Thursday, January 07, 2010

மாமூலனார் - 2

எம் வெங் காமம் இயைவது ஆயின்
மெய்ம்மலி பெரும்பூண், செம்மற் கோசர்
கொம்மை அம் பசுங்காய்க் குடுமி விளைத்த
பாகல் ஆர்கைப் பறைக்கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன
வறுங்கை வம்பலர்த் தங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
அறிந்தமாக் கட்டு ஆகுகது இல்ல -
தோழிமாரும் யானும் புலம்ப
சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன்
பாழி அன்ன கடியுடை வியல்நகர்ச்
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி
அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
துய்த்த வாய, துகள்நிலம் பரக்க
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி
வன்கை என்கின் வயநிரை பரக்கும்
இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஓராங்கு
குன்றவேயின் திரண்ட என்
மென்தோள் அஞ்ஞை சென்ற - ஆறே!
- அகம் 15
- திணை: பாலை
- துறை: மகட் போக்கிய தாய் சொல்லியது.

தெளிவுரை: (ஓர் உரைவீச்சாய் அமைகிறது.)

எம்முடைய மிகுந்த விருப்பம் நடக்குமென்றாலும் கூட,
மனம் அமைதி கொள்ளவில்லையே? ஏன்?

முகப்படாம் சூடிய பெரும் யானைகளையும்,
சுடரும் கலன்களையும்,
கொண்ட நன்னனின் பாழியைப் போன்றே,
காவல் உடைய எம் பெருமனையின்
செறிந்த காப்பையும் துறந்து
அவனொடு போனாளே? அது ஏன்?

தோழிமாரையும் என்னையும் புலம்பவைத்து,
மென்தோளுடைய என் அன்னை (பெண்),
தன் இன் துணையோடு
ஒருங்குசெல்லும் கொள்கையில்,
சென்றவழி இதுவோ?

காலுக்கடியில் தரையிற் பூத்துக் கிடக்கும்
இலுப்பைப்பூவை எடுத்துத் துய்த்த வாயோடு,
திரண்ட சினையிற் தொங்கும்
நீண்ட கொன்றைப் பழக் குலையைக் கொழுதி,
நிலப்புழுதி கிளப்பி,
வன்கைக் கரடிக் கூட்டம்
இவர் போகும் வழியில்
பரவிச் செல்லுமே? அது பொறுப்பாளோ?

மெய்யெலாம் பெருங்கலன் பூண்டு சிவந்த கோசர்;
கொழுத்த பசுங்காயின் குடுமி முற்றிப் பழுத்த பாகல்;
அதை ஆர்ந்த மகிழ்ச்சியில்,
தம் வட்டக்கண் பீலியைத் தொகுத்துவிரிக்கும்
மயில்கள் நிறைந்த
சோலைவளத் துளுநாட்டைப் போன்றது
அவள் போகுமிடம் என்றாலும்,
பொருளில்லாரைப் புரக்கும் பண்பால்,
சேரிகள் செறிந்த தலைமூதூரை
நாம் அறிந்தனம் என்றாலும்,

கூட, எம் மனம் அமைதி கொள்ளவில்லையே, ஏன்?

-----------------
இந்தப் பாடல் சேர நாட்டின் வடக்கே துளுநாட்டிற்கு தன் துணையோடு உடன்போக்காய்ச் சென்ற மகளை எண்ணிக் கவல்ந்த தாய், தலைவியின் தோழிக்குச் சொன்னதாகும். சேர நாட்டின் காஞ்சிரங்கோட்டிற்கும் (இன்றையக் கேரளத்தின் காசரக் கோடு - kaasargode. காஞ்சிரம் = Strychnos nux vomica என்னும் நச்சுக் காய். கோடு = குன்று.) வடக்கே உள்ள தென்கன்னட, உடுப்பி மாவட்டங்களைத்தான் அன்றைக்குத் துளு நாடு என்றனர். கடல் மட்டத்தில் இருந்து குன்றுகளாய்த் துளும்பி, மேலெழும்பி வந்த நாடு துளும்ப நாடு>துளுவ நாடு என்றாயிற்று. கால காலத்திற்கும் மூவேந்தருக்கும் கீழ்வராது தனியே நிற்க முயன்ற ஒரு வேளிர் நாடு துளுவ நாடாகும். அதே பொழுது, பலகாலம் சேரர் இந்த நாட்டின் மீது படையெடுத்து, தம் அரசோடு சேர்க்க முயன்றனர். அதனாற் சேரநாட்டிற்குக் கீழேயும் இது வந்திருக்கிறது.

துளுவநாட்டின் எச்சம் வெள்ளைக்காரர் காலம் வரைக்கும் இருந்திருக்கிற்து. அண்மையில் வெளிவந்த ”பழசிராஜா” என்ற மலையாளத் திரைப்படம், கூட ”நன்னர்” வழி வந்த கோலாத்ரி அரச வழியினரின் விடுதலை வேட்கையை நம்முன்னே விவரித்தது. நன்னர் என்னும் பெயரில் நாலைந்து அரசர் இருந்திருப்பதைச் சங்கப் பாடல்கள் வழியே அறிகிறோம். எந்த நன்னன் இந்தப் பாடலிற் குறிப்பிடப்படுகிறான் என்பதைப் பின்னால் விளக்குவேன்.

இங்கே நுணுகி அறியப் படவேண்டிய சில செய்திகளை மட்டும் சொல்லுகிறேன். பாழி என்பது பெரும் நகரத்தைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல். மேலை நாடுகளில் “polis" என்று சொல்லுவதற்கு இணையானது. தமிழில் பள்ளி என்றும் இது அமையும் (திருச்சிராப்பள்ளி), கன்னடத்தில் halli என்றும், வலி./வாலி என்று மராட்டியத்திலும், பல்லே என்று தெலுங்கிலும் அமையும். நாலு திராவிட மொழிகளிலும் பாழி/பள்ளியை ஒட்டி ஊர்ப்பெயர்கள் உண்டு. நன்னனின் பாழி என்னும் போது அது தலைநகரைக் குறிப்பிடுகிறது என்று சொன்னாலும், அதன் இயற்பெயர் நாம் அறியக் கூடுவதில்லை.

இந்தப் பாழி ஏழில் மலைகளுக்கு நடுவில் ஒரே ஒரு வாயில் கொண்டதாய் சிறந்த காவல் உடையதாய் இருந்திருக்க வேண்டும். தப்பிக்க முடியாத காவல் கொண்ட ஊரைத் தலைவியின் பெருமனைக்கு உவமையாய்க் கூறுவதால் இந்த உண்மை புலப்படுகிறது. ஏழில் மலை என்பது இன்றையத் திருப்பதி ஏழு மலையைப் போன்று, மேற்கே கடற்கரைக்குச் சற்று தொலைவில் ஏழு மலைகளுக்கு நடுவில் இருந்திருக்கலாம். அதை ஏலி மலை>எலி மலை என்று திரிந்து mushika vamsam என்று பின்னால் வந்த அரசகுடியினர் (கோலாத்ரி அரச வழியினர்) சொல்லப் பட்டிருக்கிறார்கள்.

துளுநாடு பொன்னிற்கும், செல்வத்திற்கும் பெயர் பெற்ற நாடு. நறவு என்பது அதன் பெருந் துறைமுகம். சேர நாட்டிலிருந்து வணிகம் கருதி வடநாடு போகத் துளுநாட்டு வழியும் ஒரு சிறந்த வழியாகும். முந்தைய பாட்டிற் சொன்ன பொதினிவழிப் பாதை போல இந்தக் காட்டுப் பாதை, பாலைக் காட்சிகள் மிகுந்த பாதையல்ல. மனத்தையள்ளும் சோலை வளம் மிகுந்த பாதை. தலைவன் போகும் ஊர் தலைவியின் தாய்க்குத் தெரிந்திருக்கிறது; ஆனால், நமக்குத் தெரிவிக்கப் படவில்லை.

சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் எப்படி இனக்குழு அடையாளங்களின் வழியாக அறியப் பட்டாரோ (சாரல்>சேரல்>சேரர் = தம் உடம்பெங்கும் சந்தனம் பூசியோர், இன்றும் கேரளத்தில் சந்தனம் பூசும் மரபு உண்டு. கொழு>கொழுவியர்>கோழியர்>சோழியர்>சோழர் = மஞ்சள்/குங்குமம் பூசியோர், தமிழரில் மஞ்சள்/குங்குமம் பூசும் பழக்கம் சோழநாட்டில் மிகுதி. பாண்டு>பாண்டில்>பாண்டியர் = சாம்பற் பூசியோர். இன்றைக்குத் திருநீறு என்பது சமயக் குறியீடாகத் தோன்றினாலும், நீறணியாதவன் எதிலும் சேர்த்தியில்லை என்றே தென்பாண்டிநாட்டார் சொல்லுவர்), அதே போலக் கோசர் என்னும் வேளிரும் இனக்குழு அடையாளம் வழியாகவே அறியப் பட்டிருக்க வேண்டும்.

கொழுவியர்>கொழுசியர்>கொழிசர்>கோசர். இவரும் முகத்தில் மஞ்சள் பூசித் தம் இனக்குழு அடையாளத்தைக் காட்டியிருக்கலாம். சோழருக்கும், இவருக்கும் வேறுபாடு காட்ட இன்னுமோர் தனித்த அடையாளம் அணிந்திருக்கலாம். கொழுந்து என்ற சொல் தமிழில் பொன்னிறத் தளிரைக் குறிக்கும். கொழுந்து மணல் என்பதும் ஒளிரும் மணலைக் குறிக்கும். கொழுது (gold) நிறத் தவசம் கொழுதுமை என்றே முதலிற் சொல்லப்பட்டுப் பின் கோதுமை ஆயிற்று. கோதுமை என்ற சொல்லிற்கு வடமொழியிற் சொற்பிறப்பு கிடையாது. மஞ்சள் நிறத்தைச் சிறப்பாய்க் குறிக்கும் இன்றையத் துளுநாட்டுப் பெருந் துறைமுகம் மங்கலூர் அதே போலக் கொல்லூர் (மூகாம்பிகை) என்ற சொல்லும் கோசரின் மஞ்சள் நிறத் தொடர்பை நமக்கு ஆழத் தெரிவிக்கிறது.

அய்யை>அஞ்ஞை>அன்னை என்ற திரிவில் தலைவி இங்கு குறிப்பிடப் படுகிறாள். ய்>ஞ்>ன் என்னுந் திரிவை பேரா. அருளி பெரிதும் சான்று காட்டி நிறுவியிருக்கிறார். மகளை அன்பின் பேரில் ”அம்மா” என்று அழைப்பது இன்றைக்கும் தமிழரிடம் உள்ள பழக்கம்.

இலுப்பைப்பூ சக்கரைச் சுவை கொண்ட ஒரு பொருள். “ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை” என்பது பழமொழி. இலுப்பைப்பூவைச் சாப்பிட்டுத் தம் வயிற்றினுள்ளே நொதித்து (ferment) எழுந்த வெறியத்தின் (alcohol) விளைவால் உன்மத்தம் பிடித்து மரக்கிளைகளை முறித்துக் கரடிக் கூட்டம் எறியும் என்பது சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. கரடியின் வயிற்றிற்குள் சேரும் இலுப்பைப் பூ, அதன் இரப்பையில் நொதித்து, கரடியைக் கள்ளுண்டது போல் நடந்து கொள்ள வைக்குமாம் இலுப்பை பற்றிய பல செய்திகளை, என்னுடைய ”கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 5” என்னும் இடுகையில் (http://valavu.blogspot.com/2009/03/5_29.html) விவரித்துச் சொல்லியுள்ளேன்.

கொன்றைப் பழக் குலையைப் பற்றிய செய்தியும் சங்கநூல்களில் பெரிதும் வருவது. கொன்றையந் தீங்குழல் இந்தக் கொன்றைக்குழலில் தொடங்கியதோர் இசைக்கருவி. குடுமி மஞ்சளாகிப் பழுத்துக் கனிந்த பாகலைத் தின்ற மகிழ்ச்சியில் தோகைவிரித்து ஆடும் மயில் காட்சி எண்ணி உவகை கொள்ளத்தக்க விவரிப்பு. பாட்டில் வரும் தோகைக்கா என்ற ஊர்தான் தோகக்கா> ஜோகக் கா என்றாகி ஜோக் நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள இடத்தைக் குறிக்கும் என்று ஔவை துரைசாமிப் பிள்ளை சொல்லுவார்.

இன்றைக்கும் துளுநாடு அழகான நாடு. பொதுவாகத் துளுவநாட்டார் சற்றே வெளுத்துச் சிவந்த மேனியர். துளுநாட்டுப் பெண்ணழகு இன்றும் விதந்து சொல்லப் படுவது. செம்மற் கோசர் என்ற சொற்றொடர் இங்கு அதை உணர்த்துகிறது.

நன்னன் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைப் பின்னால் ஒருங்கு சேர்த்துப் பார்ப்போம். இப்போதைக்குப் பாட்டையும், தெளிவுரையையும் மீண்டும் படித்து இன்புறுவோம்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

AMAL said...

MA. SO, THE PHILOSOPHY OF THE THAMIZH PEOPLE

MAY I TAKE THIS OPPERTUNITY TO INTRODUCE MR. MA. SO. VICTOR ONE OF THE GREATEST THAMIZH SCHOLARS – The history of Thamizh society ever had - NEXT TO PAAVAANAR WHO DID MARVELOUS RESEARCH IN THAMIZH BRINGING OUT THE TRUTH “THE THAMIZH PEOPLE WERE THE FIRST PEOPLE OF THE WORLD (DATING 50, 000 B.C) AND ALL THE WORLDLY LANGUAGES WERE BORN FROM THAMIZH (SINCE 10, 000 B.C) – Including Sanskrit which was spoken by the Thamizh people (The Paanars who sing and charm people and kings) of the northern region, namely the Indus valley civilization era and after- AND ABOUT THE SUBMERGED KUMARIK KANDAM THE LEMORIA CONTINENT (from 50,000 – 10,000 B.C) WITH EVIDENCES AND SUBSTANCIATIONS WHICH NO ONE DARES DEFENDING AGAINST IT.

HAVING DONE AN AMAZING RESEARCH IN HEBREW WORDS, HE HAS BROUGHT THE LIGHT THAT ALL THE HEBREW WORDS WERE THAMIZH WORDS WHICH ARE ACCEPTED BY THE HEBREW SCHOLARS AND ALL THE EUROPEAN LANGUAGES ARE THE BRANCHES OF THAMIZH EMRGING FROM HEBREW LATIN AND GERMAN NAMELY THE ANGLO SAXON..

.MAY I REQUEST YOU TO HONOR HIM AFTER DOING A CRAM ON HIS WORKS. FATHER JEGATH GASPAR – THE GREATEST BOOST FOR THAMIZH SOCIETY HOME AND ABROAD SINCE 1990 - HAS PUBLISHED ALL THE 20 MASTER PIECES (RESEARCH BOOKS) OF MA SO VICTOR UNDER NALLER PUBLICATION. AND MADE THAMIZH LIVE EVER HONOURING ALL THE THAMIZH SCHOLARS OF THE CHANGAM AGE AND AFTER...

THOUGH THE PRESENT WORLD OF SCHOLARS IN THAMIZH LACADIZE IN BRINGING OUT THE GREATNESS OF THAMIZH, YOU, PEOPLE UNDER THAMIZH BRAND ECHO THE VOICE OF THE THAMIZH PEOPLE AND THE LITERATURE AS A TEAM UNITED FOR EVER…..I AM FOR CERTAIN, YOU TOO WILL RECOMPENSE AND RECOGNIZE HIM ...LIVING FROM HANDS TO MOUTH HE HAS SPENT TWENTY YEARS OF HIS LIFE ON RESEARCH WHO IS A POPULAR SCHOLAR THE SOCIETY OF THOUGHT EVER HAD FOR THE PAST 2000 YEARS...THE THAMIZH PEOPLE OF THE WORLD IS LONG AWAITING TO HEAR AND VIEW THE DISTINGUISHED AND RENOWN THAMZH INDIVIDUAL, MA. SO. VICTOR WWW.THOLTHAMIZH.COM
Victor@tholthamizh.com


AMAL ERONIMUS
DUBAI

AMAL said...

அல்லா தமிழ்ச் சொல்லே

தமிழ் மொழியில் க, யா, எல் போன்ற சொற்கள், கடவுளைக் குறித்தன.
க என்ற வேர்ச் சொல் கடவுள் என விரிந்தது.
கடவுள், காட் (god ) என்று ஆங்கிலத்தில் திரிந்தது.
யா என்ற தமிழ் வேர்ச் சொல் யா-கோ-ஆ என எபிரேய மொழியில் திரிந்தது.
யா என்பது கடவுளையும், கோ என்பது உயர்வையும்,
ஆ என்பது தொடக்கத்தையும் குறித்தன.
யா, கோ, ஆ, என்ற மூன்று தமிழ் சொற்களும்,
ஆதியில் இருந்த கடவுள் என்றவாறு பொருள்படும்.
தமிழர்கள் தங்கள் கடவுளை எல் (El ) என்றும் அழைத்தனர்.
இதற்க்கு ஒழி என்பதே பொருளாகும்.
எல் என்ற தமிழ்ச் சொல், கடவுளின் பெயராலேயே,
ஆப்-எல், காபிரி-எல், மிக்க-எல், தானி-எல் என்றவாறு எபிரேய மொழியில் கடவுளின் பெருமையை உயர்த்தின.
எல்-ஓ, எல்-ஞாலம், எல்-சடை எப்ற்றவாறு யூதர்களின் கடவுள் அழைக்கப்பட்டார் cheiyapp pattullathu

எல் என்ற தமிழ்ச் சொல் பாபிலோனிய மொழியில் இலு (Elu ) என்றும்
அரபு மொழியில் இலி ( Elu ) என்றும் திரிந்தது.
இலா இலாஹா இல்லல்லா என்ற அரபு சொல்லுக்கு
"கடவுள் என்று ஒருவருமில்லை, அல்லாவைத் தவிர" என்பதே பொருளாகும்.
அல்லாவே கடவுள் என்று அரபு மொழி கூறுகிறது
நபிகள் நாயஹம் அவர்கள், கடவுளுக்கு உருவமில்லை என்ற மெய்யால் கருத்தை வலயுரித்தினார்

இதன் வழியில் அல் என்ற தமிழ்ச சொல், அரபு மொழியில் பயன்படுத்தப்பட்டது.
எல் எனபது ஒளி, கண்ணால் காண்பது என்ற பொருளைத் தரும்.
அல் எனபது மறைவு, கண்ணால் காண இயலாது என்றவாறு அறியப்படும்.
யா-கோ- ஆ என்ற பெயரில் உள்ள ஆ என்ற ஈற்றெழுத்து தொடக்கம் (beginning ) என்ற பொருளைக் குறித்தது போலவே,
அல்- ஆ என்ற சொல், தொடக்க முதலே வாழ்ந்து வரும் கடவுள்,
அவர் காட்சிக்கும் கண்ணுக்கும் புலனாகாதவர் என்பதை அல் என்ற தமிழ்ச் சொல் குறிக்க்கின்றது.
ஆகவே அல்லா என்ற பெயர், உருவமில்லாத கடவுள் என்ற தமிழ்ப் பொருளில், தமிழ்ச் சொற்களால் அறியப்பட்ட பெயரே என்க