Tuesday, June 13, 2006

கண்ணகியும் கரடிப் பொம்மையும் - 2

அடுத்தது அரங்கேற்று காதை. இன்னொரு தலைமகளான மாதவி, சிலப்பதிகாரம் எனும் நாடக அரங்கினுள் நுழைகிறாள். ஐந்து அகவையில் தண்டியம் (நட்டுவனார் கோல்/தண்டு வைத்திருக்கிறார் , அதனால் தண்டியம் ஆயிற்று.) பிடிப்பித்து, ஏழாண்டு நடம் பயின்று, பன்னிரண்டாம் ஆண்டில் மாதவி அரங்கேறுகிறாள். அவளுக்கு 12 அகவை முடிந்து 13 நடக்கும் வேளையில், அரசவையில் தான் கற்ற நாட்டியத்தை ஆடிக் காட்டுகிறாள்; அரசனது பச்சை மாலையையும் (இது மரகத மாலை; அக்காலத்தில் மரகதம் கிடைத்தது இலங்கையிலும், நம் கரூருக்கு அருகில் கொடுமணலிலும் தான்; ஆனாலும் பச்சை மாலை என்ற விளக்கத்தை அடியார்க்கு நல்லார் மட்டுமே குறிக்கிறார்; எதனால் அப்படிச் சொன்னார் என்பது விளங்கவில்லை; இளங்கோவடிகள் தெளிவாகக் குறிக்கவில்லை. இளங்கோ குறிப்பது பசும் பொன் மாலை. பசும் பொன் என்பது குளிச்சிறை என்னும் ஒருவகைப் பொன்), தலைக் கோல் பட்டமும் பெறுகிறாள். தலை வரிசையாக 1008 பொற் கழஞ்சும் பரிசாய்ப் பெறுகிறாள்.

தான் பெற்ற மாலையைக் கூனி கையில் கொடுத்து, "யாரொருவர் 1008 பொற்கழஞ்சு இந்த மாலைக்கு விலை கொடுக்கிறாரோ அவரைக் கூட்டி வா, அவரே எனக்கு மணமகன்" என்கிறாள். [குறித்து வைத்துக் கொள்ளுங்கள், மணமகன் என்றே சொல்கிறாள். கதையின் படி மாதவி, விலைப் பரத்தை அல்ல. அவள் ஓர் இற்பரத்தை; she was not a prostitute but a concubine. சங்க காலமும், சங்கம் மருவிய காலமும் ஆணாதிக்கக் குமுகாயமாய் இருந்தாலும், விலை மகளிரைத் தலை மகளாக தமிழில் எந்த இலக்கியமும் பேசியதில்லை. அதே பொழுது விலைமகளிர் குமுகத்தில் இருந்தார் என்பது சங்க இலக்கியங்களில் சில இடங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது. விலைமகளிர், மற்றும் இற்பரத்தை ஆகியோரை வரைவின் மகளிர் என்று திருக்குறள் குறிக்கும். வரைவு (= திருமணம்) இல்லாத மகளிர் வரைவின் மகளிர்.]

இத்தொடர் முழுதும் நாம் காலங்கள் பற்றியே பார்க்கப் போகிறோம். முழுக் கதையையோ, சிலம்பின் விளக்கங்களோ பற்றி அல்ல. காலம் கணிப்பதற்குத் தேவையான விளக்கம் மட்டுமே இங்கு தருகிறேன்.

இத் தொடரில் நான் சார்ந்திருந்தவை 3 நூல்கள்.

1. சிலப்பதிகார மூலமும், அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லார் உரையும் - உ.வே.சா. பதிப்பு
2. சிலப்பதிகாரம் - மூலமும், உரையும், வேங்கடசாமி நாட்டார் பதிப்பு
3. பஞ்ச மரபு - சேறை அறிவனார் இயற்றியது - முனைவர் வீ.ப.கா. சுந்தரனார் உரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பு.

ஊடே என் இடைப் பரட்டும் (interpretation) உள்ளது.

மாதவியின் அரங்கேற்றம் நடந்தது எந்தக் காலம் என அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால் ஓரளவு சொல்லலாம். பொதுவாக தமிழ்நாட்டில் கார்காலத்திற்கு முன்னால் தான் கோயில் விழாக்களும் மற்றவைகளும் கொண்டாடப் படும். எனவே அரங்கேற்றம் நடந்தது சித்திரையிலிருந்து ஆடிக்குள் இருக்க வேண்டும். (இளவேனிற் காலமாய் இருக்க பெரும் வாய்ப்பு உண்டு என அடுத்துவரும் அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் குறிப்பால் உணர்த்தப் படுகிறது.)

அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில், ஒருபக்கம் கோவலனும் மாதவியும் இன்புற்று இருப்பதும், இன்னொரு பக்கம் கண்ணகி வாடி இருப்பதும் சொல்லப் படும். அதில் வரும்

குடதிசை மருங்கில் வெள்ளயிர் தன்னொடு
குணதிசை மருங்கில் காரகில் துறந்து
வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்
தென்மலை பிறந்த சந்தனம் மறுக

என்ற வரிகள் பருவ மாறுதலால் ஏற்படும் பழக்க மாறுதலைச் சொல்கின்றன.

வெள் அயிர் என்பது வெண்மை நிறச் சாம்பலாய்க் காட்டும் மணப்பொருள். அயிர் என்பது நுண்மணல் என்ற பொருள் படும். (It is a term to express fineness.) [அயிர் என்ற சொல்லின் நீட்சி தான் நாம் ஆயிரம் என்று சொல்லும் எண். நூறுவது (=நொறுக்குவது, பொடித்தல்) நூறானது போல் அயிர்த்தது ஆயிரமாயிற்று.] இங்கே வெள் அயிர் என்பது பெரும்பாலும் சாம்பாணியாக இருக்க வாய்ப்பு உண்டு (சாம்புதல் = எரிதல்; எரிந்தபின் வெள்ளைச் சாம்பலாய்த் தோற்றம் காட்டும். சாம்பாணி = எரிதலில் இடும் பொருள். வழக்கம் போல ரகரம் உள்நுழைந்து சாம்பாணி>சாம்ப்ராணி ஆக வடமொழித் தோற்றம் காட்டும்.) சாம்பாணி தமிழருக்கு மேற்குத் திசையில் இன்றையப் பாரசீகம் மற்றும் வளைகுடா நாடுகள், அந்தக் கால மிசிர நாடு (= எகிப்து) ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட பிசின் போன்ற பொருள். (அயிரை வார்கரைக் குடகடல் என்பது தோலாமொழித் தேவரின் சூளாமணியில் சொல்லப் படும் வரி.)

கார் அகில் என்பது கருமை நிறத்து அகிற் கட்டை. இது பெரும்பாலும் தமிழருக்குக் கிழக்கில் உள்ள தீவுகளில் (செம்மத்தத் தீவு அல்லது சமுத்திரத் தீவு = Sumatra, மலையகம் = மலேயா, யாவகத் தீவு = கருப்பர் தீவு = java, வாரணத் தீவு = போர்னியோ) இருந்து பெறப்பட்டது.

வான்கேழ் வட்டம் = வானைப் போன்ற நிறங் கொண்ட வட்டக் கல்; பனி மலையில் இருந்து வழிந்தோடும் கண்டகி ஆற்றுக் கரையில் சால மரங்கள் நிறைந்த கம்மம் சாலக் கம்மம். இது சாலக் கம்மம்> சாலக்கிராமம்> சாளக்கிராமம் எனத் திரியும். யால மரமே சால மரம் என்றும் ஆச்சா மரம் என்றும் இக் காலத்தில் சொல்லப் படுகிறது. 

இது போகச் சாலக்கமம் என்பது கண்டகி ஆற்றில் கிடைக்கும் ஒருவிதக் கருஞ்சாயற் கல்லையும் குறிக்கும். It is a black stone containing a fossil ammonite. கருஞ்சாயம் தான் வான் கேழ் (sky colour; கேழ் = colour) என்று சிலம்பில் சொல்லப் படுகிறது. கருஞ்சாயக் கல் முனைகள் மழுங்கி கூழாங்கல் போல் ஆகியிருக்கும். 

நம்மூர்க் கூழாங்கல் ஒளி காட்டும். சாலக் கம்மமோ கருநிற ஒளி காட்டும். சாலக் கம்மத்தை விண்ணவன் அடையாளமாய் விண்ணெறியாளர் கொள்வர். சாலக் கம்மத்தைக் கொண்டு, சந்தன மரக் கிளையில் தேய்த்தால் சாந்து திரண்டு வரும்.

பின்பனிக் காலத்தில் எழும் குளிரைத் தாங்கும் வகையில் வீடுகளில் அகிற் கட்டை எரித்து அதில் அவ்வப்போது வெள்ளைச் சாம்பாணியை இட்டு மணப்புகை நுகர்வது தமிழர் பழக்கம். அதே போல, வேனிற் காலத்தில் வெறும் உடம்பில் சந்தனம் பூசிக் குளிரைத் தேடுவதும் தமிழர் வழக்கம். 

பின்பனிக் காலத்தில் புகை போட்டுக் குளிரோட்டுவது போய், வேனிற் காலத்தில் சந்தனம் பூசிக் கொள்வது வந்து சேர்ந்தாயிற்று என்று சொல்லிக் காலம் மாறியதை இளங்கோவடிகள் மேலே 4 வரிகளில் பதிவு செய்கிறார். 

அப்படி ஆனால், இளவேனிலில் தான் மாதவியின் அரங்கேற்றம் நடைபெற்றிருக்க வேண்டும். அதற்கு ஓரிரு மாதங்களில் முதுவேனிற் காலத்தில் அந்திமாலைச் சிறப்பு செய் காதையின் தொடக்கம் வருகிறது. 

ஒருபக்கம், மாதவியும், கோவலனும் முதுவேனிலில் சாந்து பூசித் திளைக்கிறார். இன்னொரு பக்கம் கண்ணகி தனித்து இருப்பதை விவரிக்கிறார். தொடர்ந்து துயரத்தை விவரிக்கும் போதே காலம் கடந்து செல்வதை 2 இடங்களில் சொல்கிறார். முதல் இடம் கீழ்க்கண்ட வரிகளில் வருகிறது.

ஊதுலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி
வேனிற் பள்ளி மேவாது கழிந்து
கூதிர்ப் பள்ளி குறுங்கண் அடைத்து

வெய்யில் காலத்தில் வெக்கை தாங்காமல், உசு உசு என்று சூடான காற்றை மூச்சாய் விடுகிறோம் அல்லவா? அந்நேரத்தில், உலையின் கண் ஊதுகின்ற துருத்தியின் மூக்குப் போல நம் மூக்கு ஆகிறதாம். அம்மூக்கில் அழல் (=நெருப்பு) என உயிர்த்தவர் (= மூச்சு`விடுபவர்) ஒடுங்குகின்ற வேனிற் பள்ளியில் தங்காது, அது கழிந்து, அதன் பின்வரும் காரும் (புரட்டாசி, ஐப்பசி), கூதிர்ப் பள்ளியும் (கார்த்திகை, மார்கழி) முடிந்து காலம் நகர்கிறது. கண்ணகி இன்னும் பிரிவிலேயே நிற்கிறாள். கூதிர் (கூதிர் என்பது முற்றிலும் குளிரல்ல, குளிருக்குச் சற்று முன் இலைகள் கூடிக் கொள்ளும் காலம்.) முடிகின்ற மாதம் மார்கழி. அமைந்த மாதக் கணக்கின் (அமைந்தம்> அமாந்தம் = அமாவாசை) படி இது பள்ளியெழுச்சி நடக்கும் மாதம்; பூரணை (பூரணை> பௌரணை> பௌர்ணமி) மாதக் கணக்குப் படி தைநீராடல். மார்கழி / தை வந்தாயிற்று என்பதை அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் ஒரு நாலு வரியால் அறிந்து கொள்கிறோம்.

பாண்வாய் வண்டு நோதிறம் பாடக்
காண்வரு குவளைக் கண்மலர் விரிப்பப்
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை யார்ப்ப

குவளை மலர்கள் விழிப்பதற்காகப் பாடுகின்ற வாய் (=பாண் வாய்) கொண்ட வண்டு நோதிறம் பாடுகிறதாம். (இங்கே குவளை மலர்கள் விண்ணவனைக் குறிக்கலாம்.); காலை முரசு முழங்கினவாம்; புள்ளிமயிர்ச் சேவல்கள் துள்ளிக் கூவினவாம்; சங்குகள் முறை முறையாய் எங்கும் பொங்கி ஆரவாரித்தன. எல்லாமே பெருமாள் கோயில் திருப்பள்ளி எழுச்சித் தாக்கம் காட்டும் செய்திகள்.

அது என்ன நோதிறம் (நொய்ந்த திறம் நோதிறம்)? [இதை நேர் திறம் என்று சொல்லும் பாட பேதமும் உண்டு.]

இதன் பொருள் அறிய தமிழிசையின் ஆழம் போகவேண்டும். அதை முழுதும் சொன்னால், சொல்ல வந்த கருத்தினின்று பெரிதும் விலகிப் போய்விடுவோம். சிலம்பு தமிழிசையின் கருவூலம். மேலோட்டமாய் இங்கு சொல்கிறேன்.

7 சுரங்கள் / நரம்புகள் கொண்ட பண்களுக்கு பெரும்பண்கள் என்று பெயர். (அவை செம்பாலை - அரிகாம்போதி, படுமலைப்பாலை - நட பைரவி, செவ்வழிப் பாலை - இருமத்திமத் தோடி, அரும்பாலை - சங்கரா பரணம், கோடிப்பாலை - கரகரப்பிரியா, விளரிப் பாலை - தோடி, மேற்செம்பாலை - கல்யாணி). 6 நரம்புப் பண்களுக்குப் பண்ணியல்கள் என்றும், 5 நரம்புப் பண்களுக்குத் திறப்பண்கள் என்றும் பெயர். பண்ணியல்கள் ஆறு வகை, திறப்பண்கள் பதினைந்து வகை.

பண்ணியல்களும், திறப்பண்களும் பெரும்பண்களில் இருந்தே பெறப் படுகின்றன. செம்பாலைக்கு முல்லையாழ் என்றும் பெயருண்டு. முல்லையாழில் இருந்து பெறப்பட்ட திறப்பண் முல்லைத் தீம்பாணி - இக்கால மோகனம் (= தேவார காலத்தில் சாதாரிப் பண்). இதை முல்லையந் தீங்குழல் என்றும் இளங்கோ சொல்வார். இதேபோல இன்னொரு திறப்பண் கொன்றையந் தீங்குழல் (இக்கால சுத்த சாவேரி). மூன்றாம் திறப்பண் ஆம்பலந் தீங்குழல் (உதயரவிச் சந்திரிகா). இது போன்ற திறப்பண்களில் இன்னொன்று வைகறைப் பாணி, இதற்குப் புறநீர்மை என்றும், நோதிறம் என்றும் இன்னும் இரு பெயர்கள் உண்டு. இது பள்ளியெழுச்சி பாடுவதற்காகவே உள்ளது. இது கோடிப்பாலையில் (=கரகரப்பிரியா) இருந்து கிடைக்கும் திறப்பண். 1950-70 களில் வானொலி நிலையத்தில் (திருச்சி வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு நினைவுக்கு வருகிறதா?) இறைவன் இன்னருள் கூட்டக் காலை நேரத் தொடக்கப் பண்ணாகப் பயன்படுத்துவார்.

ஆக அந்திமாலைச் சிறப்புச்செய் காதை முதுவேனிற் காலத்து அந்தியில் தொடங்கி, கூதிர் காலம் முடிந்து, மார்கழி கடைசியில் அல்லது தை தொடக்கத்தில் காலை வேளையில் பெருமாள் கோயில் பள்ளி எழுச்சியில் முடிகிறது. நடந்து முடிந்த மாதங்கள் ஆடியில் தொடங்கி மார்கழி/தை வரை ஆகும்.

இனி அடுத்த காதைகளுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

6 comments:

erode soms said...

அன்பிற்கினிய ராம்கி அவர்களுக்கு,
மிகநல்லதொரு தொடர் துவங்கியுள்ளீர்.
எனது கல்லூரிநாட்களில் எழுதிய கவிதைஒன்று பின்னூட்டமாக 'இக்காலத்தில்'


மாதவிக்கொடிப்பூ

மாதவி நினைத்திருந்தால்
மாநகரம் பெற்றிருப்பாள்
மாதவனைத்தான் நினைத்தாள்
மாமணிமாலை பெற்றெடுத்தாள்

தோன்றிவந்த குலமோ கணிகை
வேறூன்றி வளர்த்தாள்அன்பை தாரகை
கோவலன் என்பான் அவளது மாளிகை
கோமகள் அவளொரு காவிய தேவதை

அனலில் இட்ட கண்ணாடி மீது-ஒரு
அமுதத்துளி வீழ்ந்தாலும் ஏது
சந்தேகம் என்னும் வினைத்தூது
மென் தேகம் வாடியதே-உயிரோடு

தாலிகொள்ளா நன் மனையாள்
போலியில்லா நெஞ்சினியாள்
வேலிக்கல்லாய் இருந்தமன்னன்
வேசிமுள்ளாள் என்று சென்றான்

சித்திரைப்பொன்மதி விழாக்காலம்
சிற்றிடையாழி[ளி]ன் எழிற்கோலம்
நித்திரையின்றி விழி பாவம்
நிறைந்த அன்பிற்கா பாலம்?

அவிழ்தக்கனவுகள் அவன் தந்தான்
மகிழ்ந்தகாலங்கள் மறந்துபோனான்
கவிழ்ந்தபடகாய் அவள் நிலைதான்
அவிழ்ந்தகூந்தலில் புதைமதிதான்

இனியவள் நெஞ்சின் திருக்கதவு
இனி யவள் வாழ்வில் கருக்கனவு
தனிமை வாழ்வில் புது உறவு
புனிதப்புத்தன் பூ வரவு...

G.Ragavan said...

ஆகா! ஆகா! இளங்கோவின் இதயம் உருக்கும் இனிய காப்பியத்தின் சுவையை மாறாது சோராது தீராது எடுத்து ஊட்டும் இந்தப் பதிவுகளை எத்தனை பாராட்டினாலும் மனது ஆறாது.

கண்ணகியைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கும் சிலப்பதிகாரத்தைத் தெரிந்து கொள்ளாதவர்களுக்கும் ஒரு நல்ல பாடத்தை எடுத்துச் சொல்லத் தொடங்கியிருக்கின்றீர்கள். கண்ணகித் தாயின் அருள் பொலிந்து சிறக்க எனது வாழ்த்துகள்.

இராதாகிருஷ்ணன் said...

அருமை ஐயா!

//நூறுவது (=நொறுக்குவது, பொடித்தல்) நூறானது போல் அயிர்த்தது ஆயிரமாயிற்று.] // இச்சொல் இதே பொருளில் தெலுங்கில் தற்போதும் வழங்கப்படுகிறது.

கேழ், Colour ஒலிவடிவில் தூரத்துச் சொந்தங்களாகத்தான் தெரிகின்றன.

இராம.கி said...

அன்பிற்குரிய சித்தன்,

உங்கள் வருகைக்கு நன்றி.

மாதவி பற்றிய உங்கள் கவிதை படித்தேன். நல்ல முயற்சி. கொஞ்சம் rhetoric உத்தியைக் குறைக்கலாம். (தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.)

கானல் வரி பற்றி கொஞ்சம் ஆழ்ந்து பாருங்களேன். கோவலனுக்கும் மாதவிக்கும் ஏன் பிணக்கு ஏற்பட்டது?

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய இராகவன்,

உங்கள் சொற்களுக்கு நன்றி. கண்ணகியைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஒரு சிலரே! ஆனால் அவர்கள் மற்றவரைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள்.

சிலம்பை ஒவ்வொருவரும் தாமே படிக்கவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய இராதாகிருஷ்ணன்,

உங்கள் வரவிற்கும் கனிவிற்கும் நன்றி.

நாம் மற்ற தமிழிய மொழிகளைக் கூர்ந்து பார்த்து கற்கவேண்டியது நிறைய இருக்கிறது.

தூரத்துச் சொந்தங்களைச் சொன்னால், "இவருக்கு வேறு வேலையில்லை" என்று என்னைச் சொல்லுபவர் நினைவுக்கு வருகிறார்கள்.

இன்னொரு சொந்தம் பீடு = pride

அன்புடன்,
இராம.கி.