Tuesday, February 02, 2021

அரோகரா எனும் இனக்குழு முழக்கம் - 1

"அரோகரா, தமிழா?" என Srinivasan Meenakshi என்பார் தமிழ்ச்சொல்லாய்வுக் குழுவிற்கேட்டார். சிலர் தமிழென்றும், சிலர் “ஹரஹரா” எனும் சங்கதச் சொல்லின் தற்பவம் என்றும் விடைசொன்னார். எனக்குப் புரிந்தவரை, அரோகரா சங்கதமாக வாய்ப்பில்லை.  தியை (ஒளிரும் வானம்- dyas), புடவி (ப்ருத்வி), அதிதி, மாரி (வாரணன்> வருணன்), மித்திரன், அழனி (அக்னி), இந்திரன், உழை (உஷஸ்) போன்ற சிறு தெய்வங்களையே பெரிதும் வழிபட்ட வேதநெறியார் நெடுங்காலம் சிவனை ஏற்காதிருந்தார். பெரும்பாலான இருக்கு வேதப் பாடல்கள் சிறுதெய்வங்களையே பரவும். உருத்திரன் பெயர் ஆங்காங்கே முகனமின்றி இருக்கில் வரும்.  அது மெய்யாய்ச் சிவனா என்பதில் கேள்விகளுண்டு, ஆய்ந்தவர் குறைவு. (சங்கத விழைவோர் யசுர்வேத, தைத்ரிய சம்ஹித, 4 ஆம் காண்ட, ஸ்ரீருத்ரத்தை முன்கொண்டு பேசுவார். பெரும்பாலும் பொ.உ.மு.800 க்கு அப்புறமே ஸ்ரீருத்ரம் எழுந்திருக்கலாம்.)  

உவநிற்றக் (உபநிடதக்) காலத்திற்றான்  வடக்கே உருத்திரனைப் பெரிதாய்ப் பேசத்தொடங்கினார். இந்திய வடமேற்கில் நுழைந்த வேதநெறியார் தாம் கண்ட நடுகல் வடிவ  இலிங்கத்தைச் ”சிசுனதேவ” என நக்கலிக்கவும் செய்தார். சிவன் தோற்றம் வடக்கிருக்க வாய்ப்பில்லாததை அக்கேலியே உணர்த்தும். தவிர, பிற்காலப் பழனங்களில் சிவனை அவமதிக்கும் தக்கன் கதையையும் ஓர்ந்துபார்க்கலாம். சிவனெனும் கடவுட்கருத்து வடவருக்கு இறக்குமதியாய் வந்ததே. ”சிவனுக்கான” செம்பொருள் விடுத்து, நீலநிறம் கற்பித்து, சொல்லுக்குப் பொருளாய் வேதநெறியார்  ”மங்கலம்” என்பார். முருகன், கந்தன், கடம்பன் உருவகங்களுங் கூடத் தெற்கெழுந்தனவே. ஆய்ந்து பார்க்கின், இனக்குழு சார்ந்த முருகன், சிவன் உருவகங்கள் நம்மூரில் ஒன்றாகத் தொடங்கிப் பின் காலவோட்டத்தில் இரண்டாய்ப் பிரித்து உணரப்பட்டன எனலாம். (விவரம் கீழுள்ளது.) 

சில பகுத்தறிவுத் திராவிடரோ, ”தமிழர் புரிதலில் சிவனே இல்லை தொல்காப்பியம் சேயோனையே குறிக்கும்” எனக் குழிபறிக்க முயல்வார்.  செள்>செய்>சேய், செள்>செள்வு>செவ>சிவ எனும் சொல்வளர்ச்சிகளைப் பார்த்தால், சேயோனும், சிவனும் ஒரே வேரில் உருவானது புரியும்.  இன்னும் சிலரோ, ”அதெப்படி முருகன் தமிழ்க்கடவுள்? வடக்கே கார்த்திகேயன் யார்?” என்பார். வேறுசில மாந்தவியலாரோ, “இனக்குழுக் கோயில்கள் சிறுதெய்வக் கோயில்கள், சிவன்/பெருமாள் கோயில்கள் பெருந்தெய்வக் கோயில்கள், 2 புரிசைகளுக்கும் தொடர்பில்லை” எனக் குறுக்குச்சால் ஓட்டுவார். இப்படி, தத்தம் தேற்றக் கட்டுமானங்களை (theoretical consructs) நிறுவ, பலரும் புதுப்புதுப் பட்டுமைகளைக் (facts) கற்பனையாய்ப் புனைந்து கொண்டே இருப்பார்.   கேட்கும் நமக்குப் பெருவியப்பு மேலிடும். 

(வட நாட்டிலன்றி) பென்னம்பெரிதாய்த் தெற்கில் கொண்டாடும் சிவ, விண்ணவ நெறிகள் தமிழரிடை நிலவிய இனக்குழுப் பழக்கங்களில் இருந்தே தொடங்கியிருக்கலாமென ஏன் சிறிதும் எண்ண மறுக்கிறார்? தமிழக இருப்பை வெறும் 4500 ஆண்டுகளுள் அடைக்கப் பெரும்பாலோர் ஏன் விழைகிறார்? சிந்துவெளி நாகரிக ஒட்டுமரபாய்த் தமிழரை ஆக்கும் சூழ்க்குமம் என்ன? 65000 ஆண்டுகள்முன் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கு வந்துசேர்ந்த தமிழர், பழங்குடி வாழ்வில் தமக்கென சில இறையுருக்களையும்,  வழிபாட்டு முறைகளையும் செய்துபார்த்துத் திருத்தி உருவாக்க முடியாதா? காளி, ஐயன், கருப்பன் போலச் சேயோனும் ஊர்காக்குந் தெய்வமாய்த் தொடக்கத்தில் இருக்கக் கூடாதா? இதுபோன்ற குமுகவியல் ஏரணம் ஒருசில ஆய்வருக்கு மட்டும் ஏன் தொடர்ந்து இடிக்கிறது? சமயப் பழக்கங்களையும் கடன்வாங்கும் அளவிற்குத் தமிழர் களிமண் மூளையரா? ஒன்றும் புரியவில்லை. 

"தென்னாடுடைய சிவனே, போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!!" என்ற வாசகத்தை தானுமைத் தனமாக (auomatic) பல தடவை சொல்லும்  நம்மில் பலர், தென்னாட்டின் மறு தலையாகும் "எந்நாடு" எதைக் குறிக்கிறதென ஓர்ந்தோமா? - எனில் ஐயமே. தென்னாடு, தக்கணத்தைக் குறிக்கிறது; ”தென்னாடுடைய சிவன்” தக்கண மூத்தோனைக் (மூர்த்தியைக்) குறிக்கும். தக்கண மூத்தோன் விவரிப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சங்க இலக்கியம் காட்டும். தக்கண மூத்தோனின் மாந்தவகைப் படிமம்/குறியீடு அறிமுகமான பின்னரே, வடபுலத்தார் சிவநெறியைக் கவனிக்க முற்பட்டார். இன்றும் இலிங்கப் படிமம் வடபுலத்தில் குறைந்து தக்கணமுத்தோன் படிமம் அதிகம் பரவியுள்ளது,  சிவனை நோக்கி வடபுலத்தாரை வயப்படுத்தும் போக்கிலேயே "எந்நாட்டவர்க்கும்" என்ற சொல்லாட்சி எழுந்திருக்க முடியும். . 

[திராவிடம்/தமிழம் என்றாலே முறைப்பும், மனவெறுப்பும், சிலருக்கு வருகிறதே, அவர் சிவன்கோயில்களில் எழும் "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி" என்று பெருமானக் குருக்கள், ஓதுவார், பத்தர் சேர்த்தெழுப்பும் பதாகை முழக்கத்திற்கு (அது tribal முழக்கமே; "வெற்றிவேல், வீரவேலும்", "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா"வுங்கூட இனக்குழு முழக்கங்களே! இக்காலத்தும் இவை தமிழர், இனமென நிறுவுகின்றன. இன்னுஞ் சொன்னால் அது ஓர் போர்முழக்கம். வியப்பாகிறதோ?) எதிர்ப்புத் தெரிவிப்பாரா, என்ன? திராவிடம் ஒழியவேண்டுமெனில், சிவன்கோயிலை அன்றோ, வெறுப்பாளர் மறுக்கவேண்டும்? தக்கண மூத்தோன் கருத்தீட்டை அன்றோ நிறுத்தவேண்டும்? தென்னாடு, தக்கணம், திராவிடம் என்பன 2000 ஆண்டுகள் முன் ஒன்றிற்கொன்று தொடர்புள்ளவை. ”தென்னாடு” தமிழ்ச்சொல்; ”தக்கணம்” இருபிறப்பி; ”திராவிடம்” தமிழத்தின் பாகதத் திரிவோடு, பின்தொடர்ந்த சங்கதத் திரிவால், ஏற்பட்டது.]

தொல்காப்பியத்தின் படி, சேயோன் குறிஞ்சிநிலங் காக்கும் தெய்வம்.  மாயோன் முல்லைநிலத் தெய்வம். காளி/கொற்றவை  பாலைநிலத் தெய்வம். வானிலிருந்து விழும் மழையளிப்பு, உருவகிப்பில் வீழ்ந்தோன்>வேந்தன் மருதநிலத் தெய்வம் ஆவான். ( மழையின்றி நீரில்லை, நீரின்றி மருதமில்லை.) பெருங்குழுத் தலைவனே வானவன் வழித்தோன்றலாகி வேந்தனாய்க் கொள்ளப்பட்டான். வேந்தன் ஏதோ வடநாட்டுக் கருத்தெனச் சிலர் அறியாமையில் சொல்வார். நெய்தல்  நிலங்காக்கும் தெய்வம் கடல் தெய்வமான வாரணன். தமிழரின் ஐந்திணைத் தெய்வங்களுக்கு வேதங்களில் ஆதாரமில்லை. 

வேதவிளக்க நூல்களிலும், சிவன், விண்ணவன், கொற்றவை (கொற்றவையைத் துர்க்கை என்பார்; கொற்றம் = கோட்டை = துருக்கம்; கொற்ற ஐ= கொற்றவை ஆகும். துருக்க ஐ= துருக்கை> துர்க்கை என இருபிறப்பிச் சொல்லாக்கும்.) போன்ற தெய்வங்களை, பெருமானக் காலங்களுக்கு முன், முதல் தெய்வங்களாய்ச் சொல்லவில்லை, சிந்தாற்றை விட்டு நகர்ந்து, கங்கை ஆற்றுக்கருகில் ஆரியர் வந்தபோது தான் ஏற்கனவே அங்கிருந்த வடதமிழ் உருவகங்கள் வேதநெறிக்குள் கலக்கத் தொடங்கின.  (மறவாதீர், ஆரியர் நுழைய நுழைய, வடதமிழர் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பாகதர் ஆனார். மொழிகளின் கலப்பால் புதுமொழிகள் தோன்றின. இன்றும் வட இந்திய மொழிகள், அடிப்படையில் திராவிட வாக்கியக் கட்டுமானம் காட்டும். இந்தியாவின் அடிக்கட்டுமானம் தமிழும் திராவிடமும் சார்ந்ததே. ஆரியக் கட்டுமானம் என்பது வெறும் மேற்கூரை.) 

அன்புடன்,

இராம.கி.


1 comment:

சேவற்கொடியோன் said...

அய்யா.. வேந்தன் என்பதன் வேர், 'வேள்' என்ற சொல்லாக இருக்க முடியாதா? வேள்தல் > வேண்டல் = கேட்டல், வேண்டுதல்..

தம்மையும் தம் கூட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய ஒரு தலைமகன் என்ற பொருளில் வேந்தன் எழ வாய்ப்பு உள்ளதா ?

வேள் - வேளிர் என்ற சொற்களுக்கும் அதுவே பொருள்படுகிறது..

இன்றேல், சேயோன், மாயோன் உள்ளிட்ட தெய்வங்களின் பொருண்மையுடன் ஒப்பிட்டால், (இந்தப் பூமியை) வேய்ந்தோன்(பூமியைப் படர்ந்த மேகங்கள்) என்று முல்லை நிலத்தின் கருமேகங்களைத் தான் இங்கும் வேறொரு வகையில் சுட்டுகிறதெனலாமா ?? முல்லைக்கும் மருதத்துக்கும் மழையே அடிப்படை என்பதால் இருவேறு வகையில் மழை பெய்யும் முகில்களையே குறிக்கும் எனலாமா ??

இல்லை முன்சொன்னது போல் முல்லை நிலத்தில்இனக்குழுத் தலைமைகளும், மருத நிலத்தில் அரசுருவாக்கமும் நடந்ததன் அடையாளமாக வேள் என்ற சொல்லில் இருந்தே உருவானதா.. !

கேள்விகள் பல இருக்கிறது.. வாய்ப்பிருந்தால் இது குறித்தும் பார்க்க வேண்டுகிறோம் அய்யா..