Saturday, January 09, 2010

மாமூலனார் - 3

நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம்
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி
‘நிலம்புடை பெயர்வது அன்றுகொல், இன்று?” என
மன்னுயிர் மடிந்த மழைமாறு அமையத்து
இலை இல ஓங்கிய நிலையுயர் யாஅத்து
மேற்கவட்டு இருந்த பார்ப்பினங் கட்கு
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
நிணவரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
கண்ணுமிழ் கழுகின் கானம் நீந்தி
‘சென்றார்’ என்பிலர் - தோழி! - வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர்த் தேஎத்த பல்மலை இறந்தே
- அகம் 31
- திணை : பாலை
- துறை: பிரிவிடை ஆற்றாளாயினள் என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தன் தோழிக்குச் சொல்லியது.
- துறைவிளக்கம்: வேந்து வினை காரணமாய்க் காவற் தொழிலுக்கெனத் தலைவன் பிரிந்து சென்றான், அந்தப் பிரிவாற்றாது தலைவி வருந்தினாள்;  “வினை வயின் ஆடவர் பிரிந்தபோது, இப்படி நீ அழலாமோ? - என்று எல்லாப் பெண்டிரும் என்னிடம் கூறுகிறாரே, :அவரும் அக்காட்டின் வழி சென்றார் - என்று கூறுவாரல்லரே?” எனத் தலைவி மேலும் வருந்திக் கூறியது.

தெளிவுரை” (ஓர் உரைவீச்சாய் அமைகிறது.)

நெருப்பாய்ச் சிவந்த வெய்யொளிர்ச் சூரியன்
புலங்கடை கருகி மடங்குமாறு சுடுகிறது;

“நிலம் இதோ, புடைத்துப் பிளக்கிறதா?”
என்று கேட்பதுபோல்,
நிலத்து உயிர்கள் நொய்ந்து மடிய ஏதுவாய்,
மழை பெய்யாக் காலம்;

குறும்ப நாட்டு வயவர்,
காட்டுப்பாதையில் எதிர்ந்தாரை வில்லிட்டு வீழ்த்த,
செவ்வலரி மாலை இட்டது போல்,
புண்ணுமிழ் குருதி பரவி,
தசையொழுங்கற்று, குறைப்பட்டுக்
கிடக்கும் யாக்கைகளின்
கண்களைக் கொத்தும் கழுகுகள், 

இலையருகி, ஓங்கி வளர்ந்த,
யா மரத்தின் உயரக் கிளைகளில்
தஞ்சமடைந்த குஞ்சுகளுக்கு
அவற்றை ஊட்டுகின்றன. 

ஆனாலும், தோழி!
விற்போரில் ஈடுபட்டு,
வலிய ஆடவர்
வென்றியொடு வாழும்,
இக்காட்டின் வழியே
அவரும் "தமிழ்மூவேந்தர் காக்கும்
மொழி பெயர் தேயத்தின்
பன்மலைகள் கடந்து,
சென்றார்” என்று உரைப்பார் அல்லரே, ஏன்?

பொதினியின் பாதையை அகம் - 1 இலும், துளுநாட்டுப் பாதையை அகம் 15- இலும் குறிப்பிட்ட மாமூலனார் இங்கே குறும்ப நாட்டு பாதையை 31 ஆம் பாடலில் விவரிக்கிறார். குறும்பர்நாடென்பது இன்றைய ஆந்திரம், கன்னடம் இவற்றின் இருமருங்கிலும் பரவிய இராயல சீமையாகும். சோழர், பாண்டியர் என்னும் இருநாட்டாரும், கொங்குநாட்டைக் கடந்து வெய்யிலூர் (இன்றைய வேலூர்) வழியே, இராயல சீமைக்குள் புகுந்து வடநாடு ஏகலாம். அன்றேல் தகடூர் (தர்மபுரி) வழியேயும் வடநாடு செல்லலாம்.

இராயல சீமை வழி போவது, இன்றுமட்டுமல்ல, அன்றும், இருப்பதற்குள், கடின வழியாகும். வேனிற் காலத்தில் வெம்மை கூடி பாலை படர்ந்த பெருவெளி/வழி இது. மழை என்பது எப்போதோ ஏற்படும் பைதிரம். குறும்பர் என்போர் ஆறலைக்கள்வராய் (வழிப்பறிக் கள்வராய்) இருந்தவர். குறும்பரை குருப என்று தெலுங்கிலும், கன்னடத்திலும் குறிப்பர். மலையாளத்தில் இவர் குறுமர் என்று அழைக்கப்படுவார். இன்றையக் கேரளத்தின் வயநாட்டிலும், தமிழ்நாட்டில் நீலகிரிப் பக்கமும் பழங்குடியினராய் இன்றும் இருக்கிறார். மலைப் பாதையில் இருந்து கீழிறங்கி இன்றைய இராயல சீமையில் இவரின் பெருஞ்சாரார் கம்பளம் பின்னும் இடையராய் மாறினார்.

இவர் பற்றி மிகுந்த விவரம் எட்கர் தர்சுடனின் (தமிழாக்கம் முனைவர். க. ரத்னம்) ”தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் - தொகுதி நான்கு”, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் வெளியீட்டில் பார்க்கலாம். குறும்பர் சற்றே குட்டையானவர். குறும்பு என்பது அவ்வளவு வளமில்லாத, முள்ளும் செடியும், புதரும் விரவிய, சிறுகுன்றாகும். ”கல்லுடைக் குறும்பு” எனும் சொற்றொடர்  கவனிக்கலாம். இவருக்குச் சரியான வாழ்வு ஆதாரம் அன்று கிடையாது. பின்னால் ஆடுகளை மந்தையாக்கி, ஆட்டு மயிரில் இருந்து முரட்டுக் கம்பளம் செய்யும் நெசவு நிலைக்கு மாறிக் கொண்டனர். உரோமம் பறிப்பதற்காக வளர்க்கப்பட்ட குறும்பர்களின் ஆடு, குறும்பாடு என்றே அன்று சொல்லப் பட்டது.

வயவரென்போர் வீரர். இற்றை இராயலசீமைக்கு வடக்கே மாராட்டம் போயின்,  அன்றைக்கும் மொழிபெயர் தேயமே. மொழிபெயர் தேயம் எனில் எதோ வேற்று மொழி பேசும் இடம் என்று பொருளல்ல. மொழி பெயரும் தேயம் மொழிபெயர் தேயம். அதாவது அங்கே தமிழ் பெரிதும் பேசப்பட்டு இருக்கும்; ஆனால், கொஞ்சங் கொஞ்சமாய் நகர, நகர, மொழி பெயர்ந்து கொண்டிருக்கும். இங்கே வடக்கிற் பெயருகிறது. இற்றைக்கு 2000 ஆண்டுகள் முன் அங்கு தமிழ்மொழி பெயர்ந்து மாறிய மொழி பாகதமே. நூற்றுவர் கன்னர் (சாதவா கன்னர்), குறிப்பாக வசிட்டி மகன் என்னும் வசிட்டி புத்ர தம் நாணயத்தின் ஒரு பக்கம் தமிழிலும், இன்னொரு பக்கம் பாகதத்திலும் அச்சு அடித்திருந்ததை அவதானித்தால், மொழிபெயர் தேயத்தில் தமிழும், பாகதமும் அருகருகே வழங்கிய மெய்மை புலப்படும். முடிவில் இக்கலப்பு கூடிப்போய், கன்னடம், தெலுங்கு எனும் இரு தமிழிய மொழிகள் தோன்றின. [பட்டிப்புரோலு எனும் ஆந்திர இடத்தில் பாகதம், தமிழ் என்ற இரண்டுமே புழங்கியது பெருமி / தமிழிக் கல்வெட்டின் வழி தெரிகிறது

புலங்கடை என்பது வீட்டிற்கு வெளியே, புறத்தே இருக்கும் பெருவெளி இன்று புழக்கடை என்று தமிழ்நாட்டின் ஒருசாரார் இதைப் புழங்குகிறார். புலங் கடையும், புழக்கடையும் தொடர்புள்ள ஆனால் வெவ்வேறு சிந்தனையிற் தோன்றிய சொற்கள்.. மண்டிலம் என்ற சொல் இங்கு சூரியனைக் குறிக்கும்.

குறும்பநாட்டு வயவர் ஆறலைக் கள்வராய் ஆன காரணத்தால், பாதையின் ஊடே போகும் சாத்துக்களை (வணிகர் கூட்டம்; traders caravans) மறைந்திருந்து வில்லிட்டுக் கொன்று, சாத்துப் பொருள்களைக் கொண்டு செல்லும் கள்வர் போலவே இருந்திருக்கிறார். எனவே பாதைக்கு அருகில் இறந்தோர் யாக்கைகள் குலைந்து கிடப்பதும், அவற்றின் உறுப்புக்களைக் கொத்தி எடுத்துச் செல்லும் காவுண்ணிப் பறவைகள் (scavenging birds) அங்கு திரிவதும் இயல்பாய் நடப்பதே. கழுகு ஒரு காவுண்ணிப் பறவையாகும். யாக்கைகளில் இருந்து கண்ணைக் கவ்விக் கொண்டு போய் தம் இளம் பார்ப்புகளுக்கு [=குஞ்சுகள்; பொதுவாய் எந்த உயிரினமும் இளமையில் சற்று வெளிறிய நிறத்திலும், அகவை கூடும்போது அடர் நிறத்திலும் அமைவது இயற்கை. வெளிறிப் போனது = பால்போல ஆனது என்ற கருத்திலேயே பார்ப்பென்ற சொல் பறவைக் குஞ்சுகளைக் குறித்தது. ”வெளிறிய இனத்தார்”  பொருளில் தான் பெருமானருக்கு (brahmins) பார்ப்பனர் என்ற சொல்லும் ஏற்பட்டது.]

யாமரம் பற்றி சொல்லாய்வறிஞர் ப.அருளி அவருடைய “யா” என்னும் பொத்தகத்தில் [ப.அருளி, அறிவன் பதிப்பகம், காளிக்கோயில் தெரு, தமிழூர், புதுச்சேரி 605009, 1992] மிக விரிவாகச் சொல்லியிருக்கிறார். படிக்கவேண்டிய பொத்தகம் அது. யாமரம் அதிகமிருந்த காரணத்தால் இந்தொனேசியாவின் யாவகத் தீவிற்குப் பெயருண்டாயிற்று. (=ஸ்யாவகம்>சாவகம்>ஜாவகம்). இந்தத் தீவுகளின் பலவற்றிற்கும் தமிழ்த் தொடர்பான பெயர்களே உண்டு.

“தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேயத்தே” எனும் சொற்றொடர் நமக்கு ஓர் ஆழ்ந்த வரலாற்றுச் செய்தி உரைக்கிறது. கலிங்க அரசன் காரவேலன் தன் கல்வெட்டில் [இதன் காலம் கி.மு.165 என்றும், கி.மு 117க்கு அருகில் என்றும், இல்லையில்லை கி.மு.30-40க்கு அருகில் என்றும், முவ்வேறு கருத்துக்கள் உண்டு. நான் உறுதியாகக் கி.மு.30-40 என்னும் காலக் கணிப்பை மறுப்பேன். மற்ற 2 காலக் கணிப்புக்களையும் நான் இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். எனவே என் முன்னிகையை இப்பொழுது தவிர்க்கிறேன்.] தமிழ் மூவேந்தரின் முன்னணி [த்ராவிட சங்காத்தம்] 1300 ஆண்டுகள் இருந்தது ஆகவும், அதைத்  தான் முதலிற் குலைத்ததாகவும், கொங்குக் கருவூரைக் கைப்பற்றியதையும், கலிங்கத்துக் காரவேலன் கூறுவான்.

இக்கல்வெட்டை முதலிற் படித்த தொல்லாய்வர் ஜெய்ஸ்வாலும், பானர்ஜியும் 1300 எனும் ஆண்டுக்குறிப்பைச் சற்றும் நம்பாததால், 113 என்று மாற்றிப் படித்ததாக அவர் அறிக்கையில் குறிப்பார். அதேபொழுது அடிக்குறிப்பில் ”இது 1300 ஆண்டுகளாய் இருக்க வழியுண்டு” என்றுஞ் சொல்லியுள்ளார். பின் வந்த எல்லோரும் கிளிப் பிள்ளையாய் 113 ஆண்டுகளையே குறிக்கிறார். 1300 ஆண்டுகள் எனும் குறிப்பை வாய்ப்பாக மறந்துவிட்டார். தமிழர் வரலாற்றை மீளாய்வு செய்வோர் காரவேலைன் கல்வெட்டையும் மீளாய்வு செய்ய வேண்டும்.  மொழி பெயர் தேயம் என்பது தமிழும் பாகதமும் உடனுறை பகுதி என முன்னால் சொன்னோம். இதற்கு அருகில் விண்டுமலை (=விந்தியமலை) உள்ளது. அதுவே இங்கு ”மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” எனப்படுகிறது. நூற்றுவர் கன்னரின் அரசு விண்டு மலைத்தொடருக்கு இருபுறமும் இருந்தது. தென்பகுதியில் தமிழும் வடபகுதியில் பாகதமும் நிலவின. 

அப் பகுதியில் நூற்றுவர் கன்னர் தம் அதிகாரம் தூக்கி நிறுத்தும் வரையில் (அதாவது கி.மு.26 - கி.பி..250 வரையில்) சிறு சிறு அரசரே இருந்தனர். இன்றைக்கு உலகத்தின் காவற்காரர் அமெரிக்கா என்று சொல்வது போன்று, அன்றைக்கு ”மெய்யான தமிழகத்திற்கும்” வெளியே, ஆனால் தமிழ் பெரிதும் புழங்கிய நூற்றுவர் கன்னரின் மொழிபெயர் தேயத்தின் காவற்காரர் தமிழ் மூவேந்தரே. இதை மாமூலனார் இங்கு உறுதி செய்கிறார். வெறுமே, சேரன், சோழன், பாண்டியன் என்று அவர் தனித்துச் சொல்லாது, முவேந்தர் கூட்டணி இருந்ததை உறுதிசெய்கிறார் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். எனவே மாமூலனாரின் இப்பாட்டு காரவேலன் கல்வெட்டிற்கும் முந்தையது,

மூவேந்தர் கூட்டணி உடன்படிக்கையை நாம் இங்கு சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

1. தங்களுக்குள் என்ன சண்டை இருந்தாலும், மூவேந்தர் யார் மேலும் வெளியார் படையெடுத்தால், மூவரும் ஒருவருக்கொருவர் உதவியாய், தமிழகத்திற்கு வெளியே செயற்பட வேண்டும்; 
2. மூவருக்கும் இடைப்பட்ட எந்த வேளிரையும், இவர் அடக்கியாளலாம்; அதே பொழுது வெளியார் வேளிர் மேல் படையெடுத்தால், அதை ஒருங்கே எதிர்க்கவேண்டும்.
3. தமிழகத்தில் இருந்து போகும் சாத்துக்களையும், வரும் சாத்துக்களையும் காப்பாற்றும் வகையில், மூவேந்தரின் நிலைப் படைகள் (standing armies) மொழிபெயர் தேயத்தில் நிறுத்தப்பட வேண்டும். இந்தக் காக்கும் தொழிலில் முப்படைகளும் ஒன்றிற்கொன்று உதவ வேண்டும்.

மாமூலனாரின் பாடல்கள் பெரிதும் சேரநாட்டைச் சார்ந்து இருப்பதால், இப்பாட்டின் தலைவனும் ஒருவேளை சேர அரசனின் படைசேர்ந்தவனாய் இருக்கலாம். ”அவன் இப்பகுதிக்குக் காவல் காரணமாய்ச் சென்றானா என்று யாரும் சொல்லாது இருக்கிறாரே?” என்பதே இங்கு தலைவியின் பெருங்கவலையாய் அமைகிறது.

அன்புடன்,
இராம.கி.

Thursday, January 07, 2010

மாமூலனார் - 2

எம் வெங் காமம் இயைவது ஆயின்
மெய்ம்மலி பெரும்பூண், செம்மற் கோசர்
கொம்மை அம் பசுங்காய்க் குடுமி விளைத்த
பாகல் ஆர்கைப் பறைக்கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன
வறுங்கை வம்பலர்த் தங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
அறிந்தமாக் கட்டு ஆகுகது இல்ல -
தோழிமாரும் யானும் புலம்ப
சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன்
பாழி அன்ன கடியுடை வியல்நகர்ச்
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி
அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
துய்த்த வாய, துகள்நிலம் பரக்க
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி
வன்கை என்கின் வயநிரை பரக்கும்
இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஓராங்கு
குன்றவேயின் திரண்ட என்
மென்தோள் அஞ்ஞை சென்ற - ஆறே!
- அகம் 15
- திணை: பாலை
- துறை: மகட் போக்கிய தாய் சொல்லியது.

தெளிவுரை: (ஓர் உரைவீச்சாய் அமைகிறது.)

எம்முடைய மிகுந்த விருப்பம் நடக்குமென்றாலும் கூட,
மனம் அமைதி கொள்ளவில்லையே? ஏன்?

முகப்படாம் சூடிய பெரும் யானைகளையும்,
சுடரும் கலன்களையும்,
கொண்ட நன்னனின் பாழியைப் போன்றே,
காவல் உடைய எம் பெருமனையின்
செறிந்த காப்பையும் துறந்து
அவனொடு போனாளே? அது ஏன்?

தோழிமாரையும் என்னையும் புலம்பவைத்து,
மென்தோளுடைய என் அன்னை (பெண்),
தன் இன் துணையோடு
ஒருங்குசெல்லும் கொள்கையில்,
சென்றவழி இதுவோ?

காலுக்கடியில் தரையிற் பூத்துக் கிடக்கும்
இலுப்பைப்பூவை எடுத்துத் துய்த்த வாயோடு,
திரண்ட சினையிற் தொங்கும்
நீண்ட கொன்றைப் பழக் குலையைக் கொழுதி,
நிலப்புழுதி கிளப்பி,
வன்கைக் கரடிக் கூட்டம்
இவர் போகும் வழியில்
பரவிச் செல்லுமே? அது பொறுப்பாளோ?

மெய்யெலாம் பெருங்கலன் பூண்டு சிவந்த கோசர்;
கொழுத்த பசுங்காயின் குடுமி முற்றிப் பழுத்த பாகல்;
அதை ஆர்ந்த மகிழ்ச்சியில்,
தம் வட்டக்கண் பீலியைத் தொகுத்துவிரிக்கும்
மயில்கள் நிறைந்த
சோலைவளத் துளுநாட்டைப் போன்றது
அவள் போகுமிடம் என்றாலும்,
பொருளில்லாரைப் புரக்கும் பண்பால்,
சேரிகள் செறிந்த தலைமூதூரை
நாம் அறிந்தனம் என்றாலும்,

கூட, எம் மனம் அமைதி கொள்ளவில்லையே, ஏன்?

-----------------
இந்தப் பாடல் சேர நாட்டின் வடக்கே துளுநாட்டிற்கு தன் துணையோடு உடன்போக்காய்ச் சென்ற மகளை எண்ணிக் கவல்ந்த தாய், தலைவியின் தோழிக்குச் சொன்னதாகும். சேர நாட்டின் காஞ்சிரங்கோட்டிற்கும் (இன்றையக் கேரளத்தின் காசரக் கோடு - kaasargode. காஞ்சிரம் = Strychnos nux vomica என்னும் நச்சுக் காய். கோடு = குன்று.) வடக்கே உள்ள தென்கன்னட, உடுப்பி மாவட்டங்களைத்தான் அன்றைக்குத் துளு நாடு என்றனர். கடல் மட்டத்தில் இருந்து குன்றுகளாய்த் துளும்பி, மேலெழும்பி வந்த நாடு துளும்ப நாடு>துளுவ நாடு என்றாயிற்று. கால காலத்திற்கும் மூவேந்தருக்கும் கீழ்வராது தனியே நிற்க முயன்ற ஒரு வேளிர் நாடு துளுவ நாடாகும். அதே பொழுது, பலகாலம் சேரர் இந்த நாட்டின் மீது படையெடுத்து, தம் அரசோடு சேர்க்க முயன்றனர். அதனாற் சேரநாட்டிற்குக் கீழேயும் இது வந்திருக்கிறது.

துளுவநாட்டின் எச்சம் வெள்ளைக்காரர் காலம் வரைக்கும் இருந்திருக்கிற்து. அண்மையில் வெளிவந்த ”பழசிராஜா” என்ற மலையாளத் திரைப்படம், கூட ”நன்னர்” வழி வந்த கோலாத்ரி அரச வழியினரின் விடுதலை வேட்கையை நம்முன்னே விவரித்தது. நன்னர் என்னும் பெயரில் நாலைந்து அரசர் இருந்திருப்பதைச் சங்கப் பாடல்கள் வழியே அறிகிறோம். எந்த நன்னன் இந்தப் பாடலிற் குறிப்பிடப்படுகிறான் என்பதைப் பின்னால் விளக்குவேன்.

இங்கே நுணுகி அறியப் படவேண்டிய சில செய்திகளை மட்டும் சொல்லுகிறேன். பாழி என்பது பெரும் நகரத்தைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல். மேலை நாடுகளில் “polis" என்று சொல்லுவதற்கு இணையானது. தமிழில் பள்ளி என்றும் இது அமையும் (திருச்சிராப்பள்ளி), கன்னடத்தில் halli என்றும், வலி./வாலி என்று மராட்டியத்திலும், பல்லே என்று தெலுங்கிலும் அமையும். நாலு திராவிட மொழிகளிலும் பாழி/பள்ளியை ஒட்டி ஊர்ப்பெயர்கள் உண்டு. நன்னனின் பாழி என்னும் போது அது தலைநகரைக் குறிப்பிடுகிறது என்று சொன்னாலும், அதன் இயற்பெயர் நாம் அறியக் கூடுவதில்லை.

இந்தப் பாழி ஏழில் மலைகளுக்கு நடுவில் ஒரே ஒரு வாயில் கொண்டதாய் சிறந்த காவல் உடையதாய் இருந்திருக்க வேண்டும். தப்பிக்க முடியாத காவல் கொண்ட ஊரைத் தலைவியின் பெருமனைக்கு உவமையாய்க் கூறுவதால் இந்த உண்மை புலப்படுகிறது. ஏழில் மலை என்பது இன்றையத் திருப்பதி ஏழு மலையைப் போன்று, மேற்கே கடற்கரைக்குச் சற்று தொலைவில் ஏழு மலைகளுக்கு நடுவில் இருந்திருக்கலாம். அதை ஏலி மலை>எலி மலை என்று திரிந்து mushika vamsam என்று பின்னால் வந்த அரசகுடியினர் (கோலாத்ரி அரச வழியினர்) சொல்லப் பட்டிருக்கிறார்கள்.

துளுநாடு பொன்னிற்கும், செல்வத்திற்கும் பெயர் பெற்ற நாடு. நறவு என்பது அதன் பெருந் துறைமுகம். சேர நாட்டிலிருந்து வணிகம் கருதி வடநாடு போகத் துளுநாட்டு வழியும் ஒரு சிறந்த வழியாகும். முந்தைய பாட்டிற் சொன்ன பொதினிவழிப் பாதை போல இந்தக் காட்டுப் பாதை, பாலைக் காட்சிகள் மிகுந்த பாதையல்ல. மனத்தையள்ளும் சோலை வளம் மிகுந்த பாதை. தலைவன் போகும் ஊர் தலைவியின் தாய்க்குத் தெரிந்திருக்கிறது; ஆனால், நமக்குத் தெரிவிக்கப் படவில்லை.

சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் எப்படி இனக்குழு அடையாளங்களின் வழியாக அறியப் பட்டாரோ (சாரல்>சேரல்>சேரர் = தம் உடம்பெங்கும் சந்தனம் பூசியோர், இன்றும் கேரளத்தில் சந்தனம் பூசும் மரபு உண்டு. கொழு>கொழுவியர்>கோழியர்>சோழியர்>சோழர் = மஞ்சள்/குங்குமம் பூசியோர், தமிழரில் மஞ்சள்/குங்குமம் பூசும் பழக்கம் சோழநாட்டில் மிகுதி. பாண்டு>பாண்டில்>பாண்டியர் = சாம்பற் பூசியோர். இன்றைக்குத் திருநீறு என்பது சமயக் குறியீடாகத் தோன்றினாலும், நீறணியாதவன் எதிலும் சேர்த்தியில்லை என்றே தென்பாண்டிநாட்டார் சொல்லுவர்), அதே போலக் கோசர் என்னும் வேளிரும் இனக்குழு அடையாளம் வழியாகவே அறியப் பட்டிருக்க வேண்டும்.

கொழுவியர்>கொழுசியர்>கொழிசர்>கோசர். இவரும் முகத்தில் மஞ்சள் பூசித் தம் இனக்குழு அடையாளத்தைக் காட்டியிருக்கலாம். சோழருக்கும், இவருக்கும் வேறுபாடு காட்ட இன்னுமோர் தனித்த அடையாளம் அணிந்திருக்கலாம். கொழுந்து என்ற சொல் தமிழில் பொன்னிறத் தளிரைக் குறிக்கும். கொழுந்து மணல் என்பதும் ஒளிரும் மணலைக் குறிக்கும். கொழுது (gold) நிறத் தவசம் கொழுதுமை என்றே முதலிற் சொல்லப்பட்டுப் பின் கோதுமை ஆயிற்று. கோதுமை என்ற சொல்லிற்கு வடமொழியிற் சொற்பிறப்பு கிடையாது. மஞ்சள் நிறத்தைச் சிறப்பாய்க் குறிக்கும் இன்றையத் துளுநாட்டுப் பெருந் துறைமுகம் மங்கலூர் அதே போலக் கொல்லூர் (மூகாம்பிகை) என்ற சொல்லும் கோசரின் மஞ்சள் நிறத் தொடர்பை நமக்கு ஆழத் தெரிவிக்கிறது.

அய்யை>அஞ்ஞை>அன்னை என்ற திரிவில் தலைவி இங்கு குறிப்பிடப் படுகிறாள். ய்>ஞ்>ன் என்னுந் திரிவை பேரா. அருளி பெரிதும் சான்று காட்டி நிறுவியிருக்கிறார். மகளை அன்பின் பேரில் ”அம்மா” என்று அழைப்பது இன்றைக்கும் தமிழரிடம் உள்ள பழக்கம்.

இலுப்பைப்பூ சக்கரைச் சுவை கொண்ட ஒரு பொருள். “ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை” என்பது பழமொழி. இலுப்பைப்பூவைச் சாப்பிட்டுத் தம் வயிற்றினுள்ளே நொதித்து (ferment) எழுந்த வெறியத்தின் (alcohol) விளைவால் உன்மத்தம் பிடித்து மரக்கிளைகளை முறித்துக் கரடிக் கூட்டம் எறியும் என்பது சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. கரடியின் வயிற்றிற்குள் சேரும் இலுப்பைப் பூ, அதன் இரப்பையில் நொதித்து, கரடியைக் கள்ளுண்டது போல் நடந்து கொள்ள வைக்குமாம் இலுப்பை பற்றிய பல செய்திகளை, என்னுடைய ”கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 5” என்னும் இடுகையில் (http://valavu.blogspot.com/2009/03/5_29.html) விவரித்துச் சொல்லியுள்ளேன்.

கொன்றைப் பழக் குலையைப் பற்றிய செய்தியும் சங்கநூல்களில் பெரிதும் வருவது. கொன்றையந் தீங்குழல் இந்தக் கொன்றைக்குழலில் தொடங்கியதோர் இசைக்கருவி. குடுமி மஞ்சளாகிப் பழுத்துக் கனிந்த பாகலைத் தின்ற மகிழ்ச்சியில் தோகைவிரித்து ஆடும் மயில் காட்சி எண்ணி உவகை கொள்ளத்தக்க விவரிப்பு. பாட்டில் வரும் தோகைக்கா என்ற ஊர்தான் தோகக்கா> ஜோகக் கா என்றாகி ஜோக் நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள இடத்தைக் குறிக்கும் என்று ஔவை துரைசாமிப் பிள்ளை சொல்லுவார்.

இன்றைக்கும் துளுநாடு அழகான நாடு. பொதுவாகத் துளுவநாட்டார் சற்றே வெளுத்துச் சிவந்த மேனியர். துளுநாட்டுப் பெண்ணழகு இன்றும் விதந்து சொல்லப் படுவது. செம்மற் கோசர் என்ற சொற்றொடர் இங்கு அதை உணர்த்துகிறது.

நன்னன் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைப் பின்னால் ஒருங்கு சேர்த்துப் பார்ப்போம். இப்போதைக்குப் பாட்டையும், தெளிவுரையையும் மீண்டும் படித்து இன்புறுவோம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, January 06, 2010

மாமூலனார் - 1

சங்கப் பாடல்களில் மாமூலனார் பாடல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. எந்தப் புறப்பாட்டையும் அவர் எழுதியதில்லை. அவர் எழுதியதெல்லாம் அகப்பாட்டே. அகநானூற்றில் 27 பாடலும், குறுந்தொகையில் ஒன்றும், நற்றிணையில் இரண்டும் ஆக முப்பது பாடல்கள் அவர் இயற்றியிருக்கிறார். நற்றிணையில் வரும் 75 ஆம் பாடலைத் தவிர மற்ற பாடல்கள் அனைத்துமே பாலைத்திணையைச் சேர்ந்தவையாகும் பிரிவின் நிமித்தம் எழுந்த இந்தப் பாடல்களில் போகும் வழிகள், மோதல்கள், சூடு, போராட்டங்கள், காட்டின் வன்மை, செல்வம் ஈட்டுவதில் உள்ள சரவல், இவை யெல்லாமே சொல்லப்படும். பாலைத்திணைப் பாடல்கள் வரலாற்றுக் குறிப்புக்களைக் கொட்டித்தர வாய்ப்புள்ளவை. அத்தகைய வரலாற்றுக் குறிப்புக்களை உள்நுழைத்துப் பாவியற்றுவதில் மாமூலனாருக்கு ஆழ்ந்த புலமை இருந்திருக்க வேண்டும்.

சிலம்பின் காலம் பற்றிக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நான் அதன் தொடர்ச்சியாய் மாமூலனார் பாடல்களை இப்பொழுது படித்து வருகிறேன். அதன் விளைவால், அந்தப் பாடல்களுக்குப் பொருளும், ஆங்காங்கே வரலாற்றுக் குறிப்புக்களும் எழுதிக் கொண்டிருக்கிறேன். இங்கே அகநானூற்று முதற்பாடலில் இருந்து தொடங்குகிறேன். தங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.

’வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கல்போல் பிரியலம்’ என்ற சொல்தாம்
மறந்தனர் கொல்லோ? தோழி! சிறந்த
வேய்மருள் பணைத்தோள் நெகிழ, சேய்நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் - நிலம்பக
அழல்போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்
நிழல்தேய்ந்து உலறிய மரத்த; அறைகாய்பு
அறுநீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின்
உகுநெல் பொரியும் வெம்மைய; யாவரும்
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய
சுரம் புல்லென்று ஆற்ற; அலங்குசினை
நார் இல் முருங்கை நவிரல் வரன் பூச்
சூரல் அம் கடுவளி எடுப்ப, ஆரூற்று
உடைதிரைப் பிதிர்வின் பொங்கி, முன்
கடல்போல் தோன்றல - காடு இறந்தோரே?

- அகம் 1 . மாமூலனார்
- திணை: பாலை
- துறை: பிரிவிடை ஆற்றாமை, தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

தெளிவுரை: (ஓர் உரைவீச்சாய் அமைகிறது.)

நிலத்தைப் பிளப்பதாய்ச் சுட்டெரிக்கும் கதிர்;

பச்சை அழிந்து பரவிக் கிடக்கும் பெருவெளிகள்;

தம் நிழல்கள் தேய, உலர்ந்து போன மரங்கள்;

கற் குழிவுகள் நீரற்றுக்
காய்ந்த சுனையில் திணைநெல் விழுந்து
சட்டெனப் பொரியும் வெம்மை;

கொடையாளர் இன்மையால், செல்வம் கவருவோர்;

தொழில் துறந்து சோம்பியோர்
அண்டிப் பிழைக்கும் பொல்லாச் சுரம்;

உடைந்த நீரலை நுரைப்பின் பிதிர்வைப் போலக்
காற்றிற் குலையும் பூச்சூரலை
வாரித் தெறிக்கும்
நாரில்லா முருங்கைக் கிளைகள்;

கடலின் கரையாய்ப் பொலிவின்றித் தோற்றும்
வெட்டவெளிக் காடு

இத்தகைய வழியில்,

பக்கத்து நாட்டு பொற் செல்வத்தை
என்னிடம் கொணர்ந்து தருவார் போல,

மூங்கில் மருளும் என் பெருந்தோளை நெகிழவிட்டு
இவர் போனாரே,
ஏன் தோழி?

வண்டுகள் மொய்க்கும் கண்ணியையும்,
ஒண்கழலையும்,
அணிந்து வந்த குதிரை மழவரை,

முருகனின் பெயரால் போர்செய்து ஓட்டிய
வேளாவிக் குடியினரின் பொதினியில்,

கொம்பொடிந்த யானைகள் உலவும் இடத்தில்,

சிறு காரோடனின்
அரக்கொடு சேர்த்திய சாணைக்கல் போலப் பிரிய மாட்டேம் ,
என்று சொன்ன சொல்லை அவர் மறந்தாரோ?

மேலே, காரோடன் என்பவன்: வாளுக்குச் சாணை பிடிக்கிறவன். சாணைக்கல்லோடு, அரக்கைத் தேய்த்தால், நிலை மின்சாரம் (static electricity) கூடிப் பொறி தெறிக்கும். அரக்கில் நொகை மின்சாரமும் (negative charges), சாணைக்கல்லில் பொதி மின்சாரமும் (positive charges) கூடும். பின்னால் சாணைக்கல்லில் வாளின் தோலுறையை வைத்துத் தேய்த்து பொதிமின்சாரத்தை இறக்கவில்லையேல் மின்சாரம் கைக்கும் ஏறி பெரும் அதிர்வுத் தொல்லைக்கு ஆளாகலாம். ”நிலை மின்சாரம் விளைவிக்கும் சாணைக்கல்லையும், அரக்கையும் எப்படிப் பிரிக்க முடியாதோ, அது போலப் பிரிய மாட்டேம் என்று சொன்னாரே, தோழி?” என்று தலைமகள் தோழிக்குச் சொல்கிறாள்.

நிலைமின்சாரத்தை வருவிக்கும் இரு பொருள்களை காதலருக்கு உவமை சொல்லிய அழகு, வேறு எங்கிலும் காணாததாகும். கூர்ந்த அறிவியல் அவதானிப்பு அன்றைக்கு இருந்திருப்பதும், அதை மாமூலனார் பதிவு செய்திருப்பதும், எண்ணி உவகை கொள்ளத் தக்கவை.

வரலாற்றுக் குறிப்பு.

பொதினி என்பது இன்றையப் பழனியைக் குறிப்பது. இங்கே ஆவியர் நாட்டை அது குறிக்கிறது. பொதினியின் அடிவாரத்தில் இருப்பது ஆவினன் குடியாகும். [நாம் எல்லோரும் ஆவிநன் குடியில் இருக்கும் பேருந்து நிலையத்திற்குத் தான் போய்ச்சேருகிறோம்.] வேளாவிக் கோமான் மகள் பதுமன் தேவியை முதல் மனைவியாக வானவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெற்றான். அவள் வழி சேரலாதனுக்கு இரு மக்கள். முதல்வன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். இன்னொருவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். சேரலாதனின் இன்னொரு மனைவி (ஞாயிற்றுச் சோழன் மகள் நற்சோணை) வழிப் பிறந்த செங்குட்டுவன் இவர்கள் இருவருக்கும் இடைப்பட்ட மாற்றாந்தாய்ப் புதல்வன். இளங்கோ என்றவரின் வரலாற்றுக் குறிப்பு எங்குமே கிடைக்கவில்லை. [வரந்தரு காதை பெரும்பாலும் இடைச்செருகலாய் இருக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். இதைப் பற்றி விரிவாகச் சிலம்பின் காலம் என்னும் என் கட்டுரையிற் பேசியிருக்கிறேன். இளங்கோ செங்குட்டுவனின் தம்பி என்ற செய்தியை உரையாசிரியர்கள் வழியே மட்டுமே அறிகிறோம்.]

ஆவியர் நாட்டுப் பொதினிக்கு அருகில் இருந்தது கொங்குநாடு. அதே இங்கு சேய்நாடு என்ற சொல்லாற் குறிப்பிடப் படுகிறது. கொங்குக் கரூருக்கு அருகில் உள்ள கொடுமணத்தில் செல்வங் கொள்ளத் தலைவன் போயிருக்கும் கதை இங்கு குறிப்பால் உணர்த்தப் படுகிறது போலும். கொங்குநாடு, குறிப்பாகக் கொடுமணத்திற்கு அருகில் செல்வங் கொழித்தது இன்றையத் தொல்லியற் சான்றுகளால் உணரப்படுகிறது. இந்தக் குறிப்பைப் பின்னால் விரித்துச் சொல்லுவேன்.

அன்புடன்,
இராம.கி.

Friday, January 01, 2010

ஆலிச் சறுக்கும் (skiing), ஆலிக் கதழும் (skating)

அண்மையில் நண்பர் ஒருவர் தனிமடலில் skiing, skating பற்றிய சில சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் சொல்லுமாறு கேட்டிருந்தார். அது அவருக்கு மட்டுமன்றிப் பலருக்கும் பயனுறும் என்றெண்ணி என் வலைப்பதிவில் இடுகிறேன். முதலில் skiing, skating பற்றிய சொற்களுக்குள் சட்டென்று போகாமல், இவ்வாட்டங்கள் பழகும் குளிர்ச்சொற்கள் சிலவற்றை முதலிற் பார்ப்பது நல்லது. http://valavu.blogspot.com/2009/09/blog-post.html என்ற என் முந்தைய இடுகையில் குளிர்ச்சொற்களைப் பற்றிச் சொல்லியிருந்தேன்.

வெறுமே வெப்பஞ்சார்ந்த தமிழக, ஈழச் சூழலாக மட்டும் அமையாது, உலகம் முழுதும் தமிழர் இன்று பரவிய காரணத்தால், உலகமே அவர்புலமாக மாறிய நிலையில், தமிழரின் பழஞ்சொற்களின் ஆழம் பார்த்து உணர்ந்து, வேர்களை அடையாளங் கண்டு, அவற்றின் பொருட்பாடுகளைப் புதுக்கித் துல்லியம் காணவேண்டிய காலம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுப் பழக்கம் வைத்துப் பனி. குளிர், நளி, அளி, தண் என்ற முன்னொட்டுகளைச் சேர்த்து குளிர்நிகழ்வுகளையும், ஆட்டங்களையும், கேளிக்கைகளையும், இன்ன பிறவற்றையும் குறிப்பதில் ஒப்பேற்றிவிடலாம் என்று நம்மிற் பலரும் எண்ணிக் கொள்கிறோம். அது பெருந்தவறு. இப் புதுப்புலனத்திலும் சொல் துல்லியம் காட்ட வேண்டியது முகனத் தேவையாகும். தமிழ்மொழி இதற்கும் வளைந்து கொடுக்கும் தன்மையதே.

இவ்வகையில், ice, snow என்ற 2 விதயங்களுக்குமே ’பனியை’ப் பயன்படுத்தி, வேண்டுமெனில் பனியோடு துகள்சேர்த்து snow விற்கு ஈடாகப் பயன்படுத்தும் அண்மைக் கால வழக்கம் முற்றிலும் மாற்றப்பட வேண்டும். முந்நாள் தமிழர் ice ஐ உணராதவரில்லை. வானத்திலிருந்து சில பொழுதுகளில் ஆலங்கட்டி மழை பொழிவதை நம் நூல்கள் நுவன்றுள்ளன. ஆலி, ice-யைக் குறிக்கச் சங்கநூலில் பயனுற்ற சொல்தான். {வானத்திலிருந்து பெய்யும் பனிக் கட்டியை ஆலம், ஆலங்கட்டி போன்றவை உணர்த்தின.] இன்றோ dew, ice
போன்றவற்றிற்கு வேறுபாடு காட்டத்தெரியாது எல்லாவற்றிற்கும் பனியை வைத்து சுற்றிக் கிளித்தட்டு ஆடிக் கொண்டுள்ளோம்.

மார்கழி இரவில் பனி பெய்கிறதெனில் வெளியே dew பெருகிக் கிடக்கிறது என்றே பொருள். snow பெய்கிறதென்று பொருளில்லை. ஆனாலும் ஒருசிலர் வலிந்து அப்படிப் பொருள் கொள்ள முயலுகிறார். snow, ice, freeze, frost, frigid எனப்பல சொற்களுக்கும் முன் இடுகையில் உரிய இணைச்சொற்களைப் பரிந்துரைத்துள்ளேன்.

snow = சிந்து
ice = ஆலி
freeze = உறைதல்
frost = உறைபனி
frigid = உறைந்த

வேண்டிய உகப்பில் இவற்றைப் பயன்படுத்துவது நல்லது. அதேபொழுது, பனி, குளிர், நளிர், அளி, தண் போன்றவற்றை ஒதுக்க வேண்டியதில்லை. அவற்றைப் பல இடங்களில் துணைச் சொற்களாய்ப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்துவது குளிரின் புரிதலுக்கு வழிவகுக்கும்.

இவ்வடிப்படையில் தொடக்கத்தில் எடுத்துக்கொண்ட 2  பொதுச்சொற்களை விளங்கிக் கொள்வோம். ஒன்று skiing, மற்றொன்று skating. முதலிலுள்ளது வெவ்வேறு மட்டங்களிலுள்ள நிலங்களில் மேலிருந்து கீழுக்குச் சறுக்குவது. சறுக்குவது என்பது பொதுவினை. அது ஆலியிலும் இருக்கலாம்; சிந்திலும் (snow) இருக்கலாம்; வழவழப்பான சாய்பரப்பிலும் ஏற்படலாம். எல்லாச் சறுக்கலிலும் நின்றுகொண்டே செய்கிறோமென்று பொருளில்லை. உடம்பை விதவிதமாய் நிறுத்தி, அன்றி இருத்திச் சறுக்கலாம். சறுக்கலோடு தொடர்பு உடைய இன்னொரு வினை சரிதல் (slide) ஆகும்.

1885 (there is an isolated instance from 1755), from Norw. ski, related to O.N. skið "snowshoe," lit. "stick of wood," cognate with O.E. scid "stick of wood," obs. Eng. shide; O.H.G. skit, Ger. Scheit "log," from P.Gmc. *skid-"to divide, split," from PIE base *skei- "to cut, split" (see shed (v.)). The verb is 1893, from the noun. ski-jumper is from 1894; ski bum fஅirst attested 1960.

ஆலியிற் சறுக்கல் என்பது இரோப்பாவில் எழுந்த பழக்கம். பின் உலகின் பல்வேறு இடங்களுக்கும் அது பரவியது. ஆண்டாண்டு தோறும் அங்கு சிந்து பெய்வதும், [இந்தியத் துணைக்கண்டத்திலும் சிந்து பெய்து அதன் வழி பெருகிய ஆறு சிந்தாறு (பனியாறு) என்றே நம் வடதமிழ் முன்னவரால் குறிப்பிடப்பட்டது.) பெய்த சிந்து நாட்பட ஆலியாய் மாறுவதும், அதில் விதவிதமாய்ச் சறுக்கிக் கேளித்திருப்பதும் இரோப்பியருக்குப் பழக்கமான காரணத்தால், ஆலிச்சறுக்கு என்றசொல் அவரிடையே எழுந்தது.,

அதேபொழுது skating என்பது செம்புல நிலத்தில் (i.e. level ground; and not red earth ground. பெயர்பெற்ற குறுந்தொகைப் பாடல் ஒன்றில் செம்புலப் பெயல்நீர் என்பதற்குப் பலரும் சமநிலத்தில் பெய்தநீர் என்று பொருள் கொள்ளாமல், ”சிவப்பு நிலத்தில் பெய்த நீர்” என்று உரைகாரர் காலத்திலிருந்து தவறாகப் பொருள்கொள்வது இவ்விடத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது. திண்ணை வலையிதழில் இதுபற்றி கட்டுரை எழுதியிருந்தேன்.), சிந்து பெய்து அதை மட்டப்படுத்திப் பின் உறைந்து ஆலியாயிறுகிக் கட்டியாயான புலத்தில் குறுக்கும் நெடுக்குமாய்க் காற்புதையத்தில் (boots) கூர்ந்த கத்தியைப் பொறுத்தி அந்த ஆலித்தளத்தைக் கீறி சர்சர்.... என விரைந்து அங்மிங்கும் கதிக்கின்ற (கடிகின்ற), கதவுகின்ற (கடவுகின்ற), கதழுகின்ற செயலுக்கு skating என்று பெயர். இங்கு நடப்பது சறுக்கல்ல, கத்தியாற் கீறி விரையும் இயக்கம். இதைச் செய்ய ஒரு தனித்திறமை வேண்டும். விரைவோடு, உடல் கீழே விழுந்து விடாது கட்டுக்குள் நிறுத்தி வைக்கும் இலவகமும் வேண்டும்.

"ice skate or roller skate," 1662, skeates "ice skates" (the custom was brought to England after the Restoration by exiled followers of Charles II had taken refuge in Holland), from Du. schaats (singular, mistaken in Eng. as plural), from M.Du. schaetse, from O.N.Fr. escache "a stilt, trestle," from O.Fr. eschace "stilt" (Fr. échasse), from Frank. *skakkja "stilt" (cf. Fris. skatja "stilt"), perhaps lit. "thing that shakes or moves fast" and related to root of O.E. sceacan "to vibrate" (see shake). Or perhaps the Du. word is connected to M.L.G. schenke, O.E. scvelocity anca "leg" (see shank). Sense alteration in Du. from "stilt" to "skate" is not clearly traced. The verb is attested from 1696; U.S. slang sense of "to get away with something" is attested from 1945.

”கதழ்வும் துனைவும் விரைவின் பொருள” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம், உரியியல், 798ஆம் நூற்பா. கதித்தல் என்பதும் விரைதலே. 1960 களில் ஒருசில பொறியியற் கல்லூரிகளில், குறிப்பாகக் கோவையிலும், சென்னையிலும் பொறியியற் கல்லூரிகளில் கதி என்ற சொல் velocity இக்கு இணையாகப் புழங்கத் தொடங்கியது. [வேகம், திசைகுறிக்காத அளவை (scalar) speed யைக் குறித்தது.]. கதழ்வு எனும் பெயர்ச்சொல்லும், கதழுதல் எனும் வினைச்சொல்லும் புதுக்கப் படலாம்.

இனி நண்பர் கொடுத்த ஆங்கிலச் சொல்வரிசைக்கு என் பரிந்துரைகள்:

1 Alpine skiing = ஆல்பைன் ஆலிச்சறுக்கு
2 Biathlon (Cross-country skiing & rifle shooting) = இரட்டைப் பந்தயம்
(குறுக்குவெளி ஆலிச்சறுக்கும், துவக்குச் சுடுதலும்)
3 Bobsleigh = குறுஞ்சரினை (பறக்கின்ற ஊர்தியை பறனையென நண்பர் அட்லாண்டா சந்திரசேகரன் ஆக்கியது போல், சரிதலை ஒட்டிச் சரினை
என்ற சொல் பரிந்துரைக்கிறேன்.)
4 Cross-country skiing = குறுக்குவெளி ஆலிச்சறுக்கு
5 Curling = சிந்துச்சுருளல்
6 Figure skating = ஒயிலாட்டக் கதழ்
7 Freestyle skiing = பரிஒயில் ஆலிச்சறுக்கு
8 Luge = தட்டுச் சறுக்கு
9 Nordic combined (ski jumping & cross country skiing) = வடபுலக் கூட்டுப்
பந்தயம் (ஆலிச்சறுக்குத் தாவலும், குறுக்குவெளி ஆலிச்சறுக்கும்)
10 Short track speed skating = குறுந்தட விரை கதழ்.
11 skating = கதழ்வு
12 Skeleton = பற்றுத்தட்டுச்சறுக்கு
13 Ski jumping = ஆலிச்சறுக்குத் தாவல்
14 Skiing = ஆலிச்சறுக்கு
15 Snowboarding = பலகையாற் சிந்துச்சறுக்கு.
16 speed skating = விரை கதழ்

அன்புடன்,
இராம.கி.