Monday, June 12, 2006

கண்ணகியும் கரடிப் பொம்மையும் - 1

"கண்ணகி ஒரு முட்டாள் பெண், கற்பென்ன கற்பு, கோவலனைத் தூக்கியல்லவா எறிந்திருக்க வேண்டும், தனக்கு நடந்த கொடுமைக்காக இவள் ஊரையே எரிக்கலாமா, இவளா தமிழ்க் குமுகத்திற்கு எடுத்துக் காட்டாய் இருப்பவள்" என்றெல்லாம் இன்றைக்கு ஒரு சிலர் பேச முற்படுகிறார்கள். கண்ணகியைச் சாடுவது ஒரு முற்போக்குத் தனம் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். இந்த எண்ணத்தின் வழியே அண்மையில், திரு ஞானி ஆனந்த விகடனில் எழுதியிருந்தார்.

சிறு அகவையில் கரடிப் பொம்மை வைத்து விளையாடிப் பழகிய ஒரு பெண், அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபடாமல், பேரகவையிலும் கரடிப் பொம்மையை அருகில் வைத்துத் தூங்குவது போல, கலைஞர் பழைய பழக்கத்தை விடாமல், இன்னும் கண்ணகியின் புகழ் பாடிக் கொண்டு சிலை நிறுவிக் கொண்டு இருக்கிறார் என்று அவர் கட்டுரை சொல்லியது; அதை மறுத்துக் கலைஞரும் கண்ணகி சிலை திறப்பில் நெகிழ்ந்து உணர்வு பூருவமாய் ஒரு சில சொன்னார். நண்பர் நாக இளங்கோவன் ஒரு திறந்த மடலொன்றை ஞானிக்கு எழுதி, அதைத் திண்ணை வலையிதழிலும் நயனம் என்ற தன் வலைப்பதிவிலும் இட்டிருந்தார். இளங்கோவனின் பதிவு என்னைச் சில விளக்கங்கள் எழுதத் தூண்டியது.

"முற்போக்கு வாதிகளே! கொஞ்சம் கதையை ஒழுங்காகப் படித்துப் புரிந்து கொண்டு பிறகு பேசுங்கள்" என்று மட்டுமே நான் இங்கு சொல்ல முற்படுகிறேன்.
------------------------------------------------------
சிலம்பின் கதை இரு வீட்டாரும் திருமணம் பேசி முடித்துக் கொண்டு, ஊருக்குள் கல்யாணஞ் சொல்வதில், தொடங்குகிறது. திருமணம் நடந்த போது கதை நாயகன் கோவலனுக்கு பதினாறு அகவை. கண்ணகிக்கோ பன்னிரண்டு. (திருமணஞ் செய்வது இவ்வளவு இளமையிலா என்று நம்முடைய இந்தக் கால விழுமங்களோடு பார்க்கக் கூடாது. அந்தக் காலத்தில் நம்மூர்ப் பழங்குடிகளின் இடையே இது போன்ற இளமைத் திருமணங்கள் நடந்தன. ஆனாலும் பெண் பூப்படைந்த பின்னால் தான் திருமணம் நடந்தது. திராவிடர் குமுகாயத்தில் பெண் பூப்படைதல் என்பது ஒரு பெரிய சடங்கு. பூப்படைந்த பின்னால் தான் திருமணம் செய்யவேண்டும் என்று அவர்கள் உணர்ந்து தான் இருந்தார்கள். பிற்காலத்தில் வடவர் பழக்கம் நமக்குள் பெருகி, அதனால் பரவிய குழந்தைத் திருமணத்தை முன்னாள் பழந்தமிழர் ஏற்றதாகச் சங்க இலக்கியங்கள் சொல்லவில்லை.)

மங்கல வாழ்த்துப் பாடலின் முடிவில், கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் முடிந்து, ஓராண்டு கழிந்ததை

"................................................................எப்பாலும்
செருமிகு சினவேற் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே"

என்ற வரிகளின் மூலம் இளங்கோவடிகள் உணர்த்துகிறார். "எப்பாலும் செருமிகு சினவேல் செம்பியன்" என்பது "எங்கும் சுட்டெரிக்கும் சினங் கொண்ட சூரியனை"க் குறிக்கிறது. அவன் இன்னொரு வட்டம் உருட்டினான் என்று சொல்லுவதால், இன்னொரு ஆண்டு கழிந்தது என்று புரிந்து கொள்ளுகிறோம். இந்தப் புரிதல் சரிதான் என்பதை அடுத்து வரும் மனையறம் படுத்த காதையால் தெரிந்து கொள்ளுகிறோம். (கண்ணகி கோவலன் திருமணம் முதுவேனிற் காலம் முடிந்து பெரும்பாலும் ஆவணி தொடக்கத்தில் நடந்திருக்க வாய்ப்பு உண்டு. என்னால் இன்னும் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. இன்னும் படிக்க வேண்டும். செம்பியன் ஒரு தனி ஆழி உருட்டுவோன் என்பதும் கூட முதுவேனில் முடிந்து மேலும் ஓராண்டு கழிந்ததாய்ப் புரிந்து கொள்ள இடம் உண்டு.)

இளங்கோவடிகள் என்னும் கதையாசிரியர் நாடகக் காப்பியம் எழுதியதால், கிட்டத் தட்ட இந்தக் காலத்துத் திரைப்படம் போல, அங்கும் இங்குமாய் கதையை வெட்டிக் காட்சிகளை மட்டுமே தருகிறார். அப்படித் தரும் காட்சிகளுக்கு நடுவே, ஆசிரியன் கூற்றாய், உரைபடு கட்டுரைகள் என்ற உத்தியைக் கையாளுகிறார். நாடகக் காட்சிகளுக்கு நடுவே, பின்னால் இருந்து, வெறும் ஒலிப்பாக, ஒரு சிலவற்றைச் சொல்வார்களே, அதைப்போல இந்த உரைபெறு கட்டுரைகள் அமைகின்றன.

மனையறம் படுத்த காதையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நகரத்தார் வழக்கங்கள் ஒரு சிலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நகரத்தார் வழக்கத்தில் திருமணமான மகனையும் மருமகளையும் (பெரும்பாலும்) ஓராண்டு முடிந்தோ, அல்லது (ஓரோவழி) மூவாண்டு முடிந்தோ, தனிக் குடித்தனம் வைப்பார்கள். தனிக் குடித்தனம் என்றவுடன், அது தனி இருப்பிடம் என்று எண்ண வேண்டாம். ஒரே வளவிற்குள் (வளவு என்பது கூட்டுக் குடும்பத்தின் முற்றம்; முற்றத்தைச் சுற்றிலும் ஒரு பத்தியும், அதையொட்டித் தனித் தனி அறைகளும் இருக்கும். அந்த அறைகளே வீடு என்று சொல்லப் படும்.) மகனுக்கு என ஒரு தனி வீடு (அறை) கொடுத்து, அவர்களுக்கு என்று தனியே ஓர் அடுப்படியும் கட்டி, தனியொரு குடும்பமாய் மகனையும், மருமகளையும் வைத்து, அவர்களே தங்களுக்கு சோறு வடித்து உண்ணுமாப் போல வைப்பார்கள். (இதுவரையில் தகப்பனுக்கு மட்டுமே வீடு என்று இருந்தது, இனிமேல், தனிக் குடித்தனம் வைத்த நாளாய், தகப்பன் வீடு பெரிய வீடு என்றும், மகன் வீடு தனியாயும் குறிக்கப் பெறும்.) மகனைப் பெற்றவரும், மருமகளைப் பெற்றவரும் இந்தப் புதிய நடைமுறைக்கு வேண்டியவற்றைச் சேர்த்து, ஆவன செய்வார்கள். இது ஒரு தனிச் சடங்காகவே நடைபெறும். இப்படி மகனைப் பெரிய வீட்டில் இருந்து வேறு வைத்தலைத் தான் மனையறம் படுத்தல் என்று சொல்லுவார்கள். (இளங்கோவடிகள் வேறு வைத்தல் என்ற சொல்லாட்சியை ஆளுகிறார்.)

நகரத்தார் நடுவே உறவினை விளிக்கும் முறையில் சில வேறுபாடுகள் உண்டு. தந்தை வழிச் சுற்றத்தார் (குறிப்பாக அண்ணன், தம்பிகள், அப்பாவின் கூடப் பிறந்தார், அவர் மக்கள், தாத்தாவின் வழி வரும் ஆண் சுற்றத்தார் ஆகியோர்) பங்காளிகள் எனப் படுவர். பங்காளிகள் என்பது ஏனென்றால் அவர் மூதாதையர் சொத்தில் பங்கு கேட்கக் கூடியவர் என்பதாலேயாகும். தாயின் வழி உறவினர்கள் அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தாய பிள்ளைகள் என்று சொல்லப் படுவார்கள். இது போக, தந்தை வழி அமையும் பெண் உறவினர், இன்னும் மற்றவர், பொதுவான சொல்லான சொந்தக் காரர் என்பதால், அழைக்கப் படுவார்கள். [சொந்தல் என்பது சொத்து என்னும் பெயர்ச்சொல்லுக்கு அடிப்படையாகும் வினைச் சொல்; ஆனால் இன்று புழக்கத்தில் இல்லாமற் போன சொல்.]

வேறு வைத்த பிறகு, மருமகளுக்கு ஒரு சில சிறப்புக்கள் ஏற்பட்டு விடுகின்றன.

இனிமேல், தன் தாய்வீட்டுச் சொந்தக் காரரை தானே, தன் மாமியார் இடையூறு இன்றி, விருந்திற்கு அழைத்து தனித்து வடித்துப் போட்டு தானும் ஒரு தலைவி என்று காட்டிக் கொள்ளும் சிறப்பு. பங்காளி வீட்டுப் பெண்டுகள் இவளையும் இவள் மாமியாரைப் போலவே தனி ஆளாக மதித்து எந்த ஒரு விழவிற்கும் முறை வைத்துக் கூப்பிட வேண்டியதற்கான உரிமை. அறக் காரியம் ஏதேனும் நடைபெற்றால், இவளும் இவள் கொழுநனும் தனித்துப் பரிசாரம் செய்யலாம். மொத்தத்தில் இந்தச் சடங்கிற்கு அப்புறம் மருமகளுக்குக் குமுகத்தில் தனி ஆளுமை கிடைத்து விடுகிறது. மகனையும் தனிப் புள்ளி என்றே கரைக் கூட்டத்தில் சொல்லுவார்கள். (He is counted as a full-fledged member.) இந்த ஆளுமை கிடைக்கும் சடங்கை பொதுவாக, மருமகப் பெண்கள் பெரிதாகக் கருதுவார்கள். (This is nothing but a tribal custom; from this day onwards, the daugter-in-law is considered equal in all respects to her mother - in - law in the community activities.) இந்தச் சடங்கின் முகன்மை கருதியே சிலம்பில் ஒரு காதை மனையறம் படுத்ததாய்த் தனித்து வருகிறது.

மனையறம் படுத்த காதையில் எழுநிலை மாடத்தின் (எழுநிலை மாடம் என்றால் raised balcony என்று தான் பொருள். ஏழு நிலை மாடம் என்ற பொருள் இங்கு கிடையாது. கோயில், அரண்மனை என்று வந்தால் ஒருவேளை அப்படி நினைத்துப் பார்க்கலாம்) அருகில் இருந்தவாறு கோவலன் "மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே" என்று சொல்லுகிறானே, அது வேறுவைத்த சடங்கு நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு நடந்த உரை. பலரும் ஏதோ திருமண நாள் இரவு நடந்தாக எண்ணிக் கொள்கிறார்கள். அந்த ஓராண்டில் அவர்களுக்கு ஏற்பட்ட நிறைவின் முடிவில் தான் இப்படிப் பல பாராட்டுகிறான். அதற்கு அப்புறம் பல ஆண்டுகள் நடந்தவற்றை இளங்கோவடிகள் ஏழே வரிகளில் அடக்கிவிடுகிறார்.

"வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
மறப்பருங் கேண்மையொடு அறப் பரிசாரமும்
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமோடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற்
காண் தகு சிறப்பில் கண்ணகி தனக்கென்"

ஒலிதல் என்றால் தழைதல் = நீண்டு கிடத்தல் என்று பொருள்; தழையத் தழைய கிடக்கும் கூந்தல் என்று சொல்கிறோம் இல்லையா? வார் ஒலிக் கூந்தல் என்றால் வாரிச் சேர்க்கக் கூடிய, தழைத்துக் கிடக்கும் கூந்தல் என்று பொருள்; வாரொலிக் கூந்தல் என்பது கண்ணகிக்கான புகழ்ச்சி.

பேரியற் கிழத்தி = பெரிய வீட்டுப் பெண்;

மறப்பருங் கேண்மை = பெண்வீட்டுச் சுற்றத்தார். மாநாய்கன் வீட்டுப் பெண் திருமணமாகி மாசாத்துவான் வீட்டிற்கு வந்தாலும், பெண் வீட்டுக்க் கேளிரை மறக்கவொண்ணுமோ, எனவே பெண்வீட்டுச் சுற்றத்தாரை மறப்பருங் கேண்மை என்றார்.

அறப் பரிசாரம் = அறக் காரியங்களில் ஈடுபடுவது, துறவிகளை வருவித்துப் பூசிப்பது போன்றவை.

விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கை = மகனும் மருமகளும் தங்களுக்கு வேண்டப்பட்டவருக்கு விருந்து கொடுக்கலாம். மகனின் பெற்றோருக்கு அவர் வேண்டப் பட்டவரா, இல்லையா என்பது பொருட்டில்லை;

உரிமைச் சுற்றம் = சொத்தில் உரிமை கொண்ட பங்காளிகள். இந்த உரிமைச் சுற்றமொடு ஒரு தனிப் புள்ளியாகப் புணர்ந்து கொள்ள (= தழுவிக் கொள்ள, உறவாடிக் கொள்ள)

இப்படியாக இற்பெருங் கிழமையில் (= தனி வீடு தரும் பெரிய உரிமையில்), கண்ணகிக்கு ஏற்பட்ட காண் தகு சிறப்பில், யாண்டு சில கழிந்தன
ஆக கோவலனுடன் கண்ணகி சில ஆண்டுகள் காண் தகு சிறப்பில் வாழ்ந்திருக்கிறாள். சரி, எத்தனை யாண்டுகள் பிரிந்து இருந்தாள் என்பதை அடுத்து வரும் பகுதியில் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

16 comments:

மணியன் said...

ஐயா, இணையத்தில் சிலப்பதிகார பதிவுகளே இல்லை. தாங்கள் முழுமையாக இதனை எடுத்துச் செல்ல வேண்டுகிறேன். உங்கள் விளக்கங்கள் பாடல்களையும் பண்பாட்டையும் அழகாக எடுத்துரைக்கின்றன.

சுந்தரவடிவேல் said...

சிலப்பதிகாரத்தை புலியூர்க் கேசிகன் தெளிவுரையோடு அவ்வப்போதாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். காட்சியமைப்பின் அழகிலும், வாழ்வு முறையிலும் வியப்பினை ஏற்படுத்துகிறது. கண்ணகியின் சிலை விவகாரத்தில் நகையாடுபவர்களது அரசியல் சிலப்பதிகாரத்தையும், அதனைச் சார்ந்து தமிழர் வாழ்வினையும் இலக்கியச் சொத்துக்களையும் நகையாடுவதாகவே இருக்கிறது என்பதைத் தமிழர்கள் உணர வேண்டும். வெறும் கட்சி சார்ந்த, விகடனைக் கொளுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் 'பத்திரிகாதர்மம், பத்திரிகைச் சுதந்திரத்துக்கு' ஆபத்து வந்துவிட்டதாகக் குரலெழும்பத்தான் செய்யுமே தவிர, சிலம்புக்குச் சிறப்பு வந்துவிடப் போவதில்லை. கண்ணகி சிலையின் பின்னான அரசியலைப் புரிந்து கொள்ள சிலப்பதிகாரத்தினை, அதன் அழகினைப் பொது மக்களிடம் பரப்ப, நாடகங்களையும், கதைச் சொற்பொழிவுகளையும், நாட்டியங்களையும் ஒரு அமைப்பாக நடத்த 'இந்த அரசு' முன் வர வேண்டும். தமிழிலக்கியங்களைத் தீயிட்டுப் பொசுக்கிய காலம் இனியும் வாய்க்காதென்று மிஞ்சியிருப்பவற்றை கேலித்தீயால் பொசுக்கப் பார்க்கும் கயமையைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களோடு தாமும் சேர்ந்து கூத்தாடக் கூடாது!

//கரை காரர்//
எங்கள் குலதெய்வக் கோயிலில் (சின்ன சாமிதான்:)) இன்றும் கரை காரர் என்ற வழக்கம் இருந்து வருகிறது.

G.Ragavan said...

சிலப்பதிகாரம் ஒரு மாபெரும் காவியம். வியத்தகு இலக்கியம். தமிழ்ப்பண்பாட்டைக் கட்டியஞ் சொல்லும் முரசு. அதை உணராதார் உணராதாரே. கண்ணகியைப் புரியாதார் புரியாதாரே.

Vaa.Manikandan said...

அற்புதமாகச் சொல்லி இருக்கிறீர்கள். இதனைத் நீங்கள் தொடர்ந்து எழுதுவது நன்றாக இருக்கும் என்றே எனக்கும் தோன்றுகிறது.

செல்வராஜ் (R.Selvaraj) said...

அருமை ஐயா. சிலம்பு பற்றி நீங்கள் எழுத முன்வந்திருப்பது மகிழ்வைத் தருகிறது. இலக்கியச் சுவையோடு அதன் பெருமைகளையும் தமிழர் வாழ்வியல் நிகழ்வுகளையும் அது காட்டும் என்பதில் ஐயமில்லை. தமிழரின் பெருமையும் பாரம்பரியமும் போற்றும் எந்த நிகழ்வுக்கும் செயலுக்கும் எழும் எதிர்ப்புகளை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை. வெறும் அறியாமையா? புரியவில்லை.

தந்தை, தாய் வழியினரைப் 'பங்காளிகள்', 'தாயாதிகள்' என்னும் வழக்கம் கொங்கு நாட்டுப் பகுதியிலும் உண்டு. "என்னைக்கிருந்தாலும் தாய் புள்ளையெல்லாம் வேணும்" என்று உறவுகளைப் பேணச் சொன்ன அம்மாவின் கூற்றில் இருக்கும் 'தாய் புள்ளை' நீங்கள் சொல்லும் 'தாய பிள்ளைகள்' என்னும் பொருளில் இருந்து மருவிப் பொதுமையாகச் சொந்தங்களைக் குறிக்க என்று ஏற்பட்டிருக்கவும் கூடும் என்று தோன்றுகிறது.

ram said...

arumaiyaana pathivu

பத்மா அர்விந்த் said...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள். நீண்ட நாட்களாகவே நீங்கள் சிலப்பதிகார செய்யுட்களை எழுதி அதன் முழுப்பொருளையும் எழுத வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. பள்ளிப்பருவத்தில் மிக ஆர்வத்தோடு படித்து வியந்திருக்கிறேன். என் தமிழாசிரியரும் தனி வீடு பற்றி விளக்கிகூறி இருக்கிறார். நினைவு ஊட்டியதற்கு நன்றி.

rmpraj said...

(¾Á¢ø ¯Ä¸õ ÌØÁò¾¢ø ±Ø¾¢Â¨¾ þíÌ Á£ñÎõ þθ¢§Èý.)
´Õ ¦ÀñÏìÌ ¸½Åý ¦ºöÂìÜÊ ¾£¨Á¸Ç¢ø, «øÄÐ ¾ÃìÜÊ ÐýÀí¸Ç¢ø, Á¢¸ì¦¸¡ÊÂÐ «Å¨Ç Å¢ðÎ þý¦É¡Õ ¦Àñ¨½ ¿¡ÊøÖŧ¾ ¬Ìõ.

«ó¾ ¾£¨Á¨Âö¾ §¸¡ÅÄ¨É ¦¾¡¨ÄóЧÀ¡ þÉ¢ ±ýÀì¸õ Å᧾ ±ýÚ ÜÈ¡Áø, ¸¡Äõ ¸Õ¾¢Â¢ÕóÐ, ¾¡Ûõ ¦¸ðÎô§À¡¸¡Áø «Åý Å¡ú×õ ¦¸¼¡¾¢Õì¸ ±ñ½í¦¸¡ñ¼ ¸ñ½¸¢ §À¡üÈò¾ì¸Åû þø¨Ä¦ÂýÚ Å¡¾¢ÎÀÅ÷¸û ¾Á¢ú/þó¾¢Â ÀñÀ¡Î¸¨ÇìÌÈ¢òÐõ «ÅüÈ¢ý ÌÓ¸¿Ä «ÊôÀ¨¼ ÌÈ¢òÐõ «È¢Â¡¾Å§Ã.

¾ÉìÌ ¾£§¾Ðõ ¦ºö¡¾ þáÁ¨É ±ñ½¢ ¯Õ¸¢ ¾ý ¸üÒ¿¢¨Ä¨Âì ¸¡ò¾ º£¨¾¨ÂÅ¢¼, ¾ÉìÌò ¾£¨Á ¦ºö¾ ¸½ÅÛìÌõ ¿ý¨Á¨Â§Â ¦ºöÐ ÌÊ ´Øì¸ò¨¾ì¸¡ò¾ ¸ñ½¸¢§Â þó¾¢Â÷ «¨ÉÅÕõ ²üÚ즸¡ûÇò¾ì¸ Á¨ÉÂÈ ÓýÁ¡¾¢Ã¢Â¡¸ ¾¨Ä ¿¢Á¢÷óÐ ´Ç¢÷¸¢È¡û.

¦¾¡¼Õí¸û, ³Â¡ þáÁ¸¢.

«ýÒ¼ý,
¬÷.±õ.À¡øáˆ
www.soundrelations.net

இராம.கி said...

அன்பிற்குரிய மணியன்,

இணையத்தில் சிலப்பதிகாரப் பதிவுகள் இருக்கின்றன. நாக. இளங்கோவனின் சிலம்பு மடல்கள் படிக்கப் படவேண்டியவை. அவர் அதை முதலில் தமிழ் இணையம் / தமிழ் உலகம் மடற் குழுக்களில் எழுதினார். பின்னால் அது தனிப் பொத்தகமாக வந்தது. அண்மையில் பதிவுகள் வலைத்தளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருக்கிறது.

நான் ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே விடையளிக்க முயலுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய சுந்தரவடிவேல்,

உங்கள் வருகைக்கு நன்றி. நகையாடுவது ஒரு சிலருக்குப் பொழுது போக்கு. அவர்களை விட்டுவிடுவோம்.

மற்றவருக்கு என்ன சொல்லுவது?

பழந் தமிழ் இலக்கியங்களைத் தமிழ்ர்கள் மீண்டும் மீண்டும் மீள்வாசிப்பு செய்யவேண்டும். நான் பழசெல்லாம் ஒழுங்கு, போற்றப் பட வேண்டியது என்ற சொல்லவில்லை. கொஞ்சம் தூக்கி நிறுத்துப் பார்த்து முடிவு செய்யுங்கள் என்று மட்டுமே சொல்லுகிறேன்.

பெருமிதம் என்று இல்லாத இனம் அழிந்து போகும்.

"கரை" என்ற சொல் பல்வேறு வட்டாரங்களில் புதிய பயன்பாடுகளில் புழங்கியிருக்கிறது. ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுவது நல்லது.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிகுரிய இராகவன், மணிகண்டன்

உங்கள் வருகைக்கும், கனிவிற்கும் நன்றி. தொடர் நீளாது. மதுரை அழிவு வரை சொல்லி நிறுத்துவதாகத் தான் எண்ணம்.

கற்பு என்பது பற்றி முன்னால் ஒரு இடுகையில் சொல்லியிருப்பதால், மீண்டும் தொடுவதாக இல்லை.

கண்ணகியை நகையாடுபவர்கள் அப்புறம், நாவலந்தீவின் ஒவ்வொரு தொன்மத்தையும் நகையாட வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய செல்வராஜ்,

உங்கள் கனிவான சொற்களுக்கு நன்றி. தமிழென்றால் எழும் எதிர்ப்புக்கள் எழுந்துகொண்டே தான் இருக்கும். நாம் தொடர்ந்து வேலையைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வப்போது இப்படி விடை சொல்லுவதோடு நகர்ந்துவிடத்தான் வேண்டும்.

தாயபிள்ளைகள், பங்காளிகள் என்ற வழக்கு இன்னும் பல பகுதிகளில் இருக்கிறது. நான் எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய ராம், மற்றும் தேன்துளி,

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி. சிலம்பை நீங்களும் படியுங்கள். அதில் ஆளப்படும் சொற்கள் கொஞ்சம் பழகினால் அப்புறம் அருகில் வந்துவிடும். படிக்கும் போது கூடவே ஏதேனும் ஒரு உரையையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். சிலம்பில் வரும் இசைப்பாடல்கள் மிகச் சிறப்பானவை; இயற்கை விவரிப்பும் மனத்தை ஈர்க்கும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பால்ராஜ்,

கண்ணகி போற்றத் தக்கவள் என்பது புரிந்ததால் தான் அந்த இலக்கியம் இத்தனை நாள் வாழ்ந்திருக்கிறது.

கற்பு என்பது பற்றியும் சிலருக்குத் தவறான கருத்தோட்டம் இருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ கற்பைப் பெண்ணின் தொடைகளுக்கு நடுவில் திணிக்கப் பார்க்கிறவர்கள் வலிந்து தவறான பொருள் கூறி தமிழர் புரிதலைச் சாடுகிறார்கள். முன்னால் என்னுடைய, மணத்திற்கு முன் புணர்ச்சி என்ற இடுகையை http://valavu.blogspot.com/2006/03/blog-post_08.html

படியுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

குமரன் (Kumaran) said...

ஐயா. இந்தப் பதிவினைப் படித்துப் பல புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டேன்.

நகரத்தார் வாழ்க்கை முறை தற்போது இருப்பது போலவே சிலப்பதிகாரக் காலத்திலும் இருந்தது என்பது தங்கள் துணிபா? இல்லை இது சிலப்பதிகாரக் காலத்தில் இருந்தது; ஆனால் தற்போது நகரத்தார் நடுவே இந்த வழக்கம் இல்லையா? இவ்வளவு நாள் இந்த வழக்கங்கள் தொடர்ந்து வருகின்றனவென்றால் அது மிக்க வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது.

வளவு என்றால் என்ன என்று கேட்கலாம் என்றிருந்தேன்; இந்தப் பதிவில் அதற்குப் பொருள் அறிந்தேன். அது மட்டுமின்றி இந்தப் பதிவைப் படித்ததில் பல தமிழ்ச்சொற்களையும் அவை எந்தப் பொருளில் வழங்கியுள்ளன என்பதனையும் அறிந்தேன். மிக்க நன்றி.

இராம.கி said...

வாங்க, குமரன்.

நகரத்தார் வாழ்க்கை தற்போது இருப்பதற்கும் சிலம்பின் காலத்திற்கும் மிகுந்த வேறுபாடு; ஆனாலும் ஒரு சில மிச்ச சொச்சங்கள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொன்னால் தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் சொல்லப்படும் வழக்கங்கள் கூட சிவகங்கை மாவட்டத்தில் இருக்கின்றன. ஆனாலும், பொதுவாக இன்றைய நகரத்தார் வழக்கில் பாண்டிநாட்டுப் பழக்கங்கள், (குறிப்பாகத் திருநெல்வேலிப் பழக்கங்கள்) மிகுந்து கிடக்கின்றன.

அதைப்பற்றியெல்லாம் எழுதுவது சரியாக அமையாது. நம்முரில் பலரிடமும் நூற்றாண்டுப் பழக்கங்கள் இன்னும் இருக்கின்றன. அதையெல்லாம் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு எழுதப் பலரும் தயங்குகிறார்கள். சாதியின் மோசமான தாக்குதல் தமிழ்க் குமுகாயத்தில் விரவிக் கிடப்பதால், பல குமுகங்களின் நல்லவையும் பேணப்படாமலே அழிகின்றன. We are loosing the good along with the bad.

வட்டாரச் சொற்களைப் புழங்குவதில் நாம் தயங்கத் தேவையில்லை. இன்றைய அளவில் வட்டாரச் சொற்கள் ஒருவருக்கொருவர் பரிமாறப்பட்டு, புதியதொரு செந்தரம் உருவாக வேண்டும்.

வளைவு > வளவு = round, periphery around the courtyard.

அன்புடன்,
இராம.கி.