என்னைத் தூக்கி அந்த நீண்ட தடுக்கில் (stretcher) வைத்து, நகர்த்தி மின்னெழுவைக்குக் (lift) கொண்டு போன போதே முகம் மேல் நோக்கிப் பார்த்தவாறே இருந்தேன்.
"இந்தாய்யா, உன்னையே சரணாகுதின்னு அடைஞ்சு ரொம்ப நாளாச்சு; எல்லாத்தையும் நீ பார்த்துக்குவேன்னு தெரியும். நல்லா முடிச்சுக் கொண்டாந்து சேரு. சேரு என்ன சேப்பே."
அப்புறம் மேலே நாலாவது மாடியில் பண்டுவ அரங்கிற்குள் (operation theatre) கொண்டு போகு முன்னால் ஓரமாய் பத்தியில் (verandah) நகர்தடுக்கை (moving stretcher) சார்த்தி வைத்து ஒரு மார்வின் (morphin) ஊசி போட்டார்கள். அதற்குள் ஏதோ ஒரு அவக்கர கட்டாம் (emergency case); அவக்கு, அவக்கு என்று இன்னொருவரை நகர்த்திக் கொண்டு வந்து என்னைத் தள்ளிவைத்து, அவரை உள்ளே கொண்டு போய் விட்டார்கள். அந்தப் பண்டுவம் (operation) முடிய 2 1/2 - 3 மணி நேரம் ஆகியிருக்கிறது. அப்புறம் மருத்துவர்கள் (doctors), பண்டுவர்கள் (surgeans), செவிலியர்கள் (nurses) ஆகியோர் சாப்பிட்டு ஓய்வெடுத்து, என்னை உள்ளே கொண்டு போன போது பகல் 1 மணி ஆகியிருக்கிறதாம்.
இதற்கிடையில் சுணக்கம் (delay) கருதி இரண்டாவது மார்வின் ஊசியை எப்போதோ கொடுத்திருக்கிறார்கள். நான் சட்டென்று தூங்கிப் போனேன். எப்போது பண்டுவம் தொடங்கினார்கள், எப்படி மயக்கம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு ஐந்து மணி நேரம் கழித்துப் பண்டுவம் முடிந்திருக்கிறது. அப்புறம் என்னை ஈர்க் கவனிப்பு அறைக்குக் (intensive care unit; ஈர்த்த கவனிப்பு - ஈடுபாடு மிகுந்த கவனிப்பு) கொண்டு போயிருக்கிறார்கள்.
முழிப்பு வந்த கதையை அல்லவா சொல்ல வேண்டும்?
திடீரென்று மூடிக் கிடந்த இமைக்கும் வெளியே மங்கலான வெளிச்சம் இருப்பது திரைக்கு நடுவில் கசிவது போல் தெரிந்தது. இமைகளைத் திறக்க முயல்கிறேன். அழிச்சாட்டியம் பண்ணுகிறது.
"ஊகும்", ஒன்றும் நடக்கவில்லை.
"சரி, வலது கை விரல்களை மூடி வத்திருக்கிறேனே, அவற்றைத் திறக்கலாம்" என்று பார்க்கிறேன். வெளிமனத்தில் இருந்து கட்டளை போய் திறக்கச் சொல்லுவதை ஆழ்மனத்தின் வழி உணருகிறேன்.
"ஊகும்", செயன்மை ஒருங்கிழந்து கிடப்பதை உணர முடிகிறது.
என் மன வலிமை எல்லாவற்றையும் ஒருங்கு சேர்த்து, அந்த விரல்களை விரியச் செய்வதில் ஒன்று படுத்திப் பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் ஓர் ஒருங்கின்மை (in-co-ordination).
இப்பொழுது தலையை அசைக்க முடிகிறதா என்று பார்க்கிறேன். தலை சிறிது சிறிதாக மேலும் கீழும் அசைகிறது. என்னால் அசைக்க முடிகிறது என்பதே பெரிய நிறைவாயிற்று.
அடுத்துப் பக்கவாட்டில் அசைப்பு; அதிலும் கெலிப்பு.
அடுத்தடுத்து, தலை மேலும், கீழுமாய், இடதும், வலதுமாய் அசைக்கத் தொடங்கினேன். என்னால் செய்யமுடியும் என்று தோன்றியது.
இப்பொழுது மீண்டும் வலது கைவிரல்களின் மேல் எண்ணவோட்டத்தைச் செறியவைத்து விரிக்கப் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்து விட்டன.
இமைகள் இன்னும் திறந்தன.
இத்தனையையும் நான் செய்வதை அங்கு இருந்து ஒரு செவிலி பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். கொஞ்சம் வாய்விட்டுச் சிரிக்கவும் செய்திருக்கிறார்.
ஓரிரு நுணுத்தங்கள் போய், தொண்டையைக் கணைத்து, "இப்பொழுது எத்தனை மணி?" என்றேன். நுணுக்கமாய் என் விளையாட்டைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த செவிலி "இராத்திரி பத்தே முக்கால்; அது என்னய்யா, அவ்வளவு அசைப்பும் ஆட்டமும்; எல்லோருக்கும் நடப்பது தானே! கொஞ்ச நேரத்தில் தானாய் விழிக்கத்தானே செய்யணும். உங்களுக்காக கீழே யார் வந்திருக்காங்க?"
"என் தம்பி"
யாரோ ஆளை அனுப்பி அவனைக் கூட்டிவந்தார். அவன் அருகே வந்து செய்கையாலே "நலமாய் இருக்கிறீர்களா?" என்றான்.
"எத்தனை மணிக்கு வந்தே?"
"எட்டு மணிக்கே வந்துவிட்டேன். மற்றவர்களெல்லாம் ஒன்பது மணிக்குத் தான் போனார்கள்"
அப்புறம் அவனை அங்கிருந்து நகரச் சொல்லி விட்டார்கள். நான் மீண்டும் அயரத் தொடங்கினேன்.
"இந்த உடம்பு என்ற ஒன்று என்னுடைய மனத்தின் கட்டையும் மீறி நிற்கும்" என்று அறிவது கொஞ்சம் திகைக்க வைக்கும் உணர்வு.
இந்த உடம்பு என்பதை நாம் உணருகின்ற நிலை அரிதிலும் அரிதான ஒரு பட்டறிவு.
என் கைவிரல்களை விரிப்பதற்கு விடாது முயன்றேன் பாருங்கள், அப்பொழுது தான் மெய் உணர்ந்தேன். (மெய் = உடம்பு; அது உண்மையும் கூட). அதைச் சொற்களால் விவரிக்க முடியாது.
இதற்கு முன்னால் என்றைக்கு என் உடம்பை உணர்ந்திருக்கிறேன், என்று எண்ணிப் பார்க்கிறேன்; ஒன்று கூட நினைவிற்கு வரவில்லை.
மெய் இருக்கிறது என்று அறிவது வேறு; உணருவது என்பது வேறு. திருமூலர் தெரியாமல் சொல்லவில்லை.
"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே
உடம்பினை முன்னம் அழுக்கு என்று இருந்தேன்;
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்;
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே!"
- திருமந்திரம் 717, 718 ம் பாடல்கள்.
"அய்யா, பெருமாளே, எனக்குப் புரியவச்சே பாரு, இனி உடம்பை ஓம்புவேன்."
அன்புடன்,
இராம.கி.
11 comments:
உங்கள் மெய்யுணர்தலை விட தமிழ் சொல்லுணர்தல் என்னைக் கவர்ந்தது.
மெய் நிலையற்றது என்று சொன்னாலும், மெய் இல்லாது இங்கு வாழ முடியா. தாங்கள் பண்டுவத்துக்குப் பின்னர் நலமா? பண்டுவம் என்பதின் வேர்ச்சொல் விளக்கத்தைத் தர முடியுமா? நன்றி நண்பரே.
அன்பு இராமகி,
கற்புக்கரசி என்னும் திரைப்படத்தில் வரும் பாட்டு:
"காயமே இது மெய்யடா
இதில் கண்ணும் கருத்தையும் வையடா
நோயும் நொடியும் வராமல்
நுட்பமாக உண்ணடா..."
கண்ணும் கருத்தையும் மெய்யில் ஒன்று சேர்த்து வைத்தால் கிட்டுவது மெய்யுணர்வு.
இனி கொஞ்சம் உணவுப் பழக்கத்தில் நுட்பமாக இருந்து மெய்யை ஓம்பிப் பல்லாண்டு நலமுடன் வாழ்க.
கடைசியில் என்ன ஆபரேஷன் என சொல்லவேயில்லையே.
என்ன ஆபரேஷனாக இருந்தாலும் தாங்கள் சீக்கிரம் நலம் பெறவும் நீண்ட ஆரோக்கியமான வாழ்வை பெறவும் ப்ரார்த்திக்றேன்
ஐயா, உங்களின் சிரமத்தினிடையே பெற்ற அருமையான அனுபவத்தையும் ஆன்மீகத் தேடலையும் நன்கு சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
பூரண நலம் பெற்று உங்களின் எழுத்துப் பணியையும் தொடரவேண்டும். வாழ்த்துக்கள்.
அன்பிற்குரிய ஆத்மன்,
வந்து போய்க் கொண்டிருங்கள். ஏராளமான சொற்களை உணரமுடியும். கூடவே அவற்றைப் புழங்குங்கள்.
அன்பிற்குரிய குமரிப் படை,
பண்டுவம் என்பது திருநெல்வேலி மாவட்ட வழக்குச் சொல். அது உடலை ஒட்டி எழுந்த ஒரு சொல். விவரமாகப் பின்னால் எழுதுகிறேன்.
அன்பிற்குரிய ஞான வெட்டியான்,
உணவுப் பழக்கத்தில் கவனம் வைப்பேன், நண்பரே!
அன்பிற்குரிய கால்கரி சிவா,
முன்னால் போய் "புழம்பரின் மேல் ஒரு புழம்பு வேலை" என்ற இடுகையைப் படியுங்கள். தங்கள் பரவுதலுக்கு நன்றி
அன்பிற்குரிய செல்வராஜ்,
தங்கள் கனிவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி.
அன்புடன்,
இராம.கி.
ஐயா. நல்ல பதிவு. விரைவில் நீங்கள் நலம் பெறவேண்டும் என்று வேண்டுகிறேன்.
நண்ப!
மிகவும் வருத்தம்.
எனக்கும் இதே பட்டறிவு..குடலில்.
மீண்டுவிடுவோம்.
இலக்கு நம்மை நோக்கி.
நாம் இலக்கை முன்னிட்டு.
வாழ்க!
எஞ்ஞான்றும் அன்புடன்,
தேவமைந்தன்
பண்டுவம் என்று புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் எங்கள் ஊரிலும் சொல்வார்கள். பொதுவாக, குழந்தைகள், முதியவர்களை கவனித்துக் கொள்வதை அவர்களுக்குப் பண்டுவம் பார்ப்பது என்பார்கள்.
நீங்கள் குணமடைந்து மீண்டும் எழுதத் தொடங்கி இருப்பது கண்டு மகிழ்ச்சி. உங்கள் புழம்பர் இடுகையை படித்த பிறகு இப்ப தான் உங்க வலைப்பதிவுக்கு வர்றேன்
ஐயா,
உங்கள் உடல்நிலை நன்கு தேறி வழக்கமான பணிகளை ஆரம்பித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஒரு உதவி வேண்டும்.
PostgreSQL என்பது திறவூற்று முறையில் கிடைக்கும் தரவுத்தளம். அதை தமிழிலும் மொழிபெயர்க்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்ய வசதியாக ஒரு நல்ல தமிழ்ப் பெயர் சூட்டினால் நன்றாக இருக்கும்.
ஒரு பொருளின் பெயராக இருப்பதால், அதே உச்சரிப்பில், தமிழ்ப்படுத்தப்பட்ட, தமிழில் பொருத்தமான பொருள்படக்கூடிய பெயராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று படுகிறது.
ஒரு நல்ல பெயரை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
:)
Post a Comment