இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒரு வியாழக் கிழமை காலை, கைபேசியில் கிணுகிணு என்ற ஒலி.
அந்தப் பக்கம் சிங்கை மணியம்; "அய்யா, எப்படியிருக்கிங்க, எப்பச் சிங்கையிலேர்ந்து வந்தீங்க?"
அவர் நேரடியாக விதயத்திற்கு வந்துவிட்டார்:"வரும் செப்டம்பர் 2 ல், 16 மடைக் குறியேற்றம் பற்றி ஒரு நாள் கருத்தரங்கு சென்னையில் நடக்க இருக்கிறது, நீங்கள் உறுதியாய்ப் பங்காற்ற வேண்டும்".
அவருடைய அழைப்பிற்கு மறுப்புச் சொல்ல இயலாது. சரி என்று சொன்னேன். அடுத்த நாள் நாக. இளங்கோவனிடம் இருந்தும் ஒரு மின்னஞ்சல்: "நீங்கள் வருவீர்கள் தானே?". அதற்குச் சில நுணுத்தங்களில், பேரா. பொன்னவைக்கோவிடம் இருந்து ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மின்னஞ்சலும், அதனோடு இணைத்த பேரா. வ.செ.குழந்தைசாமியின் அழைப்பும் கிடைத்தன.
"சரி, இந்த நாள் எங்கும் போகமுடியாது; முழுதும் மாட்டிக் கொண்டேன்" என்று நினைத்தேன். "கருத்தரங்க நிகழ்வுகள் எல்லாம் எவ்வளவு பொறும்?" என்று ஒருபக்கம் இருந்தாலும், "போய்த்தான் பார்ப்போமே! கூடவே, கருத்தரங்க வழிநடத்துநர்கள் நேரம் கொடுத்தால் ஏதேனும் அடிப்படையைச் சொல்லலாம்" என்ற எண்ணத்தில், முதல்நாள் இரவு கூட நேரம் விழித்து, "மொழியியற் பார்வையில் தமிழிற்கான 16 மடைக் குறியேற்றம்" என்ற powerpoint பரத்தீட்டை (presentation) உருவாக்கினேன். (பின்னால் "விழலுக்கு இறைத்த நீர்" ஆக அது ஆனது வேறு கதை!)
அழைப்பிதழை ஒழுங்காகப் படிக்காமல், பார்க் செராட்டன் போய், பின்னால் தவறறிந்து, மடிக்கணியைத் துழாவி, தாஜ் கோரமண்டல் என்றறிந்து போய்ச் சேரும் போது, நேரம் 9.42.
ஊகூம்; தொடங்கியிருக்கவில்லை. நேரம் 10.30க்கு அப்புறம் தான் அமைச்சரும் (தயாநிதி மாறன்), மற்றவர்களும் வந்தார்கள். காலை 8 மணிக்கே அங்கு வந்திருந்த அமைச்சர், திடீரென்று ஏதோ வேலையில் உள்ளுரும நுட்பியற் செயலாளருடன் (Secretary for information technology) வெளியே சென்றதாகப் பின்னால் அறிந்தேன்.
மேடையில், மதிப்பிற்குரியவர்கள் அமர்ந்தவுடன், உள்ளுருமச் செயலர் படியகத்தின் (podium) முன்னால் வந்து,
"Would somebody switch on தமிழ்த்தாய் வாழ்த்து please?" என்று சொன்னார்.
மூன்றாம் வரிசையில் இருந்த இளங்கோவும் நானும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோ ம். "நல்ல தொடக்கம் இல்லே? ....படித்த தமிழர்கள் கூடும் போது இப்படித்தான் ஒவ்வொரு முறையும் ஆகிறது. அது ஒரு சடங்கு, நடந்து போகட்டும்". ;-)
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அப்புறம், 95 விழுக்காடு ஆங்கிலத்திலும், 5 விழுக்காடு தமிழிலுமாய் கூட்டம் நடந்து, தொடக்கச் செற்றம் (inaugural session), பொது அரங்கு (Public forum), நுட்பியச் செற்றம் (Technical session), முடிவுத் தொகுப்பு (final consolidation) என இனிது முடிந்தது. மேடையில் எங்குமே தமிழில்லையே என்று யாரோ ஒரு பெரியவர் சொல்லப் போக, பேரா. வ.செ.கு. மிகுந்த சினம் கொண்டார்; "நாங்களும் தமிழின் மேல் பற்றுக் கொண்டவர்கள் தான்; நீங்கள் ஆகவேண்டியதை இங்கு பேசுங்கள்".
காலையில் பொது அரங்கில் தமிழில் கருத்துச் சொன்ன நான், "ஊரோடு ஒத்து வாழ்" என்ற மூதுரையால், நண்பகல் நுட்பியச் செற்றத்தில் ஆங்கிலத்தில் மாறிக் கொண்டேன். (இந்த அம்மணாண்டி/ கோவணாண்டி கதை எனக்கு அப்பப்ப ஞாபகம் வந்து தொலைக்கும். என்ன செய்யுறது?)
என்ன ஆச்சு?
கூட்டம் முடிந்தது.
பிற்பகல் முழுதும் ஒருவரோடு ஒருவர் தனித்த கலந்துரையாடல்கள் (வேறென்ன? அரட்டை). ஒரு நாலுபேர் மட்டும் ஏற்கனவே அடித்து வைத்திருந்த கருத்தரங்கத் தீர்மானங்களின் ஆங்கில வாசகங்களைத் திருத்திக் கொண்டிருந்தார்கள். மாலையில் சிறுபிள்ளைத் தனமான கையெடுப்புக் கணக்குத் தொடர்ந்தது. எல்லாவற்றையும் எண்ணிக் கொண்டு விழுக்காட்டுக்களாக மாற்றிக் கொண்டார்கள். மொத்தத்தில் "போடு, தாயம்" என்ற கணக்கில், பரமபத விளையாட்டில், பெரும்பாம்பு கடித்து பதினறுமக் குறியேற்றம், எழுபத்திரண்டாம் கட்டத்தில் இருந்து, இரண்டாம் கட்டத்திற்கு வந்தாயிற்று. இரண்டு பக்கத்தாருக்கும் ஒரேயடியாக, மகிழ்ச்சி. "எனக்கு ஒரு கண்ணு போச்சின்னா, அவனுக்கு இன்னொரு கண்ணு கிடந்து துடிச்சிக்கட்டுமே".
ஆக, முடிந்து போன நிகழ்ப்புகளை -agendas- மனத்தில் வைத்துக் கொண்டு, அரங்கை ஏற்பாடு செய்தவர்கள், உப்புக்குச் சப்பாணி ஆட்டம் ஆடினார்கள். என்ன சொல்ல முடியும்? நான் பதினறும மடைக் குறியேற்றமான All Character encoding ற்குப் பெருத்த ஆதரவாளனாய் இருந்தும், கருத்தரங்கு நடந்த முறை, எனக்கு 'காமா சோமா' என்று தான் இருந்தது. It left a lot to be desired. வழக்கம் போல, stated positions by everyone concerned. The anti are always anti; and the pros are always pro. There was no acceptance, even about the basic inadequacy of the existing Unicode for Tamil. இப்படி இரண்டு பக்கமும் தங்கள் கருத்துக்களில் இருந்து இம்மி அளவும் நகராமல், எப்படி முன்னேற்றம் வரும்? சரி, இந்த விவரங்களை எல்லாம் விரிவாக எழுதலாம், கூடவே நம் பரத்தீட்டத்தை தமிழ் உலகம் கோப்புப் பகுதியிலாவது சேர்த்து வைப்போம் என்று எண்ணியிருந்தேன்.
ஆனால் நானொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைத்தது.
---------------------------------------------------
இரண்டு ஆண்டுகளாகவே அவ்வப்பொழுது குறிப்புக் காட்டியிருந்தாலும், நெஞ்சும், அரத்த ஓட்டமும் மிரட்டி, உடம்பு சழக்குப் பண்ணிக் கொண்டிருந்தது.
4 ம் தேதி காலையில் மருத்துவர் சிவகடாட்சத்தைப் பார்க்கப் போய், உடம்பு நிலையைச் சொன்னால், அவர் இரண்டே நுணுத்தத்தில், "உனக்கு ரொம்ப மிதப்பைய்யா? எல்லாவற்றையும் உனக்குள்ளே வைத்துக்கொண்டு, சுற்றியிருப்பவர்களிடம் ஏதும் சொல்லாமல் ... "என்று கோவித்துக் கொண்டார். "உடனடியாக, மூன்று சோதனை செய். X கதிர் படம் எடு; எதிரொலிக் குருதயப் படம் (echo cardiac gram) எடு; தோல்பட்டை நடவையில் நடந்து 'எப்படி உனக்கு இளைக்கிறது?' என்று மின் குருதயப் படத்தைப் பார்" என்றார். எல்லாம் நடந்தது. அன்று மாலையே சொல்லிவிட்டார்: "தம்பி, மூணு குழாயிலே 99% அடைப்பு. நீ இருக்கிறதே அவன் செயலாலேப்பா? நாளைக்கே நெஞ்சாங்குலைப் படத்தையும் (angiogram) எடு" என்றார்.
தலையாட்டினேன். மறு நாள் பிற்பகலில் மூன்று பெரிய குருதயக் குழாய்களில் (குருதயம் என்ற சொல்விளக்கத்தை முன்பு ஒரு முறை சொல்லியிருக்கிறேன். கூறியது கூறல் இங்கே வேண்டாம் என்று தவிர்க்கிறேன்.) ஆறு அடைப்பு என்று அறிந்தேன். ஆறில் ஐந்திற்குக் குறுக்கு வழி (bye-pass) ஏற்படுத்தித் தான் அரத்த ஓட்டத்தைக் கூட்ட முடியும் என்றார்கள். பண்டுவர் (surgeon) நரேஷ்குமாரும் (பண்டுவர் என்பது நெல்லை வழக்கு; அறுவை மருத்துவர் என்பது நீர்வீழ்ச்சி மாதிரியான வழக்கு.) அதை உறுதி செய்தார்.
தடுமாறிக் கொண்டிருந்த என்னை மனைவியும், மற்றவர்களும், தொலைதூரத்தில் இருந்த மகன்களுமாய்க் கட்டாயப் படுத்தி சென்ற வியாழக் கிழமையே பண்டுவம் செய்து கொள்ள வைத்தார்கள்.
ICU எல்லாம் முடிந்து, மருத்துவ மனை அறைக்கு வந்த பின்னால், பண்டுவர் நரேஷ் குமாருக்கு நன்றி சொன்னேன்.
"நான் என்ன செய்துட்டேங்க? அஞ்சிடத்திலே plumbing job செய்ஞ்சேன்.(புழம்பு வேலை; தமிழில் புழம்பு என்றால் pipe தான்; பார்த்தீங்களா, மறுபடி நம்ம தமிழின் ஆழம் நமக்கே விளங்கலை.) அவ்வளவு தானே? இப்பவாவது செய்ஞ்சுக் கோணும்னு நீங்க ஒத்துக்குனிங்களே" என்றார்.
"உங்களுக்குத் தெரியுமா? வேதிப் பொறிஞர்களை விளையாட்டாகக் கேலிபண்ணிச் சொல்லும் போது புழம்பர்கள் என்றுதான் சொல்லுவார்கள். ஆக, நம்ம ரெண்டு பேருக்குமே புழம்பு வேலை தான்" - இது நான்.
எப்படியோ புழம்பரின் மேல் ஒரு புழம்பு வேலை நடந்து, நேற்று மாலை வீட்டுக்கு வந்தாயிற்று. இன்றைக்கு இணையத்தில் "உள்ளேன் ஐயா!"
முழு ஆற்றலுக்கு வர ஓரிரு மாதங்கள் ஆகலாம். நேரம் கிடைக்கும் போது சந்திப்போம்.
அன்புடன்,
இராம.கி.
22 comments:
இராம.கி. ஐயா,
நல்லவேளை, நீங்கள் மேலும் தாமதிக்காது இதைச் செய்து முடித்தது. உடனே இணையத்திற்கும் வந்துவிட்டீர்கள் என்பதில் இருந்து உடல்நலன் தேறிவருவதறிந்தும் மகிழ்ச்சி. விரைவில் இன்னும் முழுமையான குணமடைய வாழ்த்துக்கள். இப்போதெல்லாம் ஏதாவது தமிழில் சொல், பொருள், பிற ஐயங்கள் எழும்போது "இராம.கி. ஐயாவின் மின்னஞ்சல் பெற்றுச் சேமித்துக்கொள்ள வேண்டும், மடலிட்டுத் தெளிவடையலாம்" என்றுகூட நான் நினைத்துக்கொள்வதுண்டு. நீங்கள் உடல்நலன் சீரடைந்து மீண்டும் இங்கு இயங்குவது எங்களுக்கெல்லாம் தேவையானது.
நானறிந்தவரையில் பல்வேறுதுறைகளிலும் இப்படிப்பட்ட கருத்தரங்கங்கள் நிறைய ஏற்பாடு செய்யப்படுவதுண்டு நம் ஊரில். ஆனால் அவை சிலநேரங்களில் கேட்பாரின்றியோ, செயல்முறைக்குத் தூண்டாத வெறும் சபதங்கள் என்ற அளவிலோ பயனற்றுப் போய்விடுவதும் நிகழ்கின்றன என நினைக்கிறேன்.
அய்யா,
உடல் நலனை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். விரைவில் பூரண குணம் அடைய வாழ்த்தும்
அருண்மொழி.
கேள்விப்பட்டேன் மடல் அனுப்ப நினைத்திருந்தேன்
அது குறித்து நீங்களே விபரமாக போட்டு விட்டீர்கள்!நலமடைந்தது அறிந்து மகிழ்ச்சி .
>> ஆறு அடைப்பு என்று அறிந்தேன்
>> நீ இருக்கிறதே அவன் செயலாலேப்பா?
உண்மையில் இறைவன் செயல்தான்! எப்போதும் நம் குலதெய்வங்கள் காவலிருக்கும் என்று சொல்வார்கள் அது இதுதானோ!!
பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
அய்யா,
தாங்கள் தங்களின் உடல் நலன் பேணி இனிதே வாழ இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்.
அன்பு கூர்ந்து தாங்கள் உருவாக்கிய powerpoint பரத்தீட்டை (presentation) வலையேற்றம் செய்ய இயலுமா / தனி மடலில் அனுப்ப இயலுமா ?
என்றென்றும் அன்புடன்,
balarajangeetha@gmail.com
உடல்நிலை நலம்பெற உங்களுக்கு
கண்ணபுரம் பெருமான் அருள்புரிவான்.
அன்புடன்,
நா. கணேசன்
தேவையான ஓய்விலிருந்து, உடல் நலம் பேணி, திரும்ப இணையம் வாருங்கள்.
அன்புடன்
வாசன்
நன்றாக இளைப்பாறிவிட்டு பின் ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் வந்து தமிழ்ப் பணியைத் தொடருங்கள் ஐயா.
ஐயா,
நீங்கள் விரைவில் பூரண குணம் பெற இறைவனை வணங்கி நிற்கிறேன். நல்ல ஓய்வெடுத்து புதுத்தெம்புடன் வந்து உங்கள் தமிழ்ப்பணியைத் தொடருங்கள்.
அன்பின் இராம.கி ஐயா,
தங்கள் உடல்நலமாகி, இல்லமும் தமிழும்
செழிக்க நீலகண்டனை வேண்டுகிறேன்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்,
உய்வினை நாடாதிருப்பது உந்தமக்கு ஊனமில்லை
கைவினை செய்தெம் பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறாதிரு நீலகண்டம்!
காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனிமனத்தால்
ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.
முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டெமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலை சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்
சிலைத்தமை தீவினைத் தீண்டப் பெறாதிரு
நீலகண்டம்.
விண்ணுலகு ஆள்கிற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்று உடையீர் உங்கழல் அடைதோம்
திண்ணிய தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.
மற்றிணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்
கிற்றெமை ஆட்கொண்டு கேளாதொழிதல் நின் தன்மை கொல்லோ
சொற்றுனை வாழ்க்கை துறந்து உன் திருவடி அடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.
மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவி வற்புறுத்தி
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ் பிழையாத வண்ணம்
பறித்த மலர் கொ(ண்)டு வந்துமை ஏத்துதும் நாமடியோம்
சிறப்பில் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.
கருவை கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர் கொ(ண்)டு வந்துமை ஏத்துதும் நாமடியோம்
செருவில் அரக்கனை சீரில் அடர்த்து அருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.
நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணனும் வாது செய்து
தோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்
தோற்றினும் தோற்று தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றமதாம் வினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.
சாக்கியப் பட்டும் சமணுருவாகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பட்டும் விட்டார்
பூக்கமழ் கொன்ற புரிசடை ஈரடி வணங்குதும் நாமடியோம்
தீக்குழித் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.
(சம்பந்தர் அருளிய திருநீலகண்டப் பதிகம்)
திருச்சிற்றம்பலம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
ஐயா, முந்தைய மறுமொழி எழுதி மீள்பார்வை பார்த்துக்
கொண்டு மாற்றங்கள் செய்து கொண்டு இருக்கும் போதே எந்தப் பொத்தானையோ அழுத்திவிட்டேன். மறுமொழி பறந்து விட்டது :-)
ஏதேனும் பிழைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
அன்பின் அய்யா,
தாங்கள் பூரண உடல் குணமடைய இறைவனிடம் எனது வேண்டுதல்கள்.
முழுதும் உடல் குணமடைந்தபின் எழுத்துப்பணிகளைத் தொடருங்கள்.
தமிழும் நாங்களும் தவறாது காத்திருப்போம்:)
அன்புடன்
க.சுதாகர்
உங்கள் உடல் முழுமையான நலன் பெற விழைகிறேன். உங்கள் கட்டுரைகளைப் படிப்பதில் எப்போதும் மகிழ்வும் பயனும் பெறும் என்னைப் போன்ற சாதாரணன் செய்வதற்கு வேறு என்ன உள்ளது? தமிழ் உங்களுக்கு நலத்தையும், நீண்ட ஆயுளையும் தரட்டும். நன்றி.
அன்பின் இராமகி.ஐயா,
பூரணமாக உடல் குணமாக முழுமையான ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன்,
ஹரிஹரன்
அன்பின் இராம.கி அய்யா, விரைவில் பூரண குணமடைந்து, உங்கள் உடல் சீரடைய வேண்டும். உங்களின் மகத்தான பணி தொடர வேண்டும். தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளுங்கள்.
தாங்கள் முழு குணம் அடைய வாழ்த்துகிறேன். தங்கள் பல பதிவுகளை திணறித் திணறியாவது படித்து நல்ல தமிழ்ச் சொற்களை நினைவில் வைத்துக்கொள்ள முயன்று வருகிறேன். பல வலைப்பதிவுகளிலும் பல தமிழ்ச் சொற்களுக்கு விளக்கம் தருகிறீர்கள். இவற்றை ஓரிடத்தில் தொகுத்து தந்தால், பிறருக்கு எளிதில் இனங்கண்டு படிக்க ஏதுவாக இருக்கும். இது போன்ற முயற்சிகளை நீங்கள் தமிழ் விக்சனரி (http://ta.wiktionary.org) தளத்தில் செய்யலாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
தாங்கள் முழு குணம் அடைய வாழ்த்துகிறேன். தங்கள் பல பதிவுகளை திணறித் திணறியாவது படித்து நல்ல தமிழ்ச் சொற்களை நினைவில் வைத்துக்கொள்ள முயன்று வருகிறேன். பல வலைப்பதிவுகளிலும் பல தமிழ்ச் சொற்களுக்கு விளக்கம் தருகிறீர்கள். இவற்றை ஓரிடத்தில் தொகுத்து தந்தால், பிறருக்கு எளிதில் இனங்கண்டு படிக்க ஏதுவாக இருக்கும். இது போன்ற முயற்சிகளை நீங்கள் தமிழ் விக்சனரி (http://ta.wiktionary.org) தளத்தில் செய்யலாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நாளும் கோளும் வேலையற்றுக் கருணை வள்ளல் கண்பார்வை அருள் பெருகி உடல் நலமும் வளமும் பெருக வேண்டுகிறேன்.
தமிழ் வழக்குகளையும் சொற்களையும் அறியத் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களேதான். மிக்க நன்றி.
அய்யா, தாங்கள் முழு குணமடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக.
திருச்சிற்றம்பலம்.
அய்யா தாங்கள் முழு குணமடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக.
திருச்சிற்றம்பலம்
அன்பிற்குரிய செல்வநாயகி,
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.
கருத்தரங்கள் வெற்று ஒலியாய் மாறுவதைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உண்மை. 10க்கு 3 கருத்தரங்கம் பயனுள்ளதாய் இருந்தால் அதுவே வியப்பானது.
அன்பிற்குரிய அருண்மொழி,
உங்கள் வாழ்த்திற்கு நன்றி,
அன்பிற்குரிய மீனா,
உங்கள் வேண்டுதலுக்கு நன்றி. குலதெய்வம் காவலிருக்கும் என்று நானும் நம்புகிறேன், கல்லலில் இருந்து மதகுபட்டி போகும் வழியில், சொக்கநாதபுரத்திற்கு அருகில், கத்தப்பட்டில் உள்ள சேவகப் பெருமாள் அய்யனாரும், தொட்டியப்பக் கருப்பனும் என்னுள் என்றும் நிறைந்தவரே.
அன்பிற்குரிய பாலராஜன் கீதா,
உங்கள் இறைஞ்சுதலுக்கு நன்றி. Powerpoint பரத்தீட்டை கூடிய விரைவில் தமிழ் உலகம் கோப்புப் பகுதியில் சேர்ப்பேன்.
அன்பிற்குரிய நா.க.
உங்கள் வரவிற்கு நன்றி.
போ யாகம்(h), போம் உயிரை, போம் இயற்கை, அத்தனையும்
பொன் அடியில் பொருந்தச் செய்து,
பொற் சரணம்(i) தேடாமல் புகழ் மாந்தித் தினவு எடுத்துப்
போக்கியதைப் புறந்து தள்ளி,
காய் ஆகும் பூவானை(j), கருந் துளசி மேவானைக்
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!
- இராம.கி. யின் "காணவொரு காலம் வருமோ" பதிகத்தின் ஒன்பதாம் பாட்டின் பின் பகுதி.
i.போய் ஆகம் > போயாகம் = போகின்ற உடல்
j.சரணாகுதி (=சரண் + ஆகுதி) என்ற கோட்பாடு விண்ணவத்தில் அடிப்படையானது. இந்தக் கோட்பாட்டில் விரிந்தது தான் இராமானுசரின் விதப்பொருமைக் கோட்பாடு. (அல்லது விதப்பு அல்லிருமை விசிஷ்ட அத்வைதம்; அ த்வைதம் என்பது இருமை அல்லாதது என்று பொருள்படும்; எனவே தமிழில் அது அல்லிருமை என்று சொல்லப்படும். துமித்தல் என்ற தமிழ் வினைச் சொல் தான் த்வி என்று வடமொழியில் திரிந்து வேறொரு தோற்றம் காட்டும்.) உயிர் ஆதனும் (ஜீவாத்மா), பெரும் ஆதனும் (பரமாத்மா) வெவ்வேறு ஆனவை அல்ல; அப்படித் தோற்றம் அளித்து கண்ணுக்கு எதிரே மாயம் காட்டுகின்றன. இரண்டும் ஒன்றே என்று அறுதி இட்டு உரைக்கும் நெறி சங்கரரின் அல் இருமைக் கோட்பாடு (அதாவது இருமை அல்லாதது; எனவே ஒருமை). விண்ணவம் இதில் குறிப்பிடத் தக்க வகையில் மாறு படும். எப்படி உடலை உயிர் செலுத்துகிறதோ, அதே போல உயிராதன்களை பெருமாதனே வழி நடத்துகிறது என்று விதப்பொருமை சொல்லும். உடலைப் போன்றே இயற்கை, உலகு, அண்டங்கள் ஆகியவையும் கருதப்படும். போகின்ற உடல், போகின்ற உயிர், போகின்ற இயற்கை ஆகிய எல்லாம் இறைவனில் பொருந்துவதே சரி, அதனால் தான் இது விதப்பான ஒருமை அல்லது முழுமை என்பது விண்ணவத்தின் அடிப்படை. இப்படிப் பொருந்தும் பொற் சரணம் தான் ஒவ்வொரு பத்தியாளனும் வேண்டுவது என்று விண்ணவத்தார் சொல்லுவார்கள். இந்த கருத்தை மிகவும் விரித்து எழுதலாம் என்றாலும் இங்கு சுருங்கச் சொல்லி இருக்கிறேன். விதப்பு ஒருமைக்கும், சிவனியக் கோட்பாட்டிற்கும் (சைவ சித்தாந்தத்திற்கும்) மிக நுணுகிய வேறுபாடே உண்டு. அதை விரிப்பின் பெருகும்.
k.காய் ஆகும் பூ>காயாம்பூ = கருப்பாகும் பூ; காய் = கருப்பு
அன்பிற்குரிய வாசன், இலவசக் கொத்தனார், வெற்றி ஆகியோருக்கு,
உங்கள் கனிவிற்கும் வேண்டுதலுக்கும் மிக்க நன்றி
அன்பிற்குரிய இளங்கோ,
நீலகண்டம் படித்து நெடுநாள் ஆயிற்று. படித்து நெகிழ்ந்தேன். (விண்ணவமும், சிவனெறிக் கோட்பாடும் மிகமிக நெருங்கி வரக்கூடிய நெறிகள். அதனாலேயே அவை இங்கு தமிழரிடையே தழைத்தன. அல்லிருமை ஒரு குறிப்பிட்ட சாராரைத் தவிர்த்து மற்றவரிடம் நுழையாது நின்றது.) ஞான சம்பந்தரின் நீலகணடப் பதிகத்தை இங்கு அச்செடுத்து அனுப்பியதற்கு நன்றி. தேவாரம், திருவாசகம் என்று ஆழப் புகுகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
திருச்சீற்றம்பலம்.
அன்பிற்குரிய சுதாகர்,
உங்கள் வேண்டுதலுக்கு நன்றி
அன்பிற்குரிய தங்கமணி,
உங்கள் விழைவிற்கு நன்றி.
அன்பிற்குரிய ஹரிஹரன்,
உங்கள் வேண்டுதலுக்கு நன்றி
அன்பின் செல்வராஜ்,
உங்கள் வேண்டுதலுக்கு நன்றி.
Dear Nambi,
thanks a lot
அன்பிற்குரிய ரவி சங்கர்,
வாழ்த்திற்கு நன்றி. விக்சனரி தளத்திற்குப் போய்ப் பார்க்கிறேன்.
அன்பிற்குரிய இராகவன், குறும்பன் ஆகியோருக்கு,
தங்கள் வேண்டுதலுக்கு நன்றி.
திருச்சிற்றம்பலம்.
அன்புடன்,
இராம.கி
இன்றுதான் இப்பதிவை வாசிக்க முடிந்தது.
நலமாயிருங்கள்.
நன்றி, வசந்தன், உடல்நலம் கூடி வருகிறது
அன்புடன்,
இராம.கி
Post a Comment