கீழே வருவது என் நண்பர் இண்டிராம் தமிழ் உலகம் மடற்குழுவில் "புழம்பரின் மேல் ஒரு புழம்பு வேலை" என்ற மடலுக்கு அளித்த பின்னூட்டு; அவருடைய மடலையும் என் மறுமொழியையும் இங்கே உங்கள் வாசிப்பிற்குக் கொடுக்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
-----------------------------------------------------------------
நண்பர் ராமகி
தமிழகத்தில் தொழில் நுட்ப, அறிவியல் கருத்தரங்கங்களில் எப்படி ஆங்கிலத்தில் தான் உரையாற்றுகிறார்கள், தமிழில் அல்ல,
என்று குறிப்பிட்டிருந்தார்.
இது பொதுவாக தமிழ் மொழி பேசுபவர்களின் இயலாமையை சுட்டிக்காட்டினாலும் மற்ற இந்திய மொழிபேசுபவர்களிடமும் உள்ள குறைபாடுதான் இது ஒரு மொழியின் குறைபாடா அல்லது மொழிபேசுபவரின் குறைபாடா? தமிழ் மொழி காப்பாளர்கள் இம்மாதிரி போக்குக்கு பதில் அளிப்பார்களா? பல மொழிகள் பேசுபவர்கள் (குறிப்பாக இந்தியர்கள்)
கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மொழியை தங்களது வெளிப்பாடுகளில் குறைவாகப் பயன்படுத்திவருவதை அவதானிக்கலாம்
பழைய மொழிகளெல்லாம் வெறும் அடிப்படை உணர்வு, கருத்து, சிந்தனை வெளிப்பாடுகளுக்குத்தான் அம்மொழி பேசுபவர்களால் பயன் படுத்தப்படுகின்றன. நுணுக்கமான விடயங்களை, தற்கால வாழ்க்கைக்கு தேவையான
விடயங்களை வெளிப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டால் எல்லோரும் சகஜமாக ஆங்கிலத்துக்குத்தான் தாவுகிறார்கள்
இந்த நிலமையை பெரும்பாலானோர் (பெரிய படிப்பு படித்தவர்களும், பாமரர்களும் கூட) ஏற்று வருகிறார்கள்.
ஏனெனில் ஒரு மொழி எதற்காக உள்ளது என்பதை ஆராயவேண்டும்? அதாவது தன்னுள் தோன்றும் உணர்வுகளையும், சிந்தனைகளையும், கருத்துக்களையும், பிறர்க்கு "தெளிவாகத்" தெரிவிப்பதற்காகத்தான்
பேராசிரியர் குழந்தைசாமி படியகத்திற்கு அருகே சென்று
"உள்ளுரும நுட்பியற் செயலாளருடன்,
உள்ளுருமச் செயலர்,
படியகத்தின் முன்னால்,
தொடக்கச் செற்றம்,
பொது அரங்கு,
நுட்பியச் செற்றம்,
முடிவுத் தொகுப்பு"
என்ற சொற்றொடர்களை பயன்படுத்தி உரையாற்றியிருந்தாரானால், நண்பர் ராமகியைத் தவிர மற்றவர்களெல்லாம் அரங்கத்திலிருந்து ஓடியிருந்திருப்பார்கள் அல்லவா?
லெட் டS பி டுரூத்புல் அண்ட் ரியலிSடிக்
--------------------------------------------------------------------------
நண்பர் திருவரசு குறிப்பிட்ட குறுக்குவழி அறுவை சிகிச்சை என்கிற சொல்லாடல் தற்காலத் தமிழகத்தினரின் வாயிலிருந்தும்
பேனாவிலிருந்தும் இயல்பாக வராது. எல்லோரும் "பைபாS சர்fரி" என்றே சொல்லி எல்லோருக்கும் தெளிவாகத்
தமிங்கிலத்தில் தெரிவித்துவருகிறார்கள். அதே மாதிரி "ஊசிவழியாகக் குருதிக் குழாய்களில் மூன்று சின்னஞ்சிறிய குழாய்களைப்"
என்று சுற்றி வளைத்து சொல்லாமல் மூணு Sடெண்ட் போட்டாங்க" என்று தான் இயல்பாக சுருக்கத் தமிழில் சொல்லி வருகிறார்கள்.
இந்த பிரச்சனை தமிழ் மற்றும் இதர இந்திய மொழியினரையும் பாதித்துவருகிறது. ஆகவே நாம் நம்மவர்களை மட்டும்
குறை சொல்லி மாரடிக்க, தலையில் குட்டுபோட வேண்டாம். இந்த இயலாமை பேராசிரியர் திரு.குழந்தைசாமியையே
பாதித்திருக்கிறாது என்றால் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் படித்துவரும் வருங்கால தமிழ்ச் சந்ததியினரிடமிருந்து வருங்காலத்தில்
நாம் தமிழ் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்கலாம்? எதிர்பார்க்கக்கூடும்?
இன்னும் குறைவானப் பயன்பாடுதான் இல்லையா?இந்த மொழித் தேய்மானத்தை, அழிவு நோக்கி ஓடும் நிலைமையை தடுக்கமுடியுமா? இக்கேள்வி பல மொழியினரின் அடிமனதில் இருந்து உறுத்தி வருகிறது. தங்களது கருத்தென்னவோ?
இண்டி ராம்
-------------------------------------------------------------------------------
அன்பிற்குரிய இண்டிராம்,
மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி?
இன்றைய அவல நிலையை யாரும் மறுக்கவில்லை. எந்தவொரு திருத்தமும் செய்யாது சும்மா கிடந்தால், தமிழ் என்பது மெல்ல இனிச் சாகும் என்று நான் உணர்ந்தவன் தான். பல்வேறு தமிழர்களும் உணர்கிறார்கள். எப்பாடு பட்டாவது தமிங்கிலத்தைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் முயலுகிறார்கள். அப்படி முனைப்புடன் செயற்படும் சிலருக்கு நான் ஒரு வினையூக்கி; அவ்வளவுதான்.
இன்றைக்கு 100க்கு 50 விழுக்காடு ஆங்கிலம் கலந்த தமிழ் பேசும் ஒருவர், இது போன்ற முயற்சிகளால் ஒரு சில காலத்தில் 100க்கு 60 அல்லது 70 விழுக்காடு தமிழ் பேசமாட்டாரா என்ற விழைவில் தான் இதையெல்லாம் நல்ல தமிழில் எழுத விழைகிறேன். உங்களுடைய கருத்துக்களுக்குப் போகுமுன்னால், முந்தா நேற்று, நண்பர் ஒருவரின் வலைப்பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டை இங்கு தருகிறேன். அவர் பெயர் அண்ணா கண்ணன். நல்ல தமிழ் அறிந்த, ஆற்றலுள்ள இதழாசிரியர். தற்போது sify.com வலையிதழின் ஆசிரியர். அவருடைய வலைப்பதிவில் டெரகோட்டா படைவீட்டம்மன் என்று எழுதியிருந்தார். என் பின்னூட்டு:
----------------------------------------------
"என்ன நண்பரே?
நீங்களும் டெர்ரா கோட்டா என்று எழுத வேண்டும்? சுடுமண் மொம்மை, அல்லது சிலை அல்லது திருமேனி என்று எழுதலாமே? "சுடுமண் சிலையாய்ப் படைவீட்டம்மன்" என்று எழுதலாமே? ஒவ்வொரு சொல்லாய் இப்படித் தமிழில் நாம் இழக்க வேண்டுமா? நீங்கள் என்றில்லை, பலரும் சுடுமண் என்று எழுதுவதைத் தவிர்ப்பதைத் தாளிகைத் துறையில் கவனிக்கிறேன்.
1722, from It. terra cotta, lit. "cooked earth," from terra "earth" (see terrain) + cotta "baked," from L. cocta, fem. pp. of coquere (see cook). As a color name for brownish-red,
attested from 1882."
அன்புடன்,
இராம.கி.
----------------------------------------------------
இப்படிச் சுடுமண் பொம்மை என்ற எல்லோரும் அறிந்த சொல்லைக் கூடச் சென்னை போன்ற பெருநகர்களில் பலதரப் பட்ட மக்களும் புழங்காதிருந்தால் எப்படி? என்னைப் போன்றவர்கள் அதைச் சுட்டிக் காட்டுவது தப்பா?
தமிழகத்தில் அறிவியல், நுட்பியல் கருத்தரங்குகளில் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார்கள் என்று தான் சொன்னேன். (நீங்களே பாருங்கள், நுட்பியல் என்று சுருக்கமாய்ச் சொல்லுதற்கு மாறாக தொழில் நுட்பம் என்ற நீண்ட சொல்லை இன்னும் பழமை மாறாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு எப்படித் தமிழ்நடை வளரும்? சொற்சுருக்கமும், துல்லியமும் கூடாமல் எப்படி அறிவியலும் நுட்பியலும் வளரும்? இது ஒரு இயக்கம், அய்யா! மீண்டும், மீண்டும் நாமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.) அதே பொழுது ஒருசிலர் மிகுந்த முயற்சி எடுத்துத் தங்களால் இயன்ற அளவில் மேலே சொன்னது போல் 70%, 80% தமிழில் உரைகளைக் கொடுத்துத்தான் வருகிறார்கள். அவர்களைப் போன்று மற்றோரும் முன்வர வேண்டும்.
இது போன்ற கலப்புத் தமிழில் உரையாடுவதற்குக் காரணம் பெரும்பாலும் (95%) பேசுவோரின் சோம்பற் தனம் தான். இவர்கள் தங்களின் தமிழ்ச் சொற்குவையைக் கூட்டிக் கொள்வதில்லை. ஆங்கிலத்தில் உள்ளது போல் துல்லியமாய்ப் பேசத் தமிழ்ச் சொற்களின் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களின் உரை, கூர்மைப் பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள் இல்லை. ஏன், தமிழ் அகரமுதலிகளை அவ்வப்போது புரட்டி, புதிய சொற்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவது கூட இல்லை.
தமிழ் மொழிக் காப்பாளர்கள் என்று யாருமே தனியாக இல்லை. நீங்களும், நானும், நம்மைப் போன்றோரும் தான் தமிழ்மொழியைப் பேண வேண்டியவர்கள்; நாம் நம் பொறுப்புகளில் இருந்து வழுவுகிறோம், அவ்வளவுதான். பெற்றோரை அகவை கூடிய காலத்தில் தூக்கி எறிவது போல, நாம் தமிழ்ப் புழக்கத்தைக் குறைத்துக் கொள்ளுகிறோம்.
"பல மொழிகள் பேசுபவர்கள் (குறிப்பாக இந்தியர்கள்)கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மொழியை தங்களது வெளிப்பாடுகளில் குறைவாகப் பயன்படுத்திவருவதை அவதானிக்கலாம்"
என்று எழுதியிருந்தீர்கள். இவற்றிற்குச் சோம்பல், முட்டாள்தனம், உலகமயமாக்கல் என்னும் சோதியில் கலப்பதற்காக ஒடிச் சேரும் அடிமைத்தனம், நம்முடைய பெருமிதத்தை உணராமை, எனப் பல காரணங்களை என்னால் கூற முடியும். தமிழை இந்தக் காலத்திலும் காப்பாற்றி விடுவோம் என்று தான் குறியேற்றம் போன்ற செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழுக்குச் சாவு மணி அடிக்க வேண்டுமானால், நாளைக்கு முதல்வர் கலைஞர் ஓர் அரசாணை கொண்டு வந்து, "இனிமேல் தமிழை எல்லோரும் உரோமன் எழுத்துக்களில் தான் எழுதவேண்டும்" என்று சொன்னால் போதும், எல்லாமே "ஓ கயா". நாமெல்லோரும் உலகமயமாக்கலில் ஒன்றிவிடுவோம். இது தான் நமக்குத் தேவையா? தமிழர் என்று ஓரினத்தார் இருந்தார்கள் என்று நூறாண்டுகளுக்கு அப்புறம் சொல்லுவார்கள். செல்டிக் என்ற இனத்தார் அழிந்தபடி, ஐரிஷ் என்று இனத்தார் இன்று அழிந்து கொண்டிருப்பது போல; நான் சொல்லிக் கொண்டே போகலாம். அய்யா, இது அடையாளச் சிக்கல்.
"பழைய மொழிகளெல்லாம் வெறும் அடிப்படை உணர்வு, கருத்து, சிந்தனை வெளிப்பாடுகளுக்குத்தான் அம்மொழி பேசுபவர்களால் பயன் படுத்தப்படுகின்றன"
என்று எழுதினீர்கள். அது தவறு. நான் பார்த்தவரை தமிங்கிலம் பழகியவர்கள் நாவில், முயற்சி ஏதும் இல்லை என்றால், அன்றாடப் பேச்சில் கூட ஆங்கிலம் கூடிக் கொண்டு தான் வருகிறது. அந்த வீட்டினர் தோற்றத்தால் தமிழராய் இருந்து சிந்தனையால் ஆங்கிலராயோ, அல்லது கலப்பராகவோ மாறிப் போகின்றனர். அவர்களின் அன்றாடச் சொற்களும் ஆங்கிலமாய் ஆகிப் பண்ணித் தமிழாய் ஆகிவிடுகிறது. இவ்வளவு ஏன், மேலே சொன்ன சுடுமண் போல, தமிழ்க் காய்கறிகளின் பெயர்களைக் கூட மறந்து கோயம்பேட்டில் ஆங்கிலச் சொல்லைக் கூறியே காய்கறி வாங்குகிறவர்கள் உண்டு. நண்பரே ஒரு பெரிய நோய் பரவிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் எல்லாமே மாய்ந்து போகும்.
"நுணுக்கமான விடயங்களை, தற்கால வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை வெளிப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டால்
எல்லோரும் சகஜமாக ஆங்கிலத்துக்குத்தான் தாவுகிறார்கள் இந்த நிலமையை பெரும்பாலானோர் (பெரிய படிப்பு படித்தவர்களும்
பாமரர்களும் கூட) எற்று வருகிறார்கள்."
என்று நீங்கள் எழுதிய நடைமுறை உண்மையை ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆனால் சும்மா கிடப்பதே சுகம் என்ற சோம்பற் தனத்தால் அல்லவா, இது நடக்கிறது? தமிழ் நாட்டில் நடக்கின்ற ஒரு கருத்தரங்கில் மேடையில் தமிழே இல்லையே என்று ஒரு பெரியவர் ஆதங்கப் பட்டது தப்பா? தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுங்கள் என்று கூடச் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு அரசுச் செயலருக்குக் கவனக் குறைவா?
"மொழி என்பது தன்னுள் தோன்றும் உணர்வுகளையும், சிந்தனைகளையும், கருத்துக்களையும் பிறர்க்கு "தெளிவாகத்" தெரிவிப்பதற்காகத்தான்" என்று எழுதியிருந்தீர்கள். உண்மைதான். ஆனால் "தெளிவாகத்" தெரிவிப்பதற்குத் தமிழில் மூங்கையாய் (ஊமையாய்) இருந்தால் எப்படி? யாரோ ஒரு வெளிநாட்டுக் காரன் போல வெளி மொழிச் சொற்களை அளவிற்கு மேல் போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? தமிழ் மறந்தல்லவா போகும்?
"பேராசிரியர்" என்ற சொல் பலருக்கும் தெரிந்த தெளிவுச்சொல் தான் அய்யா!
"படியகம்" என்று நான் சொன்னது podium என்பதற்கு இணையாக நம்முடைய படியின் நீட்சியே (படி>படியகம்) பயன்பட முடியும் என்று சொன்னேன். நம்மில் பலரும் எதையெடுத்தாலும் மேடை, அரங்கு என்று மட்டுமே சொல்லிக் கொண்டு மொண்ணையாக உரையாடிக் கொண்டு இருக்கிறோம். மேடை என்பது stage; அதில் பேசுபவருக்காகப் போட்டிருப்பது படியகம். எண்ணிப் பாருங்கள் இரண்டிற்கும் ஒரே சொல்லைப் பயன்படுத்தி, இல்லை என்றால் மேடை, பேசுமேடை என்று சுற்றி வளைத்து சொல்லி, இல்லையென்றால் ஸ்டேஜ், போடியம் என்றே சொல்லி நாம் நம் சிந்தனை வளத்தைக் குறைத்துக் கொள்ளுவது தான் வளர்ச்சியா? அப்படி என்ன முன்னேற்ற ஓட்டத்தில் முடங்கி விட்டோம்? இன்றைக்கு ஒருவர் படியகம் என்றால், நாளைக்கு நாலுபேர் அதைப் புழங்கினால், இது கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடைந்து ஊரெங்கும் பரவாதா? பின்னூட்டு என்ற சொல் தமிழ் இணையம், தமிழ் உலகம், அகத்தியர் போன்ற குழுக்களில் தான் முதலில் தொடங்கியது. அங்கு தான் அதை முதலில் உரைத்தேன். இன்றைக்கு உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகம் அந்தச் சொல்லைப் பழகிக் கொள்ள வில்லையா? "1960"களின் முடிவில் எங்கள் கோவை நுட்பியற் கல்லூரியின் (CIT) தமிழ்மன்ற மலரான "தொழில் நுட்பம்" என்ற இதழில் "இயல்பியல்" என்ற சொல்லை நானும், இன்னும் சிலருமாய் முதலில் உரைத்தோம்; இன்றைக்கு அது தவறாகப் பலுக்கப் பட்டு, இயற்பியல் என்று ஆகிப் போனாலும், மனம் பெருமிதப் பட்டுப் போகிறது. ஏனென்றால் தமிழ்ச்சொல் பரவி விட்டது. ஆக, நாம் நினைத்தால் முடியும், அய்யா.
"உள்ளுருமம், உள்ளுரும நுட்பியல்" பற்றி முன்னே தமிழ் உலகம் மடற்குழுவில் எழுதிய நினைவு. தகவல் தொழில்நுட்பம் என்ற சொல், ஆழமான கருத்துக்களைச் சொல்லும் விதமாய், முன்னொட்டாய் வரும் வகையில், அமையவில்லை என்பது என் கணிப்பு. வேண்டுமானால், இன்னொரு முறை விளக்கம் பின்னால் தருகிறேன். ஆனால் தகவல் தொழில்நுட்பம் என்ற சொல் நம்மைக் கடைசி வரை சவலைப் பிள்ளையாகவே வைத்திருக்கும் என்பதில் ஆழ்ந்த உறுதி கொண்டிருக்கிறேன். அந்தச் சொல் மாற வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டிருக்கிறது.
செற்றம் என்ற சொல்லைப் பற்றி நீங்கள் குறித்ததைப் பார்த்தவுடன் சிறு நகை கொண்டேன். கொஞ்ச நேரம் இந்தச் சொல்லில் செலவழிப்போம். சில்லுதல் என்றால் உடைத்தல். சில் என்பது உடைந்த துண்டு. சில்லுதலின் வழியாகத்தான் சிலர், சிறு, சின்னம் எனப் பலப்பல சொற்கள் தோன்றின. சில்லுதலின் தொடர்ச்சி தான் சிலைத்தல் - சிலை. சில் என்பதில் உகரம் முடிவில் சேராமல் இருந்தால் சில்+தல்>சிற்றல் = சிறிதாக்குதல் என்ற பொருள் கொள்ளும். சிற்றல் சிற்றுதலாகி சிறுதலும் ஆகும். இது போன்ற சொற்கள் ஏற்படுவது மொழியின் வளத்தைக் குறிக்கிறது. சில்லுதல் சில்குதல் என்றும் பலுக்கப் படும் - சின்னஞ் சின்னமாய் ஆகிப் போதல். பின்னால் சில்குதல்>செகுதல் என்றும் திரியும். செகுதல் என்றால் பிரிதல், சின்னாப் பின்னமாய் ஆகுதல். வள்ளுவர் கூட "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று" என்றார். செகுத்தல் = பிரித்தல், to sect (மேலையிரோப்பியத் தொடர்பை அறியுங்கள்.) section = செகுத்தம் = பிரிவு. இதே கருத்துத் தொடர்ச்சியில் தான் செற்றம் = session என்ற சொல் எழுந்தது. எண்ணிப் பாருங்கள், எதற்கு எடுத்தாலும், பிரிவு, வகுப்பு என்ற இரண்டு சொற்களை வைத்துக் கொண்டு மொண்ணையாகத் தமிழில் உரையாடுகிறோம் இல்லையா? second session of the third division of the 14th plenum என்பதைத் தமிழில் சொல்ல சொற்கள் வேண்டாமா? "14வது அரங்கத்தின் மூன்றாவது பிரிவின் இரண்டாம் செற்றத்தில்" என்று சொன்னால் நம் மொழிநடை கூர்மையான நடை என்று சொல்ல முடியும்; அப்படி ஒரு நடையை நாம் தமிழில் கொண்டு வரவேண்டும். ஆங்கிலம் இவ்வளவு வளர்ந்ததிற்குக் காரணம் சொற்களைக் கடன் கொண்டது அல்ல. (பலரும் புரியாமல் அப்படிச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். கடன் வாங்கி வைத்தாலே நமக்கு வளம் வந்துவிடுமா? எதற்கு எதைப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையில்லாமல் போனால் எப்படி?) சிந்தனையைக் கூர்மைப் படுத்தி நுணுக்கத்திலும் நுணுக்கம் பார்த்ததால் தான் ஆங்கிலம் என்ற மொழி வளர்ந்தது. அது தான் மொழிநடையை வளர்க்கும். நடுவில் ஒன்றிரண்டு ஆங்கிலச் சொற்களைத் தாராளமாய்ப் போட்டு எழுதுங்கள்; தவறில்லை; அதுவெல்லாம் நாளாவட்டத்தில் சரியாகிவிடும்; ஆனால் கூடிய மட்டும் நல்ல தமிழில் எழுதுங்கள் என்று தான் சொல்லுகிறேன்.
"நண்பர் ராமகியைத் தவிர மற்றவர்களெல்லாம் அரங்கத்திலிருந்து ஓடியிருந்திருப்பார்கள் அல்லவா?"
என்ற உங்கள் வாக்கைப் படித்துச் சிரித்தேன். நடந்திருக்கக் கூடும். ஆனால் இது போன்ற செய்திகளை நாளா வட்டத்தில் சிரிப்பும், சிந்தனையுமாய், ஆட்களைக் கையாளும் விதத்தில், ஒரேயடியாகத் தமிழைக் கையாளாமல், சிறிது சிறிதாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலச் சொன்னால், இத்தனை தமிழ்ச் சொற்களும் பொதுப் புழக்கத்திற்கு வரும்.
"லெட் டS பி டுரூத்புல் அண்ட் ரியலிSடிக்"
என்ற உங்களின் கூற்றிற்கு என் மறுமொழி: நோயாளியின் ஊறுகளைப் புரிந்து, உண்மையை உணர்ந்து அவருக்கு நல்வழி சொல்லிக் கொடுக்கும் மருத்துவர் எனவே என்னைக் கருதிக் கொள்ளுகிறேன். நான் படித்ததை என் உற்றாருக்குச் சொல்லிக் கொடுக்காவிட்டால் எப்படி? நான் ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டாமா? நோயாளியை அருகில் போட்டுக் கொண்டு, "இறைவனே காப்பாற்று" என்று புலம்பும் பெந்தெகொஸ்தக் காரர்களைப் போல் என்னால் இருக்க முடியாது. (பெந்தெகொஸ்தக் காரர்களே, சண்டைக்கு வந்து விடாதீர்கள். உங்கள் வழிமுறைகளைப் புரிந்து கொள்ளுகிறேன். அது உங்கள் நம்பிக்கையின் பாற்பட்டது.)
--------------------------------------------------------------------------
"நண்பர் திருவரசு குறிப்பிட்ட குறுக்குவழி அறுவை சிகிச்சை என்கிற சொல்லாடல் தற்காலத் தமிழகத்தினரின் வாயிலிருந்தும்
பேனாவிலிருந்தும் இயல்பாக வராது எலோரும் "பைபாS சர்fரி" என்றே சொல்லி எல்லோருக்கும் தெளிவாகத்
தமிங்கிலத்தில் தெரிவித்துவருகிறார்கள்"
--------------------------------------------------------------------------
என்று எழுதியிருந்தீர்கள். நாம் என்றைக்குத்தான் மாறுவது? சாலைகளில் போடும் குறுக்கு வழி தெரிகிறது. குருதிக் குழாய்களிலும் குறுக்கு வழி ஏற்படுத்த முடியும் என்ற சிந்தனைப் பொறியைத் தூண்டக் கூடாதா? "குறுக்குவழிப் பண்டுவம் (bypass surgery) செய்து கொண்டேன்" என்று முதலில் சொல்லுவது ஒரு சிலருக்குச் செயற்கையாய்த் தெரியலாம். ஆனால் பத்துப் பேர் விளங்கிக் கொண்டால் அப்புறம், அது மற்றோருக்கும் இயல்பாய் வந்துவிடும்.
அதே மாதிரி stent பற்றியும் ஒரு குறுகிய சொல்லை உருவாக்க முடியும். நண்பர் திருவரசு இருக்கின்ற சொற்களை வைத்து விளக்கம் தருவது போல் எழுதினார்; தவறில்லை.
அன்பிற்குரிய இண்டிராம், நீங்கள் முடிவாகக் கூறிய வாக்கியத்தை நீங்களே படித்துப் பாருங்கள்:
--------------------------------------------------------
"இந்த இயலாமை பேராசிரியர் திரு.குழந்தைசாமியையே பாதித்திருக்கிறாது என்றால் மெட்ரிகுலேசன் பள்ளிகளில்
படித்துவரும் வருங்கால தமிழ்ச் சந்ததியினரிடமிருந்து வருங்காலத்தில் நாம் தமிழ் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்கலாம்? எதிர்பார்க்கக்கூடும்? இன்னும் குறைவானப் பயன்பாடுதான் இல்லையா? இந்த மொழித் தேய்மானத்தை, அழிவு நோக்கி ஓடும் நிலைமையை தடுக்கமுடியுமா? இக்கேள்வி பல மொழியினரின் அடிமனதில் இருந்து உறுத்திவருகிறது
தங்களது கருத்தென்னவோ?"
-----------------------------------------
நண்பரே! புண் பெரிதும் புரையோடிப் போயிருக்கிறதல்லவா? அந்தப் புண்ணைச் சொரிந்து கொண்டு ஆதங்கப் படுவோமா? அல்லது புண்ணைத் தீர்க்க வழி பார்ப்போமா? முடிவில் ஒன்று சொல்லி அமைகிறேன். தெறுமத் துனவியல் (thermodymamics) இரண்டாம் விதி சொல்லுகிறது.
"எந்த முயற்சியும் எடுக்காத வரை, தனித்துக் கிடக்கும் கட்டகம் (sytem) சீரழிந்து தான் போய்க் கொண்டிருக்கும்"
அன்புடன்,
இராம.கி.
28 comments:
இராம.கி ஐயா,
ஏனோ தெரியவில்லை, தமிழகத் தமிழர்கள்தான் தமிழில் ஆங்கிலத்தைப் அதிகம் புகுத்துகிறார்கள். ஈழத்தில் அப்படியல்ல.
இது போன்ற முயற்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ் தழைத்து வாழும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
"தமிழ் மொழிக் காப்பாளர்கள் என்று யாருமே தனியாக இல்லை. நீங்களும், நானும், நம்மைப் போன்றோரும் தான் தமிழ்மொழியைப் பேண வேண்டியவர்கள்; நாம் நம் பொறுப்புகளில் இருந்து வழுவுகிறோம்"
"எந்த முயற்சியும் எடுக்காத வரை, தனித்துக் கிடக்கும் கட்டகம் (sytem) சீரழிந்து தான் போய்க் கொண்டிருக்கும்"
நீங்கள் கூறுவது உண்மைதான்.
இவ்விடத்தில் சில விடயங்களை நினைவு படுத்த விரும்புகிறேன்.
மூதறிஞர் ராஜாஜி தமிழைப் பயிற்சி மொழி ஆக்க வேண்டும் என்று, தமிழில் விஞ்ஞானக் கருத்துக்களை விளக்க முடியும் என்பதை "தமிழில் முடியுமா?", "திண்ணை இரசாயனம்", "தாவரங்களின் மணவாழ்க்கை" போன்ற நூல்கள் மூலம் நிரூபித்தார்.
1965 இல், தமிழ் நாட்டில் ஆங்கிலமே பயிற்சி மொழியாக இருக்கவேண்டும் என்று பல்கலைக் கழகமே விடாப்பிடியாக இருந்த காலத்தில், தமிழில் எல்லப் பாடங்களையும் கற்பிக்க முடியும் என்று நிரூபிக்கும் வகையில் எட்டுப் பேரறிஞர்களின் கட்டுரைகளைத் தொகுத்து புது யுக புத்தகப்பண்ணை (NCBH) முதற்பதிப்பாக "தமிழில் முடியும்" என்ற நூல் வெளியிடப்பட்டது.
இந்நூலில் 8 துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் தங்கள் துறைசார்நத விடயங்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.
வரலாறு - வித்வான் ந.சுப்ரமணியன்
மெய்யுணர்வு - டாக்டர் வ.ஆ.தேவசேனாபதி
அரசியல் - டாக்டர் சி.ஏ.பெருமாள்
பொருளாதாரம் - பேராசிரியர் டி.செல்லப்பா
தாவர இயல் - ஏ.எஸ்.மூர்த்தி
விலங்கியல் - எஸ்.தோதாத்ரி
ரசாயனம் - நா.வானமாமலை
பௌதிகவியல் - அ.நடராசன்
ஏறக்குறைய 50 ஆண்டுகளாக தமிழ் மொழியில் பல விஞ்ஞானக் கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்ட, தமிழ் மொழியில் ஆழ்ந்த பற்றும் சீரிய புலமையுமுடைய பெ.நா.அப்புஸ்வாமி அவர்கள் வழங்கிய முன்னுரையில்
\\ வெற்றி பெறும் நாள் வேண்டினால் வராது; வணங்கினால் வராது; நினைத்தால் வராது; முயன்றால் மட்டுமே வரும். அந்நாள் விரைவில் வருமாறு அனைவரும் ஒன்றாக முயல்வோமாக.\\
என்று குறிப்பிட்டுள்ளார்.
நாம் அனைவரும் ஒன்றுபட்டு முயல்வோமாக.
ராஜாஜி,பெ.நா.அப்புஸ்வாமி,எஸ்.தோதாத்ரி,நா.வானமாமலை
இவர்களும், இன்னும் இவர்களைப் போன்றவர்கள் தமிழுக்கு என்ன நல்லது செய்திருந்தாலும், நாங்கள் அவர்களை பார்ப்பனர் என்று தூற்றுவோம், இகழ்வோம். பெரியார் புகழ் ஒங்குக.
ஒருவர் என்னதான் தமிழ் பற்றாளராக இருந்தாலும், தமிழ் ஆர்வம் கொண்டவராகவும், உயர் கல்வி பெற்றிருந்தாலும், தகுதி பெற்றவராக இருந்தாலும் அவர் பார்பனர் என்றால் தமிழ் நாட்டில் உள்ள
பல்கலைகழகங்களில் அவருக்கு வேலை கிடைப்பது கடினம். காரணம் இட ஒதுக்கீடு போன்ற காரணங்கள். தேவநேயப் பாவாணரும், தி.கவினருமா அறிவியல் தமிழை வளர்த்தார்கள்
இரண்டு அனானி சனியன்கள் பதிவை திசை திருப்ப முயல்கின்றன. சம்ஸ்கிருத வெறி பிடித்த பார்ப்பனர்களைத்தான் தமிழர்கள் எதிர்க்கிறார்களோ ஒழிய அனைவரையும் அல்ல.
நல்ல அனானி
அன்பு இராமகி அய்யா, உங்களின் கருத்தை நான் முழுமனதோடு ஆதரிக்கிறேன். நாம் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்த முயலாமல் முடியாது என்று சொல்லக்கூடாது. தொடர்ந்து பயன்படுத்தினால் அது மிகவும் எளிதாக வந்துவிடுகிறது. வித்தியாசமும் தோன்றுவதில்லை. உதாரணத்திற்கும் நான் சில காலத்திற்கு முன்பு வரை தொலைபேசியை எடுத்தால் ஹலோ என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்துவேன். இப்பொழுது தமிழ் பேசுபவர்களிடம் பேசும் போது வணக்கம் என்றே ஆரம்பிக்கிறேன். அவர்களும் வணக்கம் என பதில் தரும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி முடிந்தவரை நாம் தமிழை அன்றாட வாழ்க்கையில் பயன் படுத்த முடியும். அதை தமிழர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். இரண்டு மலையாளிகள் சந்திக்கும் போது அவர்கள் பேசுவது மலையாளம் தான். ஆனால் நாம் தான் தமிழன் என்று தெரிந்தும் ஆங்கிலத்தில் உரையாடுகிறோம். இது மிகவும் வருந்தத்தக்கது. முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. உங்களை போன்ற அறிஞர்கள் தொடர்ந்து தமிழுக்காக உழைத்து வருவதை நினைக்கும் போது ஒரு சிறு அணிலாக நாம் ஏன் இருக்கக் கூடாது என்ற எண்ணம் இம்மடல்களை படிப்பவர்கள் மனதில் தோன்றினால் அதுவே ஒரு நல்ல அறிக்குறி. நண்பர்களே முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நம்மால் முடியும்.
நன்றி இராமகி அய்யா
ஐயா அருமையாக சொன்னீர்கள். நான் தமிழில் தேர்ச்சி பெற்றவனல்ல முடிந்தவரை தமிழில் பேசமுற்படும் ஆர்வலன், நான் ஊரில் பேசினதையே இங்கு சில நண்பர்களிடம் பேசினால் தமிழ் புலவர் என்ற அளவுக்கு அவர்கள் என்னைப்பற்றி எண்ணுகின்றனர் :-)) (வஞ்சப்புகழ்ச்சி கிடையாது :-)) ) காரணம் சென்னை வாசிகளான அவர்கள் அதிகம் தங்கள் பேச்சில் தமிழை புழங்காததே.
ஒரு உதாரணம்:
என் Car கதவுல ஒடுக்கு விலுந்திருச்சு என்று சொன்ன போது அவர்களுக்கு புரியவில்லை. அதாவது ஒடுக்கு என்றால் என்னவென்று அவர்களுக்கு தெரியவில்லை.
Dear Sir!
Please continue your good work. I am penning this from a site that does not let me type in Tamil. I had an opportunity to give a technical talk in an Engineering Institute. I chose to speak in Tamil. It is entirely possible to use Tamil in Engineering.
I got a very positive response from the audience. Tamils for generations have been raised to expect things to be handed to them; they refuse to create it out of so much wealth left by their own ancestors.
Auwwai expressed non-compressibility of liquids in Tamil. We have so much literature, even the religious ones like Thiruvasaham, using very developed and finer language.
We need to spend less time on even these useless negative remarks. Publishing worthy material in book forms, rivalling the quality work in English should be our goal. I am involved in such a work.
Regards
Angamuthu
அன்பிற்குரிய வெற்றி,
நீங்கள் சொல்லுவது ஓரளவு சரி. ஆனாலும், ஈழத்தமிழர்கள் பல நாடெங்கும் புலம் பெயர்ந்த நிலையில், இளம் தலைமுறையிடம் ஒரு மொழிச் சிக்கல் உருவாகிக் கொண்டிருப்பதாகத் தான் பலரும் சொல்லுகிறார்கள். இதில் என்னுடைய அறிவு கம்மி. அறிந்தவர்கள் இதைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
அன்பிற்குரிய லொடுக்குப் பாண்டி,
உங்கள் கனிவிற்கு நன்றி
அன்பிற்குரிய விருபா,
மூதறிஞர் இராசாசியின் தமிழ்க் கட்டுரைகளையும், அவருடைய ஆர்வத்தையும் அறிந்தவன் தான். இன்றைக்கு நாம் எல்லாம் புழங்கும் பாராளுமன்று என்று சொல்லைக் காட்டிலும் நாடாளுமன்று என்று சொல்லுவது சிறப்பாக இருக்கும் என்றும், இதுபோல பல தமிழ்ச் சொல்லாக்கங்களையும், உருவாக்கியவர். அவருக்கு உள்ள மரியாதை என்றும் இருக்கும். அதே போல தமிழில் முடியும் என்று NCBH வெளியிட்ட பொத்தகம் பலராலும் பாராட்டப் பட்ட ஒன்று தான். பேரா. நா. வானமாமலை, பெ.நா. அப்புசாமி ஆகியோரின் ஆக்கங்களை நான் விரும்பிப் படித்தவன்.
ஆங்கிலத்தால் தமிழுக்கு அவல நிலை ஏற்பட்டதை மட்டும் மேலோட்டமாய்த் தொட்டுச் செல்கிறேன்.
குறிப்பாக 1960 களில் பல கட்சியினரும் சிந்தனையாளர்களும், தமிழில் கல்வி நோக்கி நகர்ந்து கொண்டு தான் வந்தார்கள். பின்னால் சில கல்வி வணிகர்களால், அதற்குத் துணைபோன அரசியல் வாதிகளால் (நான் பெயர்களைச் சொன்னால் உரையாடலின் திசை மாறிப் போகும்.) இந்த் சீரழிவு 80களில் நடந்தது. இவற்றின் ஊற்றுக்கண் மடிக்குழைப் பள்ளிகளை (matriculation schools) ஊரெங்கும் பரப்பிவிட்டதும், தமிழ் மிடையக் காரர்கள் (media)ஆங்கிலம் கலந்த மொழியைச் சரளமாய்ப் பயன்படுத்தத் தொடங்கியதும் தான்.
இதே நேரத்தில், பாழாய்ப் போன பட்டிமண்டபம், கவியரங்கம், வழக்காடு மன்றம் எனப் பள்ளித் தமிழாசிரியர்கள் தங்களின் பள்ளித் தலைமை நிலையை விடுத்துப் பணம் பண்ணுவதற்காக, ஊரெங்கும் அலைந்து களிப்பாளர்கள் (entertainers) ஆகிப் போனார்கள். தலைமை இல்லாமற் போன இடம் வெற்றிடம் ஆகியது. பெரும்பாலான பள்ளிகளில் தமிழய்யாவிற்கு இருந்த மதிப்பு சீரழிந்தது. அவரிடம் பணம் பெருத்தது. வட்டிக்குப் பணம் கொடுக்கும் நிலையாய், சொத்து வாங்கும் நிலையாய், செல்வ வளம் கூடியது. இடையில் தமிழ் தான் சவலைப் பட்டுப் போனது. ஆனாலும் தமிழாசிரியரை நான் குறை சொல்ல மாட்டேன். எவ்வளவு நாளைக்குத் தான் வறுமையில் அவர்கள் திரிவார்கள்? அவர்கள் வலு இல்லாதவர்களாய் விட்டில் பூச்சிகளாய் ஆனார்கள்.
பொதுவாக குமுகத்தில் தலைமைப் பண்பு இல்லாமலே போனது. பணம் பண்ணும் போக்கால், திராவிடம் பேசி வந்தவர்கள், தங்களின் அரசியல் வாழ்வில், மக்களின் எதிர்பார்ப்புக்களைத் தொலைத்து, நீர்த்துப் போனார்கள். ஏதொன்று சொன்னாலும் அது வாயிதழ் மட்டிலேயே இருந்தது.
அந்தச் சோகங்களை இனியும் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். புதிய உணர்வு நம்மைப் போன்றவர்களிடம் இருந்து பரவட்டும். இழந்ததைத் திரும்பப் பிடிப்போம். மறைமலை அடிகளின் இயக்கம் போல இன்றைக்கு இன்னொரு தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் தோன்ற வேண்டும்
அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,
சொல்லவந்த கருத்துப் புரியவில்லையா? இராசாசி, பெ.நா, அப்புசாமி, நா. வானமாமலை ஆகியோரின் தமிழ் அறிவியற் படைப்புக்களைப் பாராட்டியவர்கள் இருந்தார்கள். இதில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் என்ற சிக்கல் எங்கே வந்தது? எங்காவது சொல்லியிருக்கிறேனா? அதே போல பெரியாரை நையாண்டி செய்வதும் ஏன்? நான் இதற்கு முன்னால் பெரியாரின் நினைவாகப் பதிவு போட்டதாலா? நண்பரே! மஞ்சள் கண்ணாடி போட்டுப் பார்த்தால் உகம் மஞ்சளாய்த் தான் தெரியும். தன்னைக் கொட்டடியில் கட்டிப் போட்டு வெளிவரமுடியாமல் இருந்த மஞ்சவிரட்டுக் காளை வெளிவந்தவுடன், கண்மண் தெரியாமல் எல்லோரையும் முட்டக் கிளம்பும் பாருங்கள், அது போன்று இருக்கிறது உங்கள் பின்னூட்டு. சினம் குறையுங்கள். கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள். தமிழ்க் குமுகத்தில் நீங்களும் ஓர் அங்கம் தான்.
அடுத்துவரும் பின்னூட்டும் உங்களுடையதோ என்ற அய்யத்தில் இங்கேயே மறுமொழிக்கிறேன். பார்ப்பனருக்குத் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் வேலைகிடைப்பது, கிடைக்காது என்பது வேறு புலனம். அதை இங்கு பேசவில்லை. இடவொதுக்கீடு என்பது வேறு விதயம். அதை இங்கு பேசவில்லை. இவற்றிற்கெல்லாம் தமிங்கிலம் என்பதோடு விளிம்பு நிலைத் தொடர்பே உண்டு.
தேவநேயப் பாவாணர் பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்தால், அவரா அறிவியல் தமிழ வளர்த்தார் என்ற கேள்வியை எழுப்பி இருக்க மாட்டீர்கள். இன்றைக்குத் தமிங்கிலம் எதிர்த்துத் தமிழ் நலம் காணப் பாடுபடும் ஆர்வலர்களில், 95% விழுக்காடு தேவநேயரின் வழிவந்தவரே! நானும் அப்படிப் பெருமிதம் கொள்ளுபவன் தான். தேவநேயரிடம் இருந்து ஆய்வுப் போக்கில் ஓரளவு நான் மாறியிருந்தாலும், அவருடைய முன்னணிப் பங்கை மனதாரச் சொல்லுவேன்.
திராவிடக் கட்சியினர் என்றால் அதிலும் பல பிரிவுகள்; நீர்த்துப் போனவர் பெரும்பான்மை என்றால், ஆர்வம் கொண்டவர் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை எளிதில் அடையாளம் காண இயலும்.
அன்பிற்குரிய நல்ல பெயரிலி,
உங்கள் எழுதருகைக்கு (எச்சரிக்கைக்கு) நன்றி.
அன்பிற்குரிய மஞ்சூர் ராசா,
வணக்கம் சொல்லித் தொடங்குவது மிக நல்ல பழக்கம். அதே போழுது ஆங்கிலத்து hello வின் தொடக்கம் வரலாற்று வகையில் நம் தென் தமிழகத்து "ஏலா"வில் தொடங்கியது தான். இந்த ஏலா இல்லாமல் தென் தமிழகக் கடற்கரையில் நகர முடியாது. ஏலன் என்பவன் தோழன்; ஏலி = தோழி.
அன்பிற்குரிய குறும்பன்,
ஒடுக்கு விழுந்திருச்சு என்பது வட்டார வழக்கு. இன்னொரு வட்டாரத்தில் தெரியாமல் போகலாம். நீங்கள் ஊனம், குறை என்ற பொருளில் சொல்லுகிறீர்களா?
அன்பிற்குரிய அங்கமுத்து,
உங்கள் அன்பிற்கு நன்றி. தமிழில் அறிவியல் பற்றி ஆய்வதற்கும், சொல்லுதற்கும் நிறைய உள்ளது. செய்யத்தான் ஆளில்லை. செய்பவர்களும் அரைத்ததையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றித் தனிப் பதிவு போடவேண்டும்.
அன்புடன்,
இராம.கி.
ஐயா ஒடுக்கு (Dent) ஊனம் என்ற பொருளில் வரும்.
அதுவே மருவி கல்லூரிகளில் 'டொக்கு' வாகிப்போனது என்று இதுவரை நினைத்துள்ளேன். அவனுக்கு டொக்கு வாய் (டொக்குவாயன்) என்று ஒல்லியான குழிவிழுந்த கன்னம் உடையவரை கிண்டல் பண்ணுவார்கள்.
ஐயா ஒடுக்கு (Dent) ஊனம் என்ற பொருளில் வரும்.
அதுவே மருவி கல்லூரிகளில் டொக்கு வாகிப்போனது என்று இதுவரை நினைத்துள்ளேன். அவனுக்கு டொக்கு வாய் (டொக்குவாயன்) என்று ஒல்லியான குழிவிழுந்த கன்னம் உடையவரை கிண்டல் பண்ணுவார்கள்.
//அன்பிற்குரிய வெற்றி,
நீங்கள் சொல்லுவது ஓரளவு சரி. ஆனாலும், ஈழத்தமிழர்கள் பல நாடெங்கும் புலம் பெயர்ந்த நிலையில், இளம் தலைமுறையிடம் ஒரு மொழிச் சிக்கல் உருவாகிக் கொண்டிருப்பதாகத் தான் பலரும் சொல்லுகிறார்கள். இதில் என்னுடைய அறிவு கம்மி. அறிந்தவர்கள் இதைப் பற்றிச் சொல்ல வேண்டும்.//
ஐயா, நான் குறிப்பிட்டது தற்போது ஈழத்தில் வசிக்கும் தமிழர்களை. நீங்கள் குறிப்பிட்டது போல் புலம் பெயர்ந்து வாழும் இளம் ஈழத்தமிழ்ச் சந்ததியினரில் தமிழ் பேச முடியாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இது பற்றி ஒரு கணிப்பீடுகளும் இதுவரை செய்யாததால் உண்மை நிலை என்னவெனத் தெரியாமல் உள்ளது.
They have published a narrative of a Elam Tamil refugee woman in Anantha Vikatan or Kumudham (also published in www.tamilnaatham.com). There is no trace of English in her speech.
வைசா,
//நீங்கள் முதலில் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிட்ட போது நானும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களைக் குறிப்பிடுவதாகவே புரிந்து கொண்டேன். ஏனென்றால் நீங்கள் வசிப்பது கனடாவில் அல்லவா?//
உண்மை. நான்தான் தெளிவாகச் சொல்லவில்லை. அதனால்தான் அடுத்த பின்னூட்டமிட்டு தெளிவுபடுத்தினேன். உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.
திரு. இராம கி அய்யா!
நீங்கள் பாவிக்கும் சொற்கள், தமிழ் மொழி இயல்பாகவே ஒரு அறிவியல் மொழி என்பதை நிலைநாட்டுகின்றது. இதில் பல சொற்களை எடுத்து அப்படியே எழுதிவருகின்றேன். எதோ ஒரு இயல்புத்தன்மை புலப்படுகின்றது என்பது வெளிப்படை.
ஊடகம் என்றே எழுதி வந்தேன். என்னை அறியாமலே 'அலைகள் பயணிக்கும் மிடையம்' என்று எழுதிவிட்டேன். பொறிஞர். நாக இளங்கோவனும் அப்படியே எழுதிவருவதைக் கவனிக்கின்றேன்.
தொடர்ந்து எழுதுங்கள்! சொற்களின் வேர் அறுத்துப் பார்க்கும் நயம் தொடர்க! விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். உள்ளுருமம் சொல் அருமை.
செற்றம் அழகாக இருக்கு.
உங்கள் விளங்கங்களோடு தொகுத்து ஒரு அகராதியை பல தலைமுறைகள் படிக்க, நீங்கள் விட்டு செல்லவேண்டும். அதற்கான உடல் நலமும், மன உறுதியையும் ஈசன் அருள்க!
அன்புடன்
அங்கமுத்து
நண்பர் இராம. கி தங்களது விளக்கங்கள் அருமை.
படியகம் என்பது எளிமையான சொல்.
தமிழர்களிடம் உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால், தமிழ் சொற்களின் நுட்பத்தைப் புரிந்துகொள்ளத் தயங்குவதுதான்.
இதற்கு முக்கிய காரணம் தமிழர்தம் மண்ணில் தம்மைத்தாம் ஆளமுடியாது திணறுகிறார்கள் என்பதே. தமிழ் நாட்டில் நீங்கள் ஆயிரம்தான் செய்தாலும், தமிழ்வழியூடாகப் பொறியியல், மருத்துவம், நுட்பியல் போன்றவற்றை வளர்க்க முடியாத சூழல் உண்டு. இந்திய அரசிடம் பலதடவைகள் இவைபற்றி முறைப்பாடு செய்யப்பட்டாலும், இந்தியக் கல்வி அவை அதற்கு ஒப்புதல் வழங்கியதாகத் தெரியவில்லை.
தமிழர் தமது மொழியில் பொறியியல் பயில விரும்பின் அதையும் இந்திய அரசு தடுக்கும் என்றால், பின்னர் தமிழ் நாடு என்ற பெயர் எதற்கு?
ஈழத்தமிழர் எல்லாம் தமிழைப் பாவிக்கின்றார்கள் என்பது முற்றிலும் தவறான கருத்து. தமிழ்நாட்டில் உள்ள நோய்தான் ஈழத்திலும் உண்டு. ஆனால் ஈழத்தில் தமிழை வளமாக்கலாம். அதற்கு முக்கிய காரணம், தமிழ்நாடு போன்றல்லாது, ஈழத்தில் தமிழர் ஆட்சி உள்ளது (புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலாவுது). ஆனால் அங்கேயும் சிறிய பிரச்சனை உண்டு. அது யாதெனில், விடுதலைப் புலிகள் தமக்குப் புரியாதவற்றைத் தமிழ் அல்ல என்று பரப்புரை செய்து வருகின்றனர். இதன் விளைவு உடனடியாகத் தெரியும்.
தமிழரின் பெயர்களில், குறிப்பாக ஈழத்தில், சமற்கிருத முடிவில் உள்ளது உண்மை. ஆயினும், பல தமிழ்ப் பெயர்கள் தனித்தமிழானவை. ஆனால் இதை அறிய அவர்கள் முயலவில்லை. மாறாக, இது தமிழில்லை, அது தமிழல்லை என்று ஒதுக்குகின்றனர். இரவி (இரவி என்றால் சூரியன்) என்பதில் இருந்துதான் ரவி என்பது வந்தது.
ஆனால் அதுபற்றி அறியாத தமிழர்கள் அதை சமற்கிருதப் பெயர் என்று பட்டம்சூட்ட, அதை முழுதாக ஆராயாது புலிகளும் அங்கனம் அதைச் சமற்கிரும் என்று முடிசூட்டுகின்றனர்.
நிசா என்பது தமிழில் உள்ள ஏழு சுரங்களின் சேர்க்கை. நி சா .. இந்த சேர்க்கையிலே நிசாந்தன், நிசா மற்றும் பிற பெயர்கள் வருகின்றன. ஆனால் போதிய விளக்கம் இல்லாத நம்மவர்கள், அவற்றைச் சமற்கிருதம் என்றும், அவற்றுக்கான காரணங்கள் இல்லை என்று கூறுகின்றனர்.
அவ்வாறே 'கவி' என்ற தமிழ்ச் சொல்லைத் தமிழ் அல்ல என்கின்றனர். கவி என்பதற்கும் பா என்பதற்கும் சில வித்தியாசங்கள் உண்டு. ஆனால், அவை இரண்டும் தமிழ் வேருடைய தமிழ்ச் சொற்கள்.
வாத்தியார் என்ற சொல் இயல்பாகவே தமிழ் நாட்டில் தோன்றிய வார்த்தை, வாய் என்ற வேர்தாங்கியே வாத்தியார் வருகின்றது என்பதையும் அவதாணிக்கவும்.
நண்பர் இராம கி
இயல்பியல் என்பதற்கும் இயற்பியல் என்பதற்கும் என்ன வேறுபாடு?
தங்களது பதிவு ஒன்றில் விமானம் என்பதற்கு அழகான தமிழ்ச் சொல் ஒன்றைத் தந்தீர். அதனை யான் மறந்துவிட்டேன். அதைத் மீளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. தயவுகூர்ந்து விமானத்துக்கு ஈடான தமிழ்ச் சொல்லை மீண்டு கூறவும்.
தங்களது சொல்வளத்தை கற்க ஆவலாக உளது. ஆயினும், அவற்றை இங்கு தேடிக் கண்டுபிடிப்பது சற்றுக் கடினமாகவே உளது. நம்பி போன்றோர் கூறியதுபோல் தாங்கள் ஒரு அகராதியை வெளியிட்டால் தமிழ் உலகு மகிழும்.
மொழியிலக்கண வல்லுனர் என்று இரிமொலயிஸ்ற்றைத் தமிழில் அழைக்கலாமா? இல்லை அதற்கு வேறொரு தமிழ்ச் சொல் உண்டா. நீர் வீழ்ச்சி என்பதைவிட அருவி என்று சொல் அறிவு பூர்வமானது. நீர்வீழ்ச்சி என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாகப் பெயர்க்கப்பட்ட சொல்.
இராம. கி தவறாக நினைக்க வேண்டாம். உங்களிடம் ஒரு வேண்டுகோள்.
தமிழரிடம் இராணுவ அதிகாரிகளுக்கான பெயர்கள் ஆங்கிலத்திலே உண்டு.
காட்டு : லெப் கேணல், கேணல் போன்றவை. இவற்றுக்கு ஈடான தமிழ் சொல் உண்டா?
இல்லை அவ்வாறான சொற்களை நாம் தொகுக்கலாமா? தமிழரிடம் பழமையாக இருந்த இராணுவப் பெயர்களில் சில சாதிப் பெயர்களாக மாறிவிட்டதாக தமிழறிஞர் ஒருத்தர் கூறினார். மேலும், நாயகன் என்ற சொல் தளபதி என்பதைக் குறிக்கும் என்பதையும் அறிந்தேன். அவ்வாறே அகம்படியார் என்றால் அரண்மனை உட்காவலர் என்பதையும் அறிந்தேன்.
தமிழரின் சங்ககால ஒழுக்ககங்கள் மற்றும் பூ, மரம் போன்றவற்றை வைத்து இராணுவ உயர் அதிகாரிகளின் பட்டப் பெயர்களை உருவாக்கலாமா? அவ்வாறு உங்களால் செய்ய முடியுமா?
காற்சட்டை என்பதை வேறு வழியாகத் தமிழில் கூறலாமா?
காற்சட்டை என்றால் சோட்ஸ் (shorts), அப்படியானால் பான்ஸ் (pants), Jeans மற்றும் ரி சேர்ட்சை (T-shirt) எவ்வாறு அழைப்பது?
மகிழுந்து என்று காரையும் உந்துருளி என்று மோட்டார் சைக்கிளையும் அழைக்கின்றனர். அவை நல்ல சொற்களா? அப்படியானால் சைக்கிளை எவ்வாறு அழைப்பது? பேரூந்து இல்லை பேருந்தா? வேறுவகை ஊர்திகளை எவ்வாறு அழைப்பது?
விண்கலம் என்ற சொற் கோர்வை நன்றா? திரிசங்கு கதையில் தமிழரிடம் இருந்த விண்கலத்துக்கு திரிசங்கு என்று பெயர் வைத்தார்கள் அல்லவா?
விண்கலங்களை விண்சங்கு என்று அழைக்கலாமா? ஏனெனில் விண்மீன் என்று நட்சத்திரங்களை அழைக்கின்றோமே. விண்ணில் மின்னவுதால் விண்மீன். அப்படியென்றால் கடல் மீன்களை ஏன் மீன் என்று அழைக்கின்றோம்? ஒருவேளை விண்சங்கு என்பது பொருந்துமோ? தாங்கள்தான் கூறு வேண்டும்.
பரிசோதனைக் குழாம் என்பது பெரிய சொல்லா?
சில்லை எவ்வாறு தமிழில் அழைக்கலாம்? உருடை என்று அழைக்கலாமா?
நன்றி இராம. கி
நான் ஒரு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இளைய சந்ததி
அப்படியே லோஜிக் என்பதற்கும் தமிழ் சொல்லைத் தந்துவிடுங்கள்.
நன்றி நண்பரே.
பிற்குறிப்பு: புலும்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமிழை மறக்காது இருக்க வேண்டும் என்றால், அங்கு தமிழ்க் கல்விகளை நிறுவித் தமிழ் ஆசிரியர்களைத் தந்தருளி உதவி செய்ய வேண்டிய கட்டாயம் தமிழ் நாட்டுக்கு உண்டு. ஆனால் தமிழ் நாட்டிலே தமிழ்க் கல்வி சீரழிந்து போகும்போது, ஈழத்தில் தமிழ் அரசு நிறுவப்படாத நிலை உள்ளபோது, அவ்வாறான நடைமுறை சாத்தியமற்றது.
புலம்பெயர்ந்தவர்களை விட தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் உள்ளவர்கள்தான் தமிழை மறக்காது இருத்தல் வேண்டும். அதற்காக விளங்காதது எல்லாம் வேற்றுமொழி என்று தமிழை ஒதுக்கிவிடல் ஆகாது.
மீண்டும் நன்றி நண்பர் இராம. கி
நண்பர் இராம. கி தங்களது விளக்கங்கள் அருமை.
படியகம் என்பது எளிமையான சொல்.
தமிழர்களிடம் உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால், தமிழ் சொற்களின் நுட்பத்தைப் புரிந்துகொள்ளத் தயங்குவதுதான்.
இதற்கு முக்கிய காரணம் தமிழர்தம் மண்ணில் தம்மைத்தாம் ஆளமுடியாது திணறுகிறார்கள் என்பதே. தமிழ் நாட்டில் நீங்கள் ஆயிரம்தான் செய்தாலும், தமிழ்வழியூடாகப் பொறியியல், மருத்துவம், நுட்பியல் போன்றவற்றை வளர்க்க முடியாத சூழல் உண்டு. இந்திய அரசிடம் பலதடவைகள் இவைபற்றி முறைப்பாடு செய்யப்பட்டாலும், இந்தியக் கல்வி அவை அதற்கு ஒப்புதல் வழங்கியதாகத் தெரியவில்லை.
தமிழர் தமது மொழியில் பொறியியல் பயில விரும்பின் அதையும் இந்திய அரசு தடுக்கும் என்றால், பின்னர் தமிழ் நாடு என்ற பெயர் எதற்கு?
ஈழத்தமிழர் எல்லாம் தமிழைப் பாவிக்கின்றார்கள் என்பது முற்றிலும் தவறான கருத்து. தமிழ்நாட்டில் உள்ள நோய்தான் ஈழத்திலும் உண்டு. ஆனால் ஈழத்தில் தமிழை வளமாக்கலாம். அதற்கு முக்கிய காரணம், தமிழ்நாடு போன்றல்லாது, ஈழத்தில் தமிழர் ஆட்சி உள்ளது (புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலாவுது). ஆனால் அங்கேயும் சிறிய பிரச்சனை உண்டு. அது யாதெனில், விடுதலைப் புலிகள் தமக்குப் புரியாதவற்றைத் தமிழ் அல்ல என்று பரப்புரை செய்து வருகின்றனர். இதன் விளைவு உடனடியாகத் தெரியும்.
தமிழரின் பெயர்களில், குறிப்பாக ஈழத்தில், சமற்கிருத முடிவில் உள்ளது உண்மை. ஆயினும், பல தமிழ்ப் பெயர்கள் தனித்தமிழானவை. ஆனால் இதை அறிய அவர்கள் முயலவில்லை. மாறாக, இது தமிழில்லை, அது தமிழல்லை என்று ஒதுக்குகின்றனர். இரவி (இரவி என்றால் சூரியன்) என்பதில் இருந்துதான் ரவி என்பது வந்தது.
ஆனால் அதுபற்றி அறியாத தமிழர்கள் அதை சமற்கிருதப் பெயர் என்று பட்டம்சூட்ட, அதை முழுதாக ஆராயாது புலிகளும் அங்கனம் அதைச் சமற்கிரும் என்று முடிசூட்டுகின்றனர்.
நிசா என்பது தமிழில் உள்ள ஏழு சுரங்களின் சேர்க்கை. நி சா .. இந்த சேர்க்கையிலே நிசாந்தன், நிசா மற்றும் பிற பெயர்கள் வருகின்றன. ஆனால் போதிய விளக்கம் இல்லாத நம்மவர்கள், அவற்றைச் சமற்கிருதம் என்றும், அவற்றுக்கான காரணங்கள் இல்லை என்று கூறுகின்றனர்.
அவ்வாறே 'கவி' என்ற தமிழ்ச் சொல்லைத் தமிழ் அல்ல என்கின்றனர். கவி என்பதற்கும் பா என்பதற்கும் சில வித்தியாசங்கள் உண்டு. ஆனால், அவை இரண்டும் தமிழ் வேருடைய தமிழ்ச் சொற்கள்.
வாத்தியார் என்ற சொல் இயல்பாகவே தமிழ் நாட்டில் தோன்றிய வார்த்தை, வாய் என்ற வேர்தாங்கியே வாத்தியார் வருகின்றது என்பதையும் அவதாணிக்கவும்.
நண்பர் இராம கி
இயல்பியல் என்பதற்கும் இயற்பியல் என்பதற்கும் என்ன வேறுபாடு?
தங்களது பதிவு ஒன்றில் விமானம் என்பதற்கு அழகான தமிழ்ச் சொல் ஒன்றைத் தந்தீர். அதனை யான் மறந்துவிட்டேன். அதைத் மீளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. தயவுகூர்ந்து விமானத்துக்கு ஈடான தமிழ்ச் சொல்லை மீண்டு கூறவும்.
தங்களது சொல்வளத்தை கற்க ஆவலாக உளது. ஆயினும், அவற்றை இங்கு தேடிக் கண்டுபிடிப்பது சற்றுக் கடினமாகவே உளது. நம்பி போன்றோர் கூறியதுபோல் தாங்கள் ஒரு அகராதியை வெளியிட்டால் தமிழ் உலகு மகிழும்.
மொழியிலக்கண வல்லுனர் என்று இரிமொலயிஸ்ற்றைத் தமிழில் அழைக்கலாமா? இல்லை அதற்கு வேறொரு தமிழ்ச் சொல் உண்டா. நீர் வீழ்ச்சி என்பதைவிட அருவி என்று சொல் அறிவு பூர்வமானது. நீர்வீழ்ச்சி என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாகப் பெயர்க்கப்பட்ட சொல்.
இராம. கி தவறாக நினைக்க வேண்டாம். உங்களிடம் ஒரு வேண்டுகோள்.
தமிழரிடம் இராணுவ அதிகாரிகளுக்கான பெயர்கள் ஆங்கிலத்திலே உண்டு.
காட்டு : லெப் கேணல், கேணல் போன்றவை. இவற்றுக்கு ஈடான தமிழ் சொல் உண்டா?
இல்லை அவ்வாறான சொற்களை நாம் தொகுக்கலாமா? தமிழரிடம் பழமையாக இருந்த இராணுவப் பெயர்களில் சில சாதிப் பெயர்களாக மாறிவிட்டதாக தமிழறிஞர் ஒருத்தர் கூறினார். மேலும், நாயகன் என்ற சொல் தளபதி என்பதைக் குறிக்கும் என்பதையும் அறிந்தேன். அவ்வாறே அகம்படியார் என்றால் அரண்மனை உட்காவலர் என்பதையும் அறிந்தேன்.
தமிழரின் சங்ககால ஒழுக்ககங்கள் மற்றும் பூ, மரம் போன்றவற்றை வைத்து இராணுவ உயர் அதிகாரிகளின் பட்டப் பெயர்களை உருவாக்கலாமா? அவ்வாறு உங்களால் செய்ய முடியுமா?
காற்சட்டை என்பதை வேறு வழியாகத் தமிழில் கூறலாமா?
காற்சட்டை என்றால் சோட்ஸ் (shorts), அப்படியானால் பான்ஸ் (pants), Jeans மற்றும் ரி சேர்ட்சை (T-shirt) எவ்வாறு அழைப்பது?
மகிழுந்து என்று காரையும் உந்துருளி என்று மோட்டார் சைக்கிளையும் அழைக்கின்றனர். அவை நல்ல சொற்களா? அப்படியானால் சைக்கிளை எவ்வாறு அழைப்பது? பேரூந்து இல்லை பேருந்தா? வேறுவகை ஊர்திகளை எவ்வாறு அழைப்பது?
விண்கலம் என்ற சொற் கோர்வை நன்றா? திரிசங்கு கதையில் தமிழரிடம் இருந்த விண்கலத்துக்கு திரிசங்கு என்று பெயர் வைத்தார்கள் அல்லவா?
விண்கலங்களை விண்சங்கு என்று அழைக்கலாமா? ஏனெனில் விண்மீன் என்று நட்சத்திரங்களை அழைக்கின்றோமே. விண்ணில் மின்னவுதால் விண்மீன். அப்படியென்றால் கடல் மீன்களை ஏன் மீன் என்று அழைக்கின்றோம்? ஒருவேளை விண்சங்கு என்பது பொருந்துமோ? தாங்கள்தான் கூறு வேண்டும்.
பரிசோதனைக் குழாம் என்பது பெரிய சொல்லா?
சில்லை எவ்வாறு தமிழில் அழைக்கலாம்? உருடை என்று அழைக்கலாமா?
நன்றி இராம. கி
நான் ஒரு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இளைய சந்ததி
அப்படியே லோஜிக் என்பதற்கும் தமிழ் சொல்லைத் தந்துவிடுங்கள்.
நன்றி நண்பரே.
பிற்குறிப்பு: புலும்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமிழை மறக்காது இருக்க வேண்டும் என்றால், அங்கு தமிழ்க் கல்விகளை நிறுவித் தமிழ் ஆசிரியர்களைத் தந்தருளி உதவி செய்ய வேண்டிய கட்டாயம் தமிழ் நாட்டுக்கு உண்டு. ஆனால் தமிழ் நாட்டிலே தமிழ்க் கல்வி சீரழிந்து போகும்போது, ஈழத்தில் தமிழ் அரசு நிறுவப்படாத நிலை உள்ளபோது, அவ்வாறான நடைமுறை சாத்தியமற்றது.
புலம்பெயர்ந்தவர்களை விட தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் உள்ளவர்கள்தான் தமிழை மறக்காது இருத்தல் வேண்டும். அதற்காக விளங்காதது எல்லாம் வேற்றுமொழி என்று தமிழை ஒதுக்கிவிடல் ஆகாது.
மீண்டும் நன்றி நண்பர் இராம. கி
நண்பரே என் பதிவில் உள்ள சிறு பிழைகளை திருத்திவிடுங்கள்.
பரிசோதனைக் குழாய் என்பதைப் பரிசோதனைக் குழாம் என்று எழுதிவிட்டேன். இது கீழிருந்து எட்டாவது பிரிவில் உளது. தமிங்கிலம் தலைப்பில் பதிவுசெய்தேன். என் பெயர் குமரிப்படை.
நன்றி
அன்பிற்குரிய குறும்பன்,
ஒடுங்குதல் என்னும் வினை ஊனம் என்று குறிப்பதை என்னுடைய முந்தைய முன்னிகையில் (comment)குறித்திருந்தேனே?
அன்பிற்குரிய வெற்றி,
புலம் பெயர்ந்த தமிழரிடையே இந்த ஆய்வை யாராவது மேற்கொள்ள வேண்டும். தமிழ்ப்புழக்கம் காப்பாற்றப் படுகிறதா, குறைகிறதா என்று தெரிவது நல்லது.
அன்பிற்குரிய பெரில்லாதவருக்கு,
ஆனந்த விகடனில் வந்த அந்தச் செவ்வியைப் படித்தேன்.
அன்பிற்குரிய வைசா,
நன்றி
அன்பிற்குரிய அங்கமுத்து,
ஊடகத்திற்கு மாறாய் மிடையம் எழுதியதை அறிந்து மகிழ்ந்தேன். ஊடகம் என்பது இயல்பியலில் osmotic medium என்பதற்கு இணையாய் வரவேண்டிய சொல். ஒன்றின் வழியே இன்னொன்று செல்லுதல் என்ற பொருள். ஊடல் என்ற காமத்துப் பால் சொல்லும் அதே பொருளதே. medium என்பதற்கு மிடையம் என்ற சொல்லைப் பலரும் புழங்கும் நாள் வரும் என்று காத்திருப்பேன்.
அகரமுதலி ஒன்றைத் தொகுக்க ஆசையுண்டு; இறையருள் இருந்தால் பார்ப்போம்.
அன்பிற்குரிய நம்பி,
உங்கள் விழைவிற்கும் நன்றி.
அன்பிற்குரிய குமரிப்படை,
தமிழர் தமது மொழியில் பயில விரும்பின் அதை இந்திய அரசு எங்கே தடுக்கிறது? உடன் உறையும் மற்ற தமிழர் அல்லவா தடுக்கிறார்கள்? முப்பதாண்டுகாலத்தில் தமிழர் குமுகாயம் தமிழர், தமிங்கிலர் என்று இரண்டுபட்டுப் போயிற்று. தமிங்கிலர் உயர்ந்து கொண்டே வர, தமிழர் சிறுத்துப் போனார்கள். முதலில் அதை மாற்றவேண்டும்.
ஈழத்தில் வாய்ப்பு உண்டு என்று நானுமே கருதுகிறேன்.
இரவி என்பது பற்றிப் பின்னால் எழுதுகிறேன்.
தமிழ்ச்சுரங்கள், தமிழிசை பற்றிய செய்தியில் நி, சா என்பவை வடமொழிப் பெயர்கள் தான்.
கவி - முன்னால் எழுதியிருக்கிறேன்.
வாத்தியார் பற்றியும் முன்னால் எழுதியிருக்கிறேன். அதில் இருவேறு கருத்து உண்டு.
இயல்பியல், இயற்பியல் என்பதில் இயலைப் பிரித்துவிட்டுச் சொற்களைப் பாருங்கள். இயல்பு, இயற்பு என்று சொற்கள் கிடைக்கும். இயற்பு என்ற சொல் தமிழில் இருக்கிறதா? எந்த வட்டாரத்தில்? எந்த அகரமுதலியில்? தேடிப் பார்த்தால் எங்குமே இருக்காது. யாரோ ஒருவர் தவறாக இயல்பைப் பலுக்கியது இயற்பாக ஆகியிருக்கிறது. இயல் என்னும் பகுதியோடு பு என்னும் ஈறு சேறும் போது பு என்பது (bu)என்று பலுக்கப் பட்டு iyalbu என்றுதான் சொல்லப் படும். bu என்று ஒருவகையாலும், pu என்று இன்னொரு வகையாலும் பலுக்கப்பட்டு இயல்பு, இயற்பு என்ற இரு சொற்களை உருவாக்க இயலாது. அதெல்லாம் தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் தான் இயலும்.
தவிர இயல்பு என்பது physical property என்ற பொருளை இயல்பாகக் (natural) குறிக்கும். இந்த physical, natural என்ற கருத்தில் தான் முன்பு இயல்பியல் என்ற சொல்லைப் பரிந்துரை செய்தோம். இப்பொழுது physics என்பதைப் பூதியல் என்றே நான் அழைக்கிறேன். இந்தப் பதிவின் இரண்டு, மூன்று ஆண்டுகள் முன்னால் ஒரு கட்டுரை பூதியல் பற்றி இருக்கும் படித்துப் பாருங்கள்.
பறனை = விமானம்; அது அட்லாண்டா பெரி.சந்திரா பரிந்துரைத்த அழகான சொல். எங்கும் பரவ வேண்டும். பறவையைப் போன்றது பறனை. பறப்பு = flight
அகராதி பற்றி முன்னே கூறியுள்ளேன்.
etymologist =சொற்பிறப்பியல் ஆளர்.
தமிழில் படையதிகாரிகளின் பெயர்களை ஒரு முறை கட்டுரையாய் எழுதுவேன்.தமிழில் இருந்த பல படைப்பெயர்கள் சாதிப் பெயர்களாய் மாறியது மிகவும் உண்மை. அதையெல்லாம் விவரமாய் எழுதினால், இன்றையப் பொருட்பாடுகளைக் கொள்ளாமல், கொஞ்சம் பற்றற்று பொருள் கொள்ளத் தெளிவு வேண்டும். உணர்ச்சிவயப் படக்கூடிய தமிழரிடையே இதைச் சொல்லுவதில் எனக்குத் தயக்கம் உண்டு. இருந்தாலும் இது பற்றி எழுதி வைத்த ஒரு கட்டுரை அரையும் குறையுமாய்க் கிடக்கிறது.
shorts, pants, jeans, t-shirt - ஓர்ந்து பார்க்கிறேன்.
மகிழுந்து, உந்துருளி ஆகியவை நல்ல சொற்களே! cycle - மிதி வண்டி என்றே அழைக்கலாம். ஈருருளி என்ற சொல் தமிழரால் ஏற்கப் படாது போயிற்று. பேர்+உந்து = பேருந்து என்பதே சரி.
மற்ற ஊர்திகளை அங்கங்கே நான் அழைத்திருக்கிறேன். ஒரு முறை தமிழ் உலகம் மடற்குழுவில், கவிஞர் புகாரி கேள்வி எழுப்பி மறுமொழி சொன்னேன்.
விண்கலம் என்ற சொல் spacecraft என்பதற்கு இணையாய்ப் பயன்படுகிறது.
கடற்கரைக்கு அருகில் உள்ள மீன்கள், அங்கும் இங்குமாய்த் திரும்பி நீந்தும் போது ஒளிபட்டு மின்னுகின்றன. எனவே அவற்றிற்கு மீன் என்று பெயரிட்டு அழைத்தார்கள். நாளடைவில் அது எல்லா மீன்Kஅலும் பொதுப் பெயராயிற்று. இதே போல விண்ணில் உள்ள நாள்காட்டுகளும் ஒளி மின்னி மின்னித் தெரிவதால் மீன்களாயின.கடல் மீனின்று அவற்றைப் பிரித்துக் காட்டுவதற்காய் அவற்றை விண்மீன் என்று அழைக்கத் தலைப்பட்டார்கள்.
பரியை விடுத்துச் சோதனைக் குழாய் என்றே அழைக்கலாம்.
சில் என்று எதைச் சொல்லுகிறீர்கள்?
Logic =ஏரணம், அளவை, ஏது, தருக்கம் எனப் பல சொற்கள் உண்டு.
அன்புடன்,
இராம.கி.
இராம.கி ஐயா,
இது மிகவும் பயனுள்ள , சிந்திக்க வைக்கும் கட்டுரை.
உங்கள் பதிவின் எழுத்துக்களின் அளவைப் பெரிதாக்க வேண்டுகிறேன். (மிகவும் சிறியதாக இருப்பதால் படிப்பது கடினமாக இருக்கிறது.) மேலும் , பின்னூட்டங்களைத் தனிப்பக்கத்தில் வருமாறு அமைத்தால் , குறைந்த வேகமுடைய browser-இல் வாசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு எளிதாக இருக்கும்.
நன்றி. -கைகாட்டி(odai.blogspot.com)
நண்பர் இராம. கி
தங்களது பதிலுக்கு நன்றி.
பறனை என்று விமானத்தை அழைப்பது நன்றே.
ஆனால், போர் விமானம் என்பதை, போர்ப் பறனை என்றா அழைப்போம்? அப்போது போறனை என்ற சொல்லுக்கும் போர்ப் பறனை என்ற சொல்லுக்கும் சற்று நெருடல் வந்துவிடாதோ? சிறிய ஐயப்பாடுதான்.
மொழிப்பிறப்பியல் ஆளர் என்பது நன்கு பொருந்துவதாகவே உளது.
லோஜிக் என்பதற்கு தந்த தமிழ்ச் சொற்களில், ஏது என்பதையும் குறிப்பிட்டீர்கள். அந்த ஏது என்பதும் 'ஏதுக்கள்' என்பதும் தொடர்புடைய சொற்களா? ஏதுக்கள் என்பது காரணங்கள் என்பதின் ஒத்தசொல்லா? இல்லை அதிலும் வேறுபாடு உண்டா?
அய்யா, ட்ரைவ் துறூ என்பதை எவ்வாறு தமிழில் அழைக்கலாம்? பாஸ்ற் ஃபூட் [fast food resturants] உணவகங்களை எவ்வாறு தமிழில் அழைக்கலாம்?
நான் சில்லு என்று குறிப்பிட்டது, வீல் [wheel] என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பெறுவதை நம்மவர்கள் அழைக்கும் முறையைத்தான். சில் என்றால் தமிழ் அல்ல என்கின்றனர். அவ்வாறெனின், வீல்[wheel] என்பதற்கு ஏற்ற தமிழ்ச் சொல் யாது? கரண்டி என்று நம்மவர்களால் அழைக்கப்பெறும், ச்பூன்[spoon] மற்றும் முள்ளுக் கரண்டி எனப்படும் போர்க் [fork] போன்றவற்றைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்?
உங்களது மெய்யுணர்வு பதிவில் மின்னெழுவை என்று லிவ்ற்றை[lift, elevator] அழைக்கின்றீர். அதை, மின்னேற்றி என அழைக்கப்படுவதாக முன்னர் கேள்வியுற்றேன். எது சரியான பதம்?
பற்றரியைத்[battery] தமிழில் எவ்வாறு அழைக்கலாம்? ரீ சார்ஜ் [recharge] என்பதை எவ்வாறு அழைக்கலாம்? எஸ்கலேட்டரைச்[escalator] சுழல்படி என்று அழைக்கலாமா? இல்லை வேறேதும் நல்ல சொல் உண்டா?
உலங்கு வானூர்தி என்பது எளிமையான சொல்லா?
தயவுசெய்து தமிழ் இராணுவ அதிகாரிகளின் பட்டப் பெயர்களைத் தந்தருள்க. ஏற்பவர் ஏற்கட்டும், அறிபவர் அறியட்டும், எதுவாகினும் சிறப்படையும் தமிழ்.
நண்பரே நீங்கள் நிசா என்பது தமிழ் இல்லை என்றீர். முன்னர் தமிழ் இசை ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற திரு பாலா என்பவம் கூறிய கருத்தை இங்கு பதிந்துவிடுகிறேன். அவர் கூற்றையும் வாசித்துவிடுங்கள். அதன்பின்னரும் நீங்கள் நிசா என்பது தமிழ் அல்ல என்று முடிவுசெய்தீர்கள் என்றால் கூறவும். தயவுகூர்ந்து உங்கள் முடிவை விளக்கித் தந்தருளவும்.
நன்றி பல நண்பரே
"The notes SA, RI, GA, MA, PA, THA, NI are nothing but symbols for our Tamil Pathangal ( Swaragal in sanskrit) as they are found in our tamil litretures and always known as Kural (SA), Thuttham (RI), Kaikilai (GA), Uzhai (MA), Ili (PA), Vilari THA), Thaaram (NI). "
""கேள்வி 1) ச ரி க ம ப த நி தமிழ் பதங்களின் வடிவங்கள் என்று கூறனீர்க்ள, இவற்றை ஏன் இவ்வாறு நாம் பாவிக்கின்றோம்? குறள், துத்தம், கைக்கிழை, உழை, போன்றவற்றுக்கு ச ரி க ம ப த நி போன்றவற்றை விட மாற்றுப் பாவனைகள் இல்லையா?
பதில் 1) ஆதி காலத்தில் ஆ இ ஊ ஏ ஓ ஐ ஔ ஆக்¢ய உயிர் எழுத்துக்கள் ஏழும் பயன் படுத்தப் பட்டன. காலப்போக்கில் பதங்களுக்கிடையிலான வேற்றுமை நன்கு வெளிப்படுமாறு உயிர் மெய் எழுத்துக்களான ச ரி க ம ப த நி பயன் படுத்தப் பட்டன. இதற்கான சான்றுகள் குடுமியான் மலை போன்ற கல்வெட்டுகள் முலம் அறியப்படுகின்றன. பிற்காலத்தில் சற்று மாறுபட்ட கருத்துக்ளுடன் கர்நாடக சங்கீதம் தோன்றினாலும் இந்த அடிப்படை பத குறியீடுகளை அவர்கள் மாற்றாமல் அவற்றின் பெயர்களை மாத்திரம் மேற்கூறிய எழுத்துகளுக்கேற்ப மாற்றிக்கொண்டு அவற்றை அவர்களுடையதாக மாற்றிக்கொண்டனர். "" [DrMBala : http://www.unarvukal.com/ipb/index.php?showtopic=433 ]
T-SHIRT - கொசுவுசட்டை
[T-SHIRT = TUCK-SHIRT
TUCK = கொசுவுதல்; REF: LIFCO, SURA DICTIONARIES)
அய்யா,
அருமையான கருத்துகள். புழங்கப் புழங்கதான், தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டில் நிலைக்கும்! நான் சில வருடங்களாகவே, முடிந்தவரை தமிழ்சொற்களை பேச்சு வழக்கில் பயன்படுத்தி வருகிறேன்! இது ஒரு கூட்டு முயற்சியின் வழிதான் சாத்தியமாகும்.
நன்றி
தஞ்சாவூரான்
தமிழ் பறவை அருஞ்சொற்பொருள்/ TAMIL BIRD GLOSSARY
www.geocities.com/tamildictionary/birds
இந்த கருத்து தமிழ் பற்றியான கருத்தல்ல, ஜாதி வெறி கருத்து...
Anonymous said...
இரண்டு அனானி சனியன்கள் பதிவை திசை திருப்ப முயல்கின்றன. சம்ஸ்கிருத வெறி பிடித்த பார்ப்பனர்களைத்தான் தமிழர்கள் எதிர்க்கிறார்களோ ஒழிய அனைவரையும் அல்ல.
நல்ல அனானி
....பிராமணர்கள்/பார்ப்பனர்கள்/பாப்பான்கள்/ எந்தப் பெயரில் அழைத்தாலும் அவர்கள் தமிழர்கள்...சென்னை விமான நிலைத்தில் பணிபுரியவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் அல்ல; சாலைப் பணிகளை திரளாக பிடிக்கும் பீஹாரிகள் தமிழர்கள் அல்ல...ஏன் நமது தமிழ்நாட்டில் பிறபட்டோர் பட்டியலில் 5-10 இந்தி பேசும் ஜாதிகள் உள்ளன.
காண்க:
www.tn.gov.in/bcmbcmw/bclist.htm
இந்த இந்தி பேசுபவர்கள் எப்படி தமிழர்கள் ஆனார்கள்...
பார்ப்பான் என கூவுது உண்மை மறைப்பு...பார்ப்பனர்கள் பெரும்பாலும் தமிழர்கள்...இந்தி ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து தமிழர்கள் விரட்டுபவர்கள் நம்ம 'தமிழ்' அரசியல்வாதிகள்.
இந்தப் பதிவில் இதுப் போன்ற ஜாதி வெறி கருத்து போடாமல் தமிழ் வளர்ப்பு கருத்துக்கள் மட்டும் இட்டால் நன்று.
ஓர் அன்பர் எழுதியது:
> நீங்கள் சொல்லுவது ஓரளவு சரி. ஆனாலும்,
> ஈழத்தமிழர்கள் பல நாடெங்கும் புலம் பெயர்ந்த
> நிலையில், இளம் தலைமுறையிடம் ஒரு மொழிச்
> சிக்கல் உருவாகிக் கொண்டிருப்பதாகத் தான்
> பலரும் சொல்லுகிறார்கள். இதில் என்னுடைய
> அறிவு கம்மி. அறிந்தவர்கள் இதைப் பற்றிச்
> சொல்ல வேண்டும்.
இதில் "கம்மி" என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டவர் பலரும் இச்சொல்லைப் பயன்படுத்தவதைக் கேட்டிருக்கிறேன் (இப்போது வாசித்தும் விட்டேன்!) - இது தமிழ் சொல்லா?
இவ்வாறே "ஜாஸ்தி" என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. "ஜாஸ்தி" தமிழ்ச்சொல் இல்லையெனப் புரிகிறது. "கம்மி" பற்றி யாரும் விளக்கினால் நன்று... நன்றியுடன்...
தமிழார்வன்
===
Shirt, T-Shirt, Shorts என்பன போன்று brassier(bra), underwear, button(பொத்தான்), bottle (போத்தல்), powder(பவுடர் - பூசல்மா),motor, machine, engine, tyre, tube, petrol, diesel, (engine-)oil, tar(தார்), polythene, (cycle-)bar, (cycle-)fork, (cycle-)carrier, oven, remote, copy(exercise-book), paper(பத்திரிகை), pencil, eraser, photo(போட்டோ), film (பிலிம்), Lamination, என்பன் போன்ற இன்னும் பலப்பல சொற்கள் இலங்கைத் தமிழரிடையேயும் அன்றாட பயன்பாட்டில் உள்ளன. இவையெல்லாவற்றிற்கும் தமிழ்சொற்கள் பயன்பாட்டில் வரும் என்பது ஐயமாகவே உள்ளது.
===
அன்பிற்குரிய தமிழார்வன்,
இப்பொழுது உடனே தங்கள் கேள்விக்கு மறுமொழி இறுக்க முடியாது இருக்கிறேன். பின்னொரு நாள் இதற்கு முயலுவேன்.
அன்புடன்,
இராம.கி.
Post a Comment