Wednesday, January 06, 2010

மாமூலனார் - 1

சங்கப் பாடல்களில் மாமூலனார் பாடல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. எந்தப் புறப்பாட்டையும் அவர் எழுதியதில்லை. அவர் எழுதியதெல்லாம் அகப்பாட்டே. அகநானூற்றில் 27 பாடலும், குறுந்தொகையில் ஒன்றும், நற்றிணையில் இரண்டும் ஆக முப்பது பாடல்கள் அவர் இயற்றியிருக்கிறார். நற்றிணையில் வரும் 75 ஆம் பாடலைத் தவிர மற்ற பாடல்கள் அனைத்துமே பாலைத்திணையைச் சேர்ந்தவையாகும் பிரிவின் நிமித்தம் எழுந்த இந்தப் பாடல்களில் போகும் வழிகள், மோதல்கள், சூடு, போராட்டங்கள், காட்டின் வன்மை, செல்வம் ஈட்டுவதில் உள்ள சரவல், இவை யெல்லாமே சொல்லப்படும். பாலைத்திணைப் பாடல்கள் வரலாற்றுக் குறிப்புக்களைக் கொட்டித்தர வாய்ப்புள்ளவை. அத்தகைய வரலாற்றுக் குறிப்புக்களை உள்நுழைத்துப் பாவியற்றுவதில் மாமூலனாருக்கு ஆழ்ந்த புலமை இருந்திருக்க வேண்டும்.

சிலம்பின் காலம் பற்றிக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நான் அதன் தொடர்ச்சியாய் மாமூலனார் பாடல்களை இப்பொழுது படித்து வருகிறேன். அதன் விளைவால், அந்தப் பாடல்களுக்குப் பொருளும், ஆங்காங்கே வரலாற்றுக் குறிப்புக்களும் எழுதிக் கொண்டிருக்கிறேன். இங்கே அகநானூற்று முதற்பாடலில் இருந்து தொடங்குகிறேன். தங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.

’வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கல்போல் பிரியலம்’ என்ற சொல்தாம்
மறந்தனர் கொல்லோ? தோழி! சிறந்த
வேய்மருள் பணைத்தோள் நெகிழ, சேய்நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் - நிலம்பக
அழல்போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்
நிழல்தேய்ந்து உலறிய மரத்த; அறைகாய்பு
அறுநீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின்
உகுநெல் பொரியும் வெம்மைய; யாவரும்
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய
சுரம் புல்லென்று ஆற்ற; அலங்குசினை
நார் இல் முருங்கை நவிரல் வரன் பூச்
சூரல் அம் கடுவளி எடுப்ப, ஆரூற்று
உடைதிரைப் பிதிர்வின் பொங்கி, முன்
கடல்போல் தோன்றல - காடு இறந்தோரே?

- அகம் 1 . மாமூலனார்
- திணை: பாலை
- துறை: பிரிவிடை ஆற்றாமை, தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

தெளிவுரை: (ஓர் உரைவீச்சாய் அமைகிறது.)

நிலத்தைப் பிளப்பதாய்ச் சுட்டெரிக்கும் கதிர்;

பச்சை அழிந்து பரவிக் கிடக்கும் பெருவெளிகள்;

தம் நிழல்கள் தேய, உலர்ந்து போன மரங்கள்;

கற் குழிவுகள் நீரற்றுக்
காய்ந்த சுனையில் திணைநெல் விழுந்து
சட்டெனப் பொரியும் வெம்மை;

கொடையாளர் இன்மையால், செல்வம் கவருவோர்;

தொழில் துறந்து சோம்பியோர்
அண்டிப் பிழைக்கும் பொல்லாச் சுரம்;

உடைந்த நீரலை நுரைப்பின் பிதிர்வைப் போலக்
காற்றிற் குலையும் பூச்சூரலை
வாரித் தெறிக்கும்
நாரில்லா முருங்கைக் கிளைகள்;

கடலின் கரையாய்ப் பொலிவின்றித் தோற்றும்
வெட்டவெளிக் காடு

இத்தகைய வழியில்,

பக்கத்து நாட்டு பொற் செல்வத்தை
என்னிடம் கொணர்ந்து தருவார் போல,

மூங்கில் மருளும் என் பெருந்தோளை நெகிழவிட்டு
இவர் போனாரே,
ஏன் தோழி?

வண்டுகள் மொய்க்கும் கண்ணியையும்,
ஒண்கழலையும்,
அணிந்து வந்த குதிரை மழவரை,

முருகனின் பெயரால் போர்செய்து ஓட்டிய
வேளாவிக் குடியினரின் பொதினியில்,

கொம்பொடிந்த யானைகள் உலவும் இடத்தில்,

சிறு காரோடனின்
அரக்கொடு சேர்த்திய சாணைக்கல் போலப் பிரிய மாட்டேம் ,
என்று சொன்ன சொல்லை அவர் மறந்தாரோ?

மேலே, காரோடன் என்பவன்: வாளுக்குச் சாணை பிடிக்கிறவன். சாணைக்கல்லோடு, அரக்கைத் தேய்த்தால், நிலை மின்சாரம் (static electricity) கூடிப் பொறி தெறிக்கும். அரக்கில் நொகை மின்சாரமும் (negative charges), சாணைக்கல்லில் பொதி மின்சாரமும் (positive charges) கூடும். பின்னால் சாணைக்கல்லில் வாளின் தோலுறையை வைத்துத் தேய்த்து பொதிமின்சாரத்தை இறக்கவில்லையேல் மின்சாரம் கைக்கும் ஏறி பெரும் அதிர்வுத் தொல்லைக்கு ஆளாகலாம். ”நிலை மின்சாரம் விளைவிக்கும் சாணைக்கல்லையும், அரக்கையும் எப்படிப் பிரிக்க முடியாதோ, அது போலப் பிரிய மாட்டேம் என்று சொன்னாரே, தோழி?” என்று தலைமகள் தோழிக்குச் சொல்கிறாள்.

நிலைமின்சாரத்தை வருவிக்கும் இரு பொருள்களை காதலருக்கு உவமை சொல்லிய அழகு, வேறு எங்கிலும் காணாததாகும். கூர்ந்த அறிவியல் அவதானிப்பு அன்றைக்கு இருந்திருப்பதும், அதை மாமூலனார் பதிவு செய்திருப்பதும், எண்ணி உவகை கொள்ளத் தக்கவை.

வரலாற்றுக் குறிப்பு.

பொதினி என்பது இன்றையப் பழனியைக் குறிப்பது. இங்கே ஆவியர் நாட்டை அது குறிக்கிறது. பொதினியின் அடிவாரத்தில் இருப்பது ஆவினன் குடியாகும். [நாம் எல்லோரும் ஆவிநன் குடியில் இருக்கும் பேருந்து நிலையத்திற்குத் தான் போய்ச்சேருகிறோம்.] வேளாவிக் கோமான் மகள் பதுமன் தேவியை முதல் மனைவியாக வானவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெற்றான். அவள் வழி சேரலாதனுக்கு இரு மக்கள். முதல்வன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். இன்னொருவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். சேரலாதனின் இன்னொரு மனைவி (ஞாயிற்றுச் சோழன் மகள் நற்சோணை) வழிப் பிறந்த செங்குட்டுவன் இவர்கள் இருவருக்கும் இடைப்பட்ட மாற்றாந்தாய்ப் புதல்வன். இளங்கோ என்றவரின் வரலாற்றுக் குறிப்பு எங்குமே கிடைக்கவில்லை. [வரந்தரு காதை பெரும்பாலும் இடைச்செருகலாய் இருக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். இதைப் பற்றி விரிவாகச் சிலம்பின் காலம் என்னும் என் கட்டுரையிற் பேசியிருக்கிறேன். இளங்கோ செங்குட்டுவனின் தம்பி என்ற செய்தியை உரையாசிரியர்கள் வழியே மட்டுமே அறிகிறோம்.]

ஆவியர் நாட்டுப் பொதினிக்கு அருகில் இருந்தது கொங்குநாடு. அதே இங்கு சேய்நாடு என்ற சொல்லாற் குறிப்பிடப் படுகிறது. கொங்குக் கரூருக்கு அருகில் உள்ள கொடுமணத்தில் செல்வங் கொள்ளத் தலைவன் போயிருக்கும் கதை இங்கு குறிப்பால் உணர்த்தப் படுகிறது போலும். கொங்குநாடு, குறிப்பாகக் கொடுமணத்திற்கு அருகில் செல்வங் கொழித்தது இன்றையத் தொல்லியற் சான்றுகளால் உணரப்படுகிறது. இந்தக் குறிப்பைப் பின்னால் விரித்துச் சொல்லுவேன்.

அன்புடன்,
இராம.கி.

6 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பார்வை....
தொடர்ந்து எழுதுங்கள் ஐயா..!

குமரன் (Kumaran) said...

சிலம்பின் காலத்தைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி ஐயா. விரைவில் நல்லதொரு ஆய்வினைப் படித்து அறியும் வாய்ப்பு கிடைக்கும் என்று மகிழ்கிறேன்.

சில கேள்விகள். பொதினி என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? அது எப்படி இன்றைக்குப் பழனி என்று திரிந்தது? ஆவியர் குடி ஆவிநன்குடி என்பது புரிகிறது - இன்றைக்கு இந்தப் பெயருக்கான சமய விளக்கம் வேறாக இருந்தாலும். ஆவியர் நாட்டிற்கு அருகில் இருக்கும் நாடு கொங்கு நாடு. அதனைத் தூரத்தில் இருக்கும் நாடு என்ற பொருளில் 'சேய்நாடு' என்று சொல்லியிருப்பார்களா? அண்டைநாடு என்ற பொருளில் அல்லவா ஒரு சொல் பயின்றிருக்க வேண்டும்? சேய் என்றால் மகன், குழந்தை என்ற பொருட்கள் இருக்கின்றவே - அப்பொருளில் ஏதேனும் பொருந்துமோ?

குமரன் (Kumaran) said...

பாலைத் திணையின் உரிப்பொருட்களும் கருப்பொருட்களும் இந்தப் பாடலில் எப்படி பயின்று வருகின்றன என்று புரியவில்லை. முருகன் குறிஞ்சிக்குரியவன் தானே. பாலைத்திணைப் பாடலிலும் அவன் குறிக்கப்படுகிறானே?

புறப்பாடலாக இருந்தால் இது 'பாடாண் திணை பூவைத் துறை'யாகக் குறிக்கப்பட்டிருக்குமோ?

இராம.கி said...

அன்பிற்குரிய முனைவர் இரா. குணசீலன்,

தங்கள் வருகைக்கும், கனிவிற்கும் நன்றி. உங்கள் கருத்துக்களையும் இங்கு தெரிவியுங்கள்.

அன்பிற்குரிய குமரன்,

சிலம்பின் காலம் பற்றிப் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 17/12/2009 இல் நடந்த செவ்விலக்கியப் பயிலரங்கில் ஒரு கருத்துரை நிகழ்த்தினேன். அங்கு அது நல்ல வரவேற்பைப் பெற்றது.

கூடவே சில முன்னிகைகளும் (comments) எழுந்தன. அவற்றைக் கருத்திற் கொண்டு, அந்தப் பரத்தீட்டை (presentation) மேலும் செப்பனிட்டு, புதிதாகக் கட்டுரை ஆக்கிச் செம்மொழி மாநாட்டிற்கு அனுப்ப முற்பட்டிருப்பதால், அந்தக் கட்டுரையை இன்னும் என் வலைப்பதிவில் வெளியிடாது இருக்கிறேன். இன்னும் பல நண்பர்களும் கூடப் படிக்கக் கேட்டிருக்கிறார்கள். சற்று பொறுத்துக் கொள்ளுங்கள்.

இனி பொதினி / பழனி பற்றிக் கேட்டிருப்பதற்கு என் மறுமொழி. என்னுடைய புரிதலையே நான் இங்கு சொல்லுகிறேன். இது உங்களுக்கு ஏற்பாக இருக்கலாம், இல்லாதும் போகலாம்.

“பழம் நீ” என்னும் சுவையான மாம்பழத் தொன்மத்தை நான் நம்புகிறவனில்லை. அது பொருந்தப் புகலும் மூதிகக் கதை. நம்பிக்கையால், சமயக் கருத்தாளர் அதோடு ஒத்துப் போகலாம். நானும் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்து, எம் பிள்ளைகளுக்குக் கதையாய்ச் சொல்லவும் செய்வேன். ஆனாலும் அதுவே வரலாற்று உண்மை என்று கொள்ள மாட்டேன்.

ஏனென்றால், பழனி என்ற பெயருக்கு முன்னால், பொதினி என்ற பெயரும், திரு ஆவினன்குடி என்ற பெயரும் அந்த ஊருக்கு இருந்ததை அறிவேன். பழனி என்ற சொல் எப்போது எழுந்தது என்று என்னாற் சொல்ல முடியவில்லை. திருமுருகாற்றுப் படையிற் கூட அந்தப் பெயரில்லை. ஆவினன்குடி என்றுதான் அங்கு முதன்முதலாய்ச் சொல்லப் பெறுகிறது. [நக்கீரர் காலத்திலோ,
ஏன் உரை எழுதிய நச்சினார்க்கினியர் காலத்திலோ கூட, பழனி என்ற பெயர் சொல்லப் படவில்லை.

வேள் ஆவிக் குடி என்னும் பொருள் பொதினியை ஆவியரோடு சேர்த்துச் சொன்ன அகம் முதற்பாடலோடு பொருந்துவதால், பொதினி என்ற பெயர் முதலில் இருந்து, பின் அது ஆவிநன் குடியானது என்ற முடிவிற்கு வருகிறோம்.

அகநானூறு, திருமுருகாற்றுப் படையினும் முந்து தொகுப்பப் பட்ட சங்க நூலாகும். திருமுருகாற்றுப் படையைச் சங்க காலத்தின் கடைசிக்குத் தள்ளுவார் உண்டு. நான் அத்தகைய முடிவிற்கு இன்னும் வந்தவன் இல்லை.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்புள்ள குமரன்,

இனிப் பொதினி என்பதன் பொருளைப் பார்ப்போம். பழனிக்கு நீங்கள் போயிருப்பீர்கள். அங்கிருக்கும் இயற்கை நம்மைச் சற்றே கூர்ந்து கவனிக்க வைக்கும். பின்னால் இருக்கும் மலைத் தொடரை இன்று பழனி மலைத்தொடர் (1800 - 2500 மாத்திரி உயரம்) என்றே சொல்லுகிறோம். கோடைக்கானலில் இருந்து பழனிக்கு நீண்ட லைப்பாதை கூட உண்டு. கோடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் இருந்து, வானம் தெளிவாய் இருந்தால், பழனிக் குன்றைக் காணமுடியும். சுற்றி வளைத்து வரும் போது அதிகத் தொலைவாய்த் தெரிந்தாலும், நேரே இறங்கினால், குறிஞ்சியாண்டவர் கோயிலில் இருந்து 16/18 அயிர மாத்திரி (கிலோ மீட்டர்) தொலைவே பழனிக் குன்று இருக்கும்.

பழனிக் குன்று அந்த மலைத் தொடரின் ஒரு விளிம்பாகும். பழனி ஊரே கூட கிட்டத்தட்ட 325 மாத்திரி உயரத்தில் மேட்டு நிலத்திற் தான் இருக்கிறது. பழனி மலைத்தொடர் எங்கணும் மழைக்காலத்தில் பெருகிவரும் அருவிகளும் ஓடைகளும் மிகுதியானவை. மலைத்தொடரின் வடக்குச் சரிவில் ஓடிவரும் நீர் பல கிளையாறுகளாய் அமைகிறது. அவற்றில் பழனி நகருக்கு மிக அருகில் ஓடிவரும் சண்முக ஆறும் ஒன்றாகும். அது பின் ஆன்பொருநை (=அமராவதி) ஆற்றில் போய்ச் சேருகிறது வழிந்து வரும் மழை நீரைத் தேக்கி வைத்தால், பழனிக் குன்றிற்கு அருகிலேயே நன்செய் வேளாண்மை செய்யமுடியும், ஓரளவுக்கு தன்னிறைவான குடியிருப்பை (குடி என்ற சொல் செயற்கைக் குடியிருப்பை உணர்த்தும் சொல்) ஏற்படுத்த முடியும் என்று எண்ணி, வேள் ஆவிக் குடியினரே ஓரு பேரேரியை பொள்ளித்து (தோண்டிச்) செயற்கையாய் உருவாக்கி இருக்கலாம். பொள்ளித்த ஏரி பொய்கை என்றும் சொல்லப் படும். அங்கு ”சரவணப் பொய்கை” என்ற மூதிகத்தை முன்வைத்து இன்றைக்குப் பணம் பண்ணும் காட்சி உண்டு.

அந்த ஏரி பழனியின் இருப்பை, பொருளியலை, உறுதிசெய்யும் அமைப்பாகும். ஊருக்கே கூட அந்த ஏரியாற் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பதே என் கருத்து. வேள் ஆவிக் குடி ஏரி என்பதற்கு வடமொழிச் சார்பு கொடுத்து, வேளாவிப் புரி ஏரி என்று சொல்லிப் பின் வேயாவிப் புரி ஏரி. ஆக்கி இன்றைக்கு வையாபுரி ஏரி என்று மேலும் திரித்துச் சொல்லுகிறோம். அந்த வேளாவி ஏரி தன் பரப்பளவில் மிகவும் பெரியது. அந்தச் செயற்கை ஏரியின்றேல், பழனி என்னும் நகரேயில்லை.

பொள்தல்>பொள்ளுதல் = தோண்டுதல். பொளுநிய?பொளுனிய ஏரி பொளினி. ளகரம் டகடமாவதும், தகரமாவதும் பேச்சுத் தமிழில் உள்ள பழக்கம் தான். பொளினி>பொதினி. இனிப் பொள்ளுவதும் பள்ளுவதும் ஒரே பொருள் தரும் வினைச்சொற்கள் தான். பள்தல்>பள்ளுதல்>பளுனுதல்>பழுனுதல் = பள்ளம் தோண்டுதல். பழுனி>பழனி என்பதும் பொய்கை என்ற பொருளைக் குறிப்பதாய் அகரமுதலிகள் குறிக்கின்றன. பழனம் என்பதும் பொய்கையைக் குறிக்கும். திரு + ஆவினன் குடியை திருவாவினன் குடி என்று சொல்லி வாவி என்றாலும் பொய்கை என்ற பொருளை ஒருசிலர் காட்டுவது உண்டு.

எப்படியோ, மூன்று சொற்களுக்கும் (பொதினி, திருவாவினன் குடி, பழனி என்ற மூன்று சொற்களுக்கும்) ஏரிப் பொருள் தானாக அமைந்திருக்க வழியில்லை. ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். பெரும்பாலான பழைய தமிழக ஊர்ப்பெயர்கள் இயற்கையை/ நிலத்தை ஒட்டிய செயற்கையோடு சேர்ந்து அமைந்திருப்பதும், நம்முடைய கருதுகோள் சரியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. பின்னால் ஏரியில் இருந்து குன்றிற்கும், பின் நகருக்கும் இந்தப் பெயர் நகர்ந்திருக்கலாம். முடிவில் மலைத் தொடரையே நாம் பழனி மலைத் தொடர் என்று குறிக்கிறோம்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்புள்ள குமரன்,

அடுத்தது சேய்நாடு என்னும் குறிப்பு. நீங்கள் நினைப்பது போல் கொங்குக் கரூர் என்பது பழனிக்கு அவ்வளவு நெருக்கமில்லை. இந்தக் காலத்தில் பழனியில் இருந்து NH 209 வழி 58 அயிர மாத்திரி, பின் திண்டுக்கலில் இருந்து NH 7 வழி கரூர் 78 அயிர மாத்திரி அமையும். இந்த அகண்ட சாலைகளைத் தவிர்த்து குறுக்குச் சாலைகள் வழி சென்றாலும் 120 அயிர மாத்திரிக்குள் போகமுடியுமா என்பது கேள்விக் குறியே. பின் அங்கிருந்து மேற்கே கொடுமணல் போக வேண்டும். பழனியில் இருந்து நேரே கொடுமணல் போனாலும் 110/120 அயிரமாத்திரிகள் தொலைவு இருக்கலாம். இன்றைக்கு நமக்கு எல்லாமே குறைந்த தொலைவாய்த் தோற்றமளிக்கும்.

அன்றைக்கு 20 கி.மீ. போனாலே 50 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் ஊரில் பெண் கொடுக்க மாட்டார்கள். ”அது ரொம்பத் தொலைவப்பா, நம்ம பொண்ணு அங்கே போய் ஆளு, பேரு, உறவு இல்லாம எப்படி இருக்கிறது?” என்று சொல்லி விடுவார்கள். சங்க காலத்தை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் பழந்தமிழகம் (இன்றையத் தமிழ்நாடு, கேரளம் சேர்ந்தது) என்பது 500,000 மக்கள் தான் கிட்டத்தட்ட இருந்திருப்பார்கள். பல இடத்தும் காடு. போகும் வழிகள் பெரும்பாலும் ஆற்றுகளையொட்டியே அமையும்.

இவை போகப் பாலைத் திரிவு.

அப்புறம் இந்தப் பாடல் எப்படிப் பாலையானது? அடிப்படையில் செல்வந் தேடப் போன காரணத்தால் தலைவனுக்கும், தலைவிக்கும் பிரிவு எழுந்தது. பிரிவும், பிரிவின் நிமித்தம் எழும் பாடல்களின் திணை பாலைத் திணையே ஆகும். அதில் வரும் பாடு பொருட்கள் குறிஞ்சியைச் சேர்ந்தவையாய் இருக்கலாம். (அது இரண்டாம் வழி வகைப்பாடே).

அன்புடன்,
இராம.கி.