எனது 'புதியபார்வை தமிழிசை சிறப்பிதழில்' கடிதத்திற்கு எதிர் மடல் /சார்பு மடல்களை படித்தபின் எனக்குத் தொன்றிய சில எண்ணங்களை இங்கு உங்கள்முன் வைக்கிறேன்.

நான் இசை ஆராய்ச்சியாளனோ அல்லது வல்லுனனோ இல்லை. வெறும் இசை விரும்பி. உள்மனதை ஒருமித்து அமைதிதரும் இசை கேட்பேன். (m.d.ராமனாதனை கேட்டபடி ஓவியங்கள் படைப்பது எனக்குப் பிடித்த ஒன்று) தமிழில் தான் இசையைக் கேட்பேன் என்று முறண்டு பிடிக்கமாட்டேன். மொழி எனக்கு ஒரு தடை இல்லை. இந்திய இசையில் எல்லாப் பாடல்களும் இறைவன் சார்ந்ததாகவே இருப்பதால் அவற்றைப் புரிந்து கொள்ள அடிப்படை முயற்சி போதும் என்பது என் கருத்து.

சதிர் என்று அழைக்கப்பட்ட நடனம் சிறப்பாக இருந்த நிலை கடந்து அது கோவிலிலிருந்து வீதிக்கு வந்து, செல்வந்தர் வீட்டில் அடைக்கலம் புகுந்தபின் தனது அழகு குலைந்து விரசம் மிகுந்து கொச்சைப்படுத்தப் பட்டு தனி மனிதனின் புலன் இச்சைக்காகவே என்ற நிலை வந்தது. 'தில்லானா மோகனாம்பாள்' கதை தாசி முறை வாழ்க்கையிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள அவள் படும்பாட்டைத் தானே சொல்கிறது? வட இந்தியாவிலும் "கதக்" என்னும் நடனம் இவ்வித இழிந்த நிலைக்கு வந்ததும் இன்றும் அதிலிருந்து முழுவதுமாக மீளாமல் இருப்பதும் கண்கூடு.

இந்த சரிவிலிருந்து தான் அக்கலையை திருமதி ருக்மிணி தேவி மீட்டு வேறு தளத்துக்குக் கொணர்ந்தார். மக்கள் அப்போது பொதுவாகவே கலைஞர்களை மிக இழிவாகவே சமுதாயத்தில் மதித்தனர் என்பது எல்லோரும் அறிந்த செய்திதானே? அவர்களுடன் குடும்பப் பெண்கள் பழகுவதையே கூட கண்டித்த நேரம் அது. இன்று நடனம் எல்லோராலும் பயிலப் படுகிறது. குடத்து விளக்காக இருந்த அக்கலை பரிதிபோல் ஒளிர்கிறது. கலைஞர்கள் பெருமையுடன் வலம் வருகிறார்கள்.

தமிழ் இசையை பிறமொழிக்காரர்கள் தமக்கு ஏற்ற வகையில் மொழிமாற்றம் செய்து உரிமை கொண்டாடுகிறார்கள் என்றும் பேச்சு உண்டு. நமது தமிழ் இசை தென்னகம் முழுவதும் படர்ந்து எல்லோருக்கும் பொதுவாகி புகழ்பெற்றதில் எனக்கு உவகைதான். கர்நாடக இசை என்னும் பெயர் பிடிக்காவிடில் 'தென் இசை' என்று குறிப்பிடலாமே? வட இந்தியாவில் அறியப்படும் ஹிந்துஸ்தானி இசையிலும் இதே "ஏழு சுரங்கள்" தான் பயன்படுகின்றன. தமிழிசையில் இருந்துதான் அவை அவர்களுக்குப் போயிற்றா? அப்படியெனில் நமது இசை இந்திய நிலம் முழுவதும் பரவி விரவி பாடப்படுவதற்கு நாம் பெருமை அல்லவா கொள்ளவேண்டும்? இந்திய நிலத்தின் ஒட்டுமொத்தமான இசை வடிவமாகத்தான் நான் இதைக் காண்கிறேன். ஆனால் தமிழ் இசை என்னும் நமது தலைப்பாகையை அன்னியன் திருடிவிட்டான் என்னும் கூச்சலில் நமது தமிழ் என்னும் இடைத் துணியை நம்மவர்களே பிடித்து இழுத்து கிழித்து குதறி தங்களுக்கு புகழும் பெருமையும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.

தமிழை சரியான முறையில் தொடக்கப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தி 10ஆவது வரை அதை கட்டாய பாடமாகச் செய்து இளைய சமுதாயத்துக்கு தமிழைச் சேர்க்க வேண்டாமா? ஹிந்தி மொழியில் எண்களை குறிப்பிட உரிய குறியீடுகளை பள்ளிக் கல்வியிலேயே பயில்விக்கின்றனர். "ஹிந்தி பிரசார சபா" விலும் இது உண்டு. நமது தமிழ்க்கல்வி பயில்விக்கும் முறையில் இது ஏன் இல்லை?

ஒரு மொழி வளர காலம் சார்ந்த மாறுதல்கள் இன்றிமையாதவை. ஆங்கில மொழி அகராதியில் அவ்வப்போது புதிய சொற்கள் சேர்க்கப்படுகின்றன. நாம் தமிழ் மொழியில் அன்னிய மொழிச் சொற்களை களையெடுக்க குரல்கொடுக்கிறோம். வெகு விரைவில் நாம் தனிப்பட்டுப்போய் முகம் அறியாதவர்கள் ஆகிவிடுவோம்.

"ஸ்,ஷ்,ஜ்,ஹ் " போன்ற எழுத்துருக்கள் வடமொழியில் உள்ள ஒலி ஒட்டி தமிழில் பயன்படுத்த அமைக்கப்பட்டவை. வடமொழியின் மேல் கோபம் கொண்டு அவற்றைப் புறக்கணிப்பது மொழிவளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்கள். அப்படி மாற்றப்பட்ட தமிழைப் படிக்கும்போது உணவில் கல் கடித்த மாதிரி கூசுகிறது. வடமொழி பேச்சுவழக்கில் இருந்து இல்லாமல் போனது வரலாறு. தமிழ் பேச்சு வழக்கில் வல்லினம் மெல்லினம் ழகரம் போன்ற சிறப்பினை இழந்து காயம்பட்டுக் கிடக்கிறது. மீட்டெடுப்போம் அதை. என்றோ நிகழ்ந்ததாக கூறப்படும் திருட்டுக்கு இப்போது இதுதான் மாற்று.

வந்தனம் சொல்லி,
அரவக்கோன்
--------------------------------------------
என்னுடைய மறுமொழி அடுத்த பகுதியில் வருகிறது.

அன்புடன்,
இராம.கி.

No comments: