Friday, December 08, 2006

தமிழிசை - ஒரு பார்வை - 1

கீழே வருவது இரண்டாண்டுகளுக்கு முன் 6/12/2004ல் தமிழிசை பற்றி அரையர் காப்பிக் குழும்பில் (Raayar kaapi Club)திரு நாகராஜனுக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட உரையாடல். இதைப் பகுதிகளாகப் பிரித்து இங்கு தருகிறேன். படித்துப் பாருங்கள்.

அன்புடன்,
இராம.கி.

----------------------------------------------------------------
சபைக்கு வந்தனம்,

சங்கர மடத்து விவகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. நான் இதில் சொல்ல ஏதும் இல்லை. "பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்" என்பது பழமொழி.

நான் பகிர்ந்துகொள்ள விரும்புவது வேறு. உப்பு சப்பில்லாதது. "புதிய பார்வை" டிசம்பர் 1-15-2004 இதழ் பார்த்தேன். தமிழிசை சிறப்பிதழ் என்று அறிவிப்பு அட்டையிலேயே ஒலித்தது. அது பற்றின கட்டுரைகள், விவாதங்கள், நேர்காணல் என்று படித்தேன். அதன்பின் என் மனதில் எழுந்த சில ஐயங்கள், வினாக்கள், கருத்துக்கள் பற்றி பேசுகிறேன்.

முதலில் தலையங்கம்.

'முகம் மறந்த தமிழர்கள்' என்று உள்ளே நாம் படிக்கவிருப்பது எந்த தொனியில் இருக்கப்போகிறது என்பதை கோடி காட்டும் முகமன் அது. அதில் " தஞ்சை மும்மூர்த்திகளான முத்துத் தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசலக் கவிராயர்" என்ற குறிப்பு வருகிறது. அவர்கள் மூவரும் சீர்காழியில் பிறந்தவர்கள் இல்லையோ?

அடுத்தது, "சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நடன மரபான 'சதிரை' பரதமாக்கி சதிர்க் கலைஞர்களை'காணாமல் போகச் செய்தது" மாதிரி எத்தனை இழப்புக்கள்?" என்று ஒரு குற்றச்சாட்டு.

சதிர் என்னும் பெயரில் அந்த நாட்களில் பொலிவிழந்து, செல்வந்தர்களின் உல்லாசத்துக்காக மட்டும் ஆடப்பட்ட விரசம் மிகுந்த நடனம் திருமதி ருக்மிணி அருண்டேல் மூலம் வேறு தளத்துக்கு கொணரப் பட்டதும் அப்போது நிகழ்ந்த வாத விவாதங்களும் வெகு பிரசித்தம்.

நா.மம்மது அவர்கள் 'தமிழிசை மரபு மறக்கடிக்கப்பட்டுவிட்டது' என்னும் தலைப்பில் பல விவரங்களைச் சொல்கிறார்.

"நம் தமிழ் மண் களப்பிரர், பல்லவர், நாயகர், மராட்டியர், இசுலாமியர், ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர் என்று அன்னியரின் ஆட்சிக்கு உட்பட்ட காலங்கள் பலப்பல" என்று படிக்கும்போது கொஞ்சம் சுருதி பிசகுவதுபோல இருக்கிறது. இசுலாமியர், ஆங்கிலேயர், பிரஞ்சுகாரர் நமது நாட்டை ஆக்கிரமித்த வேற்று தேசத்தவர், அன்னியர் உண்மைதான். ஆனால் பல்லவரும், களப்பிரரும், நாயகரும், மராட்டியரும் கூடவா அன்னியர்கள்? இவர்கள் மொழி தமிழ் இல்லை என்பதை ஒப்புக்கொண்டாலும் அன்னியர்களாக எப்படி அடையாளம் காட்டப்படுகிறார்கள்?

மராட்டியர், நாயக்கர் தமிழ் மண்ணில் ஆண்டபோது இசையின் தமிழ் வடிவை அழித்து தெலுங்கு வடமொழியை அந்த இடத்தில் இருத்தினார்கள் என்று ஒரு பார்வையை முன்வைக்கிறார். வரலாறு அப்படியா சொல்கிறது? தமிழ் நிலத்தின் இசையை, நடனத்தை போற்றி அன்னியர் சிதைகாமல் பாதுகாத்து பிந்தைய சந்ததிகளுக்குக் கொடுத்ததாகவே படித்த நினைவு. அந்த காலத்தில் தமிழுக்கு அரச சபையில் கிடைத்த இடம் என்ன? மும் மூர்த்திகளின் பாடல்களை அவர்களது சீடர்கள் பாதுகாத்து தமது சீடர்களுக்குக் கொடுத்ததுபோல சீகாழி மூவர்களின் பாடல்களை ஏன் அவரது சீடர்கள் பிரபலமாக்கவில்லை? கர்நாடகத்தில், கேரளத்தில் என்று அரசர்களால் சிறப்புப் பெற்ற தமிழ் கலைஞர்கள் எத்தனைபேர்? அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது பழமொழி. திட்டமிட்டுத் தமிழை அழித்ததாக சொல்வது எந்தமட்டில் சரி?

அடுத்தது மொழிப் பற்று (வெறி என்றும் சொல்லலாம்). தமிழில் வேற்றுமொழிக் கலப்பு கூடாது என்னும் கட்டுப்பாட்டுடன் எழுதுவது. இங்கு ராஜாஜி இராசாசி ஆகிவிடுகிறார் ஆனால் ஜி.என்.பி அப்படியே இருக்கிறார் சி.என்.பி ஆகவில்லை. வடமொழிச் சொல்லான " ஸ்வரம்" என்பதனை சுரம் என்று குறிப்பிடுகிறார். ஒரு வேளை 'சுரம்' என்பதுதான் 'ஸ்வரம்' ஆகிவிட்டது என்கிறாரோ என்னமோ?

"சுரத்தின் வன்மை மென்மை என்ற பாகுபாட்டைக் குறிக்க நிறை, குறை என்றோ கோமளம், தீவிரம் என்றோதான் பெயரிடுவார்கள்" என்பதில் கோமளம், தீவிரம் இரண்டும் வடமொழிச் சொற்கள் ஆயிற்றே? அப்புறம் ஆரோகணம் ஆராகணம் ஆகிவிடுகிறது. 'மணிப்பிரவாளம் மணிபவளமாக மாறிவிடுகிறது. இவர் குறிப்பிடும் பல்லவர் காலத்தில்தான் அப்பரும் சம்பந்தரும் தமிழிசையில் சைவம் பரப்பினார்கள். மன்னனின் ஒப்புதல் இல்லாமல் இது நிகழ்ந்திருக்க முடியுமா?

தூயதமிழ் பாடல்கள் என்பது இருக்கமுடியுமா என்பதுமெனது ஐயம். " சிவபெருமான் கிருபை வேண்டும்" 'சுந்தரி சௌந்தரி நிரந்தரியே' என்று இவர்குறிப்பிடும் பாடல்களில் வடமொழி சொற்கள் நம்மை விழித்துப் பார்க்கின்றனவே? இன்னும் எத்தனை எத்தனையோ தமிழ்பாடல்களில் வேற்று மொழிக் கலப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆபிரகாம் பண்டிதரின் " கர்ணாமிரத சாகரம்" என்பதே வடமொழி தலைப்புத் தானே? தமிழ் இசைபற்றின ஒரு நூலிற்கு அவர் ஏன் வடமொழி தலைப்பு வைத்தார்?

"நம் முன்னோர் கண்ட பண்களின் தமிழ் பெயர்கள் எல்லாம் திட்டமிட்டேவஞ்சகமாக அழித்து ஒழிக்கப் பட்டன; சிதைக்கப்பட்டன" என்று யாரை குற்றம் சாட்டுகிறார் என்பது பற்றின விளக்கம் இல்லை.

இதில் எனக்குக் கிடைக்கும் செய்தி கட்டுரை ஆசிரியருக்கு வடமொழியின்பாற் இருக்கும் வெறுப்பும் தமிழின்பாற் வெளிப்படும் எல்லைகடந்த பாசமும். ஆனால் இன்று தமிழ்நிலத்தில் தமிழ் இளைய தலைமுறையினரிடம் படும் பாடு இவருக்குத் தெரியாதா? இந்த அவல நிலைக்கு யாரைக் காரணம் காட்டுவார்? தமிழை, இசையை இன்று நமது ஊடகங்கள் சின்னாபின்னம் செய்வதை என்ன சொல்வது? இதற்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா இவரிடம்?

"தனித் தமிழ் இயக்கம், தன்மான இயக்கம், தமிழிசை இயக்கம், பவளவிழா காணவேண்டிய காலத்தில் ஓர் தேய்வு நிலையை நீர்த்துப் போன நிலையை அடைந்து வருகிறது. இந்தத் தளர்ச்சியை மீட்டெடுத்து மறுமலர்ச்சி காண தலைவர்களையும் சான்றோர்களையும் தொண்டர்களையும் மீண்டும் தமிழகம் காணுமா?" என்று முடிகிறது கட்டுரை. இன்றைய தமிழ் நிலத்தில் இதெல்லாம் இவர்களால் நிகழுமா?

"என்றென்றும் வாழும் தமிழிசை" இது ப.சோழநாடன் கட்டுரை

'தமிழிசையின் சிறப்பு' 'ஏழிசை' என்பதாக தலைப்புக்களிட்டு கட்டுரையை தருகிறார். பெரும்பாலும் விவரங்களையே கொடுக்கும் இதிலும் வேற்றுமொழி (குறிப்பாக வடமொழி) வெறுப்பு அடிநாதமாக இருக்கிறது.

முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் நேர்காணலிலும் "கர்நாடக இசை என்பதே தமிழிசைதான்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சி. அண்ணாமலையின் கேள்விகள் மூலம் நமக்குப் பல விவரங்கள் கிடைக்கின்றன. இசை பற்றின முனைவரின் பார்வை, இன்றைய இசையின் நிலை, என்று அவை விரிகின்றன. தமிழிசைக்கு நாடகம் அளித்த பங்கு பற்றியும் பல செய்திகள் தெரிய வருகின்றன.

'தமிழ் பாடல்' வேறு, 'தமிழிசை' வேறு. இரண்டையும் தனித்தனியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்னும் கருத்தை முனைவர் முன்வைக்கிறார். தற்போது தமிழிசை தென்னிந்திய மொழிகளின் பாடல்களையும் உள்ளடக்கிய 'கருநாடக இசை'யாக வழங்கப்படுகிறது" என்று இவர் சொல்லும் கருத்துக்கு நா.மம்மது என்ன பதில் சொல்வார் என்று தெரியவில்லை.

இது தொடர்பாக ஒரு வினாவை நான் சபை முன் வைக்க விரும்புகிறேன்.

தமிழ்ப் பாடல்கள் அல்லது இன்று சொல்வது போல கர்நாடக இசைநிகழ்ச்சிகளில் பாடப்பெறும் மற்றமொழிப் பாடல்கள் அனைத்திலும் விரவியிருப்பது இறைவனைப் போற்றுதலும் அவனிடம் இரைஞ்சுவதும் தான். அத்தகைய தமிழ்ப் பாடல்களிலும் எண்ணற்ற வேற்றுமொழி சொற்கள். இறைவன் இல்லை என்னும் கொள்கையை பின்பற்றுபவர்களும் வேற்றுமொழியின் பால் வெறுப்பு காட்டும் தலைவர்களும் தமிழ் இசையை மீட்டுத் தர என்ன செய்யப் போகிறார்கள்? இவர்களிடம் ஏதேனும் மாற்று ஏற்பாடு உள்ளதா?

மீண்டும் வந்தனம் சொல்லி,
அரவக்கோன்

---------------------------------
என் மறுமொழி அடுத்த பதிவில்.

அன்புடன்,
இராம.கி.

7 comments:

சுந்தரவடிவேல் said...

பதிலை எதிர் நோக்குகிறேன்!

ஜீவா (Jeeva Venkataraman) said...

//அனைத்திலும் விரவியிருப்பது இறைவனைப் போற்றுதலும் அவனிடம் இரைஞ்சுவதும் தான்//
அதற்கு மொழி அவசியம் என்றாலும், தாய் மொழி மிக மிக ஏதுவாக இருந்தாலும் - ஒரு நிலைக்கு பிறகு மொழியைக் கடந்து, இசையைக் கடந்து, ஏன் அனைத்தையும் கடக்க செய்யும் இறைவனின் மாண்புதான் என்னே என்று வியக்காமல் இருக்க இயலவில்லை.

இராம.கி said...

அன்பிற்குரிய சுந்தர வடிவேல்,

இந்த உரையாடலைப் படிந்தபின் முடிவுப் பகுதியில் என்னுடைய கொள்முடிபையும் சொல்லுகிறேன்.

அன்பிற்குரிய ஜீவா,

இறைவனின் மாண்பு பற்றி இங்கு பேசவில்லையே! அது வேறு ஒரு புலனம்; பாடும் போது தமிழில் பாடலாகாதா என்ற எதிர்பார்ப்பு அல்லவா பேசப் படுகிறது? தமிழ்நாட்டில் தமிழில் பாட என்ன தயக்கம்? இரண்டு மணிநேர நிகழ்ச்சியில் அது என்ன கொசுறாகத் தமிழ்ப் பாட்டு? 1 மணி நேரமாவது தமிழில் பாட வேண்டாமா? இடையிடையே மற்ற மொழிச் சீர்த்தனைகளைப் பாடட்டுமே? குறைந்து போகாதே?

அன்புடன்,
இராம.கி.

ஜீவா (Jeeva Venkataraman) said...

ஐயா,

தமிழில் பாடாலாகாது என்று எவரேனும் கூறினால் - அது வன்மையாய் கண்டிக்கப்பட வேண்டியது. மற்றபடி அவரவர்  புலமைக்கு ஏற்றார்போல் மொழியினை தேர்வு செய்து கொள்ளட்டுமே. 

இப்போதெல்லாம் ரசிகர்கள் எந்த மொழி பாடல்களை விரும்பிக் கேட்கிறார்கள் என்பதற்கேற்றார்போல் பெரிதும் கலைஞர்கள் அவற்றை தேர்வு செய்கிறார்கள்.

கடந்த சில வருடங்களில் தமிழ் பாடல்களை விரும்புவர்களின் ரசனை அதிகரிக்க அவற்றின் பங்களிப்பும் வெகுவாக முன்னேறி இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் டி.என்.சேஷகோபலன் தன் கச்சேரியில் கம்ப ராமயணத்தில் இருந்து 'நாமம் அல்லது கேள்' பாடலை எடுத்து கர்ணாஞ்சலி ராகத்தில் பாடினார்.

மேலும் தமிழில் கீர்த்தனைகள் நிறைய இயற்றப்பட வேண்டும். பாபநாசம் சிவன் மற்றும் தூரன் போன்றோர்கள் வேண்டும். பண்டைக் காவியப் பாடல்களுக்கு பண் ஏற்றப்பட வேண்டும்.

முழுமையாக தமிழ்ப்பாடல்களை கொண்ட கச்சேரிகள் சிறப்புக் கச்சேரிகளாக மட்டும் அல்லாமல் நடைமுறையாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

Pradeep said...

ஐயா உங்கள் பதிவுகளை படித்தேன்.... கோடி நன்றிகள்

Pradeep said...

அய்யா திருவாரூரில் பிறந்தும் ஏன் இசை மும்மூர்த்திகள் தெலுங்கில் பாடினர்?

Raju said...

purindu kolla sattru kadinamaga ulladu...miga periya oru vishayathai patri eludum podu anaivarukkum purivadu pola padaikalamey...nandri.

rajeshjothi.wordpress.com