Friday, October 06, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 1

கொஞ்ச காலமா, இந்த 16 மடைக் குறியேற்றம் பற்றி எங்கே பார்த்தாலும் பேசிக்கிட்டு வர்றேன். அது தொடர்பான உரையாடல்களிலும் பங்கெடுத்து வர்றேன்.

அந்தச் சமயங்கள்லே, ஒரு சில கணிஞர்(computer experts)களும், ஆர்வலர்(enthusiasts)களும் திடீர் திடீர்னு "அவரு சொன்னார், இவரு சொன்னார்"னு நாலஞ்சு குழூஉக் குறி முழக்கங்களை (group jargons) எடுத்து விடுவாங்க; அப்பவெல்லாம் சட்டுன்னு நானு தடுமாறிப் போனது உண்டு. இவுங்க, சொவ்வறை நிரலி (software programme) எழுதுறதைப் பத்தியோ, அதுலே பயன்படுத்தும் நுட்பங்கள் (techniques) பத்தியோ சொன்னா, வாலைச் சுத்தி வச்சிக்கிட்டு ஒழுங்காக் கேட்டுக்கிறது தான்.

நடு நடுவே தொல்காப்பியர் பேரைச் சொல்லி, "அவரு சொல்லியிருக்கார், தமிழுக்கு 30 character தான்; ஆய்தத்தைச் சேர்த்துக்குனா 31 தான். மிச்சதெல்லாம் வெறும் letters. அவரொன்னும் உயிர்மெய் எழுத்தை எல்லாம் கண்டுக்கோணும்னு சொல்லலையாக்கும், அவரோட 17ம் நூற்பாப் படிச்சிருக்கியா? அந்தா, இந்தா"ன்னுட்டு சில கேள்வியை விடவும், "என்னடா இது, இவ்வளவு காலம் தொல்காப்பியத்தை விழுந்து விழுந்து படிச்சமே, ஊர்ப்பட்ட உரைகள்லாம் படிச்சமே, ஒண்ணுமே நம்ம மரமண்டைக்கு விளங்காமப் படிச்சமோ?"ன்னு ஒரு சமுசயம் (அய்யப்பாடு) வந்திட்டுதுங்க!

"சரி, மீண்டும் தொல்காப்பியத்தைப் பரணிலேர்ந்து இறக்குவோம்; கூடவே இளம்பூரணத்தையும், நச்சினார்க்கினியத்தையும் பக்கத்துலே வச்சிக்கிறுவோம். வரிக்கு வரி, திரும்பவும் படிப்போம்"னு நினைச்சேன். அந்தப் படிப்புலே எழுந்தது தான் இந்தப் பதிவு. இங்கே நூன்மரபு பற்றி மட்டுமே சொல்லிக்கிர்றேன்.

"என்னத்தை வெளங்கி, என்னத்தைச் சொல்றது?"ங்கிறவுகளுக்கும், "ஆமா, பொரிச்செடுக்கப் (bore) போறதுக்கு, இவ்வளவு சோடனையாக்கும்?" என்பவர்களுக்கும் ஒரு கும்பிடு. உங்களுக்கு இது புடிக்கலேன்னா, அடுத்த பதிவுக்குப் போயிருங்க.

இத நான் எழுதியே தீரணும். ஏன்னா, கண்டதுக்கெல்லாம் "அவரு சொன்னார், இவரு சொன்னார்"னு பேரு விடுற பழக்கம், நம்மூர்லெ ஒரு கெட்ட பழக்கமாவே ஆயிப் போயிருச்சுங்கண்ணா! பாவம், தொல்காப்பியரை இவங்கள்டேந்து தப்புவிச்சுக் கொண்டாரணும். அவ்வளவு தான்.

உள்ளே போகலாங்குளா!

தொல்காப்பியம் எழுத்ததிகாரம். நூன்மரபு. முதல் நூற்பா:

1. எழுத்து எனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே

நூற்பாவோட பொருளைப் புரிஞ்சிக்கிறது முன்னாடி "அது என்ன, எனப்படுப?" என்ற கேள்வி நமக்கு எழுகுது.

நம்ம பேச்சுலே "ஆம்புளைன்னு சொன்னா அவன்தாய்யா ஆம்புளை"ன்னு சொல்றோம் இல்லியா, என்ன பொருளிலே சொல்றோம்? "அவன் ஏதோ சிறப்பான செயலைச் செய்திருக்கிறான்" என்ற பொருள் வருது இல்லையா?

"காளைன்னா இதுதான் காளை" - மஞ்சி விரட்டுலே சொல்றோம் இல்ல; ஏன், யாராலும் புடிக்க முடியாத படிக்கு அது உருண்டு திரண்டு வெளியே ஓடிப் போயிருது; ஒரு பயலாலும் அதன் கொம்பைப் புடிக்க முடியுறதில்லை. கட்டிவச்ச பவுன் அப்படியே இருக்கு.

"ஊருன்னா இதுல்லய்யா ஊரு; மிச்சதெல்லாம் ஊத்தை"ன்னு சொல்றோம் இல்லையா? ஏன்? இந்த ஊரு சிறப்பா அமைஞ்சிருக்கு, நமக்குப் பிடிச்சுப் போச்சு; அதனாலே சொல்றோம்.

ஆனாப் பாருங்க, நம்ம பேச்சுலே சிறப்புங்குற சொல்லையே புழங்கக் காணோம். வெறுமே பொதுமைச் சொல்லை வச்சுக்கிட்டே, சொல்ற முறையிலே (எனப் படுப) சிறப்புங்குற பொருளைங் கொண்டு வந்து விடுறோம். இது தமிழ்ப் பேச்சுலே ஒரு மரபு. பொதுமையைக் (generic) கொண்டு விதப்பை (specific) உணர்த்துவது.

இதைத்தான் இளம்பூரணரும் சொல்றார். (அவருடைய உரை நச்சினார்க்கினியருக்கும் முந்தியது; உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் பல இடங்கள்லே அப்படியே இளம்பூரணரைப் பின்பற்றுவார்; சில இடங்கள்லே மட்டும் வேறுபடுவார்.)

"எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப் படுவன" - இது இளம்பூரணம்.

அப்படின்னா மிச்சதெல்லாம் எழுத்தில்லையா, என்ன? அவையும் எழுத்துத்தான். தொல்காப்பியர் இன்னும் மற்ற நூற்பாக்களில் மற்றவற்றையும் எழுத்து என்று தான் சொல்லுகிறார். அதைப் பின்னாடிப் பார்ப்போம். (இளம்பூரணரும் "எனப்படுப என்ற சிறப்பால், அளபெடையும், உயிர்மெய்யும் வரிவடிவும் சிறப்பில்லா எழுத்தாகக் கொள்ளப் பட்டன" என்பார். ஆக எல்லாம் எழுத்துத் தான். ஒண்ணு சிறப்பான எழுத்து; இன்னொண்ணு சிறப்பில்லாத எழுத்து. அம்புட்டுத் தான்.)

இந்தக் காலத் தமிழ்க் கணிஞர்கள் சிலர் character னு ஒரு ஆங்கிலச் சொல்லை உள்ளே கொண்டு வந்து போட்டு, "இதெல்லாம் characters, மற்றதெல்லாம் letters" அப்படிங்கிறாங்க.

எப்படி, எப்படி?

"இது எல்லாம் தங்கம், மற்றதெல்லாம் பித்தளை".

"இது என்ன கூத்துடி அம்மா, இவுகளா எதையோ வச்சுக்கிட்டு, அதைப் போய்த் தொல்காப்பியர் வாயிலே திணிக்கிறது?"

இப்படித்தாங்க தாங்களாகவே ஒரு தேற்றைக் கொள்ளுவது, அதைக் கொண்டுபோய், நமக்கு முன்னாடி இருந்தவர் மேலே திணிச்சு, அவரே சொல்லிட்டார்னு திரிச்சு விடுறது. இதுவும் பல தமிழர்களுக்கு வாடிக்கையாப் போயிருச்சு; அன்னைக்கே திருவள்ளுவர் சொல்லியிருக்கார், இளங்கோ சொல்லியிருக்கார், கம்பர் சொல்லியிருக்கார்னு ஆளாளுக்குப் பேரெ அவுத்து விடுறது. எந்தப் பய மூலத்தைப் படிக்கப் போறான், எவன் ஒப்பிட்டுப் பார்க்கப் போறாங்கிற மதப்பு. (திருவள்ளுவர் ஒரு கிறித்தவர், அவர் ஒரு இந்து - இப்படி இல்லாதது, பொல்லாததெல்லாம் சொல்றதை ஒரு சிலர் பெருமைன்னு நினைச்சிக்கிடுறாக.)

இப்ப, எழுத்துன்னா என்ன?

"இழுத்துக்கிட்டே வந்தது எழுத்து"ம்பார் பாவாணர்.

யோசிக்கிறீகளோ? இப்ப, தாழை மடல் இருக்கில்லையா? அது ஒரு காலத்துலே நம்மோட எழுது கருவி. அதுலே தூரிகை வச்சு மைக்குழம்புலே தோய்ச்சு, கோடாய் இழுத்து, இழுத்துச் சின்னச் சின்னமாப் படம் போடலாம். அந்தச் சின்னப் படங்கள்லே ஒரு சிலதான் இன்னைக்கு எழுத்துக்களா மாறிருக்கு. ஆ ங்கிற மாட்டைக் கொம்போட போட்ட படம் தான் இன்னைக்கு அ, ஆ ன்னு மாறிருக்கு. எழுத்துங்குற சொல்லு தமிழ்லே கொஞ்ச காலம் ஓவியத்தையும், பல காலம் நாம எழுதுகிற எழுத்தையும் குறிச்சிருக்கு.

எழுத்துங்கிறது முதல்லே கல், பின்னாடி ஓடு (பானையோடாகவும் இருக்கலாம்), அப்புறம் தாழை, பின் பனை ஓலை, முடிவிலே தாளுன்னு பல விதமாய் வந்து சேர்ந்திருக்கு. இப்படி எழுதுகிற முறைகள்லாம் ஒண்ணுக்குப் பின்னாடி ஒண்ணு வந்ததுன்னு பொருளில்லை. பல காலம் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுது முறைகள் சம காலத்துலே இருந்திருக்கு.

கல்லுங்குற எழுதுபொருள்ளே உளி வச்சுக் கீறுனாங்க. ஓடுங்கிற எழுது பொருள்லேயும் ஆணி வச்சுக் கீறுனாங்க. இப்படிக் கீறுனது கீற்றுன்னு ஆச்சு. கீற்றுங்கிறது சிலநேரம் பகுதியா நின்னு போயிரும். கீற்றுலே முழுமையானது கீற்றம். கல்லில் கீறிய அந்தக் கீற்றமும் தாழை, ஓலையில் எழுதிய இந்த எழுத்தும் ஒண்ணுதாங்க. ஏன்னா, இரண்டும் ஆ ங்கிற ஒரே படத்தைத் தான் காட்டியது.

மேலை நாகரிகங்களும், நடுக் கடல் நாகரிகங்களும், சீன நாகரிகங்களும் இதே மாதிரிப் புரிந்திருந்தன. நமக்குத் தாழை, ஓலை போல, அங்கே மரப்பட்டை, தோல், பட்டுத் துணி இப்படிப் பலவாறு இருந்தன. இவையெல்லாம் அழிந்து போகக் கூடிய எழுதுபொருட்கள்.

இன்னொருவகை, கல், களிமண் செங்கல், ஓடு இப்படி நெடுநாள் இருக்கக் கூடிய எழுதுபொருட்கள்.

முதல்லே இழுத்தது நமக்கு எழுத்தாச்சு; அவனுக்கு லிபி, (இ)லத்தர், லித்தொ, லித்தெரேச்சர் (நம்மூரு இலக்கியமும் இழுக்கியது தான்.) பொறுமையா வேர்ப்பொருள் பார்த்தா, ஊரம்புட்டுச் சொல்லு கிடைக்கும்; எல்லாம் இழுத்ததுலே வந்தது தான்.

இரண்டாவதுலே கீறுனது நமக்குக் கீற்றம் ஆச்சு, கீறலாச்சு, பொருளில்லாமப் போனா கிறுக்கிறது ஆச்சு; அவுங்களுக்கோ, script ஆவும், inscription, scribe, scripture, character, graph - இப்படி ஒரு நூறு சொல்லையாவது சொல்லலாம். எல்லாம் கல் மேலெ கீறனதை ஒட்டி வந்த சொற்கள்.

ஆகக் character ங்குறதும், letter ங்குறதும் ஒழுங்கா யோசிச்சுப் பார்த்தா ஒண்ணு தான். இரண்டும் வெவ்வேறு எழுதுமுறையிலே எழுந்த, அதே பொழுது ஒரே பொருளைக் குறிக்கும், சொற்கள்.

எனவே, அன்பிற்குரிய கணிஞர்களே, சும்மா உள்ளே புகுந்து இல்லாத பொருளை எல்லாம் ஊடே கொண்டு வந்து புகுத்துற வேலை யெல்லாம் வேணாம்.

நாம, தொல்காப்பியத்துக்குத் திரும்ப வருவோம். இந்தத் தொல்காப்பியரு கைதேர்ந்த மேடை நாடகக் காரர். நாடக அரங்குலே குவி விளக்குகள் (focus lights) இருக்கும் பாருங்க. அதைப் போட்டு ஒரு பக்கம் வெளிச்சத்தைக் குவிச்சு, சட்டுன்னு குவி விளக்கைச் சுற்றவிட்டு இன்னொரு பக்கம் கடைசிலே கொண்டுவந்து நிப்பாட்டுவாங்க பாருங்க, அது போல,

அ - வுலே முதலாய் வச்சு, ன ங்குற கடைசி வரைக்கும் இருப்பது சிறப்பு எழுத்துக்கள்னு சொல்லி குவி விளக்கைச் சுத்தி விடுறார். நம்ம வாயைப பொளக்குறோம். மொத்தம் 30 ஆட்கள்னு சொல்லுவாங்கன்னுட்டு பின்புலத்தை எடுத்து விடுறார். அப்புறம் "இன்னம் மூணு பேர் இருக்காங்க, இவுங்களைச் சார்ந்தவுங்க, ஆனா அவுங்க கொஞ்சம் அலங்கடை - exception, அப்படி"ன்னு சொல்றார்.

கூத்துப் பார்க்குற நமக்குக் குறுகுறுப்பு கூடிப் போகுது.

அன்புடன்,
இராம.கி.

20 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//கூத்துப் பார்க்குற நமக்குக் குறுகுறுப்பு கூடிப் போகுது.//

ஐயா...!
மொத்தப் பதிவும் கிறுக்கிறுக்க வச்சிட்டுது...!

குறிப்பாக லெட்டர், கேரக்டர் விளக்கம் கலக்கல்!

பாராட்டுக்கள் மற்றும் நன்றி !

செந்தில் குமரன் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

ஆப்பு said...

அருமையான பதிவு. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

ஞானவெட்டியான் said...

அன்பு இராமகி,
அருமை. தொகுக்கப் பல சொற்குவியல்கள் கிட்டியுள்ளன. தந்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

ஐயா, ஒரு விண்ணப்பம். இந்தப் பதிவை நீங்க pdf formatல சேமித்து வைத்தால் நல்லது. இந்தத் தொடர் முடிகையில் எங்களுக்கும் கிடைக்குமாறு வலையேற்றுங்கள்.

நல்ல விளக்கங்கள் நீங்கள் தந்திருப்பது. தொல்காப்பியம் நான் இதுவரையில் படித்ததில்லை. அரசியல்வாதிகளின் உரையைப் படிக்கும் எண்ணமும் இல்லை. உங்கள் உரை தொடரட்டும். நானும் தெரிந்து கொள்கிறேன். பிறகு நானும் தொல்காப்பியர் சொன்னாருன்னு சொல்லிக்கிறலாம் அல்லவா :-)

உங்களது இந்தப் பணி சிறக்க முருகனை வணங்கி வேண்டுகிறேன்.

Anonymous said...

«ñ½ÛìÌ,
ż¦Á¡Æ¢î ºÃ½¡¸¾¢¨Âî ºÃ½¡Ì¾¢ ±ýÚ ±ØÐõ§À¡Ð «Ð ¦º¡øħÅñÊ «ÇÅ¢üÌõ ÜÎ¾Ä¡É «Øò¾õ ¦ÀÚ¸¢ÈÐ (ºÃ½õ, ¬Ì¾¢ þ¨Å þÃñÎõ ¾Á¢ú¾¡Á¡?).
¦¾¡ø¸¡ôÀ¢Âò¾¢ø ¦¾¡¼÷óÐ ¦ÅÇ¢îºõ À¡öîÍí¸û. ¦¾¡¨Ä¿¢¨Äì ¸øÅ¢ò §¾÷×측¸ þíÌõ «íÌõ «ÅìÌ «Å즸ýÚ «Åì¸Ãò¾¢ø §Áöó¾Ð.
¬ÚÓ¸ò¾Á¢Æý.

குழலி / Kuzhali said...

பதிவுக்கு மிக்க நன்றி அய்யா, பல புதிய தகவல்கள் கிடைக்கின்றன.

Sivabalan said...

அய்யா,

பதிவுக்கு மிக்க நன்றி

இலவசக்கொத்தனார் said...

நீங்களும் அய்யா, அய்யப்பாடு என்றே எழுதுகிறீர்களே. இதுதான் சரியா? ஐயா, அயம், ஐயப்பாடு என வர வேண்டாமா? கொஞ்சம் விளக்குங்களேன்.

பல நாட்களுக்குப் பின் ஒரு வெண்பா பதிவு போட்டு இருக்கிறோம், தாங்கள் வர வேண்டும்.

Anonymous said...

இந்தக் காலத் தமிழ்க் கணிஞர்கள் சிலர் character னு ஒரு ஆங்கிலச் சொல்லை உள்ளே கொண்டு வந்து போட்டு, "இதெல்லாம் characters, மற்றதெல்லாம் letters" அப்படிங்கிறாங்க.
>>>>>
அப்படியா?
இரண்டுக்கும் என்ன வித்தியாசமாம்?

அப்படி அவர்கள் சொன்னதற்கு காரணம் என்ன இருக்கும் என்று யோசித்துப் பார்த்ததில் இதுதான் தோன்றியது:

In ASCII, a-z, A-Z are "letters" everything else is a "character."

இதையே தமிழுக்கு "இறக்குமதி" செய்ததன் விளைவே அந்த மேதாவித்தனம் என்று நினைக்கிறேன்.

அதாகப்பட்டது இப்போதுள்ள யுனிகோடின்படி, உயிரெழுத்துகளும் "க" முதல் "ன" வரையிலான உயிர்மெய் எழுத்துகளும் "letters"; மற்றவையெல்லாம் "characters."

மற்ற உயிர்மெய் எழுத்துகளையும் மெய்யெழுத்துகளையும் "கட்ட"(to build) , "க"-"ன"(letters) கொண்டு புள்ளி, கொம்பு, கால்(characters) இவற்றைச் சேர்த்தால் போதும். கட்டடம் தயார்.

இப்படிக் "கட்டிய" உருவத்திற்குப் பெயர் என்ன? letter-ஆ இல்லை character-ஆ? இல்லை புதிதாக எதாவது ஒன்றா?

-பரி

செல்வராஜ் (R.Selvaraj) said...

அருமை அய்யா. உணர்ச்சியேறிய நடை இலகுவில் வாசிப்பை நகர்த்திச் செல்கிறது. வழக்கத்தை விடவும் நன்றாக இருக்கிறது இப்பதிவு.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆ ங்கிற மாட்டைக் கொம்போட போட்ட படம் தான் இன்னைக்கு அ, ஆ ன்னு மாறிருக்கு. எழுத்துங்குற சொல்லு தமிழ்லே கொஞ்ச காலம் ஓவியத்தையும்..//

மிகவும் சுவையான தகவல் இராம.கி ஐயா! மொகஞ்சதரோ, ஆரப்பா மற்றும் மிகப்பழமையான் நாகரிகங்களில் கூட, இது போலக் குறியீடுகள் தான் எழுத்தின் மூலம் என்று எங்கோ படித்த நினைவு!
ஓவியமே, எழுத்தான தங்கள் குறிப்பு மிகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது!

மேலும் ஒரு விண்ணப்பம். சில மொழிகளில், ஒரே எழுத்து மட்டுமே, பல பொருள்களைக் குறிக்கும். தமிழில் "ஆ" என்பதற்குப் பசு என்ற பொருள் வழங்கி வருதற் போல். இதுவும் நீங்கள் மேற் சொன்னது போல் குறியீடுகளின் விளைவு தானா என்பதையும் அடுத்த பதிவுகளில் தொட்டுச் செல்ல வேண்டுகிறேன்!

தங்கள் மொழிப்பணி சிறக்கத் திருவேங்கடமுடையான் திருவருளை இறைஞ்சுகிறேன்!

குமரன் (Kumaran) said...

மிக நல்ல தகவல்கள் ஐயா. அடியேனும் தொல்காப்பியத்தைப் படிக்காததால் பல சேதிகள் தெரியவில்லை. தொடர்ந்து இந்தத் தொடரைப் படிக்கிறேன்.

இப்போது தொல்காப்பியப் பருவமா? இன்னும் இரு பதிவுகள் தொல்காப்பியத்தைப் பற்றித் தமிழ்மணத்தில் பார்த்தேன்.

Megarajan said...

your writing is informative.
you might also wish to read

http://1paarvai.wordpress.com/2006/06/09/tamil-unicode-p-1/

Megarajan said...

Your writing is informative.thanks.

you might also wish to read

http://1paarvai.wordpress.com/2006/06/09/tamil-unicode-p-1/

இராம.கி said...

அன்பிற்குரிய கோவி.கண்ணன்.

குறுகுறுப்பு கிறுகிறுக்க வச்சிதுன்னா நல்லதுதானே? நன்றி

அன்பிற்குரிய குமரன் எண்ணம்,ஆப்பு

கனிவிற்கு நன்றி.

அன்பிற்குரிய ஞா.வெ.

சொற்களைத் தொகுத்துக் கொண்டே வாருங்கள். ஒரு நாள் உங்களிடம் வந்து தொகுதியைக் கேட்கிறேன்.

அன்பிற்குரிய இராகவன்,

pdf format - நினைவில் வைத்துக் கொள்ளுகிறேன்,

அன்பிற்குரிய ஆறுமுகம்,

சரணம் இரு பிறப்பி; ஆகுதி தமிழ். சரணத்தை இன்னும் ஆயவேண்டும்.

அவக்கரம் இல்லாமல் அமைதியாக இந்தத் தொடரைப் படித்துக் கருத்துச் சொல். முடிந்தால் உன் தந்தையாரையும் படிக்க நான் கேட்டுக் கொண்டதாகச் சொல்.

அன்பிற்குரிய குழலி, சிவபாலன்,

நீங்கள் எல்லாம் குமுக நிகழ்வுகள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். பங்கெடுத்துக் கொள்ள இயலாமல், ஒரு காரணமாய் தமிழ் பற்றி இங்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அன்பிற்குரிய இலவசக் கொத்தனார்,

அய் என்பது ஐ என்பதன் போலி தான். அ+இ என்பதன் நீட்சியாகத்தான் ஐ பிறந்தது என்றும், இந்தப் போலி பற்றியும் தொல்காப்பியரே பேசுவார். ஐ, ஔ என்ற எழுத்துக்களே நெடுங்காலம் தமிழ்க் கல்வெட்டில் பழகாமல் தான் இருந்தன. ஒரு சாரார், (பெரியார் வழி வந்தவர் மட்டுமல்ல) ஐ, ஔ ஆகியவற்றை விட்டொழித்து அய், அவ் என்றே பழகத் தொடங்கலாம் என்பார்கள்.

வெண்பாப் பதிவிற்கு வந்து போனேனே?

அன்பு பரி,

எத்தனை முறை சொன்னாலும் இவர்களுக்குப் புரிவதில்லை. ஒருங்குறிச் சேர்த்தியத்தின் இத்தனாவது ஆவணத்தில் இப்படி எழுதியிருக்கிறது என்று காண்பிக்கிறார்களே ஒழிய ஒரு மொழியாளரின் (linguist) சான்று காண்பிக்கிறார்கள் இல்லை.

அப்படியே உயிரும், மெய்யும் தான் character என்றால் குறியேற்றப் பட்டியலில் மெய்யெழுத்துக்களைக் காணோமே, அகரமேறிய மெய்கள் தானே இருக்கின்றன என்றும், கால், கொக்கி, கொம்பு போன்றவைக்கும் இடம் கொடுத்திருக்கிறீர்களே, அவையெல்லாம் character களா என்று கேட்டால் மறுமொழியில்லை.

எந்த இலக்கணப் பொத்தகத்திலாவது, அல்லது பள்ளிக் கூடப் பாடத்திலாவது கால், கொக்கி, கொம்பு போன்றவற்றைத் தனியாக character என்று சொல்லி, இந்த கொக்கியையையும், அகரமேறிய ககரத்தையும் பூட்டினால் கி என்ற ஒலி வந்துவிடும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? ஏன் இப்படி இல்லாத பாடத்தை இருப்பதாகக் காட்டுகிறீர்கள் என்றால் ஏதேதோ புளுகி நகர்ந்து விடுகிறார்கள்.

நீங்கள் vowel maathra என்று எங்காவது படித்திருக்கிறீர்களா? இந்த கால், கொக்கி, கொம்பு எல்லாம் உயிர் மத்திரைகளாம். மாத்திரை என்றால் குற்று உயிர் ஒலிக்கின்ற நேரம் என்று தான் நாம் படித்திருக்கிறோம். அது கண்ணிமைக்கும் நேரம், அல்லது கை நொடிக்கின்ற நேரம் என்று தான் படித்திருக்கிறோம். இவர்கள் சொல்லுகிற மாத்திரைகள் வடமொழியில் வேண்டுமானால் இருக்கக் கூடும்.

இந்த ஒருங்குறி என்பது தமிழ் இலக்கணத்தைத் த்லைகீழாகப் போட்டு செய்த குறியேற்றம். இதில் கணித்திரையில் படம் காட்ட முடியுமே ஒழிய வேறு எந்த வேலையையும், நீண்ட விதப்பு நிரலி எழுதாமல் செய்ய முடியாது.

tune_rfc@yahoogroups.com என்ற மடற்குழுவிற்கு வாருங்கள்,பரி, அடித்துக்கொண்டு சாகிறார்கள். வேடிக்கை இருக்கட்டும். உண்மையாகவே குறியேற்றங்களில் விருப்பம் இருப்பவர்களை அங்கு நான் அழைக்கிறேன்.

கட்டிய கட்டடத்தை வெறும் letter என்றே சொல்லுகிறார்கள்.

அன்பிற்குரிய செல்வராஜ்,

கட்டுரை நடை உங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஈழத்துக்காரர் ஒருவரோ, வட்டார நடையை விடுத்துப் பொதுநடையில் எழுதுங்கள் என்று இரண்டுமுறை சொல்லிவிட்டார். இந்த நடை பற்றி ஒரு முறை யோசிக்க வேண்டும்.

அன்பிற்குரிய கண்ணபிரான்,

ஆ என்ற எழுத்தைப் போல் மற்றது எழுந்ததா என்பது பற்றி நான் சிந்திக்கவில்லை. இனிப் பார்க்கிறேன். ஆனால் இரா.மதிவாணன் இதுபற்றி எழுதியிருக்கிறார்.

தவிர இந்தப் பதிவுகள் தொல்காப்பிய நூன்மரபுக்கும் தமிழில் கணியை ஒட்டி எழுகின்ற குறியேற்றங்களுக்கும் இடையில் உள்ள இடையாட்டு (interaction) பற்றிய தொடர். நான் வேறு எதையும் சொல்ல முற்படுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆழமாகப் பார்த்தால், இப்போது எழுதிடதிலேயே சிலவற்றை வெட்டியிருக்க வேண்டும்.

அன்பிற்குரிய குமரன்,

வரவிற்கும், வாசிப்பிற்கும் நன்றி. மற்ற இரு தொல்காப்பிய பதிவுகளுக்கும் இதற்கும் பேசப்படும் பொருள் வேறு. தொல்காப்பியத்தில் அவர்கள் பொருளதிகாரம் பற்றி எழுதியதில் வருணம் பற்றி நூற்பாக்கள் இடைச்செருகல்கள் என்று தான் தமிழறிஞர் பலரும் மிக ஆணித்தரமாக எழுதியிருக்கிறார்கள். திரு C.R. செல்வக்குமார் இதுபற்றித் தெளிவான பின்னூட்டுக் கொடுத்திருந்தார்.

அன்பிற்குரிய மேகராஜன்,

திரு. காப்பிடலின் பரத்தீட்டம் பல மடற்குழுக்களுக்கும் வந்தது நானும் படித்திருக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

ரவிசங்கர் said...

ஐயா, tune_rfc குழுவில் சேர விண்ணப்பித்திருக்கிறேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

உங்களின் இந்த எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு..வழக்கமான உங்கள் இறுக்கமான நடையில் இருந்து ஒரு மாறுதல்..

தமிழில் கலைச்சொல் உருவாக்கத்துக்குன்னு ஒரு தன்னார்வலர் குழுமம் ஒன்னு தொடங்கி இருக்கோம். நீங்க வந்தீங்கன்னா நல்லா இருக்கும்.

இது குறித்த என் வலைப்பதிவு இடுகை:
http://thamizhthendral.blogspot.com/2006/11/blog-post.html

இராம.கி said...

அன்பிற்குரிய ரவி சங்கர்,

நடைபற்றிய விவரத்தை இன்னொரு இடத்தில் (இந்தத் தொடரின் இரண்டாவது பகுதியின் பின்னூட்டில்) குறித்துள்ளேன்.

உங்கள் குழுமத்தில் அவ்வப்பொழுது வர முயலுவேன்.

அன்புடன்,
இராம.கி.

Ganesh CRV said...

மிக அருமையான விளக்கம். மேலும் எழுத்து நடையும் பேச்சு நடைபோல் இருந்ததால் என்னை ரஸிக்க வைத்துவிட்டது. உமது பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

tharshayene said...

உபயோகமான பதிவு, மிக்க நன்றி