Friday, January 01, 2010

ஆலிச்சறுக்கும் (skiing), ஆலிக் கதழும் (skating)

அண்மையில் நண்பர் ஒருவர் தனிமடலில் skiing, skating பற்றிய சில சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் சொல்லுமாறு கேட்டிருந்தார். அது அவருக்கு மட்டும்
அன்றிப் பலருக்கும் பயனுறும் என்று கருதி என் வலைப்பதிவில் இடுகிறேன். முதலில் skiing, skating பற்றிய சொற்களுக்குள் சட்டென்று போகாமல், இந்த ஆட்டங்கள்
பழகும் குளிர் பற்றிய சொற்கள் சிலவற்றை முதலிற் பார்ப்பது நல்லது. http://valavu.blogspot.com/2009/09/blog-post.html என்ற என் முந்தைய இடுகையில் குளிர்ச்சொற்களைப் பற்றிச் சொல்லியிருந்தேன்.

வெறுமே வெப்பஞ் சார்ந்த தமிழக, ஈழச் சூழலாக மட்டும் அமையாது, உலக முழுதும் தமிழர் இன்று பரவியிருக்கும் காரணத்தால், உலகமே அவர் புலமாக மாறிப்போன
நிலையில், தமிழருடைய பழஞ்சொற்களின் ஆழம் பார்த்து உணர்ந்து, வேர்களை அடையாளங் கண்டு, அவற்றின் பொருட்பாடுகளைப் புதுக்கித் துல்லியம் காணவேண்டிய காலம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. கடந்த 100 ஆண்டுப் பழக்கத்தை வைத்துக் கொண்டு பனி. குளிர், நளி, அளி, தண் என்ற முன்னொட்டுக்களைச் சேர்த்து குளிர்நிகழ்வுகளையும், ஆட்டங்களையும், கேளிக்கைகளையும், இன்ன பிறவற்றையும் குறிப்பதில் ஒப்பேற்றிவிடலாம் என்று நம்மிற் பலரும் எண்ணிக் கொள்கிறோம். அது
பெருந்தவறு. இந்தப் புதுப்புலனத்திலும் சொற்துல்லியம் காட்ட வேண்டியது முகன்மையான தேவையாகும். தமிழ் இதற்கும் வளைந்து கொடுக்கும் தன்மையுடையதே.

இந்த வகையில், ice, snow என்ற இரண்டு விதயங்களுக்குமே பனியென்னும் சொல்லைப் பயன்படுத்தி, வேண்டுமானால் பனியோடு துகளைச்சேர்த்து பனித்துகள் என்று snow
விற்கு ஈடாகப் பயன்படுத்தும் நம்முடைய அண்மைக்கால வழக்கம் முற்றிலும் மாற்றப்படவேண்டும். ice என்பதைத் தமிழர் முந்நாளில் உணராதவர் இல்லை. வானத்தில்
இருந்து சில குறிப்பிட்ட பொழுதுகளில் நம்மூரில் ஆலங்கட்டி மழை பொழுவதை நம் நூல்கள் நுவன்றிருக்கின்றன. ஆலி என்பது ice-யைக் குறிக்கச் சங்கநூலில் பயன்பட்ட
சொல் தான். {ஆலம், ஆலங்கட்டி போன்ற சொற்கள் வானத்தில் இருந்து பெய்யும் பனிக்கட்டியை உணர்த்தின.] இன்றோ எல்லாவற்றிற்கும் பனி என்பதையே வைத்து dew, ice
இவற்றிற்கு வேறுபாடு காட்டத் தெரியாமற் சுற்றிவந்து கிளித்தட்டு ஆடிக் கொண்டிருக்கிறோம்.

மார்கழி இரவில் பனி பெய்கிறது என்று சொன்னால் வெளியே இரவில் dew பெருகிக் கிடக்கிறது என்றே பொருள். snow பெய்கிறது என்று பொருள் இல்லை. ஆனாலும் ஒருசிலர் வலிந்து அப்படிப் பொருள் கொள்ள முயலுகிறார்கள். snow, ice, freeze, frost, frigid எனப் பல்வேறு சொற்களுக்கும் முன்னாற் சொன்ன என் இடுகையில் உரிய
இணைச்சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறேன்.

snow = சிந்து
ice = ஆலி
freeze = உறைதல்
frost = உறைபனி
frigid = உறைந்த

இவற்றை வேண்டிய உகப்பில் பயன்படுத்துவது நல்லது. அதே பொழுது, பனி, குளிர், நளிர், அளி, தண் போன்ற சொற்களை நாம் ஒதுக்க வேண்டியதில்லை. அவற்றைப் பல
இடங்களில் துணைச் சொற்களாய்ப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்துவது குளிரின் புரிதலுக்கு வழிவகுக்கும்.

இந்த அடிப்படையோடு தொடக்கத்தில் இங்கே எடுத்துக் கொண்ட இரண்டு பொதுச்சொற்களை விளங்கிக் கொள்வோம். ஒன்று skiing, மற்றொன்று skating. முதலில் உள்ளது வெவ்வேறு மட்டங்களில் உள்ள நிலங்களில் மேலிருந்து கீழுக்குச் சறுக்குவது. சறுக்குவது என்பது பொதுவினை. அது ஆலியிலும் இருக்கலாம்; சிந்திலும் இருக்கலாம்; வழவழப்பான சாய்பரப்பிலும் ஏற்படலாம். எல்லாச் சறுக்கலிலும் நாம் நின்றுகொண்டே செய்கிறோம் என்று பொருளில்லை. உடம்பை விதவிதமாய் நிறுத்திக் கொண்டு, அன்றி இருத்திக் கொண்டு, சறுக்கலாம். சறுக்கலோடு தொடர்புடைய இன்னொரு வினை சரிதல் (slide) எனபதாகும்.

1885 (there is an isolated instance from 1755), from Norw. ski, related to O.N. skið "snowshoe," lit. "stick of wood," cognate with O.E. scid "stick of wood," obs. Eng. shide; O.H.G. skit, Ger. Scheit "log," from P.Gmc. *skid-
"to divide, split," from PIE base *skei- "to cut, split" (see shed (v.)). The verb is 1893, from the noun. ski-jumper is from 1894; ski bum fஅirst attested 1960.

ஆலியிற் சறுக்குதல் என்பது இரோப்பாவில் எழுந்த பழக்கம். பின்னால் அது உலகின் பல்வேறு இடங்களுக்கும் பரவியது. ஆண்டாண்டு தோறும் அங்கு சிந்து பெய்வதும்,
[இந்தியத் துணைக்கண்டத்திலும் சிந்து பெய்து அதன் வழி பெருகிய ஆறு சிந்தாறு (பனியாறு) என்றே நம் வடதமிழ் முன்னவரால் குறிப்பிடப்பட்டது.) பெய்த சிந்து
நாட்பட ஆலியாய் மாறுவதும், அதில் விதவிதமாய்ச் சறுக்கிக் கேளித்திருப்பதும் இரோப்பியருக்குப் பழக்கமாய்ப் போன காரணத்தால், ஆலிச்சறுக்கு என்ற சொல்
அவர்களிடையே எழுந்தது.,

அதே பொழுது skating என்பது செம்புல நிலத்தில் (i.e. level ground; and not red earth ground. பெயர்பெற்ற குறுந்தொகைப் பாடல் ஒன்றில் செம்புலப் பெயல்நீர்
என்பதற்குப் பலரும் சமநிலத்தில் பெய்த நீர் என்று பொருள் கொள்ளாமல், ”சிவப்பு நிலத்தில் பெய்த நீர்” என்று உரைகாரர் காலத்தில் இருந்து தவறாகப் பொருள்
கொள்ளுவது இந்த இடத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது. திண்ணை வலையிதழில் இதுபற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.), சிந்து பெய்து அதை மட்டப்படுத்திப்
பின் உறைந்து ஆலியாய் இறுகிக் கட்டியாய் ஆன புலத்தில் குறுக்கும் நெடுக்குமாய்க் காற்புதையத்தில் (boots) ஒரு கூர்ந்த கத்தியைப் பொறுத்தி அந்த
ஆலித்தளத்தைக் கீறி சர்சர்.... என்று விரைந்து அங்கு இங்கும் கதிக்கின்ற (கடிகின்ற), கதவுகின்ற (கடவுகின்ற), கதழுகின்ற செயலுக்கு skating என்று பெயர்.
இங்கு நடப்பது சறுக்கல்ல, கத்தியாற் கீறி விரையும் இயக்கம். இதைச் செய்வதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். விரைவோடு, உடல் கீழே விழுந்து விடாது கட்டுக்குள்
நிறுத்தி வைக்கும் இலவகமும் வேண்டும்.

"ice skate or roller skate," 1662, skeates "ice skates" (the custom was brought to England after the Restoration by exiled followers of Charles II had taken refuge in Holland), from Du. schaats (singular, mistaken in Eng. as plural), from M.Du. schaetse, from O.N.Fr. escache "a stilt, trestle," from O.Fr. eschace "stilt" (Fr. échasse), from Frank. *skakkja "stilt" (cf. Fris. skatja "stilt"), perhaps lit. "thing that shakes or moves fast" and related to root of O.E. sceacan "to vibrate" (see shake). Or perhaps the Du. word is connected to M.L.G. schenke, O.E. scvelocity anca "leg" (see shank). Sense alteration in Du. from "stilt" to "skate" is not clearly traced. The verb is attested from 1696; U.S. slang sense of "to get away with something" is attested from 1945.

”கதழ்வும் துனைவும் விரைவின் பொருள” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம், உரியியல், 798ஆம் நூற்பா. கதித்தல் என்பதும் விரைதலே. 1960 களில் ஒருசில பொறியியற் கல்லூரிகளில், குறிப்பாகக் கோவையிலும், சென்னையிலும் இருந்த பொறியியற் கல்லூரிகளில் கதி என்ற சொல் velocity என்பதற்கு இணையாகப் புழங்கத் தொடங்கியது. [வேகம் என்பது திசை குறிக்காத அளவையான (scalar) speed யைக் குறித்தது.]. கதழ்வு என்னும் பெயர்ச்சொல்லும், கதழுதல் என்னும் வினைச்சொல்லும் புதுக்கப் படலாம்.

இனி நண்பர் கொடுத்திருந்த ஆங்கிலச் சொல் வரிசைக்கு என் பரிந்துரைகளைத் தருகிறேன்.

1 Alpine skiing = ஆல்பைன் ஆலிச்சறுக்கு
2 Biathlon (Cross-country skiing & rifle shooting) = இரட்டைப் பந்தயம்
(குறுக்குவெளி ஆலிச்சறுக்கும், துவக்குச் சுடுதலும்)
3 Bobsleigh = குறுஞ்சரினை (பறத்தல் என்னும் வினையை ஒட்டி பறக்கின்ற ஊர்தியை
பறனை என்று நண்பர் அட்லாண்டா சந்திரசேகரன் ஆகியது போல், சரிதலை ஒட்டிச் சரினை
என்ற சொல்லைப் பரிந்துரைத்திருக்கிறேன்.
4 Cross-country skiing = குறுக்குவெளி ஆலிச்சறுக்கு
5 Curling = சிந்துச்சுருளல்
6 Figure skating = ஒயிலாட்டக் கதழ்
7 Freestyle skiing = பரிஒயில் ஆலிச்சறுக்கு
8 Luge = தட்டுச் சறுக்கு
9 Nordic combined (ski jumping & cross country skiing) = வடபுலக் கூட்டுப்
பந்தயம் (ஆலிச்சறுக்குத் தாவலும், குறுக்குவெளி ஆலிச்சறுக்கும்)
10 Short track speed skating = குறுந்தட விரை கதழ். >
11 skating = கதழ்வு
12 Skeleton = பற்றுத்தட்டுச்சறுக்கு
13 Ski jumping = ஆலிச்சறுக்குத் தாவல்
14 Skiing = ஆலிச்சறுக்கு
15 Snowboarding = பலகையாற் சிந்துச்சறுக்கு.
16 speed skating = விரை கதழ்

அன்புடன்,
இராம.கி.

2 comments:

naanjil said...

ஆலிச்சறுக்கும் (skiing), ஆலிக் கதழும் (skating)-

அருமையான தகவல் பரிமாற்றம்.

தங்கள் தமிழ்ச்சேவை வளர வாழ்த்துக்கள்.

நன்றிவுடன்
நாஞ்சில் பீற்றர், மெரிலாண்ட்.

www.worldthamil.org

செல்வநாயகி said...

நன்றி.