அடுத்து வரும் காதைகளான இந்திர விழவு ஊர் எடுத்த காதை, கடலாடு காதை, கானல் வரி, வேனிற் காதை ஆகியவற்றில் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் நாம் இங்கு தேடிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கான மறுமொழிகள் கொண்டவை அவையல்ல. இந்திர விழவு என்பது சித்திரை மாத முழு நிலவில் தொடங்குகிறது. எத்தனை நாள் நடந்திருக்கும் என்று சிலம்பின் வழி சொல்ல முடியவில்லை. பொதுவாக நம்மூரில் திருவிழாக்கள் என்பவை 10 நாட்கள் அளவில் நடைபெறுவது உண்டு. ஆனால் இது 28 நாட்கள் நடந்ததாக மணிமேகலைக் காப்பியத்தின் மூலம் அறிகிறோம். இந்த இந்திர விழவிலும், மாதவி நடனம் ஆடுகிறாள். ஆடிய நாளின் அதே மாலையில் கோவலனும் மாதவியும் கடலாடுகிறார்; அதன்பின் ஓய்வாக இருந்த நேரத்தில் கானல் வரி எழும்புகிறது. (கானல் வரியின் சிறப்பை எழுத முற்படாமல் என்னை நானே தடுத்துக் கொள்கிறேன்:-).)
"கானல் வரி யான் பாடத் தானொன்றின் மேல் மனம் வைத்து மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்" என்று கானல் வரியின் முடிவில், மனம் வெதும்பி, ஏவலாளர் சூழ் தரக் கோவலன் மாதவியை விட்டுப் போகிறான். அத்தோடு கோவலன் மாதவியின் உறவு முறிகிறது.
கோவலன் மாதவி உறவு இருந்த காலம் ஓராண்டிற்கும் குறைவானது தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஓராண்டு இருக்கும். இதற்குள் மாதவிக்கு மகவும் பிறந்து விடுகிறது. (மணிமேகலை பற்றிய செய்திகளைப் பின்னால் பார்க்கலாம்.) ஓராண்டிற்குள் ஓர் இல்வாழ்க்கையே ஓய்ந்து போகிறது. இதன் பின்னர் மாதவி துறவு வாழ்க்கை தான் வாழ்கிறாள். உண்மை இப்படி இருக்க, அதை உணராமல், பல ஆண்டுகள் கோவலன் கண்ணகியைப் பிரிந்தான் என்று திரு. ஞானியும், திரு.மாலனும் சொல்வது எனக்கு வியப்பாகிறது. "அய்யா, சிலம்பைத் திரும்பப் படியுங்கள்" என்று தான் நாம் சொல்ல முடியும்.
மாலன் தன் அண்மை வலைப்பதிவில் சொன்னது:
"முன்னுதாரணமாகக் கொள்ளத் தக்கவள் தானா கண்ணகி? கணவன், வேறு ஒரு பெண்ணின் பால் ஈர்க்கப்பட்டு அவள் வீடே கதி என்று பல ஆண்டுகள் கிடந்த போது கண்ணகி வருந்தி அழுதாளே தவிர, அவளை விட்டு விலகி வாழ்வதைக் குறித்து எண்ணிக் கூடப் பார்க்கவில்லை. அவன் மலை போன்ற குடும்பச் சொத்தை அந்த இன்னொரு பெண்ணிடம் தொலைத்து விட்டு வந்த போதும் அவனைக் கடிந்து கொள்ளவில்லை. சிலப்பதிகாரத்தின் முன் பகுதி முழுவதும், ஆண் என்ன செய்தாலும் அதை சகித்துக் கொண்டு இருப்பவள் தான் கற்புக்கரசி என்பதை நிலை நிறுத்தும் பாத்திரமாகத் தான் கண்ணகி வடிக்கப்பட்டிருக்கிறாள். வீட்டித்குள்ளேயே முடங்கிக் கிடப்பவளாக ('வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள்') அவள் சித்தரிக்கப்படுகிறாள். நீதி தவறியதற்காக நெடுஞ்செழியன் மீது காட்டிய அறச் சீற்றத்தில் நூற்றில் ஒரு பங்கை, ஊதாரியான, பெண் சபலம் கொண்டவனான, சந்தேக புத்தி கொண்டவனான (இந்திரவிழாவில் மாதவி மீது எழுந்த ஐயம் ஓர் எடுத்துக் காட்டு) கோவலன் மீது காட்டியிருந்தால் அவன் திருந்தியிருக்கக் கூடும். "
மாலன் இங்கு சொல்வது சிலம்பின் வரிகளுக்கு இடையில் தன்முனைப்பாகப் பலவற்றைச் சேர்த்துச் சொல்வதாக எனக்குப் படுகிறது. ஒவ்வொரு செய்தியாகப் பார்ப்போம்.
பல ஆண்டுகள் கோவலன் மாதவி வீட்டில் கிடக்கவில்லை. ஓராண்டிற்கும் குறைவாகத் தான் கண்ணகி வருந்தி அழுதாள் என்பதே உண்மை; உடனே "விலகி வாழ அவள் எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று மாலன் சொல்வது எனக்கு வியப்பாகிறது. இக்கால இந்தியச் சட்டம் கூட மணவிலக்குப் பெற விழையும் இருவரும் ஓராண்டு காலமாவது தனித்து இருக்க வேண்டும் என்று சொல்கிறது. கேட்டவுடனே அது மணவிலக்கைத் தந்துவிடவில்லை; ஏனெனில், "ஒருவேளை மனம் மாறி, ஆணும் பெண்ணும் ஒன்று சேரலாம், அதற்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்" என்று இக்கால நயன்மை அவை (court of justice) எதிர்பார்க்கிறது. உடனே "தாட் பூட் தஞ்சாவூர், தனியே போ, மண விலக்கு வாங்கு, பிரிந்து செல், கடிந்து கொள்" போன்ற கனமான சொற்கள் ஏன் வரவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. Why not we give the benefit of reconciliation to KaNNaki? Why are we so cruel to her?
கண்ணகி, மற்றும் கோவலனின் அகவை அப்பொழுது என்ன என்று எண்ணிப் பார்க்கலாமா?
திருமணம் செய்யும் போது கோவலனுக்கு அகவை 16, கண்ணகிக்கு 12; ஓராண்டு கழித்து வேறு வைக்கும் சடங்கு நடந்திருக்கிறது. அதற்குச் சில யாண்டுகள் கழித்து கோவலன் மாதவியைப் பார்க்கிறான். அதுவரை கோவலன் கண்ணகிக்கு காதலன்/ கொழுநன் ஆகவே அன்பு பாராட்டி இருக்கிறான். கோவலன் முதன் முதலில் பார்க்கும் போது மாதவிக்கு அகவை 12. மாதவிக்கும் கோவலனுக்கும் மிகுந்த அகவை வேறுபாடு இருக்க முடியாது. பொதுவாகத் தமிழகத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் 12 ஆண்டுகளுக்கு மேல் அகவை வேறுபாடு வைக்க மாட்டார். பெருந்திணை (அகவை மீறியவரிடம் ஏற்படும் காமம்) என்பது தமிழ் இலக்கியத்தில் பாராட்டிச் சொல்லப் படுவது இல்லை. (இன்றைக்கும் இரண்டாம் தாரமாய் அன்றி முதற் கல்யாணத்தில் அகவை வேறுபாடு பன்னிரண்டிற்கும் மேல் இருப்பது மிக மிக அரிது.) 12 என்று கொண்டால், கோவலனின் அகவை, மாதவியை முதலிற் சந்திக்கும் போது 24 என்று ஆகும். அது கொஞ்சம் அதிகம் என்றே ஓர்மை ஏற்படுகிறது. ஏனென்றால், மாதவியிடம் இருந்து பிரிந்த பின்னால், காடுகாண் காதையில் கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் கூட்டிச் செல்லும் போது, "அவர் என் மக்கள்" என்ற பேச்சால் "அவ்வளவு பக்குவம் பெறாதவர்" என்றே நமக்கு உணர்த்துகிறார். அப்படியானால் கோவலனின் அகவை 21ஐச் சற்று தொட்டால் போலத் தான் இருக்க முடியும். ஒரு பேச்சுக்கு, 21 என்று எடுத்துக் கொண்டால், கானல் வரியின் போது கோவலனுக்கு அகவை 21, கண்ணகிக்கு 17, மாதவிக்கு 13.
ஆக, கோவலன் கண்ணகியோடு இல்லறம் நடத்தியது மொத்தம் 5 ஆண்டுகளே இருக்கக் கூடும். மாதவியோடு களித்துக் கிடந்ததும், மணிமேகலையைப் பெற்றதும் ஓராண்டுக்குள் நடந்ததே. அந்த ஓராண்டிலும் அவன் மாதவி வீட்டிலேயே இருந்தானா, அல்லது சின்ன வீட்டிற்கும் பெரிய வீட்டிற்குமாய் மாறி மாறிப் போய் வந்தானா, அதில் எழுந்த சிக்கல்கள் எவை, கண்ணகி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி மாதவி வீட்டிற்குப் போவதை நிறுத்த வில்லையா? [உண்மையில் சிலம்பையும் மணிமேகலையையும் படித்தால், இரண்டு சக்களத்திகளான கண்ணகிக்கும் மாதவிக்கும் ஒருவருக்கு இன்னொருவர் மேல் மதிப்பு இருந்திருக்கிறது என்றே புலப்படுகிறது. மாதவி கண்ணகியை இற்கிழத்தி என்றே சொல்கிறாள். தவிர, 5 ஆண்டு வாழ்க்கையில் கண்ணகிக்குப் பிள்ளை பெறாது இருந்திருக்கிறது. மாதவிக்கோ, உறவு ஏற்பட்ட குறுகிய காலத்திலேயே மகவு பிறந்திருக்கிறது. ஒரே ஊரில் இருக்கும் கண்ணகிக்கு மாதவி வீட்டு நிகழ்வுகள் எல்லாம் தெரிந்து தானே இருக்கும்? அவள் மணிமேகலையை மகள் என்றே எண்ணியிருக்கவும் வாய்ப்புண்டு. பின்னால் மாதவி மணிமேகலையை வளர்க்கும் போது, கண்ணகியை மணிமேகலையின் தாய் என்றே சொல்கிறாள். மணிமேகலைக் காப்பியத்தில் கூட, வஞ்சிமாநகரில் உள்ள கண்ணகி கோயிலுக்கு மணிமேகலை வரும் பொழுது, கண்ணகி மணிமேகலையை மகளே என்றுதான் சொல்கிறாள்.] மாசாத்துவானும், மாநாய்கணும் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே கிடந்தார்களா? இரு பக்கத்துச் சுற்றத்தாரும் அலர் - பழிச்சொல் (இக்காலக் கிசுகிசு) பேச வில்லையா? எனப் பல கேள்விகள் எழுகின்றன. அவையெல்லாம் காப்பியத்தின் ஓட்டத்திற்குத் தேவையில்லை என்று இளங்கோவடிகள் கொடுக்கவில்லை. [இக்காலத் திரைப்பட நெறியாளர் இச் செய்திகளை ஒரு திரைப்படத்தில் தருவாரோ?]
மாலன், ஞானி போன்றவரிடம் நமக்குக் கேட்கத் தோன்றுகிறது. இக்கால மன நிலையை அக்காலத்திற்குப் பொருந்திச் சொல்வது எவ்வகையில் தகும்? கண்ணகி ஏன் விலகி வாழ எண்ணிப் பார்க்கவேண்டும்? அக்கால மணம் என்பது 2 குடும்பங்கள் சேர்வது. பிள்ளைப் பேறு இன்றி இருந்த மருமகளை மாசாத்துவானும் அவன் மனைவியும் அணைத்துத் தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பின்னால் மருமகளின் பெற்றியை அவர் பாராட்டித் தான் இருக்கிறார். மாநாய்கன் குடும்பத்தாரின் ஆதரவும் இருந்திருக்கும். மணவிலக்குச் செய்ய என்ன முகந்தம்?
அப்படி என்ன தான் நடந்துவிட்டது? கண்ணகியின் கணவன் அவளை விட்டுச் சற்று விலகிப் போனான். ஓர் இற்பரத்தை வீட்டில் ஓராண்டு இருந்துவிட்டான். அது தப்புத் தான். ஆனால் அவன் ஊர்மேய வில்லையே? இற்பரத்தை ஒரு பிள்ளை பெற, தன் மகளுக்குத் தன் குலதெய்வப் பெயரையும் (மணிமேகலை) இட்டுச் சீராட்டினானே? அவன் இரு தாரம் கொண்டிருந்தான். அவ்வளவு தான். இரு தாரம் செய்தவனெல்லாம் குமுகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதவன் எனில் அப்புறம், நாவலந் தீவின் தொன்மங்களை எல்லாம் ஒன்று சேர்த்துக் கடலில் தூக்கி எறியுங்களேன். முருகனையும், விண்ணவணையும் இனிமேல் தொழுகாதீர். பிறவா யாக்கைப் பெரியவனோடு உமையையும் கங்கையையும் தொடர்பு படுத்தாதீர், மாபாரதப் பாஞ்சாலியைப் பெருமைப் படுத்தாதீர். தயரதனைச் சொல்லிக் காட்டாதீர். ஏகபத்தினி விரதனான இராமன் கூட தன் மூன்று அன்னையரைச் சாடவில்லை. நான் சொல்லிக் கொண்டே போகலாம். (நண்பர்களே, நான் இரு தார மணத்தைச் சரி என்று சொல்லி அணி செய்ய வரவில்லை; அக்கால ஒழுங்கில் கோவலனும் ஒரு பகுதி என்று மட்டுமே சொல்கிறேன். கோவலன் இன்னொரு பெண்ணை நாடியது இன்றைக்கு வேண்டுமெனில் தப்பாகலாம். அன்றைக்கு, ஓர் ஆணாதிக்க குமுகாயத்தில், அரச குடும்பத்தினரும், பெரிய செல்வந்தரும் பல்வேறு காரணம் கருதி பலதார மணஞ் செய்த காலத்தில், அது மரபாய் இருந்தது தானே?) மாதவி என்பவள் பிறப்பால் வரைவின் மகள்; ஆனால் நடப்பில் அவள் குலமகளாகத் தான் இருந்தாள்.
"மலை போன்ற குடும்பச் சொத்தை இன்னொரு பெண்ணிடம் தொலைத்து விட்டு வந்த போதும் அவனைக் கடிந்து கொள்ளவில்லை. சிலப்பதிகாரத்தின் முன் பகுதி முழுவதும், ஆண் என்ன செய்தாலும் அதை சகித்துக் கொண்டு இருப்பவள்தான் கற்புக்கரசியா?" என்று மாலன் கேட்கிறார்.
மாதவியிடம் ஆட்பட்டதில் கோவலனுடைய அரத்தின வணிகம் குலைந்து தான் போயிற்று. அவன் மரக்கலத்தில் வரும் பொருள்களை வாங்கி விற்று, அல்லது உள்நாட்டுப் பொருள்களை ஏற்றுமதியாளருக்கு விற்று வணிகம் செய்தவன். ஆங்கிலத்தில் சொன்னால் அவன் ஒரு trader. இது கனாத்திறம் உரைத்த காதையில் கண்ணகியிடம் திரும்பிவந்து சிலம்பைப் பெற்றுக் கொண்டு சொல்லும் உரையால் தெரிகிறது. கலம் வரும் நேரத்தில் துறையில் இருந்து வணிக வாய்ப்புக்களைப் பார்க்காது இருந்தால் ஆகும் நிலை தான் அவனுக்கு ஏற்பட்டது. செம்மீன் படம் பார்த்திருக்கிறீரோ? அதில் பரிக்குட்டிக்கு நடக்கும் நிலை என்ன? அவனுடைய வணிகம் எப்படிச் சீரழிகிறது? வாய்ப்புக்களைத் தவறவிட்டதால், உழைமுதல் (working capital) (கருத்தம்மாவின் தகப்பனுக்குக் கடன் கொடுத்துத் திரும்பவராமல்) குறைந்து போனதால் அவன் வணிகம் சீரழிகிறது. தேவைப்பட்டால் அவன் வாப்பாவிடம் பணம் கேட்டு மீண்டும் உழைமுதலைக் கூட்டிச் சரி பண்ணியிருக்க முடியும். இருந்தாலும் அவன் கூடப் பிறந்த பெருமிதம் தடுக்கிறது. அதே போலத்தான் கோவலனுக்கு; மாசாத்துவானோ, மாநாய்கனோ, கோவலன் கேட்டால் உதவாமலா போவார்? ஆனாலும் கோவலனின் பீடு (pride) தடுக்கிறது. அவன் மாதவியிடம் மயங்கி தன் வணிக வாழ்க்கையைக் குலைத்துக் கொண்டான்; செல்வம் போயிற்று. இன்றைக்கும் நகரத்தாரிடையே மகன்களுக்கும் தந்தையார்களுக்கும் இடையே பீடு, ஊடே வந்து கொண்டே இருக்கும். வாய் திறந்து உதவி கேட்காத வரை எந்த உறவினரும் உதவி செய்ய மாட்டார். இந்த அருத்தம் புரியாத மானம் என்பதைப் பெரிதாக நோக்குகிற மாந்தர் இன்றும் இருக்கிறார். நான் தோற்றுவிட்டேன் என்பதைத் தந்தையிடம், மாமனிடம் ஒப்புக் கொள்ளாத ஆட்கள் பலரும் இருக்கிறார்.
சரி, இப்படிச் செல்வத்தைத் தொலைத்தானே, கண்ணகி கேட்டிருக்க வேண்டாமா, என்றால் அது ஆணாதிக்க குமுகாயம் (இன்றைக்கும் 99 % ஆணாதிக்கப் போக்குகள் இல்லையா, என்ன?) கணவன் முதலைத் தொலைத்தான். ஆனால் இப்பொழுது தவறு அறிந்து வந்திருக்கிறான். அறிவுள்ள பெண், அந்த நேரத்தில் சண்டை போடுவாளா, அல்லது அவனை அணைத்துப் போவாளா?
தெரியாமல் நடந்துவிட்ட செயலுக்காக, குமுகம் ஏற்றுக் கொள்ளாததைத் தான் ஏற்றுக் கொண்டு, தண்ணீர் ஊற்றி "நீ ஒரு கங்கையடி; உன்னை ஒன்றும் இது செய்யாது" என்று ஒரு தாயின் கூற்றைச் சொல்லி அக்கினிப் பிரவேசம் காட்டிய செயகாந்தன் இம் முற்போக்குவாதிகளுக்குச் சரியாகத் தெரிவார்; திருந்தியவனை ஏற்று மேற்கொண்டு மேலே ஆக வேண்டியதைப் பார்த்த கண்ணகியோ, அதைப் பதிப்பித்த இளங்கோவடிகளோ, இவருக்கு முட்டாள்களாகத் தெரிகிறார். இது என்ன ஒரு கண்ணில் விளக்கெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பா?
ஆழ்ந்து அமர யோசித்தால் கண்ணகி செய்தது நடைமுறைத் தனம் என்பது புலப்படும். தப்பு என்று ஒப்புக் கொண்டபின்னர், அவனைத் தண்டித்து என்ன ஆகப் போகிறது?
"ஆண் என்ன செய்தாலும் அதை சகித்துக் கொண்டு இருப்பவள் தான் கற்புக்கரசியா?" என்று கேட்கிறார் மாலன். அவள் ஒன்றும் சகித்துக் கொண்டு இருக்கவில்லை. அக்கால வழக்கம் தெரிந்து இருந்தாள், வேறு வைத்த பின்னால், இனி கோவலனும் இவளும் எடுக்கும் முடிவு தான். கணவன் சின்ன வீடு சென்று விட்டான். இவள் சண்டை போட்டாளா, இல்லையா என்பது சிலம்பின் வழியாக நமக்குத் தெரியவில்லை. வரிகளுக்கு நடுவில் நாம் பொருளைத் தேடிக் கொண்டு இருக்க வேண்டாம். செல்வம் போனது, வணிகம் குன்றியது எல்லாம் அவளுக்குத் தெரிந்து தான் இருந்திருக்க வேண்டும். அவள் அதை மறுத்து ஒரு நாடகக் காட்சியை உருவாக்கி இருந்தால் சிலம்பில் இன்னொரு காதை வந்திருக்கும். அவ்வளவு தான். அவள் ஏன் பொறுத்து இருந்தாள் என்பதை அறிய அடுத்த காதையான கனாத்திறம் உரைத்த காதைக்குப் போகவேண்டும்.
உண்மையில் வாய்ப்புக் கிடைத்தவுடன், கணவனை வேறுபக்கம் கண்ணகி நகர விடவில்லை.
அன்புடன்,
இராம.கி.
11 comments:
இராம.கி ஐயா,
உங்களில் இந்த மூன்று தொடர்பதிவுகளை தொடர்ந்து படித்துவந்தேன். நன்றாகவும், தெளிவாகவும் உறைக்கும் படியும் எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு பாராட்டுக்கள்.
சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிக் கண்ணகியின் மீது பூசிய வீசிய அழுக்கைத் துடைத்திருக்கிறீர்கள் ஐயா. அந்த இளங்கோவும் கண்ணகியும் உங்களுக்கு நன்றி பல கூறுவர்.
சிலம்பைப் படிக்காமலே, உள்ளே என்ன சொல்லியிருக்கிறது என்று தெரியாமலேயே இவர்களாக கற்பனை முடிவு எடுத்துக் கொண்டு வாய்க்கு வந்ததைப் பேசும் அறிவீனத்தை என்னதான் சொல்வது.
அறிவீனம் தவறல்ல. ஆனால் முழுமையான அறிவு என்று தன்னைத்தானே நம்பும் அரைகுறை அறிவுதான் கொடிது.
கண்ணகியைப் பற்றியும் சிலப்பதிகார சிறப்பு பற்றியும் தெரிந்து கொள்ள நல்ல பதிவு ...
தமிழர்கள் மனதார வாழ்த்த வேண்டிய முயற்சி...
வாழ்த்துகிறேன் ...
சரியான உருமங்களை ஆணித்தரமாக முன்வைத்து அழகாக விளக்கியிருக்கிறீர்கள். உங்களின் பதிவுகளில் சிறந்தனவற்றுள் இந்த மூன்று பதிவுகளும் முதன்மையாய் இருக்கும்.
ஒரு இலக்கியம், அது காட்டும் தமிழின், தமிழரின் தொன்மை என்கிற சிறப்புக்களை விட்டுவிட்டு இட்டுக்கட்டிய கதைகளில் நொள்ளை சொல்லிக் கொண்டிருப்பவர்களின் வாதங்களைப் பொடிப்பொடியாக்கி இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு வணக்கம்.
அன்பிற்குரிய கோவி.கண்ணன்,
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி.
அன்பிற்குரிய இராகவன்,
சிலம்பைப் படிக்காமல் இருப்பவர்கள் ஒருபக்கம்; உரையாசிரியர்கள், மற்ற இரண்டாம் ஊற்றினர் சொல்லுவதைப் படித்துப் புரிந்து கொண்டவர் இன்னொரு பக்கம்.
நான் சொல்லுவது மூலத்தை ஒருமுறையாவது படிப்போமே? நம்முடைய புரிதலை ஒழுங்கு செய்வோமே?
அன்பிற்குரிய செந்தில் குமார் இராமச் சந்திரன்,
உங்கள் கனிவிற்கு நன்றி.
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய செல்வராஜ்,
உங்கள் ஆதரவிற்கு நன்றி.
நொள்ளை என்பது நம்மிடம் இல்லாமல் இல்லை. ஆனால் அந்த நொள்ளைகளுக்கும் மேல் என்ன இருக்கிறது? இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டு வரலாற்று, இலக்கியத் தொடர்ச்சி சொல்லுகிறார்களே?
"ஏதோ ஒன்று இருக்க வேண்டுமே என்று படிப்பதற்கு ஏன் முன்வரமாட்டேன் என்கிறார்கள்?"
என்பது தான் குதிரைக் கொம்பாகத் தெரிகிறது.
அன்புடன்,
இராம.கி.
Age of Madhavi bothers me so much. So, she took Kovalan as her Kadhalan at 12 and had a baby at 13? In those days girls were not even maturing that early physically.
As for as I am concerned, Kannagi didn't do anything wrong in accepting her husband after he came back. She was selfish to accept him even though Kovalan left his daughter/ mother because she loved her husband. The most important thing I think everyone of us human beings to learn from her character was her power of anger and what it did to the whole country. Instead of compromising over so many injustices that are happening in front of our eyes, we should fight against them with the same vigor and righteousness.
ஐயா,
தமிழைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் தமிழர் வரலாறு பற்றியும் நுட்பமாக அறிந்துகொள்ள நல்ல நூல்களைப் பற்றிய ஒரு பதிவை இடுமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்
அன்பிற்குரிய செந்தில்குமார் இராமச்சந்திரன்,
எனக்குத் தெரிந்த நூல்களைப் பற்றி இங்கு பதிவு செய்ய முற்படுவேன்.
அன்புடன்,
இராம.கி.
தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துகொன்டிருக்கிறேன்...
திரு. இராம கி அவர்கட்கு,
உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை பெற்றுக்கொள்ள இயலவில்லை என்பதால் இப்பின்னூட்டம்.
தமிழ் விக்கிபீடியா பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அங்கே தொடர்ச்சியாக பல தொழிநுட்பவியல், குறிப்பாய் தகவற் தொழிநுட்பவியல் சார்ந்த கட்டுரைகள் வர ஆரம்பித்துள்ளன. கலைச்சொல் ஆக்கம் தொடர்பில் புலமையாளர் உதவி அதிகமதிகம் தேவைப்படும் கட்டத்தை எட்டியிருக்கிறோம்.
உங்களுக்கு நேரமிருக்கும் பட்சத்தில் தமிழ் விக்கிபீடியா நடவடிக்கைகளில் உதவுமாறு வேண்டுகிறேன்.
பயனர் கணக்கொன்றினை ஆரம்பித்து வெறும் மேற்பார்வையை மட்டுமாவது நீங்கள் செய்தல் நலம் என்பது என் கருத்து.
பதிலை எதிர்பார்க்கிறேன்.
என் மின்னஞ்சல் - mmauran@gmail.com
நன்றி.
Post a Comment