Tuesday, December 12, 2006

தமிழிசை - ஒரு பார்வை - 4

10/12/2004 ல் மீண்டும் கருத்துரைத்த திரு. நாகராஜனுக்கு, 11/12/2004ல் நான் கொடுத்த மறுமொழி கீழே வருகிறது.

At 01:59 PM 12/10/2004, you wrote:

>சபைக்கு வந்தனம்,
>எனது 'புதியபார்வை தமிழிசை சிறப்பிதழில்' கடிதத்திற்கு எதிர் மடல் /சார்பு மடல்களை படித்தபின்
>எனக்குத் தொன்றிய சில எண்ணங்களை இங்கு உங்கள்முன் வைக்கிறேன்.
...snip...
>... ஡ழி எனக்கு ஒரு தடை இல்லை. இந்திய
>இசையில் எல்லாப் பாடல்களும் இறைவன் சார்ந்ததாகவே இருப்பதால் அவற்றைப்
>புரிந்துகொள்ள அடிப்படை முயற்சி போதும் என்பது என் கருத்து.

அய்யா,

"தமிழில் தான் இசையைக் கேட்பேன் என்று முரண்டு பிடிக்க மாட்டேன்; மொழி எனக்கு ஒரு தடை இல்லை" என்ற நிலைப்பாடு உங்களுக்கு உரியது. அது பற்றி யாரும் ஒன்றும் சொல்ல முடியாது; ஏனென்றால், உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்கிறீர்கள். அது உங்கள் உரிமை. உங்களுடைய முன்னைய மடலில் உரிமை, மற்றும் சொந்த உகப்புக்கள் பற்றி எழுதியிருந்தால் நான் எதிர்வினை காட்டியிருக்க மாட்டேன். படித்துவிட்டுப் போயிருப்பேன். மாறாக, புதிய பார்வை இசைச் சிறப்பிதழைப் படித்துப் பின் உங்களுடைய ஐயங்கள், கருத்துக்கள், வினாக்கள் பற்றி எழுதினீர்கள். இது போன்ற தூண்டிலிட்டு மீன்பிடிக்கும் உரையாடல்கள் ஒவ்வொரு ஆண்டும் இசைவிழாக்களின் போது எழுவது வழக்கம். இதில் தமிழிசையைச் சிலர் வாரிவிடுவதும், இன்னொரு சாரார் தூக்கிப் பிடிப்பதும் ஓர் 70 ஆண்டுகளாய் நடைபெற்று வருகிறது. சரி, இந்த ஆண்டின் வெளிப்பாடாய் இது மடற்குழுவில் வருகிறது போலும் என்று எண்ணித்தான் என் மாற்றுக் கருத்தைத் தெரிவித்தேன். ஆனால் நீங்கள் அந்த மாற்றுக் கருத்தை எதிர்கொள்ளாமல், உரையாடலைத் தவிர்ப்பது போல் ஒரு தொனியை வெளிக்காட்டி, உங்கள் இரண்டாம் மடலை அனுப்பி, அதே போது இரண்டாம் மடலின் பின்பகுதியில் இன்னும் சில தூண்டில்களைப் போட்டுவிட்டு, விலகிக் கொள்ளுகிறீர்கள். ஆக, உங்களுக்கு மீன் பிடிக்கவும் வேண்டும்; ஆனால் முள்ளுள்ள மீன்கள் வேண்டாம். எனக்கு என்ன எழுதுவதென்று புரியவில்லை. நீங்கள் எழுதுவதை வெறுமே எங்களைப் போன்றோர் படிக்க வேண்டும்; அன்றேல், "ஆகா, அருமையான கருத்து" என்று ஒத்துப் பாடவேண்டும் போல் எதிர்பார்ப்பதாய் தெரிகிறது. எனவே இந்த உரையாடலை இந்த மடலோடு நிறுத்திக் கொள்ளுகிறேன். வலிந்து வழக்குப் பண்ணுவது எனக்கு ஒவ்வாத செயல்.

>சதிர் என்று அழைக்கப்பட்ட நடனம் சிறப்பாக இருந்த நிலை கடந்து அது
>கோவிலிலிருந்து வீதிக்கு வந்து, செல்வந்தர் வீட்டில் அடைக்கலம் புகுந்தபின் தனது அழகு குலைந்து விரச ...
...snip...
>பெண்கள் பழகுவதையேகூட கண்டித்த நேரம் அது. இன்று நடனம் எல்லோராலும் பயிலப் படுகிறது. குடத்து
>விளக்காக இருந்த அக்கலை பரிதிபோல் ஒளிர்கிறது. கலைஞர்கள் பெருமையுடன் வலம் வருகிறார்கள்.

மறுபடியும் ஒருபக்கச் செய்தியைச் சொல்ல முற்படுகிறீர்கள். ஒரு காலத்தில் நிலவுடைமைக் குமுகாயத்தில் பண்ணையார்களுக்கு அடிமைப்பட்டு பரத்தையர் இருந்தது எல்லாரும் அறிந்தது தான். பரத்தையருக்கு இரண்டு முகம். முதல் முகம் கலை; இரண்டாவது, வதுவை அல்லாத உறவு முறை. இந்த இரண்டாவது முகம் சிதைக்கப் பட வேண்டியது தான். ஆனால் முதல் முகம்? அவர்களிடம் இருந்த கலையை மேலிடத்துக் குமுகப் பெண்களுக்குக் கொண்டுவந்து, பரத்தையரின் கலையான பரத்தம் (பரம் என்பது மேடை என்று தஞ்சை ப. அருளியார் அருமையாக விளக்குவார்.
பரத்தில் ஆடுவது பரத்தாட்டம்>பரத்தம்) வடமொழிப் பலுக்கலில் பரதம் ஆனவுடன், இவர்கள் முகம் தெரியாமற் போனார்களே என்ற பொருளில் தான் கட்டுரையாளரின் அங்கலாய்ப்பு இருந்தது. இதைச் சொல்வது எப்படித் தவறாகும்?

ஆங்கிலத்தில் சொன்னால் தான் புரியுமென்றால் சொல்லுகிறேன். She had two means of livelihood; The modern society said that one of her means is immoral; so she abandoned it; Before she could survive through the other means, the society took the art from her and made her to teach the art to high society girls; now everything is happening due to influence; She is nowhere to be seen; she has become a helpless girl who has lost her livelihood. இப்படி ஒவ்வொரு கலைஞரும் அவரிடம் உள்ள கலையை பொதுவாக வார்த்துவிட்டு முகம் தெரியாமல் போவதுதான்
வளர்ச்சியா என்பது கட்டுரையாளர் கேள்வி.

>தமிழ் இசையை பிறமொழிக்காரர்கள் தமக்கு ஏற்ற வகையில் மொழிமாற்றம் செய்து
>உரிமை கொண்டாடுகிறார்கள் என்றும் பேச்சு உண்டு. நமது தமிழ் இசை தென்னகம் முழுவதும் படர்ந்து
>எல்லோருக்கும் பொதுவாகி புகழ்பெற்றதில் எனக்கு உவகைதான். கர்நாடக இசை என்னும் பெயர்
>பிடிக்காவிடில் 'தென் இசை' என்று குறிப்பிடலாமே?

தமிழிசை என்று அழைக்க என்ன கூச்சம்? அது என்ன தென்னிசை? எத்தனை நாட்கள் பெருமிதமில்லாமல், apologetic ஆக இருக்க வேண்டும்? இந்திய அரங்கில் தமிழ் என்று சொல்லத் தயங்கித் தயங்கித்தான் எல்லாவற்றையும் தொலைத்து நிற்கிறோம். "தமிழி" என்ற சொல்லைப் புழங்க வெட்கப்பட்டு "southern brahmi" என்று கல்வெட்டு எழுத்துக்களைச் சொல்லிக் கொண்டு திரிகிறோம், அல்லவா? "தமிழிய" என்று சொல்ல வெட்கப்பட்டு வடமொழிப் பலுக்கலில் "dravidian" என்று மொழித்துறையில், கோயில் கட்டுமான முறையில், சொல்லிக் கொண்டு இருக்கிறோம் அல்லவா? இந்திய நாட்டில் ஏராளம் கல்வெட்டு இருப்பது தமிழ் கூறும் மாநிலத்தில்; இருந்தாலும் எழுத்து தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கலாம் என்று கூறத் தயங்கி நிற்கிறோம் அல்லவா? இது போல எத்தனை நாள் கூச்சம்? வெட்கம்? மன்னிப்புக் கேட்கும் தொனி?

>வட இந்தியாவில் அறியப்படும் ஹிந்துஸ்தானி இசையிலும் இதே "ஏழு சுரங்கள்" தான் பயன்படுகின்றன.
>தமிழிசையில் இருந்துதான் அவை அவர்களுக்குப் போயிற்றா ? அப்படியெனில் நமது இசை இந்திய நிலம்
...snip...
>என்னும் இடைத் துணியை நம்மவர்களே பிடித்து இழுத்து கிழித்து குதறி தங்களுக்கு புகழும் பெருமையும்
>தேடிக்கொண்டு இருக்
>கிறார்கள் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்த ஒப்பீடு என்னவென்று எனக்குப் புரியவில்லை. தலைப்பாகையை ஒருவன் திருடிவிட்டான் என்ற கூச்சலில் இடைத்துணியை இன்னொருவன் இழுத்துக் கிழித்துக் குதறினால், குதறியவனுக்கு எங்கே புகழ் கிடைக்கும்? என்ன சொல்ல வருகிறீர்கள்?

>தமிழை சரியான முறையில் தொடக்கப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தி 10ஆவது வரை அதை கட்டாய
>பாடமாகச் செய்து இளைய சமுதாயத்துக்கு தமிழைச் சேர்க்க வேண்டாமா? ஹிந்தி மொழியில் எண்களை
>குறிப்பிட உரிய குறியீடுகளை பள்ளிக் கல்வியிலேயே பயில்விக்கின்றனர். "ஹிந்தி பிரசார சபா"
>விலும் இது உண்டு. நமது
>தமிழ்க்கல்வி பயில்விக்கும் முறையில் இது ஏன் இல்லை?

இது வேறு புலனம். பேசலாம். ஆனால் தனியாக, தமிழிசை பற்றிப் பேசும் போது அல்லாமல் இன்னொரு முறை எழுப்புங்கள், பேசுவோம்.

>ஒரு மொழி வளர காலம் சார்ந்த மாறுதல்கள் இன்றிமையாதவை. ஆங்கில மொழி அகராதியில்
>அவ்வப்போது புதிய சொற்கள் சேர்க்கப்படுகின்றன. நாம் தமிழ் மொழியில் அன்னிய மொழிச்
>சொற்களை களையெடுக்க குரல்கொடுக்கிறோம். வெகு விரைவில் நாம் தனிப்பட்டுப்போய் முகம்
>அறியாதவர்கள் ஆகிவிடுவோம்.

உங்களுடைய பேச்சு வேடிக்கையாய் இருக்கிறது. இன்றைக்குத் தமிழ் எங்கே இருக்கிறது என்று தமிழ் நாட்டில் தேடிக் கொண்டு இருக்கிறோம். ஒருபக்கம் சென்னை போன்ற நகர்களில், நடுத்தர மக்கள் தங்கள் வீட்டு வேலைக்காரிகளுடன் மட்டுமே பேசும் சென்னைத் தமிழாய் இசுத்துக் கொண்டும், இன்னொரு பக்கம் பெரும்பாலோர் 90 விழுக்காடு ஆங்கிலம் கலந்த தமிங்கிலமாய் இழிந்து கொண்டும் இருக்கிறது. இதில் களையெடுக்கக் குரல் கொடுக்காமல், சோதியில் கலக்க வேண்டுமா? பெரும் பிரித்தானியாவில் வெல்சு மொழியும் கெய்ல் மொழியும் அழிந்து போனது ஏனென்று தெரியுமா? இப்படிச் சோதியில் கரைந்து தான். அனைத்திந்திய நாடுகள் ஒன்றியத்தின் படி, அழிந்து கொண்டிருக்கிற மொழிகளில் தமிழும் ஒன்றென்று தெரியுமா? களையெடுத்தால் தமிழ் நிற்கும். ஒருவேளை பிழைக்கும். இல்லையென்றால் ஆங்கிலம் என்ற பெருங் கடலுள் அமிழ்ந்து போகும். தமிழைத் தமிழரே பயன்படுத்தாமல் சீண்டுவாரற்றுப் போகும்.

>"ஸ்,ஷ்,ஜ் ஹ் " போன்ற எழுத்துருக்கள் வடமொழியில் உள்ள ஒலி ஒட்டி தமிழில் பயன்படுத்த
>அமைக்கப்பட்டவை. வடமொழியின் மேல் கோபம்கொண்டு அவற்றைப் புறக்கணிப்பது மொழிவளர்ச்சிக்கு
>குந்தகம் விளைவிக்கும்செயல்கள். அப்படி மாற்றப்பட்ட தமிழைப் படிக்கும்போது உணவில் கல் கடித்தமாதிரி
>கூசுகிறது.

இங்கும் வரலாறு தெரியாமல் பேசுகிறீர்கள். ஸ்,ஷ்,ஜ்,ஹ் போன்ற எழுத்துக்கள் தமிழில் பயன்படுத்த அமைக்கப் பட்டவை அல்ல. கிரந்தம் என்ற எழுத்து (வடமொழியைக் கல்வெட்டில் கீர்வதற்காகத் தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டது கிரந்தம். கீர்ந்தம்>கிரந்தம்) எப்படி இந்துசுத்தானி என்ற மொழி நகரி எழுத்திலும், அரபி எழுத்திலும் ஒரே நேரத்தில் எழுதப்பட்டதோ, எப்படி பாகத மொழி பெருமி எழுத்திலும், காரோத்தி எழுத்திலும் ஒரே நேரத்தில் எழுதப் பட்டதோ, அதே போல வடமொழி (அதை வளர்த்ததில் தமிழருக்கு பெரும்பங்கு உண்டு என்பதை நான் மறவாதவன். இன்றைக்கு அறியப்படும் வேதங்களுக்கான உரைகளில் பலவும் நம் பக்கத்தில் இருந்து எழுதப் பட்டவை தான்.) எழுதுவதற்கு இரண்டு எழுத்துக்கள் இருந்தன. ஒன்று நகரி, இன்னொன்று கிரந்தம். கிரந்தம் பிறந்தது தமிழ்நாட்டில் தான் (குறிப்பாக காஞ்சிக்கு அருகிலும், தென் சேரலமும் ஆகும்.) கிரந்தத்தின் அடித்தளம் தமிழ் எழுத்தே. செருமானிய எழுத்து உரோமன் எழுத்தில் இருந்து பிறந்தது தான்; ஆனாலும் சிறிது வேறுபட்டது. ருமேனிய எழுத்து உரோமன் எழுத்தில் இருந்து பிறந்தது தான். ஆனால் யாரும் செருமானிய எழுத்தையோ, ருமேனிய எழுத்தையோ ஆங்கிலம், பிரஞ்சு, இத்தாலியன் எழுதப் பயன்படுத்துங்கள் என்று சொல்லுவதில்லை.

அதே போல தமிழில் இருந்து கிரந்தம் பிறந்ததனால் கிரந்த எழுத்தைத் தமிழ் எழுதப் பயன் படுத்துங்கள் என்று சொல்லாதீர்கள் என்று சொல்லுகிறோம். இது தவறா? அப்படி எழுதப் புகுந்து தான் மலையாளம் பிறந்தது. மலையாள எழுத்திற்கும், கிரந்த எழுத்திற்கும் மிக மிகக் குறுகிய வேறுபாடே உண்டு. மலையாளம் தமிழில் இருந்து பிரிந்து நிலைத்துப் போனதற்கு கிரந்த எழுத்தில் நம்பூதிரிகள் எழுதத் தொடங்கியதே பெருங் காரணம். இந்த எழுத்து மாற்றத்தை மட்டும் சேரமான் பெருமாள்கள் ஆதரித்து இல்லாது இருப்பின், சேரலப் பேச்சு ஒரு வட்டாரத் தமிழாகவே இருந்திருக்கும். நம்முடைய இரா.முருகன் ஒரு மலையாளக் கவிதையைத் தமிழெழுத்தில் எழுதி இடும் போது நமக்கு அது ஏதோ நெருங்கியது போல் தோற்றி ஒரு வட்டாரத் தமிழாய்ப் பாதி புரிவதை எண்ணிப் பார்த்தால் நான் சொல்லுவதை உணர முடியும்.

தமிழில் மட்டுமே 40 ஒலியன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஒலியனுக்கும் ஓர் எழுத்து என்று தமிழில் கிடையாது. ஒரு சொல்லில் வரும் எழுத்து "அதன் உருவம், அந்த எழுத்து சொல்லின் முதலில் வருகிறதா, சொல்லின் இடையில் வருகிறதா, சொல்லின் கடையில் வருகிறதா" என்பதைப் பொறுத்து ஒலிக்கப் படுகிறது. காட்டாக நெஞ்சம் என்று சொல்லும் போது சகரம் ஜ என்று தான் ஒலிக்கப் படுகிறது. மற்ற இந்திய மொழிகளில் இப்படிக் கிடையாது. எழுத்தின் உருவம் எதோ அதைப் பொறுத்து அந்த எழுத்து அந்த மொழிகளில் ஒலிக்கப் படுகிறது. நீங்கள் சொல்லுவது போல கிரந்த எழுத்துக்களைப் புழங்கலாம் என்று சொன்னால், தமிழ் மொழியின் அடிப்படையையே மாற்ற வேண்டி ஆகிறது. நெஞ்சம் என்ற சொல்லை நென்ஜம் என்றே அப்புறம் எழுத வேண்டும். இதே போல ஸாட்சி, அவுஹ என்றெல்லாம் எழுத வேண்டும். அப்புறம் இன்னும் சிலர் f வேண்டும் என்பார்கள். "பக்கம் என்று ஏன் எழுத வேண்டும்? க்க என்ற ஒலிக்குத் தக்க கிரந்தத்தில் உள்ள இரண்டாம் க- வைப் புழங்கலாமே?" என்று ஒருவர் சொல்லத் தொடங்குவார். "தங்கம் என்ற சொல்லைப் பலுக்கும் படி எழுத, மூன்றாம் க -வைப் புழங்கலாமே?" என்பார் மூன்றாமவர் "இப்படி எல்லாம் செய்தால் தான் பலுக்கிறாற் போல் எழுதலாம். அப்படித்தான் வடமொழி இருக்கிறது" என்று மடிமேல் கைவைப்பார்கள்; இப்படி ஒருவழியாய் வால் நீண்டு கடைசியில் 33 எழுத்துக்கள் பற்றாது, 51 ஆக வேண்டும் என்று வந்து நிற்கும். அப்படி நிலை கொண்டால், உங்களுக்கும் உணவு செல்லும் போது கல் கடித்த மாதிரிக் கூசாது.

என்ன, சப்பானியருக்கு றகரம் நுழையாமல் கிலிஸ்துவென்று தான் இருக்கிறது, அவருக்குக் கூசவில்லை; தெலுங்குக் காரருக்கு மெய்யெழுத்திலேயே முடிக்காமல் உகரத்தில் முடித்தால் தான் சரியென்று இருக்கும், அவர் பாட்டுக்கு உகரம் இழுத்து முடிப்பார், ஆனாலும் கூசவில்லை; பல வடக்கத்திக்காரருக்கு ஸகரத்தில் தொடங்க வராமல் இஸ்கூல் என்று தான் வருகிறது, அவர்களுக்குக் கூசவில்லை; வெள்ளைக்காரனுக்கு தூத்துக்குடி என்று வராமல், டுட்டுக்கோரின் என்று தான் வருகிறது, அவனுக்குக் கூசவில்லை; தென்பாண்டியில் உள்ள கிழவிக்கு ராசா என்று தான் வருகிறது, அவளுக்குக் கூசவில்லை; றோராந்தோ என்றுதான் ஈழத்தாருக்கு வருகிறது, அவர்களுக்குக் கூசவில்லை; ஆனால் நமக்கு இராசாசி என்று எழுதினால் கூசி விடுகிறது; என்னத்தைச் சொல்ல? நாம் மட்டும் உலகத்தில் உள்ள அத்தனை ஒலிகளையும் பலுக்கும் போது தவறில்லாமல் பலுக்குவதற்கு வகையாய் தமிழில் இன்னும் ஒரு 30, 40 குறியீடுகளைக் கொண்டுவரவேண்டும் என்று இந்து நாளிதழுக்கு மடல் எழுதிப் போடலாம். ஆக இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்ட கதைதான். (முதலாழ்வார்கள் கதை சட்டென்று நினைவிற்கு வருகிறது; ஓர் இடைகழியில் ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க என்று உள்ள இடத்தில், நாலாமவருக்கு எங்கே இடம்? ஆனாலும் அவன் விண்ணவன்; உள்ளே நுழைவான். நம்மால் முடியுமோ?)

இவ்வளவு சரவற்படுவதற்கு ஒரு எளிதான யோசனை இருக்கிறது; பேசாமல் எல்லாத் தமிழர்களும் முதலமைச்சர் அம்மாவிற்கு ஓரொரு மடல் எழுதிப் போட்டு "அம்மா, நாளையில் இருந்து தமிழை உரோமன் எழுத்தில் எழுதுவதற்கு, இல்லையெனில் இன்னும் சிறப்பாய் ஒலியனியலில் உள்ள குறியீட்டின் படி குழப்பம் இல்லாமல் ஒரொலிக்கு ஓரெழுத்து வீதம் எழுதும்படி, அரசாணையிடுங்கள்" என்று சொல்லலாம். அவர் செய்தார் என்று
வைத்துக் கொள்ளுங்கள் அப்புறம் தன்மொழியாக்கம், பன்மொழியாக்கம் என்ற குப்பையெல்லாம் வேண்டாம். தமிங்கிலம், தமிழ் என்ற பிரிவு வேண்டாம். வடமொழி ஊடுறுவல் என்று கூக்குரலிட வேண்டாம். நீங்களும் இப்படிப் பரிந்துரைத்திருக்க வேண்டியதே இல்லை.

தமிழர்கள் எல்லோரும் அந்த மாற்றத்தின் மூலம் உருப்பட்டு விடுவோம். கூடவே தமிழில் வெளியாயிருக்கும் இலக்கியங்களை எழுத்துப் பெயர்ப்பு செய்துவிட்டு, மூலங்களை இந்திய மாக்கடலில் தூக்கி எறிந்து தலைமுழுகி நீர் வார்த்துப் பிண்டம் கொடுத்து நீத்தார் கடன் செய்து விடலாம்.

>வடமொழி பேச்சுவழக்கில் இருந்து இல்லாமல்போனது வரலாறு. தமிழ் பேச்சுவழக்கில் வல்லினம் மெல்லினம்
>ழகரம் போன்ற சிறப்பினை இழந்து காயம்பட்டுக் கிடக்கிறது. மீட்டெடுப்போம் அதை. என்றோ
>நிகழ்ந்ததாக கூறப்படும் திருட்டுக்கு இப்போது இதுதான் மாற்று.
>வந்தனம் சொல்லி,
>அரவக்கோன்

அன்புடன்,
இராம.கி.

15 comments:

Anonymous said...

கொஞ்சம் காரமாக இருக்கிறது:)
வேண்டியதுதான்.

செந்தில் குமார் இராமச்சந்திரன் / Senthil Kumar Ramachandran said...

சுவையான பதிவு

கீச்சா பூச்சா said...

தூள் மாமே தூள்!!

தமிழ் இசை என்று அழைக்க வேண்டும் தென்னிசை என்று அழைக்கிறவன் நாக்கைப் பிடுங்கனும்.

திராவிடமும் மண்ணும். தமிழ் என்று தன்மானத்துடன் கூறவேண்டும். தமிழிய மொழிகள், தமிழி எழுத்துரு போன்றவற்றை நாங்கள் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும். இராமகி சொன்னதுபோல் நம்பூரிகள் செய்த கூத்தால் நாம சேரநாட்டுத் தமிழை இழந்து நிற்கின்றோம். உலகாளவரிய ரீதியில் தமிழன்தான் இசையை முதலில் கண்டுபிடித்து பல முன்னேற்றத்தைக் கண்டது. தமிழன் யாழ்தான் உலகமெங்கும் பரவியிருந்தது. தமிழ்நாட்டில் ஒரு பெண் வயலின் போன்ற இசைக்கருவியை ஏந்தி நிற்கும் பழமையான புதைபொருளை எப்பவோ கண்டுபிடித்துள்ளனர். அப்படிப்பல உண்மைகள் புதைந்து இருக்கின்றது.

சும்மா விட்டால் தமிழன் வந்தேறுகுடி என்று சொல்வார்கள்.

நண்பர் இராமகி, தமிழ்மொழி ஆட்சி மொழியாக வந்தால் தமிழன் ஆதிவாசியாகி விடுவான் என்று தமிழகத்தைச் சேர்ந்த தெலுங்கு நண்பர் ஒருவர் கூறுகிறார்...
http://www.unarvukal.com/forum/index.php?s=&showtopic=2710&view=findpost&p=17731

உந்த சூட்டோடு சூட்டா இந்த ஆள் சொன்னவற்றை வாசித்து உங்கள் வலைப்பூவில் காரசாரமாக ஒரு பதிவு ஒன்று போடுங்க புண்ணியமாகப் போகும்.

அந்தாள் சொல்லுது, ஆங்கிலம் இன்றித் தமிழ் தனித்து நிற்க மாட்டுதாம்.. ஏதோ ஆங்கிலம் தமிழின் ஊன்றுகோல் என்ற கணக்கில் பேசுகிறார். சகலகலாவல்லவன் நீங்கள்தான் இந்தாளைக் கொஞ்சம் நுள்ளனும். :-)

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவர், செந்தில், மற்றும் கீச்சா பூச்சா ஆகியோருக்கு,

உங்கள் வரவிற்கும் கருத்துகளுக்கும் நன்றி.

அன்புடன்,
இராம.கி.

விறகுவெட்டி said...

"காட்டாக நெஞ்சம் என்று சொல்லும் போது சகரம் ஜ என்று தான் ஒலிக்கப் படுகிறது. மற்ற இந்திய மொழிகளில் இப்படிக் கிடையாது"

அருமையான விளக்கம் இராமகி! :D

அஞ்சாத சிங்கம் said...

//(வடமொழியைக் கல்வெட்டில் கீர்வதற்காகத் தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டது கிரந்தம். கீர்ந்தம்>கிரந்தம்)//

முற்றிலும் உண்மை

//(வடமொழியைக் கல்வெட்டில் கீர்வதற்காகத் தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டது கிரந்தம். கீர்ந்தம்>கிரந்தம்)//

தமிழர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு அய்யா :-(

நற்கீரன் said...

எனக்குள் இருந்த பல கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தன. நன்றி.

தமிழ்ச் சூழலில் தோன்றிய கிரந்தம் எழுத்துக்களை ஏன் தவிர்க்க வேண்டும்?

f ஒலி தரும் ஒரு எழுத்தை சேர்த்தால் என்ன?

தமிழ் ஒரு ஒலியன் சார் மொழி என்பது சரியா?

தமிழ் மொழியின் சிறப்பே அதன் தொடர்ச்சியில்தான் உண்டு. தமிழை சீர்திருதுகின்றோம் என்று எண்ணி அந்த தொடர்ச்சியை குலைத்துவிடாமல் இருக்கும்படி அறிவுறித்தியிருக்கின்றீர்கள்.

தமிழையும், பிற மொழிகளையும், தொழிநுட்பத்தையும் நன்கு புரிந்தவரின் அறிவுரை என்பதால் அதை பலரும் மதித்து செயற்படுவர் என்பது என் அவா.

Anonymous said...

நுட்பியல் என்று இராம். கி. தொழில்நுட்பத்தைச் சொல்லுகிறார். நுட்பியல் என்று எழுதுவோம். அவர் பரிந்துரை மிகவும் பொருத்தமானதாகும். நுட்பம் -technique, நுட்பியல்-technology.

Anonymous said...

இருக்கிற மொழியையும், எழுத்தையும் ஒழுங்காக படிக்க
தெரியாதவர்கள்தான் f காணோம், j காணோம்
என்று உளறுகிறார்கள்.

Bharateeyamodernprince said...

//சும்மா விட்டால் தமிழன் வந்தேறுகுடி என்று சொல்வார்கள். // கீச்சா பூச்சா சொன்னது இது.

வந்தேறுகுடி என்றால் கேவலமா? தமிழ்நாட்டில் பரவலாக உள்ள தெலுங்கர்கள், தஞ்சாவூரில் மராட்டியர், குடந்தை, மதுரையில் சௌராஷ்டிரர், சென்னை, கோவையில் மலையாளிகள், மாநிலத்தில் பரவலாக உள்ள உருது பேசும் முஸ்லீம்கள்....மற்றும் மார்வாடிகள், ராஜஸ்தானிகள் போன்றோரையெல்லாம்தான் நீங்கள் வந்தேறுகுடி என்று சொல்கிறீர்களா?

மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும், இலங்கையில் உள்ள சில பகுதிகளில் தமிழர்களும் வந்தேறுகுடிகள் என்று உங்கள் அகராதியில் பொருள்படுவார்களா? விளக்கம் தேவை.

'வந்தேறுகுடி' என்று யார் யாரைச் சொன்னாலும், சொன்னவன் தன்னம்பிக்கையற்றவன் என்றேதான் நான் புரிந்துகொள்கிறேன். `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உயரிய மனித நேயக் கொள்கையைக் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகள் சுமுகமாக வாழ்ந்த நம்மிடம் அவ்வப்போது தோன்றும் இதுபோன்ற exclusivist சிந்தனைகளுக்காக வருத்தப்படுகிறேன்.

Bharateeyamodernprince said...

நல்ல பதிவு. உங்கள் தமிழ் உணர்வு பாராட்டுக்குறியது.

கோவி.கண்ணன் [GK] said...

இராமகி ஐயா,

http://solorusol.blogspot.com/2007/01/026.html

இந்த பதிவை படித்து நீங்கள் விளக்கம் சொல்ல வேண்டும் தானம் என்பது வடசொல்லா தமிழ் சொல்லா ? கொடைக்கு பதிலாக பயன்படுத்த முடியுமா ?
*************
தானம் என்ற வடச்சொல் தமிழில் ஒரு இடைச்சொருகல் சங்க கால இலக்கியம் எதிலும் இல்லை திருகுறள் உட்பட, அதற்கு திருக்குறளில் கூட பலகுறள்கள் இருக்கின்றன

கொடை வள்ளல் - கொடுப்பவர், அளிப்பவர் என்றாலும் அது ஒரே பொருள்தான். உடல் உறுப்புக்களை காசுக்கு விற்பவர்களைப் பற்றி நாம் சொல்லவில்லை இருக்கும் இரண்டில் ஒன்றைக் கொடுப்பவற்றைத்தான் கொடை என்கிறோம்.

கேட்பவருக்கு கொடுப்பது ஈகை, ஈதல் (பிச்சை), கேட்காமல் அறிந்து தன்னிடம் உள்ளவற்றை கொடுத்து உதவுதல் கொடை. கர்ணன் ஒரு கொடை வள்ளல் ஏனென்றால் தன்னிடம் உள்ளவற்றை கொடை உள்ளத்தால் மகிழ்வுடன் கொடுத்தான். முல்லைக்கு தேர்கொடுத்த பாரி ஒரு கொடை வள்ளல் அதுவும் கேட்காமல் கொடுத்தது.

தானமும் கொடையும் வேறென்றால் தமிழ் இலக்கியத்தில் தானத்தைப் பற்றி பேசவில்லை என்று எஸ்கே ஐயாவின் விளக்கத்தின் மூலம் தெரிகிறது.

இராமகி ஐயாவின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

ஆரூரன் said...

///பரம் என்பது மேடை என்று தஞ்சை ப. அருளியார் அருமையாக விளக்குவார்.
பரத்தில் ஆடுவது பரத்தாட்டம்>பரத்தம்) வடமொழிப் பலுக்கலில் பரதம் ஆனவுடன், இவர்கள் முகம் தெரியாமற் போனார்களே என்ற பொருளில் தான் கட்டுரையாளரின் அங்கலாய்ப்பு இருந்தது. இதைச் சொல்வது எப்படித் தவறாகும்?///

இராமகி ஐயா அவர்களே

உங்களின் விளக்கத்துக்கு நன்றி. பரதமுனிவர்க்கும் பரதநாட்டியம் என்று இன்றழைக்கப்படும் தமிழர்களின் சதிராட்டத்துக்கும் பரத முனிவர்க்கும் தொடர்பு கிடையாது என்று நான் சொல்லியபோது தமிழர்களே சண்டடைக்கு வந்து வவிட்டார்கள்.

அன்புடன்
ஆரூரன்

Anonymous said...

"மெய் பொருள் காண்பது அறிவு"-என்றான் வள்ளுவப் பாட்டன். காட்டியதற்கு நன்றி.மேலும் நல்வழி காட்டுங்க ள்

Arun said...

தகவற்கள் நிறைந்த மிகவும் அருமையான, காரமாண பதிவு.

தங்கள் வலைப்பூவை நான் இப்பொழுதுதான் கண்டுகொண்டுள்ளேன். தமிழ் phonetic engineering (ஒலியியல்?) நிறைந்த ஒரு மொழி என்று தோன்றியதிலிருந்து இப்படி ஒரு பதிவை நான் காணாதது/தேடாதது எனது பிழையே.

"பக்கம் என்று ஏன் எழுத வேண்டும்? க்க என்ற ஒலிக்குத் தக்க கிரந்தத்தில் உள்ள இரண்டாம் க- வைப் புழங்கலாமே?"
தமிழில் கிரந்தத்தில் உள்ள இரண்டாம் க ’க்ஹ’ என்ற ஒலி இருக்கிறது என்று அறிவது எனக்கு மிகவும் ஆனந்தமாய் இருக்கிறது (பலநாள் தேடலின் பயன்). ஒரு வேண்டுகோள். எங்கெங்கெல்லாம் ’க’ வானது ’க்ஹ’ என ஒலிக்கும் (இசைக்கும்?) என்று விளக்க இயலுமா? அதே விதிதான் ச - ச்ஹ, மற்றும் பிற வல்லின ஒலிகளுக்கும் பொருந்தும் என நம்புகிறேன்.

நன்றிகள்!
அருண்