Sunday, September 17, 2006

பெரியார் நினைவாக!

நலங்கூர் நாவினர்

முரசு கடிப்பு உண்ட அரசரும் அல்லர்;
உரை செல் ஆட்சியின் அவரின் ஓங்கியர்.
கோன் முறை திறம்பிக் குடி நிலை திரி முன்
ஆன்று உரை கொளுவும் அமைச்சும் அல்லர்;
நவை தீர் அவையின் நலங் கூர் நாவினர்.
நுரைப் பஞ்சின் நரை தாங்கி
அரி ஏற்றின் அணல் அடர்ந்து
நெறி ஆற்றின் நெஞ்சு படரப்
பாடியும், சேரியும், பட்டினப் பாக்கமும்
ஊரும், குடியும், ஓதை நகரமும்,
வெய்யினும், மழையினும், விதிர்க்கும் பனியினும்,
பொய்யினும், புரையினும், பூட்கை தளராது,
காலையும், மாலையும், கடும்பகல் யாமமும்,
வைகலும், நாடி மெய் கலந்து, புனைவின்றிக்
கொல் வரியின் சொல் பாய்ச்சித்
தொல் குடிமைக் கட்டு அழித்த
ஆரியத்தின் அடி துமித்துப்
பட்டமும், பதவியும், பரவலும், நாடாது,
பழமை கடிந்து, பாழ்மை புலம் காட்டி,
மருளும், இருளும், மறுமையும் போக்கி,
நிகழ் நிலம் ஒன்றே நிறைத்து எனக் காட்டிக்
குலக் கோடு அரிந்து, சமயக் கால் அறத் துணித்துக்
கலக்கு உறு கொள்கைக் கடவுள் மறுத்தே
யாரும், யாவும், யாண்டும் துய்ம் எனப்
புதுமை பொழிவித்துப் பொதுமை தழைவிக்கும்
அரியர் ஆகல் இவன் அவரே
பெரியார் என்னும் பெயரி யோரே!

- நூறாசிரியம் 24,
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பொழிப்பு:

குறுந் தடியால் அடிக்கப் பெற்ற முரசை உடைய அரசருள் ஒருவரும் அல்லர்; உரையைக் கட்டளையாகக் கொண்டு செலுத்தப் பெறும் ஆட்சி வன்மையுடைய அவ்வரசரினும் ஓங்கிய ஆற்றல் உடையவர். அரசு முறை மாறு படலால் குடி மக்களும் தம் நிலையின் நின்று கெடல் அறு முன், அவ்வரசர்க்கு அறிவால் அமைந்து அறவுரை கூறி, அதனை மேற் கொண்டு ஒழுகச் செய்ய வல்ல அமைச்சரும் அல்லர்; குற்றம் அற்ற அவ்வமைச்சர் அவையைச் சார்ந்தாரினும், குடிகளின் நலத்தை மிகுதியும் எண்ணி, உரைக்கின்ற நாவினை உடையவர். நீரின் நுரை போலும் மென்மையும், பஞ்சின் இழை போலும் வெண்மையும் கொண்ட நரையைத் தாங்கி, ஆண் அரிமாவின் பிடரியைப் போலும் முகத்துத் தாடியும் மீசையும் அடர்ந்து, மக்களை நெறிப் படுத்தும் வழி முறைகளையே நினைத்து நிற்கும் நெஞ்சின் மீது படர்ந்து தொங்குமாறு, பாடிகள், சேரிகள், பட்டிகள், பாக்கங்கள், ஊர்கள், குடிகள், ஆரவாரம் மிகுந்த நகரங்கள் தோறும், வெயிலிலும், மழையிலும், நடுக்கம் செய்கின்ற பனியிலும், பிறர் தூற்றும் பொய்யுரைகளுக்கும், குற்றஞ் சார்ந்த இழிவுரைகளுக்கும் இடையிலும் தாம் கொண்ட கொள்கைப் பாட்டின் உறுதி தளராமல், காலை என்றும், மாலை என்றும், வெப்பம் மிகுந்த நண்பகல் என்றும், குளிர் மிகுந்த நள்ளிரவு என்றும் பாராது, ஒவ்வொரு நாளும் தாமே நாடிப் போய்த் தம் கொள்கையை வலியுறுத்த உண்மையான செய்திகளையே துணைக் கொண்டு, சொற் புனைவும் கருத்துப் புனைவும் இல்லாது, கொல்லப் பாயும் வரிப் புலியின் வீறு சான்ற சொற்களைக் கேட்போரின் செவி வழி மன வயலில் பாய்ச்சியும், தமிழ்க் குடியின் வன்மையைக் குலைத்து அழித்த ஆரியத்தாரின் கேடுகளை அடியோடு வெட்டிச் சாய்த்தும், பட்டப் பெயர்களையும், பதவி நலன்களையும், பாராட்டுரைகளையும் மனத்தால் விரும்பாமலும், மக்கள் தம் அறியாமையால் கைக்கொண்டு ஒழுகும் பழக்க வழக்கங்களைக் கடிந்து விலக்கியும், அவர் தம்மை வளர்ச்சி இன்றி வெறுமைப் படுத்தும் இழி நிலைகளைச் சுட்டிக் காட்டியும், மக்களின் மயக்கம் உற்ற போக்கையும், அறியாமை இருளையும், பிறவி நம்பிக்கையையும் நீக்குமாறு அறிவுறுத்தியும், கண்கூடான வாழ்வு நலம் ஒன்றே யாவருக்கும் நிறைவானது எனச் சுட்டிக் கூறியும், மக்கள் நலம் எய்த முட்டுக் கட்டைகளாக நிற்கும் குலப் பாகு பாடுகளை வெட்டி வீழ்த்தியும், சமயங்களின் அடி நிலை வேர்களை அறுத்தும், தெளிவற்றுக் குழப்பமான கொள்கை சார்ந்த போலிக் கடவுள் தன்மைகளை மறுத்து உரைத்தும், எல்லா மக்களும் எல்லா நலன்களையும் எவ்விடத்தும் துய்த்தல் செய்யுங்கள் என்னும் புதுமை உரைகளையும் பொழிவித்து, அதன் வழி பொதுமை அறத்தை மக்கள் மனத்தில் தழையச் செய்தும் வருகின்ற அரிய செயல்களுக்கு உரியவர் ஆகலின், அவரே பெரியார் என்னும் பெயர்க்கு உரியவர் ஆவர்.

விரிப்பு

இப்பாடல் புறத்திணையைச் சார்ந்தது.

கோவை, ஈரோட்டைச் சேர்ந்த வேங்கட இராமசாமி என்னும் இயற்பெயர் கொண்டவர், தம் செயற்கரிய செயல்களால் பெரியார் எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப் பெறும் தன்மையை உறுதிப் படுத்தி, வாழ்த்திப் பாடியதாகும் இப்பாட்டு.

இது பாடாண் திணையும் வாழ்த்தியல் என்ற துறையுமாம்.

11 comments:

Thangamani said...

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இப்பாடலைத் தந்தைமைக்கு நன்றி.

Anonymous said...

Please read the following link.

andhimazhai.com

If possible give ur email id to content@andhimazhai.com

nayanan said...

பெரியாரின் நினைவுகூரும் பாவலரேறின் இப்பாடலும்,அதன் பொழிப்பும்,
பொருளால் பெரியாரையும்,
கவியால் பாவலரேறையும்
நெஞ்சில் நிறுத்துகின்றது.

உடல்நலம் கருதாது இதனை நீங்கள்
எடுத்திட்டிருப்பதற்கு மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Sivabalan said...

அய்யா,

பாடலை இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி

VSK said...

விரைவில் நலமாகி மீண்டும் வலையில் காண முருகனை வேண்டுகிறேன், ஐயா!

thiru said...

பெரியார் பற்றிய நல்லதோர் பதிவிற்கு நன்றி நண்பரே!

பெரியார் பற்றிய இன்னுமொரு பதிவை காண பெரியார்

வெற்றி said...

ஐயா,
உடல்நலம் குன்றியிருந்த போதும் மனவலிமை குறையாது, தந்தை பெரியாருக்கு நினைவுப்பதிவு பதிந்தமைக்கு மிக்க நன்றிகள்.

//கொல்லப் பாயும் வரிப் புலியின் வீறு சான்ற சொற்களைக் கேட்போரின் செவி வழி மன வயலில் பாய்ச்சியும், தமிழ்க் குடியின் வன்மையைக் குலைத்து அழித்த ஆரியத்தாரின் கேடுகளை அடியோடு வெட்டிச் சாய்த்தும், பட்டப் பெயர்களையும், பதவி நலன்களையும், பாராட்டுரைகளையும் மனத்தால் விரும்பாமலும்,//

உண்மை. அதனால்தானே இன்று உலகில் வாழும் தன்மானத் தமிழர்கள் அனைவரும் அவரை நன்றியுடன் நினைவுகூருகிறார்கள்.

தருமி said...

உடல் நலக்குறைவைப் பற்றி எழுதியுள்ளார்களே. இப்போது எப்படி இருக்கிறீர்கள். நன்கு நலம் பெற வாழ்த்துக்கள்.

இராம.கி said...

அன்பிற்குரிய தங்கமணி, வணக்கத்துடன், நயனன், சிவபாலன் ஆகியோரின் கனிவிற்கு நன்றி.

பெரியாரை நினைவு வைத்துக் கொள்ளுவது இன்னும் பலகாலம் தேவையானது. ஏதொன்றையும் சட்டென ஒப்புக் கொள்ளாது அதன் ஆழ, அகலம், நிறை, குறை பார்த்து, நம்முடைய அறிவார்ந்த சிந்தனையால் மட்டுமே ஏற்க வைத்த உலகாய்த அறிஞர்; எனவே
நான் அவரை நினைவு கூர்கிறேன். உலகாய்தம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் தெற்கே, நம்மூரில் இருந்து கிளர்ந்து பரவிய நெறி. சிவனியம், விண்ணவம் போன்றவற்றை ஒத்து, ஆனால் அவற்றிற்கும் முன்னால், கி.மு. 6ம் நூற்றாண்டிற்கும் முன், எழுந்த நெறி உலகாய்தம்.

பல நூற்றாண்டுகள் தேங்கிப் போன உலகாய்தத்தைப் புதுப்பித்து மறுமலர்ச்சி செய்தவர் பெரியார்.

அன்புடன்,
இராம.கி.

அன்பிற்குரிய அந்திமழை,

தங்களுடைய வலைத்தளத்தில் இந்த அச்செடுப்பை வெளியிட்டதிற்கு நன்றி. பாவலர் ஏறுவின் பாட்டு மிகுந்த கூர்மை கொண்டது.

அன்புடன்,
இராம.கி

அன்பிற்குரிய SK,

என் நலம் பற்றிய தங்களின் வேண்டுதலுக்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.

அன்பிற்குர்ய திரு, வெற்றி,

பெரியாரைப் பற்றிய இந்தப் பதிவிற்கு நீங்கள் அளித்த பின்னூட்டுக்களைப் படித்தேன். நன்றி

அன்புடன்,
இராம.கி.

அன்பிற்குரிய தருமி,

கொஞ்சம் கொஞ்சமாய்த் தேறி வருகிறேன். இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகும் முழு வலுவைப் பெற.

உங்கள் வாழ்த்திற்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

(கோதுமை, ராகி, ஓட்) கூழ் ஆகாரம், பழங்கள் நிறைய உண்க! எண்ணெய்யால் சுட்ட தோசை, மசாலா, பூரி போன்றவற்றை தவிர்த்தல்
நலம்.

வசூல் ராஜா

இராம.கி said...

நன்றி, வசூல்ராஜா

அன்புடன்,
இராம.கி