Saturday, December 23, 2006

பாலையும் பண்ணும்

இங்கு சென்னையில் சனவரி 5 -ல் இருந்து, 16 வரை பொத்தகக் கண்காட்சி நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் தவறாது கலந்து கொண்டு பொத்தகம் வாங்கும் பழக்கம் எனக்கு உண்டு. 2001- ல் நடந்த கண்காட்சியில் National Book Trust விரித்திருந்த கடையில் "மூலிகைகள்" என்ற பொத்தகத்தைப் பார்த்து, "நமக்குத் தான் இயற்கை அறிவு குறைத்து இருக்கிறதே, இதை வாங்கிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்" என்று வாங்கினேன். புரட்டிப் பார்த்த போதுதான் 'சுண்ணம் வாங்கப் போய் சொக்கத் தங்கம் வாங்கியிருக்கிறேன்' என்று புரிந்தது..

அதில் இருந்து ஒரு செய்தி.
---------------------------------------------------------------
பாலை (Chhatim)
விஞ்ஞானப் பெயர்: அல்ஸ்டோ னியா ஸ்கோலரிஸ் (Alstonia Scholaris (L) Br.)
குடும்பம்: அபோசயினேசி

மலையாளம்: பால
தெலுங்கு: பாலைக்
கன்னடம்: மத்தாலே
மராத்தி: சாத்வின், சைத்தான்
ஒரியா: சாதியானா
வங்காளி: சாத்திரம்
அஸ்ஸாமி: சாயிதென்
இந்தி: சாதின்
சமஸ்கிருதம்: ஸப்தபர்ணா

பாலையின் வணிகப் பெயர், பெருவழக்கிலான இந்தியப் பெயரைக் கொண்டது. இதன் சமஸ்கிருதப் பெயர் "ஒரு சுற்றில் 7 இலைகளைக் கொண்டது" என்ற பொருள்படும்.

விளக்கம்:

25மீ. உயரம் வரை வளரக் கூடிய இம்மரம் எப்போதும் பசுமையாக இருக்கும்; கசப்பான பாலைக் கொண்டது. மரப்பட்டை கடினமானது; கருஞ்சாம்பல் நிறம் உடையது. கிளைகள் வட்ட அடுக்காய் இருக்கும். மரத்தின் அடிப்பாகம் முட்டுக் கொடுக்கப் பட்டிருக்கும். இலைகள் 4 - 7 வரை வட்ட அடுக்காகவும், 10-20 செ.மீ. நீளத்தில் தோல் போன்றும் காணப்படும். பூக்கள் சிறியதாக, பசுமை கலந்த வெள்ளை நிறத்தில், நறுமணம் மிகுந்து, பல பூக்களையுடைய கொத்துக்களாய் இருக்கும். பழங்கள் மிகவும் நீளமாகவும் (30-60 செ.மீ) குறுகியும், ஒடுங்கியும் காணப்படும். அவை இணை இணையாகத் தொங்குவதுடன் அடர்த்தியான கொத்துக்களையும் அமைத்துக் கொள்ளூம்.

விளையும் இடம்:

இம்மரம் இந்தியா முழுவதும் ஈரப்பசை அதிகமான இடங்களில் காணப்படுகிறது.

மருத்துவப்பண்புகள்:

சாத்திம் (Chhatim) என்பது இம்மரத்தின் உலர்ந்த பட்டையாகும். இம்மருந்து நாட்பட்ட வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றிற்கு உடனடியாகக் குணமளிக்காக் கூடியது. இது மற்ற மருந்துகளைப் போலன்றி மலேரியா காய்ச்சலைப் படிப்படியாக, வியர்வையோ, சோர்வோ ஏற்படாமல் குறைக்கிறது. இம்மருந்து தோல் வியாதிக்கும் ஏற்றது.

இம்மருந்து இயங்கு நரம்புகளைத் தாக்கி வாதத்தையும், பின்பு இரத்தக் கொதிப்பையும் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. சில பரிசோதனைகள் இம்மருந்தின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலியக்க வினைகளையும் மறுத்துப் பேசுகின்றன.

மற்ற பயன்கள்:

இந்த மரமானது மட்ட ரகமான மரச் சாமான்கள் செய்யவும், கட்டுமானப் பெட்டிகள் செய்யவும், தேயிலை டப்பாக்கள், பென்சில், தீக்குச்சிகள் செய்யவும் பயன்படுகிறது. முன்னாட்களில் இது மர சிலேட்டுகள் செய்யவும் பயன்பட்டது. இதனால் இது ஸ்காலரிஸ் (Scholaris) என்ற சிறப்புப் பெயரால் வழங்கப் பட்டது.
--------------------------------------------------------

மேலே உள்ளதைப் படித்தால், இதைப் போய் சொக்கத் தங்கம் என்று சொல்லுகிறேனே என்று தோன்றும். காரணம் இருக்கிறது; அன்பர்கள் பொறுக்க வேண்டும். விளக்குகிறேன்.

மரத்தின் பெயர்க்காரணங்கள் பலவகைகளில் ஏற்படலாம். வெள்ளைக் காரன் சிலேட்டுப் பலகையின் பயனால் இந்த மரத்திற்குப் பெயர் வைத்தது ஒரு வகை. ஏழு இலைகள் கொண்டது என்ற பெயரில் வடமொழியிலும், வட இந்திய மொழிகளிலும் பெயரிட்டது இன்னொரு வகை. மரத்தில் வரும் (கசப்பான) பாலின் பொருட்டுத் தமிழன் பெயரிட்டது மேலும் ஒரு வகை. (இந்தக் கன்னட 'மத்தாலே' எப்படி வந்தது என்று தான் புரியவில்லை.) மரத்தில் பூ, காய், பழங்களைக் காட்டிலும் இலைகளே எடுப்பாக இருக்கின்றன. எனவே இந்த இலைகளும், அதன் வட்டமான சுற்றுக் கட்டும், அதை ஒடித்தால் காம்பின் அடியில் இருந்து வரும் பாலும் தான் மனக் கண்ணில் தைத்திருக்க வேண்டும்; அதனாலே இந்த மாதிரிப் பெயர்கள் எழுந்திருக்க வேண்டும். நான் சொக்கத் தங்கம் என்றது. ஏழு இலைகளுக்கும், பாலுக்கும் நடுவில் உள்ள செய்திகளின் உள்ளடக்கம் பற்றியே. இதைப் பற்றி அறிய தமிழிசையைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

தமிழிசையின் அடிப்படை நரம்புகள்

குரல் (இன்றையக் குறியீடு - ச),
துத்தம் (ரி),
கைக்கிளை(க),
உழை (ம),
இளி (ப),
விளரி (த),
தாரம் (நி)..

இதில் துத்தம், கைக்கிளை, உழை, விளரி, தாரம் என்ற ஐந்து சுரங்கள் மெலிந்தும், வலிந்தும் ஒலிக்கக் கூடியவை. இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மொத்த அடிப்படைச் சுரங்கள் (நரம்புகள்) 12

ச, ரி1, ரி2, க1, க2, ம1, ம2, ப, த1, த2, நி1, நி2

இந்தப் பன்னிரு நரம்புகளில் 7 நரம்புகள் கொண்டு பண்ணப் படுவது பெரும்பண் எனப்படும். வெறும் ஆறு நரம்புடையன பண்ணியல் எனப்படும். இதே போல ஐந்து நரம்பின, திறம் எனப்படும்; நாலு நரம்பின, திறத்திறம் எனப்படும். தமிழிசையில் இருக்கிற எல்லாப் பண்களுமே 4-ல் இருந்து 7 சுரங்கள் கொண்டவையே. பண்களைச் சங்க காலத்தில் பாலையென்றும் அழைத்தார்கள். இந்தக் காலத்தில் இராகம் என்று அழைக்கிறோம். (அரங்க நாதன் இரங்க நாதன் ஆனது போல, அரத்தம் இரத்தம் ஆனது போல, அராகம் என்ற சொல்லைத்தான் இராகம் என்று தவறாக அழைக்கிறோம்.) அந்தக் காலத்தில் குறிப்பிட்ட பண்களை இசைக்க வேண்டி, விதப்பான (specific) யாழ்களையே (குறிப்பிட்ட தடிமன் (thickness), நீளம், இறுக்கம் (tension) கொண்ட கம்பிகளைச் சேர்த்துச்) செய்தனர். ஒவ்வொரு யாழிலும் ஒரு சில பண்களை மட்டுமே இசைக்க முடியும். நாளாவட்டத்தில் அளவு மிகுந்த பண்களை இசைக்க எண்ணி இன்னும் வளர்ச்சியுற்ற செங்கோட்டு யாழ் (இந்தக் காலத்து வீணை, வீள்>வீளை>வீணை, விண் என்று தெரிக்கும் கம்பி கொண்ட இசைக் கருவி), கோட்டு யாழ் (இந்தக் காலத்து கோட்டு வாத்தியம், இசைக்கலைஞர் இரவிக்கிரணால் சித்ரவீணா என்று வடமொழிப்பெயர் சூட்டப்பட்ட கருவி) சீறியாழ் (somewhat resembling mandolin),பேரியாழ் போன்றவற்றைச் செய்தனர்.

தமிழ் இசையைப் பற்றி அறிய, சங்கம் மருவிய காலத்தில் சிலப்பதிகாரத்திற்கும் பின்னே எழுந்த, சேறை அறிவனார் இயற்றிய, பஞ்ச மரபு இசை நூலைப் படிக்க வேண்டும். இதை அருட்செல்வர் நா.மகாலிங்கத்தின் உதவியுடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் 1993-ல் வெளியிட்டிருக்கிறார்கள். இசைக்கலைச் செல்வர் முனைவர் வீ.ப.கா. சுந்தரனார் இந்த நூலுக்கு நீண்ட விரிவுரை எழுதியிருக்கிறார். இந்த உரையில் குறிப்பிட்ட சில யாழ்கள் (பண்கள்) இவை:

முல்லையாழ் - செம்பாலை - அரிகாம்போதி - கார்-மாலை
ச ரி2 க2 ம1 ப த2 நி1
குறிஞ்சியாழ் - படுமலைபாலை - நடபைரவி - கூதிர்-யாமம் -
ச ரி2 க1 ம1 ப த1 நி1
நெய்தல்யாழ் - செவ்வழிப்பாலை - இருமத்திமத் தோடி - மாலை -
ச ரி1 க1 ம1 ம2 த1 நி1
பாலையாழ் - அரும்பாலை - சங்கராபரணம் - வேனில் -மதியம் -
ச ரி2 க2 ம1 ப த2 நி2
மருதயாழ் - கோடிப்பலை - கரகரப்பிரியா - முன்பனி -காலை -
ச ரி2 க1 ம1 ப த2 நி1
நெய்தல்யாழ் - விளரிப்பாலை - தோடி - மாலை -
ச ரி1 க1 ம1 ப த1 நி1
குரல்புணர் நல்யாழ் - மேற்செம்பாலை - கல்யாணி - இளவேனில் -
ச ரி2 க2 ம2 ப த2 நி2

இங்கே பாலையாழ் என்பது பாலை நிலத்திற்கு உரியது; வேனிற்காலத்திற்கும், நண்பகல் நேரத்திற்கும் உரியது என்று புரிகிறது. ஆனால், செம் பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப் பாலை, அரும் பாலை, கோடிப் பாலை, விளரிப் பாலை, மேற்செம் பாலை என்று எழுதும் போது வரும் பாலை என்ற சொல் எப்படிப் பிறந்தது என்று தான் புரியாமல் இருந்தது. முனைவர் வீ.ப. கா. சுந்தரம் சுரங்களைக் கொண்டு பகுக்கப் பட்ட இசை, எனவே பகல் > பால்> பாலை என்று எழுந்ததாகச் சொற்பிறப்புக் கூறுவார். அது எனக்குப் பல காலமாய் நெருடலாகவே இருந்தது.

மேலே இந்த மூலிகைகள் பொத்தகத்தைப் படித்தவுடன் தான், சொக்கத் தங்கத்தைக் கண்டிருக்கிறோம் என்று விளங்கியது. மறுபடியும் மேலே படியுங்கள்; பாலை மரத்தில் இலைகள் 4-க்குக் குறையாமல் இருந்து 7 -க்கு மிகாமல் இருக்குமாம். தமிழ் இசைப் பண்களிலும், சுரங்கள் 4 - ல் இருந்து 7 -க்குள் தான் இருக்கும்; வடமொழியிலும், வட இந்திய மொழிகளிலும் 7 (சுற்றிற்கு 7 வரிசை) என்பதை ஒட்டியே மரத்திற்குப் பெயரிட்டிருப்பதையும் பார்க்க வேண்டும். இந்த மரத்தின் இலைக் கட்டு வட்டமாக இருக்கும் என்பது போல, பண்களிலும் வட்டமாகச் சுரங்களை பெய்து பண்ணைப் பெயர்த்து எழுதுவதற்கு வட்டப் பாலை முறை என்றே பெயர். இது போல ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை என்றும் மேலும் சில முறைகள் உண்டு. மொத்தத்தில் 15,456 பண்கள் உண்டு என வீ.ப.கா.சுந்தரம் சொல்லுவார். (இந்த எண்கணக்கை ஆய்ந்து பார்க்க முயன்றுகொண்டிருக்கிறேன். இன்னும் புரியவில்லை.)

சங்க காலம், அதற்கு முந்திய காலங்களில் வாழ்ந்த தமிழனின் பார்வை மிக நுணுக்கமாக இருந்திருக்கிறது. இயற்கையைக் கூர்ந்து நோக்கியே தமிழன் இசையை எழுப்பியிருக்கிறான் என்பது பலருக்கும் தெரிந்த கதை. கூடவே, பாலை என்ற பொதுப் பெயரும் கூட இயற்கையில் இருந்து, ஒப்பீட்டு முறையில், அவன் செய்த இசைப் பண்களுக்கும் இடப்பட்டிருக்கலாமோ என்று இப்பொழுது தோன்றுகிறது. இன்னும் எத்தனை வியப்பான செய்திகளை நாம் தேட வேண்டும்? நம் இயற்கையறிவு இன்னும் கூட வேண்டும் என்பதை உணருகிறேன். பாலை மரத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா? அதற்கு வேறு ஏதாவது பெயர் இந்தக் காலத்தில் உண்டா?

அன்புடன்,
இராம.கி.

12 comments:

சுந்தரவடிவேல் said...

பாலை மரத்தைப் பயன்படுத்தி இசைக்கருவிகளைச் செய்திருக்கலாம் (low density wood!), அதனாலும் பாலைப் பண் என்று பெயர் வந்திருக்கலாம், இல்லையா?
எங்கள் ஊரில் பாலை மரம் ஒன்று இருக்கிறது. பால் வரும். மரத்தை, இலையை இவ்வளவு நுணுக்கமாகப் பார்த்ததில்லை. அந்தப் பழம் மஞ்சள் நிறம். சிறியது. நாவைக் கவ்விப் பிடிக்கிற
துவர்ப்பும், இனிப்புமாய் இருக்கும்.
நன்றி.

சோமி said...

நல்லதொரு பதிவு. இவ்வாறான நூல்களைப் பற்றி தொடர்ந்தும் எழுதுங்கள் பயனுடையதாக இருக்கும்.

வசந்தன்(Vasanthan) said...

நாங்கள் பாலை என்று சொல்லும் மரத்துக்கும் நீங்கள் குறிப்பிட்ட மரத்துக்கும் வித்தியாமுள்ளது போல் தெரிகிறது.
சுந்தரவடிவேல் சொல்லும் பாலை தான் நாம் அறிந்த பாலை.
நல்ல உயரமாகவும் விசாலமாகவும் வளரும். கரும்பச்சை இலைகள். இலைகள் சற்றே சுருண்டிருக்கும். மிக வைரமான மரம். நீங்கள் சொல்வதுபோல் தீக்குச்சி, டப்பாக்கள், பெட்டிகள் எதுவும் செய்யமுடியாது. வீடுகளுக்குரிய தீராந்திகள்தாம் பாலையிலிருந்து செய்யக்கூடிய / செய்யப்படும் பொருட்கள். மிகப்பாரமான மரம். பாலை மரப்பலகை ஒப்பீட்டளவில் மற்றமரங்களை விட அதிக சிவப்புத்தன்மை கொண்டது.

சிறிய மஞ்சள் நிறப்பழங்கள். இனிமையானவை அதேநேரம் அதில்வழியும் பால் வாயில் ஒட்டும்.
ஈழத்தில் வன்னியில் பெருமளவாக நிற்கிறது இம்மரம். ஆவணி மாதத்தையொட்டி பழுக்கும்.
பாலைப்பழம் பற்றி ஏற்கனவே வலைப்பதிவில் கதைக்கப்பட்ட ஞாபகம். குழைக்காட்டான் அல்லது ஈழநாதன் படங்களுடன் பதிவிட்டிருந்தார்கள். தேடிப்பார்க்கிறேன்.
________________________________
நீங்கள் சொல்லும் பாலை, நாங்கள் அறிந்த பாலையில்லையென்றே படுகிறது. சுந்தரவடிவேலர் சொல்வதும் உங்கள் பாலையிலிருந்து வித்தியாசப்படுகிறதே? 30-60 செ.மீ நீளமான பழங்கள் இதில் வருவதில்லை. நான் பார்த்தளவில் 'கொண்டல்' தான் இந்தளவு நீளக்காய்களைக் கொண்டிருக்கும் மரம்.

வசந்தன்(Vasanthan) said...

குழைக்காட்டான் வெளியிட்ட பாலைமரத்தின் இலைகள்

பாலைமரம்-தூரப்பார்வையில்
பாலைப்பழம்தான் கிடைக்கவில்லை. குழைக்காட்டானின் வலைப்பதிவைப் பார்க்க முடியவில்லை.

Anonymous said...

வசந்தன் சொல்வதும் சு.வ சொல்வதும் வேறு என்று நினைக்கிறேன். வன்னியில் உள்ள பாலை சு.வ சொல்வது போல low density wood இல்லை.

ஆனால் இலங்கையில் ஈரவலயக்காடுகளில் ஏழிலைப்பாலை என்னும் மரம் இருப்பதாக சமூகக்கல்வி பாடத்தில் படித்த ஞாபகம். இது தீக்குச்சி கள்ளிப்பெட்டி செய்வதற்கு ஏற்றது.

கூகிளில் தேடியபோது படம் கிடைத்தது. சுட்டி:
http://www.bsienvis.org/medi.htm#Alstonia%20scholaris

Tam: Elilaipillai, Mukumpalei, Pala, Wedrase;

வசந்தன்(Vasanthan) said...

சு.வ சொன்ன பழத்தை வைத்துத்தான் நான் சொல்வதும் அவர் சொல்வதும் ஒரே பாலையாக இருக்குமென்று நினைத்தேன்.
நான் சொன்ன பாலை low density wood அன்று.
சு.வ பார்த்த பாலை low density wood வகைதானா என்று விளங்கவில்லை. ஏனென்றால் அவர் கருவி செய்வது தொடர்பாகச் சொல்லும்போதுதான் low density wood என்று சொல்கிறார்.
//ஆனால் இலங்கையில் ஈரவலயக்காடுகளில் ஏழிலைப்பாலை என்னும் மரம் இருப்பதாக சமூகக்கல்வி பாடத்தில் படித்த ஞாபகம். இது தீக்குச்சி கள்ளிப்பெட்டி செய்வதற்கு ஏற்றது. //
என்னமா ஞாபகம் வைச்சிருக்கிறியள்? எனக்கு இப்பிடியொண்டு படிச்ச ஞாபகமேயில்லை ;-(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இராம.கி அண்ணா!
நல்ல கட்டுரை!
நானும் வசந்தன் கூறுவதுபோல் தான் பாலை மரத்தைக் கண்டுள்ளேன். இதன் பழம் மிக இனிமையானது. அவரை விதை அளவு இருக்கும்;மஞ்சள் நிறம்;விதைகள் கறுப்பு.கரடியும் பிரியமாக உண்ணும்.
யோகன் பாரிஸ்

பாலைப்பழம் said...

நண்பர் இராமகி,

யானும் தேடினேன்... தேடினேன்... தேடிக் களைத்துவிட்டேன்.

நீங்கள் கூறும் பாலையைப் பெயரிலும் உயரத்திலும், மரத்தின் பட்டை போன்றவற்றிலும் ஒத்ததுதான் ஈழத்தில் வளரும் பாலைமரம்.

நீங்கள் கூறும் பாலையின் பூவை ஒத்ததுதான் ஈழத்தில் உள்ள கிழாத்தி மரத்தின் பூ

நீங்கள் கூறும் பாலையின் காயின் வடிவத்தையும் நீளத்தையும் ஒத்ததுதான் கொனண்டல் காய், இது கொன்றை மரத்தின் காய்.

மருந்துக்கு ஈழத்தில் பிரபலமான மரப்பட்டை வேப்பம் பட்டை (இது வேம்பு மரத்தின் பட்டை).

பாலைபற்றிய படத்துடன் ஒரு தொடுப்பைக் கண்டுபிடித்தேன்.. அதைப் பார்த்து அந்தப் பாலையின் மந்திரத்தில் இருந்து நீங்கள் விடுபட கிறித்மத்து நாளான இன்று உங்களுக்காகக் கனடாக் கடுங்குளிரில் வேண்டுகிறேன்...

என்றும் அன்புடன், குளிருடன் நடுங்கும் நண்பர் பாலைப்பழம் :-'(

பாலைப்பழம் said...

கொனண்டல் காய் தவறு
கொண்டல் காய் என்பதே சரி

பாலைபற்றிய தொடுப்புகள்

http://botanical.com/botanical/mgmh/a/alsto028.html

http://www.stuartxchange.org/Dita.html

Anonymous said...

//வசந்தன் சொல்வதும் சு.வ சொல்வதும் வேறு என்று நினைக்கிறேன். வன்னியில் உள்ள பாலை சு.வ சொல்வது போல low density wood இல்லை.

ஆனால் இலங்கையில் ஈரவலயக்காடுகளில் ஏழிலைப்பாலை என்னும் மரம் இருப்பதாக சமூகக்கல்வி பாடத்தில் படித்த ஞாபகம். இது தீக்குச்சி கள்ளிப்பெட்டி செய்வதற்கு ஏற்றது.

கூகிளில் தேடியபோது படம் கிடைத்தது. சுட்டி:
http://www.bsienvis.org/medi.htm#Alstonia%20scholaris

Tam: Elilaipillai, Mukumpalei, Pala, Wedrase;
//
ஏழிலைப்பாலை - ஸப்தபர்ணா சரியாக பொருந்துகிறது.

குழலி / Kuzhali said...

சிங்கப்பூர் பொங்குதமிழ் பண்ணிசை மணி மன்றத்தின் சார்பில் நடந்த தமிழிசை விழாவில் இது குறித்து கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ மற்றும் திருமதி.மீனாட்சி சபாபதி அவர்கள் இது மாதிரியான தகவல்களை கூறினார்கள், இன்று உங்கள் பதிவில் படிக்கும் போது இன்னும் நிறைய தகவல்கள் கிடத்துள்ளன.

நன்றி

அருண் said...

வன்னியில் இருக்கும் பாலைமரம்.

ஆங்கிலேயர் "Ceylon Steel" என்று குறிப்பிட்டதாகவும் கூறுவர். இம்மரத்தின் பலகையில் இரயில் பாதைகளின் சிலிப்பர் கட்டைகளுக்கு பயன்படுத்துவர். பலவருங்கள் (நூற்றாண்டுகள்) உக்கிப்போகாமல் தாக்குப்பிடிப்பவைகள். அநேகமாக எமது பாடசாலை கிராந்திகளுக்கு இப்பலகையே பயன்படுத்தப்பட்டது.