Tuesday, February 02, 2021

அரோகரா எனும் இனக்குழு முழக்கம் - 2

தென்னாட்டின் ஐந்திணைத் தெய்வங்களான சேயோன்/சிவன்/முருகன், மாயோன், வேந்தன், வாரணன், கொற்றவைக்கு இணையாகப் பின்னாளில், உருத்திரன்/சுப்ரமண்யன், விண்ணு/ விஷ்ணு, வேந்தன்/இந்திரன், வாரணன்/வருணன் என வடமேற்குத் தொன்மங்களைப் பொருத்தினும், அவை விளிம்புநிலைப் பொருத்துகளாய் நின்றுபோயின.  சிவனையும் முருகனையும் முந்நாளில் ஒன்றுபோல் குறித்த சேயோனுக்கு, குறிப்பாய் அரன் என்ற சொல்லிற்கு, இனிச் சொற்பிறப்பியல் காண்போம்.  அதன் மூலம் அரோகரா முழக்கத்தின் பொருள் விளங்கும்.  அரன், உருத்தன், முருகன் என ஒவ்வொரு சொல்லாய்ப் பார்ப்போம். 

உல்> உல. உலத்தல்= காய்தல். உல்> உலர். உல்> உர்> உரு; உருத்தல்= எரிதல், அழலுதல். உல்> அல்> அள்> அழல் என்பது நெருப்பைக் குறிக்கும். அல்> அல> அலத்தம்= செம்பருத்தி. அலத்தகம்= செம்பஞ்சுக் குழம்பு. அல்> அர்> அரம்= நெருப்பின் சிவப்பு நிறம் அலரி, அரளி போன்றன செம்மலர்  குறிக்கும். நெருப்புக் கருத்தினின்று சிவப்புக் கருத்துத் தோன்றும். உல்> உலம்> அலம்> அரம்>அரன்= அழல்நிறச் சிவன். உல்>உள்>ஒள்>ஒளி= நெருப்பில் தெரியும் வெளிச்சம். இலிங்கம் என்பது ஒரு பார்வையில் ஒளி. இன்னொரு பார்வையில் நடுகல்.  அர்> அர> அரகு> அரக்கு= பொன்கலந்த சிவப்பு.. “அரக்குண் பஞ்சிகள் திரட்டி: சீவக 1564. 

அரகு அரன்= அரகரன்= வழிபாட்டில் சிவனை விளிக்கும் பெயர். ”செக்கச் சிவந்த” எனும் இரட்டைக் கிளவி அரகரவாகும். இன்றும் சிவன் கோயில்களில் ”சிவசிவ” என எழுதிவைப்பார். அரோகராவின் ஓகாரம் விளிப்பு கருதி வந்தது. அரோகரா= அரோகு+ அரா = செக்கச் சிவந்தவனே! - எனும் விளிப்பு. அரகரோகரா= அரகு+அரோகு + அரா= செக்கச் செக்கச் சிவந்தவனே! அரோகரோகர= அரோகு+ அரோகு + அரா= செக்கச் செக்கச் சிவந்தவனே!. சிவன் மலையாய் இன்றும் சொல்லப்படும் அருண (= சிவந்த) மலையை, அண்ணாமலை என்றும் சொல்வார். அருணன்= அழல் நிறத்தான்.  ஐம் பூதங்களில் ஒன்றான நெருப்பை உணர்த்தும் சிவலிங்கம் அண்ணாமலையில் உள்ளது. “அண்ணாமலைக்கு அரோகரா!” என்பது சிவநெறியார் முழக்கம். செக்கச் சிவந்ததைப் போர்முழக்கில் தானே பொதுவாய்க் குறிப்போம்? நான் சொல்வது புரிகிறதா? (திகிலாகும் பழங்குடி நிலையிலிருந்து நாம் வெகு தொலைவு வந்துவிட்டோம்.) 

அர-விலிருந்து அரங்குதல்> அரக்குதல், அழித்தல் கருத்திலெழும். பின், அரன்= அழிப்பவன் என்ற கருத்து சங்கதத்தில் பரவியது. (மும்மூர்த்திகளில் அவர்கள் சிவனை அழிக்கும் கடவுள் என்றே கொள்வார்.) சிவப்புக் கருத்து ஏனோ அங்கு பரவவில்லை. அரகர என்பதைப் பலுக்கையில், உயிர்களுக்கு இடைப்பட்ட (intervocalic) ககரம், ஹ என மெலிந்தொலிக்கும். இவ்வொலிப்பால் உந்தப்பட்டு, முதல் அகர ஒலியோடும் ஹகரம் பிணைத்து, ”ஹர ஹர” என்று சங்கதம் பலுக்கும். ஒரு கருத்து எம்மொழியில் எழுந்ததோ, அதன் தொடர்புப் பலுக்கலே வழிமொழியிலும் பரவும். அரன்= சிவன், அழிப்பவன் என்ற கருத்து தமிழில் உருவானது, (ஆனால் அதைச் சிவப்போடு சேர்ந்துப் புரிந்துகொள்ள வேண்டும்.)  அழிக்கும் கருத்தைச் சங்கதம் வழிமொழிந்து பரப்பியது. யார் தாத்தன், யார் பேரன் என்ற ஆய்வின்றி, சிலர் பேரனைத் தாத்தனாக்குவது அறியாமையால் என்று கொள்க, . 

இனி உருத்திரனைப் பார்ப்போம். உலம்>உரம்>உருத்தம் என்பது சிவத்தையும், சிவனுக்கு உகந்ததாய்க் கருதப்படும் (அக்க மணி எனும்) சிவந்த கொட்டையையுங் குறிக்கும். சிவ நெறி, புத்த நெறியில் அக்கமணிக்குச் சிறப்புண்டு. "ஓம் நமசிவாய", "ஓம் மணிபத்மே ஹூம்" எனும் மந்திரங்களை 108 முறை விடாது சொல்லும் எண்ணிக்கைக்காக சமய நெறியார் அக்கமணி மாலை பயன்படுத்துவர். கடவுள்மணி, கண்டம்/ கண்டி/ கண்டிகை, கள்/முள் மணி, உலங்காரை போன்றன அக்கமணியின் மறுபெயர்கள். தமிழ் உருத்தத்தைச் சங்கதம் கடன்வாங்கி உருத்திர அக்கம்> ருத்ராக்கம்> ருத்ராக்ஷம் = செங்கொட்டை என்றாக்கும். ஒரு குறிப்பிட்ட பழத்தின் செந்நிறக் கொட்டை அக்கமணியாகும். பழத்தோல், கருநீலமாய் இருக்கும். (சிவன் தொண்டை நீலமாவது புரிகிறதா?) கருநீலப் பழக் கொட்டை (blueberry beads) என்றும் ஆங்கிலத்தில் சொல்வார். கருநீலங் குறிக்கும் மணிப்பெயர் தமிழில் மட்டுமே உண்டு. தோல் தவிர்த்து கொட்டையை முதலிலறிந்த வடமேற்கு ஆரியர் அதை ருத்ர அக்ஷம் என்றே சொல்வார்.  

இப்பழக் கொட்டைகளில் முள்நிறைந்த 5 முகங்களுண்டு. சிலவிதக் கொட்டைகளுக்கு 5 இற் குறைந்தும், சிலவற்றிற்கு 5 ற்கு மேல் 21 வரைக்கும் முகங்களுண்டு. காய்ந்த கொட்டைகளின் ஊடே துளையிட்டு மாலை யாக்குவர். தானஞ் (>த்யானம்) செய்கையில், எண்ணிக்கைக்காக, அக்க மாலையை சிவ, புத்த சமய நெறியார் உதவிக்குக் கொள்வார். தானத்திற்கு அக்கமணி ஓர் தளவாடம் (tool). இவ் விதப்பான கொட்டைதரும் மரத்தை Elaeocarpus ganitrus roxb என்பர். 60-80 அடி கூட இம்மரம் வளரும். இமயமலை அடிவாரத்திலிருந்து கங்கைச் சம வெளியிலும் மேற்குத்தொடர்ச்சி மலையிலும், நேபாளம், தென்கிழக்காசியாவிலும், பாப்புவா நியுகினி, ஆத்திரேலியாவிலும், குவாம், ஹவாய், சீனம், தைவான், போன்றவிடங்களிலும் இது வளர்கிறது. இந்தொனீசியா, மலேசியா, ஈழத்திலும் (கண்டி, நுவெரெலியா) கூட இதுவுண்டு. 

உல்>ஒல்>அல் என்பது கூர்மையைக்குறிக்கும் வேர்ச்சொல். அல்லுதல்= கூர்த்தல். குற்றல். முடிதல். காலங்காட்டும் இடைநிலைகள் சேர்த்து 3 தொழிற் பெயர்களை இதன்வழி அடையாளங் காட்டலாம். அல்ந்தல்> அன்றல்*> அந்தல் = முடிதல்; அல்கல்= கூர்தல், குற்றல், குறைதல், அல்கல்> அஃகல்> அக்கல் என்றுமாகும். அல்வல்= கூர்வுதல், குற்றல், குறைதல். அல்வல்> அவ்வல்> அவல் என்றுமாகும். அஃகம்>அக்கம் என்பது இக்கொட்டைக்கு இன்னொரு பெயர். உருத்திரரை, உருத்திரக் கொட்டை அணிந்தோர் என்றே பொருள் கொள்ளலாம். உருத்திரம்= அரத்தம், சிவம். மறைக்காட்டைச் சார்ந்த 401 ஆம் சம்பந்தர் தேவாரம் பார்த்தால், ”கோனென்று பல கோடி உருத்திரர் போற்றும் தேனம் பொழில் சூழ்மறைக் காட்டுறை செல்வா” என்ற அடிமூலம் ”அரசனென்று பலகோடிச் சிவநெறியார் போற்றும் தேனம்பொழில் சூழ் மறைக்காட்டுறைச் செல்வா” என்பதைக் காணலாம். 

இனி முருகனின் சொற்பொருளுக்கு வருவோம். முருகனை, இளைஞன், குமரன், வெறியாடும் வேலன், பாலைத் தலைவன் என்றே பலரும் பொருள் சொல்வர். முருகிற்கு இளமை, அழகு, முருகன், தெய்வம், வேலன் வெறியாட்டு, மணம், திருவிழா, படையல் விருந்து என்று பொருள் சொல்வர். ஆய்ந்து பார்த்தால் அவை நேரடிப் பொருள்களில்லை, வழிநிலைப் பொருள்களாகவே அமைகின்றன, முருகன் பெயருக்குச் சிவப்பை ஒட்டிய விதப்பான பொருள் உண்டு. முன்வரல், குத்தல், முட்டல், வலித்தல், சுடுதல், எரிதல், சினத்தல், சிவத்தல் என்ற வரிசையில் வெவ்வேறு சொற்கள் முல்லிலிருந்து வளர்ந்து முடிவில் ”முருகன்” ஆகும். முல் = முன் வருவது. எரியும் நெருப்பு தன் சுவாலைகளால் முன்வந்து கொண்டே இருக்கும். வெவ்வேறு முல் வழிச் சொற்களும் உண்டு. முல்லுவது முள்ளாய்த் திரியும். முள் = கூர்ங்குச்சி. முள்ளுவது குத்தும். எரிச்சல் தரும். முன்வர வர, நெருப்பு சுடும். முள் முள்ளுகையில் சுரீரென்று சூடு போல் வலிக்கும். 

முல்> முள்> முளை> முளைத்தல்  முளை= வித்திலெழும் வெளிப்பாடு. முள்ளுவது முழுசும்; முழுசுதல்= முட்டுதல் to rub, strike against. குச்சிகளை உரசியே/ முழுசியே முதலில் நெருப்புண்டாக்கினார். முல்> முள்> முழு> முழுவு> முழுசு (ஒப்பு நோக்கு பரவு>பரசு, விரவு>விரசு). முழுசுதல்= துளைத்தல், உட்புகுதல் “முழுசி வண்டாடிய தண்டுழாயின்” திவ்ய. பெரியதி. 2,8:7 . முழிதல்= உமிழல்.  முழைத்தல்= துளைத்தல், முழைதல்= நுழைதல். முழை/ முழைஞ்சு= துளை. முழாசுதல் = கொழுந்துவிட்டெரிதல்  முழாசு தீக்கொழுந்து; முல்> முளு> முளுதல்> முளிதல்= உலர்தல் ”முளிபுறங் கானங் குழைப்பக் கல்லென”, புறம் 160.2. முளிவெதிர்= உலர் மூங்கில்; முளிதலுக்கு வேதல் பொருளுண்டு. to burn, to be scorched. "ஆரெயி; ஓர் அழல் அம்பின் முளிய” பரிபா. 5:25. முளரி = தாமரை; ”முளரி மருங்கின் முதியோள்  சிறுவன்” புறம் 278.2. முளரி= காய்ச்சல். 

முளவு =east Indian coral tree. “முளவு முருக்கு முருங்க வொற்றி” பெருங்க/ உஞ்சை. நரும. 51:44. முளித்தல்= உலர்த்தல், காய்தல் முளிதலுக்குப் பொங்கல் பொருள் உண்டு, சோறு, முளிகிறது= பொங்குகிறது, முளிதலுக்குத் தோய்தல் பொருளும் உண்டு, to curdle ”முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்” குறுந். 167. முள்> முளு> முடு*> முரு> முருள்= முள்நிறைந்த பரப்பு, முருள்> முரள்> முரளு> முரடு= பள்ளமும், மேடும் நிறைந்து குத்தும் பரப்பு. முரள்>முரண்>முரணுதல். முரடு = சினமுடன் நடந்துகொள்ளல். முரள்> முரண்> முரண்டு= மாறி நடந்து கொள்ளல். முரப்பு, முரம்பு போன்றவை பள்ளமும் மேடும் நிறைந்த பரப்புகள். முடு>முட்டு>மூட்டு = முன்கொணர்தல். தீயை மூட்டினார். தீ மூண்டது என்பன முள்ளுதல் வழி உருவான சொற்கள். சினம் உருவாவதையும் மூள்தல் வழி சொல்வோம்.  முள்> முடு> முரு> முருகுதல் = காய்ச்சுதலின் பக்குவம் மிஞ்சுதல், முதிர்தல், முருகைக் கல்= சிவப்புநிறப் பவளம்; 

முருங்குதல் = அழிதல், முறிதல், அடங்கியெரிதல். to simmer. ”முருங்கெரியிற் புக” கம்பரா. கார்முக. 29. முருங்கெரி = அழிக்கும் நெருப்பு.  முரு> முருங்குதல்> முருக்குதல்= அழித்தல், கொல்லுதல், முறித்தல், உருக்குதல், கரைத்தல். முருக்கு> முருக்கம் என்பது முள்முருக்கையும் (http://apps.worldagroforestry.org/treedb/AFTPDFS/Erythrina_indica.PDF), புன முருக்கெனும் புரசையும் (Butea frondosa. flame-of-the-forest, பலாசம் palash and bastard teak. https://en.wikipedia.org/wiki/Butea_monosperma) குறிக்கும். முள்முருக்கின்  பூ, முயல் இரத்தம் போல் சிவப்பாய்க் காட்டும். முள்ளுடைய இம்மரத்தின் பூ மணம் இல்லாதது, பழம் சற்று நாறும். ”இணர் ஊழ்த்தும் நாறா மலர்” என 650 ஆம் குறளில் வரும் தொடருக்குப் பரிதியார்,  ”கண்ணுக்கழகாக இருந்தும் மணம் இல்லா முருக்கம்பூவை” உவமித்துக் காட்டுவார்.  போருக்குத் தெய்வம் முருகன் தானே?

முருக்கம் பிசின் = gum of the tree Butea frondosa; முருக்கம் விரை = seed of Butea frondosa; முருக்கன் மரம்/முருகன் மரம் = Butea frondosa, Bengal Kino tree. முருக்கிதழ் = முருக்க மலர் போன்ற சிவந்த இதழ்; புரச மரம்  Butea frondosa ”முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்புறழ் அடைகரை” பதிற்றுப் 23:20. “முருக்கு அரும்பு அன்ன  வள்ளுகிர் வயப் பிணவு” அகநா. 362.5.  முள்முருக்கு (Erythrina indica), coral tree of eastern ghats என்றும், புனமுருக்கு/புரசமரம் (palas tree) coral tree of the western ghats என்றும்  அழைக்கப்பெறும். முள்முருக்கு, புன்முருக்கு ஆகிய இரண்டுமே முருகனைக் குறிக்கும் மரங்களாகும்.முருகு மரங்கள் என்றும் இவை சொல்லப் படும். (இன்னும் தாவரவியல் அறிஞரிடையே கடம்பின்  அடையாளம் எது என்பது பற்றிய பொதுப்புரிதல் எழவில்லை.)

புனமுருக்கு என்பது சிவ கஞ்சனூர், தலைச்சங்காடு. திருத்தேவனார் தொகை, திருப்பார்த்தன் பள்ளி, திருப்பேர் நகர், திருவெள்ளைக்குளம், ஆகிய பாடல் பெற்ற 6 சிவன் கோயில்களில் தலமரமாய் உள்ளது. சென்னைப் புரசை வாக்கம் (மரத்தின் பெயரால் பெற்ற பெயர்) கங்காதீசர் கோயிலிலும் கூட இது தலமரமாகும். முருக நாயனார் எனும் சிவனடியார் முருகன் பெயர் பெற்றவர், முருகயர்தல்= முருக பூசை செய்தல், வெறியாடல்.  ”முருகயர்ந்து வந்த முதுவாய் வேந்தன்” குறுந். 362. இருவேறு முருக்குகள் தவிர்த்து முருங்கை மரம் என்பதுமுண்டு ( moringa pterygosperma.Moringa oleifera. https://en.wikipedia.org/wiki/Moringa_oleifera) முரியும் காரணத்தால் முருங்கை என்று இம்மரத்திற்குப் பெயராகியது, 

முள்முருக்கம். புன்முருக்கமாகிய செம்பூக்களால் எழுந்தபெயரே முருகன். அழகனென்பது பிந்தையப் பொருட்பாடு.  முருகனுக்கும் சேயோனெனும் சிவப்புப் பெயருண்டு.  சேயோனைத் தந்தை, மகனெனக் குணநலன் பிரித்து முத்தலைச் சூலத்தைத் தந்தைக்கும், ஒருதலை வேலை மகனுக்கும் கொடுத்து அச்சமூட்டிய இனக்குழுக் கருத்தீடுகள் “அன்பே சிவமாய்” இன்றாகி விட்டன முருகனுக்கு முன்னால் நடந்த வேலன் வெறியாட்டு அணங்காட்டு என்றும்  சொல்லப்பட்டது. என்னுடைய ”அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிர் - 2” என்ற இடுகையைப் படியுங்கள். (https://valavu.blogspot.com/2014/01/2.html) சரி, அணங்கென்றாலென்ன? முருகன் கோட்டத்து அணங்கெங்கு வந்தது? - இது அடுத்த கேள்வி. இதற்குமுன் சிவன், பெருமாள் கோயில்களில் நிலவும் இனக்குழுப் புரிசைகள் பற்றிச் சொல்ல வேண்டும். (இப்புரிசைகள் பற்றிய சிந்தனையில்லாது அணங்கைத் தெளிவது கடினம்.) 

அன்புடன்,

இராம.கி.


No comments: